Tamil Madhura பூவெல்லாம் உன் வாசம் தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 4’

தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 4’

அத்தியாயம் – 4

ரேஷ் மல்ஹோத்ரா மும்பையின் மிகப் பெரிய புள்ளி. ரியல் எஸ்டேட், ஸ்டாக் மார்க்கெட், ஐடி போன்ற இன்றைய பணம் கொழிக்கும் தொழிலில் முதலீடு செய்து சமீபத்தில் பணக்காரர் ஆனவர் இல்லை. தலைமுறைப் பணக்காரர். அவரது தாத்தா காலத்தில் பஞ்சாபில் மூட்டையில் பணம் கட்டிக் கொண்டு வந்து மும்பையில் செட்டிலானவர்கள். அங்கேயே தனது தொழில் சாம்ராஜ்யத்தை உருவாக்கிக் கொண்டவர்கள். இவர்கள் முதலீடு எல்லாம் பரம்பரைத் தொழில்களில் வருமானத்தைக் கொட்டிக் கொண்டிருக்கிறது. இருந்தாலும் குடும்பப் பெருமை, தொழில் பார்ட்னரின் குழந்தைகளுடன் திருமணம் செய்வித்து அவர்களைக் குடும்பத்தோடு இணைத்துக் கொள்ளுதல் என்று அந்த சொஸைட்டிக்கே உரிய குணங்களை அச்சுப் பிசகாமல் பின்பற்றுவார்.

நரேஷ் மல்ஹோத்ராவிற்கு ரேணுவுடன் நடந்த திருமணம் கூட அப்படித்தான். மூன்று குழந்தைகள் அவருக்கு. மூத்தவன் ரஞ்சித் அப்பா சொல் தட்டாத பிள்ளை அவர் கை காட்டிய சுஷ்மாவைத் திருமணம் செய்து கொண்டு மூன்று பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகிறான். அடுத்து பிறந்த காஜல் கூட தந்தையின் பார்ட்னர் மகனுடன் வாழ்க்கையை அமைத்துக் கொண்டு நாளொரு பார்ட்டியும் பொழுதொரு டூருமாய் பிசியாய் இருக்கிறாள். அவர்க்கு மூன்றாவதாகப் பிறந்த ராஜீவ் தான் சொன்னதை கொஞ்சம் கூடக் கேட்காமல் இருக்கும் பிள்ளை.

மல்கோத்ராவின் குடும்பத்தில் சோப் கம்பனி ஒன்றை  ஆரம்பித்த சமயம் நம்மூர் மக்கள் சீயக்காயையும் பயத்தமாவையும் கொண்டு திருப்தியாய் அழுக்கு போகக் குளித்துக் கொண்டிருந்தார்கள். அப்போதெல்லாம் சவுக்காரம் சீமான் வீட்டில் காணப்படுவது. சரியான சமயத்தில் ஆரம்பித்தது ரீமா சோப்பு நிறுவனம். ரேணுவின் குடும்பமும் நரேஷின் குடும்பமும் பங்குதாரர்களாக இணைந்தது அந்த நிறுவனத்தில் தான். திருமணத்திற்குப் பின் நரேஷுக்கு அந்த நிறுவனம் கிட்டியதும் லாபகரமாகத்தான் போனது. அதன்பின் பல நிறுவனங்கள் படையெடுக்கத் தொடங்கின. போட்டியை சமாளிக்க நரேஷ் குழந்தைகள் சோப்பு, பெண்கள் சோப்பு, ஆண்கள் சோப்பு என்று விதவிதமான சோப்புக்களைக் களமிறக்கினார். அது கூட அவரது இளைய மகனின் யோசனைப்படிதான்.

பெரியவன் ரஞ்சித் வியாபாரத்தை கவனிக்க, ஒரு நாள் இரவு உணவு முடிந்தவுடன் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த நரேஷிடம் கல்லூரி மாணவனான  ராஜீவ் மற்றொரு யோசனையுடன் வந்தான்.

