Tamil Madhura தமிழ் மதுராவின் சித்ராங்கதா,Tamil Madhura,Uncategorized தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 14

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 14

இன்று

மியூனிக்

லுவலகத்திலிருக்கும் போது ராமை அழைத்தாள் சரயு. குசலம் விசாரித்தபின் ஜிஷ்ணு வந்திருப்பதைச் சொன்னாள். எதிர்பாராதவிதமாக அவனை சந்தித்ததையும் மறைக்கவில்லை. ராமுக்குத் தெரியாத ரகசியம் அவளிடம் ஏதுமில்லை.

“எந்த ஜிஷ்ணு… ஓ… உன் அடலசன்ட் க்ரஷா? அவன் எங்க இந்தப் பக்கம்?”

“பிஸினெஸ் ட்ரிப்பாம்”

“ஹ்ம்ம்… அப்பன் சொத்தை அழிக்கண்ணே சில பிள்ளைகள் பொறந்திருக்காங்க… அப்பறம்… அவன எங்க பார்த்த?” மறைக்க முயன்றாலும் ராமின் குரலிலேயே லேசான அதிருப்தி தெரிந்தது.

சுருக்கமாய் நடந்ததைச் சொன்னாள்.

“ஜிஷ்ணு இன்னைக்கு டின்னர்க்குக் கூப்பிட்டிருக்கான். பி.எம்.டபிள்யூ மியூசியம் பார்க்க அவங்க கூட ஜாய்ன் பண்ணனுமாம்”

மறுமுனையில் பதிலில்லை. அவசரமாய் சொன்னாள் சரயு.

“அவங்க பேமிலியோடதான் எல்லா ப்ரோகிராமும்… நான் யோசிச்சு சொல்றேன்னு சொல்லிருக்கேன்”

ராமின் பதிலை எதிர்பார்ப்பதில் சரயுவிடம் ஆர்வம் தெரிந்தது. பெருமூச்சு விட்டவன், “நானே ஸ்பூன் பீட் பண்ணனும்னு நினைக்காதே. உன் மனசுக்கு சரின்னு படுறதை செய்”

அம்மாட்ட அம்மாட்ட என்று நச்சரித்த சிண்டுவிடம் செல்லைத் தந்துவிட்டு நழுவிக்கொண்டான்.

“இன்னைக்குத் தங்கம் என்ன செஞ்சது?”

“ம்மா… பெய்ய கதல் பாத்தேன், அதுல நெய்யா ப்ளு தண்ணி, பெய்ய பூயி மம்மு சாப்பித்தேன்”

“அப்பறம் கடல்ல ஸ்விம் பண்ணிங்களா?”

“ல்ல. பெய்யம்மா… பெய்யம்மா… பெய்யம்மா… நோ சொல்லீத்தா…ங்க”

“பெரியம்மா நோ சொல்லிட்டாங்களா… அவங்கள அடிச்சிடலாம்… யாரு என் தங்கப்பய்யனுக்கு நோ சொன்னது? பார்வதி பெரியம்மாவா”

“ம்ஹும்”

“கண்டிப்பா லக்ஷ்மி பெரியம்மாவாத்தான் இருக்கும். அவங்கள அடிச்சுடலாம்”

“நோ சச்சு பெய்யம்மா. அவங்கள அச்சுதலாம்”

சரயுவின் கைகள் செல்லை இருக்கின. “அடிச்சுடலாம். அவங்கள மட்டுமில்ல… ”

போனை சரசுவிடம் தந்துவிட்டு ஓடிவிட்டான் சிண்டு.

“ஹலோ… சரயு… சரயு… அக்காவ மன்னிச்சுடுடி… நடந்ததை மனசில வச்சுக்காதே…”

எதிர்முனை உயிரிழந்திருந்தது. எங்கே… ஹலோ என்ற சரசுவின் குரலைக் கேட்டதும் கட் செய்து விட்டிருந்தாள் சரயு.

ரெஸ்ட்ரூம் சென்று ஆசுவாசப் படுத்திக் கொண்டு வந்தாள். அந்தப் பத்து நிமிடங்களில் ராமிடமிருந்து பத்து மிஸ்டு கால்கள் வந்திருந்தது.

