Tamil Madhura தமிழ் மதுராவின் சித்ராங்கதா,Tamil Madhura தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 55

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 55

காலை புத்தம் புதிதாக அவளுக்காகவே விடிந்ததைப் போல் சரயுவுக்குத் தோன்றியது. தூக்கத்தில் ரங்கராட்டினம் சுற்றுபவளை தனது பரந்த தோள்களுக்கிடையே அடக்கி தப்பித்து விடாமல் கைகளால் சிறை செய்திருந்தான் அவள் அன்புக் கணவன். நீண்ட நாட்களுக்குப் பிறகு மிகவும் சந்தோஷமாய் உணர்ந்தாள்.

சிறு குழந்தைகள் தூக்கத்தில் கூட விடாது தனது பொம்மையைக் கட்டிக்கொண்டே தூங்குமே அதே போல்தான் சரயுவின் கண்களுக்கு அந்த முரடன் தோன்றினான்.

‘எலே விஷ்ணு நானென்ன உன் டெடிபேரா? பொம்மையாட்டம் என்னை வச்சு விளையாடுற’

அவள் இதயக் கதவைத் திறந்து காலடி எடுத்துவைத்தவன், இருண்டு போன வாழ்வை வண்ணமயமாக்கியவன், உயிரானவன் ஊரறிய அவளது உடமையாகிவிட்டான். சந்தோஷத்தில் செத்துவிடலாம் போலிருந்தது சரயுவுக்கு.

“விஷ்ணு ப்ளீஸ் விடேன்” என்ற கெஞ்சலுக்கு அவனிடம் மதிப்பேயில்லை. அவனது கைகளைத் தடுத்தபடி சொன்னாள்.

“நான் ஹனிமூனுக்குக் கிளம்புறதா வேணாமா?” என்ற கேள்விக்கு மட்டும் அசைந்துக் கொடுத்தான்.

“சீக்கிரமா கிளம்பிட்டு என்னை எழுப்பிவிடு… நான் பத்து நிமிஷத்துல ரெடி ஆயிடுவேன்” உறக்கக் கலக்கத்தில் சொன்னான்.

“உனக்கு டிபன்?”

“வழில பாத்துக்கலாம்ரா… காபி மட்டும் முடிஞ்சா போடு. கிச்சன்ல பால், காபி பவுடர் இருக்கு” அவளை இழுத்து ஆசைதீர முத்திரையைப் பதித்துவிட்டுத் தூக்கத்தைத் தொடர்ந்தான்.

ஜிஷ்ணுவின் சோப்பினை போட்டு நிதானமாகக் குளித்தவள் தனது பையிலிருந்து இங்க் ப்ளூ ப்ளூவில் மிக மெலிதாக மேகவண்ணத்தில் சிறிய புள்ளிகள் போட்ட சல்வாரை அணிந்துக் கொண்டாள். ப்ளைன் வண்ண ஷிபான் துப்பட்டாவின் கரைகளில் ஆகாய நீலத்தில் பூக்கள் தைக்கப் பட்டு மேலும் அழகு சேர்த்தது. அவளது பால் வண்ணத்துக்கு அது மிகப் பொருந்தியது. தலையை வாரி முடியை க்ளிப்பால் அடக்கியவள் சின்ன ஸ்டிக்கரை ஒட்டிக் கொண்டாள்.

பூங்கதவைத் தாள் திறந்து வந்த தனது தேவதையைப் பார்த்து படுக்கையில் படுத்தபடியே விசிலடித்தான் ஜிஷ்ணு.

“வாவ் சரவெடி, என்னடி இப்படி சூப்பரா டிரஸ் பண்ணிருக்க. என் தூக்கமே கலைஞ்சுடுச்சு போ. நம்ம ஹனிமூன நாளைக்குத் தள்ளிப் போடுறேன். இப்ப இங்க ஹனிசன் கொண்டாடலாமா” ஆவலாய் கேட்டான்.

