Tamil Madhura சிறுகதைகள் சாயி பிரியதர்ஷினியின் ‘மழையின் காதலி’ – சிறுகதை

சாயி பிரியதர்ஷினியின் ‘மழையின் காதலி’ – சிறுகதை

ழை… எவ்ளோ அழகான ஒரு விஷயம் மழை ஆண்பாலா பெண்பாலா.. தெரியவில்லை எப்படி வேண்டுமாணாலும் வைத்துக் கொள்ளலாம்.. என்னுடைய முதல் காதலன்.. இவன் தான்.. இந்த மழை தான்.

 

***

அணைத்துக்கொள்ளும் ஆறுதல் சொல்லும்

சாரலாய் வீசும் சங்கீதம் பேசும்

சீறி பாயும் சீற்றம் கொள்ளும்

வளைந்து கொடுக்கும் நெளிந்தும் செல்லும்

தாயாய் தாலாட்டும் குழந்தையாய் சிணுங்கும்

சத்தமிடும் சண்டையும் போடும்

முத்தமிடும் மூழ்கவைக்கும்

கட்டி அணைக்கும் காதல் சொல்லும்

தேட வைக்கும் திகட்ட வைக்கும்

 

என்னை கண்களால் பருகியும் அவன் தாகம் தீரவில்லை

ஒவ்வொரு முறையும் தலை முதல் கால் வரை ஊடுவுருகிறான்..

மின்னலின் கீற்றை கண்டால் நான் நிலத்தின் நிலவாகிறேன்..

அவன் வருகையில் நான் என்னை மறக்கிறேன்

நான் மழையின் காதலி…

 

எனக்கும் என் காதலனுக்கும் (மழை) பல ஆண்டு உறவு.. ஒவ்வொரு பிறவியிலும் தீராத காதல்.. இந்த வார்த்தைகள் புத்தகத்தில் அச்சிடும்போது சாரலை வீசி கொஞ்சினான்.. எனக்கும் மழைக்குமான உறவு வேறொரு புதிய உறவை கொண்டு வந்தது.. என் காதலனே எனக்கான மற்றொரு காதலை கொண்டு வந்தான்.. மழை எங்களை இணைத்து.. இணைத்து விளையாடியது..

 

என் முகநூல் பக்கத்தில் பதிந்தேன்.. சில நாட்களுக்கு பிறகு..

மழையின் காதலிக்கு எனது வந்தனங்கள்….

இப்படி தொடங்கியது அவன் கடிதம்… சில்லென்ற முதல் மழை சாரலை மீண்டும் உணர்ந்தேன்.. சாரலாய் அவன் கடிதமும் என் மழையும்..

இப்படிக்கு மழையானவன்….

 

என்று முடித்திருந்தான்.. புத்தகத்தில் வந்த எனது கவிதையின் ஒரு பிரதியுடன் அவன்.. மழை என்னை நனைப்பது போல அவன் வார்த்தைகளில் மூழ்கினேன்.. என்ன அர்த்தம்? யோசித்து சிரித்து சிவந்தேன்… இடி இடித்தது.. என்னவனுக்கு கோபம்.. என்ன பதில் சொல்வது தெரியவில்லை.. இரு நாட்களுக்கு ஒன்றும் கூறவில்லை.. 

 

திடீரென்று ஒரு ஆவல்.. பதில் அளித்தேன்..

உங்கள் கடிதத்தில் மழையில் சாரலை உணர்ந்தேன்..

அவனும் உடனே பதில் அளிக்கவில்லை.. சில மணி நேரங்களுக்கு பிறகு…

 

பதிலுக்கு நன்றி.. மழையின் காதலிக்கு இவனின் சிறிய பரிசு.. உடன் அழகான பூங்கொத்து ஸ்மைலி குதித்து கொண்டு வந்தது..

 

நீங்களும் கவிஞரா? ரொம்ப அழகா எழுதறிங்க.. அழகான ரசனை..

அப்படி நீங்க நெனைச்சா அந்த பெருமை உங்களுக்கு தான்..

பதில் அனுப்பவில்லை..

 

நீங்க யார்னு நான் தெரிஞ்சக்கலாமா.. என்னலாம் எழுதி இருக்கீங்க?

நான் சும்மா எப்பயாவது கிறுக்குவேன்..

 

உங்க கிறுக்கல்களில் பலர் கிறுக்கனாகி கிறங்குகிரார்கள்…. அடியேனும் ஒருவன்..

மொதல்ல நீங்க யார்னு சொல்லுங்க.. நீங்க எழுத்தாளரா?

 

இல்ல.. யார் எழுதினாங்கன்னு ரொம்ப நாளா தேடினேன்.. சொல்லாத பல கதைகள் இருக்கு உங்கள் வார்த்தைகளில்..

 

முகமறியா அவனின் மேல் பெரிய மதிப்பு வந்தது.. மழையையும் என்னையும் முதலில் மிகச்சரியாக புரிந்து கொண்டவன்.. இதுவரைக்கும் நான் கேட்டது..

 

ஏண்டி அறிவில்ல.. மழைல போய் நனைஞ்சிட்டு இருக்க…

கொஞ்ச நேரம் எங்கயாவது இருந்துட்டு வீட்டுக்கு போம்மா..

அப்படி என்ன தல போற அவசரம்.. இருடி.. போலாம்

எவ்ளோ நேரம் மழைல நின்னுட்டு இருக்க போற..

பாப்பா.. இரும்மா. மழ நிக்கட்டும்.. அப்றோம் போகலாம்..

மேடம்.. மழைல ஏன்.. இருங்க..

இந்த மழைல பீச்கு வரலன்னு யாருடி அழுதா.. எப்படி நிக்கற பாரு எரும மாடு மாதிரி..

