Tamil Madhura பூவெல்லாம் உன் வாசம் தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 5’

தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 5’

அத்தியாயம் – 5

வாசனைத் திரவியங்களின் தலைநகரமாம் பாரிஸின் உலகப் புகழ் பெற்ற பெர்ஃப்யூமர்களின் கல்லூரி வகுப்புக்கள். ஃபிரெஞ்சு கலந்த ஆங்கிலத்தில் தனது மூக்குக் கண்ணாடியை சுட்டு விரலால் நேர் செய்தபடி ஒரு கைதேர்ந்த இசை வல்லுனரைப் போன்று கைகளை அசைத்தார் பேராசிரியர் ரெமி. அவர் பாடம் நடத்தும் விதமே ஒரு கலாரசிகன் ரசித்து அனுபவித்து சொல்வது போன்றதொரு உணர்வைத் தந்தது.

“மூக்கு… அதன் உணர்வுத் திறன் மனிதன் பிறந்தது முதல் நம்முடனே இருக்கும் ஒரு வரம். ஆனால் வாசனை உணரும் திறமை தற்போது மிக மிக அரிய ஆனால் மிகக் குறைவாக மதிப்பிடப்படும் விஷயம். இதுக்கு நாம் தரும் முக்கியத்துவம் மிகவும் குறைவே. ஒன்று தெரியுமா வாசனையால் உங்களது உள்ளத்து உணர்வுகளை ஊடுருவி மாற்ற இயலும். உங்களுக்கு மிகவும் பிடித்தவரை மனதில் நினைத்துப் பாருங்கள் அது உங்களது தாயாக இருக்கலாம், காதலியாக, குட்டிக் குழந்தை ஏன் உங்களது செல்லப் பிராணியாகக் கூட இருக்கலாம். அவர்களை நினைக்கும் போதே அவர்களது வாசனையும் உங்களை அறியாமல் நினைவுக்கு வரும்”.

அன்றைய வகுப்பு உணவகத்திற்குப் பக்கத்தில் நடந்ததால் உருக்கிய சீஸின் மணமும், பேக் செய்த உணவின் மணமும் கலந்து கட்டி வகுப்பறையில் நுழைந்து அனைவரின் பசியையும் தூண்டியது. அவர்கள் கண்கள் அவ்வப்போது வெளியே சென்றது. அவர்கள் பார்வையைக் கண்டார் ரெமி. அவர் எதிர்பார்த்ததும் அதுதானே.

“சரி இப்போது இந்த உணவின் மணம் உங்கள் மனதில் என்ன தோற்றுவிக்கிறது என்று பார்ப்போம். கார்லோ நீ தொடங்கு”

“இத்தாலியில் எனது பாட்டி அல்ஃப்ரெடோ பாஸ்தா நினைவிற்கு வருகிறது. ஃபிரெஷ்ஷாக அன்றைய தினமே எடுத்த கோழி முட்டையை மாவில் உடைத்து ஊற்றிப் பிசைந்து நீளமான பாஸ்த்தாக்களாக்கி சுடுநீரில் வேக வைத்து சீஸ்ஸையும் சாசையும் கொட்டி அவர் செய்யும் உணவிற்காக சகோதரர்கள் நாங்கள் காத்திருப்போம். இந்த உணவின் வாசம் எனக்கு என் பாட்டியை நினைவு படுத்துகிறது” என்று ஏக்கத்தோடு சொன்னான் கார்லோ.

“எனக்கும் என் அம்மா செய்யும் சிக்கன், மஷ்ரூம் பை நினைவிற்கு வருகிறது” என்றாள் க்ளோயி

“உனக்கு என்ன நினைவிற்கு வருகிறது ராஜீவ்” என்றார் ரெமி.

“என் அம்மா செய்யும் ஆலூ பரோட்டா அதன் மேல் உருகிப் படர்ந்திருக்கும் வெண்ணை நினைவிற்கு வருகிறது” என்றார் ராஜீவ்.

இதே போல வேறு சிலரும் தங்களது உணவு நினைவுகளை சொல்ல,

“வெரி குட். வாசனை உங்கள் ஐம்புலன்களை மட்டுமல்ல அதையும் தாண்டிய நினைவுகளையும் தூண்டிவிடும்.

இந்த மல்டி பில்லியன் மார்க்கெட்டில் உணர்வுகளைத் தூண்டி விடுவதில்தான் உங்களது வெற்றி இருக்கிறது. மனைவியின் மீது வரும் நறுமணம் கணவனைக் காதல் கொள்ள வைக்க வேண்டும். ஆண்மகனின் மீது நான் ஒரு ரஃப் அண்ட் டஃப் ஆளாக்கும் என்று பெண்களுக்கு உணர்த்தும் ஒரு அடையாளம் வேண்டும். இதெல்லாம் அவர்கள் அருகில் நெருங்காமல் அடைய இதைத் தவிர வேறு என்ன வழி இருக்கிறது சொல்லுங்கள் பார்க்கலாம்.

