Tamil Madhura தமிழ் மதுராவின் சித்ராங்கதா,Tamil Madhura தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 32

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 32

 

செல்வம் சரயுவின் வீட்டை அடைந்தபோது வீட்டில் யாருமில்லை. சரயு காலைலேயே அவளோட பிரெண்ட்டோட கிளம்பி எங்கேயோ போய்ட்டாளாம். அவ போன ஒரு மணி நேரத்துல நெல்லையப்பனுக்கு மூச்சிரைப்பு அதிகமாக, அவ்வவோட பையன் மோகனரங்கம் சம்முகத்துக்கு போனப் போட்டுட்டான். அவனும் ஓடியாந்து டாக்டர்கிட்ட கூட்டிட்டு போயிருக்கான்னு அவ்வா சொன்னா.

“ஏன் உள்ளூருல குத்துகல்லாட்டம் இருக்குற நா உம்மவன் கண்ணுக்குத் தெரியலையா? பனங்குடிலேருந்து ஆளு வரதுக்குள்ள ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆயிப்போச்சுன்னா” அவ்வாவிடம் கேள்வி கேட்டுக் கொண்டிருந்த போதே சம்முவம் மருத்துவமனையிலிருந்து வந்துவிட்டான். நெல்லையப்பனை மோகனின் துணையோடு படுக்க வைத்தான்.

செல்வத்தைப் பார்த்து, “நீ எங்க இங்க?” என்றான் கடுமையாக.

“மாமாவப் பாத்துட்டுப் போவலாம்னு வந்தேண்ணே” பம்மினான் செல்வம்.

“பாத்துட்டேல்ல கிளம்பு” என்று செல்வத்தை நாயைத் துரத்துவது போல துரத்தினான் சம்முவம்.

கூழைக்கும்புடு ஒன்றைப் போட்டுவிட்டு ஆத்திரத்தோடு கிளம்பினான் செல்வம். அடுத்த தெருவுக்கு வந்ததும்தான் பையை மாமனார் வீட்டிலேயே வைத்துவிட்டது நினைவுக்கு வர, பைக்கை அங்கேயே ஓரங்கட்டிவிட்டு வீட்டை நோக்கி நடையை எட்டிப் போட்டான். தெருமுனையில் திரும்பும் முன்னே மோகனிடம் உரத்த சம்முவம் பேசுவது காதில் விழுந்தது. சம்முவத்துக்கு ஏற்கனவே கட்டைக்குரல், ரகசியம் பேச நினைத்தாலும் முடியாது. அப்படி ஒரு வரம் வாங்கிய பிறவி.

“ஏற்கனவே தின்னவேலில சொன்னதுதா… இனிமே நாள் கணக்குத்தான்னு டாக்டர் சொல்லிப்புட்டார். கொஞ்சம் பாத்துகிடுங்க… நான் வீட்டுக்குப் போயி லச்சுமியை துணைக்கு அனுப்புதேன்.

லச்சுமி மனசத் தேத்தித் தயார் படுத்திருக்கேன்… ஆனா சின்ன குட்டிய நெனச்சுத்தேன் எல்லாருக்கும் கவலை… இப்ப அவதேன் படிச்சு முடிச்சுட்டாளே, சட்டு புட்டுன்னு கல்யாணத்தப் பண்ணிடலாம்னு நெனக்கேன்.

என் தூரத்து சொந்தக்காரப் பையன் ஈபில வேல பாக்கான்… அவனை சின்னக்குட்டிக்கு பேசி முடிச்சுடலாம்னு பாக்குதேன். மாமா இருக்குறப்பையே கல்யாணத்தை வச்சுகிட்டா அவரும் நிம்மதியா கண்ண மூடுவாரு…

நகை நட்டப் பத்திக் கவலையில்ல… நான் பையன் வீட்டுல பேசிட்டு, அடுத்த முகுர்த்ததுலையே கல்யாணத்தை முடிச்சுடலாமான்னு கேட்டுட்டு வாரேன்… அதுவர சரயுவக் கண்ட நாய்ங்க கண்ணுல படாம காபந்து பண்ணனும். இப்ப ஒரு தெருநாய் வந்துட்டு போச்சே அதையும் சேத்துத்தான் சொல்லுதேன். அவன வீட்டுல நெருங்க விடாதீக… முக்கியமா சரயு இருக்குற திசைல அவன அண்ட விட்டுறாதீக… அவ வேற வெளுத்ததெல்லாம் பாலுன்னு நம்புற கழுதை… நான் சொல்லுறது புரிஞ்சிருக்கும்னு நெனக்கிறேன்” சொல்லிவிட்டு புல்லட்டில் ஏறி சம்முவம் கிளம்புவதை கண்கள் ஜொலிக்க பார்த்தான் செல்வம்.

