மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய்- 35

35

ரண்டு நாட்களுக்கு முன்பே அதிகாலை நேரத்தில், யார் கண்ணிலும் படாமல், மீனாட்சியை வணங்கி விட்டு, தன் தந்தையிடமும், கமலம் மற்றும் மூர்த்தியிடமும் ஆசிர்வாதம் வாங்கி வந்திருந்தாள் சுஜி. தனக்கு உபகார சம்பளம் வழங்கி, படிப்பதற்கு உதவி செய்த தொண்டு நிறுவனத்திற்கு தனியாகக் கடிதம் எழுதி மூர்த்தி மாமாவிடம் கொடுத்துவிட்டு இருந்தாள். நன்றாக சம்பாதிக்க ஆரம்பித்தவுடன் தானும் இந்த மாதிரி உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவள் மனதுள்ளே ஓடியது. உடன் படித்தவர்களிடம் கண்கலங்க விடை பெற்றுக் கொண்டு, சென்னை வந்தடைந்தாள் சுஜி.

எல்லாம் முடிந்து இதோ சென்னையில் உள்ள அதிதியின் கிளையில் தங்கி இருக்கிறாள். விக்கி வீட்டினை நண்பனுடன் பகிர்ந்து இருந்ததால், அவனுடன் போய் தங்க முடியவில்லை. ஊருக்குக் கிளம்ப இன்னும் மிகச் சில நாட்களே இருக்கின்றன. சான்பிரான்சிஸ்கோவில் இறங்கியதும் விக்கியின் வகுப்புத் தோழி ஒருவள் வீட்டில் தற்காலிகமாக தங்க ஏற்பாடு செய்து விட்டதாக விக்கி சொன்னான். அங்குப் போய் கல்லூரியில் சேர்ந்ததும் தங்குமிடம் பார்க்கவேண்டும்.

இதுவரை மதுரையை விட்டுத் தாண்டியதில்லை. அவ்வப்போது அதிதியின் கொடைக்கானல் கிளைக்கும், சென்னை கிளைக்கும் வந்திருக்கிறாள் அவ்வளவுதான். எப்படி அனைவரையும் விட்டு விட்டு அமெரிக்காவில் இருக்கப் போகிறாளோ தெரியவில்லை. சுந்தரம் அவள் அமெரிக்கா செல்ல சம்மதித்தது தான் மிகப் பெரிய அதிசயம். அதிதியில் சேர்ப்பதற்கே மூர்த்தி மாமா மிகவும் பாடு பட வேண்டி இருந்தது. இப்போது மட்டும் என்ன லேசில் விட்டு விடுவாரா? விக்கி என்ன சொன்னான் என்று தெரியவில்லை. சந்தோஷமாகவே சுஜியை அமெரிக்கா அனுப்பி வைக்கத் தயாரானார். எங்கே மதுரையில் இருந்தால் அந்த முரடன் இழுத்துச் சென்று விடுவானோ என்ற அச்சமாகக் கூட இருக்கலாம்.

தினமும் காலையில் வரும் மினி, சுஜியை அழைத்துக் கொண்டு ஊர் சுற்றப் போய் விடுவாள். மாலையில் அவர்களுடன் விக்கி வந்து இணைந்து கொள்வான். முதல் இரண்டு நாட்களும் இரவு மினி அவளுடனே தங்கி விட்டாள். மூன்றாம் நாள், ராகேஷிடம் இருந்து வந்த போனின் முக்கியத்துவத்தால், வேறு வழியின்றி, கிளம்பி சென்றாள் மினி. கிளம்பும் அவசரத்தில் அவளது செல்லை சுஜியின் அறையிலேயே விட்டு சென்று விட்டாள். திரும்பி வந்ததும் விக்கியிடம் மறக்காமல் கொடுக்க சொல்ல வேண்டும் என்று எண்ணி, செல்போனை பத்திரமாக எடுத்து வைத்தாள் சுஜி.

