Tamil Madhura யாழ் சத்யாவின் 'இரு மலர்கள்' யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 32′(நிறைவுப் பகுதி)

யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 32′(நிறைவுப் பகுதி)

அத்தியாயம் – 32

என்ன அதிர்ச்சி?

 

எல்லோரும் விமான நிலையத்தை அடைந்து பிரிவுத் துயரோடு நின்றிருந்தார்கள். அருண்யா ஸாமின் கைப்பிடி விடவில்லை. அவனும் அவளை அணைத்தவாறே மற்றவர்களோடு பேசிக் கொண்டிருந்தான். 

 

 

இவர்கள் பேச்சுக்கு காது கொடுத்தவளாக நள்ளிரவிலும் பகல் போல நிறைந்து வழிந்த சனசஞ்சாரத்தை ஆர்வத்தோடு பார்த்துக் கொண்டிருந்தாள். அங்குமிங்கும் எழுமாற்றாகக் கண்களை சுழல விட்டவளின் கண்களில் அந்த உருவம் பட்டு விட்டது.

 

 

கவியும் ஸாமும் ஏதோ பேசிச் சிரித்துக் கொண்டிருக்க சந்திரஹாசனும் தலையை அசைத்து ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார். 

 

 

அந்த உருவம் தூரத்திலிருந்தே இவர்களை நோக்கி வந்து விட்டு கவியும் ஸாமும் சிரிப்பதைப் பார்த்ததும் மிக வேகமாக திரும்பிச் சென்று கொண்டிருந்தது. அது திரும்ப செல்லும் போது தான் அருணி கண்டது.

 

 

ஸாமின் கையை வேகமாக உதறித் தள்ளி விட்டு அந்த உருவத்தை நோக்கி ஓடினாள். மற்ற மூவரும் இவள் செய்கையால் திகைத்துப் போய் நின்றார்கள் எதுவும் புரியாமல். விரைந்து சென்றவள் அந்த உருவத்தின் கையைப் பிடித்து இழுத்து நிறுத்தினாள். 

 

 

விரைந்து ஓடி வந்ததில் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க,

 

 

அத்தான்… எதுக்கு இப்ப எங்களைக் கண்டிட்டும் காணாத மாதிரி ஓடுறீங்க…?”

 

 

சாரி… நீங்க என்னைத் தப்பா புரிஞ்சு கொண்டிருக்கிறியள் என்று நினைக்கிறன். நீங்க யாரென்றே எனக்குத் தெரியாதே…”

 

 

சும்மா விளையாடிதீங்கோ அத்தான்… தாடி, மீசை வளர்த்தால் ஆள் அடையாளம் மறந்திடுமா…? கவிக்கா இன்னும் எவ்வளவு காலம் தான் உங்களையே நினைச்சு ஏங்கிட்டு இருக்கிறதாம்…?”

 

 

என்ன சொல்லுறாய் அருணி…? அப்ப கவி ஸாமை மரி பண்ணேலயா…? அவங்க ரெண்டு பேரும் சிரிச்சுக் கொண்டிருந்ததைப் பார்த்தேனே. இனியும் அவளிட வாழ்வில நான் நிம்மதியை குழப்ப விரும்பேல்ல அருண்யா… என்னை விடு… நான் போறன்…”

 

 

அவள் சொன்னதைக் கேட்டதும் தன்னை மீறி தான் யாதவ்மித்ரன் தான் என்பதை வெளிப்படுத்தினான் அவன்.

 

 

ஐயோ அத்தான்… நான் கொஞ்சம் சொல்லுறதைக் கேளுங்கோ… ஸாம் ஸேர் என்ர புருஷன் இப்ப…. அக்கா இன்னும் உங்களுக்காகத் தான்  காத்துக்கொண்டு இருக்கிறா…”

 

 

அவள் சொன்னதைக் கேட்டு பூரித்தவன் நம்ப முடியாமல் கண்களில் நீர் வடிய,

 

 

உண்மையாவா சொல்லுறாய் அருண்யா….?”

