Tamil Madhura யாழ் சத்யாவின் 'இரு மலர்கள்' யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 17’

யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 17’

அத்தியாயம் – 17

யாரோ யாரோடி உன்னோட புருஷன்?

 

தந்தையை வேதனையோடு நிமிர்ந்து பார்த்தாள் கவின்யா. தாயின் தற்கொலை மிரட்டலை தந்தையிடம் சொன்னாலும் தந்தை தாயைத் திட்ட அவமானம், ஆவேசப் படும் தாய் இறுதியில் எடுக்கப் போகும் முடிவு தற்கொலையே. இருபத்தைந்து வருடங்களாக அவளறிந்த அன்னையின் குணாதிசயங்களை இனியும் இலகுவாக எடை போட கவி தயாராக இல்லை. 

 

 

அப்பா… எனக்கு ஸாமில எந்த விருப்பமும் இல்லை. கம்பஸிலயும் எத்தனையோ பொடியள் பின்னால வந்தவங்கள்… எல்லாரையும் நான் கட்டேலுமா? எனக்கு யாதவ்வ பிடிச்சிருக்கு… மிச்சம் உங்கட முடிவு…”

 

 

தந்தையிடம் சொல்லி விட்டாலும் உள்ளே உதறல் எடுத்தது யாதவ் என்ன முடிவெடுக்கப் போகிறானோ என்று தெரியாமல். 

 

 

கவியின் பதிலைக் கேட்டு செய்வதறியாது மனைவியிடம் பாய்ந்தார் சந்திரஹாசன்.

 

 

தெய்வம்… இதெல்லாம் உம்மட வேலை என்று எனக்கு வடிவா தெரியும்… இல்லாதது பொல்லாததைச் சொல்லி அவளைக் குழப்பி வைச்சிருக்கிறீர்… இது நல்லதுக்கு இல்லை சொல்லிப் போட்டன்… அந்த பொடியனிட மன வேதனை உம்மளைச் சும்மா விடாது…”

 

 

கவியே சொல்லிட்டாள் எல்லோ… பிறகேன் என்னோட வாறியள்..? அவள் என்ன சின்னப் பிள்ளையே… அவளுக்கு எல்லாம் விளங்கும். நீங்கள் என்னோட பாய வேணாம் சரியோ…?”

 

 

கோபமாக கூறி விட்டு சமையலறைக்கு விரைந்தார் தெய்வநாயகி. 

 

 

தனது அறைக்கு சென்று அப்படியே சுவரில் சாய்ந்து கீழே அமர்ந்து விம்மி அழத் தொடங்கினாள் கவி. இவள் பின்னேயே வந்த அருணி எப்படி ஆறுதல் சொல்வது என்று தெரியாமல் தமக்கையின் அருகில் அமர்ந்தாள். 

 

 

அக்கா… அம்மா என்ன சொன்னவ என்று சொல்லு… ப்ளீஸ் அக்கா… எனக்கு தெரியும் அவ தான் ஏதோ சொல்லி இருக்கா என்று…”

 

 

தங்கையிடம் உற்ற தோழியாக எதையும் மறைத்து பழகியிராதவள் தாயின் தற்கொலை மிரட்டலைச் சொன்னாள்.

 

 

என்னக்கா சொல்லுறாய்..? அம்மா மாட்டன்… தனக்கு பிடிக்கேல என்று சொல்லுவா என்றுதான் நினைச்சன். பட் இவ்வளவு தூரம் எதிர்ப்பா என்று நினைக்கேலக்கா… இப்ப என்ன செய்யிற? இதை அப்பாட்ட சொன்னாலும் அம்மா தூக்கில தொங்கிறன் என்று தானே வெளிக்கிடுவா… இந்த மனுசிக்கு ஏன் இந்த சாதி, மத வெறி… கடவுளே இப்ப என்ன செய்யிற..?”

 

 

தமக்கையோடு சேர்ந்து இந்த காதல் பிரச்சினைக்கு தீர்வு தெரியாமல் தானும் குழம்பினாள் அருண்யா. அப்போது கவியின் தொலைபேசி அழைத்தது. அருண்யா எடுத்து பார்க்க புது இலக்கம் எனவும் கவி இப்போதைய நிலையில் யாருடனும் பேச மாட்டாள் என்பது புரிந்து தானே அழைப்பை இணைத்துக் காதில் வைத்தாள்.

