Tamil Madhura தமிழ் மதுராவின் சித்ராங்கதா,Tamil Madhura தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 54

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 54

மையலறையில் ஆராய்ந்துக் கொண்டிருந்தான் ஜிஷ்ணு. பசிக்கிது பசிக்கிது என்று புலம்பி விட்டாள் சரயு. பாதிநாள் வெளியே சாப்பிடுவதால் ரவையைத் தவிர வீட்டில் ஒன்றுமில்லை. உப்புமா செய்யலாம். அதை தந்துவிட்டு யார் அவளிடம் அடி வாங்குவது? அதுவும் புது மனைவியை திருமணநாளன்று காலைலேருந்து பட்டினி போட்டுட்டு முதன் முதல்ல அவளுக்குப் பிடிக்காத உப்புமாவைத் தந்தால் இனி தொடரும் வாழ்க்கை முழுசும் வருத்தப்பட நேரும் என்று அவனது மூளை எச்சரித்தது.

“அஹா” என்று சந்தோஷத்துடன் கண்ணில் பட்ட அவல் டப்பாவை எடுத்தவன், ஒரு கிண்ணத்தில் இரண்டு கரண்டிகள் போட்டு, அதன்மேல் பாலைக் காய்ச்சி ஊற்றினான். அதில் சிறிது வெல்லம், திராட்சை, முந்திரி, கொப்பரைத் தேங்காய் துண்டுகளைக் கலந்தான். சாப்பிட்டுப் பார்த்தான் சுவையாகவே இருந்தது.

“உப்புமாதான் ப்ராப்ளம். மத்தபடி மண்ணுல கொஞ்சம் சக்கரையைக் கலந்து கொடுத்தாளே சாப்பிடுவா… இதுவா பிடிக்காம போகும்” உண்டபடியே படுக்கை அறைக்குள் நுழைந்தவன் ஹேர் ட்ரையரில் தலை முடியை உலர்த்திக் கொண்டிருந்தவளைப் பார்த்து சத்தமில்லாமல் “வாவ்” என்றான்.

அவள் குளிக்கும் சமயத்தில், அவளது பையை எடுத்து வந்து கட்டிலின் அடியில் வைத்ததை அவள் கவனிக்கவில்லை போலும். அலமாரியிலிருந்து அவனது வெள்ளை சட்டையை களவாடி அணிந்து கைலியை ஸ்கர்ட் போல் கட்டியிருந்தாள். அவனது ஆறடி உயரத்துக்கும் அகன்ற தோளுக்கும் வாகாக எடுக்கப்பட்டது அவளுக்கு தொளதொளவென்றிருந்தது. நீண்டு தொங்கிய கைகளை மடித்து விட்டிருந்தாள். நாற்காலி ஒன்றினை எடுத்து அவளை சைட் அடிப்பதற்கு சௌகரியமாக உட்கார்ந்துக் கொண்டான்.

ஏதோ அரவம் கேட்டதும் தலையை சற்றுத் திருப்பி அவனை ஒரு வெட்டும் பார்வை பார்த்துவிட்டு வேலையைத் தொடர்ந்தாள்.

பார்வை ஒவ்வொன்றும் கூறும் பொன்காவியம்

பாவை என்கின்ற கோலம் பெண் ஓவியம்…

நெஞ்சில் உள்ளூர ஓடும் என் ஆசைகள்…

நேரம் இல்லாமல் நாளும் உன் பூஜைகள்

அவனது விசில் பாட்டைக் கேட்டவள், “விஷ்ணு இங்க என்ன லுக்கு… உன்னை பேகை எடுத்துட்டு வர சொன்னேன்ல” அதட்டினாள்.

“என்ன அவசரம்… அதுதான் என் பனியனை முதற்கொண்டு எடுத்துப் போட்டுட்டல்ல. கொஞ்ச நேரம் கழிச்சு எடுத்துட்டு வரேன்”

மெதுவாய் நகர்ந்து சென்று பையை அவள் கண்ணில் படாதவாறு நகர்த்தினான். ஹேர் ட்ரையரின் ஓசையில் அவளுக்கு சத்தம் கேட்கவில்லை.

மறுபடியும் ஆரம்பித்தாள். “விஷ்ணு பசிக்குது. நீ மட்டும் டிபன் பாக்ஸ்ல இருந்தத சாப்பிட்டல்ல”

“எனக்கு காலைல இருந்து பயங்கர வேலை. செம பசி அதுதான் சாப்பிட்டேன். நான் சாப்பிடுறப்ப உனக்கு ஊட்டிவிட்டேனே, ஒழுங்கா சாப்பிட வேண்டியதுதானே”

“அந்த சாப்பாடு எனக்கு வேணாம். ரொம்ப உறைக்குது”

“உறைக்குதுன்னு சொல்லுறப்பல்லாம் கிஸ் தந்தேனே… பத்தலையா?”

