குமரன்

டீ, காபி என்ற  இரைச்சலும், வழி அனுப்ப வந்த உறவினர்களுடன் பயணிகளின சலசலப்பு, நடுவே பாம் என்ற ஓசையுடன் ட்ரெயின் வந்து நிற்பதும், அதன் பின் கிளம்பி செல்வதும், போர்ட்டர்கள் லக்கேஜ்களை இழுத்து செல்லும் ஒலியும், அழுது அடம் பிடிக்கும் குழந்தைகளையும் பார்த்தவாறு பிளாட்பார்மில் இருந்த பெஞ்சில் அமர்ந்திருந்தாள் வசந்தி.

இந்த சுமதி எப்பொழுதுமே தாமதமாகத்தான் வருவாள். ரெட்டை பிறவிகளாக இருந்தும் மெதுவாக தான் அவள் பிறந்தாள். இரண்டாவதாக தாமதமாக வருவது அவள் பழக்கம் . அவளுக்காக தான் காத்திருக்கிறாள்.

“வசந்தி,ரொம்ப நேரமா காத்திருக்கியா டீ ?சாரி, வீட்ல வேலை எல்லாம் முடிச்சுட்டு வர லேட் ஆயிடுச்சு. அவருக்கு வேற கடை சாப்பாடு ஒத்துக்காதா… அதனால பிரிட்ஜில  வத்த குழம்பு, சாம்பார், ரெண்டு பொரியல ரெண்டு வறுவல் எல்லாம் செஞ்சு அடுக்கி வச்சிட்டு வர்றதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுச்சு”

“சரி விடு, நமக்கு இதெல்லாம் சகஜம் தானே. இன்னும் ஒரு ஒரு வாரத்துக்கு எதை பத்தியும் நினைக்காம திருச்செந்தூருக்கு போயிட்டு வேலையெல்லாம் முடிச்சுட்டு வர்றோம் சரியா”

“ஆமா ஆமா அங்க இதை விடக் கவலைப்படுறதுக்கு நிறைய விஷயம் இருக்குன்னு சொல்றியா”

“அங்க என்னடி கவலைப்பட விஷயம் இருக்கு. எல்லாத்தையும் அம்மா போறப்ப எடுத்துட்டு போயிட்டாளே இனிமே அங்க நமக்கு என்ன பிடிப்பு இருக்குனு தெரியல” என்றபடி திருச்செந்தூர் செல்லும் ரயிலில் ஏறி இருவரும் அமர்ந்து கொண்டோம்

நாங்கள் அமைதியாக இருந்தாலும் எங்கள் மனதில் திருச்செந்தூரின் கடல் அலையாகப் பொங்கி வரும் நினைவுகள்.

அம்மாவும் அப்பாவும் ஆதர்ச தம்பதிகள் என்று சொல்வதற்கு இல்லை அப்பாவுக்கு ஆண் குழந்தைகள் என்றால் மிகவும் இஷ்டம். நாங்கள் இருவரும் பெண்ணாக பிறந்ததும் பெருத்த ஏமாற்றம் அடைந்தவர்கள் எனது அப்பாவும் பாட்டியும் தான்.

அதைவிட இன்னொரு பெரிய அதிர்ச்சி பிரசவத்தின் ஏற்பட்ட சிக்கல் காரணமாக எனது அம்மா  இனிமேல் கருத்தரிக்க முடியாது என்று மருத்துவர் சொல்லியது.

பாட்டி இதனை சொல்லி தினமும் கரித்துக்  கொட்டுவார். அம்மா அழுது கொண்டே இருப்பாள் அவளுக்கு பெரிதாக உலகம் எதுவும் தெரியாது. சிறுவயதிலேயே திருமணமும் முடிந்து விட்டதால் குடும்பம் தான் உலகம் கணவர் குழந்தைகள் திருச்செந்தூர் முருகன் கோயில் இன்று சிறிய வட்டத்திற்குள் தான் அவளால் வாழ முடிந்தது.

