அத்தியாயம் – 14
இன்னைக்கு நம்ம முதல் பாடம் படிக்கப் போறோம் என்று சொல்லிவிட்டு போர்டில் ஒரு பிரமிட் வடிவத்தை வரைந்தாள் மீரா. அதனை மூன்று பகுதிகளாக பிரித்தாள்.
“ஒரு வாசனைத் திரவியத்தில் நம்ம சேர்க்குற பொருட்களை மூணு நோட்ஸ் ஆக பிரிப்பாங்க. டாப் நோட், மிடில் நோட், பேஸ் நோட்.
ஆரஞ்ச், லெமன், லாவென்டர், லெமன்கிராஸ் இதெல்லாம் டாப் நோட் வகைகளில் சிலது. பொதுவா ஸிட்ரஸ் வகைகள் எல்லாம் இதில் வரும். ஒரு சென்ட் பாட்டிலைத் திறந்து நுகர ஆரம்பிச்சதும் முதல்ல ஒரு அபிப்பிராயம் தரது இந்த டாப் நோட் தான். ஆனால் இது பதினஞ்சு நிமிஷம் வரைக்கும் தான் தாங்கும். அப்பறம் காத்தில் கலந்து மறைஞ்சுரும்.
ராஸ்பெர்ரி, ஸ்ட்ராபெர்ரி மாதிரி பழவகைகள், ஜாஸ்மின், லில்லி, ரோஜா மலர்கள், பட்டை மாதிரியான ஸ்பைசஸ் எல்லாம் மிடில் நோட்ல இருக்கும். இந்த மிடில் நோட் தான் நம்ம பெர்ஃப்யூமோட இதயம். நம்ம சென்ட்டின் மெயின் எசன்ஸ் இந்த நோட்தான்.
அதனால ரொம்ப முகத்தில் அடிக்கிற மாதிரி வாசனையான மலர்களை இதில் உபயோகிக்க மாட்டோம். கொஞ்சம் மைல்ட்டா மனசுக்கு இதமா இருக்குற பொருட்களை தேர்ந்தெடுக்குறது வழக்கம். டாப் நோட்டின் வாசம் காத்தில் கலந்ததும் மிடில் நோட் வாசம் தெரிய ஆரம்பிக்கும். அடுத்த ரெண்டு மூணு மணி நேரம் இருக்கும்.
சந்தனம், கஸ்தூரி, வெட்டிவேர் இதெல்லாம் பேஸ் நோட்ல வரும். இந்த வாசம் 4-5 மணி நேரம் அப்படியே இருக்கும். இது முதல் ரெண்டு நோட்டை தாங்கிப் பிடிக்கும் தூண் அப்படின்னு கூட சொல்லலாம். இந்த மூணு கலவைகளும் சேர்ந்து சென்ட்டுக்கு ஆறிலிந்து எட்டு மணி நேரம் வரைக்கும் வாசம் தருது.
நான் சொன்னது சில உதாரணங்கள்தான். இதுதவிர பிஸ்கட்,டார்க் சாக்லேட், குல்பி, பியர், மசாலா டீ இதெல்லாம் கூட உபயோகிப்பாங்க”
“சூப்பர் அக்கா… “ என்றான் பிங்கு. “சஷ்டி பாட்டிலைத் திறந்ததும் முதல்ல வர்ற வாசத்தை எழுதணும். அதுதான் டாப் நோட். அப்பறம் அடுத்த அரைமணி நேரம் கழிச்சு மோப்பம் பிடிச்சு வர்ற வாசத்தை எழுதிட்டா மிடில் நோட். அடுத்து நாலு மணி நேரம் கழிச்சு வாசம் பிடிச்சு எழுதுறது பேஸ் நோட். அவ்வளவுதானே. சாய்ந்தரத்துக்குள்ள எழுதி கொடுத்துட்டு ராத்திரி அம்மா கையால பிரியாணி சாப்பிடுங்க சஷ்டி மாமா”
மீரா அவனை முறைத்தாள் “ஏண்டா அவ்வளவு சீக்கிரம் கண்டுபிடிக்கிற மாதிரி இருந்தா எங்கப்பாவோட தயாரிப்பை ஈஸியா காப்பி அடிச்சுட மாட்டாங்களா. எந்த ஒரு நிறுவனத்திலயும் ஒரு பொருளை மட்டும் வச்சு ஒரு நோட்டை உருவாக்க மாட்டாங்க. பல காம்பினேஷன்ல பல ஸ்ட்ரெந்த்ல பொருட்களைக் கலந்து ஒவ்வொரு நோட்டையும் பாத்துப் பாத்து செதுக்குவாங்க. இதில் சில பொருட்களை கண்டு பிடிக்கிறதே கஷ்டம்”
“சே… இதை நான் யோசிக்கவே இல்லையே” தலையில் தட்டிக் கொண்டான் பிங்கு.