“போடா… ஏற்கனவே உறைப்பு இதுல நீ வேற கிஸ் தந்து தந்து என் லிப்ஸ் புண்ணாயிடுச்சு”

“எங்க பாக்கலாம்” அருகில் வந்தவனைத் தள்ளிவிட்டவள்,

“போடா காடிதா, மறுபடியும் ஆரம்பிக்காத… எனக்கு பசிக்குது பசிக்குது பசிக்குது. சாப்பாடு தரப் போறியா இல்லையா…”

“கத்தாதடி.. உப்புமா செஞ்சு தரவா?”

“நான் இப்பவே ஊருக்குக் கிளம்புறேன் போ. எனக்கு உப்புமா செஞ்சுத்தரமாட்டேன் தினமும் முறுகல் தோசை ஊத்தித் தரேன்னு அன்னைக்கு மெட்ராஸ்ல சொன்னேல்ல”

“நாளைக்கு முறுகல் தோசை. இப்ப இதுதானிருக்கு சாப்பிடு” பசியோடு கிண்ணத்தை எடுத்து நகர்ந்தவளை இழுத்து மடியில் அமரவைத்துக் கொண்டான். சரயு ஸ்பூனில் எடுத்து உண்டுவிட்டு சுவை பிடித்ததும் ஜிஷ்ணுவுக்கு ஊட்டினாள்.

“நீ சாப்பிடுரா… நீதான் ஒண்ணுமே சாப்பிடல. ரொம்ப டையர்ட்ட இருக்க”

“உனக்கு டயர்ட்டா இல்லையா?”

“ஆமாம்டி என் ப்ராண்ட் நியூ பொண்டாட்டி”

கேள்வியாய் பார்த்தாள். “நான் எப்ப உன் பொண்டாட்டியானேன்?”

“இந்தப் பாசிமணி என்னன்னு நினைக்கிற?” மாலையை வருடியபடி கேட்டான்.

கீழே குனிந்து பார்த்தாள் சரயு. “விஷ்ணு… நீ என்னை இப்பத்தான் கல்யாணம் பண்ணிகிட்டியா? அதனாலதான் ராஜு அங்கிள் கிராமத்துல நம்மளை தம்பதி மாதிரியே நடத்துனாங்களா… நான் நீ என்னைக் கல்யாணம் பண்ணிக்கப் போறதா சொல்லிருப்பன்னு நெனச்சேன்”

“அப்ப இது தாலின்னு உனக்குத் தெரியாதா?”

“எப்படித் தெரியும். இதை கட்டும்போது கூட நீ சொல்லலையே விஷ்ணு”

“அப்ப எனக்கும் தெரியாதே”

“உனக்குத் தெரிஞ்சிருந்தா கட்டிருப்பியா?”

‘நீ நல்லவனைக் கல்யாணம் செய்துட்டு வாழணும்னு நெனைக்கிற நான், ஜமுனாவோட விவாகரத்து பத்திரத்துல போட்ட கையெழுத்து மஷி காயிரதுக்குள்ள எப்படி உன்னைக் கல்யாணம் பண்ணிப்பேன். அதுவும் எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆனதை மறைச்சு’

மாட்டேன் என்று தலையசைத்தான்.

‘அப்ப எனக்குத் தாலி கட்டணும்னு நீ நினைக்கலையா?’ சரயுவின் உள்ளம் அனிச்ச மலராய் வாடியது.

“ஏதோ மாலையை போட்டு விடுறன்னு நெனச்சேன். உங்க ஊர்ல கருகமணி தாலிதானே கட்டுவிங்க… சைத்தன்யா கூட அதைத்தானே போட்டிருந்தா?”

“ஆமாம்… ஆனா ராஜு இனத்தில் கருகமணி போடமாட்டாங்களாம். அதுனாலதான் நம்ம ஏதோ மாலைன்னு நெனச்சுட்டோம். தெரிஞ்சதும் ரொம்ப சந்தோஷமா இருந்தது. உனக்கு தெரியாதாரா… அதுகூட தெரியாமலா என் விருப்பப்படி நடந்துகிட்ட”

“இதுதான் நம்ம உறவை நான் மறுக்காததுக்குக் காரணம்னு நினைக்கிறியா… நான் கேக்காமலேயே எனக்கு வேண்டியதை எல்லாம் செய்யுறவன் நீ… என் விஷ்ணு வாய் விட்டு முதன் முதலா கேட்டத எப்படி என்னால மறுக்க முடியும்” பதில் கேள்வி கேட்டாள்.