நாங்கள் மட்டும் என்ன… எங்கள் அம்மா திருச்செந்தூர் என்ற கிணற்றில் வாழ்ந்தால்,  நாங்கள் இருவரும் சென்னை என்ற குளத்தில் வாழ்கிறோம்…  அவ்வளவுதான் வித்தியாசம்.

எங்கள் அம்மாவின் தாய் வீடு பக்கத்தில் ஒரு கிராமத்தில் தான் இருந்தது. அங்கு எப்போதாவது செல்லும் அம்மா அழுது கொண்டே இருப்பாள் ஒரு ஆண் பிள்ளை பெற முடியவில்லை என்று.

“அவங்க கேக்குறதும் சரிதான் பா. பொண்ணுங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிட்டு வேற வீட்டுக்கு போயிருவாங்க. அப்புறம் மகன்தான நம்மள கடைசி வரைக்கும் பார்த்துக்கணும் அப்படின்னு அவரும் சொல்றாரு. எனக்கு ரொம்ப வருத்தமா இருக்குப்பா. அவர எதிர்த்து கூட பேச முடியல”

எதனால் அன்று அம்மா அவ்வளவு கவலையோடு அழுதாள் என்று எங்களுக்கு  புரியவில்லை. ஆனால் தாத்தா இரண்டு, மூன்று நாட்கள் நாங்கள் தங்கி விட்டு செல்லும் பொழுது கையில் ஒரு பொம்மையுடன் வந்தார். அது மிக மிக அழகான ஒரு குழந்தை முருகன் சிலை.

“இந்த பாரு கோயிலுக்கு வந்திருந்த கிறுக்கு சாமி அவர் கையால இந்த சிலையை என் கையில் கொடுத்து உன்கிட்ட தர சொன்னார். உன் வீட்டுக்காரன் ஆண் வாரிசுக்காக என்ன வேணாலும் சொல்லட்டும், இல்ல செய்யட்டும் உனக்கு இனிமே ஆண் வாரிசு இவன் தான். இவன் உன்னை கூடவே இருந்து பாத்துக்குவான்” என்று அவர்  அம்மாவின் கையில் திணித்தார்.

அந்த நேரம், அம்மா ஏன் நம்மை பாராட்டாமல் ஆண் வாரிசு இல்லை என்று இப்படி அழுகிறாள், என்று  கோபமாக வந்தது. ஆனால் அடுத்த  சில வருடங்களிலேயே எங்கள் இருவருக்கும் அதற்கான காரணம் தெளிவாகப் புரிந்தது.

அப்பா அடுத்து ஆண் வாரிசுக்காக வேறொரு குடும்பத்தை ஏற்பாடு செய்திருக்கிறார் என்று தெரிந்து கொண்டோம். பணமுள்ள பெரிய மனிதர். அவர் மனைவிக்கு செய்யும் துரோகத்தைக் கண்டும் காணாமல் கண் மூடிக் கொண்டது ஊர்.

ஆம்பள வாரிசு என் மகனுக்கு வேண்டாமா, என்று அப்பாவின் தாய் கிழவி மகனின் நடத்தைக்கு சப்போர்ட் செய்ய, அம்மாவோ கையாலாகாத வெற்றுப் பார்வையுடன் சமைத்துக் கொண்டிருந்தாள்.

“உனக்கு முதுகெலும்பே இல்லையா எங்களுக்கு ஸ்கூல்ல பிள்ளைங்க எல்லாம் ஏதாவது சொல்லுவாங்களோ வெட்கமா இருக்கு” என்று நாங்கள் கூச

‘கூசுதா, அப்ப மதுரையில ஹாஸ்டல்ல போய் படிங்க’ என்று எங்கள் இருவரையும் மதுரையில் இருக்கும் பள்ளியில் விடுதியில் சேர்த்து விட்டார் எங்கள் அப்பா.

பள்ளி கல்லூரி விடுமுறைகளில் வீட்டுக்கு வரும் எங்களுக்கு அம்மாவின் நடத்தையில் தெரிந்த மாறுதல்கள் மிகவும் வருத்தம் தருவதாக இருந்தது.