“என்ன இதில் கலந்திருக்கிறது எல்லாமே கெமிக்கல் தானே” என்றான் சஷ்டி
“அதுதான் இல்ல சஷ்டி எங்கப்பா பெரும்பாலும் இயற்கை பொருட்களை மட்டும்தான் இந்த பிராண்டில் யூஸ் பண்ணுவார்”
“அதென்ன பெரும்பாலும்”
“சில பொருட்கள் உதாரணத்துக்கு ஃபிக், தமிழ்ல அத்தின்னு சொல்வாங்களே, அதோட எண்ணையை நேரடியா நம்ம தோலில் அப்ளை பண்ண முடியாது. அதனால அந்த வாசம் செயற்கையா தயாரிச்சுத்தான் சேர்ப்போம்”
“மெஷின்ல வச்சா எல்லா பொருட்களையும் அது உடனே சொல்லிடும்னு கண்ணன் அண்ணன் சொன்னார்”
இந்தக் கண்ணன் வேற இப்பல்லாம் அடிக்கடி அழைத்து தொந்தரவு தருகிறான். அதுவுமில்லாமல் அட்வைஸ் வேறு. முக்கியமாக காட்டுப்பயல் சஷ்டியை துரத்தி விட்டுவிட்டு வேறு ஒரு நல்ல நபரை தேர்ந்தெடுக்குமாறு ஒரே அறிவுரை மழைதான். சஷ்டிக்கும் பெர்ஃப்யூமரிக்கும் என்ன சம்பந்தம் என்ற நக்கலான கேள்வி வேறு.
மீராவும் பதிலாக “உங்களுக்கும் கூட ஒரு சம்பந்தமும் இல்லைதான் கண்ணன். உங்களைவிட சஷ்டிக்கு இந்தத் துறையில் நெருக்கம் ஜாஸ்தி. இந்த விஷயத்தை என்கிட்ட விட்டுடுங்க”
“சஷ்டியைப் பத்தி நல்லா தெரிஞ்சதால சொல்றேன். அவன் சரியான காட்டுப்பயல். அடங்கவே மாட்டான். அவனை வச்சு உன் ஆராய்ச்சியைத் தொடருறதுக்கு நீ இப்பவே இந்த காம்படிஷன்லேருந்து விலகிக்கலாம்”
“இந்த காம்படிஷன் விஷயம் எல்லாம் யாரு சொன்னா”
“பிங்குதான் சொன்னான்”
பிங்கு, அவன் ஒரு அரைகுறை. இனிமேலும் இந்த விஷயத்தை எல்லாருக்கும் பரப்பாதபடிக்கு அடக்கி வைக்கவேண்டும். பிங்குவை எச்சரித்தாலும் இந்த கண்ணன் அவ்வப்போது தலையிடுவதுதான் கடுப்பாக இருக்கிறது.
பல்லைக் கடித்தபடி பதிலளித்தாள் “உங்க அண்ணனுக்கும் இந்த பீல்டுக்கும் சம்பந்தமே இல்லை. ஆனால் யோசனை மாத்திரம் சொல்றாரா… மெஷின் தோராயமாத்தான் சொல்லும்.எங்கப்பா குறைஞ்சது 15-20 மூலப் பொருட்களை வச்சு தயாரிச்சிருப்பார். துல்லியமா சொல்றது முடியாத காரியம்”
“அடுத்த ஸ்டெப் என்ன மீரா” என்றான் சஷ்டி.
“சஷ்டி நான் தோராயமா எங்கப்பாவோட காம்பினேஷனை எழுதி இருக்கேன். ஆனால் அதுக்கு முன்னாடி நீங்க உங்க புரிதலுக்காக சில மூலப் பொருட்களை வச்சு சென்ட் தயாரிச்சுப் பாருங்க”
“சரி, எங்க தயாரிச்சுப் பார்க்குறது”
“இந்த ஜன்னல் வழியா பக்கத்தில் ஒரு வீடு தெரியுதில்லையா அது எங்களிதுதான். எங்கப்பா அங்க ஒரு லேப் வச்சிருக்கார். அங்கதான் நம்ம ஆராய்ச்சியைத் தொடரப் போறோம்” என்றாள் மீரா.
“மீராக்கா இந்த ஆராய்ச்சி ரொம்ப இண்டரெஸ்ட்டிங்கா இருக்கு. நானும் கலந்துக்கலாமா” என்றான் பிங்கு ஆவலுடன்.
