Tamil Madhura உன் இதயம் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன் – 12

உன் இதயம் பேசுகிறேன் – 12

அத்தியாயம் – 12

றுநாள் எழுந்ததும் முதல் நாள் சாயல் மாறாமலேயே எழுந்து வயிற்றைப் பிடித்துக் கொண்டு கழிவறைக்கு சென்றவண்ணம் இருந்த ப்ரஷாந்தைப் புதிராகப் பார்த்தபடியே காலை வேலைகளை முடித்தாள் பத்மினி.  

“நேத்து புளியும் நல்லெண்ணையும் கலந்து வாசம் வந்தப்பாயே நினைச்சேன். இன்னைக்கு உன்னால அவனுக்கு வயிறு சரியில்லாம் போச்சு. உனக்கு வாய்க்கு வக்கனையா புளி கேக்குதோ… இங்க வாடி… கடைசியா எப்ப குளிச்ச?” கூடத்தில் அனைவரின் முன்பும் மானத்தை வாங்கிய மாமியாரை எதுவுமே செய்ய முடியாத கையாகாலாத்தனம் அவள் கண்களில் நீரை வரவழைத்தது. 

“அவரும் பிடிச்சிருக்குன்னு சொன்ன….”

“யாரை ஏமாத்துற, அவன் பிடிச்சிருக்குன்னு வாயைத் திறந்து சொன்னானா… “

“சொல்லல… ஆனா… “ கடிதம் வந்ததை அவளிடம் சொல்லலாமா வேண்டாமா என்று குழம்பியவள். அப்போதைக்கு சொல்ல வேண்டாம் என்று முடிவு செய்தபடி “டிபன் மிச்சம் வைக்காம சாப்பிட்டாரே” என்றாள்.

ஏதோ ஒரு பறக்காவெட்டி இவளோட சாப்பாட்டையும் சாப்பிட்டிருக்கான் என்று நினைத்த அகிலா… “இந்த வயசில் இவ்வளவு எண்ணையும் காரமும் வயதுக்கு ஒத்துக்குமா? ஒரு பொம்பளை நாலையும் யோசிச்சுப் பாத்துட்டுத்தானே சமைக்கணும். முறுக்கு சுடுற மாதிரி சமையலும் செஞ்சா குடும்பம் விளங்கின மாதிரிதான். நீ என்ன செய்வியோ எனக்குத் தெரியாது பிரசாந்துக்கு நாளைக்கு உடம்பு சரியாயிடணும்” என்று கட்டளையிட்டாள்.

நாளைக்கு கூட உடம்பு சரி ஆகனுமா எப்படி ஆகும் கவலை பட்டப்படி சமையல் அறையை ஆராய்ந்த பத்மினியின் பெரிய கண்களுக்குள் அகப்பட்டது முதல் நாள் தோய்ந்திருந்த தயிர் பாத்திரம்

தயிர் சாதத்தை கட்டி வைத்துவிட்டு காரமே இல்லாத சுரைக்காய் கூட்டு மற்றொரு அடுக்கில் அடைத்தாள். விஷ்ணு பிரியாவுக்கு இன்னமும் உடல்நிலை சரியாகவில்லை. மருத்துவர் டெஸ்டுகள் எடுத்து வர வேண்டும் என்று பரிந்துரைத்திருந்தார். அவரது அருகாமை இல்லாமல் அவளுக்கு எதையோ பெரிதாக இழந்தது போலவே தோன்றியது.

பேப்பரையும் பேனாவையும் எடுத்து அடுத்த கடிதம் எழுத ஆரம்பித்தாள்.

 மன்னிச்சுக்கோங்க உங்களுக்கு நேத்து செஞ்ச புளி சாதம் ஒத்துக்காதது வருத்தமா இருக்கு. அது சரியாகறதுக்காக இன்னைக்கு தயிர் சாதமும் காரம் கம்மியா கூட்டும் செஞ்சு வெச்சிருக்கேன். செரிமானத்துக்காக விஷ்ணு பிரியா ஆன்ட்டி சாப்பிடற பெருங்காய லேகியம் ஒரு சின்ன உருண்டையும் இன்னொரு கவர்ல போட்டு வச்சிருக்கேன். மத்தியானம் ஒரு வாய் போட்டுக்கோங்க. 