காலையில் இரண்டு டம்ளரில் காபி கலக்குவார். அதில் ஒரு டம்ளரில் எடுத்துக் கொண்டு போய் முருகன் சிலை முன் வைப்பாள்.”குமரா காப்பி குடி. சீக்கிரம் இட்டிலி ஆயிடும்” என்று ஏதோ குழந்தையிடம் சொல்வதைப் போல சொல்வாள்.

காப்பி மட்டுமல்ல இட்லியும் அப்படித்தான். மத்தியானம் சாம்பார் சாதம் செய்தால் கூட அதில் முருகனுக்கு ஒரு சின்ன தட்டில் எடுத்து வைத்து சாப்பிடுப்பா என்று சொல்லிவிட்டு பின்னர் அதனை எடுத்து சாப்பிட்டுக் கொள்வாள்.

தீபாவளி பொங்கலுக்கு துணி எடுக்கும் பொழுது  முருகனுக்கு ஒரு குட்டி வேஷ்டியும் அங்க வஸ்திரமும் வாங்குவாள். எங்களது பிறந்தநாளுக்கு பொங்கல் பாயசம் செய்வது போல் முருகனது வைகாசி விசாகத்தன்றும் புது துணி பாயசம் பொங்கல் என்று அவனையும் ஒரு மகனாகவே நினைத்து கொண்டாடுவாள்.

“அநியாயம் பண்ணாத. அது ஒரு சிலை மா. அதுக்கு முன்னாடி சாப்பாட்டையும் காப்பியும் வச்சுட்டு குடி குடின்னு  ஒரு ஆசாமியை சொல்ற மாதிரி உபசரிக்கிற. சாப்பாடு சாப்பிட சொல்றதும் நாலு கிழமைக்கு புது துணியை மாத்தி விடுவதும் நீ செய்றதே சரி இல்லம்மா. உன்ன பாத்து அத்தை எல்லாம் சிரிக்கிறாங்க. உனக்கு பைத்தியம்னு சொல்றாங்க மா”

“அவ கெடக்குறாடி. அவளுக்கு  என்ன தெரியும். ஒண்ணு மட்டும் தெரிஞ்சுக்கோங்க நீங்க எல்லாரும் என்னைவிட்டு விலகிப் போனாலும் குமரன் என் கூடவேதான் இருப்பான். ஒரு நாள் அதை நீங்களே புரிஞ்சுக்குவிங்க” என்று எங்களை அடக்கி விட்டு அதே வேலையைத் தொடர்வாள்

அவளுக்கு மனதளவில் ஏதோ பிறழ்வு ஏற்பட்டிருக்கிறது என்று நாங்கள் முடிவு செய்த நேரம், அப்பா எங்கள் இருவரது திருமணத்திற்கும் ஏற்பாடு செய்து விட்டார்.

இந்த முருகனை குழந்தையாக பாவிக்கும் அந்த ஒரு விஷயத்தை தவிர அம்மா மற்ற மனிதர்களைப் போல் சாதாரணமாகவே இருந்தாள் அதனால் எங்களுக்கு இது ஒரு சின்ன விஷயம் தானே அப்புறம் பார்த்துக்கலாம் என்று தள்ளி போடத்தான் தோன்றியது. முருகன் அவளுடனே இருந்து பார்த்துக் கொள்கிறான் என்று அவள் நம்பியது மட்டுமல்ல, இறுதிவரை  எந்த விஷயத்திற்காகவும் எங்கள் யாரையும் துணைக்கு அழைக்கவோ சிரமப்படுத்தவோ இல்லை.

திருமண வாழ்வை பற்றி தான் உங்களுக்கு தெரியுமே. அப்பாவின் பணம் அவரது தப்பை சரி செய்ய, சென்னையில் இருந்து படித்த மாப்பிள்ளைகள், எங்கள் கல்லூரிப் படிப்பு முடிந்த மறு மாதத்திலேயே திருமணம். அம்மாவுடன் ஆறுதலாக நின்று பேசக் கூட முடியவில்லை. பெரிய குடும்பம் மாமனார் மாமியார் நாத்தனார் கணவன் பின்னர் குழந்தைகள் என்று எங்களது நாளும் ஓடி விட்டது.