“பிங்கு… உன்னோட விளையாட்டு புத்தியை இதில் காமிச்சுடாதடா… இது என் வாழ்க்கை” என்றாள் மீரா சீரியசாக.
“கவலைப்படாதே மீராக்கா, உன் வாழ்க்கையை நல்லபடியா அமைக்கத்தான் நான் ஹெல்ப் பண்றேன்னு சொல்றேன். சஷ்டியை நம்பி பொறுப்பைக் கொடுத்துடாதே. அவ்வளவுதான் சொல்லுவேன்” என்றான்.
“ஏண்டா சஷ்டின்னா உனக்கு இத்தனை காண்டு” என்று கேட்க
“உங்க அக்கா கேக்குறாங்கல்ல… சொல்லுடா மக்கு, சாரி பிங்கு”
“நீ பிங்குன்னு கூப்பிடாதே… “
“அது இருக்கட்டும் நீ சஷ்டி விஷயத்தைப் பத்தி சொல்லு”
சஷ்டி குமரேசனிடம் ஆராய்ச்சி மாணவனாக சேர்ந்த புதிது.
“ஏய் இங்க வா… “ என்று மரியாதை இல்லாமல் அழைத்த பதின்வயது பிங்குவைப் பார்த்து ஒரே ஆச்சிரியம் சஷ்டிக்கு. நம்ம குமரேசன் சாருக்கு இப்படி ஒரு தறுதலை மகனா என்று.
“இங்க பாரு சஷ்டி… எங்கப்பாதான் நீதிடா நேர்மைடா நியாயம்டான்னு பேசிட்டு அலைவாரு. இப்படி இருந்தா எப்படி என்னைப் படிக்க வைக்கிறது? எப்படி எங்க அக்காவைக் கட்டித் தரது”
“கஷ்டம்தான் ப்ரோ” என்றான் சஷ்டி.
“புரியுதுல்ல, இதைப் புரிஞ்சுட்டுத்தான் போன வருஷம் எங்கப்பாட்ட படிச்ச சுரேஷு எனக்கு சைக்கிள் வாங்கித் தந்தாரு. விக்னேஷ் ஒரு லேப்டாப் வாங்கித் தந்தாப்ல. ஆனா அது எனக்குன்னு புரிஞ்சுக்காம எங்கப்பா யூஸ் பண்ணிட்டிருக்கார்”
“உனக்கு இப்ப என்ன வேணும்” டைரெக்டாக விஷயத்துக்கு வந்தான் சஷ்டி.
“சஷ்டி இந்தத் தெளிவு உன்னை எங்கேயோ கொண்டு போகப் போகுது. இப்போதைக்கு பாட்டினி ரெக்கார்ட் நோட் வரஞ்சுத் தா. அப்பறம் என்ன வேணும்னு யோசிச்சு சொல்றேன்”
“எப்ப வேணும்”
“நாளைக்கு காலைல சப்மிட் பண்ண சொல்லி அந்த நொள்ளைக்கண்ணு சொல்லிருக்கு. நீ காலைல சரியா ஆறு மணிக்கு வீட்டில் நோட்டைக் கொண்டு வந்து தந்துடு” என்றபடி ரெக்கார்ட் நோட்டைத் தந்தான்.
மறுநாள் சஷ்டி தங்கி இருந்த அறைக்கதவை யாரோ மடார், மடார் என்று உடைப்பதைப் போலத் தட்டினர்.
“யோவ் சஷ்டி, எங்கய்யா என்னோட ரெக்கார்ட் நோட்டு? காலைல ஆறு மணிக்கு வந்து தர சொல்லி இருந்தேன்ல, என்னய்யா செஞ்சிட்டு இருக்க” காட்டுக் கத்தல் கத்தினான் பிங்கு.
சாவகாசமாக தூக்கத்தில் இருந்து விழித்துக் கதவைத் திறந்த சஷ்டி “ராத்திரி பூரா முழிச்சு ரெக்கார்ட் வரைஞ்சிருக்கேன்… காலைல எப்படிடா முழிப்பேன்” என்று சோம்பல் முறித்துக் கொண்டே சொன்னான்.
“ஒரு நாள் முழிச்சதுக்கே இவ்வளவு சீனா… இனிமே என்னோட ரெக்கார்டு நோட்டு புல்லா நீதான் வரஞ்சு தர்ர அதுதான் நான் உனக்கு தண்டனை” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினவனை கிண்டலாகப் பார்த்துக் கொண்டே பேஸ்டைப் பிதுக்கி பிரஷில் வைத்தான்.