 

 

ஹலோ கவி… நான் யாதவ் கதைக்கிறன்… நான் வடிவா யோசிச்சுப் பார்த்தன். நீங்கள் சொன்ன மாதிரி என்னை இல்லாட்டிலும் ஸாமை விட வேற ஒராளைத் தான் உங்கட வீட்டில உங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்கப் போகினம். அதால அது நானாகவே இருந்திட்டுப் போறேனே… ஏனென்றால் நான் உங்களை விரும்பிறது நிஜம்… உங்கள் காதல் தான் நிறைவேறேல்ல. என்ர காதலாச்சும் நிறைவேறட்டுமன்”

 

 

மூச்சு விடாமல் கூறி முடித்தான் யாதவ். யாதவ் கதைக்கிறேன் என்றவுடனேயே ஸ்பீக்கரில் போட்டிருந்தாள். அவன் சொல்வதைக் கவியும் கேட்டிருந்தாள். என்ன சொல்லப் போகிறாய் என அருணி கேள்வியாய் நோக்க தொலைபேசியை அருண்யாவிடமிருந்து வாங்கியவள்,

 

 

நீங்கள் என்ன முடிவெடுத்தாலும் எனக்கு ஓகே யாதவ்… ரொம்ப தாங்ஸ்.”

 

 

கூறி தொலைபேசியை அணைத்தவள் கையாலாகாத  உணர்வோடு நின்ற அருண்யாவைப் பார்த்து,

 

 

எனக்கு யாதவ் என்று தான் எழுதி வைச்சு இருக்கு போல… ஸாமுக்கு என்ன குறை? அவருக்கு என்னை விட நல்ல பொண்ணா கிடைக்கும்… நான் கொஞ்ச நேரம் நித்திரை கொள்ளப் போறன் அருண்” 

 

 

என்று கட்டிலில் சுருண்டு கொண்டாள்.

 

 

தமக்கையின் வேதனை புரிந்து அவள் அறையை விட்டு விலகி சமையலறைக்கு தாயிடம் சென்றவள்.

 

 

உங்கட வீர வேலையளைப் பற்றி அக்கா சொல்லிட்டாள்… நானாக இருந்திருந்தா செத்துத் துலை என்றிட்டு என்ர வாழ்க்கையைப் பார்த்துக் கொண்டு போயிருப்பன்… அக்கா என்றபடியால் உங்கட ஆட்டத்துக்கு ஆடுறாள்… 

 

 

நான் சிங்களவனை அதுவும் கரையோரத்து சாதி குறைஞ்ச சிங்களவனைத் தான் கட்டப் போறன் அப்ப என்ன செய்யப் போறீங்க என்று நானும் பாக்கத் தானே போறன்… இதே வீட்டில அவனோட குடும்பம் நடத்தி உங்கட கண்ணுக்கு முன்னால பத்து பிள்ளைகள் பெத்து வளர்க்கேல்ல என்ர பேர் அருண்யா இல்லை…

 

 

ஆனால் உது நல்லதுக்கு இல்லையணை… நீங்கள் காலம் பூரா இதுக்காக கவலைப்பட்டு பட்டுத்தான் சாகப் போறியள்… அக்காடயும் ஸாம் ஸேரிடயும் மனசை நோகடிச்ச பாவம் உங்களை சும்மா விடாது ஒருநாளும்…”

 

 

சூடான எண்ணெயில் போட்ட கடுகாய் தாயாரைத் தாளித்தவள் பாவம் அப்போது அறிந்திருக்கவில்லை தன் சாபம் பலிக்கப் போவதை. அதேநேரம் பெற்ற தாய்க்கு சாபம் கொடுத்த பாவம் தன்னையும் பாதிக்கப் போவதை. 

 

 

தாயிடம் தனது கோபத்தைக் காட்டி விட்டு அதே வேகத்தில் கவியின் ஸ்கூட்டிபெப்பை எடுத்துக் கொண்டு அவள் நேரே சென்று நின்ற இடம் ஸாமின் வீடு தான்.

 

 

ஸேர்…. ஸேர்…..”

 

 

இவள் அழைத்த குரல் கேட்டு வெளி வாயிலுக்கு வந்து பார்த்த அந்தோணி அவளை உள்ளே அழைத்தார். 