“உதை வாங்கப் போற விஷ்ணு… முதல்ல எந்திருச்சு பிரஷ் பண்ணு… நான் காபி போட்டுட்டு வர்றதுக்குள்ள குளிச்சுட்டு வர்ற… இல்லைன்னா நடக்குறதே வேற”

“ஏண்டே ரௌடியிசம் சேஸ்தாவா…

சூடு இன்ட்லோ நேனே மொகுடு…

நா அந்த பெத்த போக்கிரி எவ்வறு லேது, தெலுசா?

நேனு செப்தே நுவு சேயாலி

முந்து இக்கட ரா…இக்கட கூச்சோ”

அமரச் சொல்லி அவளை மிரட்டியது வேலைக்காகாமல் படுக்கையிலிருந்து எழுந்தான். அவனைப் போராடிக் குளியலறையில் தள்ளிவிட்டாள். அவள் பின்னாலேயே வேகமாய் பாத்ரூம் கதவைத் திறந்து வந்தவனை ஏமாற்றி, ஓட்டமாய் ஓடி வெளியே சென்று அறைக் கதவை வெளியே சாத்தினாள்.

“ஏய் கதவைத் தொறடி”

“குளிச்சுட்டு ரெடியா இரு. காபி போட்டு எடுத்துட்டு வரேன்”

முதல்நாள் சென்ற சாமிரூமுக்குள் நுழைந்து நெற்றியில் குங்குமத்தை இட்டுக் கொண்டாள்.

‘அம்மா அப்பா எனக்கும் விஷ்ணுவுக்கும் கல்யாணமாயிடுச்சு. விஷ்ணு ரொம்ப ரொம்ப நல்லவன். என் மேல உயிரையே வச்சிருக்கான். நானும் அப்படித்தான். எங்க வாழ்க்கை நல்லாயிருக்கணும்னு ஆசீர்வாதம் செய்ங்க’ வெட்கத்தோடு குங்குமத்தை சிறிது எடுத்து வகிட்டிலும் வைத்துக் கொண்டாள்.

சமையலறைக்கு சென்று காப்பிப் பொடியைத் தேடி எடுத்துக் காப்பியைக் கலக்க ஆரம்பித்தாள்.

சென்னை குண்டூர் ஹைவேயில் தலை தெறிக்கும் வேகத்தில் ஓடியது அந்தக் கார். நானூறு மைல் தொலைவே நாற்பதே நிமிடங்களில் கடக்க நினைக்கும் அவசரம் அதில் பயணம் செய்தவர்களுக்கு. சூலூர்பேட்டையைக் கடந்தவுடன் வாயைப் பூட்டி வைக்க முடியாமல் திறந்தார் ஜெயசுதா.

“இப்படி பண்ணிட்டானே ஜிஷ்ணு. இவன் மேல என்ன ஒரு நம்பிக்கை வச்சிருந்தேன்” தேம்பினார்.

“அழுது ஒரு ப்ரோஜனமுமில்ல… டைவேர்ஸ் கொடுத்த கையோட ப்ரெண்ட் கல்யாணம்னு இங்க வந்துட்டார். ரெண்டும் சின்னஞ்சிறு வயசு நம்ம பாரம்பரியத்தைப் பத்தி நம்மதான் எடுத்து சொல்லணும்” ஜமுனாவின் தகப்பனார் சொன்னார்.

அவருக்கு ஒரே உதறல். ஜமுனாவை அந்த அரைக்கிழவன் ஜேசனிடமிருந்து பிரித்து சொக்கத்தங்கமாய் ஒரு மாப்பிள்ளை பார்த்துத் திருமணம் செய்து வைத்தார். அவள் என்னடாவென்றால் அறுத்துக் கொண்டு மறுபடியும் அந்தக் கிழவனுடன் வாழுகிறாள். நல்ல வேளை இது ஜெயசுதாவுக்குத் தெரியாது. அனைவரிடமும் ஜிஷ்ணு வேறொருத்தியுடன் தொடர்பு வைத்துக்கொண்டு ஜமுனாவை விவாகரத்து செய்வதாக பத்திரம் அனுப்பியிருக்கிறான் என்று சொல்லியிருந்தார். ஜேசன் விவரம் பானுபாஸ்கரனுக்கும் ஸ்ரீவள்ளிக்கும் மட்டுமே தெரியும். அவர்களுக்கு மருத்துவமனை ஒன்றில் பார்ட்னர் என்ற எலும்புத்துண்டை போட்டு வாயை அடைத்தாகிவிட்டது. இனி ஜிஷ்ணுவை கல்யாணத்துக்குப் பயன்படுத்திய அதே தாய்ப்பாசம் என்ற தாம்புக்கயிறைக் கட்டி இழுத்து வந்து அமெரிக்காவில் அடைக்க வேண்டியதுதான். சந்தனா என்ற பசையை வைத்து ஜிஷ்ணு-ஜமுனா உறவை ஒட்டி வைக்க வேண்டியது இறுதி வேலை. அதுவரை ஜமுனா ஜேசனுடன் வாழ்வது உறவினர்களுக்குத் தெரியாமல் பார்த்துக் கொள்வது உத்தமம்.