அதற்கான எக்ஸ்பெரிமெண்ட் இதோ. மதியஉணவு வேளைக்குப் பின் நீங்கள் நான் கொடுத்திருக்கும் இந்த ஃபார்முலாவை அடிப்படையாகக் கொண்டு ஒரு சென்ட் தயாரிக்க வேண்டும். அதனை முகர்ந்து பார்த்து உங்களது உணர்வுகளை சொல்ல வேண்டும்” என்று வகுப்பை  முடித்துக் கொண்டார்.

அந்த வார இறுதியில் சுபத்ராவை சந்தித்த ராஜீவ், “இந்த வாரம் முழுவதும் ரொமான்டிக் சென்ட் அசைன்மெண்ட்தான். உனது நினைவு மட்டும்தான் என் மனதில். இந்தக் காதல் வாசனையை இனிமேல் தனியாக சமாளிக்க முடியல. அதனால் நீயும் இங்கேயே வேலை பார்த்துட்டு வந்துடு”

அப்படித்தான் இருவரின் வாழ்வும் ஆரம்பித்தது. அது தெரிய வந்ததும் குமரேசன் மிகுந்த வருத்தமடைந்தார்.

“அவன்தான் சொன்னான்னா உனக்கு எங்க புத்தி போச்சு. உன் அம்மாவோட கேள்விக்கு எப்படி பதில் சொல்லப் போற. கல்யாணம் பண்ணிக்காம இப்படி சேர்ந்து வாழலாமா… இது இந்த ஊருக்கு சகஜம் ஆனால் உனக்கு இது பாதுகாப்பில்லை சுபத்ரா”

குமரேசனின் வார்த்தைகளுக்குக் கட்டுப்பட்டு ராஜீவ் நண்பர்கள் முன்னிலையில் மோதிரம் மாற்றிக் கொண்டார்.

“எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் என் அப்பாகிட்ட சொல்றேன். இப்ப சொன்னால் என் படிப்பை பாதிக்கும். படிச்சு முடிச்சதும் அவர் எதிர்த்தால் கூட ஒரு வேலை தேடிட்டு இங்கேயே செட்டிலாயிடலாம்”

இருவருக்கும் சோதனை தரும் விதமாக மீரா சுபத்ராவின் வயிற்றில் உருவாகிவிட தன் தந்தையிடம் தெரிவித்து மனைவியை அழைத்து வர ராஜீவ் மும்பை சென்றார். அதன்பின் நாம் திரைப்படங்களில் பார்க்கும் காட்சிகள் அரங்கேறின.

ராஜீவ் வீட்டு சிறையில் வலுக்கட்டாயமாக அடைக்கப்பட்டார். சுபத்ராவைத் தேடி ஒரு கும்பல் கிளம்பியது. சுபத்ரா ராஜீவின் தோழி ரேச்சல் மற்றும் குமரேசனின் உதவியால் தலைமறைவானார்.

ஆண்டுகள் சில சென்றன. மீரா தத்தித் தத்தி நடை பழக ஆரம்பித்திருக்க, பிரான்சில் இருக்கும் ஒரு பல்கலைக்கழகத்தில் வேலைக்கு சேர்ந்தார் சுபத்ரா.

இந்தியா சென்ற குமரேசன் ராஜிவை ரகசியமாக சந்தித்து விவரத்தை எடுத்துக் கூறினார். குமரேசனின் வீட்டிற்கு சென்று ராஜீவ் தனது மனைவி மகளை சந்தித்து உச்சி முகர்ந்தார்.

தனது மனைவி மகளைப் பிரிவின் பின் மற்றொரு மணம் புரிய மாட்டேன் என்று பிடிவாதமாக மறுத்து வரும் மகனைத் தடுக்க வழியில்லாமல் பெற்றவர்கள் அவர் போக்கில் விட, ராஜீவ் பெர்ஃப்யூம் இண்டஸ்ட்ரி பக்கம் தனது கவனத்தை செலுத்தினார்.

எலீட் மக்களுக்காக ஒரு பிராண்ட் முழுக்க முழுக்க இயற்கை மூலப்பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட சென்ட். அதன்பின் சாதாரண மக்களுக்கும் ஏதுவாக விலை குறைவாக ஒரு வகை என்று ஆரம்பித்த அவரது வாசனை திரவியங்கள் சக்கை போடு போட்டது.

