Tamil Madhura சிந்தனை துளிகள் இன்று ஒரு தகவல் -21

இன்று ஒரு தகவல் -21

கிறுக்குசாமி கதை – சிங்கப் பாதை

கிறுக்குசாமி கிருத்திகை அன்று மாலை முருகனுக்கு செய்ய வேண்டிய ராஜ அலங்காரத்துக்காக மிகவும் பரபரப்பாக வேலை செய்துக் கொண்டிருந்தார். வழக்கமாக மாலை பக்தர்களுக்கு பஞ்சாமிர்தப் பிரசாதம் தருவது வழக்கம்.

அந்த ஐந்தமுதில் கலப்பதற்காக பேரீச்சைகளை சுத்தம் செய்து கொட்டைகளை அனைத்தையும் பிரித்தார். அதன் பின்னர் கற்கண்டுகளை தாம்பாளத்தட்டில் அளந்து கொட்டினார். ஒரு கையளவு ஏலக்காயை எடுத்து நுணுக்கி நாரில்லாமல் சுத்தம் செய்தார்.

“சாமி பழமெல்லாம் உரிக்கணுமே”

“தனபாண்டியனை மலைப்பழம் கொண்டு வரச் சொல்லிருக்கேன். கடைசில கலந்துக்கலாம்”

“தோலை உரிச்சு மசிச்சு போடணும். நேரமாயிடாம பாத்துக்கோங்க”

“சரி சரி” என்று சொன்னாலும் எங்க இந்த தனபாண்டியனைக் காணோம் என்று பதற்றத்துடனே இருந்தார்.

“சாமி வாழப்பழத் தாரை கொண்டு வந்திருக்கேன்” என்று உரக்கக் குரல் கொடுத்தபடி உள்ளே வந்ததோ தனபாண்டியனின் அண்ணன் சந்தனபாண்டியன்.

“அப்பாடா இப்பத்தான் பாலை வார்த்த, இந்த ஐந்தமுதில முக்கியமானது இல்லையேன்னு கவலையாவே இருந்தேன். அப்படியே அந்த அலமாரில இருந்து தேன் ஜாடியை எடுத்துட்டு வந்துடு” என்றபடி காய்ந்த திராட்சை பொட்டலத்தைப் பிரித்துக் கொட்டினார்.

தேனை எடுத்துக் கொண்டு சந்தனம் வந்ததும் “என்ன சந்தனம் உன் தம்பிக்கு பதில் நீ வந்திருக்க. அதுவும் வழக்கத்தை விட தாமதமாயிருச்சே… வழில எதுவும் பிரச்சனையோ”

“இன்னைக்கு மண்டில பழத்தை டெலிவர் பண்ணிட்டு அப்படியே இங்க வந்து வாழைத்தாரைக் கொடுக்கணும்னு தம்பி சொல்லிவிட்டான். நானும் சரியான நேரத்துக்குக் கிளம்பிட்டேன். ஆனால் இது பழக்கமில்லாத வேலையா, அதனால  கொஞ்சம் தாமதமாயிருச்சு. கவலைப்படாதிங்க சாமி நானும் உங்க கூட உக்காந்து வாழைப்பழத்தை உரிச்சுத் தரேன். நேரத்தோட வேலையை முடிச்சுடலாம். ”

பிடிவாதமாய் உட்கார்ந்து கொண்டு உதவத் தொடங்கினான்.

“விடுப்பா உனக்கெதுக்கு சிரமம். நீயே டவுனில் அரக்கப்பரக்க ஓடிட்டு இருக்கவன். ஏதோ நாலு நாள் ஓய்வா இருக்கணும்னு வந்திருக்க. இப்பக் கூட வேலை செஞ்சுகிட்டு…. நான் மடத்தில் யாராவது உதவிக்குக் கூப்பிட்டுக்குறேன்”

“இனிமே இங்கதான் சாமி. ஊருக்கெல்லாம் போக ஐடியா இல்லை”

வியப்பாய் பார்த்தார் கிறுக்குசாமி. ஏனென்றால் அண்ணனும் தம்பியும் அவ்வளவு ஒற்றுமையாய் இருப்பார்கள். மாதாமாதம் நகரத்தில் இருக்கும் அண்ணனுக்கு ஊரில் விளைந்த அரிசி பருப்பையும், காய்கறிகளையும் அனுப்பி வைக்கும் தம்பி. விளைச்சல் பொய்த்துக் போன நேரங்களில் தம்பிக்குக் கை கொடுத்து தூக்கி விடும் அண்ணன். இது போலல்லாவா இருக்க வேண்டும் ரத்த உறவு என்று எடுத்துக்காட்டாய் விளங்கும் இவர்கள் குடும்பத்தில் என்ன வந்தது? ஏன் இவன் நல்ல வேலையை விட்டு விட்டு இங்கேயே வருகிறேன் என்று சொல்கிறான்?

