Tamil Madhura தமிழ் மதுராவின் சித்ராங்கதா,Ongoing Stories,Tamil Madhura,Uncategorized தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 3

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 3

அத்தியாயம் – 3

ப்பா, சரயு ஆன்ட்டிய முன்னாடியே உங்களுக்குத் தெரியுமா?” சந்தனா சந்தோஷத்தில் கூவினாள்.

“சரயு, சிறு வயதிலிருந்தே என் மனதிற்கு நெருக்கமான தோழி. அப்படித்தானே சரயு” என்றான்.

ஆமாம் என ஆமோதித்தாள் சரயு. “நேரமாகிவிட்டதே. வீட்டில கணவர்…?” என இழுக்க.

“வீட்டுல எல்லாரும் இந்தியா போயிருக்காங்க. நீங்க கிளம்புங்க. நான் கடைக்குப் போகணும்”

“இந்தியா கடைன்னா நாங்களும் வரோம்மா. ரைஸ் குக்கரும், பொடி வகைகளும் வாங்கி வச்சுக்குறோம். இவன் வர லேட் ஆனா அதை வச்சு சமாளிச்சுப்போம்”

“சாரி பின்னி (சித்தி) இனிமே சீக்கிரம் வந்துடுறேன். இருந்தாலும் உங்களுக்குப் பிடித்த நொறுக்குத் தீனியாய் வாங்கிட்டு ரூம் போவோம். நானும் கடையைப் பார்த்தாப்புல இருக்கும்” என்றபடி காந்தப் புன்னகை புரிய, சரயு மனதில் நினைத்துக்கொண்டாள்.

‘இவனோட சிரிப்பில இருக்குற கவர்ச்சி கடுகளவும் குறையல’ டாக்ஸியை அழைக்க முயன்றவனைத் தடுத்து தனது காரில் அழைத்துச் சென்றாள்.

கார் பின் சீட்டில் இருந்த சிண்டுவின் கார் சீட்டை கழற்றி அவர்கள் அமர்வதற்கு இடம் பண்ணிக் கொடுத்தாள்.

“வாவ் பிஎம்டபிள்யூவா? நீ கோல்டன் கலர் பென்ஸ் வச்சிருப்பேன்னு நெனச்சேன்”

வரலக்ஷ்மியையும் சந்தனாவையும் பின் இருக்கையில் அமர வைத்து விட்டு சுவாதீனமாக முன் இருக்கையில் அவளருகில் அமர்ந்தான்.

ஸ்ரீவைகுண்டத்தில் அவன் காரை ஓட்ட, அவள் ஓட்டை வாயாய் சலசலத்துக் கொண்டே வந்தது இருவருக்கும் நினைவுக்கு வந்தது.

“விஷ்ணு உன் வண்டில பிரேக் எப்படி போடுவ?”

“கியர் எப்படி மாத்துவ?”

“ரெண்டு பிரேக் இருக்கே? இந்த ஹான்ட் பிரேக் எப்ப போடணும்?” போன்ற அதி முக்கியமான கேள்விகளை சரயு கேட்க அவனும் கொஞ்சமும் சலிக்காமல் பதில் சொல்வான்.

மலர்ந்த நினைவுகளில் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்துக் கொண்டனர்.

“நான் நினைச்சதே தானே நீயும் நினைச்ச?”

“ஆமாம் ஜிஷ்ணு” தலையசைத்தாள்.

அவர்களுக்குத் தேவையானவற்றை வாங்கித் தந்து அவர்கள் விடுதிக்குக் காரைச் செலுத்தினாள். அவன் சரயுவை முதன் முதலில் அவள் ஆறாவது படிக்கும் போதுதான் பார்த்தான். ஸ்ரீவைகுண்டத்தில் அவன் உடன் படித்த நண்பன் வெங்கடேஷின் வீட்டிற்கு விடுமுறைக்கு சென்ற போது அறிமுகமானாள். சரயு லாவகமாய் கார் ஓட்டும் அழகினை ரசித்தவன் அவளை எடை போட்டான்.