கோவமாய் அவனை அழைத்தவள், “சொல்லு” என்றாள் ஒரே வார்த்தையில்.

“கோவமா இருக்கியா சரயு?”

“இல்லையே… நீ செஞ்ச வேலைக்கு… குளு குளுன்னு இருக்கேன்”

“அப்ப கண்டிப்பாக் கோவம்தான்”

“என் கோவம் உன்னை என்ன செய்யும்?”

“உனக்குத் தெரியாதா… இந்த உலகத்திலேயே எனக்கு முக்கியமானது நீயும் சிண்டுவும்தான். உங்களை கஷ்டப்படுத்துறமாதிரி நான் எதையும் செய்ய நினைக்கல. உங்கக்கா சரசு பாவண்டி… அவ வீட்டுக்காரர் கடைக்கு முன்னே ஏதோ கோஷ்டித் தகராறு நடந்திருக்கு. அவங்க விட்டெறிஞ்ச ஆசிட் அவன் முகத்தில பட்டுக் கண்ணு தெரியாம போயிடுச்சு. நான் எனக்குத் தெரிஞ்ச டாக்டர்கிட்ட போகச் சொல்லியிருக்கேன். உன் கிட்ட அவங்க நடந்துட்ட முறைதான் கடவுள் தண்டிச்சுட்டாங்கன்னு அக்கா அழறாங்க…”

“நம்ம குடும்பத்தைத் தவிர வேற யாரைப் பத்தியும் நான் பேச விரும்பல. அது உன் சொந்தக்காரனோட பொண்டாட்டியா இருந்தாலும் எனக்குக் கவலையில்ல”

சரசு, அவள் அக்கா இல்லையாம்… ராமின் சொந்தக்காரனின் மனைவியாம். சத்தமில்லாமல் சிரித்தவன், “சரி, உன்கிட்ட நைட் பேசுறேன்”

“நைட் ஜிஷ்ணுவோட டின்னர் போறேன்”

“ஓகே, நாளைக்குப் பேசுறேன்”

“நாளைக்கு லீவ் போட்டுட்டு அவங்க கூட ஊர் சுத்திப் பார்க்கப் போறேன்”

“சோ என்மேல இருக்குற கோவத்துல போறதா முடிவு பண்ணிட்ட. வீக் எண்டாவது எனக்கு அப்பாய்ன்ட்மென்ட் கிடைக்குமா?”

“தெரியல”

“ஏன் சரயு இப்படி பண்ணுற?”

“உனக்கு என் மேல அக்கறையேயில்லை… இருந்திருந்தா அந்த சரசுகிட்ட…” குரல் அடைத்தது. கட்டுப் படுத்தியவள்,

“வேலையிருக்கு அப்பறம் பேசுறேன்” சொல்லி வைத்தாள்.

மறுமுனையில் ராம் பெருமூச்சு விட்டான். ‘சரயுவுக்கு என் மேல இருக்குற சின்னக் கோவத்தை அந்த ஜகத்தால ஜித்தன் பயன்படுத்திக்காம இருக்கணும்’

தாயிடம் சொன்னான், “அம்மா நம்ம கொஞ்சம் சீக்கிரம் ஊருக்குக் கிளம்பலாமா?”

ஜிஷ்ணு தங்கியிருந்த விடுதியை வெளியே பார்த்து அசந்துவிட்டாள் சரயு. முதல் முறை அவசரத்தில் சரியாக கவனிக்கவில்லை. இப்போதோ புதுப் பொலிவுடன் திகழ்ந்த அந்த வரவேற்பறையும், அலங்காரமும், சுவரில் மாட்டியிருந்த கலைப்படங்களும் கண்ணைப் பறித்தது. வியாபார விஷயமாக வரும் இந்தியர்கள் அந்த விடுதியில் தங்க ஆரம்பித்து விட்டார்கள் போலிருக்கிறது. வரவேற்பரையில் ஜிஷ்ணுவின் அறையை விசாரித்துச் சென்றாள். சற்று உள்ளடங்கி, தோட்டத்துக்கு மத்தியில் ஒரு சின்ன டவுன் ஹவுஸ் போலிருந்தது. உள்ளே நுழைந்தவளை ப்ரித்யோக நறுமணம் வரவேற்றது. அவசர மீட்டிங் ஒன்றில் கலந்துக் கொள்ள வேண்டியிருந்ததால் அவளால் இரவு உணவுக்கு ஜிஷ்ணுவின் குடும்பத்துடன் கலந்து கொள்ள முடியவில்லை. சந்தனாவுக்கு அதில் மிகவும் வருத்தம் என ஜிஷ்ணு மெசேஜ் அனுப்பியிருந்தான். சமாதனப் படுத்தவே இந்த இரவு விஜயம்.