ரொம்ப திமிரு டா நம்மளே மழைல ஒதுங்கி நிக்கறோம்.. எப்டி போற பாரு அந்த வண்டி எங்கயாவது ஸ்கிட் ஆக போகுது…

அவ அப்படி தாண்டா.. அது என்னமோ.. கொட்ற மழைல நாள் பூரா நின்னாலும் இவளுக்கு ஒன்னும் ஆகாது.. கல்யாணம் பண்ணிட்டு போய் புருஷன் கிட்ட திட்டு வாங்கினா தான் தெரியும்…

 

முதல் முறை.. அவனை சீண்டி பார்க்க தோன்றியது..

 

நீங்க தான் மழையானவன் ஆச்சே.. நீங்களே கண்டு பிடிங்க….

 

அப்போ நான் மழையானவன்னு ஒத்துக்கறீங்களா?.. கண்ணடிக்கும் ஸ்மைலி

 

மறுபடியும் நல்லா மாட்டிகிட்டேன்..

 

மேடம்… இருக்கிங்களா?..

…..

ஸாரி நான் எதாவது தப்பா சொல்லி இருந்தா..

..

ரொம்ப அழகான கவிதைக்கும் கவிதாயினிக்கும் நன்றி.. மன்னிச்சிருங்க..

…..

 

நான் பதில் கூறவில்லை.. அவன் புரொபைலை மேய்ந்தேன்.. விளம்பர கம்பெனியில் வேலை.. அதான் இவ்வளவு க்ரியேடிவிட்டி.. பார்க்க நல்லா தான் இருக்கான்ல.. சீச்சீ என்ன இப்படிலாம் யோசிக்கறேன்.. எனக்குள் சிரித்துக்கொண்டேன்..

 

சிரிக்கும் ஸ்மைலி ஒன்று அனுப்பினேன்.. எனக்கு இவனை தெரியும்.. என் அலுவலகத்திலேயே 

பார்த்திருக்கிறேன்….

 

———

 

சில வாரங்களுக்கு பிறகு..

 

உலகம் ரொம்ப சின்னது.. இதோ இந்த ரெஸ்டாரண்டில்.. உள்ள நுழையும் போதே மழை வரும் போல இருந்தது.. அவன் நண்பர்களுடன் சிரித்து பேசி ஒரே அமர்க்களம்.. நண்பர்களுடன் வந்தேன்.. ஆர்டர் செய்து விட்டு காத்துக்கொண்டுருந்தோம்.. பேச தோன்றியது.. வலிய நானே போய் அறிமுக படுத்திக்கொண்டேன்..

 

ஹாய்..

நீங்க…

என்ன தெரியலையா?

யோசித்து.. தெரிலையே.. ஸாரி..

நீங்க அகிலன் தானே?

ஆச்சர்யப்பட்டு ஆமாம் என்றான்..

ஆனா ஸாரி நீங்க யாருன்னு எனக்கு நிஜமாகவே தெரியல..

நல்லா யோசிச்சி பாருங்க..

 

சொல்லிவிட்டு என் டேபிளுக்கு சென்றேன்.. ரொம்ப நேரம் யோசித்தான் போல.. மண்டையை பிய்த்துக்கொண்டிருப்பான். நான் இருந்த பக்கம் அவ்வபோது திரும்பி பார்த்து மெல்லிதாக சிரித்தான்..

 

சாப்பிட ஆரம்பித்தோம்.. மழை தூறியது.. என்னவனை ரசித்தேன். சட்டென்று அகிலனை பார்த்தேன்.. அவனும் மழையை.. எனக்குள் சிரித்துக்கொண்டேன்.. மீண்டும் மழையை பார்க்க நினைக்கும் போது அவன் முழு பார்வையும் என் மேல்.. உன்னை பார்த்துவிட்டேன்.. நீ யாரென்று தெரியும் என்று சிரித்தது.. மழையை பார்த்து என்னை கைகாட்டினான்.. லேசாக வெட்கமாக இருந்தது.. ச்சே.. என்ன மழை இது.. இப்படி என்னை அவன் முன்னே…. சிரித்தேன். ஆமாம் என்று தலையாட்டினேன்..

 

சிறிது நேரம் ஒன்றும் பேசவில்லை.. அவன் நண்பர்கள் கிளம்பினார்கள்.. அவனும் என்னிடம் வந்து சொல்லிவிட்டு சென்றான்..

 

மழையின் காதலி.. இன்னொரு நாள் மீட் பண்ணலாம்.. இப்போ கெளம்பறேன் இந்தாங்க.. இது என்னை பற்றி ஒரு சின்ன அறிமுகம்..

 

அவன் விசிட்டிங் கார்டு கொடுத்து விட்டு சென்றான்.. மழையை பற்றி நினைக்கும் போது வரும் சில்லென்ற உணர்வு அவனை பற்றி நினைக்கும் போதும் வந்தது.. அதெப்படி.. ஒரே ஒரு முறை தான் அவன் கிட்ட பேசி இருக்க.. அதுக்குள்ள இது என்ன?

 

அன்று இரவு சேட்டினோம்..

 

உங்க பேர் இன்னும் சொல்லலையே..

சொல்ல மாட்டேன்..

சரி.. உங்கள நான் மித்ரா அப்டின்னு கூப்டலமா?

மின்னல் வெட்டியது.. மித்ரா என்றால் தோழி என்று அர்த்தம்.

லாம்…

மித்ரா… உங்க மழையின் சிநேகம் பத்தி இல்லையில்லை காதல் பத்தி ஏதாவது சொல்லுங்களேன்..

வேற ஒரு நாள்.. இப்போவே இல்லை அகிலன்..

மழை அப்படின்னாலே நீங்க தான் ஞாபகம் வரிங்க..

எனக்கும் தான்.. மழையை மீறி அவன் தான் மின்னலாய் மறைகிறான்.. – ஆனால் கூறவில்லை

அகிலன் இதுக்கு முன்னாடி நீங்க இது மாதிரி எதுவும் படிக்கலையா? நான் ஒரு கத்துக்குட்டி..