சரயு இயல்பாகவே சந்தன நிறம். நீளமாய் அளந்து கோடு போட்டதைப் போல் மூக்கு, ஏழுலகங்கள் காட்டும் கண்கள், அடையார் ஆனந்தபவன் பன்னீர் குலாப்ஜாமூன் போன்ற இதழ்கள். முன்பு நீள் வட்டமாக இருந்த முகம் இப்போது சற்று வட்டமாக மாறியிருந்தது. பால் வண்ணக் கன்னங்கள் இரண்டும் குளிரால் ரூஜ் தடவியது போல் சிவந்திருந்தது. முன்பு பொய்யோ எனும் இடையாளாக இருப்பாள். இப்போது சற்று சதை போட்டு தகதகத்தாள். சும்மாவே அழகி, இப்போது பேரழகி.

சரயுவும் அவனை ஆராய்ந்தாள். ஆகாய நீல நிற சட்டை, கருநீல கால்சராய், சிவப்பில் சிறிய புள்ளிகள் போட்ட டையை தளர்த்தியவன் கைகளில் அலட்சியமாய் கோட்டை ஏந்தி இருந்தான். அவன் ஆறடி உருவம் காரினை நிறைத்திருந்தது. தவறாமல் உடற்பயிற்சி செய்கிறான் போலிருக்கிறது. அதனால்தான் துளியும் தொப்பை விழவில்லை. மாநிறத்திலும் திருத்தமான வசீகரிக்கும் முகம். காடாய் அடர்ந்த சிகை. முகத்திற்குப் பொருத்தமாய் வெட்டப்பட்ட மீசை. சிறு வயதிலிருந்து பார்த்து வருகிறாள், இன்னமும் அழகும் கம்பீரமும் கூடுகிறதே தவிர குறையவில்லை. அதனால்தான் இவனிடம் விளக்கைத் தேடும் விட்டில் பூச்சியாய் பெண்கள் வந்து விழுகின்றனர்.

“என்ன சந்தேகம் தீர்ந்ததா? நான் அதே ஜிஷ்ணுதான் அம்மாயி. நம்ப முடியலேன்னா கைல ஒரு கிள்ளு வேணும்னா கிள்ளவா” புன்னகையுடன் சொன்னான்.

“திடுதிப்னு ஒரு நாள், அதுவும் தேவதை மாதிரி மகளோட வந்தா, இது கனவா நிஜமான்னு நம்பவே முடியல. ஆமாம் ஆந்திரத் தொழிலதிபருக்கு இங்கே என்ன வேலை?” கிண்டலாய் கேட்டாள்.

சத்தமாகச் சிரித்தவன், “ஆந்திரத் தொழிலதிபர். பட்டம் நல்லாத்தான் இருக்கு. நான் உன்னை மாதிரி ஹைடெக் இல்லம்மா. சாதாரண ஆவக்காய் ஊறுகாய் வியாபாரி. ஐரோப்பா சந்தைல என் ஜெயெஸ் ஊறுகாயை விற்க வந்தேன்”

“ஜெயெஸ் உங்களோட கம்பெனியா? அத்தைக்கு ரொம்ப பிடிச்ச பிராண்ட். காலைல கூட உங்க ஊறுகாயை வச்சுத்தான் உப்புமா சாப்பிட்டேன்”

வரலக்ஷ்மி முந்திக் கொண்டு சொன்னார். “எங்கக்கா ரெசிபிமா அந்த ஊறுகாய். இவன் ராயல்டி எதுவும் தராமல், ஜெயசுதான்னு அவ பெயரை மட்டும் கம்பனிக்கு வச்சுட்டு அவள் தலையில் ஐஸ் வெள்ளிங்கிரி மலையை வைத்து ஏமாத்திட்டான்” குறை பட்டுக் கொண்டாள்.

