கபாடபுரம் – 12

12. அந்த ஒளிக்கீற்று

 

    • இருளில் எங்கிருந்தோ எதிர்வந்த அந்த ஒற்றை ஒளிக்கீற்றே கரைகாணாப் பேரிருளுக்குப் பின் விடிந்து விட்டாற் போன்ற பிரமையை உண்டாக்கிற்று அவர்களுக்கு.

 

    • “மற்றொருவருடைய ஆட்சிக்குட்பட்ட கோ நகரத்தில் இப்படியொரு இருட்குகை வழியைப் படைக்கும் துணிவு வர வேண்டுமானால் இந்த அவுணர்களுக்கு எவ்வளவு நெஞ்சுரம் இருக்க வேண்டும்!” என்று வினாவிய இளையபாண்டியனுக்கு முடிநாகனிடமிருந்து விளக்கமான மறுமொழி கிடைத்தது.

 

    • “தங்கள் பாட்டனார் இந்த அழகிய புதுக் கோ நகரத்தைப் படைக்கும் போது – கட்டிடங்களைக் கட்டுவதற்கும், வானளாவிய மதிற்சுவர்களை மேலெழுப்புவதற்கும், அகழிகளைத் தோன்றுவதற்கும் – உடல் வலிமைமிக்க பணியாட்களாகக் கிடைத்தவர்கள் இந்த முரட்டு அவுணர்களும், குறும்பர்களும், கடம்பர்களுமாகத்தான் இருந்தனர். அந்த நிலையில் இவர்களை நம்பியும் ஆக வேண்டியிருந்தது. முழுமையாக நம்பவும் முடியவில்லை. உடனிருப்பவர்கள் நம்பிக்கைக்குரியவர்களாகத் தோன்றவில்லை. என்றாலும் மற்றவர்கள் எல்லாரும் அறிய அவர்களை விரோதிகளாகக் கருதுவதோ, பகைவர்களாக நிரூபித்து முடிவு கற்பிப்பதோ அரச தந்திரமாகாது.”

 

    • “‘நம்மை எதிர்க்கும் ஒரு விரோதிக்கு நம்முடைய – மற்ற விரோதிகள் எல்லாம் யார் யாராக இருப்பார்கள் என்று அநுமானம் செய்யும் வாய்ப்பைக் கூடக் கொடுக்கலாகாது’ என்றெண்ணும் இயல்புடையவர் தங்கள் பாட்டனார். அதனால் தான் கோ நகரத்தை அமைக்கும் பணியை இவர்களிடம் விட்டிருந்தார். ஆனால் இவர்கள் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு – இப்படி இரகசிய வழிகளையும் கரந்து படைகளையும் சுருங்கை மார்க்கங்களையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இவர்கள் எங்கெங்கே என்னென்ன செய்திருப்பார்கள் என்பதெல்லாம் அவருக்கு மிக நன்றாகத் தெரியும்.”

 

    • பேசிக் கொண்டே அவர்களிருவரும் அந்த ஒளிக் கீற்றுப் புறப்பட்ட இடத்தை நெருங்கிக் கொண்டிருந்தார்கள். அருகில் நெருங்கிப் பார்த்ததும் தான் அந்த இடத்தில் அவர்கள் அடைந்த வழியின் மற்றொரு நுனி தேர்க்கோட்டத்தின் உள்ளே மரங்களடர்ந்த புதர் ஒன்றினருகே கொண்டு போய்விடுகிறது என்பது தெரிந்தது. சிலுசிலுவென்று உள்ளே நுழைந்துவந்த காற்றும் அந்த இடத்திலிருந்து புறப்பட்டதுதான் என்று தெரிந்தது. வழியின் முடிவில் தேர்க்கோட்டத்துப் புதரருகே மதிற்சுவரை ஒட்டினாற்போல – மேலே ஏறி நின்றபோது இன்னும் பொழுது புலரவில்லை என்பதையும் அறிந்து கொள்ள முடிந்தது.

 

    • ‘வழியைக் கண்டுபிடித்து முடிப்பதற்குள் விடிந்துவிடுமோ’ – என்று உள்ளே இருள்வழியில் தோன்றிய பரபரப்பும் பயமும் வீண் பிரமையே என்பதனை இப்போது அவர்கள் இருவரும் உணர்ந்தனர். உள்ளே இறங்கி, அந்தச் சுரங்கவழி போய் முடிகிற மற்றோர் இடத்தையும் கண்டுபிடிக்கப் போதுமான காலமும் வாய்ப்பும் இருக்குமென்று தோன்றியது. எஞ்சியுள்ள காலத்தை வீணாக்காமல் செயல்படலாமென்று இளையபாண்டியனும் முடிநாகனும் எண்ணினர்.