‘களவாணிபய… என்னக் கண்டுபிடுச்சுட்டான்… இனிமே அவள நெருங்க விடமாட்டான்… சரயுவுக்குக் கல்யாணம் பண்ணப்போறியா… எப்படி பண்ணுறேன்னு பாக்கேன்… என்னைத் தவிர வேற எவனாவது அந்தக் கழுத மேல கை வைக்க விட்டுடுவேனா… நீ தாலி கட்ட வச்சா, அத அறுக்க எனக்கு எத்தனி நேரமாகும்… இந்த செல்வத்தப் பத்தி உனக்குத் தெரியாதுடே… தாலி கட்டுற வரைக்கும் போக விட்டாத்தான… இன்னைக்கே அந்தக் குட்டிய என் பொஞ்சாதியா ஆக்கிக்கிடுதேன்… வேற வழியில்லாம நீயே அவள எனக்குக் கல்யாணம் செஞ்சு வைப்ப…’

மரத்தடியில் ஒளிந்தவன் அவ்வா அவள் வீட்டுக்கு சென்ற நேரம் பாத்து பூனை போல வீட்டினுள் நுழைந்தான். வீட்டில் நெல்லையப்பன் மாத்திரம் பாதி மயக்கமும் விழிப்புமாய் படுத்திருந்தார்.

“தூங்குறியளா மாமா… லச்சுமி புருசனுக்கு அறிவேயில்ல… சரயுவக் கண்ணாலம் பண்ணிக்குற தகுதியும் அழகும் இந்த உலகத்திலேயே என்கிட்டே மட்டும்தானிருக்கு… வேறெவனாவது அவளப் பொண்ணு கேட்டு வந்தா அவன் சங்க அறுத்துர மாட்டேன்”

பல்லைக் கடித்தபடி சொன்னவன் அடி மேல் அடி எடுத்து வைத்து சரயுவின் உடை மாற்றும் அறைக்குள் நுழைந்தான். உள்ளே அவள் கொடியில் அவிழ்த்துப் போட்டுவிட்டுப் போன துணிமணிகளிருந்தன.

‘வெளிலேருந்து வந்ததும் துணி மணி மாத்த இங்கதான வரணும் அப்பப் பாத்துக்கிடுதேன்’ கருவிக் கொண்டே தனது இரைக்காக நாக்கைத் தொங்க விட்டபடிக் காத்திருக்க ஆரம்பித்தது அந்தக் குள்ளநரி.

ப்பா எனக்கு வேல கெடச்சுடுச்சு தெரியுமா” வீட்டினுள் நுழைந்ததும் செருப்பைக் கழற்றியபடியே வந்து சந்தோசத்தைப் பகிர்ந்து கொண்டாள் சரயு. அவ்வா வெத்தலையை உரலில் இடித்தபடி கேட்டிருந்தாள்.

“ஏட்டி என்னவோ வேலைப் பாக்கப் போற மாதிரி பேசுத… உன் மச்சான் உனக்கு மாப்பிள்ளை பாக்கனும்னு நிக்கான்.. மாமியார்காரிகிட்ட மல்லுகட்டத் தயாராவு…” என்றாள் தொலைக்காட்சியில் ஒரு கண்ணை வைத்தபடி.

“மச்சான் கெடக்குது… நான் அப்பா கூடத்தேன் இருப்பேன்… இல்லப்பா… இன்னைக்கு இன்டர்வியூல என்ன கேள்வி கேட்டாக தெரியுமா?” நெல்லையப்பனிடம் பேச ஆரம்பித்தாள்.