“ஆன்ட்டி நீங்கதானே அடையாறுல இருக்கிங்க. ஜிஷ்ணுவுக்கு அம்மாவை விட நீங்கதான் ரொம்ப க்ளோஸ்ன்னு சொல்லிருக்கார்”

“ஆமாம்மா எனக்குப் பிறந்தது மூணும் பெண் குழந்தைகள்தான். என் அக்காவுக்கு சொந்தக்காரங்க வீட்டுக்கு நல்லது கெட்டதுக்கு போகவே நேரம் சரியா இருக்கும். அதனால ஜிஷ்ணுவை சின்னதுல இருந்து என் வீட்டுக்கு தூக்கிட்டு வந்துடுவேன். படவா என்னைப் பத்தி உன்கிட்ட சொல்லி இருக்கான், உன்னைப் பத்தி ஒரு வார்த்தை கூட என்கிட்ட சொன்னதில்ல. ஆமாம் நயனா, உன் டைப்பே வேறயாச்சே. உனக்கு எப்படிடா இந்தமாதிரி நல்ல பொண்ணு சிநேகிதம் எல்லாம் கிடைச்சது?”

அவர் என்ன சொல்ல வருகிறார் என்று இருவருக்கும் புரிந்தது. ஜிஷ்ணு ‘இரவினில் ஆட்டம், பகலினில் தூக்கம்’ என்றிருப்பவன். சரயுவை அவன் தோழி என்றால் அனைவருக்கும் வியப்பாகத்தான் இருக்கும்.

பேச்சை உடனடியாய் திசை திருப்பினான் ஜிஷ்ணு. “சரயு நல்ல பொண்ணா? பின்னி, ஏமாந்துடாதிங்க. சரயுவை முதல் முதல்ல பார்த்தப்ப, யாருடா இந்த அம்மாயின்னு என் பிரெண்ட் கிட்ட கேட்டுட்டேன். இவளுக்கு வந்ததே ஒரு கோவம். நான் என்ன உன் பாட்டியா? என்னை அம்மாயின்னு நீ எப்படி சொல்லலாம்ன்னு ஒரே சண்டை”

“சரயு சண்டை எல்லாம் போடுவாளா?” வியப்பாக கேட்டார்.

“ஆள் பார்க்கத்தான் அமைதி. கோவம் வந்தா அவ்வளவுதான்”

“அப்ப சரயு உன் மேல கோவமாத்தான் இங்க இருக்குறத சொல்லலையா?” வரலக்ஷ்மி பொடி வைத்துக் கேட்க அவசரமாய் மறுத்தான் ஜிஷ்ணு.

“என்ன சித்தி கல்யாணம் ஆன பெண்களுக்குப் புகுந்த வீட்டை கவனிக்கவே நேரம் சரியா இருக்கும். எனக்கு மட்டும் இவளை நினைக்க நேரம் இருந்ததா? மூணு வருஷமா இங்க வியாபார விஷயமா வந்திட்டிருக்கேன். சரயுவைப் பத்தி அவ ஊருல விசாரிச்சிருந்தா முன்னமே பார்த்திருக்கலாம்”

“நீ எங்க வேலை பாக்குற சரயு?”

தான் வேலை செய்யும் நிறுவனத்தைப் பற்றி சொன்னாள்.

“உன் கணவர்…” இழுத்தான்.

“அங்கிள் பேர் ராம், டாக்டர்” முந்திக் கொண்டு பதில் தந்தாள் சந்தனா. மகளின் தலையைக் களைத்து செல்லமாக விளையாடியவன்,

“ராம் எந்த ஹாஸ்பிட்டல வேலை செய்றார்?”

ராம் வேலை பார்க்கும் மருத்துவமனையைப் பற்றி சொன்னாள்.

“பேமஸான ஹாஸ்பிடல் தான். குழந்தை பேர் என்ன?”

