Tamil Madhura தமிழ் மதுராவின் சித்ராங்கதா,Ongoing Stories,Tamil Madhura தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 2

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 2

அத்தியாயம் – 2

ன்று வேலை நெட்டி முறித்தது. சரயு ஜெர்மனியில் இருக்கும் மியூனிக்கின் ஆட்டோமொபைல் நிறுவனம் ஒன்றில் டிசைனிங் பிரிவில் பணியாற்றினாள். அவர்கள் அணி வடிவமைத்த பகுதியைப் பற்றிய இறுதி அறிக்கையை இந்த மாத இறுதிக்குள் ஒப்புவிக்க வேண்டும், அதனால் அனைவரும் இரவு பகலாக வேலை செய்து வந்தனர். ராமுடன் இந்தியா செல்லாமல் ஊரிலே அவள் தங்கியதற்கு அதுவும் ஒரு காரணம். வேலை தொண்ணூறு சதவிகிதம் முடிவடைந்து விட்டது. அந்த திருப்தியுடன் கிளம்பினாள். நேரமாகிவிட்டது வெளியில் உணவை முடித்துக் கொள்ள வேண்டியதுதான். வீட்டில் சமைக்கத் தெம்பில்லை.

காரை சர்விசுக்கு விட்டிருக்கிறேன் என்று சொன்ன மால்கமை சிட்டி சென்டரில் டிராப் செய்தாள்.

“ராம் ஊருக்குப் போனதிலேருந்து உன் முகம் டல்லா இருக்கே” என்று கிண்டலடித்தவனிடம்,

“இன்னைக்கு நைட் கழட்டி சார்ஜர்ல போட்டுடுறேன். நாளைக்கு பழையபடி பளிச்சுன்னு ஆயிடும்” என்று வாயடித்துவிட்டுக் கிளம்பினாள்.

இயற்கை அழகை மறைத்து எழுந்த வானுயர்ந்த கட்டிடங்கள், மின் விளக்கின் வெளிச்சம் இரவைப் பகலாக்கி ஒளிர்ந்தன. பேரின்பத்தைப் பார்க்கத் துடிக்கும் இளவட்டங்கள் மியூனிக்கின் தெருக்களை நிறைத்திருந்தனர்.

ஜெர்மனியின் செந்தேன் மலரே

தமிழ் மகனின் பொன்னே சிலையே’

விசிலடித்தபடி காரைப் பார்க் செய்துவிட்டு உணவகத்தைத் தேடிப் பார்வையை சுழற்றினாள்.

“என்ன பிரட்டம்மா இது. நம்ம ஊர் பிரட் எவ்வளவு மெத்து மெத்துன்னு இனிப்பா இருக்கும். இதைக் கடிக்கவும் முடியல, மென்னு சாப்பிட்டா வாயே கிழிஞ்சுடும் போலிருக்கே” என செந்தமிழ் தேன் வந்து காதில் பாய, குரல் வந்த திசையில் திரும்பினாள்.

வயதான ஒரு பெண்மணியும், சிறுபெண்ணும் உணவு விடுதியில் அமர்ந்திருந்தனர்.

“நான் என்ன செய்யுறது நாணம்மா. இவங்களுக்கு இங்கிலீஷ் சரியா தெரியல. நான் பேசுற ஒன்னு ரெண்டு ஜெர்மன் வார்த்தைகளும் இவங்களுக்குப் புரியல. ‘நோ சிக்கன்னு’ சொன்னா ‘ஒன்லி பீப் அப்படின்னுறான்’. ‘நோ சிக்கன், நோ நோ பீப், நோ நோ நோ போர்க், போர் நோஸ் டு லாம்ப்’ இப்படியெல்லாம் சொல்லி அபிநயம் பிடிச்சு இதைத்தான் வாங்கிட்டு வர முடிஞ்சது”

“இதை என்னால சாப்பிட முடியாதம்மா. சைவ சாப்பாடு கேட்டா ஆடு மாடு தின்னுற மாதிரி இலை தழை வச்சுருக்கான். நீ பக்கத்துல சாப்பிடுறவ தட்டைப் பாரேன். வாழைப்பழம் மாதிரி ஏதோ இருக்கு. அந்த வெள்ளை கொழுக்கட்டையைக் கேட்டு வாங்கு”

அவர்கள் பேசியது காதில் விழ ‘கடவுளே அது மியூனிக்கின் சிறப்பு உணவான வெள்ளை ஸாசேஜ். சுத்த சைவமான இவர்கள் போர்கை வாங்கி உண்டுவிடப்போகிறார்கள்’ வேகமாய் அவர்களை நெருங்கினாள்.