திட்டமெல்லாம் பலமாகப் போட்டவருக்கு ஜிஷ்ணு இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை. வரலக்ஷ்மி உதவியுடன் கொடைக்கானலில் சந்தனாவை சேர்த்து விட்டது அறிந்தார். கடைசியாய் தரணிக்கோட்டையில் உளவாளியாய் நியமித்திருந்த உறவினர் மூலம் ஜிஷ்ணு ஒரு பெண்ணைக் கூட்டிக் கொண்டு தாரணிக்கோட்டை வீட்டில் தங்கியிருக்கிறான். நேற்று காலையில் இருவரும் மணக்கோலத்தில் வந்தார்கள் என்ற அரிய தகவல் கிடைத்ததும், ஜெயசுதாவை உருவேற்றிக் கூட்டி வருகிறார். கூடவே அவர்களுக்குத் துணையாக பானுபாஸ்கரன். எதோ சர்ஜெரி முடித்து வந்தவனைக் கையோடு இழுத்து வந்திருக்கின்றனர்.

நான்கரை மணி நேரத்திலேயே புழுதி பறக்க தாரணிக்கோட்டை வீட்டை வந்தடைந்தது அந்த வண்டி. வேகமாய் இறங்கிய ஜெயசுதாவின் செருப்பு திசைகொன்றாய் எகிறியது. அவரது கண்கள் மானைத் தேடும் புலியின் வெறியுடன் அங்கும் இங்கும் அலைந்தது. சமையலறையிலிருந்து காப்பி ட்ரேயுடன் வந்த சரயு அவர் கண்ணில் பட்டாள். அத்துடன் அவள் வகிட்டிலிருந்த குங்குமமும் பட்டது.

“ஹே யாருடி நீ?” தாடகையைப் போலக் கத்தியவர் கண்களில் அவள் கழுத்திலிருக்கும் மாலை பட, கோவத்தில் ஓங்கி கையால் தட்டினைத் தட்டி விட்டார். காபி கப்புகள் கீழே விழுந்து உடைய எதிர்பாராத தாக்குதலால் திகைத்துப் போய் பார்த்தாள் சரயு.

அவளது படித்த களை, ஜெயசுதா கத்தக் கத்த புரியாத திகைப்பு இதனைக் கண்டவுடன் ஒன்றும் ஒன்றும் இரண்டு என்று கணக்குப் போடுவது ஜிஷ்ணுவின் முன்னாள் மாமனாருக்கு சுலபமாகவே இருந்தது.

‘இவதான் அந்த அரவ்வாடா… இவளை ஜிஷ்ணு கல்யாணமே பண்ணிட்டானா… அப்ப வேற விதமாத்தான் டீல் பண்ணனும்’

ஜெயசுதாவைத் தடுத்தவர், “நீ ஜிஷ்ணுவுக்கு என்ன வேணும்?” என்று ஆங்கிலத்தில் தெளிவாகக் கேட்டார்.

“மனைவி” என்று தைரியமாகவே நிமிர்ந்து நின்று பதில் சொன்னாள் சரயு.

“பார்யாவா?” என்று கத்திய ஜெயசுதா கோவத்துடன் அவளது மாலையைப் பிடித்து இழுக்க அது அறுந்து தரையில் சிதறியது.