நீங்க என்னை தப்பா புரிஞ்சிகிட்டிங்கன்னு நெனைக்கறேன்.. என்னோட விளம்பரம் நான் டிசைன் பண்றது எல்லாம் கவிதைகள் வெச்சி தான்.. உங்களோட ப்ளிர்ட் பண்றதுக்காக கேக்கல.. எல்லாரையும் அப்படி நெனைக்காதிங்க.. நான் அப்புறம் பேசறேன்..

 

நானும் பதில் கூறவில்லை.. ப்பா. எவ்வளவு கோவம்..

—– 

சில நாட்களுக்கு பிறகு அவன் விளம்பர வீடியோ ஒன்றை அனுப்பினான்.. அவ்வளவு அழகு..

அவனின் எண்ணுக்கு உடனே அழைத்தேன்..

நான் எதிர்பார்த்தேன்…. அகிலன்

நான் உங்கள ஹர்ட் பண்ணனும்னு அப்படி சொல்லல..

தெரியும் மித்ரா..

ரொம்ப அழகா வந்து இருக்கு..

நீங்க தான் காரணம்..

தேங்க்ஸ்…

உங்கள மீட் பண்ணனுமே. நீங்க எதுவும் தப்பா…

பண்ணலாமே..

 

ஒவ்வொரு முறை அவனை காண செல்லும் போதும் மழை கொட்டி தீர்த்தது.. மூன்று அல்லது நான்கு முறையும் அப்படியே சென்றது..

 

பிறகு ஒரு நாள் சந்தித்தோம்.. 

 

மழைக்கு என் மேல் என்ன கோபம். இல்லை என் காதலனின் மேல் தான்… அவனுக்கு மட்டுமே சொந்தமான என்னை கவர்ந்து செல்ல வேறொருவன் வந்துவிட்டான் என்று.. கொண்டு வந்தவனும் அவனே.. இப்போது கோபம் கொள்பவனும் அவனே..

 

எங்கள் நட்பு வளர்ந்தது.. அலைபேசி வழியே.. கூடவே மழையின் சிணுங்கலும் சண்டையும்..

 

—– 

மழையை விட உற்ற தோழனில்லை.. என் 16 வயதில் என் தந்தை திடீரென்று இறந்தவுடன் அந்த அதிர்ச்சியில் இருந்து வெளிக்கொண்டு வந்தது மழை தான்.. எங்கும் கொட்டி தீர்க்க முடியாத துக்கத்தை மழையிடம் அளித்தேன்.. கொட்டும் மழையில் பல மணி நேரங்கள் பித்து பிடித்தவள் போல் இருந்தேன்.. மழை என் அத்தனை அழுத்தத்தையும் எடுத்துக்கொண்டு சென்றது.. எல்லாரும் திட்டும் மழையை நான் மட்டும் கொண்டாடினேன்..

அகிலனிடம் இதை கூறியவுடன் உடனே அழைத்தான்.. எதிர்பார்த்தேன்.. அவன் பேசியது என்னை சாரலாய் வருடி அரவணைத்துச்சென்றது..

மழைக்கு மீண்டும் நன்றி.. அன்றிரவு பெய்த மழையில் கரைந்தேன்..

——

பல நாட்களாக பூனை குட்டி தவித்துக்கொண்டிருந்தது. எந்தப் பக்கம் குதிக்கலாம் என்று. இதோ இன்று வெளியில் வந்து விழுந்து விட்டது

 

மித்ரா… நான் உன்கிட்ட ஒண்ணு கேக்கணும்.. எனக்கு சின்ன கன்ப்யுஷன்.. உன் கிட்ட கேட்டா தான் தெளியும்

 

என்ன அகிலன்….

 

இந்த வரிகளுக்கு அர்த்தம் சொல்லு.. பெண்ணுடம்பில் காதல் எங்கு உள்ளது.. ஆண் தொடாத பாகம் தன்னில் உள்ளது..” – கண்ணடிக்கும் ஸ்மைலியுடன் மெசேஜ் வந்தது.

 

மழை முகத்தில் அறைந்தது போல்.. எனக்கு புரிந்தது…

என்ன புரியல?”

 

பொதுவா எனக்கு தெரியும். ஆனா மித்ரா எப்படின்னு தெரியல. அதான் கேட்டேன். சொல்லலாமா?

 

அகிலன் நீங்க எந்த அர்த்தத்தில் கேக்கறிங்க எனக்கு புரியல.. சொல்றேன். எதுக்காக மித்ரா பத்தி தெரியணும்னு நான் தெரிஞ்சுக்கலாமா?

 

தெரியாத மாதிரியே இருக்க… பதில் சொல்லு…

 

இது ஒரு அழகான பாசாங்கு.. தெரியாதது போல் நடிப்பது.. ஒரு வேளை வேற மாதிரி கேக்கறானோ? லேசாக பயம் வந்தது.. யாரிடமும் இப்படி பேசியதில்லையே.. முகத்தில் அறைந்தாற்போல் சொல்லிவிடுவேனே. இல்லை.. அகிலன் என் ரசனையை ரசிக்கிறான்… மதிக்கிறான்..

 

என்னிடம் காதல் இல்லை…..

 

சில நிமிடம் கழித்து… அவன்..

எனக்கு புரிஞ்சது.. நீ தான் மழைக்காதலி ஆச்சே..

அந்த ஒரு நொடி.. அந்த வார்த்தை.. அவனிடம் மயங்கிபோனேன்.. அப்படி தான் சொல்லணும்.. அலைபேசியில் அழைத்தான்.. அவனிடமே கேட்டேன்..

 

நான் மழையின் காதலியா?”

 

சில நொடிகள் சிரித்தோம்..

 

ஆமாம்….. இல்லை….. .தெரியலையே…..

 

சில நொடிகள் மௌனம்

 

மித்ரா…..