“மதியம் சாப்பிட்டியா?” அன்று வினவிய அவ்வாவிடம்,

“சாப்பிட்டேன் அவ்வா… சம்சா, டீ, கூல்ட்ரின்க், சர்பத், அப்பறம் இட்லி, மசாலா தோசை, கேசரின்னு என் கூடப் படிச்ச பசங்க வாங்கித் தந்து தள்ளிட்டானுங்க… அதுவும் அவனுங்க சொந்த துட்டுல… பூராப் பயலுக்கும் வேல கெடச்சுடுச்சு அவ்வா… அவனுங்க ரெண்டு மாசம் சம்பளம் கூட வாங்கிட்டானுங்க… ஏம்பா நம்ம வீட்டுல நானாவது பையனா பொறந்திருக்கக் கூடாது”

கைகால் விழுந்தாலும் மனது விழித்திருக்க, நடப்பது எல்லாவற்றையும் பார்த்திருந்தார் நெல்லையப்பன். அணையப் போகும் விளக்கு பிரகாசமாய் எரிவதைப் போல அவரது புலன்கள் விழித்திருந்தது. ஆனால் உடல்தான் ஒத்துழைக்க மறுத்தது.

‘சின்னக்குட்டி உன்னைக் கடிக்கத் தயாரா ஒரு பாம்பு ரூம்புல உட்கார்ந்திருக்கு போயிடாதே’ என சொல்ல அவரின் நாக்கு புரளவில்லை. வாய் பேச முடியாத தனது நிலையை நினைத்துக் கண்களில் கரகரவென தண்ணீர் வழிந்தோடப் படுத்திருந்தார். அவரால் கைகாலைக் கூட அசைக்க முடியாததால் தானே கண்ணெதிரே சரசுவின் புருசன் நடந்து போய் அவரின் செல்லமான சின்னகுட்டியின் அறையில் புகுந்து கொண்டான்.

‘சிவாமி நம்ம புள்ள மானத்தக் காப்பாத்த முடியாம முடமாகிப் போனேனே, என் உசுர் இப்பவே போயிடாதா’ என்ற அவரது இதயம் கதறிற்று.

“பொண்ணாப் பொறந்ததாலதான்டி இப்படி அப்பனுக்கு சேவகம் செஞ்சுட்டிருக்க… ஆம்பளையா பொறந்திருந்த பொண்டாட்டிக்குல்லத் துணி துவைச்சுப் போடுவ” வீட்டில் நுழைந்த கையோடு தந்தையின் அழுக்குத் துணிகளை சர்ப்பில் ஊற வைத்த சரயுவிடம் வம்பு வளர்த்தாள் அவ்வா.

“அதையே தெலுங்குல சொல்லேன் கேப்போம்”

யோசித்த அவ்வா, “தெரியல போடி” என்றாள்.

“ஏன் அவ்வா… நீயெல்லாம் எந்த தைரியத்துல தெலுங்குன்னு சொல்லிக்கிற… உனக்குத் தமிழாச்சும் கொஞ்சம் கொஞ்சம் தெரியுது தெலுங்கு சுத்தமா தெரியல…”

“என் பாட்டன் பூட்டன் காலத்துல இங்க வந்தது. அப்படியே தெலுங்கு மறந்து போயி தமில்தான் வாயில வருது… இதுல நீ வேற, தெலுங்குல இதச் சொல்லு அதச் சொல்லுன்னு கேட்டு உசுர எடுக்க… ஏண்டி உனக்கெதுக்கு தெலுங்கு… என் கொள்ளுப் பேரனக் கட்டிக்கத் திட்டம் போடுதியோ” என்றாள் அவ்வா. அவளது கொள்ளுப்பேரனை இந்த வருடம்தான் எல்கேஜியில் சேர்த்திருந்தனர்.

“ஆமா உன் கொள்ளுப் பேரனத்தான் கட்டிக்கப் போறேன்… எனக்குப் போட உன்னோட ரெட்டவடஞ் சங்கிலியையும், வைரத்தோட்டையும் பத்திரப்படுத்தி வை”

“போடி போய் துணிய மாத்திட்டு வா… வந்து மீத கதையை சொல்லு” என்று அவளை அனுப்பி விட்டாள் அவ்வா.

சரயு துணி மாற்றும் அறையை நெருங்கியதைக் கண்ட நெல்லையப்பன் முயன்று, “ஓ…”வென எக்களிப்பதைப் போலக் கூக்குரலிட்டார். அதற்கு மேல் கத்தத் தெம்பில்லாமல் அவரது வாய் மூடிக் கொண்டது.

