Tamil Madhura பூவெல்லாம் உன் வாசம் தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 11’

தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 11’

அத்தியாயம் – 11

“ஏம்ப்பா  மீரா வந்து முக்கால் மணி நேரம் ஆயிருக்காது” என்று சஷ்டி ஏதோ நினைத்துக் கொண்டவனாகக் கேட்டான் சஷ்டி. 

“இல்லடா நாற்பத்தி ரெண்டு நிமிஷம்தான் ஆச்சு… முக்கால் மணி நேரம் ஆனால் உளவுத்துறைல டாண்ணு விசாரணைக்கு வந்திருப்பாங்களே” என்றார் செந்தில் பதிலாக. 

“உளவுத் துறைன்னா” என்றாள் மீரா 

“எங்க தெருவுக்கு நுழைஞ்சதும் முதல் வீடு பாத்தேல்ல. அதுதான் சீக்ரெட் சர்வீஸ் ஹெட் ஆபீஸ். வாசல் திண்ணையில் ஒரு கிழவி உக்காந்து உரலில் வெத்தலை இடிச்சுட்டு இருக்கும். அதுதான் இந்தத் தெருவோட சிசிடிவி. புது ஆளுங்க யாராவது வந்தா அங்கிருந்தே எந்த வீட்டுக்குப் போறாங்கன்னு வீட்டு உள்ள இருக்கவங்களுக்குத் தகவல் போயிடும். அதுக்கப்பறம் விருந்தாளிகள் வந்த வீடு கண்காணிப்பு வளையத்தில் சிக்கிடும்.

அவங்க கண்காணிக்கிற வீட்டுக்குள்ள வந்தவங்க அரைமணி நேரத்துக்கு மேல இருந்தால் அதிகாரிகளுக்கு மூக்கு வேர்த்துடும். காப்பித்தூள் வாங்க உரை மோர் வாங்கான்னு சாக்கு வச்சுட்டு விசாரிக்க வந்துடுவாங்க. ஆர்வத்தைப் பொறுத்து ஒரு அதிகாரி தனியாவோ இல்லை பல அதிகாரிகள் சேர்ந்தோ விசாரணைக்கு வருவாங்க. ஒவ்வொரு குடும்ப உறுப்பினர் கிட்டயும் தனித்தனியா விசாரணை நடத்தி, அவங்க சொல்ற இன்பர்மேஷன் எல்லாம் ஒரே மாதிரி இருக்குதான்னு செக் பண்ணுவாங்க. எப்போதும் உண்மை ஒரே மாதிரி இருக்கும். பொய் பேசுறவங்கதான் மறந்துட்டு முன்னுக்கு பின் முரணா பேசுவாங்கன்னு தெரிஞ்சதாலதான் நம்மை யோசிக்கக் கூட விடாம அட்டாக் பண்ணுவாங்க. இப்பப் புரியுதா” என்றான் சஷ்டி. 

“புரிஞ்ச மாதிரி இருக்கு… “

“இப்ப டெமோவா அதிகாரிகள் வருவாங்க பாரு. நீ எதையும் பேசாம கவனிச்சுட்டு இரு. கேட்டா டமில் டெரியாதுன்னு சொல்லிடு. நீ சொன்னா  நம்பிடுவாங்க” என்று எச்சரிக்க, 

 

“வேணி… “ என்று செந்தில் மனைவியை அழைக்க “நான் தனியா மாட்டிக்கிட்டா உளறிடுவேன். இப்பத்தான் சஷ்டிக்கு காப்பி  போட்டிருந்தேன். அதை டம்ப்ளரில் ஊத்தி எடுத்துட்டு இங்கேயே வந்துடுறேன். நீங்க ரெண்டு பேரும் என்ன சொன்னாலும் தலையாட்டுறேன்” என்றார் 

சரியாக அப்போது வாசல் கிரில் கதவைத் திறக்கும் சத்தம் கேட்டது. 

“மச்சான் எப்படி இருக்கீங்க… “ என்று ஒரு குரல் வந்தது.

“அதிகாரிகள் குழு வந்திருக்கு… உன் கார் அவங்க ஆர்வத்தை அதிகமாக்கியிருக்கும்” சஷ்டி கிசுகிசுப்பாக மீராவிடம் சொன்னான். மீராவிற்கு இப்போது ஆர்வம் அதிகமாகிவிட்டது. 

“வாப்பா விசு… வாம்மா… என்ன இந்தப் பக்கம்“ என்று உள்ளே வந்த தம்பதியினரை அழைத்தார் செந்தில். 