“அபிமன்யு”

“அபிமன்யு… அபிமன்யு…” பேரை சொல்லிப் பார்த்தான். “நைஸ் நேம். அபின்னு செல்லமா கூப்பிடலாம்”

“நாங்க சிண்டுன்னு கூப்பிடுவோம்”

கேள்வியாக முகத்தை சுருக்கினான். “ராமுக்கு அந்த பேர் ரொம்ப இஷ்டம். அவன் வயத்துல இருக்குறப்பையே சிண்டுன்னு பேர் வச்சுட்டார்”

“சோ ஸ்வீட். அப்பறம் நீயும் வழக்கமான குடும்பத் தலைவியாகிட்ட. கணவனே கண்கண்ட தெய்வமா?”

“அப்படியில்ல ஜிஷ்ணு. இப்பல்லாம் ராமுக்குப் பிடிக்கிறதுதான் எனக்கும் பிடிக்குது. அவருக்குப் பிடிக்காதது எனக்கும் பிடிக்கல”

“உன்னை இப்படி பார்க்குறது எனக்கு சந்தோஷமா இருக்கு” நிறைந்த மனதுடன் சொன்னான்.

“என்னைப் பத்தி மட்டுமே கேட்டுட்டு இருக்கிங்களே. உங்களைப் பத்தி சொல்லுங்க. உங்க மனைவி எப்படி இருக்காங்க. அவங்க பேர்… சாரி மறந்துட்டேன்…” மன்னிப்பு கேட்கும் பாவனையில் சொன்னாள்.

“ஜமுனா”

“ஜமுனா என்ன செய்றாங்க? அவங்களை ஏன் கூட்டிட்டு வரல?”

“ஷி இஸ் காரியிங். அடுத்த மாசம் டியூ டேட். அதனாலதான் கூட்டிட்டு வரல”

“ஓ… என்ன ஜிஷ்ணு இது… நீங்க இப்ப அவங்க பக்கத்துல இருக்க வேண்டாமா? இப்படி பொறுப்பில்லாம ஊர் சுத்திட்டு இருக்கிங்களே…”

“அதுதான் அடுத்த வாரம் போறோமே. உனக்கெப்படி… நீ கன்சீவ் ஆயிருந்தப்ப ராம் உன் கூடவே இருந்தாரா சரயு…”

“எனக்கு மார்னிங் சிக்நெஸ் அதிகமா இருந்தது. சாப்பிட முடியாம ரொம்ப வீக்கா இருந்தேன். முடிஞ்சபோதெல்லாம் லீவ் போட்டு என்னைப் பார்த்துகிட்டார். எனக்கு டெலிவரி பார்த்ததே ராம்தான்”

விசிலடித்தவன், “டாக்டரை கல்யாணம் செய்துட்டா இந்த மாதிரி நன்மை எல்லாம் இருக்கா…”.

இருவரும் அவர்களது யோசனையில் ஆழ்ந்தனர். முதலில் வெளிவந்தது ஜிஷ்ணுதான்.

“சைட் சீயிங் டூர் ஏற்பாடு செய்யணுமே. உனக்குத் தெரிஞ்ச ட்ராவல்ஸ் இருந்தா சொல்லு”

அவர்களுக்கு பதிலளித்தவாறு வந்தவள் காரை அவர்கள் தங்கியிருந்த விடுதியின் முன் நிறுத்தினாள்.

உறக்கம் கண்களை சுழற்ற விடை பெற்ற சந்தனாவும், வரலக்ஷ்மியும் ஜிஷ்ணுவை பொருட்களை எடுத்துவர சொல்லிவிட்டு ரூம் சாவியைப் பெற்றுக் கொண்டு சென்றுவிட,

“ரொம்ப தாங்க்ஸ் சரயு” ட்ரன்க்கில் இருந்த சாமான்கள் வாங்கிய பைகளை எடுத்தபடி சொன்னான் ஜிஷ்ணு.

“ஜிஷ்ணு” அழைத்தாள் சரயு.

கேள்வியாகத் திரும்பியவனின் கைகளில், க்ராசெரி ஷாப்பில் வாங்கிய பன்னீர் ரோல்களையும், சமோசாவையும் திணித்தாள். தொட்டுக் கொள்ள புதினா சட்னியும், புளி கலந்து செய்த இனிப்பு சட்னியும் சிறிய டப்பாவில் தந்திருந்தனர்.