 

 

ஸாம் உள்ள இருக்கிறானம்மா… இடது பக்க அறைக்க போய் பாருங்கோ பிள்ளை…”

 

 

அவர் கூறியதும் உடனே ஸாமினது அறைக்கு விரைந்தவள் திறந்திருந்த கதவினூடாக கட்டிலில் விட்டத்தை வெறித்தவாறு படுத்திருந்த ஸாமின் கோலம் உள்ளத்தைப் பிசைய ஒரு கணம் அசைவற்று நின்று விட்டாள்.

 

 

மறுகணமே தலையை உலுக்கி தன்னை சுதாரித்துக் கொண்டு “ஸேர்….” என்று அழைத்தவாறே உள்ளே நுழைந்தாள்.

 

 

இவள் குரலில் திடுக்கிட்டு எழுந்தவன் அருண்யாவைக் கண்டதும் சோர்வாய் எழுந்து அமர்ந்தான். கன்னத்தில் கோடிட்டிருந்த கண்ணீர் சுவடுகள் அந்த ஆண் மகனின் வேதனையை தெள்ளத்தெளிவாகக் காட்டியது. 

 

 

நீர் ஏன் அருண் இப்ப வந்தனீர்? உம்மட வீட்டில தெரிஞ்சா வீண் பிரச்சினை…”

 

 

அதுக்கு என்னால எப்பிடி வீட்டில நிம்மதியாக இருக்க முடியும்? அக்கா சொன்னதைக் கேட்டு உங்க மனசு என்ன வேதனைப் படும் என்று எனக்கு தெரியாதா? உங்களுக்கு என்ன ஆறுதல் சொல்லுற என்றே தெரியலையே எனக்கு…”

 

 

அவனுக்கு ஆறுதல் சொல்ல வந்து விட்டு அவனோடு சேர்ந்து தானும் மறுகினாள் அந்த பாசக்காரி.

 

 

ப்ளீஸ் ஸேர்… கவியக்காவை தப்பா நினைக்காதிங்கோ… அவள் பாவம்…”

 

 

என்ர கவியை நானே தப்பா நினைப்பனா அருண்? இப்பிடி எங்களுக்கு அதிர்ஸ்டமில்லாமல் போய்ட்டுதே சேர்ந்து வாழ என்ற வருத்தம் தான்… கவியைப் பாக்கிறப்ப எல்லாம் ஏதோ என்ர அம்மாவையே திரும்ப பாக்கிற மாதிரி இருக்கும். .. அவள எப்பவும் என்ர குடும்பத்தில ஒருத்தியா தான் நினைச்சு வைச்சிருந்தன்… திடீரென்று ஒண்டும் இல்லை எண்டவும் தாங்கேலாம இருக்கு அருண்…”

 

 

எங்கே தன் மனக் கவலையை தந்தையிடம் கூறினால் அவரும் சேர்ந்து வருந்துவாரே என்று மனசுக்குள்ளேயே குமைந்து கொண்டிருந்தவனுக்கு அருண்யாவைக் கண்டது பெரும் ஆறுதலாக இருந்தது.

 

 

அம்மா தான் ஸேர் எல்லாத்துக்கும் காரணம்… உங்களைக் கல்யாணம் பண்ணினால் சூசையிட் பண்ணுவன் என்று அக்காட்ட சொல்லி இருக்கிறா… அம்மாவை எதிர்த்து அக்கா உங்களை மரி பண்ணி அம்மா ஏதும் செஞ்சிட்டால் அப்புறம் தன்னால எப்பவுமே உங்களோட நிம்மதியாக வாழ முடியாது என்று அக்கா பயப்பிடுறா… நானா இருக்கோணும் நீங்கள் வெருட்டுறதை வெருட்டுங்கோ எண்டிட்டு பேசாமல் கட்டி இருப்பன். அக்கா எப்பவுமே அம்மாவுக்கு பயந்து பயந்து அவளால அவவ எதிர்த்து எதுவும் செய்ய பயமாக் கிடக்கு…”

 

 

பிரச்சினையின் காரணம் புரிந்து கொண்டவன் நீண்ட பெருமூச்சொன்றை வெளியேற்றி விட்டு,

 

 

கவி சொல்லுறது சரிதானே அருண்… உங்கட அம்மா தன்ர பிடிவாதத்திற்காக ஏதாவது செய்து போட்டால் அப்புறம் எங்களால எப்பிடிடா சந்தோசமா வாழ ஏலும்? கவி யோசிக்காமல் எந்த முடிவும் எடுக்க மாட்டா… எல்லாம் என்ர துரதிர்ஷ்டம். வேற சாதி, மதத்தில பிறந்தது…”

