Tamil Madhura உன் இதயம் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன் – 13

உன் இதயம் பேசுகிறேன் – 13

அத்தியாயம் 13

உனக்கென மட்டும் வாழும் இதயமடி

உயிருள்ளவரை நான் உன் அடிமையடி

என்ற ரிங்டோனை கேட்டுவிட்டு திடுக்கிட்டு தூக்கத்திலிருந்து எழுந்தான் பாலாஜி.

இந்த ரிங்டோன் நீண்ட  நாள் கழித்து அடிக்கிறது. ரிங்டோனின் சொந்தக்காரி வேறொருவனுக்கு சொந்தமாகி பல வருடங்கள் ஆகிவிட்டது.

இருந்தாலும் மாற்றுவதற்கு என்னவோ மனமே வர மாட்டேங்கிறது.

அந்த ஒன்றிரண்டு வினாடிகளில் திருவிழாவிற்கும் சந்தைக்கும் வந்த கிளி சாடை சொல்லி  சொல்லி கண்களால் பேசியதை எல்லாம் எண்ணி மனது பழங்கணக்கு பார்த்தது.

“டேய் பாலாஜி மருதையில போயி பிஎஸ்சி படிக்கறேன் அப்படின்னு சொல்றதெல்லாம் உன் மாமன் வெள்ளைச்சாமிக்கு வேலைக்காகாது.

என் தம்பி வெள்ளையப்பனுக்கு தர மரியாதையை உன் படிப்புக்கு தர மாட்டான்’ என்று தன் தாய் வைததும் உண்மையாகி விட்டதே.

இப்போது எதற்கு அவள் இத்தனை வருடங்கள் கழித்து அழைக்கிறாள்.

அலைபேசியை எடுத்தவன் “சொல்லு வள்ளி எப்படி இருக்க? ” என்றான்

“நான் நல்லா இருக்கேன் மாமா நீ எப்படி இருக்க?”

“நல்லா இருக்கேன். பிள்ளைக உன் வீட்டுக்காரர் எல்லாரும் சுகமா இருக்காங்களா”

“எல்லாரும் நல்ல சுகம் பெரியவன் அஞ்சாவது போய்ட்டான். சின்னவன் இரண்டாவது போய் இருக்கான். நீயும் இந்த மாதிரி உன் பிள்ளைகளை பத்தி எப்ப நல்ல செய்தி சொல்லுவேன்னு நான் ரொம்ப நாளா ஏங்கிக்கிட்டு இருக்கேன்”

இதற்கு என்ன பதில் சொல்வது வள்ளி தந்த வலியே இன்னும் வடுவாக வதைக்கிறது. இதில் இன்னொரு புதிய காயம் தேவையா?

“நீ என்னத்துக்கு இத்தனை காலையில் போன் அடிக்கிற”

“பெரிய மாமாவுக்கு ஆக்சிடென்ட்ல கால் அடிபட்டு இருக்குன்னு பார்க்க வந்தேன். நீ வந்து கூட பாக்கலையாமே எல்லாரும் பேசிகிட்டாக. உன் கூட பிறந்த அண்ணன், அடிபட்டு கால் ஒடஞ்சு கிடக்குறாக வந்து ஒரு எட்டு பார்த்துட்டு போக கூடாதா? அதுதான் போன் போட்டுட்டு உன்கிட்டயே கேட்கலாம்னு நெனச்சேன். கேட்கலாம் இல்ல… ”

அண்ணனா அவனா ரத்த பந்தம் என்றெல்லாம் சொல்கிறார்களே அதைப் பற்றி அவனுக்குத் தெரியுமா

சின்ன வயதில் நன்றாக படிக்கும் பாலாஜியுடன் ஒப்பிட்டு பேசி, பள்ளியில் அடிக்கும் வாத்தியார் களும் மற்றவர்களும் நன்றாக உருவேற்றி விட்டிருந்த வன்மத்தின் காரணமாக

“டிகிரி படிச்ச திமிராடா… காதலாடா கேக்குது காதலு… நாயே… வள்ளி கழுத்துல தாலி கட்டி லட்சாதிபதி வீட்டுக்கு மாப்பிள்ளையாக போறிகளோ…

அதையும்  பாக்குறேன். என் பங்காளி தனசேகரன் தான்டா தாலிய கட்ட போறான்” என்று கூடப்பிறந்த தம்பியை மிதி மிதி என்று மிதித்து ரூமில் போட்டு அடைத்து வைத்துவிட்டு, அவர்கள் பங்காளி தனசேகரனுக்கு வள்ளி கழுத்தில் தாலி கட்ட துணை இருந்தானே அந்த அண்ணனைப் பற்றித் தான் பேசுகிறாள்.