“வணக்கம் ஆன்ட்டி. என் பெயர் சரயு. நானும் தமிழ்தான். நம்ம ஊர் சாப்பாடு பக்கத்துல இருக்குற கேரளா ரெஸ்டாரண்ட்ல கிடைக்கும். நான் அங்கதான் போறேன். நீங்க வரதுன்னா வாங்க”

“அந்தக் கேரளா கடையைத் தேடித்தான் அலைஞ்சோம். கண்டுபிடிக்க முடியல. மகராசி எங்களையும் கூட்டிட்டுப் போம்மா”

அந்தப்பெண்ணின் பேர் சந்தனா, அவளது நாணம்மா வரலக்ஷ்மி. அப்பாவுடன் ஊர் சுற்றிப்பார்க்க வந்திருக்கிறார்கள் என்று அவர்கள் வாயிலாக அறிந்தாள்.

“ஆண்ட்டி இவங்க பேசுறது ஜெர்மனா?”

ஆமாம் என்று தலையசைத்தாள் சரயு.

“நானும் பேசிக் ஜெர்மன்ல எப்படி ஆர்டர் பண்ணுறதுன்னு அப்பாட்ட எழுதி வாங்கிட்டுத்தான் வந்தேன். அப்பறம் ஏன் நான் சொன்னது இவங்களுக்குப் புரியல” கேள்வி கேட்டாள் சந்தனா.

“நம்ம ஊருல கோவைத்தமிழ், நெல்லைதமிழ், சென்னைத்தமிழ் இப்படி இருக்குற மாதிரி இங்கேயும் பல சலாங்ல பேசுவாங்க. இந்த ஊர்ல பவேரியன் அக்சென்ட்ல பேசுவாங்க”

“உங்களுக்கு நல்லா புரியுமா?”

“எனக்கு ஓரளவு தெரியும். என் பையன் நர்சரி போக ஆரம்பிச்சதும் தான் நிறையா கத்துகிட்டேன்”

“எப்படிம்மா மொழிப் பிரச்சனையை சமாளிச்ச?” வியந்தார் வரலக்ஷ்மி.

“ராம் இங்கதான் மருத்துவம் படிச்சார். அதனால நல்லா பேசுவார். அவர்கிட்ட கத்துகிட்டதுதான். அப்பறம் ஆபீஸ்ல இங்கிலீஷ்”

அவள் வீட்டைப்பற்றி மேலும் கேட்டவர்களுக்கு,

“வீட்டுல நாங்க நாலு பேர். நான் இங்க இருக்குற ஆட்டோமொபைல் கம்பெனில வேலை பார்க்கிறேன். ராம் டாக்டர். ராமோட அம்மா எங்க கூடத்தான் இருக்காங்க. வீட்டுப் பொறுப்பு அத்தை கைலதான். என்னை குழந்தை மாதிரி பார்த்துப்பாங்க. என் பையன் சிண்டுக்கு மூணு வயசாகுது.”

“உன் பையன் உன்னை விட்டுட்டு ஊருல சமர்த்தா இருப்பானா?”

“அவனைக் கைகுழந்தையா ராம் அத்தை கையில் கொடுத்ததுதான். அப்ப இருந்து எங்களைவிட அவங்கதான் நெருக்கம்”

உரையாடியபடியே மீல்சுடன் வந்த அவியலையும், கப்பக்கிழங்கு பொரியலையும் ரசித்து உண்டார் வரலக்ஷ்மி.

“நாக்கு செத்து போயிருந்தேன்மா. அருமையா இருக்கு சாப்பாடு”

“சந்தனா, நீங்க சம்மர் லீவ்ல டூருக்கு வந்திங்களா?” கேட்டாள் சரயு. அந்த சிறுமி சந்தனா கொடைக்கானலில் விடுதியில் ஆறாவது படிக்கிறேன் என்று சொல்லி இருந்தாள். என்னவோ அவளைக் கண்டதும் சரயுவுக்குப் பிடித்து விட்டது. நீண்ட நாள் பழகிய உணர்வு. சந்தனாவின் விழியில் தெரிந்த காந்தம் ஒன்று அவளை இழுத்தது.