சமீப காலமாக அம்மாவிற்கு சற்று உடம்பு சுகம் இல்லை சென்னைக்கும் வரமாட்டேன் என்று சொல்லிவிட்டாள் நான் வந்துட்டா தம்பியை யார் பார்த்துக்கிறது அவனுக்கு வேளா வேளைக்கு சாப்பாடு தர வேண்டாமா என்று சொன்னதும் எங்கள் இருவருக்கும் திருச்செந்தூர் கடலில் போய் விழுந்து விடலாம் போல் கடுப்பாக இருந்தது

அம்மா ஏன் இப்படி எங்கள கடுப்படிக்கிற என்று நன்றாக திட்டியும் பார்த்து விட்டோம். ஆனால் ஒரு சஷ்டி அன்று இறை தரிசனம் முடித்துவிட்டு, அவளது குமரனைப் பார்த்த வண்ணம் அவன் திருவடியை அடைந்துவிட்டாள்.

திருச்செந்தூரில் வீட்டில் இறங்கினோம் நாங்கள் இருவரும் வருகிறோம் என்று தெரிந்து அப்பா வந்து சாவியை கொடுத்துவிட்டு கிளம்பினார். அவர் வீட்டிலேயே இருப்பதில்லை போலும். தங்குவது அந்த வீட்டில் தான். ஆண் வாரிசு வேண்டும் என்று ஏற்பாடு செய்தாரே அந்த வீட்டிலும் மூன்று பெண் வாரிசுகள் தான். எங்கள் அம்மாவின் கண்ணீர் சும்மாவா போகும்?

வீட்டை நன்றாக துடைத்துவிட்டு கழுவி, சாமி கும்பிட ஏற்பாடு செய்தோம். மறுநாள் அம்மாவிற்கு நினைவு நாள். சாமி கும்பிட வேண்டும். அதற்காகத்தான் நாங்கள் இருவரும் வந்திருக்கிறோம்.

வீட்டில் இருந்த பொருட்களை எல்லாம் அலமாரியில் அடுக்கி வைக்க வேண்டும். அம்மாவுக்கு பிடித்த முருகன் சிலை. அவளைப் பொறுத்தவரை  அவளது இன்பத்தையும் துன்பத்தையும் பகிர்ந்து கொண்ட மகன். எங்களது குட்டி தம்பி அவனையும் நன்றாக துடைத்துவிட்டு அலமாரியில் வைத்து அம்மாவின் பொருள்களுடன் சேர்த்து பூட்டினோம்.

ஆயிற்று மறுநாள் ஊருக்கு மறுபடியும் கிளம்ப வேண்டியதுதான் வீடு வெறுமையாக இருந்தது. இருவரும் ஹாலிலேயே ஒரு ஓரமாக பாய் விரித்து படுத்துக் கொண்டோம். எதுவும் பேசத் தோன்றாமல் மனது பாரமாக இருந்தது. எப்படியோ ஒரு வழியாக கண்ணயர்ந்தோம்

ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த பொழுது யாரோ எங்கோ கதவை தட்டும் சத்தம் கேட்டது. கனவிலேயே அந்த சத்தம் வந்த திசையை தேடிக்கொண்டே சென்றேன் அது அலமாரியின் முன் வந்து முடிந்தது யாரது அலமாரிக்குள் இருந்து தட்டுவது?

கனவிலேயே கேட்டேன் “யாரு, யார்  அது கதவத் தட்றது?” என்று கேட்ட பொழுது

“நான்தான் பேசுறேன். அம்மா எனக்கு சாப்பாடு கொடுத்தது தான். அதுக்கப்புறம் எனக்கு யாரும் சாப்பாடு போடல. ரொம்பப் பசிக்குது. நாளைக்கு கொஞ்சம் சாதம் சமைச்சுப் போடுறியா” என்று ஒரு குட்டி குழந்தையின் குரல் கேட்டது. வியர்க்க விறுவிறுக்க தூக்கம் கலைந்து எழுந்து அமர்ந்தேன். பக்கத்து படுக்கை காலியாக இருந்தது. இந்த சுமதி எங்கே சென்றாள்?