அவர் வருடாவருடம் ஒரு நேச்சுரல் பிராண்ட் சென்ட் ஒன்றை அறிமுகப்படுத்துவார். ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு ரீஜனை மட்டும் எடுத்துக் கொண்டு அந்தப் பகுதியில் கிடைக்கும் மூலப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் அந்த சென்ட் ஒரு வருடம் மட்டுமே அதுவும் இந்தியாவில் மாத்திரமே விற்பனையில் இருக்கும் அதுவும் குறிப்பிட்ட அளவு மட்டுமே உற்பத்தி செய்யப்படும். விற்பனையாகிவிட்டால் மேற்கொண்டு தயாரிப்பது இல்லை. இதனை ‘ட்ரெஸ் ஸ்பெஷால்’ (très special) என்று சொல்ல அதன் கீழ் reeMa என்று சின்னதாய் எழுத்துக்கள் அமேசான் போல் அதில் இரண்டு ஆரோ வேறு ஓடும்.

 

தன் பெற்றோர் மீது வெறுப்பு கொண்டிருந்த ராஜீவ். சுபத்ராவை அதற்குப் பின்னர் அவர்களிடம் அறிமுகப் படுத்த எண்ணவே இல்லை.

“வேணாம் இன்னொரு தடவை என்னால் உங்களைப் பிரிந்திருக்க முடியாது” என்று சொல்லிவிட்டார்.

அவரது வாசனைத் திரவிய தொழிலுக்கு பிரான்சின் வாசம் மிகவும் முக்கியம் என்பதால் அங்கே ஒரு ஆபீஸ் ஒன்றினை ஆரம்பித்தார். அந்த அலுவலகத்தை அவரும் அவரது குடும்பத்தினரும் கவனித்து வந்தனர். ஆனால் அவர்களுக்கு தெரியாத ஒன்றிருந்தது. அந்த அலுவலகத்தின் முக்கிய பொறுப்பிலிருந்தவள் ரேச்சல். அவளுக்கு அலுவலகத்தைப் பார்ப்பது தவிர ராஜீவின் ரகசியம் காப்பதும் முக்கிய பொறுப்பே.

ராஜீவ் வரும்போது அவர் தனது குடும்பத்துடன் செலவளிக்க ஏற்பாடு செய்து தருவதும் ராஜீவ் அண்ணனோ தந்தையோ வந்தால் அவர்களிடமிருந்து சுபத்ராவையும் மீராவையும் மறைப்பதும் அவளது வேலையே.

மீராவும் தாய்தந்தை அன்பில் வளர்ந்தாள். அவளுக்கும் ஓரளவு விவரம் தெரிந்திருந்தது. அதனால் மல்கோத்ரா குடும்பதிலிருந்தாலும் தனக்கு தன் கல்வி மட்டுமே வேலை தரும் என்பது தெரிந்து படித்தாள். வேதியலில் பட்டம் பெற்றாள்.

காலத்திற்கு எத்தகைய காயத்தையும் ஆற்றும் வல்லமை உண்டல்லவா… ராஜீவின் குடும்பதிற்கும் பேசாமல் அவர்களை ஏற்றுக் கொள்ளலாம் என்ற எண்ணம் வந்தது.

“சுபத்ரா… அம்மா என்கிட்ட நேத்து பேசினாங்க. இப்பாயாவது கல்யாணம் பண்ணிக்கோன்னு ஒரே அழுகை. எனக்கே நாப்பது வயசுக்கு மேல ஆச்சு. பொண்ணு டிகிரி முடிச்சுட்டா… இப்ப எனக்குக் கல்யாணமாம். நான் உன்னைப் பத்தியும் மீராவைப் பத்தியும் சொல்லிட்டேன்”

“ராஜீவ்… அவங்களால மீராவுக்கு ஏதாவது ஆயிடப் போகுது”

“முழு விவரமும் சொல்லல. ஆனால் என் மனைவியும் குழந்தையும் பிரான்ஸ்ல வாழுறதா சொல்லிருக்கேன். அம்மாவுக்கு ஒரே ஷாக்தான் இருந்தாலும் சமாளிச்சுக்கிட்டு வீட்டுக்கு உங்களை அழைச்சுட்டு வர சொல்லிருக்காங்க. நான் இந்த பிஸினஸ் ட்ரிப் முடிச்சுட்டு வந்ததும் மும்பை வர ரெடியா இரு. இனிமேலாவது நம்ம எல்லாரும் ஒரே குடும்பமா இருக்கலாம்” என்று சந்தோஷமாக அவர் சொன்னதுதான் இறுதியான வார்த்தைகள். விமான விபத்தில் ராஜீவ் பலியான செய்தி மட்டும்தான் அவர்களை வந்தடைந்தது.