“என் மேல இவ்வளவு நம்பிக்கை வைக்காதரா, கஷ்டமா இருக்கு” உருகினான் ஜிஷ்ணு.

“இன்னைக்கு காலைல ஒவ்வொரு நிகழ்ச்சியையும் ரசிச்சேன்… நமக்கு கல்யாணம் நடந்தா இப்படித்தானிருக்கும்னு கற்பனை பண்ணேன். அது நம்ம கல்யாணம்னு நெனச்சுட்டேன் விஷ்ணு. அங்க என் முன்னாடி ஜிஷ்ணுவே இல்லை. நீதானிருந்த”

“உனக்கு ஒரு ரகசியம் சொல்லட்டுமா, எப்ப உனக்கு பட்டு சேலை எடுத்தேனோ அப்பவே இந்த ஜிஷ்ணு பயலை ஏமாத்திட்டு நைசா காலடி எடுத்து வச்சுட்டேன். காலைல உன்னை எழுப்பி விட்டப்ப உன் பங்காரத்தை மறந்துட்டியான்னு ஏக்கத்தோட கேட்டல்ல அப்பயே அவனை வெளிய போக சொன்னேன். அவன் முரண்டு பிடிச்சான். கடைசியா உன் கண்ணுல கண்ணீரைப் பார்த்தப்ப அவனை உதைச்சுத் தள்ளி விட்டுட்டேன்”

“நீ மறுபடியும், வேற வாழ்க்கை அமைச்சுக்கோன்னு அது இதுன்னு கேனத்தனமா பேசமாட்டியே?”

“இனிமே நான் எப்போதுமே விஷ்ணுதான். ஜிஷ்ணு வந்தான் அவன் என்னைப் புதைச்ச மாதிரி அவனைப் புதைச்சுடுவேன்” வெறியோடு சொன்னான்.

“விஷ்ணு…” அவன் ஆவேசத்தை அதிர்ச்சியோடு பார்த்தவளிடம்,

“அது பெரிய கதை… இப்ப சொல்ல விரும்பல. நம்ம ஹனிமூன் முடிஞ்சதும் சொல்லுறேன்”

“நம்ம ஹனிமூன் போறோமா? எத்தனை நாள்?”

“அறுவது வருஷம்”

“விளையாடாதே விஷ்ணு… அக்கா மாமா எல்லாரையும் பாக்கணும்”

“பாக்கலாம். உன் ஆபிஸ்ல நீ ரிசைன் பண்ணுறன்னு சொல்லிட்டேன். நாளைக்கே ஹனிமூன் கிளம்புறோம். எனக்கு உன் கூட நிறைய டைம் ஸ்பென்ட் பண்ணனும். கண்டிப்பா ஒரு பாப்பா பெத்துட்டுத்தான் மறுபடியும் இங்க வரோம். நடுவுல நான் மட்டும் அப்பப்ப வந்துட்டு போவேன்”

தனது கழுத்திலிருந்த மாலையையும் சங்கிலியையும் பார்த்தவள், “விஷ்ணு இந்த மாலையை தாலின்னு சொன்னா இந்த செயின் என்ன… நான் இதைத்தானே தாலின்னு நெனச்சுட்டிருக்கேன்” என்று சிரித்தாள்.

“உன் கழுத்தில இருக்குற ரெண்டுமே நான் கட்டின தாலிதான். டபுள் ஸ்ட்ராங்கா கட்டிருக்கேன்.

ஹே உங்கம்மாகிட்ட நான் ஒருதடவை உன் கையை காலை கட்டி எங்க ஊருக்குத் தூக்கிட்டு வந்து மூணு வேளையும் உப்புமா தரப் போறேன்னு சொன்னேன். உங்கம்மா என்னை தாராளமா தூக்கிட்டு போக சொன்னாங்க. அப்பவே என் மாமியார் நம்ம கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டாங்கடி”

“அவுனா…” என்றாள் சரயு.

“அவுனு…” முகத்தில் மோதிய கூந்தலின் வாசத்தை முகர்ந்தான். “இவ்வளவு வாசமா இருக்கியே டார்லிங் என்ன ஷாம்பூ போட்ட”

“உன்னோடதுதான் ஹெட் அண்ட் ஷோல்டர்ஸ்”

கன்னத்தில் வாசம் பிடித்தான் “சோப்பு”

“அதுவும் உன்னோடதுதான். பாத்ரூம்ல குளிச்சுட்டு வச்சிருந்தியே நியுட்ரோஜீனா நேச்சுரல்”

“நிஜம்மாவா, அதெப்படிரா நான் போட்டுட்டா இவ்வளவு வாசம் இருக்க மாட்டிங்குது”

“வாசமெல்லாம் தினமும் குளிச்சாத்தான் வரும்” அவன் மடியை விட்டிறங்கினாள்.