மினி இல்லாமல் பொழுதை விரட்டியவள், வாங்க வேண்டிய பொருட்களை வாங்கி எடுத்து வைக்க ஆரம்பித்தாள். பிரசன்னா சென்னையின் மற்றொரு கிளையில் வேலை பார்ப்பதால், அவனைச் சென்று பார்த்து வந்தாள். சுஜியிடமும் செல்போன் இல்லை. அதற்கு அவசியம் இருப்பதாகவும் அவள் நினைக்கவில்லை. மினி திரும்பி வந்தவுடன் தான் விஷயம் என்னாயிற்று என்று தெரியும்.

றுநாள் அவளுக்கு ஒரு மறக்க முடியாத நாளாக விடிந்தது. காலையிலே அவளைப் பார்க்க விக்கியும் கேசவனும் வந்து இருந்தார்கள்.

அவர்கள் முகத்தில் இருந்த பதற்றத்தைப் பார்த்தவள் பயத்துடன், “என்ன ஆச்சு விக்கி?” என்றாள்.

“சுஜி துரைப்பாண்டி ஜெயில்ல இருந்து விடுதலை ஆயிட்டானாம்”

“எந்த துரைப்பாண்டி?”

“உன்னப் பொண்ணு பாத்து பூ வச்சுட்டுப் போன துரப்பாண்டி”

சுஜிக்கு பயத்தில் உடம்பு ஜில்லிட்டது.

“சுஜாதா நீ அதிதில படிக்குறது அவனுக்கு தெரிஞ்சு போச்சு போல இருக்கு. மதுரைல போய் விசாரிச்சு இருக்கான். உன் தோழி ரோசின்னு ஒரு பொண்ணு கடைக்கு போன் பண்ணுச்சு. நீ இங்க இருக்குறது அவனுக்குத் தெரிய ரொம்ப நேரமாகாது. ஒண்ணு செய், நீ உன் துணிமணி எல்லாம் எடுத்துட்டு விக்கி வீட்டுல போய் தங்கிக்கோ உனக்கும் பாதுகாப்பு. எங்களுக்கும் நிம்மதி” என்றான் கேசவன்.

உடனே கிளம்பியவர்கள் கேசவனின் காரிலேயே விக்கியின் வீட்டுக்குச் சென்றனர். அங்கே அப்பா மட்டுமின்றி கமலமும், மூர்த்தியும் கூட இருக்க, விக்கியைக் கேள்வியுடன் பார்த்தாள் சுஜி.

தொண்டையைக் செருமிக்கொண்ட கமலம் மெதுவாக ஆரம்பித்தார். “சுஜி நாங்க எல்லாரும் உன் நல்லதுக்குத் தான் செய்வோம்னு உனக்குத் தெரியும் இல்ல”

“அதுல என்ன சந்தேகம் அத்த”

“அதே மாதிரி உன் நல்லதுக்காக யோசிச்சு ஒரு முடிவு எடுத்து இருக்கோம்”

“சொல்லுங்க”

“நாளன்னைக்கு விடிய காத்தால நீ கிளம்புற. நாளைக்கு காலைல உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு முடிவு பண்ணி இருக்கோம்”

“என்னத்த சொல்லுறிங்க? யாரோ ஒருத்தனுக்குப் பயந்து கல்யாணம் பண்ணிக்குறதா? நான் ஊருக்குப் போனதும் அவனால என்ன செய்ய முடியும்?”

“உன்ன ஒன்னும் செய்ய முடியாதுடி. ஆனா அப்பறம் உங்க அப்பா அந்த இடத்துல கடைவச்சு நடத்த முடியுமா? உங்க குடும்பத்த அவன் சும்மா விட்டுடுவானா?”

“அதனால”

“ஒரு கல்யாணம் பண்ணிகிட்டா, இல்ல வேற இடத்துல கல்யாணம் ஆயிடுச்சுன்னு போய்டுவான்.”

“நீங்க சொல்லுறதுல லாஜிக்கே இல்லத்த. நான் கல்யாணம் பண்ணிகிட்டது தெரிஞ்சா அந்தப் பையன் வீட்டையும் சேர்த்து இல்ல டார்ச்சர் பண்ண ஆரம்பிப்பான்.”

அனைவரின் முகமும் பிரகாசமானது. “கரெக்டா சொன்ன சுஜி குட்டி. அது மாதிரி நடக்காம இருக்கணும்னு தான் நாங்க எல்லாரும் சேர்ந்து ஒரு தந்திரம் பண்ணி இருக்கோம்”

“என்ன அது பொல்லாத ராஜதந்திரம்?”

