அத்தியாயம் – 22
மலை கிராமத்து மனிதர்களிடம் கழித்த பொழுது நன்றாகவே இருந்தது சஷ்டிக்கும் மீராவுக்கும். பொழுது போக்கு ஒரு பக்கம் இருந்தாலும் எடுத்துக் கொண்ட பணியினை விடுவதாக இல்லை இருவரும். விவரம் தெரிந்தது போலத் தெரிந்த நாலைந்து பேரிடம் அந்த சென்ட்டினைக் கொடுத்து முயற்சித்துப் பார்க்க சொன்னாள் மீரா. என்னமாவது விவரம் கிடைக்காதா என்ற நப்பாசைதான். இருந்தும் பலன் என்னவோ பூஜ்ஜியம்தான் அவளுக்கு.
“என்னம்மா தண்ணி இது. தலை நோவுது. பட்டினத்துக் காரங்க இதை எப்படித்தான் போட்டுக்கிறீங்களோ தெரியல”
“நீங்க வாசமா இருக்கணும்னா என்ன செய்வீங்க”
“இந்த மலைக் காட்டுல வாசனைக்கா பஞ்சம். மஞ்சள் கிழங்கை அரைச்சுக் குளிப்போம். காட்டு வேலையை முடிச்சுட்டு வீட்டுக்கு வந்தா முள்ளும் கல்லும் கீறி உடம்பெல்லாம் நோவும். ஒரே சூடா தண்ணி விளாவி மூலிகைப் பொடி போட்டுக் குளிச்சா உடம்பு அசதி எல்லாம் காணாம போயி இன்னும் நாலு ஆளு வேலை செய்யத் தெம்பு வரும்”
“அதெல்லாம் உடல் நலத்துக்கு. வாசனையா இருக்க என்ன செய்வீங்க?”
“வாசனை என்ன பெரிய வாசனை. தலைக்கு சாம்பிராணி, உடம்புக்கு ஜவ்வாது புனுகு, புதுசா கல்யாணமானப் பொண்ணுங்களுக்கு காட்டு மல்லி. ரதியும் மம்முதனும் இங்கருக்க காட்டு மல்லித் தோட்டத்துக்குத்தான் வருவாங்களாம். அதனால கல்யாணமானதும் அந்தத் தோட்டத்துக்கு நிதமும் போயி பூப்போட்டு கும்பிட்டுட்டு வருவோம்”
“அவ்வளவுதானா”
“ஏழு ஜென்மக் கணக்கு ஒவ்வொருத்தரோட பொறப்பிலும் தலைல எழுதிருக்குமாம். அத்தனையும் சொல்லத்தான் எனக்கு நேரமிருக்கா இல்லக் கேக்கத்தான் உனக்கு நேரமிருக்கா… இன்னும் ஒண்ணு ரெண்டு சொல்லுறேன் கவலையா இருந்தா மருதோன்றிபூ, சிறு காயம் சிராய்ப்புக்கு ரோஜாத் தைலம், குடும்ப வாழ்க்கை வேண்டாம்னு தீர்மானம் பண்ணா பவளமல்லி ”
“இதெல்லாம் நிஜமா சஷ்டி… இதுக்குக் கூடவா வாசனை இருக்கும். இதைப்பத்தி யாராவது டெஸ்ட் பண்ணி ப்ரூஃப் தந்திருக்காங்களா?”