“ஹை என் பேக் இங்கிருக்கு… நான் டிரஸ் மாத்திட்டு வரேன்” அவள் கீழே உணவருந்திய கிண்ணத்தை வைக்கும்வரை காத்திருந்தவன்,

“தொங்கா(திருடி)… என் ஷாம்பூ, என் சோப்பு, என் ஷர்ட், என் கைலி எல்லாத்தையும் என்னைக் கேட்காம எடுத்துப் போட்டுகிட்டியா?”

“என் டிரெஸ்ஸை கிழிச்சல்ல. அப்படித்தான் உன் டிரெஸ்ஸை எடுத்துப் போட்டுப்பேன். பதிலுக்கு வேணும்னா என் டிரெஸ்ஸை நீ போட்டுக்கோ…”

“எனக்கெதுக்கு சுடிதாரும் சாரியும், I want my dress back…”

தோளில் அவளை ஒரு பூந்துவலையைப் போலத் தூக்கிப் போட்டுக் கொண்டான்.

“நோ… விஷ்ணு என்னை விடுடா… நானே வேற டிரஸ் போட்டுட்டு இதைக் கழட்டித் தரேன்”

“முடியாது போடி… என்னைக் கேட்காம எடுத்துப் போட்டுகிட்டேல்ல… எனக்கும் உன் பர்மிசன் தேவையில்லை”

“காலைல நீ மட்டும் என் பர்மிஷன் கேட்டியா?” குதித்து இறங்கினாள்.

“ஹே என்னோடத எடுத்துக்க நான் ஏண்டி உன் அனுமதி கேக்கணும்?”

“ஏய் என்னை விடுடா… நீ ரொம்பக் கெட்ட பையன் விஷ்ணு. இப்படி பேட் டச் பண்ணினா அடிச்சுடுவேண்டா”

அதன்பின் ஜிஷ்ணுவின் குரலே அறையெங்கும் எதிரொலித்தது.

“புருஷன்னு ஒரு மரியாதையே இல்லாம… என்னை அடிப்பியா… அடிடி பாக்கலாம். உன்னோட சண்டை போட நானும் ரெடி.

பங்காரம் உன்னைப் பொறுத்தவரை ஜிஷ்ணுதான் ஜென்டில்மேன் நான் பயங்கரமான பொறுக்கி.

எவ்வளவு திமிருடி உனக்கு, காலேஜ்ல சேர்க்க வந்தப்ப என்னைப் பார்த்துட்டு துப்பட்டாவையா எடுத்துப் போட்ட, உங்க பேர் என்னன்னா கேட்ட? இனிமே தனியாத்தானே லைபை பேஸ் பண்ணனும்னு சொன்னேல்ல நானில்லாத லைப் உனக்கு ஏது… கடவுள் உன்னைப் படைச்சதே எனக்குத் துணையா அனுப்பத்தானே” என்றைக்கோ மனதில் பதிந்த கோவத்துக்கெல்லாம் சரயுவுக்கு தண்டனை தந்தான்.

“அதுக்காக… இதெல்லாம் தப்பு விஷ்ணு… முதல் தடவை உன் ஆசையை என்னால மறுக்க முடியல. இருந்தாலும் உங்க வீட்ல சொல்லாம… அக்கா மாமா அனுமதி இல்லாம…” தயங்கியவளிடம்,

“நம்ம கல்யாணம் நடந்து கொள்ளை வருஷமாச்சு. உனக்கு முதன் முதல்ல வாங்கித் தந்த இந்த செயின்தான் தாலி. இன்னைக்குக் காலைல ரெண்டாவதா இது ஒண்ணு எல்லாரோட ஆசீர்வாதத்தோட. இதுக்கு மேல நான் யார்கிட்டயும் அனுமதியும் கேட்கப் போறதில்ல, விளக்கமும் சொல்லப் போறதில்ல. நம்ம ஆசைப்பட்ட மாதிரியே வாழப் போறோம். ஹாப்பியா”

“விஷ்…”

“இனிமே நீ பேசினா கிஸ் பண்ணியே கொன்னுடுவேன்” சரயுவின் இதழ்களை அசையக்கூட விடாமல் அழுத்தமாய் மூடியது ஜிஷ்ணுவின் இதழ்கள்.

ஜிஷ்ணுவின் காதல் மழையில் திளைத்தாலும் வெகு புத்திசாலியான சரயுவின் மனது சொன்னது.

‘எனக்குத்தான் இது முதல் அனுபவம். இவனுக்கில்லை. இல்லையென்றால் இத்தனை லாவகம் இருக்காது. ஆக இவனுக்கு இருக்கும் ஆர்வமெல்லாம் பெண்ணை அறிவதில் இல்லை என்னை அறிவதில்தான்’ கசப்போடு சிரித்துக் கொண்டாள்.