ஆப்பிள் ஸ்டுருடல், பெரிய திரமிஸு கேக் என்று கடையே வாங்கி வந்திருந்தாள் சரயு.

“போங்க ஆன்ட்டி உங்க கூட டூ… நீங்க வருவிங்கன்னு எவ்வளவு ஆசையா இருந்தேன் தெரியுமா. நாளைக்காவது மறக்காம வாங்க ஆன்ட்டி… ப்ளீஸ்” அவள் கெஞ்சுவது அவள் தந்தை கெஞ்சுவது போலவே இருந்தது. அவளே சமாதானம் செய்து கொள்ளட்டும் என்பதைப் போல வேடிக்கை பார்த்தான் ஜிஷ்ணு.

அவர்களுடன் பேசியபடியே தானும் கேக்கை சாப்பிட்டுவிட்டு, சந்தனாவிடம் நாளைக் கண்டிப்பாக வருவதாய் சத்தியம் செய்தாள்.

“சரயு சத்தியம் செஞ்சா கண்டிப்பா வருவா சந்து. நீ எதுக்கும் சத்தியத்தை வானத்துக்கு ஊதி விட்டுடு. அப்பத்தான் சத்தியத்தை மீறினா அய்யனார் சாமி கருப்பை விட்டுக் கண்ணைக் குத்துவார்” என்று கிண்டல் செய்து சரயுவிடம் தலையணையால் ரெண்டு அடி வாங்கினான்.

கிளம்பும்போது அவளுடன் கார் வரை வந்தவன்,

“இப்ப சொல்லு சரவெடி. உன்னோட சந்தோஷத்துக்கு என்ன காரணம்?” என்று கேட்க,

“ஜிஷ்ணு நீ எப்படி கண்டுபிடிச்ச?”

“களைப்பையும் மீறி உன் கண்களில் தெரிஞ்ச நிம்மதி, சந்தோஷம். எனக்குப் பிடிச்ச கேக் வெரைட்டி வேற. இது போதாதா…”

காரில் அமர்ந்தபடியே சொன்னாள். “புது டிசைன்ல பிரச்சனைன்னு சொன்னாங்க. இல்லைன்னு நிரூபிச்சுட்டோம். இன்னைக்கு மீட்டிங் நல்லபடியா முடிஞ்சது அந்த சந்தோஷம்தான். வேற ஒண்ணுமில்லையே…”

நம்பாத பார்வை பார்த்தான்.

“சிண்டுகிட்ட பேசினேன். ராம் அடுத்த வாரம் வந்துடுவேன்னு சொன்னார். ஒரு வேளை அந்த சந்தோஷமா இருக்கும்”

“சரி நம்புறேன்”

காரை ஸ்டார்ட் செய்தாள். “சரசு இன்னைக்குப் பேச முயற்சி பண்ணா. நான் பேசல. அவளோட கணவனுக்கு ஏதோ தகராறுல கண்ணு போச்சாம். அதனால ரொம்பக் கவலையா இருக்காளாம்…”

ஜிஷ்ணுவின் கண்கள் சரயுவின் கண்களை ஊடுருவின. சரயுவும் சளைக்காமல் பதில் பார்வைப் பார்த்தாள். வார்த்தைகள் மௌனமான அந்த நேரத்தில் இரு ஜோடி கண்கள் மட்டும் ஏதோ விளங்கா மொழியில் கதைத்தன.

“சரவெடி, எனக்கு உன் கூட ஸ்வீட் சாப்பிடணும் போலிருக்கு. தெரு முனையில இருக்குற ஷாப்ல ஒரு காரட் கேக் வித் காபி மோக்கா வாங்கித் தறியா?”