“ஏம்பா என்னாச்சு? வேலைக்கு ஏதாவது பிரச்சனை?” அக்கறையோடு கேட்டார்.

“அதெல்லாம் இல்லை சாமி”

“அப்பறம் என்ன?”

“ஒண்ணும் பிடிக்கல சாமி”

“வேலையா?”

“அப்படியும் சொல்லலாம்”

“இப்ப வேலை செய்ற நிறுவனம் பிடிக்கலைன்னா வேற இடத்துக்குப் போகலாமே. தொழில் எதுவும் செய்யப்போறியா?”

“அட எங்கேயும் வேலை செய்யவே பிடிக்கல சாமி. சொல்லப்போனா சம்பாரிக்கவே பிடிக்கல”

கிறுக்குசாமி அதிர்ந்து போய் பார்த்தார். “என்னப்பா சந்தனம் சொல்ற? வாழ்க்கைல சில நேரம் சலிப்பு வர்றது இயற்கைதான். அதுக்காக எல்லாத்தையும் அப்படியே உதறிட முடியுமா”

அவரை கிண்டலாய் பார்த்தவன் “இதை நீங்க சொல்லலாமா சாமி. உங்க வீடு, கடை, மனை எல்லாம் இப்ப எத்தனை கோடி பெறும் தெரியுமா? அப்படியே உதறிட்டு நீங்க சாமியாராப் போகலையா? நீங்க உண்மையாலுமே கிறுக்குசாமிதான் சாமி”

“என் கதை வேறப்பா. நான்  தனிக்கட்டை. வசதியான பங்களாவில் அனாதையா உக்காந்து இருந்த என்னை, இங்க கூப்பிட்டு, இந்த ஊரு சனங்க மொத்த பேரையும் உறவாக்கி இருக்கான் முருகன். உனக்கு அப்படியா? குடும்பம் குழந்தை குட்டி தம்பி குடும்பம்னு எவ்வளவு பொறுப்புகள் இருக்கு”

“அதுதான் சாமி, அதெல்லாம் சேர்ந்துதான் வேலையை விட்டுட்டு இங்கேயே இருக்குறதா முடிவு பண்ணிட்டேன்”

“புரியலையே”

“உங்களுக்கு புரியுற மாதிரியே சொல்றேன். எதுக்கு சாமி முதுகு ஓடிய  சம்பாரிக்கனும். அப்பறம் சம்பாரிச்சதில் பாதியை வரியாவும், மீதியை படிப்புக்கும் மருத்துவத்துக்கும் கொடுத்துட்டு உக்காந்து இருக்கணும். என் தம்பியைப் பாருங்க எவ்வளவு சந்தோஷமா உள்ளூரில் இருக்கான். சாப்பாட்டுக்கு எங்க வயலில் அரிசி, பருப்பு காய்கறி விளையுது”

“இயற்கை சீற்றம் ஏதாவது வந்தா?”

“சாப்பிட அரிசி முதற்கொண்டு அரசாங்கம் மானிய விலைல தருது. ரேஷன்ல மலிவு விலைல பொருள் கிடைக்குது”

“பிள்ளைகள் படிப்பு”

“அரசாங்கம் இலவசக் கல்வி தருது, பஸ் பாஸ், சைக்கிள், லேப்டாப் இவ்வளவு தருதே. நான் வேலைக்குப் போயி இதே விஷயத்துக்கு ஏன் லட்சக்கணக்கா பணம் கட்டணும்”

“அதெல்லாம் வசதி இல்லாதவங்க பயன் பெற அரசாங்கம் தர்றதுப்பா. முடிஞ்சவங்க கிட்டேருந்து வரியா வாங்கி வசதி வாய்ப்பு இல்லாதவங்களுக்கு உதவி செய்யுது”

“இப்ப நானும் வேலை இல்லாதவந்தான் சாமி. இத்தனை வருஷமா இந்த அரசாங்கத்துக்கு எவ்வளவு வரி கட்டிருப்பேன். இனிமே அரசாங்கம் எனக்கு செய்யட்டும்”

சந்தனத்தின் அறிவு போன போக்கைக் கண்டு கிறுகிறுத்துப்  போனார் கிறுக்குசாமி.