‘அன்னைக்கு ஒரு பொண்ணுக்கு இவன் முத்தம் தந்ததை என் கண்ணால பாத்தேனே. அப்பறம் தானே இவனை விட்டு விலக ஆரம்பிச்சேன். அப்பறம் எப்படி இவன் விருப்பத்துக்கெல்லாம் வளைச்சு கொடுக்குறேன். எனக்கு மானம் ரோசம் இல்லாம போயிடுச்சா. சரசக்கா மாதிரி நீ எங்க போயிட்டு வந்தாலும் பரவாயில்லை எனக்கும் புருசனா இருன்னு சொல்லுற அளவுக்கு வெட்கம் கெட்டுப் போயிட்டேனா… என்னால இப்படியெல்லாம் மானமத்து நடக்க முடியுமா’

சிறிது நேரத்தில் மனம் தெளிந்தாள். ‘தப்பானவனா இருந்திருந்தா தன்னைப் பத்தின உண்மையை சொல்லி கடைசி வரைக்கும் என்னை வேற கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்கப் போராடியிருக்க மாட்டான். நான்தானே வம்படியா விஷ்ணுவைப் பாக்கணும்னு நெனச்சேன். கடைசில என் கண்ணீரைப் பாத்துத்தானே கலங்கிப் போனான்.

இவன் நெனச்சிருந்தா உண்மையை மறைச்சுட்டு, எப்பவோ என்னைக் கல்யாணம் பண்ணிக் குடும்பம் நடத்திருக்கலாம். ஆனா என்னை விட்டு விலகியே நின்னான். இவனுக்கு என் மேல மோகம் இல்லை. ஆனா மனசு முழுக்கக் காதலிருக்கு. அந்தக் காதலுக்கு தான் தகுதியில்லைன்னே அவன் மனசில குற்ற உணர்ச்சியுமிருக்கு.

இவன் காமுகனில்லை. என்னையே உயிரா நினைக்கிற என் காதலன். என் கண்ணுல இருந்து வர ஒரு சொட்டுக் கண்ணீரைக் கூடப் பொறுத்துக்க முடியாதவன். என் மனசு கஷ்டபட்டா இவனால தாங்க முடியாது. எனக்காக எவ்வளவோ செஞ்சிருக்குற விஷ்ணுவோட மாசிலா காதலை, ஒரு முத்தத்தை வச்சு சந்தேகப்படுறது தப்பு. இந்த இனிமையான வேளைல அதைப் பத்தி கேக்கவும் மாட்டேன்.

என் விஷ்ணுகிட்ட தப்பிருக்கலாம், ஆனா நிச்சயமா அவன் தப்பானவனில்லை’

முடிவுக்கு வந்தவுடன் அவள் மனம் லேசானது.

“என் பங்காரத்துகென்ன பலே யோசனை” கண்களின் முன் சொடக்கு போட்டுக் கேட்டான்.

“ஜிஷ்ணுன்னா அர்ஜுனன்-னு சொல்லிருக்க. அது எவ்வளவு பொருத்தமா இருக்குன்னு யோசிச்சேன்”

“அத்தோட நிறுத்தல போலிருக்கே… வேற என்னமோ யோசிச்சிருக்க… எனக்கு எத்தனை கேர்ள் பிரெண்ட்ஸ்ன்னு கணக்கு போட்டியா?”

“கலக்கிட்ட விஷ்ணு… சொல்லு நான் உனக்கு எத்தனாவது கேர்ள் பிரெண்ட்”

“கேர்ள் பிரெண்டா… நான் உன் ஹஸ்பன்ட்டி மறந்துடாத… உண்மையை சொல்லவா… நீ நம்பினாலும் சரி நம்பாட்டியும் சரி, என் மனசில இருந்த, இருக்குற, எப்போதும் இருக்கப்போற ஒரே பொண்ணு நீதான். உன்னைத் தவிர வேற யாரையும் என்னால காதலிக்க முடியாது”

“இந்த அர்ஜுனனோட த்ரௌபதியா நான்”

“நோ பங்காரம், திரௌபதி அர்ஜுனனுக்கு மட்டும் உரிமையானவ இல்லை. ஐ கான்ட் ஷேர் யூவர் லவ். நீ எனக்கே எனக்குத்தான். உனக்கு மகாபாரதம் தெரியுமா…?”

“ம்ம்… ஓரளவு… என்னை திமிர் பிடிச்சவளேன்னு சொல்லுவியே, அப்ப நான் யாருக்கும் அடங்காத அல்லிராணியா”

“என் அன்புக்கு அடங்கின என் ராணி”

அவளை இழுத்து தன் மார்பில் போட்டுக் கொண்டு முகத்தை வருடியவாறு தொடர்ந்தான்.