காரணம் இல்லாமல் அவனை மிதித்த வலது கால் தான் வலியால் துடித்துக் கொண்டிருக்கிறதோ

மறுமுனையில் பதிலே வராதது கண்டு வள்ளியே தொடர்ந்தாள்

“எனக்கு அந்த உரிமை இன்னும் இருக்குல்ல. இன்னமும் நான் உன் மாமன் மக தானே. பொறக்கறப்பயே உண்டான சொந்தம் விட்டுப் போயிடுமா என்ன”

“கேட்கலாம் கேட்கலாம் ஆனா பதில்  சொல்றதா வேணாமானு நான் தான் முடிவு செய்வேன்”

“ஏன் மாமா என்கிட்ட இம்புட்டு கோவமா பேசுற?”

“இது கோவமா? குரலை கூட உயர்த்தலேயே. இது ரொம்ப சாதாரணமா பேசுறது. இப்ப எல்லாம் என் வாழ்க்கையில கோபம் வருத்தம் அப்படின்னு ஒன்னு இல்லவே இல்ல வள்ளி”

“கோபம் கிறது கத்தி பேசுறதுலஇல்ல மாமா. நீ கண்டிப்பா பேசி, உன்ன விட்டு ரொம்ப தூரத்துல என்னை தள்ளி வைக்கிறியே அதுல தான் இருக்கு”

அன்று ஒரு நாள் மழை தூறிக் கொண்டிருந்த மாலை வேளையில் அரச மரத்தடி பிள்ளையார் கோயிலுக்கு அருகே நின்று கொண்டு தாவணியால் மழையைத் தடுக்க முக்காடு போட்டுக் கொண்டு, வள்ளி தனது வார்த்தையாலேயே பாலாஜியின் இதயத்தை கொத்திப்  பிடுங்கினாள்.

“மாமா, அப்பா சொல்றாரு என்னதான் நீ படிச்சிருந்தாலும் இப்போதைக்கு சரியான வேலைல கூட இல்லையா ரொம்ப கம்மியா தான் சம்பளம் வாங்குறியா இது நம்ம மூணு வேளை சாப்பிடுறதுக்குக் கூட பத்தாதாம்.

அதுவே தனசேகரன் மாமா கடை வச்சிருக்காரு, வீடு இருக்கு, பைக் கூட வாங்க போறாராம். அதனால அவருக்கு அவரக் கல்யாணம் பண்ணிக்கிறது தான் நல்லதுன்னு அம்மா அப்பா சொன்னாக. யோசிச்சு பார்த்தா எனக்கும் அதுதான் சரின்னு படுது மாமா.

எனக்கு அடுத்த மாசம் கல்யாணம் நிச்சயம் பண்ணி இருக்காங்க. நான் வெள்ளந்தியா உன் கிட்ட பழகுனத மனசுல வச்சுட்டு என் வாழ்க்கையை கெடுத்துறாதே”

அன்றொரு நாள் என்னை தள்ளி வைத்து விட்டு என் பங்காளிக்கு கழுத்தை நீட்டினாயே அதுபோல வா என்று கேட்க நாவு துடிக்கிறது. எப்படி தான் செய்ததை மறந்து விட்டு புண்ணிய ஆத்மா போல் பேசுகிறாள் என்று பாலாஜிக்கு எப்போதும் போல ஆச்சரியம் தோன்றியது.

“நான் தள்ளி வைக்கிறது தான் உனக்கு நல்லது வள்ளி இந்த மாதிரி போன் எல்லாம் பேசிட்டு இருக்காத உன் வீட்டுக்காரருக்கு தெரிஞ்சதுன்னா  உன் வீட்ல பிரச்சனை வரும்”

வழக்கம்போல் குரலை உயர்த்தாமலேயே பேசிவிட்டு  பதிலை கூட கேட்காமல் கட் செய்தான்.

கொஞ்சம் மனதே சரியில்லை. அத்துடன் சேர்ந்து கடைகளில் உண்ணும் உணவு கூட ஜீரண மண்டலத்தைப் பதம் பார்த்தது. வீட்டில் இது போன்று வயிறு பிரச்சனை என்றால் அவனது அம்மா இஞ்சியை நன்றாக நசுக்கி இல்லை சுக்குப் பொடி கலந்து நீர் மோர் தருவார். சீரகத்தை வெறுஞ்சட்டியில் வறுத்து, அம்மியில் நுணுக்கி பொடி செய்து ஒரு ஸ்பூன் அளவுக்கு வாயில் போட்டுவிட்டு சுடுதண்ணியைத் தருவார். பல வருடங்களாக அந்த பந்தம் இல்லை.