“அப்பா… இந்த சோப்பு நிறுவனம் தவிர மற்ற நிறுவனம் ஒண்ணு தொடங்கி டைவர்சிபை பண்ணா நல்லாருக்கும்”

“இன்னொரு நிறுவனம் தொடங்க இப்ப என்ன தேவை வந்தது ராஜீவ். நம்ம தொழில் நல்லாத்தானே போயிட்டு இருக்கு.அதுவும் இல்லாம சோப்பு நிறுவனத்தால் மட்டும்தான் நமக்கு வருமானம்னு இல்லை. பல அசையும் அசையா நிறுவனங்களில் நம்ம பங்குதாரர்கள். ரீமாவில் பிரச்சனை வந்தால் விட்டுட்டு வேற தொழிலில் முதலீடு செய்யலாம்”

மறுப்பாகத் தலையசைத்தான் ராஜீவ் “இல்லப்பா எத்தனையோ தொழில்களில் நம்ம முதலீடு செஞ்சிருந்தாலும் ரீமாதான் நம்ம முகம். ரீமா வழியாத்தான் உலகம் நம்மைப் பாக்குது. அதனால் நம்ம நிறுவனத்தை அப்படியே விட்டுட முடியாது. அடுத்தடுத்த லெவலுக்கு எடுத்துட்டுப் போயிட்டே இருக்கணும்”

“சரி ரீமா பத்தி முதலில் பேசலாம். இப்ப மார்க்கெட்டில் நல்லாத்தானே போயிட்டு இருக்கு”

“இந்த வருட லாபம் போன வருடத்தை விட கொஞ்சம் கம்மியா இருக்கு” என்று மறுத்தான்

“சில லட்சங்கள் தானே. அது கூட சின்ன சின்ன நிறுவனங்கள் நம்மைக் காப்பியடிச்சு சந்தன சோப்பு, மூலிகை சோப்புன்னு ஆரம்பிச்சிருக்காங்க. அந்த சோப்புக்களுக்குத் தரம் குறைவு. அதனால இன்னும் சில தடவை வாங்கிட்டு மக்கள் நம்ம சோப்புக்குத் திரும்பிடுவாங்க. அதனால ரொம்ப அலட்டிக்காதே”

“தப்புக்கணக்கு போடுறீங்க அப்பா. அந்த சோப்பை மக்கள் வாங்குறதுக்கு முதல் காரணம் விலை. நம்மை விடப் பாதி விலைக்குத் தராங்க. அதனாலத்தான் எனக்குக் கவலையே”

“ஒரு நல்ல சந்தன சோப்பு செய்ய பதினஞ்சு வருசத்துக்கு மேல வளர்ந்த சந்தன மரத்தோடஒரிஜினல் சந்தனக் கட்டையை எடுத்து உடைச்சு மேஷனரி வச்சு பொடியாக்குறோம். அப்பறம் டிஸ்டிலேஷன் பிராசஸ் ல நீராவியை மெஷின்ல அனுப்பி அந்தத் தண்ணிலே மேலாப்புல இருக்குற க்ரூட் சந்தன எண்ணையை எடுத்து பல படிகள் பிராசஸ் செய்து கடைசில சந்தன சோப்பாத் தரோம். இத்தனைக்கும் எவ்வளவு செலவாகும். ஒரு தரமான ப்ராடக்ட்டுக்கு நியாயமான விலைதான் வச்சிருக்கோம். இதைவிடக் குறைக்க முடியும்னு எனக்குத் தோணலை” நரேஷ் உண்மையை மகனிடம் சொன்னார்.