“அர்ஜுனனுக்கு நாலுகு பார்யலு. த்ரௌபதி – அவன் போட்டில ஜெய்ச்சு கொண்டு வந்த வெற்றிக் கோப்பை. அந்த வகைல பார்த்தா நான் போட்டிப் போட அவசியமில்லாம முதல்லயே உன் மனசில பௌன்டேஷன் ஸ்ட்ராங்கா போட்டுட்டேன். சோ நீ த்ரௌபதி இல்லை”

“பொறவு”

“சுபத்ரா – கிருஷ்ணனோட தங்கை. அவளை பலராமன் தன்னோட பிரியமான சிஷ்யன் துரியோதனனுக்குக் கல்யாணம் செஞ்சுத் தர நினைச்சார். நம்ம கிருஷ்ணன் அந்தப் பொருந்தா திருமணத்தைத் தடுக்க நெனச்சார். பாண்டவர்களோட தங்களது உறவை பலப்படுத்த ஆடின நாடகம்தான் சுபத்ரா அர்ஜுனன் திருமணம். நமக்கு இந்தக் கதை ஒத்து வராது. சோ நீ சுபத்ரா இல்லை”

“சுபத்ராவுக்குப் பிறந்ததுதானே அபிமன்யு…”ஆமாமெனத் தலையசைத்தான்.

“சரி மத்த ரெண்டு பேரு யாரு?”

“சொல்லுறேண்டி முந்திரிக்கொட்டை. உலுப்பி – நாககன்னிகை, அர்ஜுனன் மேல ஆசைப்பட்டா. அவனுக்கோ அவள் மேல கொஞ்சமும் விருப்பமில்லை. உலுப்பி அவனை பலவந்தமா கல்யாணம் செய்துகிட்டா. அரவானுக்கு அம்மாவாவும் ஆனா” ‘ஜமுனா என்னை மணந்து சந்தனாவுக்குத் தாயானது போல’ பெருமூச்சு விட்டான்.

“சொல்லு”

“நீ கண்டிப்பா உலுப்பி இல்லை”

“அப்ப நான் யாரு?”

“ஸ்வீட் சித்ராங்கதா… அர்ஜுனனின் காதல் மனைவி. அவன் ரசிச்சு காதலிச்சு ஆசைப்பட்டுத் திருமணம் செஞ்சுட்டவ”

“போடா எங்க பாட்டி சொல்லும். கடற்கரைல இருக்குற மண்ணைக் கூட எண்ண முடியும் அர்ஜுனனோட பொண்டாட்டியை எண்ண முடியாதுன்னு. அவனுக்கு யார் மேலதான் காதல் இருக்காது”

“டார்லிங்… லவ் வேற லஸ்ட் வேற. ஆணழகன் அர்ஜுனனுக்கு நிறைய லஸ்ட் இருந்திருக்கலாம். ஆனா சித்ராங்கதாவுக்குக் காதலின்னு சொல்றதுக்கும் மேல மனைவி அந்தஸ்தைக் கொடுத்திருந்தான். அந்த அளவுக்கு அவ அவன் மனசைக் கவர்ந்தவ.

சித்ராங்கதா ஒரு ராஜகுமாரி. ஆண் வாரிசு இல்லாத மணிப்பூர் மன்னனால ஆண் போலவே வளர்க்கப் பட்டவ. ஒரு போராளி. மத்த பொண்ணுங்களோட அழகுல மயங்கிய அர்ஜுனன், சித்ராங்கதாவோட வீரத்தாலயும், குணத்தாலயும் கவரப்பட்டு ரொம்ப லவ் பண்ணான். அவங்க அப்பாகிட்ட நேரடியாவே போய் பொண்ணு கேட்டான். அவ அந்த அளவுக்கு அவன் மனசை பாதிச்சிருந்தா. அவளுக்காக என்ன வேணும்னாலும் பண்ணத் தயாரா இருந்தான். நான் உன் மேல பைத்தியமா இருக்குற மாதிரி அவன் அவ மேல பைத்தியமா இருந்தான்”

“அவளைப் பத்திக் கேள்விப் பட்டதேயில்லை விஷ்ணு”

“அதுதான் விதியோட சதி. அவளோட அப்பா சித்ராங்கதா-அர்ஜுனன் மகன் பாப்ருவகனனைத் தன் நாட்டோட வாரிசா அறிவிச்சுட்டதால அவளால அர்ஜுனனோட அவன் நாட்டுல போய் வாழ முடியல. மகாபாரதத்துல மத்த கதாபாத்திரங்கள் அளவுக்கு அவளால பங்கெடுத்துக்க முடியல. அப்படிப் பங்கெடுத்திருந்தா அர்ஜுனனுக்கு சமமா வாளேந்தி குருஷேத்திரத்துல நின்னுருப்பா”

“அவ மகன் பாப்ருவகனன் என்னவானான்?”