 

 

அவள் ஆமாம் என்று சொன்னது தான் தாமதம். கவியை நோக்கி ஓடத் தொடங்கினார்கள். அங்கே கவி, ஸாம், சந்திரஹாசன் மூவரும் அருணி யார் கையைப் பிடித்துக் கதைக்கிறாள், பார்க்க பிச்சைக்காரன் நல்ல உடை அணிந்த தோற்றத்தில் இருக்கும் இந்த தாடிக்காரன் யாராக இருக்கும் என்று மண்டை காய்ந்து கொண்டிருந்தார்கள்.

 

 

தூரத்தில் இவர்களை நோக்கி  யாதவ் ஓடி வரும் போதே கவியின் உள்ளுணர்வு ஏதோ சொல்ல அவள் உள்ளத்தில் இனம் புரியாத படபடப்பு. அவன் கிட்ட நெருங்கவும் அவனைக் கண்டு கொண்டவள் “யாது…” என கேவிக் கொண்டே அவனை ஓடிச் சென்று அணைத்துக் கொண்டாள்.

 

 

சந்திரஹாசனும் ஸாமும் நடப்பதை நம்ப முடியாமல் அப்படியே உறைந்து போய் நின்றிருந்தார்கள். மெதுவாக நடந்து வந்து சேர்ந்து கொண்ட அருணியைக் கண்டதும் ஸாம் கேட்டது,

 

 

எப்பிடி அருண் யாதவ் என்று கண்டு பிடிச்சாய்…?”

 

 

நான் சொன்னனேப்பா… கண்டில வைச்சு ஒரு கனவு கண்டனான் என்று. அப்ப அத்தான் இதே சேர்ட் தான் போட்டிருந்தார். நான் பாக்கேக்க இவர் திரும்ப போய்க் கொண்டிருந்தார். எங்க விட்டால் பிடிக்க முடியாம போய்ட்டாலும் ஒருக்கால் யாரென்றாவது பார்ப்பம் என்று தான் ஓடிப் போய்ப் பார்த்தன்… நீங்க சொன்ன மாதிரி என் கனவு பலிச்சிடுச்சுங்க… உண்மையிலயே அத்தான் தான்….”

 

 

இப்போது தான் சமனிலைக்கு வந்திருந்தார்கள் கவியும் யாதவும். கவி இப்போது அருணியை தாவி இறுக்க கட்டிக் கொண்டவள் விழிகள் ஆறாய் பெருக்கெடுக்க,

 

 

அருண்… நீ பட்ட கஷ்டம் வீண் போகேல்ல… நீயே கடைசில என்ர யாதுவை என்னட்ட திரும்ப சேர்த்திட்டாய்… நான் உனக்கு எப்பிடி நன்றி சொல்லுவேன் அருண்…” 

 

 

அருணை முத்தமிட்டவாறு தேம்பி அழுதவளை மற்ற மூவரும் விழிகளில் நீர் மல்க பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

 

 

ஸாமுடைய விமானத்துக்குரிய அறிவிப்பு வரவே எல்லோரிடமும் விடைபெற்றுக்கொண்டு அவன் புறப்பட்டான். சோக கீதம் வாசித்துக் கொண்டிருந்த அருணியும் இப்போது ஸாம் போகிறானே என்ற கவலையில் இருந்தாலும் யாதவ் வந்து விட்ட மகிழ்ச்சியில் முகம் விகசிக்க நின்றாள். 

 

 

சுந்தரலிங்கம் தம்பதிக்கும் ஸாமின் நண்பர்களுக்கும் யாதவ் வந்துவிட்ட விடயத்தை தெரிவித்து விட்டு உடனேயே யாழ்ப்பாணத்தை நோக்கிப் புறப்பட்டார்கள். 

 

 

சந்திரஹாசன் வண்டியை ஓட்ட அருணி அவர் பக்கத்தில் அமர்ந்திருந்தாள். கவியும் யாதவும் பின்னால் இருந்தார்கள். எல்லோருமே யாதவின் பத்து வருட கதையைக் கேட்க ஆவலாக இருந்தார்கள். 

 

 

கவியைத் தன் கைப்பிடியில் வைத்திருந்தவன் மெதுவாக தொண்டையை செருமிக் கொண்டு தன் கதையை ஆரம்பித்தான்.