இனிமே உங்க உடம்புக்கு ஒத்துக்கிற மாதிரி பார்த்து சமைக்கிறேன். ராத்திரிக்கு தோசை தான் சாப்பிடுவீங்க இன்னைக்கு மட்டும் இட்லியும் தயிரும் தொட்டு சாப்பிட்டீங்கன்னா உடம்பு சீக்கிரம் குணமாகிடும்.

எழுதிக் கொண்டே இருக்கும் பொழுது டப்பாவாலா வந்து வாசலில் அழைக்கும் சத்தம் கேட்டதும் வேகமாக காகிதத்தை மடித்து டிபன் பாக்ஸ் வைத்துவிட்டு  மதிய உணவை கொடுத்து அனுப்பினாள்.

இன்று மதியம் நாத்தனார் வேறு வீட்டிற்கு வரேன் என்று சொல்லி இருக்கிறார். அதனால் அவளுக்கு தனியாக ஏதாவது உணவு சமைக்க வேண்டும். இந்த சுரக்காய் கூட்டு எல்லாம் அவள் சாப்பிட மாட்டாள் வேகமாக காய்கறி தட்டை எடுத்து உருளைக்கிழங்கை வெட்ட ஆரம்பித்தாள். முட்டை இருக்கு அவள் வந்ததும் அவளுக்கு விருப்பம் என்றால் கேட்டுவிட்டு ஆம்லெட் ஒன்று போட்டு தந்துவிடலாம்.

பத்மினியின் நாத்தனார் பாம்பென்றும் சொல்ல முடியாது பழுது என்றும் சொல்ல முடியாது. அவள் மேல் பத்மினிக்கு பெரிதாக கோபம் எதுவும் இல்லை. 

நாத்தனாரால் பத்மினிக்கு பெரிதாக உதவி எதுவும் செய்ய முடியாது. ஆனால் உபத்திரவம் என்று பெரிதாக தரமாட்டாள். 

வரும்பொழுது போகும் பொழுதும் நன்றாக இருக்கிறாயா? சாப்பிட்டாயா? என்று சம்பிரதாயமாக கேள்விகளை கேட்டுச் செல்வாள். அதற்கு மேலும் தொடர்பு வைத்துக்கொள்ள பயம். ஏனென்றால் பத்மினி உதவி என்று கேட்டு என்னிடம் வந்து நின்று விடுவாளோ என்ற அச்சம் இருக்கலாம். மேலும் அவளது கணவன் புவனாவின் சொந்தக்காரன் என்ற ஒரு விஷயம் போதுமே நாத்தனார் பத்மினியை விட்டுத் தள்ளி நிற்பதற்கு.

சொல்லிய நேரத்திற்கு முன்னதாகவே நாத்தனார் வந்து விட்டாள் வரும்பொழுது முகத்தில் சோர்வு. 

“என்னடி சீக்கிரமாக வந்து நிக்கிற காலையில சாப்பாடு எதுவும் கிடையாது. தீர்ந்து போச்சு. வேணும்னா மத்தியானம் சாப்பிடு” என்றாள் அகிலா.

மகளுக்கே இந்த நிலைமை. மகளையும் மருமகனையும் கூப்பிட்டு சாப்பாடு கூட போட மனது வரவில்லை. இப்படி ஒரு பொம்பள இருப்பாளா என்று தன் மனதுக்குள் எண்ணியபடியே உருளைக்கிழங்கை அரிந்துக்  கொண்டிருந்தாள்.

அவள் மனதினுள் வந்து நின்ற மனசாட்சி ‘ஏண்டி பத்மினி உங்க வீட்ல மட்டும் உன்ன கூப்பிட்டு தாளிச்சுட்டாங்களா?

 சரியான இடத்துல கல்யாணம் பண்ணி வைக்கவில்லை என்று தெரியும். ஆனா எப்படி இருக்கான்னு கேக்குறதுக்கு கூடயா உங்க வீட்டில் நேரம் கிடையாது?’

பேசாம இரு, குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை. அப்பா எத்தனை தடவை உன்கிட்ட சொல்லிக் கொடுத்திருக்காரு

 நல்லா சொல்லிக் கொடுத்திருக்காரு உங்க அப்பா சுற்றம் குற்றம் பார்க்காமல் வீட்ல எல்லாரும் கிணத்துல தள்ளி விட்டாங்களே அதுக்கப்புறம்  ஒரு தடவை இங்கே வந்து உன்னை பார்த்தாங்களா?’