“அர்ஜுனன் செஞ்ச தவறுக்கு தண்டனை தந்தான். அர்ஜுனன் மகனால் இறக்கனும்னு சாபம். பாரதப் போர் முடிஞ்சு பல காலத்துக்குப் பிறகு பாப்ருவாகணன் அவனை தன் அப்பான்னு தெரியாமலேயே கொன்னுட்டான். அப்பறம் உண்மை தெரிஞ்சதும் உலுப்பியோட உதவியால அர்ஜுனனை உயிர் பிழைக்க வைச்சான்”

“அப்ப சித்ராங்கதா எங்க போனா… அவ ஏன் தன் மகனைத் தடுக்கல?”

“அவ உயிரோட இருந்திருக்க மாட்டான்னுறது என் அனுமானம். சித்ராங்கதா இருந்திருந்தா அவ மகனே அப்பாவைக் கொல்ல விட்டிருப்பாளா?

சித்ராங்கதா அர்ஜுனனோட வாழலைன்னாலும் கடைசி வரை அவன் காதலை மட்டுமே சுமந்து வாழ்ந்தா. இந்தக் கதைல இருக்குற சோகத்தை நம்ம மறந்துடலாம். நமக்கு வேண்டாம்.

ஆனா நீ என் சித்ராங்கதா. ஒரு ஆணோட போராட்டமும், துணிச்சலும் உன்கிட்ட பாக்குறேன். ஒரு பெண்ணோட அன்பும், பாதுகாப்பும் உன்கிட்டேருந்து எனக்குக் கிடைக்குது.

இது எப்பவும் எனக்குக் கிடைக்குமா? நான் எவ்வளவோ தப்பு செஞ்சிருக்கலாம். உன்னை புண் படுத்தியிருக்கலாம். துரோகம் கூட செஞ்சிருக்கலாம். அதெல்லாம் தெரியும்போது என்னை வெறுத்து ஒதுக்கிடுவியா பங்காரம்?”

சின்னஞ் சிறுவனைப் போல அஞ்சியபடியே கேட்டான்.

அவன் தலையோடு தலை முட்டி, “என்னால உன்னை வெறுக்க முடியுமா…?” எதிர் கேள்வி கேட்டாள்.

“உன்னோட பரிசுத்தமான அன்புக்கு முன்ன நான் விதிவசத்தாலக் களங்கப்பட்டு நிக்கிறேன் சரயு… என்னை மன்னிப்பியா?”

“பைத்தியம்… நிலா கூடக் களங்கப்பட்டதுன்னு சிலர் சொல்லுவாங்க. அதுக்காக நிலவை ஒதுக்கி வச்சுட்டோமா? நீ என்ன சொல்ல வர்றன்னு ஓரளவு புரியுது விஷ்ணு. உன் உடம்புல கரை பட்டிருக்கலாம். ஆனா உன் மனசு பத்தரை மாத்துத் தங்கம். அதை கிரீடமா செஞ்சு என் தலைல சூட்டிருக்க. எனக்கு முழுசா தெரியாத சின்னச் சின்னக் காரணங்களுக்காக அதைத் தூக்கி எறிஞ்சா என்னைவிட பைத்தியக்காரி யாருமில்ல.

ஆனா இதை வச்சு நான் எப்பவுமே மன்னிச்சுடுவேன்னு தப்புக் கணக்குப் போட்டுறாதே. இனிமே தப்பு செஞ்ச கண்டிப்பா தண்டனை தருவேன். என்கிட்டே உண்மையா இல்லைன்னு தெரிஞ்சது என் தண்டனை ரொம்பக் கடுமையா இருக்கும்” செல்லமாய் மிரட்டினாள்.

“அம்மோ பயம்மா இருக்கே… அதை விடு, கதை கேட்டு இவ்வளவு நேரத்தை வேஸ்ட் பண்ணிட்டியேடி” என்றபடி அவனது சில்மிஷத்தைத் தொடர,

“விஷ்ணு எத்தனை கிஸ்தான் தருவ… உனக்கு போர் அடிக்கலையா?”

“காலைலதான் பெல்லி முடிஞ்சிருக்கு. போர் அடிக்குத்தாம். எனக்கெல்லாம் எத்தனை ஜென்மம் ஆனாலும் நீ கூட இருந்தா போர் அடிக்காதுப்பா” என்றபடி தொடர்ந்தான்.