 

அகிலன், நான் மழையின் காதலி மட்டும் இல்லை.. நீங்க எப்படி திங்க் பண்ணாலும் சரி.. நீங்க இல்லைன்னு சொன்னாலும்.. அதை பத்தி எனக்கு கவலையில்லை.. மழை வந்தா எனக்கு வரும் சந்தோஷம் உங்க கிட்ட பேசும் போது வருது. உங்கள பாக்கும் போது வருது.. உங்கள பாக்க முடியலன்னு அன்னிக்கு மழையை அவ்ளோ திட்டினேன்.. உங்க கிட்ட எனக்கு எது பிடிச்சிருக்குன்னு தெரியல.. உங்க கிட்ட நான் சரின்னு சொல்விங்கன்னு எதிர்பாக்கலை.. ஆனா நான் உங்கள விரும்பறேன் அகிலன்..

 

அவனிடம் பதிலில்லை..

 

ஹலோ… என்ன பதிலே இல்லை? என்னை பிடிச்சிருக்கா? ஏன் ஒண்ணுமே பேசல… – கேட்டது நான்..

ஒண்ணுமில்ல மித்ரா..

ஒ.. சரி.. வேற..

அவ்ளோ தான்…

அப்போ வெச்சிறவா?

சரி நாளைக்கு பேசறேன்..

 

மழை வரலாமா வேண்டாமா என்ற யோசைனையுடனே இருந்தது போல.. எனக்கு புரியவில்லை..

 

மறுநாள் 4 மணி வாக்கில் என் அலுவலகத்துக்கு வந்தான்.. வெளியில் போகலாம் என்று அழைத்தான்.. நாங்கள் முதல் முறை சென்ற காபிஷாப் சென்றோம்.. கையில் ஒரு பரிசு பொருள்.. இல்லை பொருட்கள்.. இப்போது தான் பார்த்தேன்.

 

மித்ரா?

அகிலன்… என்ன திடீர்னு இப்படி….

ரொம்ப தேடி பாத்து வாங்கினேன்.. பிடிக்கலன்னா கூட பிடிச்சிருக்குன்னு சொல்லிடு ப்ளீஸ்… அவ்ளோ அலைஞ்சேன் காலைல இருந்து..

 

மழைத்துளிகள் கோர்த்தது போன்று அழகான காதணிகள் மற்றும் ஒரு மோதிரம்.. அவ்வளவு அழகு.. கண்களின் ஓரத்தில் நீர்த்துளி.. பார்த்து விட்டான்..

 

என்ன பிடிக்கலையா? அழற மாதிரி இருக்க?

 

சிரித்தேன்.. அருகில் வந்து அமர்ந்தான்.. பிடிச்சிருக்கா? அவன் கேட்டான்.

நான் நேத்தியே சொல்லிட்டேன்….

 

அவ்ளோ அவசரமா உனக்கு.. ஆனா எனக்கு கொஞ்சம் பயம் தான்.. கவிதை பத்தி பேசும் போதே சுர்ருன்னு பேசினே.

 

சிரித்து மழுப்பினேன்..

 

இப்போ சொல்லு…. நீ சொல்றது நான் பாக்கணும்…. சொன்னா தான் ஆச்சு.. இல்லன்னா..

 

இல்லன்னா என்ன?

 

இதோ கேளு நான் சொன்னதை ரெகார்ட் செய்திருக்கிறான்..

 

தலை கவிழ்ந்து கொண்டேன்.. சில நிமிடங்களில்.. சற்று அமர்த்தலாக..

 

ஆமாம் அகிலன்.. எதுக்கு இதெல்லாம் இப்போ? யாருக்கு தரணும்?

 

நான் கூற வந்ததை முடிக்க விடவில்லை.. அதற்குள் அவன் அப்படியா….

 

சிரிப்பு வந்து விட்டது..

 

அகிலன், நான் உங்கள விரும்பறேன்.. ஐ லவ் யூன்னு சொல்லணுமா??

 

எதுவும் பேசாமல் மோதிரத்தை எடுத்து விரலில் மாட்டினான்..

 

அது என்ன….என்னிடம் கொடுக்காத பரிசை கேட்டேன்

 

நீ வேணாம்னு சொன்னா வேற பொண்ணுக்கு குடுத்துறலாம்னு…. ஏய் அடிக்காத. சும்மா சொன்னேன்..

அதை குடுத்து வீட்டுக்கு போய் பிரிச்சி பாரு என்றான்..

 

என்னை விடுதியில் விட்டு சென்றான்..

 

அதில் வேறொன்றுமில்லை.. அழகான கருப்பு நிற புடவை… மழை தூறியது போல் டிஸைன்.. அகிலனின் ரசனை என்னை ஆச்சர்யபடுத்தியது..

—-

 

இப்போதெல்லாம் மழை அடிக்கடி வரவில்லை… சில நேரங்களில் வானத்தையே வெறிப்பேன்.. அகிலனும் கேலி செய்வான். சின்ன சின்ன சண்டைகள்.. கோபம் கொஞ்சல் எல்லாம்.. வாழ்க்கை அழகாகி கொண்டே சென்றது.. ஓரத்தில் ஏதோ வருத்தம்…

 

அன்று அவனுக்கு பிறந்தநாள்..

 

அவன் பரிசளித்த யாவும் அணிந்தேன். அவன் அலுவலகத்தில் என்னை பார்த்ததும் இன்ப அதிர்ச்சி.. அரை நாள் விடுப்பு எடுத்து அவனை அழைத்து கொண்டு கிளம்பினேன்.. ஷாப்பிங்.. ஹோட்டல்.. இடைவேளை வரை ஒரு சினிமா.. கொஞ்ச நேரம் கடற்கரை காற்று..

 

அகிலன் வீட்டுக்கு சென்றோம்.. இரு நண்பர்களுடன் தங்கி இருக்கிறான், அவனுடன் ஒன்றாக வேலை செய்பவர்கள். யாரையும் காணவில்லை. வேறு வேலையாக இரண்டு நாட்கள் வெளியூர் சென்றிருக்கிறார்கள். என் அம்மாவை போலவே அவனின் பெற்றோரும் வேறு ஊரில் இருகிறார்கள்..

 

ஒரு சின்ன கேக் வாங்கி அவன் வீட்டில் ரொம்ப சின்ன அழகான பிறந்தநாள் கொண்டாட்டம். அவன் எதிர்பார்க்கவில்லை.. மழை சாரல் வீச தொடங்கியது..