‘மனசாட்சி இதெல்லாம் நினைச்சேன்னு வச்சுக்கோ, என் மனசு திக்கத்து திசையத்து நின்னுடும். ஏதோ  அம்மா வீடு இருக்கு அப்படிங்கிற நம்பிக்கைல இல்லாத ஒன்றை இருக்கிறதா நினைச்சுட்டு இருக்கேன். அந்த நம்பிக்கை தான் என்னை வாழ வைக்குது. அதுவும் இல்லைன்னு சொல்லி இன்னமும் சோர்வடைய வச்சுறாதே.

 இப்ப 27 வயசு தான் ஆச்சு. இன்னும் எத்தனை வருஷம் உயிரோட இருக்க போறேன்னு எனக்கு தெரியல. அது வரைக்கும் ஓடுறதுக்காவது ஒரு சக்தி வேணும் இல்லையா?’

‘நிஜமான சக்தி இருந்தால் தான் உன்னால ஓட முடியும் பத்மினி. இப்ப நீ நெனச்சிட்டு இருக்கிறது இல்லாத ஒரு சக்தியை. குழந்தைகள் சக்திமான் டிரெஸ் போட்டுட்டு நான் சக்திமான் அப்படின்னு சொல்ற மாதிரி நீ உனக்கு சப்போர்ட்டே இல்லாத குடும்பம் உனக்கு எதுவுமே வந்து நிற்கும்னு நினைச்சுட்டு நிக்கிறியே…

‘ உன்னை நெனச்சு பரிதாபம் தான் பட முடியுது. வேற எதையாவது யோசி. உன் குடும்பத்தில் உன்னை கண்டுக்க கூட மாட்டாங்க. இப்ப நீ இருக்கிறதோ குடும்பமே கிடையாது’

என்று சொல்லிவிட்டு மனசாட்சி சென்றுவிட்டது

மனசாட்சி சொன்னதில்  நூறு சதவீத உண்மை இருக்கிறது. பல்லாயிரம் மைல் தொலைவு கூட ஒரு சின்ன கருவியால் சுருங்கிவிட்ட இந்த காலத்தில், அப்பாவால் அலைபேசியில் கூடவா பேச முடியாது? அவ்வப்போது பேசிக் கொண்டிருந்தாள் அம்மா. சென்றமுறை பத்மினி பிரசாந்த் வைத்த சிகரெட் சூட்டினை சொல்லி கண்கலங்கிய போதே

 ” அண்ணன் போன் உடைஞ்சிடுச்சா அதனால என் போனை அண்ணன் எடுத்துட்டான். அவனுக்கு அடிக்கடி போன் எல்லாம் பண்ணி தொந்தரவு பண்ணாத. வேலையில் பிஸியா இருப்பான். நீ தொந்தரவு பண்ணா என்னைய கூப்பிட்டு திட்டுவான். ஏதாவது முக்கியமான விஷயமா இருந்தா நானே உனக்கு போன் போடுறேன்.” என்று சொல்லி நைசாக பேசுவதை தவிர்த்து விட்டார்.

இவள் உயிர் போகும் வேதனையில் அழைத்தாலும் அண்ணன் எடுக்க மாட்டான்.

இவள் கல்யாணத்தன்று ஒரு பாட்டம் அழுது தீர்த்த அக்காவிற்கு அதன் பின்னர் பண்டிகையின் போது எடுத்த படத்தினை பார்த்ததும் பரிதாபம் எல்லாம் வடிந்துவிட்டது. பொறாமை மனதில் புகுந்து கொண்டது .

புது சேலை கட்டிக்கொண்டு அகிலாவின் இரண்டு நெக்லஸை போட்டுக்கொண்டு குடும்பத்துக்காக சம்பிரதாயமாக இரண்டு போட்டோ எடுத்தார்கள் .அதனை பிரசாந்த் உறவினர்களுக்கு எல்லாம் அனுப்பினான் அதைப் பார்த்ததும் அக்கா வயிறு என்ன காந்தியதோ தெரியவில்லை

“ஏண்டி புடிக்கல புடிக்கலைன்னு சொல்லிட்டு நிக்கிற மாதிரியா இருக்கு. பாரு கழுத்து நிறைய புடிச்ச புடி நகய போட்டு வச்சிருக்கான் உன் வீட்டுக்காரன். அதைப் பார்த்தது உனக்கு வயசு வித்தியாசம் எல்லாம் மறஞ்சு மனசு ஒண்ணா இருக்குமே.