 

    • “எதற்கும் இந்தப் புதரருகே இந்தப் பகுதி எங்கிருக்கிறதென்று அடையாளம் தெரிகிறார் போல எதிர்புறமுள்ள மதிற்சுவரில் ஒரு குறியீடு செய்து வைப்பது நல்லது. முரசமேடை வழியிலிருந்து இங்கே புறப்பட்டு வராமல் – இங்கிருந்து முரசமேடைப் பகுதிக்குப் போக வேண்டிய அவசியம் என்றாவது வருமானால், இங்கு இந்த மதிற்சுவரில் உள்ள குறியீட்டைப் பார்த்து வழி தொடங்குமிடத்தை அறிய முடியும்” என்று முடிநாகன் கூறிய யோசனையை அப்படியே ஏற்றுச் செயல்புரிந்தான் இளையபாண்டியன்.

 

    • அந்தப் புதருக்கு நேர் எதிரே மதிற்சுவரில் ‘வழி இங்கே விளங்கும்’ – என்பதை மிகவும் குறிப்பாக உணர்ந்து கொள்வதற்கு ஏற்ற முறையில் விளக்குப் போல் உருத்தோன்றக் கோடுகள் கீறிவைத்தான். பெரும் பரப்பாக விரிந்துகிடந்த தேர்க்கோட்டப் பகுதியில் அது எந்த இடம் என்பதையும் நன்றாகச் சுற்றிப் பார்த்துத் தெளிவாக நினைவு வைத்துக் கொண்டார்கள் அவர்கள்.

 

    • முரசமேடை வழியின் மற்றோர் நுனியைக் காண்பதற்காக அவர்கள் மீண்டும் அந்த வழியே உள்ளே இறங்கிய போது, “எனக்கொரு சந்தேகம் முடிநாகா! இருளோ இன்னும் புலரவில்லை. வழி முடிகிற இந்த இடத்திலோ செடியும், கொடியும், புதருமாயிருக்கிறது. அப்படியிருக்கையில் நாம் உள்ளே கண்ட ஒளிக்கீற்று எங்கிருந்து வந்திருக்க முடியும்? அவ்வளவு தெளிவான ஒளி இந்த இருளில் எங்கிருந்தும், எப்படியும் வருவதற்குச் சாத்தியமில்லையே?” – என்று ஒரு ஐயப்பாட்டைத் தெரிவித்தான் இளையபாண்டியன். இது நியாயமான சந்தேகமென்றே முடிநாகனுக்கும் தோன்றியது.

 

    • விளக்காகவோ, சுரங்கத்தின் மேற்புறத்தில் எங்கிருந்தாவது வருகிற ஒளியாகவோ அது இருந்திருக்க முடியாது என்று அவர்களுக்குள் ஓர் உறுதி ஏற்பட்ட பின், முன்பு நம்பிக்கை ஒளியாகத் தோன்றியிருந்த அதே ஒளியைப் பற்றி இப்போது சிந்தனையும், சந்தேகமும், கற்பனைகளும் எழுந்தன. இப்படி அந்த ஒளியைப் பற்றிய சந்தேகத்தோடும் சிந்தனைக் கலவரங்களுடனும் – கீழே இறங்கிச் சென்றதும், மறுபடி திரும்பிச் செல்லுகிற வழியில் ஒரு குறிப்பிட்ட தொலைவுவரை போய் நின்று கொண்டு திரும்பிப் பார்த்தார்கள் அவர்கள். மீண்டும் அந்த ஒளி சுடரிட்டது. இருவரும் உடனே விரைந்து திரும்பி அந்த ஒளி வந்த இலக்கைக் குறிவைத்து நடந்தார்கள். முரசமேடையிலிருந்து தேர்க்கோட்டத்துக்குப் போய் மேலேறுகிற வழியில் ஒரு குறிப்பிட்ட கோணத்திலிருந்து குறிப்பிட்ட எல்லைவரைதான் அந்த ஒளி தெரிந்தது. அதற்குப் பின் அந்த ஒளியைப் பற்றி நினைக்கவே வழியின்றி மேலேறிச் செல்லும் படிகளைக் கால்கள் நன்றாக உணர முடிந்தது.