 

மழை வர மாதிரி இருக்கு.. நான் கெளம்பறேன் அகிலன்

இரு மித்ரா.. நான் கொண்டு விடறேன்..

வேணாம். என் வண்டி என்ன பண்றது?

அது சரி.. நான் காலைல வரேன் மா..

இல்லல நான் கெளம்பறேன்..

இரு மித்து. ஏன் இவ்ளோ அவசரம்..

மழைக்கு முன்னாடி போய்டுவேன்..

திருப்பி சொல்லு..

 

நான் பதில் பேசவில்லை.. மழை வலுத்தது..

அரை மணி நேரம் சென்றிருக்கும்…. இருவரும் ஒன்றும் பேசவில்லை

 

எதாவது சாப்பட வேணுமா மித்து…

 

ஒண்ணும் வேணாம் அகி. ஏற்கனெவே சாப்டது வயிறு புல்லா இருக்கு… உங்களுக்கு?

 

ஜன்னலில் மழையை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன்.. இல்லை மழை என்னை…. என்ன செய்ய போகிறாய்?? என் மிக அருகில் அவன்..

 

அகிலன்… என்ன இது..

மித்ரா…..

என் முகத்தை ஏந்தி கண்களுள் பார்த்தான்.. கண்களை மூடிக்கொண்டேன்.

 

நான் கெளம்பறேன் அகிலன்.. மனதிற்குள் பேசினேன்..

முத்தமிட்டான்.. முதலில் இமைகள்.. கன்னங்கள்.. இதழ்கள்..

 

என் பேர் தெரியுமா?

தெரியுமே..

அப்போ சொல்லுங்க..

மித்ரா. மித்ரா.. இது தான் உன் பேரு.. கரக்டா?

மித்ரா தான் என் பேர்..

எனக்கு தெரியும் மித்ரா.

 

அவன் மேல் சாய்ந்து அணைத்துக் கொள்ள எந்த தயக்கமும் வெட்கமும் இல்ல.. மழை தான் கதறி தீர்த்தது.. ஆனந்த கூச்சலா இல்லை ஆற்றமையா? இது நாள் வரை மழை மட்டுமே அறிந்த என் அழகினை, ரகசியங்களை களவாடினான்..

 

தேடல் முடிந்து தாகம் தணிந்து களைத்த பிறகு, முத்தமிட்டு, அணைத்துக்கொண்டு உறங்கினான்… கலவிக்கு பிறகான முத்தங்கள் எதுவும் காமத்தில் சேர்வதில்லை….

அவனை மிகவும் பிடித்தது.. அவனின் யாவும்..

முத்தம் முதல் முத்தம் வரை..

—-

காலையில் சுரீரென்று சூரியக்கதிர்…. எழுந்து கொண்டேன்.. எனக்கு முன்னே அவன் கையில் காபியுடன் அழகான சிரிப்புடன் கொஞ்சம் குறும்புடன்..

 

வெளியில் பார்த்துக்கொண்டே கேட்டேன்..

நேத்திக்கு மழை எப்படி இருந்தது… ப்பா?..”

சிரித்துக்கொண்டே ஆமாம் என்றான்.. நல்ல மழை அப்படி தான…அவனை பார்த்து புன்னகைத்து திரும்பிக்கொண்டேன்.. எனக்கு பக்கவாட்டில் வந்து நின்றான்..

நான் என்ன சொல்லணும் மித்ரா.. இல்ல என்ன பண்ணனும் சொல்லு…

எதுக்கு கேக்கறிங்க அகிலன் எனக்கு புரியல..வெறுமையாக உணர்ந்தேன். ஒரு நிமிடம் ச்சே.. என்ன இது.. இவ்வளவு தானா.. இவன் மேல் வெறும் உடல்கவர்ச்சி தானா என்று தோன்றியது…

 

உனக்கு புரியலன்னு என்ன நம்ப சொல்றியா??”

 

அவன் அருகில் சென்று கைககளை பற்றினேன்..என்ன பண்ணலாம் சொல்லுங்க.. ஏதோ ஒரு அவரசத்தில இதெல்லாம் அப்படின்னு சொல்ல போறிங்களா?”

 

அகிலனுக்கு கோபம் வந்து விட்டது.. கையை விடுவித்துக்கொண்டான்.

நான் ஒண்ணும் பொறுக்கி இல்லை.. இது வரைக்கும் எந்த பொண்ணுகிட்டையும் வழிஞ்சதும் இல்ல… வேற………..

எதையோ சொல்ல வந்து நிறுத்தினான்.. எனக்கு அந்த கோவம் ரொம்ப பிடிச்சது.. ஒரு ஆண் சரியான நேரத்தில எடத்தில கோவபடணும்.. அது அழகு…

 

ரொம்ப கோவமா இருக்கீங்க… இப்போதைக்கு பேச வேண்டாம்.. ரெண்டு நாள் போகட்டும்.. பேசலாம்.. நான் கெளம்பறேன்..”

 

போகாத மித்ரா. இரு… ரெண்டு பெரும் சேர்ந்து போகலாம்.. நான் பேசணும்.. கோவம் இல்ல…

 

புன்னகைத்தேன்… நானே பேசினேன்..

 

அகிலன் எனக்கு உங்கள ரொம்ப பிடிச்சிருக்கு.. 

நானா உன் மழையா? சீண்டினான்

இது ரொம்ப அபத்தமான கேள்வி…. இந்த மாதிரி பேசறது எனக்கு பிடிக்கல..

பரவால்ல.. சொல்லு..

இப்படி பேசாதிங்க.. கஷ்டமா இருக்கு என் கண்கள் கலங்கியது..

 

ஆமாம் அப்போது தான் ஒன்று புரிந்தது.. நேற்று ரொம்ப நேரம் வானம் தூறிக்கொண்டு தான் இருந்தது.. ஒரு நொடி கூட தோன்றவில்லை.. சாரலில் நனைய வேண்டும் என்று. ஏனிப்படி? என் கண்ணீரை முதல் முறையாக தவறாக புரிந்து கொண்டான். ஏதேதோ பேசினான்.. வெகு நேரம் அவன் அணைப்பில் இருந்தேன்..