“தெரியல… நான் ஒரு பவளமல்லி தேடி ஒரு ப்ராஜக்ட் விஷயமா அலைஞ்சப்ப அனுமான் கோவிலில் தான் பவளமல்லி மரம் இருந்தது. அவரோ பிரம்மச்சாரி. அதனால இது ரெண்டையும் முடிச்சுப் போட்டுப் பாத்தா கரெக்டா இருக்கும்னு தோணுது. இருந்தாலும் வாயில் வந்ததை அப்படியே நம்பாம ஆராய்ச்சி பண்றது நல்லது. முடிவு தெரியுற வரை நீயும் உன் காதல் பெர்ஃப்யூம்ல கலக்குற பொருட்கள் மேல ஒரு கண்ணு வச்சுக்கோ”
“நிஜம்தான். ஆனால் நீங்க எதுக்கு அனுமார் கோவிலுக்கு போறீங்க? இதுவரைக்கும் சரி, ஆனா இனிமே நீங்க அனுமார் கோவிலுக்குப் போக வேண்டாம். நம்ம ரெண்டு பேரும் மல்லிகைத் தோட்டத்துக்கே போகலாம்” ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டே மீரா சொல்ல…
“ஆமா மீரா நானும் அந்தத் தோட்டத்துக்குப் போகணும்னு பார்த்தேன். மல்லிகைல நிறைய வெரைட்டி இருக்கே. அந்தத் தோட்டத்தில் இருக்குறது அடுக்குமல்லியா, ஊசிமல்லியா, ஜாதிமல்லியான்னு பாக்கணும்”
“சஷ்டி நான் அங்க வெயிட் பண்றேன். நீ அப்படியே அந்தப் பாட்டிக்கிட்ட உன் மூளை வளர்ச்சிக்கு ஏதாவது தைலம் இருக்கான்னும் கேளு” என்று அவனை முறைத்துக் கொண்டே சென்றாள் மீரா.
அவள் நகர்ந்தவுடன் “பேராண்டி” என்று அவனது சட்டையை இழுத்தப் பாட்டி.
“ஒரு பொண்ணு உன்னைப் பிடிச்சிருக்குன்னு இதைவிடத் தெளிவா சொல்ல முடியாது. போயி ரெண்டு பேரும் ரதி மம்முதனை கும்பிட்டுட்டு வாங்க” என்றதும் எதிர்பாராத அதிர்ச்சியில் என்ன செய்வது என்று தெரியாமல் திக்கு முக்காடிப் போனான் சஷ்டி.
நிலவொளியில் வெண்பஞ்சு மேகக் கூட்டம் போல மல்லிகை மலர்கள் பூத்துக் குலுங்க அதன் நடுவில் தேவதைப் பெண்ணைப் போன்று மின்னினாள் மீரா.
வேக வேகமாய் ஓடி வந்து மீராவின் முன் வந்து நின்ற சஷ்டிக்கு மூச்சிறைத்தது. அதற்கு மேலே என்ன சொல்வது என்பது புரியாமல் தலையில் தனது இரண்டு கைகளை வைத்துக் கொண்டு “மீரா… மீரா… இப்ப என்னவோ சொன்னியே என்னது?”
“என்ன சொன்னேன் நினைவில்லையே”
“விளையாடாதே மீரா… “
“சஷ்டி முறைப் பொண்ணு தானே விளையாடுவாங்கன்னு சொன்னிங்க. நான் உங்க முறைப்பொண்ணா”
“கல்யாணம் பண்ணிக்கப் போறவங்க கூட அப்படித்தான்”
“அப்படின்னா… “
“வந்து நீ என்னைக் கிண்டல் பண்ணா ரெண்டாவது கேட்டக்கிரின்னு சொல்ல வந்தேன்”
“அடேங்கப்பா… என்ன ஒரு வெட்கம்… ரெண்டாவதுன்னே வச்சுக்கோங்க சஷ்டி அடுத்த கட்டமா என்ன செய்யப்போறீங்க”
அப்படியே திகைத்துப் போய் அமர்ந்தவன் “மீரா, நானெல்லாம் பக்கா தமிழ் பையன். நீ இந்த மாதிரி எல்லாம் விளையாண்டா அதை உண்மைன்னு நினைக்க ஆரம்பிச்சுடுவேன். ஏற்கனவே கனவுல எல்லாம் நீதான் வந்துட்டு இருக்க, அனாவசியமா என் மனசில் ஆசையை வளத்து விட்டுட்டு கை விட்டுடாதே”
“சஷ்டி… பக்கா தமிழ் பையன் கூட அவன்கிட்ட ஒரு பொண்ணே நேரில் வந்து பிரபோஸ் பண்ணும்போது இப்படி டயலாக் பேசிட்டு நிக்க மாட்டான்”
சஷ்டி சந்தோஷம் தாங்காமல் சிரித்துக் கொண்டான் பின் சந்தேகத்தோடு “இங்கபாரு மீரா என்னைப் பொறுத்தவரை லவ் எல்லாம் டைம்பாஸ் கிடையாது. கல்யாணம் பண்ணிட்டு கடைசி வரை குடும்பம் நடத்தணும். உனக்கு ஓகே தானே”
“ராஜீவோட பொண்ணுகிட்ட கேக்குற கேள்வியா இது. எங்கம்மாவும் எங்கப்பாவும் காதலுக்காகவே எவ்வளவோ கஷ்டங்களை அனுபவிச்சவங்க. அவங்களோட முட்டாள்தனமான நடவடிக்கையால நானும்”
“அதேதான் உனக்கு உங்கம்மா அப்பாவோட வாழ்க்கையைப் பார்த்து காதல் வேண்டாம்னு முடிவுக்கு வந்திருக்கலாம்… “
“அதில்லாம் ஒரு காட்டானைப் பாக்குற வரைக்கும்தான் இருந்தது”
“நான் காட்டானா… காட்டான் என்ன செய்வான் தெரியுமா” அவளை நெருங்கினான்.