“குறைக்க முடியாது. ஆனால் நம்ம ப்ராடக்ட் வாங்கும் நடுத்தர குடும்பத்து மக்களுக்கு ஒரு சோப்பில் ரெண்டு மூணு ரூபாய் விலை வித்யாசம் இருந்தால் கூட ஒரு மாசத்துக்கு எவ்வளவு சிக்கனம் பிடிக்கலாம்னுதான் மனசு கணக்கு போதும். ஒரு வருஷத்தில் மிச்சம் பிடிக்கும் நூறு ரூபாய்க்காக தரத்தைக் குறைச்சுக்கக் கூட அவங்க தயங்குறதில்லை”

“இதைத் தடுக்க என்னதான் வழின்னு நினைக்கிற. நம்ம இதுக்கு மேல விலை குறைக்கவே முடியாது. மத்தவங்களை மாதிரி விலைக்காகத் தரத்தைக் கம்மி பண்றது எதிக்ஸ் இல்லை”

“இப்ப போற சாண்டல்வுட்டை எதுவும் பண்ண வேண்டாம். முடிஞ்சால் அதோட குவாலிட்டியை முடிஞ்ச அளவுக்கு அதிகமாக்கி இன்னமும் விலை ஏத்தலாம்”

மகன் சொல்வது சுத்தமாகப் புரியவில்லை நரேஷுக்கு “என்னடா இதுவரைக்கும் சொன்னதுக்கு சம்பந்தமே இல்லாத ஒரு தீர்வு சொல்ற”

“உண்மைதான்பா. கையோட விலை குறைவான சோப்பு ஒண்ணையும் நாம அறிமுகப் படுத்தணும். மூலிகை, விலை குறைவா கிடைக்கும் மூலப் பொருட்களை வச்சு ஒரு சோப்பு நடுத்தர மக்கள் பயன்படுத்த… விலை அதிகப்படுத்தின சாண்டில்வுட் பணக்காரர்களின் பயன்பாட்டுக்கு. லக்ஸுரி சோப்ன்னு பாலிவுட் நடிகைகளை வச்சு விளம்பரம் போடலாம்”

அது சரியான யோசனையாகப் பட்டது நரேஷுக்கு.

“அப்படியே டைவெர்சிஃபை பண்ண ஒரு பெர்ஃப்யூம் நிறுவனம் ஆரம்பிக்கணும்”

“முதல் யோசனையை அமுல்படுத்தலாம். இது சரியா வந்தா இரண்டாவதை சொல்லு” என்று மகனை அப்போதைக்கு அடக்கினார்.

ஆனால் அவன் கல்லூரி முடித்ததும் தந்தையே மறுபடியும் ஆரம்பித்தார். “ராஜீவ் உன்னோட யோசனைப்படி நடந்ததில் அமோக லாபம். எங்க எல்லாருக்கும் சந்தோஷம். உன் மேல நம்பிக்கை வச்சு அடுத்த தொழிலுக்கு முதலீடு பண்ணலாம்னு நினைக்கிறேன். பெர்ஃப்யூம் பத்தி ஆரம்பிச்சியே. இப்ப சொல்லு” என்றார்.

ராஜீவும் உற்சாகமாக ஆரம்பித்தார் “இப்போதைக்கு நம்மோட சோப் ஒரு பணக்கார சோப்புன்னு பிராண்ட் ஒண்ணு உருவாக்கியாச்சு. இது மட்டும் பத்தாது. ரீமாவோட அடுத்த படியா எலைட் கம்யூனிட்டிக்காக வாசனைத் திரவியங்கள் விக்கணும். அதே சமயம் நடுத்தர மக்களும் இப்ப உபயோகிக்க மீடியம் விலையில் சில சாய்ஸஸ்”

“நடுத்தர மக்களுக்கு சரி. எலைட் கம்யூனிட்டி வெளிநாட்டிலேயே வாங்கிப்பாங்களே”

“வெளிநாட்டில் வாங்கினாலும் நம்ம கைபட தயாரிச்சு இந்தியன் டச்சோட கொடுத்தா வரவேற்பு இருக்கும்னு நம்புறேன்”

உடனடியாக நரேஷ் சம்மதிக்கவில்லை. ராஜீவின் பிடிவாதம் அதிகரிக்க, இளையவனுக்கும் ஏதாவது பிஸினஸ் ஆரம்பிச்சுத் தரனுமே இதில்தான் இறக்கி விடுங்களேன் என்று மனைவி ரேணு வற்புற்தியதின் காரணத்தால் சில நாட்கள் யோசித்தார் நரேஷ் அதன்பின் மகனிடம் “நீ சொல்றது லேசான விஷயம் இல்லை ராஜீவ். இதைப் பத்தி முறைப்படி கத்துக்காம இறங்க முடியாது. நீ மேற்படிப்பா பெர்ஃப்யூமரி பத்தி படி. அதுக்கப்பறம் ஒரு முடிவுக்கு வரலாம்”