சரி சொல்லணும் நினைச்சேன் புவனா வீட்லதான் என் வீட்டுக்காரர் வேலைக்கு சேர்ந்து இருக்காரு அவங்க பையன் அரசியல்ல பயங்கர செல்வாக்கும் அவன் மூலமா ஒரு கவுன்சிலர் அவாவது பார்க்கிறோம். நீ பாட்டுக்கு கண்ணை கசக்கிட்டு இங்க வந்து நிக்காதே. நம்ம குடும்பமே ஆடிடும்.

 இப்பதான் வீட்ல அப்பாவோட மருந்துக்கும். மாசம் முழுசும் ரெண்டு வேலை சாப்பாடும் சாப்பிட்டுட்டு இருக்கோம். அதை மனசுல வச்சுட்டு நடந்துக்கோ வாழ்வோ சாவோ இனிமே உனக்கு அந்த வீட்ல தான்”

பணம் என்ற ஒரு விஷயம் காரணமாக கொண்டு ஒரு பெண்ணின் உடல் வேதனையும் மனம் வேதனை இது இரண்டையும் மற்றவர்களால் புறம் தள்ளப்பட்டது.

வெளியில் அகிலாவும் மகளும் சற்று உரத்தக் குரலிலே பேசிக்கொண்டது காதில் கேட்டது

“ஏம்மா சமந்தா வீட்டு நல்லது கெட்டது எல்லாம் வரவே மாட்டியா? நல்லதுக்கு வரல நானும் பரவால்ல இந்த மாதிரி கெட்டதுக்கு நீ வராம இருந்தா என் வீட்டு ஆளுங்க  காரி துப்ப மாட்டாங்களா?’

“திண்ணையை தேச்சுட்டு வெட்டி கதை பேசுறவன் சொல்றதெல்லாம் கேட்டுட்டு இருந்தா நம்ம உறுப்புட்டாப்ல தான்”

பிரசாந்தையாவது வர சொல்லு

அவன் ஊர்ல இல்ல எப்ப வருவான்னு எனக்கே தெரியாது

இன்று தெளிவாக அகிலாவின் குரல் கேட்டது எம்மா எங்கம்மா என்னம்மா பொய் சொல்லுது நல்ல வேலை நாத்தனார் வந்து எந்த ஊருக்கு போய் இருக்கான்னு நம்ம கிட்ட கேட்க மாட்டான் என எனக்கு இந்த விவரமும் தெரியாதுன்னு அந்த அம்மாவுக்கும் தெரியும்

சரி அப்ப நான் பத்மினிய கூட்டிட்டு போயிட்டு வரேன்

அவளை கூட்டிட்டு போனா என்ன யாருடி பாத்துக்குறது

நம்ம வீட்டு ஆளுங்க போக வேண்டாமா என்னமா இப்படி  பேசுற

அப்படி தாண்டி பேசுவேன்.ஊர்ல என் தங்கச்சியை கூட்டிட்டு போயிட்டு வா. என் சார்பா எல்லா வேலையும் செய்வா. ட்ரெயினுக்காக பணத்த அங்க செய் முறையா செஞ்சிடு வாயைத் திறந்து கத்துற காக்கா கூட்டம் எல்லாம் தீனிய கொத்திட்டு ஓடிப் போயிரும்”

மாமியார் பேசியதை காதில் வாங்கிய படியே ‘என்ன பொம்பளை இவ? காசாலே எல்லாரும் அடிக்கிறா பாரு? இவளோட காசை வச்சு மானங்கெட்ட சோறு சாப்பிடுற இந்த வாழ்க்கை நமக்கெல்லாம் தேவையா?’