“என்னப்பா.. திடீருன்னு கத்துத… பூச்சி எதுவும் கடிச்சுடுச்சா…?” என்று ஓடி வந்து அவரை ஆராய்ந்து பார்த்தாள். ஒன்றுமில்லை என்ற திருப்தியுடன் திரும்பி நடந்து அறையை நோக்கி நடந்தாள்.

அந்த அறைக்கு ஜன்னல் இல்லாததால் சூரிய வெளிச்சம் வரும் வாய்ப்பு கம்மி. லைட் போடாவிட்டால் இருட்டாய் இருக்கும். துணி மாற்றும் நேரம் சரயு விளக்கை போடுவதில்லை. அவ்வா வெளியே இருப்பதால் அவள் கதவையும் மூடவில்லை. அதனால் லேசாய் வெளிச்சம் வந்தது. கதவின் பக்கத்திலிருக்கும் கூடையின் பின்னே இருட்டில் மறைந்திருந்த செல்வம், வெளிச்சத்தில் நின்ற சரயுவின் கண்ணில் படவில்லை. அவள் மாற்றுவதற்குத் துணியை எடுத்ததைப் பார்த்ததைக் கண்ட செல்வத்தின் கண்கள் ஆசை வெறியில் மின்னியது.

“அவ்வா… இந்த சிவதாணு இருக்கானே… எப்பப் பாத்தாலும் என் கூட போட்டி போடுவானே… அவன் மதுரைல வேல பாக்கான்… டிவிஎஸ்ல… நான் மட்டும் பையனாப் பொறந்திருந்தேன், அங்கேயே வேலைக்குப் போயிருப்பேன்”

சொல்லியபடியே துப்பட்டாவைக் கழற்றி கொடியில் போட்டு விட்டு டாப்ஸை உயர்த்தினாள். கழற்றி வீசப் போகும் கடைசி வினாடியில் அவள் கண்களில் கூடைக்குப் பின்னால் தெரிந்த சிறு அசைவு பட்டது. சுதாரித்தவள் தலை வரை கழட்டிய டாப்ஸை மின்னல் வேகத்தில் திரும்பவும் அணிந்து கொண்டாள்.

‘எமகாதகி கண்டுபிடுச்சுட்டா… இன்னைக்கு உன்ன விட்டேன்… அப்பறம் அம்புடமாட்ட…’

அவளது சுதாரிப்பு தெரிந்த செல்வம் விருட்டென எழுந்து அவளது உடையைப் ஒரு கையால் பிடித்து இழுத்து, கழுத்தோடு சேர்த்து அணைத்து வாயைப் பொத்தினான். அவளைக் கட்டிபிடிக்க முயன்றபடி மற்றொரு கையால் கதவை சாத்த முயன்றான். எவனோ திருடன் நுழைந்துவிட்டான் என்று எண்ணிய சரயு, அவன் கொள்ளையடிக்க முயல்வது தன் பெண்மையை என்று உணர்ந்தாள்.

‘விஷ்ணு… மெட்ராஸ்ல என்னைக் காப்பாத்தினியே, இன்னைக்கு என்னைத் தனியாத் தவிக்க விட்டுட்டு நீ எங்கடா போன…’ கதறியது அவள் மனம்.

“பங்காரம்… காம வசப்பட்ட மனிதனும் ஒரு மிருகம்தான். அந்த மாதிரி மிருகத்தை இனம் கண்டுக்கோ… ஒவ்வொரு தடவையும் நான் உன்னைக் காப்பாத்துறது சாத்தியமா? நீயே உன்னைப் பாதுகாத்துக்கணும்”

விஷ்ணு உரக்கக் கத்துவது போலவே அவளுக்கு பிரம்மை தோன்றியது.

‘தப்பிச்சுடுவேன் விஷ்ணு… எப்பிடியாவது தப்பிப்பேன்’

அவனிடமிருந்து தப்பிக்க வேண்டும் என்ற எண்ணமே சரயுவின் மண்டையில் ஓடியது.

டாப்ஸ் கிழிவதையும் பொருட்படுத்தாமல் எட்டி மூலையில் சாய்த்து வைத்திருக்கும் மடக்கு சேரை காலால் இழுத்து, பின் கைகளுக்குக் கொண்டுவந்து ஒரே போடாய் அவன் தலையில் போட்டாள் சரயு. வலியால் செல்வத்தின் கைப்பிடி சற்று தளர, அந்த நொடி நேர தாமதத்தைப் பயன்படுத்தி ஓடிச் சென்று அந்தப் பழைய தேக்கு மரக் கதவை வெளியே இழுத்துச் சாத்தினாள்.