“என்ன மச்சான், அங்கவஸ்திரம் எல்லாம் போட்டுட்டு வெளிய கிளம்பத் தயாரா இருக்கிங்க. பாருங்க ஒரே தெருவுலதான் இருக்கோம்னு பேரு… ஆற அமர உக்காந்து பேச முடியல… அதுதான் இன்னைக்கு உங்களைப் பாத்தே ஆகணும்னு வந்துட்டோம்… “ என்ற விசு “கவிதா… அக்காகிட்ட போயி அந்த முறுக்கு டப்பாவைக் கொடுத்துட்டு பேசிட்டு இரு”

கவிதா தனியே கார்னர் பண்ணுவதற்குள் முந்திக் கொண்டு காப்பியுடன் வந்த வேணி “வா கவிதா உக்காரு… இந்தா காப்பி” என்று கையோடு அனைவருக்கும் காப்பியைத் தந்துவிட்டு அங்கேயே அமர்ந்துவிட்டார். 

“காப்பி எல்லாம் ரெடியா இருக்கு. விருந்தாளிக்கு தந்துட்டீங்களா” என்று விஷயத்துக்கு வந்தான் விசு. 

“கொடுத்தாச்சுப்பா…”

“அந்தப் பொண்ணு வந்து ரொம்ப நேரமாச்சு போலிருக்கே. இப்பத்தான் காப்பி தறிங்களா” ஆர்வம் தாங்காது கேட்டாள் கவிதா. 

“இது ரெண்டாவது ரவுண்டு…”

“யாரு மச்சான் இது தெரிஞ்சவங்களா…. “ ஆர்வம் முகத்தில் தாண்டவமாடியது விசுவிடம்

“ஆமாம்”  சுருக்கமான பதில் செந்திலிடம். 

“ஆமாம்னா சொந்தக் காரவுங்களா” சொல்லித் தொலையேண்டா என்ற ஒரு தொனி அதில். 

“பிரெண்டு பொண்ணு”

“அப்படியா… எந்த ஊரும்மா… நேத்து காலேஜுக்கு சஷ்டியைப் பாக்க வந்த போலிருக்கு. கேள்விப்பட்டோம். சஷ்டி கூட படிச்ச பொன்னுன்னு எல்லாரும் சொன்னாங்க” என்று மீராவை நேரடியாகத் தாக்க… தமிழ் நாட்டில் ஒரு ஆண்மகனை சந்திக்க வந்தால் கூட இப்படியெல்லாம் பிரச்சனை வரும் என்று அந்த வினாடிதான் அறிந்து கொண்டாள் மீரா. 

எச்சரிக்கையுடன் “நோ டமில்” என்றாள் அவள். உளவுத் துறையின் தீவிரமான செயல்பாடு அவளை வியப்பில் ஆழ்த்தியிருந்தது. 

“தமிழ் தெரியாதா… அப்பறம் எப்படி பதில் சொல்ற” கிடுக்கிப்பிடி போட்டாள் கவிதா 

“தமிழ் கொஞ்சம் கொஞ்சம் புரியும். பேச வராது” என்றார் செந்தில். 

“ஐ க்னோ இங்கிலீஷ்” என்ற விசுவிடம் 

“அது ஹிந்திக்கார பொண்ணு” என்றார் செந்தில். 

“அப்பறம் எப்படி நீங்க பேசுறீங்க” என்று எதிர்கேள்வி கேட்டு மடக்கினான் விசு 

“விசு என்னடா இப்படி கேட்டு போட்ட… நான் ஹிந்தில பிராத்மிக் பாசாயிருக்கேன்ல… “ குழப்பத்துடன் அவரைப் பார்த்த விசு

“ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து உங்க குடும்பத்தில் ஜெயிலுக்குப் போனதா கேள்விப்பட்டேனே”

“அது எங்கண்ணன்டா” என்றார் செந்தில் அசால்ட்டாக.

“அப்படியா… பிராத்மிக் படிச்சிருக்கீங்களா மச்சான். பிராத்மிக்னா ஹிந்தி பரீட்சைதானே” தனது மூளையில் புதிய இரண்டு தகவல்களையும் பதிவு செய்துக் கொண்டான் விசு. 

“ஆமாம் மாமா… நான் கூட ஆறுமாசம் பேப்பர் ப்ரெசெண்ட் பண்ண டெல்லில தங்கிருந்தேனே. அப்ப ஹிந்தி கத்துகிட்டேன்”

“அது சரி. இந்தப் பொண்ணு கூட பேசல்லாம் என்னால ஹிந்தி கத்துக்க முடியாது. ஆமாம் இப்ப எதுக்கு இந்தப் பொண்ணு வந்திருக்கு. நீ கூட ஊருக்குக் கிளம்புற மாதிரி நிக்கிற”