தோட்டத்தின் நடுவில் மரத்தில் செதுக்கிய பொம்மைகள் இரண்டு. ஒன்றை ஒன்று அணைத்தபடி, பெண் பொம்மை இமைகள் வெட்கத்தால் கவிழ்ந்திருக்க ஆண் பொம்மையின் மீசை கருநிறத்தில் வண்ணம் தீட்டபட்டு தலைப்பாகை கட்டப்பட்டிருந்தது. மாலை நேரமும் மல்லிகை வாசமும் மோகமுள்ளை இருவரின் மனதிலும் தைத்தது. வாசத்தின் மத்தியில் புதிதாய் ஒரு நேசம் உதயமானது.
“ஹே இந்த வாசம்… வாசம்… உன்னோட வாசம்”
“சஷ்டி, இன்னைக்கு நான் பெர்ஃப்யூம் எதுவும் போடல… “ மீராவின் முகம் வெட்கத்தால் சிவந்தது.
“இருந்தாலும்… “ அவளை மேலும் முகர்ந்து பார்த்தவன். “இந்த ரோஜா வாசம் அப்பறம் பேஸ் நோட் இது ரெண்டும்தான் நம்ம பெர்ஃப்யூம்ல மிஸ் ஆனது. அந்த பேஸ் நோட் கூட இங்க எங்கிருந்தோ வருது மீரா”
“என்ன சொல்றீங்க”
ரொமான்ஸ் மூடிலிருந்து வொர்கிங் மோடுக்கு இருவரும் மாறினார்.
காற்றில் வாசம் பிடித்துக் கொண்டே மன்மதன் ரதி அருகே இருந்த சிலையின் கீழே தூபக்காலில் எரிந்துக் கொண்டிருந்த புகையை முகர்ந்தான்.
“மீரா… அந்த பேஸ் நோட் இந்த வாசம்தான்”
“நிஜமாவா” அந்த தூபக்காலுக்கு அருகே இருந்த சிறு கட்டைகளைக் கிளறியவன்.
“அகில் கட்டை. இதை ஸ்மோக் எஃபக்ட் மாதிரி ஒரு சின்ன டிண்ட் சேர்த்தால் இந்த மாதிரி ஒரு தேவலோக நறுமணம் வருது பாரேன்”
“எல்லாமே கண்டுபிடிச்சாச்சா சஷ்டி கண்ணா” அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டே கேட்டாள். வெட்கத்தில் நெளிந்தான் சஷ்டி.