“மாமா… அவ்வா ஓடியாங்க திருடன் திருடன்” என்று அவள் கத்திய கத்தலில் அவ்வா வீட்டிலிருந்த அனைவரும் வந்துவிட்டனர். ஒரு உலக்கையை எடுத்துக் கையில் வைத்துக் கொண்டு அடிக்கத் தயாராய் வந்த அக்கம்பக்கத்தார், கதவைத் திறந்து, திருடன் வெளியேற வழியின்றி திமுதிமுவென உள்ளே சென்றனர். விளக்கைப் போட்டு, மூலையில் ஒளிந்திருந்த அந்த நபரைக் கிடுக்கிப் பிடி போட்டுப் பிடித்து வெளியே இழுத்து வந்தனர். முத்தத்து வெளிச்சத்தில் செல்வத்தைப் பார்த்த அனைவருக்கும் அதிர்ச்சி. அதுவரை யாரோ ஒரு ஆண்மகன் தன்னை ஒளிந்திருந்து பார்த்தது என்று நினைத்திருந்த சரயுவுக்கு சரசக்காவின் கணவன் செல்வம் அது என்ற அதிர்ச்சியைத் தாங்க முடியவில்லை.

“அடப்பாவி நீயா… பொம்பளப் புள்ள துணி மாத்துற இடத்துல உனக்கென்னடா வேலை?” ஓங்கி அறைந்தான் மோகன்.

ஒவ்வொரு முறையும் கன்னத்தைக் கிள்ளும்போதும், முடியைப் பிடிச்சு இழுக்கும்போதும் மனசுல இப்படி நெனச்சுத்தான் இழுத்தானா? அப்ப அன்னைக்கு செயின் தந்தது என் மேல இருந்த பிரியத்துல இல்லை. என் உடம்ப அனுபவிக்குற ஆசைலயா… அவனை நல்லவன் என்று நம்பிய தன் முகத்தில் யாரோ காரி உமிழ்ந்ததைப் போலிருந்தது சரயுவுக்கு. அக்காவுக்குத் தாலி கட்டிட்டு, தங்கச்சியை ஒளிஞ்சிருந்து பாக்குற இந்த கேவலமான பிறவியை என்ன செய்யலாம் மனம் ஆங்காரமாய் யோசித்தது. நெல்லையப்பனின் டூல்பாக்ஸ் சரயுவின் கண்களில் பட, அதைத் திறந்து அதிலிருக்கும் சிறு கத்தியை எடுத்தவள்,

“எவ்வளவு தைரியம்டா உனக்கு… இந்தக் கைதானே என்னைப் பிடிச்சு இழுத்தது…” என்றபடி செல்வத்தின் கைகளில் கத்தியால் தாறுமாறாகக் கோடு போட்டாள்.

“யாத்தே…” என்று அலறிய செல்வம் அங்கிருந்தவர்களின் பிடியிலிருந்து பிய்த்துக் கொண்டு ஓடினான்.

“ஏய் சண்டிராணி… சேர்ல அடிச்சு மண்டையை உடைச்சதுமில்லாம கையக் கத்திலையா கிழிக்க… உன் கழுத்துல தாலியக் கட்டி… அதே ரூமுல உன் கூடக் குடும்பம் நடத்தல என் பேர் செல்வமில்லடி…” சூளுரைத்து ஓடி மறைந்தான்.

தந்தையின் கட்டிலிக்கருகே சத்தெல்லாம் செத்து போய் அமர்ந்தாள் சரயு.

“யப்பா இவன் இருக்கான்னு சொல்லத்தான் கத்துனியா?”

அமோதிப்பதைக் காட்ட மறுபடியும் ஓவென்று அலறினார் நெல்லையப்பன்.

அவர் கண்களில் நிக்காமல் கண்ணீர் வழிந்தது.