 

சீக்கிரமாக   முடிவு செய்தோம்..  பேசினோம்.. ..என் அம்மாகிட்டயும் அவன் அப்பா அம்மாகிட்டயும்..

சின்ன நெருடல்.

 

——-

 

நீ உன்னோட வேலைய விடணும்… இந்த ஒரு விஷயம் மட்டும் எனக்காக செய்ய முடியுமா? நீ என்னோடவே இருக்க ஆசைப்படறேன்.. ஒரு வருஷம் டெல்லில போஸ்டிங்..எதுவும் பேசவில்லை.. மகிழ்ச்சியாக சரி என்றேன்..

 

மித்ரா டெல்லில மழையே பெய்யாதாமே நிஜமாவா?

திருமணத்தில் நண்பர்கள் கேலி செய்தார்கள்.. பெரிய அதிர்ச்சி.. அகிலன் அவர்களை முறைத்தான்.. வரவேற்பு முடிந்தவுடன் தனியே விடப்பட்டோம்..

 

என்ன அகிலன் இப்படி சொல்றாங்க?

இப்போ என்ன உனக்கு.. லேசாக எரிச்சலுடன் கேட்டது போல இருந்தது..

அதில்ல சும்மா தான் கேட்டேன்…. என் குரல் உள்ளே சென்றது..

பசிக்குது.. சாப்பிட போலாமா..

….

மித்ரா உன்ன தான் கேக்கறேன்.. நமக்காக அவங்க வெயிட் பண்றாங்க..

….

மித்ரா, நான் இப்போ என்ன சொல்லிட்டேன்னு மூஞ்சிய தூக்கி வெச்சிருக்க.. இது கொஞ்சம் கூட நல்லா இல்ல.. எல்லாரும் நம்மள தான் பாக்கறாங்க..

கலங்கிய கண்களுடன் போலாம் என்றேன்..

 

அதற்குள் என்னடா இங்க பண்றீங்க.. என்ன ஆச்சு மித்ராக்கு.. என் அம்மா வந்து கேட்டார்

நான் சொன்னேன்ல.. என்னை முறைத்தான்

ஒண்ணும் இல்ல.. கொஞ்சம் டயர்டா இருக்கு மா. அதான்..

சரிம்மா சீக்கரம் சாப்ட்டு கெளம்பலாம்..

 

அவன் வீட்டிற்கு தான் சென்றோம்.. எதுவும் வேண்டாம் நார்மலாக இருந்தால் போதும் என்று சொல்லிவிட்டான். அம்மாவிற்கு ரொம்ப சந்தோஷம்.. சொல்லி சொல்லி சந்தோஷப்பட்டாள்.. இவ்ளோ தங்கமான பையன்அகிலன் தங்கம் தான்.. எனக்கு தான் புரியவில்லை..

—– 

அறையை ஒட்டிய பால்கனியில். அன்று இரவு ஞாபகம் வந்தது.. இதே போல் ஒரு இரவு தான்…

 

மித்து…. தோளை தொட்டான்.

ம்ம்ம்

அவன் பக்கம் திருப்பி என்ன உற்று பார்த்தான். பார்வையை தாழ்த்திக்கொண்டேன்..

உனக்கு பிடிக்கலேன்னா நீ வர வேண்டாம்.

நா ரெண்டு வாரத்துக்கு ஒரு முறை இங்க வரணும்.. அப்போ பாத்துக்கலாம்.. சரியா.. என்ன ஒண்ணுமே சொல்ல மாட்டேங்கற..

கோபமா அகிலன்..

இல்ல மித்ரா..

சரி போய் தூங்கு.. நாளைக்கு பேசிக்கலாம்.. ரொம்ப டயர்டா இருக்கு..

 

தூங்கிவிட்டான்.. எனக்கு தான் பெரிய குழப்பம்.. ச்சே..

பால்கனியில் அமர்ந்திருந்தேன்.. சிறிது நேரம் கழித்து..

இன்னும் தூங்கலையா நீ?

நீங்க என்ன?

உன்ன காணோமேன்னு பாத்தேன். ஒரு வேள மழையை தேடி எங்கயாவது போய்ட்டயோன்னு நெனச்சேன்..

…..

இது ஜோக். கொஞ்சமாவது சிரிக்கணும்..

அப்டியா. நீங்க ஜோக்னு சொல்லி தான் எனக்கே தெரியுது.

சரி இதுக்கு பதில் சொல்லு..

என்ன..

நானா உன் மழையா???

முறைத்தேன்.. இந்த கேள்வி கேக்கற நேரமா இது..

ஆமா.. இப்டி நடு ராத்திரி இங்க இருக்க. இன்னிக்கு உன் ஆளு வர மாட்டான்..

சிரிப்பு வந்தது.

பதில் சொல்லுங்க மழையின் காதலியே…

வாய்விட்டு சிரித்தேன்..

இப்போ நான் மிஸஸ். மித்ரா அகிலன்.. இப்படி வாய் கூசாம இன்னொருத்தர் காதலின்னு சொல்றிங்களே.. வெக்கமா இல்ல..

அதையே தான் நானும் கேக்கறேன்..இன்னிக்கு தான் கல்யாணம் ஆகி இருக்கு.. புருஷன் பக்கத்துல இருக்கான்.. அத விட்டுட்டு உன் காதலன தேடிட்டு இருக்க..

என்ன இருந்தாலும் அவன தான எனக்கு முதல்ல தெரியும்… அது மட்டும் இல்ல.. அவன் இல்லாம நீங்க எனக்கு இல்லையே…

அதனால….

ஏன் இவ்ளோ கோவம் வருது.. அகி.. நீங்க தூங்கிடிங்கன்ன்னு தான். எனக்கு தூக்கம் வரல… சரி.. உள்ள போலாமா.. இப்போ அகிலன் தான்…. அப்புறம் தான் மழை…

எதுவும் பேசவில்லை அவன்..