“நிஜம்மாவாப்பா”

“நிஜம்தான். லண்டன்ல வாசனை திரவியங்கள் தயாரிக்குற நிறுவனம் ஒண்ணு ஆறு மாத அறிமுகப் பயிற்சி ஒண்ணு நடத்த இருக்கு. அதில் கலந்துக்கோ. ஸ்டடி பண்ணு… உனக்கு ஆர்வம் இருந்தால் பிரான்ஸ்ல பயிற்சியைத் தொடரு. அது பத்தின டீடைல்ஸ் பின்னாடி பார்த்து நீயே சொல்லு” என்று அனுப்பி வைத்தார்.

ராஜீவும் லண்டனில் தனது முதல் கட்டப் பயிற்சியை முடித்துவிட்டு மேற்படிப்பு படிக்க பிரான்ஸ் சென்றார். அதற்கு மற்றொரு காரணம் லண்டனில் அவர் சந்தித்த சுபத்ரா. கல்லூரியில் இளங்கலை படிக்க வந்த சுபத்ராவும், வாசனைத் திரவியங்கள் செர்டிபிகேட் கோர்ஸ் படிக்க வந்த ராஜீவும் தங்களது இதயத்தைப் பரிமாறிக் கொண்டனர். அதன்பின் தொடர்ந்த நான்கு ஆண்டுகள் லண்டனில் அவர்கள் இருவரும் படித்த  யூனிவர்சிட்டியில் தாவரவியல் மேற்படிப்பு படிக்க வந்த குமரேசனின் உதவியாலும், மற்ற நண்பர்களின் ஆதரவாலும் ஈபில் கோபுரத்தைப் போன்று உயரமாகவும் உறுதியாகவும் அவர்கள் காதல் நாளுக்கு நாள் வளர்ந்தது.

 

 

2 thoughts on “தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 4’”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 8’தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 8’

அத்தியாயம் – 8   மண்புழுவிற்கு அது பிறந்த இடத்திலேயே அதன் எதிரியும் பிறந்திருக்கிறது. அதற்காவது எதிரியைப் பற்றிய அறிவு உண்டு. அந்த ஜீவனுக்கு இருக்கும் அறிவு கூட இல்லாமல் தான் ரேச்சலை நம்பியதை நினைத்து அவமானமாக இருந்தது மீராவுக்கு.  ரீமாவின்

பூவெல்லாம் உன் வாசம் நாவல் வெளியீடுபூவெல்லாம் உன் வாசம் நாவல் வெளியீடு

வணக்கம் தோழமைகளே! நலம் நலமறிய ஆவல். உங்களிடம் ஒரு மகிழ்ச்சியான செய்தியினைப் பகிர்ந்து கொள்ள வந்திருக்கிறேன். ‘பூவெல்லாம் உன் வாசம்’ நாவல் புத்தகமாக இந்த வருடம் புத்தகத் திருவிழாவிற்கு திருமகள் நிலையம் பதிப்பகத்தாரால் பதிப்பிக்கப் பட்டிருக்கிறது. திருமகள் நிலையத்தாருக்கு எனது மனமார்ந்த

தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 5’தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 5’

அத்தியாயம் – 5 வாசனைத் திரவியங்களின் தலைநகரமாம் பாரிஸின் உலகப் புகழ் பெற்ற பெர்ஃப்யூமர்களின் கல்லூரி வகுப்புக்கள். ஃபிரெஞ்சு கலந்த ஆங்கிலத்தில் தனது மூக்குக் கண்ணாடியை சுட்டு விரலால் நேர் செய்தபடி ஒரு கைதேர்ந்த இசை வல்லுனரைப் போன்று கைகளை அசைத்தார்