“கவலைப்படாதேப்பா… என்னை நினைச்சு வருத்தப்படாதே… என் மானத்த எவனாவது அழிக்க நெனச்சா நானே அவனுக்கு எமனாயிடுவேன். அவனப் பொணமாக்கிட்டுத்தான் என் உயிர் போவும். நான் நெல்லையப்பனோட சிங்கக்குட்டில்லோ…” என்றவாறு விசும்பிய சரயு தந்தையின் தோளில் சாய்ந்து கொண்டாள்.

விஷயத்தைக் கேள்விப்பட்ட சம்முவம் மாலையே செல்வத்தை அடித்துத் துவைத்தான். மருத்துவமனையில் சேர்த்துவிட்டு சரசுக்கு தகவல் சொல்லியனுப்பினான். நடந்ததை நம்ப முடியாமல் சரசு அதிர்ந்து நின்றாள். அதை விட அவனைப் பார்க்க வந்தவர்கள் மூலம் அந்த ஜகதலப்ரதாபனின் லீலைகள் தெரியவர, அவனைப் பற்றி அறிந்த செய்தி உண்மையா என்ற ஆராய்ச்சியில் இறங்கினாள்.

“சரசு தேடி பிடிச்சு கண்டுபிடிச்ச பாரு… ஒரு புருசன… மனுசனா இவன்… வக்கிரம் புடிச்ச நாயி… அந்த இளங்குருத்து துணிமாத்துற ரூமுல போயி ஒளிஞ்சிருக்கானே… உன்னோட புருசனா இருக்கப் போயி இன்னமும் உயிரோட இருக்கான். ஆனா எப்போதும் இத வச்சு அவன் தப்பிக்க முடியாது. நான் சின்னகுட்டிக்கு அடுத்த வாரம் கல்யாணம் ஏற்பாடு பண்ணிருக்குதேன்… இவேன் வந்து ஏதாவது தகராறு பண்ணான், ரெண்டா வகுந்து செங்க சூளைல வேக வச்சுருவேன்… ஜாக்கிரத…” என்று எச்சரித்தான்.

அளவுக்கு மீறிய அதிர்ச்சியினாலோ இல்லை சின்னகுட்டிக்குத் தன்னைக் காத்துக்கொள்ளத் தெம்பு வந்துவிட்டது இனியும் அவள் காலில் கட்டிய கல்லாய், அவளுக்கு பாரமாய் இருக்க வேண்டாம் என்று நினைத்ததாலோ நெல்லையப்பனின் உயிர்பறவை அன்று நள்ளிரவே பறந்து சென்று தனது மனைவி சிவகாமியின் அருகில் அமர்ந்து கொண்டது.

“யப்பா நடந்த கொடுமை பொறுக்காம எங்கள விட்டு போயிட்டியா” என்ற லச்சுமியின் கதறல் ஊரையே எழுப்பியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 17என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 17

அத்தியாயம் – 17 வீட்டினருக்கு ஜவுளிகளை எடுத்த பின்,  பக்கத்தில் இருந்த கடைக்கு அழைத்து சென்று சித்தாராவுக்கு அவள் மறுக்க மறுக்க ஜீன்ஸ் எடுத்துத் தந்தான் அரவிந்த்.  “எனக்கு ஜீன்ஸ் எல்லாம் பழக்கமில்லை அரவிந்த். ப்ளீஸ் வேண்டாம். நான் வேணும்னா சுடிதார்

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 6தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 6

சரயு காலையில் அலைப்பேசியின் அலறலில்தான் எழுந்தாள். தலை வரை போர்த்தியிருந்த போர்வையிலிருந்து கையை மட்டும் நீட்டி பெட்சைடு டேபிளிலிருந்த மொபைலை தேடி எடுத்து, பின் போர்வைக்குள் இழுத்துக்கொண்டாள். ‘இந்த ராம் காலைல எழுப்பி விட்டுடுரான்பா. போன ஜென்மத்துல கடிகாரமா பொறந்திருப்பான் போலிருக்கு’

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 35தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 35

 “சாதிச்சுட்டிங்க பாபு” கை குலுக்கினார் ராஜு. “சாதிச்சுட்டோம்” திருத்தினான் ஜிஷ்ணு. அவனது உழைப்புக்குக் கிடைத்த பலன். முதன் முறையாக, கடன் போக லாபமாய் அரை கோடி அவன் கைகளில் நின்றது. சந்தனா பெயரில் ஒரு நூறுகிராம் தங்கக் கட்டி வாங்கினான். வேலை