“எனக்குத் தூக்கம் வருது.”

“தூங்குமூஞ்சி… எனக்குத் தூக்கமே வரல. ஒவ்வொரு செகண்டையும் என்ஜாய் பண்ணிட்டு இருக்கேன்”

“விடியப் போகுதுடா ப்ளீஸ் தூங்கு”

“கண்டிப்பா தூங்கணுமா?” சலித்தபடியே படுத்தவன், எதையோ நினைத்துக் கொண்டு வேகமாய் எழுந்தான்.

“பங்காரம், நம்ம பாப்பாவை எப்படிரா தூங்க வைப்ப?”

“கல்யாணம் பண்ணி முழுசா ஒரு நாள் கூட ஆகல அதுக்குள்ளே பாப்பா வேணுமாம்” தலையிலடித்துக் கொண்டாள்.

“சொல்லுரா… லல்லபி பாடுவியா…”

“லக்ஷ்மி அக்கா பசங்களுக்குப் பாடிருக்கேன்”

“ப்ளீஸ் ப்ளீஸ், எனக்குத் தமிழ்ல ஒரு தாலாட்டுப் பாடேன்”

“எனக்கு உன்ன மாதிரில்லாம் அழகா பாடத் தெரியாது விஷ்ணு”

“ப்ளீஸ் பாடுரா… நான் வேணும்னா கண்ணை மூடிக்கிறேன்”

வெட்கத்தோடு பாடினாள்.

தங்க சிலம்பு கொண்டு தாய்மாமன் வருவாரு

பொன்னு மணியும் கொண்டு பெண் கூடத் தருவாரு

பொழுதோடு தூங்குக் கண்ணே ஆரிரோ ஆரிரோ

விடிஞ்சாக்க முழிச்சுக்கலாம் ஆரிரோ ஆரிரோ

“சரவெடி கலக்கிட்டடி… பாட்டெல்லாம் ரெடியா இருக்கு. சீக்கிரம் உன்னைத் தாலாட்டு பாட வைக்கணுமே” யோசித்தபடியே தூங்கிப் போனான். அவன் கையணைப்பில் சரயுவும் உறக்கத்தில் ஆழ்ந்தாள்.

ஜிஷ்ணுவைப் பொருத்தவரை வாழ்வில் அஸ்தமித்த சூரியன் இன்று உதயமாகிவிட்டது. தனது கதிர்களால் வருடிக் கொண்டிருக்கிறது. இப்போது போய் உண்மையை சொல்கிறேன் என்று இன்பத்தைக் கெடுக்கும் காரியத்தை செய்யலாமா? சரயுவை காலை எழுந்ததும் எங்காவது கண்காணாத இடத்துக்குக் கடத்தி சென்று விடலாம். விவாகரத்து கையில் கிடைத்ததும் சரயுவிடம் உண்மையை சொல்லிக் கொள்ளலாம். அவனது அன்பை அவள் புரிந்துக் கொள்வாள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 4என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 4

4. அத்தியாயம் –  அரவிந்தும் ஸ்ராவனியும் ஊருக்கு வந்து இரண்டு நாட்களாகி விட்டது. திருச்சி என்றால் தெரிந்தவர்கள் இருப்பார்கள். இங்கு யாரையும் தெரியாது. அதுவும் ஸ்ராவணியை வீட்டில் விட்டு விட்டுப் போகவும் அவனுக்கு மனமில்லை. ஏதோ தெனாலிராமன் பூனை வளர்த்த கதை

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 62தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 62

காலையிலிருந்து பொற்கொடி அபியை ஜிஷ்ணுவைப் பார்த்து அப்பா என்று சொல்ல ட்ரைனிங் கொடுத்துக் கொண்டிருக்கிறார். அவனோ ராமைத் தான் அப்பா என்றழைப்பேன் என்று அழிச்சாட்டியமாய் நிற்கிறான். “அம்மா அவனை கம்பெல் பண்ணாதிங்க” என்று விஷ்ணு அழுத்தி சொன்னான். “அவன் அணுகுண்டை அப்பாவாவே

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 46தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 46

உறக்கம் கலைந்ததும் ஏதோ வித்யாசமான உணர்வில் விழித்தான் ஜிஷ்ணு. தூக்கக்கலக்கத்தில் புரண்டு அவளது இடுப்பினை வளைத்து வயிற்றில் முகம் புதைத்து உறங்கியிருந்தான். மெலிதாக குளிர்காற்றிலிருந்து ஜிஷ்ணுவைக் காக்கும் பொருட்டு சரயு அவளது ஸ்லீவ்லெஸ் ப்ராக் மேல் போட்டிருந்த ஓவர்கோட்டைக் கழற்றி அவன்