“அப்பா பிசினஸ் விஷயமாய் வந்தார். எனக்கு விடுமுறை இருந்ததால் நானும், எனக்குத் துணைக்கு நாணம்மாவும் வந்துட்டோம். இன்னைக்கு அப்பாவுக்கு கொஞ்சம் வேலை அதிகமாயிடுச்சு. அதனால் எங்களை ஹோட்டல் போக சொன்னார்”

வேறு குடும்ப விஷயங்கள் ஒன்றையும் சரயு விசாரிக்கவில்லை. அவளுக்கு எப்போதுமே அடுத்தவர்கள் விஷயத்தை துருவித் துருவிக் கேட்பது பிடிக்காது. அவளைக் கேட்டாலும் மூக்கின் மேல் கோவம் வரும். ஆனால் நம்மவர்கள் சிலர் விடவே மாட்டார்கள்.

குழந்தை வயிற்றில் இருந்தபோது தாயைத் தேடியது சரயுவின் மனம். ராம் கண் இமையாக அவளைக் காத்தான்.

“சரயு நானே உன்னை டிராப் செய்துட்டு பிக்கப் பண்ணிக்கிறேன். குளிர்காலம் தொடங்கியாச்சு. இந்தக் காத்துக்கு செஸ்ட் கோல்ட் வந்துடும். ஹாஸ்பிட்டலுக்கு அந்த மாதிரி பேஷன்ட்தான் இப்ப நிறைய பேர் வந்துட்டிருக்காங்க. உனக்கு நெஞ்சு சளி பிடிச்சா, அண்டிபயாட்டிக் வேற தரமுடியாது. அதனால குழந்தை பிறக்குற வரை நோ கோல்ட் புட். பனில வெளிய போக மாட்டோம். சரியா”

“அப்ப சுவிஸ் கூட்டிட்டு போறேன்னு சொன்னியே. அதெல்லாம் பொய்யா?”

“என்னைப்பத்தி உனக்குத் தெரியும். நான் ப்ராமிஸ் செய்தா செய்ததுதான். பாப்பா பொறக்கட்டும் மூணு பேரும் போயிட்டு வரலாம். ஆனா நீ குரங்கு சேட்டை பண்ணி உடம்புக்குத் தேவையில்லாம இழுத்து விட்டுட்டின்னா எல்லா ட்ரிப்பும் கான்சல் செஞ்சுருவேன்”

ஒரு நாள் புது பாட்டிலோடு வந்து நிற்பான். “மாம்பலத்துல மாசமா இருக்குற பெண்களுக்கு லேகியம் தருவாங்களாம். டாக்டர் சீதா வாங்கிட்டு வந்து கொடுத்தாங்க”

 “என்னோட பிரெண்ட் அம்மா சிலோன்ல சமைக்க உபயோகிக்குற சரக்குத்தூள்ன்னு ஒன்னு தந்தாங்க. இனிமே இதுலதான் சமைக்கப் போறேன்”. கையைக் காலை சுட்டுக் கொண்டு சமைத்துத்தருவான்.

இருந்தாலும் மறந்துபோன அம்மாவின் கைமணத்துக்கும், மெத்தென்ற மடிக்கும் ஏங்கியது சரயுவின் மனது. கோவிலில் பார்த்த தாயின் வயதையொத்த ஒரு பெண்மணியிடம் ஆவலாய் பேசினாள். அவரோ அவளைப் பற்றித் துப்பறியவே முயன்றார்.

“ஐயோ பாவமே அம்மா அப்பா ரெண்டு பேரும் இறந்துட்டாங்களா?” என்று பரிதாபப்பட்டு,

 “உனக்குக் கூடப் பிறந்தவங்க யாருமில்லையா?” அக்கறையாகக் கேட்டு,

“மூணு அக்காங்க இருக்காங்களா? எங்க இருக்காங்க?”

“அவங்க கூட எப்படி வாரா வாரம் பேசுவியா? இல்ல எப்பவாவது பேசுவியா?” என்று மூக்கை நுழைத்து,

“நீ டெலிவரிக்கு இந்தியா போகலையா? வீட்டுலையும் யாரும் உதவிக்கு வரலையே? உங்க வீட்டுல உள்ளவங்க கூட தகறாரா?” அடுத்த கட்டத்துக்குப் போய்.