“மீரா… லவ் சொன்ன அஞ்சு நிமிஷத்தில் இதெல்லாம் ஓவரா இல்லை”
“என்ன செய்றது சஷ்டி இதயம்தான் சரிந்ததே உன்னிடம் மெல்லன்னு பாட்டு பாடனும் போலிருக்கே”
“அதெல்லாம் கல்யாணத்துக்கு அப்பறம்தான். நீ கொஞ்சம் தள்ளியே நில்லு”
அவன் கன்னத்தில் அழுத்தமாக இதழ்களைப் பதித்தவள் “சஷ்டி இதெல்லாம் நான் சொல்ல வேண்டிய டையலாக்… மாத்தி சொல்லாதடா”
“டா.. வா… “
“ஏன் டான்னு கூப்பிட்டா கல்யாணம் பண்ணிக்க மாட்டியா”
“அப்படியெல்லாம் இல்ல, ஆனா அம்மா அப்பாக்கு முன்னாடி மட்டும் வேண்டாம் ப்ளீஸ்”
திடீர் கரடியாக “ரதியையும் மம்மதனையும் தலைவர் கூட்டிட்டு வர சொன்னார்” என்று ஒரு மலைஜாதி ஆள் வந்து அழைக்க அங்கே அவர்களுக்கு ஒரு ஆச்சிரியம் காத்திருந்தது ராஜீவின் நண்பரின் வடிவில்.
வெள்ளை நிற ஜிப்பா ஒன்றினை அணிந்திருந்த அந்தப் பெரியவர் அவளைக் கண்டவுடன் அன்புடன் கைகளைப் பற்றிக் கொண்டார். அவரின் உடையின் நிறத்திலேயே தாடி.
“பேட்டி… அப்பாவைப் பத்தி சமீபமாத்தான் தெரிஞ்சது. பாக்க வர என் உடம்பு ஒத்துழைக்கல. நீ இங்க வந்திருக்கன்னு தெரிஞ்சதும் ஓடி வந்துட்டேன்” என்று அன்போடு அவளை விசாரித்தார் அவர்.
“நான் நினைக்கவே இல்லைம்மா. சில மாசத்துக்கு முன்னாடி கூட என் கூட போன்ல பேசுறப்ப ரோஜா சென்ட் அதிக அளவில் தேவைப்படும்னு சொல்லிருந்தார். நானும் என்னோட தோட்டத்தில் இருந்த ரோஜாவையும் சேர்த்து செண்ட்டு எடுத்து வச்சிருந்தேன்” என்று வருந்தினார்.
“ரோஜா சென்ட்டா… ஏதாவது ஸ்பெஷல் பிராசஸ் பண்ணதா” ஆர்வமாய் விசாரித்தான் சஷ்டி.
“ஸ்பெசலா எதுவுமே செய்யாததுதான் ஸ்பெஷல். எல்லாம் அந்தக்காலத்தில் இயற்கை முறைல தயாரிச்ச ரோஜா அத்தர்தான். நான் ஆல்கஹால் கலந்த எந்த வாசனைப் பொருளையும் உபயோகிக்க மாட்டேன். அதனால அந்தக் காலத்தில் அப்படின்னா முகலாயர்கள் காலத்திலிருந்து அத்தர் தயாரிச்ச முறையை இன்னமும் கடைபிடிக்கிற ஒரு சின்ன கம்பனி இருக்கு. அதில் ரொம்ப தெரிஞ்ச குடும்பங்களுக்கு மட்டும் பரம்பரை பரம்பரையா அத்தர் தயாரிச்சு தருவாங்க.
எல்லாம் மெஷின் எதுவும் இல்லாம பாரம்பரிய முறைல செய்றதுதான். தயாரிக்க மாசக்கணக்காகும் வாசமும் செயற்கை மாதிரி வருஷக்கணக்கா நிக்காது. அதைத்தான் உங்கப்பா பெரிய அளவில் ஆர்டர் தந்திருந்தார். நானும் தயாரிச்சுட்டு காத்துட்டு இருந்தப்பத்தான் இந்த செய்தி வந்தது”
மகிழ்ச்சி கலந்த வியப்போடு சஷ்டியும் மீராவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
“இனிமே இது உபயோகப்படுமான்னு தெரியல. இது இயற்கை முறையில் செஞ்சதால சீக்கிரம் உபயோகப்படுத்தணும். அதனால உங்கப்பா ஆர்டர் செய்ததை மத்தவங்களுக்குத் தரச் சொல்லி நாளைக்கு போன் போட்டு சொல்லிடுறேன்”
“வேணாம் அங்கிள். நானே எல்லாத்தையும் வாங்கிக்கிறேன்”
“அவ்வளவையுமா… வாங்கி என்ன செய்யப்போறம்மா?!
“எங்கப்பவோட கனவை நினைவாக்கப் போறேன்”