“ஐயோ என் தாலி.. ஏம்மா உனக்கு அறிவில்லை” பதறியபடியே மணிகளைப் பொறுக்கத் தொடங்கினாள்.

ஜமுனாவின் தந்தை உருகும் குரலில் பேசத் தொடங்கினார்.

“உன் மாலை ஒண்ணு அறுந்ததுக்கே இப்படிப் பதறுறியேம்மா இந்த மாதிரித்தான் நீ ஒரு குடும்பத்தையே சிதறடிச்சுட்டு வாழ்க்கையை ஆரம்பிச்சிருக்க” என்று ஆரம்பித்தவரை புரியாமல் பார்த்தாள் சரயு.

“நீங்க யாரு? என்ன உளருறிங்க?”

“நாங்க உளறலடி… நாங்க யாருன்னு உள்ள இருக்கானே அந்த துரோகி அவனைக் கேளு சொல்லுவான். கட்டின பொண்டாட்டியையும், பெத்த பிள்ளையையும் விட்டுப் பிரிச்சு அவனை உன் முந்தானைல முடிஞ்சு வச்சிருக்கியே… நீ நல்லாவா இருப்ப, நாசமா போவ” சாபமிட்ட ஜெயசுதாவை எரிச்சலோடு பார்த்தாள்.

மேலும் கத்த வாய்திறந்தவரை, பக்கத்து அறைக்கு செல்லுமாறு பானுபாஸ்கரனுக்குக் கண்ணாலேயே உத்தரவிட்டார் ஜமுனாவின் தந்தை. பின்னர்,

“அவங்க சொல்லுற விஷயம் எல்லாம் உண்மையம்மா. நீ தமிலுநாடா”

என்றவரிடம் ஆமாமெனத் தலையாட்டினாள்.

“அவங்க ஜிஷ்ணுவோட அம்மா ஜெயசுதா. நான் அவன் மாமனார். என் மக ஜமுனா அவனோட மனைவி. அவங்களுக்கு அழகான பொண்ணு கூட இருக்கா. அழகு, ஆஸ்தி, அந்தஸ்து இப்படி எல்லாவகையிலும் பொருத்தமான ஜோடி. ஆனா ஜிஷ்ணு மனசில உன்னைக் காதலிச்சது பயங்கர உறுத்தலாயிடுச்சு. என் பொண்ணு குடும்ப கௌரவத்துக்காகவும், சாகிற நிலைமைல இருந்த ஜிஷ்ணுவோட அம்மா ஆசையை நிறைவேத்துறத்துக்காகவும் தன் வாழ்க்கையையே பணயம் வச்சா. இந்த நிமிஷம் வரை ஒட்டாத கணவனோட, தன் சோகத்தையும் ஏக்கத்தையும் மறைச்சு குடும்பம் நடத்திட்டு இருக்கா. ஆனா ஒரு குழந்தை பொறந்தும் கூட மாப்பிள்ளை உன்னைப் பத்தி பேசுறதையும் உன்கூட பழகுறதையும் விடல போல. கல்யாணமானதிலிருந்து இப்ப வரை உன் ஒருத்தியால அவங்க குடும்பத்துல பயங்கர சண்டை. இந்த தடவை அதிகமாயிடுச்சு. என் மகளை வீட்டுக்கு அனுப்பிட்டார் மாப்பிள்ளை. வழக்கமான சண்டைன்னு நாங்க நெனச்சா, உன்னைக் கல்யாணமே பண்ணிட்டாரா” வேதனையான குரலில் அந்தப் பெரிய மனிதர் சொன்னதை நம்பவா வேண்டாமா என்பதைப் போலப் பார்த்தாள்.

“நீ முழிக்கிறதைப் பார்த்தா.. அவங்களுக்குக் கல்யாணமானது உனக்குத் தெரியுமா?”

பதில் சொல்லாமல் கல்லாய் நின்றாள்.

“இங்க பாரு” அவர் போனில் காட்டிய புகைப்படத்தில் ஜிஷ்ணுவும் ஜமுனாவும் அன்னியோன்யமாய் நின்றார்கள். சரயுவுக்கு ஜிஷ்ணுவைத் தவிர வேறு யாரும் மனதில் படவில்லை. ஜமுனாவின் முகத்தைக் கூட அவள் பார்க்க விரும்பவில்லை.