அதையும் பல்லைக் கடித்துப் பொறுத்துக் கொண்டவளிடம், “ஆமாம் சிண்டுவோட அப்பாக்கும், உனக்கும் லவ் மேரேஜா இல்லை அரேஞ்சுடா?” ஆவலாய் கேட்டு,

சரயுவிடமிருந்து கறந்த விஷயங்களில் தன்னுடைய சொந்த சரக்கையும் சேர்த்து மற்றவர்களிடம், “டாக்டர்க்கு லவ் மேரேஜ் போலிருக்கு. பொண்ணு ஆளு அழகாயிருக்கா அதனால கவுந்திருப்பான். அவ அம்மா அப்பா கூட இந்தக் கல்யாணத்தாலதான் மனசொடிஞ்சு செத்து போய்ட்டாங்களாம். அதனாலதான் அவ வீட்டுக் கூட போக்குவரத்து இல்ல” ரகசியமாய் மற்றொரு பெண்மணியிடம் வம்பு பேசினாள். இதனைக் கேள்விப்பட்ட சரயு ஏண்டா இவர்களுடன் பேசினோம் என்று நொந்து நூடுல்ஸாகி விட்டாள்.

முதல் முறை அவர்கள் வம்பு பேசியதை சொல்லி ராமிடம் அழுதுவிட்டாள் சரயு. சிண்டுவுக்கு டையபரை மாற்ற சரயுவுக்கு உதவியபடி சொன்னான் ராம்,

 “நீ சிண்டு பொறந்ததும் ரொம்ப இளகிட்ட. அதனால உன் மூளை மழுங்கிடுச்சு. ஊர் வாயை மூட உலைமூடி இல்லைன்னு படிச்சிருக்கோமே. இவங்களை சட்டை பண்ணாம போயிட்டு இரு”

“அம்மா உயிரோட இருந்திருந்தா அவங்க வயசுதான் இருக்கும். ஆனா எங்கம்மா இவங்களை மாதிரி வம்பு பேசமாட்டாங்க” மூக்கு நுனி சிவக்க பேசியவளை ஒரு வினாடி நிமிர்த்து பார்த்தான்.

‘இவளுக்கு அம்மாவோட அருகாமை தேவைப்படுது. என்னதான் இவளுக்கு நான் சேவை செஞ்சாலும் ஒரு தாய்க்கு நிகராகுமா?’

அப்போதைக்கு ஏதோ சொல்லி சரயுவின் வாயை அடைத்தாலும், ராம் அதைப் பற்றி தீவிரமாக யோசித்திருக்கிறான் என்று சிலநாட்களில் வந்திறங்கிய ராமின் அம்மாவின் வாயிலாக அறிந்து கொண்டாள்.

ராம் விடுமுறை முடிந்து மருத்துவமனை சென்றவுடன், வீட்டில் சிண்டுவுக்கு எப்படி தலைக்கு ஊத்துவது என்று புரியாமல் விழித்துக் கொண்டிருந்தாள். ராம்தான் எப்போதும் உதவி செய்வான். இன்று முக்கியமான வேலை என்று விடியும்முன்பே கிளம்பிவிட்டான்.

கதவு திறக்கும் சத்தம் கேட்டு திரும்பியவள் அங்கு ராமின் அம்மா பொற்கொடியைக் கண்டு கண்ணிமைக்கவும் மறந்தாள். வேகமாய் வந்து குழந்தையைத் தூக்கியவர், குழந்தையின் வயிற்றை அமுக்கிப் பார்த்தார். வயிறோ குழைந்து உணவு இல்லாமல் காலியாய் இருக்கிறேன் என்று சொல்லியது.

கோவமாய் சரயுவை முறைத்தபடி, “பசிக்குது போலிருக்கே. இப்படியா குழந்தையை அழ வைப்ப?” கடிந்துக் கொண்டார்.

அவர் பேசியது மகிழ்வளிக்க, “தலைக்கு ஊத்திட்டு பசியாத்தலாம்னு பார்த்தேன் அத்தை” பதில் சொன்னாள்.

“கிழிச்ச. முதல்ல குழந்தைக்கு பசியாத்து. நாளைக்குத் தலைக்கு ஊத்துறேன்”

மூக்கு சிவக்க கை காலை உதைத்துக் கொண்டு பசியால் அழுத சின்னவனை அன்போடு பார்த்தார்.

“குட்டிப்பயலே. உன் பாட்டியைப் பாருடா தங்கம். உன்னைப் பாக்காம இத்தனை நாள் வீணாயிடுச்சே. இந்தக் கிழவிக்கு நீ பிறந்த விஷயத்தைக் கூட சொல்லாம விட்டுட்டாங்க” பெரியவர்களைக் குற்றம் சாட்டியவர், சரயுவிடம் கேட்டார்.

“தம்பிப் பயலுக்கு என்ன பேர் வச்சிருக்க?”