“ஹே நான்தான் சாப்பிட நிறைய வாங்கிருக்கேனே. நீ வீட்டுக்கு எடுத்துட்டுப் போ”

“அதை நாளைக்கு சாப்பிட்டுக்கோ. இது ராத்திரி சாப்பிட. பசியோட படுத்தா உனக்குத் தூக்கம் வராது”

வரலக்ஷ்மியையும் சந்தனாவையும் அழைக்க வரவே நேரமாகிவிட்டது. சரயு வேறு கிளம்ப வேண்டிய நேரம். அதனால் சாப்பிட்டேன் என்று பொய் சொல்லிவிட்டான். கடையிலிருந்து திரும்பும்போதுதான் வயிறு பசி தெரிந்தது. தீனி எதையாவது சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டான். ஆனால் தான் சாப்பிடாததை எப்படி கண்டுபிடித்தாள் என்று ஒரே ஆச்சரியம் அவனுக்கு.

செல்லமாக அவனது வயிற்றில் ஆள்காட்டி விரலால் குத்தியவள், “உன் வாய் பொய் சொல்லலாம். ஆனா வயிறு சிங்கமாட்டம் கர்ஜன பண்ணுச்சே. சாரி ஜிஷ்ணு உன்னைக் கட்டாயப் படுத்தி சாப்பிட வச்சிருக்கணும்” என்றாள்.

நெகிழ்ச்சியை மறைத்துக் கொண்ட ஜிஷ்ணு, “நான் இன்னும் பொய் சொல்ல சரியா பழகலன்னு நினைக்கிறேன். நீ கொஞ்சம் ட்ரைனிங் தந்தேன்னா சீக்கிரம் பழகிடுவேன்”

“ஒன் டு ஒன் கோச்சிங் பீஸ் ஜாஸ்தியாயிருக்கும் பரவால்லையா?”

தனது தொலைப்பேசி எண்ணை அவனிடம் தந்து விட்டு அவனது எண்ணை வாங்கிக் கொண்டாள். வீட்டிற்கு வார இறுதியில் வரும்படி அழைப்பு விடுத்தாள். கை குலுக்கி விடை பெற்றுக் கொண்டு வீட்டுக்குத் திரும்பினாள்.

அறைக்கு திரும்பியவனின் மனதில் அப்போதுதான் சரயு நீங்க வாங்க என்று முதலில் மரியாதையாய் கூப்பிட்டதும் பின்னர் இறுதியில் வழக்கம்போல் நீ, வா, போ என்று மாறியிருந்ததும் உரைத்தது. சிரித்துக் கொண்டான்.

காரைப் பார்க் செய்துவிட்டு வீட்டினுள் நுழைந்த சரயு ஷூவைத் திசைக்கு ஒன்றாய் உதறினாள்.

“இப்ப ஒழுங்கா ஷூ ரேக்ல எடுத்து வைக்கல, முதுகுல ரெண்டு போடுவேன்” என்று ராம் பேசுவது போல் தோன்ற வேகமாய் அதன் இடத்தில் வைத்தாள்.

‘கை குலுக்கும்போது ஜிஷ்ணு கையை கொஞ்சம் அழுத்திப் பிடிச்சானோ? கொஞ்சமே கொஞ்சம் தயங்கி விட்ட மாதிரி இருந்துச்சே’ என்று திடீரென்று தோன்றியது.

‘ச்சே ச்சே இருக்காது. ஜிஷ்ணு ஆட்டம் போடுறவன்தான். நானே அவனை சென்னைல பொண்ணுங்ககூட ரெண்டு தடவை பார்த்திருக்கேன். ஆனா என்னைப் பொறுத்தவரை டீசென்ட்டா இருப்பான்.’ என்று சமாதானம் சொல்லிக் கொண்டாள்.