வேக வேகமாய் ஒவ்வொரு படத்தையும் திருப்பிப் பார்த்த சரயுவின் விரல்கள், மனைவி அவனருகே நெருக்கமாக அமர்ந்து ரசித்துக் கொண்டிருக்க,

“நாணா செப்பம்மா, ஒக சாரி நாணா செப்பு”

என்று தனது சிறு குழந்தையின் மழலையைக் கேட்டு மகிழ்ந்த ஜிஷ்ணுவின் வீடியோவைக் கண்டதும் கல்லாய் சமைந்தது.

விஷ்ணு, என் விஷ்ணுவா இது… இதுதான் அவன் குடும்பமா… அப்ப நான்? நான் அவனோட மனைவி இல்லையா? இவனையே நெனச்சு இந்த நிமிஷம் வரை இவனையே சுவாசிச்சுட்டு இருக்க நான் இவனுக்கு யார்?

யோசித்த சரயுவுக்கு அவளது இடம் புரிந்தவுடன் விஷ்ணுவை பொக்கிஷமாய்ப் பொத்தி வைத்த மனதை யாரோ உளி கொண்டு பிளப்பதைப் போல் வலித்தது.

‘கல்யாணம் பண்ணி ஒரு குழந்தையைப் பெத்து, ஐயோ ஐயோ… ஏன் என்கிட்டே மறைச்ச விஷ்ணு? நீ நடக்குற பாதைல ஒரு சருகா கெடந்தாப் போதும்னு நெனச்சேனே, கடைசில என் மனசை குப்பையா நெனச்சு மிதிச்சுட்டாயே’ அவளது இதயத்தின் ஓலத்தைக் கேட்க முடியாது காதுகளைப் பொத்திக் கொண்டாள். அவளது பார்வை மறுபடியும் ஜிஷ்ணுவின் கையணைப்பிலிருந்த அந்தச் சின்னஞ்சிறு பூ முகத்தில் நிலைத்தது.

காதல்ன்னுற மந்திரவாதம் செஞ்சு இந்த அழகான குருவிக் கூட்ட என் தரித்திரம் பிடிச்ச கையால கலைச்சுட்டேனே… இந்தப் பாவத்தை எங்க போய் களைவேன். அவள் அறியாது செய்த பிழை மகாபாவிகளைக் கொல்லும் இந்திரனின் வஜ்ராயுதமாய் மாறி அவள் இதயத்தைக் கூறு போட்டது.

தலையைப் பிடித்துக் கொண்டாள். அறையினுள்ளிருந்து திமிறி வெளியே வந்த ஜெயசுதா, “ஏண்டி இப்படி கல்யாணமான ஆம்பிள்ளைங்களுக்கு அலையுறிங்க. அந்த மெக்கானிக் பொண்ணுதானே நீ. இதிகோ ஈ டப்புகோசம் தானே என் மகன் கூட படுத்த, இந்தா பொறுக்கிட்டுப் போ” அவளது முகத்தில் வீசி எறிந்தார்.

ஜெயசுதா எறிந்த ரூபாய் நோட்டுக்கள் சரயுவின் முகத்தில் பட்டு அவளுக்கு நிகழ்காலத்தை உணர்த்தியது. எதற்குப் பணம்? என் விஷ்ணு கேட்டதை வள்ளலாய் வாரி வழங்கியதற்கா? அவனுக்குக் கல்யாணமானதே தெரியாதே. தெரிஞ்சிருந்தா அவன் கண்ணுலையே படாம விலகிருப்பேன். நான் அறியாம செஞ்ச தப்புக்கு நெருப்புல தூக்கிப் போட்டிருக்கலாம்… சத்தம் காட்டாம செத்திருப்பேன். ஆனா நாவினால் சுட்டது… தகித்தது சரயுவுக்கு…

“ஏய்… என்ன தைரியம் உனக்கு…?” வேகமாய் வந்து ஜெயசுதாவின் கழுத்தைப் பிடித்தாள்.