“இந்தப் பொண்ணு எங்கம்மா அப்பாவைப் பாக்க வந்திருக்கு. நான் வழக்கம்போல ரிசெர்ச் விஷயமா ஊருக்குப் போறேன். போற வழில பஸ்ஸ்டாண்ட்ல இறக்கிவிட்டுடுறேன்னு சொல்லிருக்கு. அதுதான் கிளம்பிட்டேன். நீங்க வேணும்னா என்கூட வாங்க மாமா இந்த முறை காட்டுப் பகுதில ஒரு வாரம் டேரா… நீங்க வந்தால் பொழுது போகும்… இப்ப போற இடத்தில் அட்டை பூச்சி எல்லாம் இருக்காது மாமா ஒன்லி சிறுத்தை புலிதான்… ” என்று அழைப்பு விடுத்தான் சஷ்டி. 

இரண்டு வருடத்திற்கு முன்பு ஆர்வக் கோளாறு காரணமாய் சஷ்டியுடன் டூருக்குக் கிளம்பி அட்டைப் பூச்சிகள் அவர் உடலெங்கும் பதம் பார்த்ததில் இருந்து சஷ்டியிடம் ஒதுங்கியே இருப்பார் விசு. 

“எனக்கும் உதவி செய்ய ஆசைதான் சஷ்டி ஆனா பாரு இன்னைக்குன்னு பாத்து வீட்டுக்கு என் மாமனார் வரேன்னு சொல்லிருக்கார்… அன்னேரத்துக்கு நம்ம வெளியூர் போனா மரியாதையா இருக்காதே”

“அத்துவான காட்டில் டெண்ட்டு போடணும். டிவி, ரேடியோ, மொபைல் சிக்னல் இருக்காது. நீங்க வந்தா பொழுது போகும். ப்ளீஸ் வாங்களேன். தாத்தா நம்பர் கூட என்கிட்ட இருக்கு மாமா… நானே நம்ம ட்ரிப் பத்தி பேசிடுறேன். டெண்ட் கட்ட வேண்டியதெல்லாம் பாக் பண்ணிட்டேன். டிரஸ் கூட என் டீஷர்ட் போட்டு அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம். இப்டியே வாங்க மாமா” என்று சஷ்டி மேலும் வற்புறுத்த…

“சஷ்டி இந்த முறை மட்டும் விட்டுரு. அடுத்த தடவை முன்கூட்டியே சொல்லிட்டா நான் ரெடி ஆயிடுவேன்” ஜகா வாங்கினார் விசு. 

“போங்க மாமா முன்னாடியே சொன்னா சரியா ட்ரிப் அன்னைக்கு ஊருக்கு போய்டுறீங்களே”

“அது.. வந்து… ரெண்டு தடவை ஏதோ அவசர வேலையாயிருச்சு சஷ்டிம்மா. இன்னைக்குக் கூட தோட்டத்துக்கு களை பிடுங்க ஆளுங்களக் கூப்பிட்டிருந்தேன். என்னாச்சுன்னு பாத்துட்டு வந்துடுறேன். கவிதா கிளம்பு… ஊருக்குப் போற பிள்ளையை தொந்தரவு பண்ணிட்டு” என்று கணவன் மனைவி இருவரும் விட்டால் போதும் என்று சிட்டாய் பறந்தோடினர்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 20’தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 20’

அத்தியாயம் – 20 மறுநாள் காலை சஷ்டியும் மீராவும் அவர்களது ஆராய்ச்சியைத் தொடங்கியபோது ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. எதுவுமே தெரியாமல் வழக்கம் போல அன்றைய நாளைத் தொடங்கினார்கள். புத்தம் புதிதாக பூத்த பன்னீரில் நனைந்த ரோஜாவைப் போல பிங்க் நிற

தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 10’தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 10’

அத்தியாயம் – 10 மருதமலை முருகன் கோவிலைப் பற்றி பேசிய செந்தில் நாதனிடம் “அப்பா இருந்தப்ப போயிருக்கோம் அங்கிள்” என்று மீரா கதை கூறிக் கொண்டிருந்தாள்.  அந்தப்பக்கம் நின்று கேட்டுக் கொண்டிருந்த வேணியின் கண்களில் கண்ணீர். மூக்கினை உடுத்தியிருந்த பருத்தி சேலைத்

தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 4’தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 4’

அத்தியாயம் – 4 நரேஷ் மல்ஹோத்ரா மும்பையின் மிகப் பெரிய புள்ளி. ரியல் எஸ்டேட், ஸ்டாக் மார்க்கெட், ஐடி போன்ற இன்றைய பணம் கொழிக்கும் தொழிலில் முதலீடு செய்து சமீபத்தில் பணக்காரர் ஆனவர் இல்லை. தலைமுறைப் பணக்காரர். அவரது தாத்தா காலத்தில்