வெதுவெதுப்பான நீரில் அரைமணி அமிழ்ந்து எழுந்தாள்.

ராமை அழைத்தாள். மூன்று முறை மிஸ்ட் காலாக விட்டு எடுத்தவனை, “எத்தன தடவ உன்னக் கூப்பிடுவேன்? யார் கூட டூயட் பாடிட்டு இருந்த?” என்று பாய்ந்தாள்.

“குறிப்பா சொல்ல முடியாது. டாப்சி, அனுஷ்கான்னு ஏகப்பட்ட பேர்… இடியட்… நல்லா தூங்கிட்டிருக்கவனை எழுப்பி கேள்வி கேக்குறதைப் பாரு”

“நல்லா தூங்குறியா. எனக்கு தூக்கமே வரமாட்டேங்குது. ஏதாவது சின்ன தப்பு செஞ்சா கூட மைன்ட் வாய்ஸ்ல நீ திட்டுறதுதான் கேக்குது. வீடு வெறிச்சுன்னு இருக்கு. நான் உன்னை மிஸ் பண்ணுறேன். ப்ளீஸ் ப்ளீஸ் அத்தையையும் சிண்டுவையும் கூட்டிட்டு சீக்கிரம் வாயேன்”

இதைத்தான்… இதைத்தான்… ராம் எதிர்பார்த்தான். தான், அவளை மிஸ் செய்வதைப் போல் சரயு தன்னை மிஸ் செய்கிறாளா என்று பார்க்க அவனுக்கு ரொம்ப ஆசை. அது உண்மையானதில் அவன் உதட்டில் ரகசியப் புன்னகை மலர்ந்தது.

‘ஆபிஸ்ல வேலை இருந்தப்ப ஒரு போன் பண்ணியாடி குட்டிப் பிசாசே. இப்ப வேலை முடிஞ்சதும் கண் என்னைத் தேடுதோ? இன்னும் ஒரு வாரம் நீ என்னை எவ்வளவு தேடுறேன்னு பார்க்குறேன்’ மனதில் நினைத்துக் கொண்டான். பின்னர் வாய் வார்த்தையாக,

“இன்னும் ஒரே வாரம்டா சமத்தா வேலைக்கு போ. நாங்க உன்னைப் பார்க்க ஓடி வந்துடுறோம்” சமாதனப் படுத்தி சரயுவைத் தூங்க வைத்தான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் – 30மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் – 30

30 விடுதியில் அவளது அறைக்கு வந்த சுஜி, இவ்வளவு நாளாகத் தான் அடக்கி வைத்திருந்த துக்கத்தைச் சேர்த்து வைத்து அழுதாள். நீண்ட நாட்களாக அவள் மனதிற்குப் போட்டு இருந்த மேல் பூச்சு களைந்து, மனதில் உள்ள துக்கம் எல்லாம் வெடித்து கண்களில்

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 65ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 65

65 – மனதை மாற்றிவிட்டாய் ஆதித்ய ராஜா கீழே திவ்ய ஸ்ரீ என்ற பெயரை எழுதி பல திருத்தங்கள் செய்து இறுதியில் தியா – தயா என்று இருந்தது. ஆதி நீங்க கேட்ட மாதிரி நான் உங்க பேர்ல இருந்து உங்களுக்கு

பெரிய இடத்து மாப்பிள்ளைபெரிய இடத்து மாப்பிள்ளை

“என்னங்க கஞ்சத்தனப்படாம நல்ல காஸ்ட்லியா வாங்கிட்டு வாங்க. அதுவும் ஸ்ட்ராபெரி மாப்பிள்ளைக்கு  பிடிக்கும் போல இருக்கு. அதனால அதையும் வாங்கிட்டு வாங்க” வெளியே கிளம்பி கொண்டிருந்த கணவர் கிருஷ்ணசாமியை வழிமறித்து சொன்னாள் ரத்னா. “மாப்பிள்ளை என்னடி மாப்ள… இப்பதான் பொண்ணு பார்க்கவே