சமையலறையை உருட்டிக் கொண்டிருந்தாள் சுமதி. அவள் வெளியே வந்த பொழுது அவள் கையில் அம்மா அவளது மகனுக்காக வைத்திருக்கும் டம்ளரில் காப்பி. அலமாரியைத் திறந்து முருகனை எடுத்து அவன் முன்னே வைத்தாள்.

“மன்னிச்சுக்கோ நீ அம்மா கூடயே இருந்துருக்க அப்படின்னு இப்ப முழுசா நம்புறேன். இனிமேல் உன்னை யாரும் பட்டினி போட மாட்டோம். காலையில் இட்லி  செய்து தரேன் அதுவரைக்கும் சமத்தா இத குடிச்சிட்டு இருக்கணும்” என்றாள்.

“என்னடி வசந்தி, அம்மா மாதிரியே நானும் புத்தி பேதலிச்சுப் போயிட்டேனான்னு பாக்குறியா” என்றாள் என்னைப் பார்த்து.

 

“இல்லடி நம்ம அம்மாவுக்கு மகளா பிறக்க எவ்வளவு புண்ணியம் செஞ்சு இருக்கணும்னு யோசிச்சேன்.சுமதி, தம்பிய நம்ம கூடயே ஊருக்குக் கூட்டிட்டு போயிறலாமா”

நாங்கள் இருவரும் முருகனின் இரு புறமும் நின்று கொண்டோம் எங்கள் கண்கள் அன்புடன் அந்த பால முருகனை நோக்கின. இந்த அன்பு சங்கிலியை எங்கோ இருந்து எங்கள் அம்மா பார்த்துக் கொண்டிருப்பாள்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஆரஞ்சு நிற புடவை – சாயி பிரியதர்ஷினிஆரஞ்சு நிற புடவை – சாயி பிரியதர்ஷினி

ஆரஞ்சு நிற புடவை     “உங்கள பாக்க தான் வந்துருக்கேன்.. உங்கள ஒரே ஒரு முறை பாக்கணும் ப்ளீஸ்.. ஒரே ஒரு டைம்… உங்க கிட்ட கொஞ்சம் பேசணும். நேர்ல மீட் பண்ணனும்…” ****** “ஹாய்..”   பேஸ்புக் சாட்டில்

சாயி பிரியதர்ஷினியின் ‘மழையின் காதலி’ – சிறுகதைசாயி பிரியதர்ஷினியின் ‘மழையின் காதலி’ – சிறுகதை

மழை… எவ்ளோ அழகான ஒரு விஷயம் மழை ஆண்பாலா பெண்பாலா.. தெரியவில்லை எப்படி வேண்டுமாணாலும் வைத்துக் கொள்ளலாம்.. என்னுடைய முதல் காதலன்.. இவன் தான்.. இந்த மழை தான்.   *** அணைத்துக்கொள்ளும் ஆறுதல் சொல்லும் சாரலாய் வீசும் சங்கீதம் பேசும்

எழுத்தின் பிறப்பு – சிறுகதை – எழுத்தாளர் லா.ச. ராமாமிருதம்எழுத்தின் பிறப்பு – சிறுகதை – எழுத்தாளர் லா.ச. ராமாமிருதம்

முதலென்றும் நடுவென்றும் முடிவென்றும் அளவின் வரையற்று, முன் பின் இனி எனக் காலத்தின் வரையற்று, அங்கு இங்கு என இடத்தின் எல்லையற்று, அப்படி இப்படி எனும் இயல்பும், உண்டு இல்லை எனும் இயங்குதலுமில்லாது, உருவின்றி, பிரிவின்றி, ஏகமாய், உயிர் என்று பிறக்கு