கதவினைத் திறந்த சரயு மகிழ்ச்சியுடன் சொன்னாள், “ஸுயுர்… உள்ள உட்கார்”

இருவரும் சந்தோஷமும் மகிழ்ச்சியுமாய் உண்டுவிட்டு அன்றிரவு நிம்மதியாய் அவரவர் இருப்பிடத்தில் உறங்கினர்.

ங்கிலத்தில் சொன்னால் ‘பவேரியன் மோட்டார் வொர்க்ஸ்’. ஆனால் பி.எம்.டபிள்யூ என்றால் படிக்காதவனும் புரிந்துக் கொள்வான். சாலட் பௌல் என்று சொல்லப்படும் கிண்ணத்தின் வடிவமுள்ள மோட்டார் கம்பெனியின் மியூசியத்திற்குள் நுழைந்தனர் ஜிஷ்ணு, சரயு, சந்தனா மற்றும் வரலக்ஷ்மி.

“சந்து இந்தக் கட்டிடம் எந்த வடிவத்தில் இருக்குதுன்னு சொல்லு பார்ப்போம்” பி.எம்.டபிள்யூ தலைமையகத்தைக் காட்டி சந்தனாவிடம் கேட்டான் ஜிஷ்ணு.

தெரியவில்லை என்று தலையாட்டினாள் சந்தனா. “இந்த திசைல பாரு… கார் எஞ்சின் வடிவத்தில இருக்கும்” என்று விளக்கினாள் சரயு.

அங்கு தெரிந்த கார், மோட்டார் சைக்கிள்களைக் கண்டு சரயுவின் கண்கள் பிரகாசமாயின. அதென்ன இதென்ன என்று விடாமல் தொணத்திய சந்தனாவை சரயுவின் கைகளில் பிடித்துக் கொடுத்துவிட்டு,

“சந்து, சரயுவுக்குத்தான் இந்த விஷயங்கள் எல்லாம் நல்லாத் தெரியும். அவகிட்டயே கேட்டுக்கோ” என்றபடி தனது ஜீன்ஸ் பாக்கெட்டில் கை வைத்துக் கொண்டு இருவரையும் வேடிக்கை பார்த்தான்.

ஜிஷ்ணுவின் கருப்பு ஜீனும், அதற்குப் பொருத்தமான ராயல் ப்ளூ டீ ஷர்ட்டும் அவன் பத்து வயது குழந்தைக்குத் தகப்பன் என்று சத்தியம் செய்தாலும் நம்ப முடியாமல் செய்தன.

சரயு நேவி ப்ளூவில் நெருக்கமான வெள்ளைப் பூக்களும் கொடிகளும் பிணைக்கப்பட்ட பிராக்கில் கண்ணைப் பறித்தாள். ஒரு டெனிம் ஓவர்கோட்டும், நடப்பதற்கு இலகுவான காலணியும் அணிந்திருந்தாள். துளி கூட மேக்அப் போடவில்லை. இருந்தும் ஜிஷ்ணுவின் கண்களுக்கு அங்கிருந்த பெண்கள் எல்லாரையும் விட அவள்தான் அழகியாகத் தெரிந்தாள்.

“பூஞ்சோலையே பெண்ணானதோ

சிறு பொன் வண்டுகள் கண்ணானதோ” என்று முணுமுணுத்துக் கொண்டான்.

சந்தனாவுடன் குதித்து விளையாடியபடி எல்லாவற்றையும் விளக்கியவளை ரசித்துக் கொண்டிருந்தான். வரலக்ஷ்மி அந்த உரையாடல் புரிபடாமல் விழிக்க, சற்று யோசித்த சரயு அவருக்குப் புரியுமாறு விளக்கினாள்.

“முதல் உலகப்போர் நடந்தப்ப பி.எம்.டபிள்யூ விமான என்ஜின் தயாரிச்சாங்க ஆன்ட்டி. போர் முடிஞ்சவுடன் மோட்டார் சைக்கிள் தயாரிக்க ஆரம்பிச்சாங்க. நீலம் வெள்ளை கட்டம் போட்ட இவங்க லோகோ பவேரியன் கொடியை பேஸ் பண்ணது.