 

 

என்னை விசாரணை என்று நாலாம் மாடிக்கு கூட்டிக் கொண்டு போய் அடிச்சு உதைச்சாங்க… அதில நிறைய காயம் பட்டு நான் மயங்கிட்டன். அவங்களும் சரியாக கவனிக்காமல் நான் செத்துப் போனன் என்று நினைச்சு குப்பை கொட்டுற இடத்தில கொண்டு போய் வீசிட்டாங்கள். 

 

 

அங்க குப்பை பொறுக்க வந்த ஒரு கிழவன் என்னைத் தூக்கிக் கொண்டு போய் கொழும்பு பெரியாஸ்பத்திரில சேர்த்திருக்கு. என்ர நல்ல காலம் அங்க நின்ட ஒரு டொக்டர் என்ர கிளையன்ட். என்னை அடையாளம் கண்டு கொண்டு பொலிஸ்க்கு அறிவிக்காமலேயே ரீட்மென்ட் செய்தார். 

 

 

நான் சுகமாக ரெண்டு மாசத்துக்கு கிட்ட ஆகிட்டு. அவருக்கு உங்களுக்கு அறிவிக்கப் பயம். நான் உயிரோட இருக்கிறது தெரிஞ்சால் திரும்ப வந்து அவங்கள் கொண்டு போனாலும் என்று. 

 

 

நான் நினைவு திரும்பி சுகமாகினதும் தொடர்ந்து அங்கேயே இருந்தால் ஆபத்து என்றிட்டுத் தான் என்ர ப்ரண்ட் நலந்தவிடம் சொல்லிட்டு முல்லைத்தீவுக்குப் போனான்.

 

 

அங்க போய் முள்ளிவாய்க்காலில ஒரு ரெண்டு கிழமை நிண்டன். பாதையும் பூட்டி சண்டையும் வலுக்க தொடங்கிச்சு. இனியும் அங்க இருக்கச் சரி வராது என்றிட்டு படகால ராமேஸ்வரம் போக வெளிக்கிட்டன். 

 

 

நான் கடற்கரைக்குப் போன நேரம் ஒரு படகு அவுஸ்ரேலியாக்கு வெளிக்கிட நானும் அதில ஏறிட்டன். அவுஸ்ரேலியாக்குக் கிட்ட போகேக்க அவுஸ்ரேலியா நேவி சுத்தி வளைச்சு கிறிஸ்மஸ் தீவில கொண்டு போய் காம்ப்ல அடைச்சிட்டாங்க.

 

 

அங்க விசாக்கு பேரெல்லாம் பதிஞ்சு நாலைஞ்சு நாளில சுதந்திரமாக வெளில திரியலாம்… அப்பேக்க உங்களுக்கு ஃபோன் பண்ணி விசயத்தைச் சொல்லுவம் என்று ரொம்ப கற்பனையில இருக்கத்தான் என்னைப் பிடிச்ச சனியன் அங்கையும் என்னை விடாமல் தொடர்ந்திச்சு.

 

 

என்னோட றூம்ல இருந்த பொடியன் போதைப் பொருள் ஏதோ கடத்தியிருக்கிறான். அவன் என்ர உடுப்புகளுக்கயும் எனக்குத் தெரியாமல் ஒளிச்சு வைச்சு இருந்திருக்கிறான். பொலிஸ் வந்து செக் பண்ணேக்க என்ர உடுப்புக்கயும் இருந்தபடியால் என்னையும் கொண்டே ஜெயிலுக்க போட்டிட்டாங்கள். 

 

 

கேஸ் நடந்து பத்து வருசம் கடூழியச் சிறை விதிச்சாங்க. பத்து வருசமும் முடிஞ்சு வெளில வந்த உடன ஜெயிலில வேலை பார்த்து சேர்த்த காசில ரிக்கட்டைப் போட்டுக் கொண்டு ஓடி வாறன்.

 

 

வந்து பார்த்தால் நீங்க எல்லாரும் எயார்போட்ல… அதுவும் ஸாமும் கவியும் சிரிச்சுக் கதைச்சுக் கொண்டு நிக்க ஸாம் கவியை கல்யாணம் பண்ணிட்டான் என்று நினைச்சுத்தான் திரும்ப அங்கால போய்ட்டன்.