இவனுக்கு என்ன பேய் பிடித்ததோ திடீரென்று இப்படி ஒரு விபரீதமான முடிவினை எடுத்திருக்கிறான். சந்தனத்திற்கு ஒரு நிமிடம் கூட சும்மா நிற்க முடியாது. ஏதாவது ஒரு வேலையை செய்து கொண்டே இருப்பான். இவனாவது விவசாய வேலையை மட்டும் செய்து கொண்டு இந்த கிராமத்தில் இருப்பதாவது.  சில வருடங்கள் கழித்து இந்த முடிவை நினைத்து வருந்தப் போவது நிச்சயம்.

காலம்கடந்த பின் வருந்தி என்ன பயன்? இவனை எப்படி உணரச் செய்வது? இவனுக்கு உதவுவது போல பூஜை முடிந்து சொற்பொழிவின் போது என்ன கதை சொல்வது?

இரவு சொற்பொழிவில் கதையை சொல்ல ஆரம்பித்தார் கிறுக்குசாமி.

ஒரு காட்டில் வேடன் ஒருத்தன் இருந்தான். அவன் ஒரு தடவை மானைப் பிடிக்க இயந்திரப் பொறி ஒண்ணை வச்சான். அந்தப் பொறியில் ஒரு நரி ஒண்ணு மாட்டிக்கிச்சு. தப்பிக்க முயற்சித்த  நரியின் கால்கள் இரண்டும் துண்டாயிடுச்சு.

முன் கால் ரெண்டும் இல்லாத இந்த நரி எப்படியும் உயிர் பிழைக்கப் போறதில்லைன்னு அதை அப்படியே அலட்சியமா தூக்கி கீழப் போட்டுட்டு கிளம்பினான் வேடன்.

சில மாதங்கள் கழித்து அதே பகுதிக்கு வேடன் வந்தான். அங்க அந்த நரி ஆரோக்கியமா உயிரோட அங்க இருந்தது பார்த்து ஒரே ஆச்சிரியம் அவனுக்கு.

வேட்டையாடவே முடியாத இந்த நரி உணவுக்கு என்ன செய்யும்? என்ற ஆர்வம் மனசைக் குடைய மரத்தில் ஏறி உக்காந்து என்ன நடக்குதுன்னு கவனிக்கத் தொடங்கினான்.

அப்பத்தான் அங்க சிங்கம் ஒண்ணு காட்டெருமையை வேட்டையாடி இழுத்துட்டு  வந்தது. அந்த காட்டெருமையை சாப்பிட்ட சிங்கம் அதில் ஒரு பகுதியைப் பல்லால் கடிச்சு எடுத்துட்டு வந்து நரி கிட்ட போட்டது. நரியும் ஆவலா சாப்பிட ஆரம்பிச்சது.

ஓஹோ இதைத்தான் மரத்தை வச்சவன் தண்ணி ஊத்துவான்னு சொல்லுவாங்களோ? என்று நினைத்தான் வேடன். இந்த நரி வேட்டையாடவே இல்லைன்னா கூட அதற்கு அந்த இறைவன் தினமும் சாப்பாடு போடுறான். இதே மாதிரி எனக்கும் படியளக்க இறைவன் இருக்கும்போது நான் ஏன் கஷ்டப்படணும்?

இப்படி நினைச்சவன் வேட்டையாடாம வீட்டுக்குத் திரும்பி வந்துட்டான். இறைவா இனிமே உணவு தேடி வெளிய போக மாட்டேன். நீதான் எனக்கு உணவு தரணும். அப்படின்னு சொல்லிட்டு பட்டினி கிடக்க ஆரம்பிச்சான்.  எனக்கு உணவு தான் இறைவான்னு மனசில் சொல்லியபடி பல நாட்களா உக்காந்திருந்தான். கடைசியில் ஒரு நாள் உணவே இல்லாமல் மாண்டே விட்டான்.

அவன் ஆத்மாவை ஆண்டவனிடம் கொண்டு போனாங்க.