“பணத்துக்காகவா… என்னை என்ன தொழில் பண்ணுறவன்னு நெனச்சியா…?

எதுக்கு பணம் தரேன்னு சொல்ற? உன் மகன் கல்யாணம் ஆனதை மறைச்சு நேத்து என்கிட்டே இருந்து திருடுனானே அந்த கற்புக்கா? இல்லை அவன் மேல இருந்த நம்பிக்கையைக் கொன்னானே அதுக்கு ஈடாவா? போங்கடி நீங்களும் உங்க பணமும்” கீழே தூ எனத் துப்பினாள்.

ஹாலில் சத்தம் கேட்டு மாடியிலிருந்து ஜிஷ்ணு படபடவென கதவைத் தட்ட, பானு வேகமாய் சென்று கதவைத் திறந்தான்.

“பானு நீ எப்படி?” அதிர்ந்த ஜிஷ்ணு விஷயத்தை கிரகித்து மின்னல் வேகத்தில் வரவேற்பறைக்கு வந்தான்.

அவனது தாயின் கழுத்தில் கைவைத்தபடி நின்ற சரயுவைக் கண்டு திகைத்தான்.

“சரயு அது எங்கம்மா கையை எடு” என்று வேகமாய் அவளை நெருங்க, அவனைத் திரும்பி தீப்பொறி பறக்கும் பார்வை பார்த்தாள் சரயு.

ஆயிரம் சீர்வரிசை அள்ளி வைக்க அன்னையில்லை

நானூறு வண்டி கட்டி நடந்து வரத் தந்தையில்லை

தாய் வீட்டுச் சீதனமாய் தையலைத்(தையல் – பெண்) தவிர வேறில்லை

நாதியத்து நிக்கும் என்னை நட்டாத்தில் விட்டாயே…

 

உன்மேல் கொஞ்சமா ஆசை வைத்தேன் – கோடானு கோடியடா

நீ கொத்தோடு பிடிங்கியது – கற்பில்லை என் காதலடா…

 

குற்றம் சாட்டிய அந்தப் பார்வையிலேயே பஸ்பமானவனைப் போல் அந்த இடத்திலேயே கல்லாய் சமைந்தான் ஜிஷ்ணு.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் ‘உன்னிடம் மயங்குகிறேன் – 13’தமிழ் மதுராவின் ‘உன்னிடம் மயங்குகிறேன் – 13’

அத்தியாயம் – 13   ப்ரித்வியின் பக்கத்து வீட்டில் கர்ஜீவன், அவர் மனைவி மித்தாலி, குழந்தைகளில் பெண்கள் நான்கும், ஆண்கள் இரண்டுமாய் பெரிய குடும்பம். அனைவரும் வஞ்சகமில்லா மனதோடும் உடம்போடுமிருந்தனர். கர்ஜீவன் வீட்டில் தீதி தீதி என காலையே சுற்றி வந்த

தமிழ் மதுராவின் ‘உன்னிடம் மயங்குகிறேன் – 15’தமிழ் மதுராவின் ‘உன்னிடம் மயங்குகிறேன் – 15’

அத்தியாயம் – 15 அன்று காலையில் நந்தனா எழும்முன்பே ப்ரித்வி கிளம்பிவிட்டிருந்தான். அவன் அதிகாலை கிளம்ப வேண்டியிருந்தால் அவனே எழுந்து கதவை பூட்டிவிட்டு செல்வான். நந்தனா மெதுவாக எழுந்து கல்லூரிக்குக் கிளம்புவாள். காலை யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்டு எழுந்தாள்.

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 19தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 19

“லேட்டாச்சு… சாப்பாடு தீர்ந்துடும்… சாப்பிட வாங்க…” என்றபடி சரயுவின் கல்லூரி மாணவன் ஒருவன் வந்தான். அவனை எங்கோ பார்த்திருக்கிறோமே என்று யோசித்த ஜிஷ்ணு கஷ்டப்பட்டு யோசித்து, சரயுவின் பிறந்ததினத்தன்று அவளுக்கு சுவாமி படம் கொடுத்தவன் என்று நினைவுக்குக் கொண்டு வந்தான். “பிஸியா