 

 

நல்லகாலம் அருணி ஓடி வந்து என்னைத் தடுத்திட்டா… கடவுள் ஏதோ இப்ப என்றாலும் கண் திறந்து பார்த்திட்டார்…”

 

 

கவியைத் தன் மார்போடு அணைத்துக் கொண்டு கண்ணீர் வழியத் தன் கதையை கூறி முடித்தான். மற்றவர்கள் விழிகளிலும் கண்ணீர் அருவி சொரிந்து கொண்டிருந்தது. அவன் பட்ட கஷ்டங்களை எண்ணி விம்மிக் கொண்டிருந்த கவியை அதுதான் நான் வந்திட்டனே என்று ஆறுதல் படுத்த முனைந்தான்.

 

 

பின்னர் இவர்கள் அருண்யாவுக்கு நடந்த கொடுமைகளைக் கூறி இப்போது ஸாம் லண்டனில் இருந்து வந்தது அருண்யாவை மணந்துள்ளது வரை எல்லாம் கூறினார்கள். 

 

 

எல்லோர் மனதிலும் இப்போது மகிழ்ச்சி பிரவாகம் மட்டுமே. அதே மகிழ்ச்சியோடு நேராக யாழ்ப்பாணத்தில் யாதவின் வீட்டிற்கே சென்றார்கள். 

 

 

பத்து வருடங்களுக்குப்பிறகு உயிரோடு இருக்கிறானா? இல்லையா? என்றே தெரிந்திராத மகன் திரும்ப வந்தால் அங்கே மகிழ்ச்சிக்கு குறைவேது…? ஸாமின் நண்பர்களும் உடனே புறப்பட்டு வந்திருந்தார்கள். அக்கம்பக்கம் கேள்விப்பட்ட உறவுகள் எல்லாம் வந்து பார்த்து கவியையும் யாதவையும் வாழ்த்தி விட்டுப் போனார்கள். 

 

 

காணாமல் போன ஒருவர் திரும்ப வருவது என்பது எட்டாம் உலக அதிசயமாய் அங்கே நடந்திருக்க ஊர் மக்கள் அனைவருமே மகிழ்ந்திருந்தனர். 

 

 

இவர்கள் யாழ்ப்பாணத்தை அடையவும் அங்கே ஸாமும் வண்டனுக்குப் போயிருந்தான். விமானம் தரை இறங்கியவுடனேயே அருண்யாக்கு அழைத்தவனுக்கு யாதவின் கதை எல்லாம் கூறி முடிய எல்லோரும் கொஞ்சம் சகஜ நிலைக்குத் திரும்பியிருந்தார்கள். 

 

 

நாட்களும் கடந்தன. அருண்யா இப்போதெல்லாம் இருபத்துநான்கு மணித்தியாலங்களும் தனது தொலைபேசியும் கையுமாகவே அலைகிறாள். லண்டன் நேரப்படி தான் இப்போது அவள் தூங்கி எழுவது எல்லாம். வாயைத் திறந்தால் ஸேர் புராணம் தான். ஏன் இன்னமும் ஸேர் என்கிறாய் என்றால் அதுதான் தனக்குப் பிடிச்சிருக்கு என்பாள்.

 

 

இன்றோ நாளையோ அருணிக்கு விஸா கிடைத்து விடும் என்ற நிலைமை. ஒரு நாள் வழக்கம்போல் கதைக்கும் போது ஸாம் ஒரு உணவகத்திலிருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தவன்,

 

 

அருண்… நான் உனக்கு ஒரு வெடிங் கிப்ட் வைச்சிருக்கிறன். லண்டன் வரும் போது தாறேன்…”

 

 

தன் மனைவியின் குணம் அறிந்தும் வாயை வைத்துக் கொண்டு சும்மா இராமல் இவன் சொல்லி விட்டான். விடுவாளா அவள்? ஸாமை கெஞ்சி, கொஞ்சி, மிஞ்சிக் கேட்டதில் கடைசியில் அவனும் அது என்ன பரிசு என்று போட்டுடைத்தான்.