 

 

அம்மாவில பச்சைக் கோவம் வருது… இனி வாழ்க்கேல அவவோட கதைக்க மாட்டேன்… அதுதான் அவக்கு நான் குடுக்கிற பனிஸ்மென்ற் ஸேர்…”

 

 

ஏன்டா அருண் அப்பிடி செய்யுறீர்? எங்கட சமூகத்தில எல்லாரும் இப்பிடி தானே… பிறகு அவவை மட்டும் கோவிச்சு என்ன செய்யிற…? இந்த சாதி, மதப் பிரச்சினைக்கு தீர்வே இல்லைப் போல… எல்லாம் என்ர விதி… யாரை நொந்து என்ன பலன்…? இது என்ர பிழை… வேற சாதி, மதம் என்று தெரிந்தும் காதலிச்சுக் காத்திருந்த என்ர பிழை தானே…” 

 

 

கண்களில் தேக்கி வைத்த வலியோடு விரக்தியாய் சொன்னவனைப் பாவமாய் பார்த்தாள் அருண்யா. 

 

 

அடுத்து என்ன செய்யிறதா பிளான் ஸேர்…?”

 

 

கவி யாதவ்வோடு தான் கல்யாணம் என்று முடிவு பண்ணின பிறகு நான் கவிட கண்ணில பட்டு அவளைத் தர்மசங்கடப் படுத்த விரும்பேல்ல… லண்டனுக்கு ஸ்ருடன்ற் விஸா ட்ரை பண்ணிப் பாக்கப் போறன்…. எவ்வளவு கெதியா நாட்டை விட்டுப் போகேலுமோ அவ்வளவு கெதியா போய்டலாம் என்று இருக்கன்…”

 

 

அவன் நல்லுள்ளம் புரிந்து இவள் கண்களில் கண்ணீர் கோடுகள் கீழிறங்கியது. மெதுவாக விசித்தவளைப் பார்த்து,

 

 

ஏன் அருண் அழுறீர் இப்ப…? இங்கபாரும் நானே அழேல்ல… எங்கட விதி இதுதான் என்றால் என்னப்பா செய்யுறது…? அழாதையும் அருண். …” 

 

 

இதமாய் அவன் சொல்ல இவளோ முகத்தைக் கைகளால் பொத்திக் கொண்டு மேலும் விம்மத் தொடங்கினாள். 

 

 

ஐயோ ஸேர்… என்னாலயே தாங்கேலாம இருக்கே… நீங்கள் எப்பிடி தாங்கிக் கொள்ளுறியள்… கவியைப் பற்றி எனக்கு கவலையில்லை. யாதவ் அவளை ரொம்ப லவ் பண்ணுறார்… எப்பிடியும் கொஞ்ச காலம் போக அவர் கவியை மாத்திடுவார்… 

 

 

ஆனால் நீங்கள்… லவ் என்டாலே றூம் கூட்டிட்டு போற இந்த காலத்தில இப்பிடி அமைதியாவே வெய்ட் பண்ணினீங்களே… கடைசில உங்களுக்கு இந்த நிலமையாப் போச்சே… இப்ப வெளிநாட்டுக்கு போய் வேற தனியாக இருந்து கஸ்டப்பட போறன் எண்டுறியளே… என்னால முடியலேய ஸேர்….நெஞ்செல்லாம் ஏதோ செய்யுதே…”

 

 

அவன் வேதனையை தன் வேதனையாய், உண்மையாய் உணர்ந்து கதறியவளைப் பார்த்து அவன் விழிகளிலும் கண்ணீர் சரம் கட்டியது. 

 

 

முகத்தை மூடி விம்மிக் கொண்டிருந்தவளை அமைதிப்படுத்த முயன்றான். பாவம் அவனும் தான் என்ன செய்வான்… அவனுக்கே ஆறுதல் அவன் எப்படி சொல்லுவான்? வார்த்தைகள் வெளிவர மறுத்தது.