அவளது யோசனையை கலைப்பது போல் சமையலறைக்கே வந்து விட்டாள் நாத்தனார்

“அண்ணி உருளைக்கிழங்கு செஞ்சிட்டிருக்கேன்.  காலைல சுரக்காய்  சென்சேன். உங்களுக்கு பிடிக்காதுல்ல. ஆம்லெட் ஒன்னு போட்டுடறேன்”

“பத்மினி எனக்காக ஸ்பெஷலா எதுவும் செய்யாத, இருக்கிறத சாப்பிடுக்குறேன்”

ஆச்சரியமாக இருந்தது பத்மினிக்கு. அவளை தொல்லை படுத்தாத ஒரு ஜீவன் இந்த வீட்டிலும் இருக்கிறது

“வந்து, ஊருக்கு கிளம்பிட்டு இருக்காரு உங்க அண்ணன். பிரஷாந்த் உங்க வீட்ல தரச் சொல்லி பத்தாயிரம் ரூபா தந்து இருக்கான். உன் வீட்டு அட்ரஸ் தரியா அத தவிர வேற ஏதாவது உங்க அம்மா  கிட்ட சொல்லும் சொல்லனுமா”

“போன மாசம் பணம் அனுப்பிட்டார்”

“நடுவுல வேலை இல்லாதப்ப கொஞ்ச நாள் பணம் அனுப்பலையாமே. அதையும் சேர்த்து இப்ப கையில தரச் சொல்லிட்டான்”

பத்மினியின் மனதில் அந்த கடிதம் வந்து போனது என்னென்னமோ வீட்டில் மாற்றம் நடக்கிறது. மனதுக்கு கொஞ்சம் சந்தோஷமாகவே இருந்தது.

“இதோ எழுதிக் கொடுத்துடறேன் அண்ணி” 

வேகமாய் விலாசத்தை சீட்டில் எழுதிக் கொண்டு வந்து தந்தாள்

அதனை  வாங்கிப் பார்த்த நாத்தனார் “இது தமிழ்ல எழுதி இருக்கு எனக்கு தமிழ் எழுத படிக்க தெரியாது. இங்கிலீஷ்ல எழுதித்தா”

ஓ தமிழ் தெரியாதா என்றபடி இன்னொரு சீட்டில் அதனை ஆங்கிலத்தில் எழுதிக் கொடுத்தாள்

“அப்புறம் அவருக்கு மட்டும் எப்படி தமிழ் தெரியுது”

“யாரு பிரசாந்தா?”

“ஆமா அண்ணி”

“அவனுக்கும் தமிழ் எழுத படிக்க தெரியாது. எனக்காவது தமிழ் புரியுது அவனுக்கு தமிழ் எழுத்துக்கும் தெலுங்குக்கும் கூட வித்தியாசம் தெரியாது”

பத்மினியின் தலையில் ஒரு இடியை இறக்கியது தெரியாமல் அங்கிருந்து நகர்ந்தாள் அவளது நாத்தனார்.

1 thought on “உன் இதயம் பேசுகிறேன் – 12”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

உன் இதயம் பேசுகிறேன் – 8உன் இதயம் பேசுகிறேன் – 8

அத்தியாயம் – 8  ஓம் ஜெய் ஜெகதீஷு ஹரே… சுவாமி ஜெய் ஜெகதீஷு ஹரே… பக்து ஜனோம் கி  ஸங்கட் , தாஸு ஜனோம்  கி  ஸங்கட் … பக்கத்திலிருந்த மந்திரின் ஆரத்தி இசை கேட்டபடியே தலைவாரினான் பாலாஜி. நல்ல உயரம், அதற்குத் தகுந்த மாதிரி உடம்பு,

உன் இதயம் பேசுகிறேன் – 2உன் இதயம் பேசுகிறேன் – 2

அத்தியாயம் – 2 பத்மினி, சராசரி உயரம், தென்னகத்து மாநிறம், இடையைத் தொடும் கூந்தல், முகத்தைப் பார்த்தவுடன் வசீகரிக்கும் பெரிய கண்கள், அடர்த்தியான புருவம், சினிமா நடிகைகள் ஆசைப்பட்டு பிளாஸ்டிக் சர்ஜரி செய்துக் கொள்ளும் மூக்கு அவளுக்கு இயல்பாகவே இருந்தது. வரைந்து வைத்தார்

உன் இதயம் பேசுகிறேன் – 18உன் இதயம் பேசுகிறேன் – 18

அத்தியாயம் – 18 நன்றாக தூங்கி எழுந்ததும் அமாவாசைக்கு சற்று காய்ச்சல் விட்டது போல் தோன்றியது. மூன்று நாட்களாக வீட்டுக்குள்ளேயே சுத்தியது வேறு அவனுக்கு அடைத்து போட்டார் போல் இருந்தது. இதை என்ன  சுற்றுவது? மிகச்சிறிய ஹால் மூன்று பேர் படுத்தால்