அன்று மாலை குமரேசனின் வீட்டுக்கு சென்ற பொழுது பிங்குவிற்கு பிரம்படி பட்டு வீங்கிய இடத்திற்கு ஒத்தடம் தந்துக் கொண்டிருந்தார் அவர் மனைவி.
சஷ்டியைப் பார்த்ததும் கொலைவெறியில் அவன் கண்கள் அனலைக் கக்கின.
“அய்யோ அடி பலமா இருக்கே… பிங்கு எங்கயாவது கீழ விழுந்துட்டியா”
“அவனை விடுடா… இன்னும் நாப்பது முறை இப்டி அடி வாங்கினாலும் திருந்தமாட்டான். மாஸ்டர் பாட்டனி ரெக்கார்ட் வரையச் சொன்னா கிறுக்கிருக்கான் இந்த தடிமாடு. வரஞ்சது நீயா இல்ல உன் வீட்டு நாயான்னு கேட்டு நோட்டையும் இவனையும் கிழிச்சு அனுப்பிருக்கார் வாத்தியார்”
“அச்சச்சோ என்கிட்ட கேட்டிருக்கலாமே பிங்கு… எனக்குக் கூட கை விரலில் ரெண்டு நாளா காயம். தெரிஞ்சிருந்தா நான் கூட வரைஞ்சுத் தந்திருப்பேன்” என்றான் பாவமாக.
“நோ சஷ்டி, அவனோட வீட்டுப் பாடத்தை அவன்தான் செய்யணும். இவன் உதவி எதுவும் கேட்டு வந்தாக் கூட நீ செய்யக் கூடாது இது என்னோட ஸ்ட்ரிக்ட் ஆர்டர். நீ இந்த தடிமாட்டை கவனிச்சது போதும். எங்களுக்கு காப்பி போட்டு எடுத்துட்டு வா…” என்று குமரேசன் மனைவியிடம் சொல்லி நகர்ந்தார்.
குமரேசனின் மனைவி காப்பி போட சமையலறைக்கு சென்று விட “துரோகி சஷ்டி நான் என்னடா உனக்குப் பாவம் செஞ்சேன். எப்படிடா அப்படி ஒரு கொடூரமா படம் வரைஞ்ச”
“தப்பு பிங்கு. என் வலது கை விரல் அடிபட்டதைக் கூட பொருட்படுத்தாம எவ்வளவு கஷ்டப்பட்டு இடது கையில உன் ரெக்கார்ட் நோட்டு புல்லா வரைஞ்சு கொடுத்தேன். இப்படியெல்லாம் பழி போடலாமா”
“இடது கைன்னா லெஃப்ட் ஹாண்ட் தானே… அதுலயா ரெக்கார்டை வரைஞ்ச… என்னைப் பழி வாங்கிட்டேயே… இப்ப எழுதி வச்சுக்கோ, சஷ்டி உன் வாழ்க்கைல முக்கியமான கட்டத்தில் உன்னைப் பழி வாங்கல என் பேரை மாத்தி வச்சுக்குறேன்” என்று உறுமியவனின் வார்த்தைகளை சட்டையே செய்யவில்லை சஷ்டி.
இவனை என்ன படிக்க வைக்கிறது என்று கவலைப் பட்டுக் கொண்டிருந்த குமரேசன் தம்பதியினரிடம் கவலைப்படாதீங்க என் காலேஜ்லயே சீட் தந்து அவனை ஒரு வழி பண்ணிடுறேன் என்றது காதில் விழ… கடவுளே அதுக்குப் படிப்பையே நிறுத்திடலாமே என்றெண்ணி திகிலடைந்தான் பிங்கு. பின்னர் தலைகீழாகப் படித்து ஒரு வழியாகப் பாசாகி உள்ளூரிலேயே கல்லூரியில் சேர்ந்தான். இதுதான் பிங்குவின் ஃப்ளாஷ்பாக்.
கூனிக் கிழவியிடம் அறியாத வயதில் ராமன் செய்த குறும்பே வட்டியும் முதலுமாய் சேர்ந்து அவரை வனவாசத்திற்கு அனுப்பியது, சஷ்டி பாடம் கற்பிப்பதாய் விளையாட்டாய் செய்த சேட்டை அவனை சரியான சமயத்தில் காலை வாரி விடுவது மட்டுமில்லாமல் மீராவுக்கும் பெரிய சறுக்கலைத் தரப்போகிறது என்பது அறியாமல் அந்தக் கதையை நினைத்து சிரித்தபடியே இரவு உறங்கினாள் மீரா.