—-

 

டெல்லியில் அழகான வாழ்க்கை..

 

நான் பயந்தது போல தொட்டதுக்கெல்லாம் அகிலன் கோபப்படவில்லை. ஆச்சரியமாக இருந்தது.. என் எதிர்ப்பார்ப்புகளை மீறி ரொம்ப சந்தோஷமாக இருந்தேன். ஆனால் எனக்கு அங்கே பிடிக்கவில்லை.. அவனுக்காக தான். இதை எல்லாம் மீறி ஏதோ ஒன்றை தொலைத்து போல உள்ளே வருத்தம். என்னையும் மீறி வெளியில் வரும்..

ஒவ்வொரு முறை அகிலன் ஊருக்கு போகும் போதும் ஒட்டிக்கொண்டு சென்றேன்.. இரண்டு மாதங்கள் தான். பிறகு நானே வரவில்லை என்றேன்.. அவனும் ஒரு கட்டத்தில் அழைத்துப் பார்த்து சலித்து விட்டான். பல மாதங்களாக இல்லாமல் திடீரென்று மழை. அகிலன் ஊரில் இல்லாதது நல்லது. ஆசை தீர நனைந்தேன். மழையிலேயே பழியாய் கிடந்தேன். கூட சில வாண்டுகள். மீண்டும் உயிர் வந்தது.

 

அப்பார்ட்மெண்ட் காவலாளி போட்டு குடுத்து விட்டான்.. ரெண்டு பசங்களுக்கு காய்ச்சல்.. ஒரு சேட்டம்மா வந்து ஹிந்தில என்னமோ திட்டிட்டு போனாங்க. அந்த நேரம் பார்த்து அகிலன் வந்து விட்டான்.. பெரிய பிரச்சனை. கிட்ட தட்ட ஒரு வாரம் சரியாக பேசவே இல்லை. சமாதான படுத்தலாம்னு பாக்கும் போது அவ்ளோ சண்டை.

 

உனக்கென்ன பைத்தியமா? நீ தான் லூஸுன்னா மத்தவங்கள ஏன் டிஸ்டர்ப் பண்ற.. உன் ஊருன்னு நெனச்சியா? இஷ்டத்துக்கு மழைல ஆடினாலும் ஒண்ணும் கேக்க மாட்டாங்கன்னு.. இப்போ எவ்ளோ ப்ராப்ளம் தெரியுமா?? ச்சே.. ….

 

அவனை நிறுத்த சொல்லி.. அப்போ மழைல போய் நின்னா நான் பைத்தியமா அகி…

 

அத்துடன் நிறுத்தி விட்டான்..

அன்றிரவு..

 

மித்து.. ஸாரி.. நான் ஏதோ… வந்த உடனே எல்லாரும் ரொம்ப கம்ப்ளைன்ட்.. அதான்…

 

என்னருகில் வந்து அணைக்க முயன்ற போது விலகினேன். அவனுக்கு அதிர்ச்சி. பிறகு யோசித்து பார்த்த போது எனக்குமே அதிர்ச்சி. அவன் எதுவும் பேசாமல் நின்றான். மீண்டும் பல நாட்களுக்கு ஏதோ இழந்தது போலே இருந்தது. அகிலனுக்கு புரிந்தாலும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. என்னையும் பெரிதாக எதுவும் கேட்கவில்லை. பல முறை காரணமே இல்லாமல் அவன் மேல் பாய்ந்தேன். அவனுக்கு என்ன புரிந்ததோ.

 

ஏன் மித்து இப்போலாம் நீ எழுதறது இல்ல? நான் ரொம்ப மிஸ் பண்றேன். உன்னையும்..

 

அந்த மழையை நினைத்தேன் .. அன்று நனைந்த ஒவ்வொரு துளியிலும் அகிலனின் காதலை உணர்ந்தேன்.. ஆனால் அந்த துளிகள் என் மேல் விழுந்த தீப்பொறிகளாக இருந்தது.. அகிலனின் வார்த்தைகள்.. அன்று பேசியது.. இழந்தது எது? உடைந்து போனேன்..

 

என்னையே என்னால் சமாதானம் செய்து கொள்ள முடியவில்லை.. ஓரமாக மடங்கி அழுதேன். அகிலன் எதிர்பார்க்கவில்லை. தவித்தான்.. எவ்வளவோ முயன்று ஒரு வழியாக தேற்றினான். பல நாட்களுக்கு பிறகு அவன் அணைப்பில் அன்று உறங்கினேன். மழை வந்து என்னை அரவணைத்து செல்லுமே அதே போல இவன். ஏதோ புரிந்தது..

 

சென்னைக்கு போகலாமா.. ஒரு வாரம் லீவ் போட்டுட்டு வரேன்.. உனக்கும் கொஞ்சம் சேன்ஜ் வேணும். என்ன மித்து..  

 

ம்ம்ம்.. போலாம்..

 

ஆனால் அங்கே எங்களுக்கு பெரிய அதிர்ச்சி காத்திருக்கும் என்று தெரியவில்லை.. சென்னையையே புரட்டி போட்ட பெரும் மழை வெள்ளம் எங்கள் வாழ்க்கையிலும் விளையாடியது.

——

 

சென்னை அலுவலகம் போய் வரேன் என்று சென்றவன்.. வரவேயில்லை. அலைபேசி வேலை செய்யவில்லை.. கொஞ்சம் கொஞ்சமாக வெளியுலக தொடர்பு காணாமல் போனது.. நாங்கள் இருந்தது இரண்டாம் மாடி. அங்கே தண்ணீர் வர வாய்ப்பு இல்லை. கீழ் தளம் மற்றும் முதல் மாடியில் இருந்தவர்கள் என்னுடன் சிலர் தங்கினார்கள். இந்த அளவுக்கு நேசித்த மழை என்னை கொன்றாலும் பரவாயில்லை.. ஆனால் அகிலன். அவன் எங்க இருக்கிறான்.. அழுகை நிறுத்த முடியவில்லை.. உடன் இருந்தவர்கள் சமாதானம் செய்தார்கள்..