ன் முன் இருந்த பேப்பரை எடுத்து கலங்கியிருந்த கண்களைத் துடைத்துக் கொண்டான் ஷஷ்டி.

இரும்பிலே ஒரு இதயம் முளைத்ததே… ஷஷ்டி இவ்வளவு இளகிய மனம் படைத்தவனா வியப்புடன் பார்த்தாள் மீரா…

“வெஜிடபிள் பிரியாணில கிராம்பும் பட்டையும் தூக்கலா போட்டிருக்கான் இந்த மடையன். காரம் தாங்க முடியல…  மத்தபடி உங்கக் கதையைக் கேட்டெல்லாம் அழல. இந்த மாதிரி எத்தனை படத்தை நான் கே டிவில பாத்திருப்பேன்“ என்றான்.

அதற்கு வலு சேர்க்கும் விதமாக

“1990ஸ்ல வந்த முத்து, நாட்டாமை இதுமாதிரி ஒரு எஃபெக்ட் நீங்க சொன்ன கதைல இருக்குங்க மீரா”

“ஹலோ இது கதை இல்ல நிஜம்” என்றாள் கடுப்புடன்.

“அடுத்து என்ன நடந்ததுன்னு நான் சொல்றேன் பாருங்க… உங்க அப்பா மறைவுக்கு பின்னாடி உங்க தாத்தா பாட்டி உங்களை அரவனைச்சுக்கிட்டாங்க. நீங்க கம்பனி எம்டி ஆயிட்டீங்க. இருந்தும் உங்க தாத்தாவை முழுசுமா உங்களால் நம்ப முடியல. அவர் உங்களையும் உங்க அம்மாவையும் கொன்னுடுவார்னு நினைக்கிறீங்க. அதனால உங்களைப் பாதுகாக்க நம்பிக்கையான ஒரு ஆள் வேணும். அதுனால குமரேசன் சார் மூலமா என்னைத் தேடி வந்திருக்கிங்க சரிதானே. கவலைப்படாதீங்க என்னால முடியலைன்னாலும் நம்பிக்கையா ஒரு நபரை ஏற்பாடு செஞ்சு தரேன்”

 

“கே எஸ் ஆர், சுந்தர் சி படமெல்லாம் பாத்து கதை, திரைக்கதை எல்லாம் கரைச்சுக் குடிச்சிருக்கீங்க. ஆனால் நான் உங்களைப் பார்க்க வந்தது வேற விஷயமா… நடந்த விஷயங்களை முழுமையா சொல்றேன். அப்பறம் முடிவு செய்யுங்க” என்றாள்.

 

அதன் பின் மீரா பேசிய சில நிமிடங்களில் ஷஷ்டி அவளுக்கு உதவி செய்வதாகத் தீர்மானித்துவிட்டான்.

 

1 thought on “தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 5’”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 3’தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 3’

அத்தியாயம் – 3 சஷ்டிக்கு குமரேசன் மீது மிகுந்த மரியாதை உண்டு. அவனது தந்தை செந்தில்நாதன் மருத்துவத் துறையை தேர்ந்தெடுக்காததால் பல சமயங்களில் கடுப்பாகி பணம் அனுப்பத் தகராறு செய்வார். ஒவ்வொரு முறை மேல்படிப்பிற்கும் ஷஷ்டி அவரிடம் போராட்டமே நடத்த வேண்டி

தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 4’தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 4’

அத்தியாயம் – 4 நரேஷ் மல்ஹோத்ரா மும்பையின் மிகப் பெரிய புள்ளி. ரியல் எஸ்டேட், ஸ்டாக் மார்க்கெட், ஐடி போன்ற இன்றைய பணம் கொழிக்கும் தொழிலில் முதலீடு செய்து சமீபத்தில் பணக்காரர் ஆனவர் இல்லை. தலைமுறைப் பணக்காரர். அவரது தாத்தா காலத்தில்

தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 19’தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 19’

அத்தியாயம் – 19 “என்ன செஞ்சிருக்கீங்க சஷ்டி” உரக்கவே கத்திவிட்டாள் மீரா. “இப்ப என்ன மீரா ஆச்சு” மீராவுக்கு பார்முலா கண்டுபிடிக்கத் தரப்பட்ட சென்ட் பாட்டிலிலிருந்து ஒரு சிறிய குப்பியில் ஊற்றிக் கொண்டிருந்தான் சஷ்டி. அப்போது சில துளிகள் கீழே சிந்திவிட்டது.