 

 

தானாகவே அழுது அடங்கியவள் எழுந்து முகத்தை துடைத்துக் கொண்டு ஸாமைப் பார்த்தாள். கண்களில் நீர் வடிய துடைக்கவும் தோன்றாமல் உதடுகளை பற்களிடம் பாரம் கொடுத்து விட்டு தன் வேதனையை தனக்குள்ளே புதைக்க போராடிக் கொண்டிருந்தவனைப் பார்த்துத் துடித்து விட்டாள் இவள்.

 

 

அழணும் போல இருந்தா அழுதிடுங்கோ ஸேர்… மனசுக்க வைச்சு வைச்சு இன்னும் வேதனையை கூட்டாதீங்கோ என்று திரும்பவும் மடை திறந்த கண்ணீரோடு இவள் பகிர்ந்தாள். 

 

 

ஸாமுக்கோ எல்லாம் இழந்தவனாக அவனிருந்த நிலைக்கு அன்பே உருவாக அருணி கூறிய ஆறுதல் வார்த்தைகள் ஏதோ அவன் தாயே கண்ணெதிரே வந்து நின்று ஆறுதல் சொல்லுவது போல் தோன்ற,

 

 

ஏம்மா… எனக்கு மட்டும் இப்படி எல்லாம் நடக்குது… எனக்கு பிடிச்சவங்க எல்லாம் என்கூட இருக்கவே மாட்டினமா? முதல்ல நீங்க என்னை விட்டு ஒரேயடியாக போய்ட்டிங்க… அப்புறம் அண்ணாவங்க கம்பஸ் என்று என்னை விட்டு போய்ட்டாங்க… இப்ப கல்யாணம் பண்ணி அவங்க அவங்க வாழ்க்கையெண்டு போய்ட்டாங்க… கவிதான் இனி காலம் பூராவும் என்னோட வருவா என்று நினைச்சன்… இப்ப அவகூட எனக்கு கிடைக்காம போய்ட்டாம்மா… ஏம்மா என்னை இப்பிடி தனியாவே வாழ விடுறீங்க… நான் என்ன பாவம்மா செஞ்சன்….”

 

 

என்று விம்மி விம்மி தாயைத் தொலைத்த சிறு குழந்தையாய் வாய் விட்டு புலம்பத் தொடங்கினான். 

 

 

இப்போது பதிலிறுக்க முடியாமல் மௌனிப்பது இவள் முறையாய் என்ன சொல்லித் தேற்றுவதென்று புரியாமல் வாளாதிருந்தாள். 

 

 

இருவரினதும் அழுகுரல் கேட்டு ஸாமின் அறைக்கு வந்த அந்தோனி மகனின் புலம்பல் கேட்டு மனமுடைந்து போனார். அவனின் வேதனை தாங்காதவராய் விழிகளில் துளிர்த்த கண்ணீரை சுண்டி விட்டு விட்டு,

 

 

அம்மா அருண் ரெண்டு பேரும்  வந்து சாப்பிடுங்கோ… அழுதோ, பட்டினி கிடந்தோ ஆகப் போறது எதுவுமில்லை…” 

மனைவியை இழந்த போது கூட தன் மகன்களுக்காக நிமிர்ந்து நின்ற அந்த தந்தையோ இன்று மகனின் காதல் தோல்வியை தாங்க முடியாது கலங்கிப் போய் நின்றார். 

 

 

ஸேர்… ப்ளீஸ் முகத்தை கழுவிட்டு வாங்கோ… எனக்கு சரியா பசிக்குது… சாப்பிடுவம்…”

 

 

அவள் தனக்கு பசிக்கிறது என்றவுடன் தன் கவலைகளை மூட்டை கட்டி ஒதுக்கி வைத்து விட்டு கிணற்றடிக்குச் சென்று வாளியிலே நீர் மொண்டு அந்த குளிர்ந்த நீரினால் முகத்தை நன்கு அடித்து கழுவினான்.  அருணி ஸாமின் அறையோடு இணைந்திருந்த குளியலறையில் முகம் கழுவிக் கொண்டு சாப்பாட்டு மேசையில் போய் அமர்ந்தாள். 

 

 

ஸாமும் வந்தமர்ந்ததும் தனக்கும் ஒரு தட்டை வைத்துக் கொண்டு மூவருக்கும் சாதத்தையும் கறிகளையும் பரிமாறினார் அந்தோணி. 