“வேற யாரையாவது கல்யாணம் பண்ணிகிட்டாதானே அவன் தொல்ல கொடுப்பான். மாதவன கல்யாணம் பண்ணிகிட்டா?”

சுஜிக்குத் தலை சுத்த ஆரம்பித்தது. “என்னத்த சொல்லுறிங்க? மாதவனா? அவங்க எங்கே நம்ம எங்கே?”

“அதப் பத்தி நீ யோசிக்காதே. சம்மதமா இல்லையான்னு மட்டும் சொல்லு.”

“இல்லத்த சரிபட்டு வராது”

“சுஜி நீ இவ்வளவு சுயநலமா இருப்பன்னு நாங்க நினைக்கலடி. நீ எங்கன்னு கேட்டு உங்க கடைல கலாட்டா பண்ணிட்டு, உங்க அப்பா கால உடச்சுட்டு போய் இருக்கான் அந்த துரை. நீ என்னடான்னா உன்னோட நியாயத்தைப் பேசிட்டே இருக்க.”

கண்களைத் துடைத்துக் கொண்ட கமலம், “நான் சொன்னா நீ கேட்பன்னு சொல்லி எல்லா ஏற்பாடும் பண்ண சொல்லிட்டேன். என்னதான் நான் உன்னைய என் புள்ளயா நினைச்சாலும், நீ இல்லன்னு காட்டிட்ட பார்த்தியா?”

அப்பாவுக்கு அடி பட்டது என்பது மட்டுமே சுஜியின் மனதில் பட்டது. வேறு எதுவும் அவளது கவனத்தைக் கவரவில்லை. சுந்தரத்தை ஓடிப் போய் பார்த்தவள், அவரின் காலில் கட்டு போட்டு இருப்பதைப் பார்த்துக் கண்ணீர் வடிக்க ஆரம்பித்தாள்.

“எனக்கு ஒண்ணுமில்ல சுஜி. எல்லாம் சரி ஆயிடும். நான் நினைச்சதை விட அவன் ரொம்ப மோசமானவனா இருக்கான். அதுனால நீ மாதவன கல்யாணம் பண்ணிக்குறது தான் நல்லதுன்னு எனக்கும் படுது. தயவுசெய்து சரின்னு சொல்லும்மா.”

பெற்றவரின் வார்த்தையை மறுக்க முடியாது, வேறு வழி தெரியாமல், விஷயத்தைத் தள்ளிப் போடும் எண்ணத்துடன்,

“அதுக்கு முன்னாடி நான் மாதவனோட கொஞ்சம் பேசணும்”

“தாராளமா பேசலாமே… இங்க பக்கத்து ரூம்லதான் இருக்கான்”

“என்ன? பக்கத்து ரூம்லையா? அடக்கடவுளே! இவ்வளவு நேரம் நம்ம பேசுனத கேட்டுட்டா”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

சாவியின் ‘ஊரார்’ – 03சாவியின் ‘ஊரார்’ – 03

3 “ஜக்கம்மா, ஜக்கம்மா!” – சிவாஜி கூச்சலிட்டுக் கொண்டிருந்தார். நடு நசி நேரத்தில் அந்த சிம்மக் குரல், டெண்ட் சினிமாவிலிருந்து பயங்கரமாக ஒலித்தது. சாமியார் அந்தப் படத்தை மூன்று முறை பார்த்தாயிற்று. ‘வானம் பொழியுது, பூமி விளையுது’ டயலாக் அவருக்கு மனப்பாடம்.

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 12ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 12

உனக்கென நான் 12 தன் நீண்டநாள் தன் தாயை பிரிந்துபடும் இதயபாரத்தை தனக்கான உயிரிடம் இறக்கி வைத்த நிம்மதியுடன் தொடர்ந்தான். “ஏய் அன்பு நான் உன்னை ரொம்ப கஷ்டபடுத்திட்டேன?. நான் ஒரு மடையன் அம்மாவ பத்தி பேசிகிட்டே இருப்பேன்” என தலையில்