 

 

கவி ஒருநாள் கதைக்கேக்க சொன்னா… நீ சின்னனில ஒரே சொல்லுவியாம்… நான் ரெஸ்ட்டாரண்ட் வைச்சிருக்கிறவனைத் தான் கல்யாணம் கட்டுவன் என்று…. அதுதான் இந்த ரெஸ்ட்டாரண்ட்ட நான் வாங்கிட்டன். நீ இங்க வந்ததும் உன்ர பெயருக்கு மாத்திடலாம்…”

 

 

காதலோடு சொன்னவனை கன்னங்களில் கண்ணீர் துளிகள் கோடிழுக்க என்ன சொல்வது என்று தெரியாமல் பார்த்தாள் இவள்.

 

 

என்ன சொல்லுற என்று தெரியேல்லங்க… நீங்கள் எனக்கு கிடைக்க நான் என்ன புண்ணியம் செய்திருக்கனோ தெரியேல்ல… நான் சின்ன வயசில விளையாட்டாக சொன்னதை எல்லாம் இப்ப நிறைவேத்தணும் என்று நினைச்சிருக்கிறியளே…. ரொம்ப நன்றிப்பா…”

 

 

மனசார சொன்னவளை அன்பு பொங்கப் பார்த்தான்.

 

 

எப்போதும் இந்த மகாராணியின் ஆசைகளை நிறைவேற்ற இந்த அடியேன் காத்திருக்கிறேன்… உங்களுக்கு வேறு ஏதாவது ஆசைகள் இருந்தாலும் தெரிவிக்கலாம்…”

 

 

தலை தாழ்த்தி அவன் கூறவும் கிடைத்த சந்தர்ப்பத்தை விடாதவள்,

 

 

இப்போதைக்கு பக்கிங்ஹாம் பலஸில் எனது அறையை நன்றாக சுத்தப் படுத்தி வைக்கவும். மீதி தேவைகள் பின்பு அறிவிக்கப்படும்…”

 

 

உத்தரவு மகாராணி…”

 

 

சிரிப்பும் கலகலப்புமாக வாட்ஸ்அப்பிலேயே அவர்கள் குடித்தனம் நடத்திக் கொண்டிருந்தார்கள். 

இங்கே கவிக்கு தனது மண்ணை விட்டு வேறு இடத்துக்குப் போய் பணி செய்ய விருப்பமில்லாத காரணத்தினால் யாதவ் தனது கன்ட்ரக்ஷன் கம்பெனியை யாழ் நகரிலேயே நிர்மாணித்துக் கொண்டான். 

 

 

இருவரும் மாறிமாறி சுந்தரலிங்கம் வீட்டிலும் சந்திரஹாசன் வீட்டிலுமாக வாழ்ந்து கொண்டிருந்தார்கள். ஒரு மகிழ்ச்சியான செய்தியாக இப்போது கவி இரண்டு மாதங்களான சிசுவை வயிற்றிலே சுமக்க ஆரம்பித்து விட்டாள். 

 

 

இதோ இப்போது அருணிக்கும் விஸா கிடைத்து கண்ணீர் மல்க எல்லோரிடமும் விடைபெற்றுக் கொண்டிருக்கிறாள் விமான நிலையத்தில்.  காதலுடன் லண்டனை அடைந்தவளை அள்ளி அணைத்துக் கொண்டான் அவள் மணவாளன். 

 

 

நிறைவு

 

2022 ஆம் ஆண்டு. 

 

 

யாதவ் திரும்பி வந்து வருடங்கள் ஐந்து பறந்து சென்றிருந்தன. சந்திரஹாசன் வீட்டில் அந்தக் கிராமமே கூடியிருந்தது. வீடு விழாக்கோலம் பூண்டு எங்கும் பலூன்களும் வண்ணக் காகிதங்களாலும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. 

 

 

திடீரென என்ன விசேஷம் என்று பார்க்கிறீர்களா? கவின்யாவின் இரண்டாவது மகனுக்கும் அருண்யாவின் மூத்த மகளுக்கும் இன்று முதலாவது பிறந்தநாள். அருண்யாவும் ஸாமும் லண்டனில் இருந்து வந்திருந்தார்கள். 