“அபிமன்யு. சிண்டுன்னு கூப்பிடுறோம்”

பொற்கொடிக்கு மகாபாரதத்தில் பிடித்த பாத்திரம் அபிமன்யு. அதே குழந்தைக்கும் வைத்திருந்தது அவரது சினத்தை சற்று குறைத்தது. சரயுவின் கையில் தரும் முன்பு சிண்டுவின் தலையில் முத்தமிட்டார்.

 “அபி அப்படியே உன் நிறம், உன் ஜாடை”

சரயு அறையில் குழந்தைக்குப் பசியாற்றித் திரும்பி வரும்போது ராம் பளாரென்று தாய் கையில் அறை வாங்கிக் கொண்டிருந்தான்.

“பேசாதடா… குழந்தை பிறந்த விஷயத்தை முன்னமே ஏன் சொல்லல. நீ செஞ்ச காரியம் பிடிக்கலைன்னு சொல்லக் கூட உன்னப் பெத்தவளுக்கு உரிமையில்லையா? அதுக்காகக் குழந்தை பிறந்ததைக் கூட மறைச்சுடுவிங்களோ?”

சாமியாடிய பொற்கொடியை மலையேற்ற இரண்டு திங்கள் பிடித்தது. அன்றிலிருந்து சிண்டு அவர் வசம்தான். அவரது வளர்ப்பினால்தான் மூன்று வயதிலே சற்று பொறுமையாகவும் தெளிவாகவும் இருக்கிறானோ என்று சரயுவுக்கு சில சமயம் தோன்றும்.

னது நினைவுகளிலிருந்து வெளி வந்தவள், நேரத்தைப் பார்க்க, சிறிய முள் எட்டை விட்டு முன்னேற ஆரம்பித்திருந்தது.

“ஓகே. ரொம்ப லேட் ஆச்சு. நீங்கள் எங்க போகணும்னு சொன்னா உங்களை இறக்கி விட்டுட்டு போறேன்”

“இல்லை ஆன்ட்டி அப்பாவுக்கு போன் செய்துருக்கேன். வந்துட்டே இருக்கார்” சொல்லி முடிப்பதற்குள்,

“ஹாய் டியர் நீங்க இங்கத்தான் இருக்கிங்களா?” என்ற ஆண்மை கலந்த கணீர் குரலில் திடுக்கிட்டு நிமிர்த்து எழுந்தாள். அவளைக் கண்டவனின் முகத்திலும் திகைப்பு.

“வாட் ய ஸ்வீட் சர்ப்ரைஸ். நல்லா இருக்கியா சரயு” கண்களில் ஆச்சரியம் விலகாமல் கேட்டான் சந்தனாவின் தகப்பன்.

அவனை அங்கு எதிர்பாராத அதிர்ச்சியில், “நல்லாருக்கேன் ஜிஷ்ணு” என வாய் முணுமுணுத்தது. சந்தனாவின் முகம் பழக்கமான முகமாக இருந்ததன் காரணம் அறிந்தாள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 9என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 9

அத்தியாயம் – 9  கடற்கரையில் இருந்து வீட்டிற்குத் திரும்பிய அரவிந்தின் மனதில் இன்னமும் அதிகக் குழப்பமே நீடித்தது. யாரும் இல்லாத தீவிற்கு ஸ்ராவநியுடன் சென்று விடலாமா என்ற விரக்தி தோன்றியது. யோசனையுடன் ஆட்டோவில் அமர்ந்திருந்த அரவிந்தை தொந்தரவு செய்யாமல் வந்தார் கதிர்.

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 31தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 31

செல்வம் கிளம்பிப் போன அரைமணியில துவைக்க துணிகளை வேலைக்காரியிடம் எடுத்துப் போட்டாள் சரஸ்வதி. வழக்கமாய் செல்வம் தனது ஆடைகளைத் தானே துவைத்துக் கொள்வான். சட்டையை சலவைக்கு போடுவான். இந்த முறை அவசர சோலியால் துணியை அறையின் மூலையில் போட்டுச் சென்றுவிட்டான். ‘எந்துணியை

என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 5என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 5

மதியம் அனைவரும் உணவு உண்டுக்  கொண்டிருந்தனர். குடும்பத்தினர் திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்கள் அனைவரும் கூடத்தில் இருந்தனர். தலை வாழை இலையில் உணவு பரிமாறி  இருக்க, அரவிந்த், முதல் பெண் சுதாவின் கணவன் நாதன், இரண்டாவது மகள் சங்கீதாவின் கணவன் கதிர், புதிதாக