 

    • ‘சுரங்க வழி முடிந்து மேலே ஏறிச் செல்லும் வழி இந்தப் பகுதியில்தான் இருக்கிறது’ – என்பதை உள்ளே நடந்து வருகிறவர்கள் இருளிலும் தடுமாறாமல் விளங்கிக் கொள்ள வேண்டுமென்பதற்காகவே இந்த ஏற்பாடு என்பதாக நன்றாக உய்த்துணர முடிந்தது. முடிநாகனும் இளையபாண்டியனும் அந்த ஒளிக்கீற்று எங்கிருந்து வருகிறது என்பதை அறிந்து கொள்வதற்காக விரைந்தபோது அவர்களுக்கு ஏற்பட்ட அநுபவம் விந்தையானதாக இருந்தது. அதை அறிந்து கொள்ளும் ஆவல் குறைவதாய் இல்லை. ‘இதோ அருகில் நெருங்கிவிட்டோம். இன்னும் நொடிப் பொழுதில் இந்த ஒளியைப் பற்றிய உண்மை நமக்கு விளங்கிவிடும்’ – என்று நினைத்த கணத்திற்கு அடுத்த கணமே அந்த ஒளி கண்ணுக்குத் தெரியாமல் மறைந்தோ திசை தப்பியோ போய்க் கொண்டிருந்தது. நீண்ட நேரத் தடுமாற்றத்திற்குப் பின் மிக எளிமையான அந்த உண்மையை முடிநாகன் தான் கண்டுபிடித்தான்.

 

    • கபாடபுரத்தின் பெயர்பெற்ற இரத்தினாகரங்களில் எடுத்த ஒளி நிறைந்த மணி ஒன்றை அந்த இடத்தில் சுவரில் பதித்திருந்தார்கள் அவுணர்கள். ஒரு குறிப்பிட்ட கோணத்தில் குறிப்பிட்ட தொலைவுவரை ‘பளிச்சிடும்’படி அந்தக் கல் பதிக்கப்பட்டிருந்தது. அவுணர்களின் சாதுரியமான இந்த வேலைப்பாட்டை இளையபாண்டியன் மிகவும் வியந்தான். அந்த மணி பதித்திருந்த இடத்தைக் கண்டுபிடிக்க அவர்கள் அரும்பாடுபட வேண்டியிருந்தது. கண்டுபிடித்து முடித்ததும் வெற்றிப் பெருமிதத்தோடு அடுத்த வழியைத் தேடிப் புறப்பட்டார்கள் அவர்கள்.

 

    • அடுத்த வழி பிரிகிற இடத்திலும் இதைப் போல் ஒரு மணி சுடர் பரப்பியது. ஆனால் ஒரு சிறிய வேறுபாடும் இருந்தது. தேர்க்கோட்டத்து வழியில் பதிக்கப்பட்டிருந்த மணி சிவப்புக் கலந்த ஒளிச் சுடரை உமிழ்ந்தது என்றால் – மற்றொரு வழித் தொடக்கத்தில் பதிக்கப்பட்டிருந்த மணி நீலங் கலந்த ஒளிச் சுடரை உமிழ்ந்து கொண்டிருந்தது. அந்த இரண்டாவது வழி புறம்போய் முடிகிற இடம் எது என்பதை அறிந்து கொள்வதிலும் அவர்கள் அதிக ஆவல் காட்டினார்கள். முதல் வழி தேர்க்கோட்டத்துப் புதரில் மதிலருகே வெளியேறுவதாய் அமைந்திருப்பதனால் இரண்டாவது வழி வேறு திசையில் வேறு பகுதியில் தான் அமைந்திருக்க வேண்டும் என்பதை அநுமானம் செய்ய முடிந்தாலும் பிரத்யட்சமாகக் கண்டு முடிவு தெரிந்து கொள்கிறவரை அந்த ஆவல் அடங்கிவிடாது போலிருந்தது.

 

    • “அசுர சாதுரியம் என்பார்களே; அதற்கு ஏற்றாற் போலல்லவோ காரியங்களைச் சாதித்திருக்கிறார்கள்?” என்று அந்த உள் வழிகளையும் அவற்றின் பிரிவுகளையும் வியந்தான் சாரகுமாரன். மற்றோர் வழி பிரிகிற இடத்தில் மிக அருகே கடல் அலைகளின் ஓசையைக் கேட்டு அந்த இடம் கடற்கரைக்குச் சமீபமாக இருக்க வேண்டுமென்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. உப்புக் காற்றும் மெல்ல மெல்ல உட்புகுந்து அலைவதை அவர்கள் உணர்ந்தனர். இறுதியில் கடற்கரைப் புன்னைத் தோட்டத்திற்கு அருகிலுள்ள ஒரு பாறைச் சரிவில் வெளியேறுகிறாற் போல் அமைந்திருந்தது அந்த வழி. உள்ளேயிருந்து வருகிறவனுக்குத்தான் வெளியேறியாக வேண்டுமென்ற நிர்ப்பந்தத்தில் அதன் வழியே வெளியேற முடியுமென்பது தெரியுமே ஒழியப் புன்னைத் தோட்டத்தின் பக்கமிருந்தோ, வெளியே கடற்புறத்திலிருந்தோ பார்க்கிறவனுக்கு அந்தப் பாறையருகிலிருந்து அவுணர் வீதி முரசமேடைவரை போய்ச் சேருவதற்கேற்ற சுரங்க வழி ஒன்று உள்முகமாகச் செல்லும் என்று கற்பனை கூடச் செய்ய முடியாதபடி இருந்தது.