 

 

வெளிதேசத்தில் உழைத்தது எல்லாம் போதும் இனி சொந்த மண்ணிலேயே தங்கி விடலாம் என்று முடிவெடுத்து இருந்தார்கள்.  

 

 

யாதவின் கன்ட்ரக்ஷன் கம்பெனியின் கணக்கு வழக்குகளை ஸாம் பொறுப்பெடுத்துக் கொண்டான். அருண்யாவின் ஆசைப்படி பருத்தித்துறை மண்ணில் “யாழ் சுவையகம்” என்ற பெயரில் உணவகம் ஒன்று திறந்திருந்தார்கள். பருத்தித்துறை முனையைப் பார்க்க வரும் சுற்றுலாப் பயணிகளை இலக்காகக் கொண்டு யாழ் மண்ணின் தனித்துவமான உணவுகள் அங்கே அருண்யாவின் தலைமையில் சிறப்பாகத் தயாராகின்றன. யாழ்ப்பாணத்து சிற்றுண்டிகள் அனைத்தும் அங்கே சிறந்த தரத்தில் குறைந்த விலையில். லண்டனில் இவர்கள் ரெஸ்ட்டாரண்ட்டில் அருண்யா பயின்றிருந்த மேலைத்தேய உணவு வகைகளையும் செய்து பரிமாற எப்போதும் அங்கே கூட்டம் அலைமோதும். 

 

 

சமைக்க பஞ்சிப்பட்டு ரெஸ்ட்டாரண்ட் வைத்திருப்பவனைக் கட்டித் தரச்சொல்லிக் கேட்டவள் எப்படி இன்று சொந்த உணவகம் திறந்தாள் என்று மண்டையை சொறிகிறீர்களா?

 

 

அருண்யாவின் அந்த அஞ்ஞாதவாச பத்து வருடங்களில் அவள் தனது கவலை போக்க கண்ட வழிதான் இந்த சமையல். தினமும் விதம் விதமாக ஏதாவது செய்து பார்ப்பாள். அவள் அப்படி சமைத்ததற்கு வேறு காரணம் ஒன்றும் இருந்தது. வீட்டில் நடந்த துக்க நிகழ்வுகளால் சாப்பிட மனமற்று பெயருக்குக் கொறித்துக் கொண்டிருந்தவர்கள் இவள் முகம் கோணாமல் இருப்பதற்காக என்று அவள் செய்வதை ரசித்து உண்ண ஆரம்பிக்க இவளும் தனது அறிவு, திறமை எல்லாவற்றையும் நளபாகத்தில் காட்ட ஆரம்பித்து விட்டாள்.

 

 

யாழ் சுவையகத்துக்கு நல்லூர், யாழ்ப்பாணம், முகமாலையிலும் இப்போது மூன்று கிளைகள்.

 

 

கவின்யா தனது மருத்துவ பணியையே பொதுச் சேவையாக கிராமத்து வைத்தியசாலைகளில் பணி புரிந்து கொண்டிருக்கிறாள். 

 

 

சுந்தரலிங்கம் தம்பதி இன்னும் கடையைக் கவனித்துக் கொள்ள சந்திரஹாசனோ வீட்டுத் தோட்டமும் பத்திரிகைகளும் பேரப் பிள்ளைகளுமாக பொழுதை ஓட்டுகிறார்கள். தெய்வநாயகி மகள்களின் நிறைவான வாழ்க்கையை கண்குளிர கண்டு விட்டு, தான் செய்த தப்பையும் உணர்ந்தவராய் மூன்று வருடங்கள் முன்புதான் இயற்கை எய்தியிருந்தார்.

 

 

சந்திரஹாசன் வீட்டுக்கு பின்புறமிருந்த நிலத்தில் இன்னும் வீட்டைப் பெரிதாக மாடியோடு சேர்த்துக் கட்டியிருந்தார்கள். 