ஏதோ இந்த லக்ஷ்மி பவனில் மதியம் நல்ல உணவு கிடைப்பது எனது அதிர்ஷ்டம். அம்மா உயிருடன் இருந்த வரைக்கும் நல்ல பொன்னைப் பாத்து கல்யாணம் பண்ணிக்கோடா சமச்சுப் போட ஆள் வேணுமில என்பார்.

“நல்லா சமச்சு போட ஆள் வேணும்னா செவ்வந்தி பாட்டியைத்தான் கல்யாணம் பண்ணிக்கணும். நாளைக்கே தாத்தா கிட்ட பொண்ணு கேட்டுறலாமா?”

“உனக்கு வாய்கொழுப்பு அதிகண்டா… இங்க பாருடா ராசா உன்னை வேண்டான்னு ஒதுக்கிட்டு பணம் காசு  வசதிதான் வேணும்னு போனவளுக்காக உன் வாழ்க்கையைக் கெடுத்துக்காத.

உங்கப்பனை கல்யாணம் பண்ணிக்கனும்னு நான் நெனச்சதே இல்ல. வாத்தியார் மாப்பிள்ளயா பாருங்கன்னு அடம் பிடிச்சேன். எங்கப்பன் போட்ட அஞ்சு பவுனுக்கு உங்கப்பாதான் மாப்பிள்ளையா கிடைச்சார். அதுக்காக இடிஞ்சு போயா உக்காந்தேன். மனசத் தேத்திக்கிட்டு வாழல.

வாழ்க்கைல நம்ம நெனைச்சதெல்லாம் நடக்காதுடா. ஆனா நமக்கு நல்லது எதுவோ அது நிச்சயம் நடக்கும்”

எனக்கு இப்போதைக்கு சோப்பு கம்பனி வேலையும், லக்ஷ்மி பவன் சாப்பாடும்தான் நல்லது. கடவுளே அதையாச்சும்  ஒழுங்கா நடத்தி வை.

சாமியிடம் வேண்டிக் கொண்டு இன்று இன்னொரு அதிர்ச்சி இருப்பது தெரியாமலேயே கம்பனிக்கு வந்து வேலையை ஆரம்பித்தான் பாலாஜி.

1 thought on “உன் இதயம் பேசுகிறேன் – 13”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

உன் இதயம் பேசுகிறேன் – 8உன் இதயம் பேசுகிறேன் – 8

அத்தியாயம் – 8  ஓம் ஜெய் ஜெகதீஷு ஹரே… சுவாமி ஜெய் ஜெகதீஷு ஹரே… பக்து ஜனோம் கி  ஸங்கட் , தாஸு ஜனோம்  கி  ஸங்கட் … பக்கத்திலிருந்த மந்திரின் ஆரத்தி இசை கேட்டபடியே தலைவாரினான் பாலாஜி. நல்ல உயரம், அதற்குத் தகுந்த மாதிரி உடம்பு,

உன் இதயம் பேசுகிறேன் – 1உன் இதயம் பேசுகிறேன் – 1

அத்தியாயம் – 1 வாசல் கதவின் உள் தாழ்பாளை ஒருமுறைக்கு இருமுறை இழுத்துப் பார்த்து, வீடு பூட்டியிருப்பதை உறுதி செய்துக்கொண்டாள் பத்மினி. வீட்டில் புயலுக்குப் பின் ஏற்படும் அமைதி. அப்பாடா என்றிருந்தது. வேலை இல்லாமல் ஒன்றும் இல்லை. சிங்க் முழுவதும் பாத்திரங்கள் கழுவ சொல்லி

உன் இதயம் பேசுகிறேன் – 7உன் இதயம் பேசுகிறேன் – 7

அத்தியாயம் – 7 மறுநாள் காலை ராட்சனை போலத் தன்னருகே குறட்டை விட்டவண்ணம்  உறங்கும் பிரஷாந்தைக் காணவே எரிச்சலாக இருந்தது பத்மினிக்கு.  இந்த வீட்டில் யாரையுமே பிடிக்கவில்லைதான். பிறந்த வீட்டுக்கு சென்றால் பாராட்டி சீராட்டி வரவேற்கவா போகிறார்கள். ஏழு வருடத்திற்கு முன்பு