 

    • பாறைக்கு மிக அருகே கடலில் படகுகள் நிற்கவும் புறப்படவுமான சிறு துறை ஒன்றிருந்தது. தென்பழந்தீவுகளிலிருந்து இரகசியமாகத் தேடி வருகிறவர்களை அவுணர் வீதிக்கு அழைத்துச் செல்லவும், அதே போல அவுணர் வீதியிலிருந்து தென்பழந்தீவுகளுக்குக் கடத்திக் கொண்டுபோக வேண்டியவற்றைக் கடத்திக் கொண்டு போகவும் இந்த இரண்டாவது வழி பெரிதும் பயன்படும் என்று தோன்றியது. பொருத்தமறிந்து இடமறிந்து அவுணர்கள் இந்த வழியை அமைத்துக் கொண்டிருக்கும் சூழ்ச்சியை வியப்பதைத் தவிர வேறொன்றுமே செய்யத் தோன்றவில்லை. படிகளில் ஏறி வெளியே பாறைச் சரிவில் கால் வைத்ததும் எதிரே பேயறைந்தாற் போலக் கண்ணுக்கு எட்டிய தூரம் கடல் தெரிந்தது. முன்பின் அந்த வழிகளில் வந்து பழகாத புதியவர்களுக்குத் திடீரென்று கடல் அந்தப் பாறையையும் அதில் நிற்கும் தன்னையும் விழுங்க வருவதுபோல் அச்சம் தோன்றும்படி செய்யவல்லது அந்த இடம்.

 

    விடியல் வேளை நெருங்கிக் கொண்டிருந்ததனால் சாரகுமாரனும், முடிநாகனும், அரண்மனைக்குத் திரும்ப எண்ணினர். அந்த வைகறையின் சுகமான சீதளக் காற்றில் கடற்கரைப் புன்னைத் தோட்டத்தில் பூத்திருந்த புன்னைப் பூக்களின் நறுமணம் எல்லாம் கலந்து வீசியது. எங்கோ ஓரிரு காகங்கள் கரையத் தொடங்கியிருந்தன. அந்தக் காற்று, அதில் கலந்திருந்த புன்னைப் பூ வாசனை, எல்லாம் சேர்ந்து கண்ணுக்கினியாளை நினைவூட்டின. நகர் பரிசோதனைக்காகப் புறப்பட்ட மாறுகோலத்திலிருப்பதே தனக்கும் முடிநாகனுக்கும் அப்போது ஒரு நன்மையாயிருப்பதை இளையபாண்டியன் உணர்ந்தான். முடிநாகனோடு அவன் புன்னைத் தோட்டத்திற்குள் புகுந்த போது மெல்ல மெல்ல விடியத் தொடங்கியிருந்தது.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

கடவுள் அமைத்த மேடை – 6கடவுள் அமைத்த மேடை – 6

வணக்கம் பிரெண்ட்ஸ், போன பகுதிக்கு கமெண்ட்ஸ் தந்த அனைவருக்கும் நன்றி.  இன்றைய பகுதியில் வைஷாலி பற்றிய சில விவரங்களை சிவபாலனுடன் சேர்ந்து நாமும் அறிந்துக் கொள்ளலாம். கடவுள் அமைத்த மேடை – 6 படித்து விட்டு உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

கடவுள் அமைத்த மேடை – 12கடவுள் அமைத்த மேடை – 12

வணக்கம் பிரெண்ட்ஸ், கடவுள் அமைத்த மேடை போன பகுதிக்கு கமெண்ட்ஸ் தந்த அனைத்துத் தோழிகளுக்கும் நன்றி. கதை எப்படி போகும் என்று சில கெஸ் எனக்கு அனுப்பியிருந்தீர்கள். உங்களது ஊகம் சரிதானா என்று இனி வரும் இரு பதிவுகளில் சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 35ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 35

35 – மனதை மாற்றிவிட்டாய் அதிகாலையில் அனைவரும் நிச்சயம், கோவில் விசேஷம் என கிளம்பு தயாராக திவி கீழே தோட்டத்தில் நின்றிருந்தவளை பார்த்தவன் வேகமாக கீழே வந்து பின்புறம் நின்று இமை கொட்டாமல் பார்த்தான். தன் வெண்டை பிஞ்சு விரல்களை ஈரக்கூந்தலில்