 

 

இரு சகோதரிகளும் ஒரே வீட்டில் தான் வாழ்ந்தார்கள். வீட்டு வேலைக்கு என்று ஒரு வயதான பெண்மணியும் ஒரு இளம்பெண்ணும் வீட்டோடேயே தங்கியிருந்தார்கள். 

 

 

யுத்தத்தால் பாதிக்கப் பட்டிருந்தவர்கள் அனாதைகளாகப் பிச்சையெடுத்துக் கொண்டிருப்பதைக் கண்டு நமது அருண்யா தான் வீட்டுக்கு கூட்டி வந்து தங்க வைத்திருந்தாள். 

 

 

இப்போது வீட்டில் வசிப்பவர்கள் எண்ணிக்கையும் அதிகம் என்பதால் வீட்டு வேலைக்கு ஆள் அவசியமாய் இருந்தது. இல்லை என்றால் அந்த வீட்டிலுள்ள பத்து குழந்தைகளையும் யார் கட்டி மேய்ப்பதாம்

 

 

எப்படி பத்து என்று குழம்புகிறீர்களா? கவின்யா பெற்றது இரண்டு. அருண்யா பெற்றது ஒன்று. 

 

 

ஆனால் அருண்யா முன்பு ஒரு முறை ஸாமிடம் கேட்டிருந்த படியே இரு சகோதரிகளும் கிளிநொச்சியில் அனாதை ஆச்சிரமம் ஒன்றிலிருந்து கவின்யா மூன்று குழந்தைகளையும் அருண்யா நான்கு குழந்தைகளையும் முறைப்படி தத்தெடுத்து சொந்த குழந்தைகளாகவே வளர்த்து வருகிறார்கள். 

 

 

இதோ இப்போது பிறந்தநாள் கொண்டாடும் இரு குழந்தைகளுக்கும் கேக் வெட்டிக் கொண்டிருக்கிறார்கள். அருண்யாவின் மகள் அவள் வார்ப்பாய் கவின்யாவின் மகனின் வாயிலிருந்து கேக் துண்டைப் பறித்து தன் வாயில் போட்டுக் கொண்டிருக்கிறாள். 

 

 

எல்லோர் முகங்களிலும் மகிழ்ச்சிப் புன்னகை. இதே மகிழ்ச்சியோடு இந்த இரு தேவதைகளையும் அவர்கள் குடும்பத்தவர்களையும் ஆண்டவன் என்றென்றும் ஆனந்தமாக வைத்திருப்பானாக.

 

 

சுபம்.

1 thought on “யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 32′(நிறைவுப் பகுதி)”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 10’யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 10’

அத்தியாயம் – 10 சொல்லாயோ சோலைக்கிளி     வருஷங்கள் இரண்டு உருண்டோடியது. கவின்யா மூன்றாம் ஆண்டிலும் ஸாம் அபிஷேக் இறுதி ஆண்டில் பல்கலைக்கழகத்திலும், அருண்யா வர்த்தக பிரிவில் உயர்தரப் பரீட்சைக்கும் (+2) படித்துக் கொண்டிருந்தார்கள்.     கல்விப் பொதுத்

யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 15’யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 15’

அத்தியாயம் – 15 யாருக்கு மாலை?   பரீட்சைகள் முடிந்த அன்றைக்கே கவின்யா வல்வெட்டித்துறையிலுள்ள தனது வீட்டுக்கு வந்து விட்டாள். வந்த நேரமிருந்து ஓய்வெடுக்காது வரவேற்பறையையே சுத்தப்படுத்தி அழகுபடுத்தி கொண்டிருந்த மகளைப் புரியாமல் பார்த்தார் தெய்வநாயகி.      “இவ்வளவு நாளும்

யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 28’யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 28’

அத்தியாயம் – 28 என்ன முடிவெடுக்கப் போகிறாள் அருண்யா?   சமையல் முடித்ததும் தோட்டத்தில் நின்றவர்களை சாப்பிட அழைத்தாள் கவின்யா. அவர்களும் கைகால் முகம் கழுவிக் கொண்டு வர, அதற்கிடையே சாப்பாட்டு மேசையில் உணவுப் பதார்த்தங்களை எடுத்து வைத்தாள்.