இவ்வளவு பேமஸா இருக்குற இவங்க ஒரு சமயத்துல நிதி நெருக்கடி காரணமா கம்பெனியை மூடிடலாமான்னு நெனச்சாங்களாம். அப்பறம் கார் உற்பத்திக்கு எதிர்காலத்தில் பிரகாசமான வாய்ப்பிருக்குன்னு கணிச்சு அதில் இறங்கினாங்களாம். இப்ப பாருங்க உலகமே பி.எம்.டபிள்யூ பெயர் சொல்லுது”

அங்கிருந்த மோட்டார் சைக்கிள்கள், கார்கள், எஞ்சின்கள் அனைத்தையும் பார்த்தார்கள். சிறு வயதினர் பங்கு கொள்ளும் ‘கார் மேக்கிங்’ பயிற்சியில் சந்தனாவைக் கலந்து கொள்ளச் செய்தாள். மூன்றரை மணி நேரம் நடக்கும் அந்தப் பயிற்சிக்கு சந்தனாவை அனுப்பிவிட்டு, அவர்கள் அருகிலிருந்த இடங்களைச் சுற்றிப் பார்த்தார்கள். பின்னர் கேஃபிடேரியாவில் ஆளுக்கு ஒரு சீஸ் சாண்ட்விச்சும், காபியும் வாங்கிக் கொண்டனர்.

“ஜிஷ்ணு… சந்துவுக்கு ஆவக்கா ஊறுகாய்லதான் ஆர்வமிருக்கும்னு நெனச்சேன்… சந்து, அம்மா டாக்டர்ன்னு சொன்னா… மெடிசின்லயும் ஆர்வமிருக்குற மாதிரி தெரியல. ஆனா இவளுக்கென்ன கார்ல இவ்வளவு ஆர்வமிருக்கு” ஆச்சரியத்துடன் கேட்டாள்.

கையிலிருந்த காபியைப் பருகியவாறு சொன்னான் ஜிஷ்ணு. “சந்து, ஜமுனா வயத்தில் இருந்தப்ப, உன்னை மாதிரியே ஒரு பொண்ணு பொறந்தா நல்லாயிருக்கும்னு நெனச்சேன் சரயு. ஒருவேளை அதுனாலதான் உன்னைப் போல இருக்காளோ என்னவோ. நீதான் இந்தத் துறைல அவளுக்கு கைட் பண்ணனும்”

‘இவன் என்ன சொல்றான்? இவனுக்கும் இவன் மனைவிக்கும் பிறக்கும் பெண் இவர்களைப் போல இருக்கணும்னு நினைக்காம ஏன் என்னைப் போல இருக்கணும்னு நினைச்சான்?’ என்று அதிர்ந்து போய் சரயு பார்க்க, தன் காதில் விழுந்தது சரிதானா என்றெண்ணிக் காதைக் குடைந்துக் கொண்டார் வரலக்ஷ்மி.

பெண்கள் இருவரும் தன்னை அதிர்ச்சியுடன் பார்ப்பதை உணர்ந்தவன், “சரயு… டூர்ல கார் டிசைன் பத்தி சொன்னாங்களே அதை இம்ப்ளிமென்ட் பண்ண எவ்வளவு நாளாகும்” என்று கேட்டான்.

“மூணு வருஷம்” என்றாள்.

“ஒரு கார் உற்பத்தி செய்ய ஏன் அவ்வளவு நாளாகுது” புரியாமல் கேட்டார் வரலக்ஷ்மி.

“பின்னிக்கு கொஞ்சம் விளக்கமா சொல்லிடு. இல்லைன்னா ஆயிரத்தெட்டு சந்தேகம் கேட்பாங்க” என்றான்.

“நான் பீஸ் இல்லாம தொழிலைப் பத்தின விவரங்களை வெளிய சொல்ல மாட்டேன்பா” என்றவள் தனது விளக்கத்தை ஆரம்பித்தாள்.

“ஆன்ட்டி, என்ஜின் வடிவத்தை எஞ்சினியரிங் டீம் பார்த்துப்பாங்க. அவங்களைப் பொறுத்தவரை கார் எவ்வளவு ஸ்பீட்ல போனாலும் அதோட செயல்திறன் கொஞ்சம் கூட குறையக்கூடாது, இதுதான் தாரக மந்திரம். ஒவ்வொரு முறையும் முதல் முறைகள் ஏற்பட்ட குறைகளை நிவர்த்தி செய்து, இன்னமும் வேறு என்ன வேறுபாடு காமிக்கலாம்னு யோசிச்சுத் தான் ஆரம்பிப்போம்.