 

யாரோ எங்கயோ தகவல் கேட்டு அவன் இருக்கும் இடத்தில் முழுதும் தண்ணீர். எல்லா சாலைகளும் நிரம்பி வழிகிறது.. வெளியில் வர முடியவில்லை என்று சொன்னார்கள். 

மூன்று நாட்கள்.. அந்த மழையின் சத்தம் என்னை துளைத்தது..

அகிலன்… அவனை பார்த்தவுடன் கதறி தீர்த்தேன்.. அவனை விட என்னுடன் இருந்தவர்களுக்கு ரொம்ப சந்தோஷம்..  

இனிமே இங்கே வரவே வேண்டாம். நான் எதை பத்தியும் பேச மாட்டேன்.. நாம போயிறலாம்.. இங்க வேண்டவே வேண்டாம்…

 

அந்த அதிர்ச்சியில் இருந்து வெளியில் வர சில வாரங்கள் ஆனது.. அவனுக்கும் அதிர்ச்சி.. ஆனால் என்னை முழுதாக பார்த்த சந்தோஷத்தில் எதுவும் பாதிக்கவில்லை..

 

என்னை நீங்கள் பைத்தியம் என்று சொன்னாலும் பரவாயில்லை. மழைக்கு பொறாமை.. என்னையும் அவனையும் பிரிக்கவே அப்படி கொட்டி தீர்த்தது. இல்லை.. வேறு எப்படி சொல்வது??? அகிலன் எனக்கு தாயுமானவன்..குழந்தையை பார்த்துக்கொள்வது போல, அவன் அன்பில் கரைந்து உருகினேன்.. ரொம்ப வருந்தினேன்.. அகிலனை சரியாக புரிந்து கொள்ளாமல் மழை மீது இருக்கும் ஆற்றாமையை அவன் மீது கொட்டி இருக்கிறேன்…

 

இப்பொழுதெல்லாம் மழை எனக்கு பிடிப்பதில்லை.. வானம் லேசாக இருள் சூழ தொடங்கும் போதே ஜன்னல்களை அடைத்து விடுகிறேன்.. ரசிக்க முடியவில்லை.. தூரத்தில் இருந்தே பார்க்கிறேன்.. எதையோ சொல்லிவிட்டு செல்கிறது.. எனக்கு புரியவில்லை.. இல்லை புரிந்து கொள்ள முடியவில்லை அல்லது விரும்பவில்லை…

அகிலன் அதை விரும்பவில்லை.. சில நாட்களுக்கு பிறகு சர்ப்ரைஸ் என்று ஒரு இடத்திற்கு அழைத்து சென்றான்.

 

விளம்பர காட்சிகள்.. செட் போட்டு ஷூட்டிங் முடிந்துவிட்டது போல.

 

என்ன இது யாருமே இல்ல.. ஷூட்டிங் முடிஞ்சாச்சா..

ம்ம் ம்ம். ஆச்சு..

 

திடீரென்று மழை பெய்ய தொடங்கியது.. ஆம். செயற்கை மழை. புரிந்தது. மழை பெரிதல்ல.. 

 

அவன் தான்.. அதை விட அழகானவன். செயற்கை மழையாக இருந்தாலும் அது என்னை மீட்டது. இல்லை. அகிலனை காட்டியது. பார்வையால் நன்றி சொன்னேன்.. இது போதாது என்றேன்… புரிந்து கொண்டான்.. மீண்டும் காதல் கொண்டோம்..

 

இப்போதும் அகிலன் கேப்பான்.. நானா உன் மழையா? எனக்கு கோவம் வரும்.. என் மழையில்லை என்று அவனை துரத்துவேன்.. அவனுக்கு ஆனந்தமாக இருக்கும்…

********* 

4 thoughts on “சாயி பிரியதர்ஷினியின் ‘மழையின் காதலி’ – சிறுகதை”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

உள்ளும் புறமும் – கி.வா. ஜகன்னாதன்உள்ளும் புறமும் – கி.வா. ஜகன்னாதன்

கடவுள் மறுப்புக் கட்சிக்கு ஆட்கள் சேர்ந்து கொண்டே இருந்தார்கள். மார்கழிமாதப் பஜனைக்கு எவ்வளவு பேர் கூடவார்களோ அந்தக் கணக்குக்கு மேல் ஜனங்கள் இந்த கூட்டத்தில் கூடினார்கள்; அதில் வேடிக்கை என்னவென்றால், மார்கழி பஜனையில் சேர்ந்து கொண்டு தாளம் போட்டவர்களே இந்தக் கூட்டத்திலும்

சூர்யாவின் OS ===2===> Language:;சூர்யாவின் OS ===2===> Language:;

   வயசு நாற்பது ஆச்சுங்க . ஒரு பக்கம் கவலையா  இருந்தாக்கூட அந்த வயசுக்கு ஏத்த பக்குவமும் இருக்கத்தாங்க செய்யுது . முன்பை விட இப்போ எல்லா விஷயத்துலயும்  இருக்கிற அழக  ரசிக்க முடியுது …… இருங்க , இருங்க …..

வல்லிக்கண்ணன் கதைகள் – புன் சிரிப்பு – Audioவல்லிக்கண்ணன் கதைகள் – புன் சிரிப்பு – Audio

ஒளிப் பூக்கள்போல் இனிமையாகச் சிரித்துக் குலுங்கும் விளக்குகளின் மத்தியில், பேரொளிச் சுடரெனத் திகழ்ந்தாள் அகிலாண்ட நாயகி. கருவறையின் புனிதச் சூழல் குளுகுளு விளக்குகளின் ஒளியினாலும் பன்னிற மலர்களின் வனப்பாலும், வாசனைப் பொருள்களின் நறுமணத்தாலும் சிறப்புற்று விளங்கியது. அந்த இடத்துக்கு தெய்வீகத்தன்மை தந்து