“கடவுளே உன்னை எப்படி நம்புனேன். காலில்லாத அந்த நரிக்கு சாப்பாடு போட்ட நீ எனக்கும் போடுவன்னு எவ்வளவோ நம்புனேனே. கடைசில என்னை இப்படி ஏமாத்திட்டியே?”

“நீ அந்த சம்பவத்தில் பாடம் எடுத்துகிட்டது சரி ஆனால் புரிஞ்சுகிட்ட முறைதான் தப்பு. காலில்லாத நரியோட நிலைல உன்னைப் பொருத்தி என்கிட்ட உதவி கேட்ட. ஆனால் நானோ  படைக்கும்போதே சிலரை அடுத்தவருக்கு உதவும்  சிங்கமா படைச்சிருப்பேன். சிங்கத்தோட பலத்தோட படைக்கப்பட்ட நீ அந்த சிங்கத்தோட பாதையை இல்ல தேர்ந்தெடுத்திருக்கணும்”

கதையை சொல்லி முடித்தார்.

“இன்னைக்குக் கதை சூப்பர் சாமி” என்று பலர் பாராட்ட சந்தனத்தின் முகத்திலோ ஏதோ சிந்தனை ரேகை.

அடுத்த மாத கிருத்திகை மாத வழிபாட்டுக்கு ஐந்தமுதுக்கான வாழைப்பழங்களைக் கொண்டு வந்தான் தனபாண்டியன்.

” சாமி நாமதான் கைக்கும் வாய்க்கும் பத்தாம வாழ்ந்துட்டு இருக்கோம். அவனாவது டவுனுல வேலை பாத்து சந்தோஷமா இருக்கட்டும்னு நினைச்சேன். சந்தனம் திடீருன்னு இங்கேயே தான் இருக்கப் போறேன்னு சொல்லிட்டு வந்துட்டான். ஆனால்  என்ன நினைச்சானோ தெரியல கிருத்திகை பூசைல கலந்துகிட்ட ரெண்டு மூணு நாளில். நான் வேலை செய்றதுதான் நல்லது. நீ வேற விவசாயத்தை மட்டுமே நம்பிக்கிட்டிருக்க. நான் வேலை பார்த்தால் ஏதாவது பொருளாதார பிரச்சனை வந்தா கூட ரெண்டு பேரும் சேர்ந்து சமாளிச்சுரலாம்னு சொல்லிட்டுக் கிளம்பிட்டான்” என்று ஒன்றும் புரியாமல் தன் மனதில் இருந்தவற்றைக் கொட்டிக் கொண்டிருந்தான் தனபாண்டியன்.

கிறுக்குசாமிக்குப் புரிந்தது சந்தனபாண்டியன் சிங்கப் பாதையைத் தேர்ந்தெடுத்து விட்டான் என்று.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

இன்று ஒரு தகவல் -6இன்று ஒரு தகவல் -6

தெனாலி ராமன் கதைகள் – தங்க மஞ்சள் குருவி!   விஜய நகர் விழா கோலம் பூண்டிருந்தது! அரச உற்சவம்! அதில் கலந்துகொள்ள அண்டை நாட்டு அரசன் விஜயவர்தனர் வந்தார். விழா முடிந்த பிறகும் சில தினங்கள் விஜயநகரில் தங்கினார். ஒருநாள்

இன்று ஒரு தகவல் -14இன்று ஒரு தகவல் -14

1892 ஆம் ஆண்டு. அமெரிக்காவில் உள்ள ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவன் அவன். அவனுக்கு உற்றார் உறவினர் எவரும் இல்லை. தன்னுடைய படிப்பிற்கான கட்டணத்தை கட்ட கூட அவனுக்கு வசதியில்லை. அவனும் அவன் நெருங்கிய நண்பன் ஒருவனும் சேர்ந்து ஒரு முடிவுக்கு

இன்று ஒரு தகவல் -17இன்று ஒரு தகவல் -17

ஸ்காட்லாந்தில் ப்ரோச் என்ற என்ற வட்ட வடிவமான கட்டடங்கள் மிகவும் பழமை வாய்ந்தது. 2000 வருடங்களுக்கு மேல் இருக்கலாம் என்பது தொல்லியல் நிபுணர்களின் கூற்று. இது போல ஒரு இருநூறு கட்டடங்கள் வரை கண்டறிந்து இருக்கிறார்கள். சுமார் 13 மீட்டர் உயரம்