உங்களோட சுவாரசியத்துக்காக கார் வெளிப்புற டிசைன் பத்தி மட்டும் சொல்லுறேன். முதல்ல காரோட டிஸைன பென்சில்ல வரைவோம். ஆனா வரையும்போதே அளவுகளை குறிப்பிட்டுத் துல்லியமா வரையணும். ஓகேயான டிசைனை அப்படியே, சின்ன அளவுல களிமண்ல உருவாக்குவோம். இதுக்குப் பேர் ‘க்ளே மாடல்’. வெளிப்புறத் தோற்றம் எப்படி இருக்கும்ன்னு எங்களுக்கு ஐடியா வரணுமில்ல அதுக்காகத்தான் அந்த சிறிய மாடல். களிமண் மாடல் செய்யுறவங்க அழகான சிற்பம் போல ஒவ்வொரு இன்ச்சா செதுக்கிக் கொண்டுவருவாங்க.

சக்கரங்கள், ஜன்னல் முதற்கொண்டு தத்ரூபமா இருக்கணும். அப்பறம் திருத்தங்கள் செய்து மெருகேற்றினவுடன் மறுபடியும் க்ளே மாடலை முதலிலிருந்து ஆரம்பிச்சு, புதுசா வடிவமைக்கப் போற நிஜ காரின் அளவிலேயே செய்வோம். இங்கதான் ஒரு டிசைனரோட கற்பனை நிஜமாகுது.

அப்பறம் காரோட உள்கட்டமைப்பு, சீட்டின் வடிவம், மெட்டீரியல், நிறம், வெளியில் அடிக்க வேண்டிய பெயிண்ட் அதுக்கு எத்தனை கோட்டிங் தரணும் இதையெல்லாம் தேர்ந்தெடுக்கத் தனி டீம் இருக்கு. ஒரு சராசரி கார்ல பதினாலாயிரம் பார்ட்ஸ் இருக்கு. எல்லாத்தையும் துல்லியமா வடிவமைச்ச பிறகுதான் பேக்டரில அச்செம்ப்ளி லைன் போட்டு உற்பத்தி செய்ய ஆரம்பிப்போம்.

கடைசியா தூசியில்லாத ஒரு இடத்தில் நிறுத்தி, காரில் படிஞ்சிருக்கும் காந்தத் துகள்களை வாக்வம் கிளினர் மாதிரி ஒரு கருவி மூலமா உறுஞ்சி எடுத்துட்டு பெயிண்ட் அடிப்போம், ஒரு நாள் காயவிட்டுட்டு மறுபடியும் பெயிண்ட் அடிப்போம். இப்படி கிட்டத்தட்ட ஏழு முறை கூட பெயிண்ட் அடிப்போம்.

அப்பறம் டெஸ்ட் ரன் பத்தி சொல்ல மறந்துட்டேனே. இப்பயும் சென்னைல நிறைய ஹைவேல காரோட டிசைனை மறைச்சு பேப்பரை ஒட்டி சோதனை ஓட்டம் செய்யுறதை பார்த்திருப்பிங்க. இப்படி எல்லாம் முடிச்சு நாங்க வடிவமைச்ச கார் ஷோரூம்ல நிக்க மூணு வருஷமாகும். நீங்க ஒரே வினாடி டீவி ஆட்ல பார்த்துட்டு கொஞ்சம் சுமாராத்தான் இருக்குன்னு சொல்லிடுவிங்க” சிரித்தாள் சரயு.

“சரவெடி… என்ன விளக்கம்… என்ன விளக்கம். உனக்கு பீஸ் தர ஏடிஎம் வரை போயிட்டு வரேன்” என்று ஜிஷ்ணு கிளம்பினான்.

அவள் சொன்ன விவரங்களை ஆச்சர்யத்துடன் கேட்டிருந்தார் வரலக்ஷ்மி. “அம்மோய்… கார் ஒண்ணு ரோட்டில ஓடுறதுக்குள்ள இவ்வளவு வேலை செய்யணுமா? இவ்வளவு அழகா சொல்லுறியே… ஜிஷ்ணு கூட உனக்கு கார்கள் மேல ஆர்வம் அதிகம்னு சொன்னான். உனக்கு ஆட்டோமொபைல் ரொம்ப இஷ்டமா சரயு?”