 

 

ருசியறியாது குழைத்து மிண்டி விழுங்கிக் கொண்டிருந்தவள் ஸாம் ஒரு வாய் கூடாது உண்ணாது எங்கோ தூரத்தில் பார்வை வெறிக்க தட்டிலே கோலம் போடுவதைக் கண்டு விட்டு ஸாமினது தட்டை பறித்து தள்ளி வைத்து விட்டு தனது தட்டிலிருந்து சாத்தைக் குழைத்து அவனுக்கு ஊட்ட ஆரம்பித்தாள்.

 

 

முதலில் மறுத்தவன் அவளின் திருப்திக்காக சாப்பிட ஆரம்பித்தான். 

அவனை நிறைவாக உண்ண வைத்து தானும் உண்டு விட்டு தட்டுகளோடு அருண்யா எழுந்து சமையலறைக்கு செல்ல,

 

 

அப்பா… அம்மா இருந்திருந்தால் நான் மன வருத்தத்தில் இருக்கும் போது என்னை இப்பிடித் தானே கவனமாக  பாத்திருப்பா என்ன…?” 

 

 

மகனின் கேள்வியில் அவனின் அன்பிற்கான ஏக்கமும் வேதனையும் புரிய ‘ஆம்’ என மௌனமாய் தலையசைத்தார் அந்தோணி. 

 

 

கை கழுவி வந்தவள்

 

 

ஸேர்… சாப்பிடாமல் இருக்க கூடாது. உங்கட நல்ல மனசுக்கு எல்லாம் நல்லதாத்தான் அமையும்.  எல்லாம் நன்மைக்கே என்று நினையுங்கோ ஸேர்… லவ் மட்டுமே வாழ்க்கை இல்லத்தானே… உங்களுக்கு நல்லதொரு ப்யூச்சர் கண்டிப்பாக அமையும். உங்களுக்காகவே வாழ்ந்திட்டு இருக்கிற அப்பாவுக்காக நீங்கள் ஸ்டெடியாக இருக்கோணும் ஸேர்… நான் இப்ப போய்ட்டு வாறன்… வீட்ட ஒருத்தருக்கும் சொல்லேல எங்க போற என்று. தேடுவாங்க…”

 

 

சரிம்மா… கவனமாக போய்ட்டு வாடா”

 

 

அவளை விடை கொடுத்து அனுப்பி விட்டு திரும்பவும் கட்டிலில் போய் விழுந்தவன் இப்போது தன் நண்பர்களை எதிர்கொள்ளும் தைரியம் வந்தவனாக நிரோஜனுக்கு அழைத்து விடயத்தைச் சொன்னான். 

 

 

அடுத்து சிறிது நேரத்திற்குள் மூவரும்  அவனருகில் இருந்தனர். ஸாம் சொன்னவற்றைப் பொறுமையாக கேட்டவர்கள் அடுத்து நடக்க வேண்டியதைப் பற்றி திட்டம் வகுத்தார்கள். 

 

 

அந்த ஆருயிர் தோழர்களின் திட்டம் தான் என்ன

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 1’யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 1’

அத்தியாயம்  – 01 இரு மலர்கள்  “அருண்! அடியே… அருண்  கெதியா வாடி… எனக்கு நேரம் போகுது… எனக்கு டியூட்டி வேற ஒபிஸ்க்கு முன்னால. பிறகு பிரின்ஸி கதிரேசனம்மா சாமி ஆடத் தொடங்கிடுவா… ப்ளீஸ் டி…”  என்று தனது துவிச்சக்கர வண்டியுடன்

யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 3’யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 3’

அத்தியாயம் – 03 தப்புவாளா கவி?   காலை நேரம். வீடே சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. தெய்வநாயகி சமையலறையில் பாத்திரங்களை உருட்டிக் கொண்டிருந்தார். சந்திரஹாசன் வரவேற்பறையில் உதயன் பத்திரிகையைப் புரட்டிக் கொண்டிருந்தார். கவி தனது அறையில் வழக்கம்போல படித்து கொண்டிருந்தாள். வானொலியை

யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 18’யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 18’

அத்தியாயம் – 18 கல்யாண மாலை   அந்த நாளும் அழகாய் விடிந்தது. யாதவே தன்னவளுக்காய் தேர்ந்தெடுத்திருந்த அந்த பல வர்ணங்கள் இணைந்த பட்டில் தேவதையாய் ஜொலித்தாள் கவின்யா.      அந்த சேலையை எடுக்க வேண்டாம், எங்கள் வழக்கப்படி கல்யாணப்பெண்