“ஆமாம் ஆன்ட்டி… எங்கப்பா மெக்கானிக். அதனால சின்னதுலேருந்தே பைக்கும் காரும் எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஆனா ஆட்டோமொபைல் துறைல வேலை பார்க்கணும்னுன்ற என்னோட கனவை நிறைவேத்தினது ஜிஷ்ணுதான்.

ஒரு சமயத்தில் நான் அனாதையா நின்னேன். அம்மா அப்பா இறந்துட்டாங்க, மூணு அக்காங்க இருந்தும் யாருமே இல்லாத நிலை. அப்ப எனக்கு விஷ்ணுவைத் தவிர யாருமே நினைவுக்கு வரல. என் குரல் கேட்டதும் ஓடி வந்து என்னை அரவணைச்சுட்டான். எங்கேயோ சின்ன வேலை பார்த்துட்டிருந்த என்னை, வேலையை விட்டு நிறுத்தி, ஆட்டோமொபைல் எஞ்சினீயரிங் சேர்த்து விட்டான். என் வாழ்க்கையே மாத்திட்டான். இந்தப் படிப்பு அவன் எனக்குப் போட்ட பிச்சை…” நெகிழ்ச்சியான குரலில் எங்கோ பார்த்தபடி சரயு சொல்ல, கேட்டுக் கொண்டிருந்த வரலக்ஷ்மி ஜிஷ்ணு மேல் சரயுவின் அபிமானத்தை, வயதைப் பொருட்படுத்தாத தோழமையை, நெருக்கமாக உணரும்போது அவன் இவன் என்று உரிமையுடன் அழைக்கும் அவர்கள் நட்பின் ஆழத்தை, உணர்ந்தார். அவர்கள் அமர்ந்திருந்த இருக்கையை நெருங்கிய ஜிஷ்ணுவின் காதில் சரயு சொன்னது விழ, அவன் கண்களில் நீர் துளிர்த்தது.

1 thought on “தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 14”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

சிநேகிதனேசிநேகிதனே

வணக்கம் தோழமைகளே, இந்த முறை எழுத்தாளர் உதயசகி அழகான  குறுநாவல் ஒன்றைத் தந்துள்ளார். மனதினுள் உருகி உருகி சரணைக் காதலிக்கும் மித்ரா அவன் தனது காதலைச் சொன்னபோது ஏன் மறுக்கிறாள்? நான்கு வருடங்களுக்குப் பின் தாய்நாடு திரும்பியவளுக்கு சரணின் கோபம் மட்டும்

கல்கியின் பார்த்திபன் கனவு – 50கல்கியின் பார்த்திபன் கனவு – 50

அத்தியாயம் 50 கபால பைரவர் அருள்மொழித்தேவி “குழந்தாய்! விக்கிரமா! இதோ வந்துவிட்டேன்!” என்று அலறிக் கொண்டு அலை கடலிலே பாய்ந்தாள் என்ற விவரத்தைக் கேட்டபோது விக்கிரமனுடைய கண்களில் நீர் ததும்பி வழிய ஆரம்பித்து விட்டது. அச்சமயம் கடல்களுக்கப்பால் எங்கேயோ தான் இருக்கும்

மீனாக்ஷி பஞ்சரத்தினம்மீனாக்ஷி பஞ்சரத்தினம்

    ஸ்ரீ மீனாக்ஷி பஞ்சரத்னம் : உதயத்பானு ஸஹஸ்ரகோடி ஸத்ருசாம் கேயூர ஹாரோஜ்வலாம் பிம்போஷ்டீம் ஸ்மிததந்த பங்திருசிராம் பீதாம்பரா லங்க்ருதாம் விஷ்ணு ப்ரஹ்ம ஸுரேந்த்ர ஸேவிதபதாம் தத்வ ஸ்வரூபாம் சிவாம் மீனாக்ஷீம் ப்ரணதோஷ்மி ஸந்ததமஹம் காருண்ய வாராம் நிதிம் முக்தாஹார