அத்தியாயம் – 1
‘டிங் டனாங்க், டிங் டனாங்க்’ என்ற மணி சத்தத்தைக் காதில் கேட்டவாறே அந்தக் கல்லூரியின் காம்பவுண்ட்டைத் தாண்டி உள்ளே நுழைந்தது அந்த பிஎம்டபிள்யூ. அப்படியே வாகனம் நிறுத்துமிடத்தில் இருந்த சிறிய பார்க்கிங்கில் லாவகமாக வண்டியை நிறுத்திவிட்டு இறங்கினாள் அந்த யுவதி.
அந்தக் கல்லூரிக்கு சற்றும் ஒட்டாமல் நின்ற ‘ஸிலீவ்லெஸ் ப்ராக்’. அதில் பளபளத்த தந்தக் கைகள் அவள் வெள்ளாவியில் வைத்து வெளுத்தவள், வெயிலுக்கே காட்டாமல் வளர்ந்தவள் என்று சத்தியம் செய்தது. மக்களின் மூடாத வாயையும், இமைக்காத விழிகளையும் பார்த்தாளோ.. இல்லை, தானே நினைத்தாளோ தெரியவில்லை, காரின் பின் கதவைத் திறந்து ஒரு ‘லேஸி’னால் பின்னப்பட்ட ‘ஓவர் கோட்’ போன்ற மேலாடை ஒன்றை அணிந்துக் கொண்டாள்.
கதாநாயகி எல்லாம் செதுக்கி வச்ச சிலை, ஐந்தரை அடி உயரம், பால் நிறம் இப்படித்தான் எழுதுவிங்களா.. ஏதாவது மாத்தி எழுதக் கூடாதா என்று ஆதங்கப்படும் நண்பர்களுக்கு இவளைப் பற்றி ஒன்றை ரகசியமாகவாவது சொல்லியே ஆகவேண்டும். அவளது குதிகாலைப் பாருங்கள்… அரையடி உயரத்திற்கு ஹீல்ஸ் அணிந்திருக்கிறாள்.
கல்லூரியின் அலுவலகத்தை நெருங்கியவுடன் அங்கிருந்தவர்கள் பேச்சினை நிறுத்திவிட்டு ஆவலாக அவளையே பார்த்தனர்.
கோயம்புத்தூரிலிருந்து ஐம்பது கிலோமீட்டர் தள்ளி தேமே என்று அமைதியாக இருக்கும் ஜல்லிப்பட்டிக்கு வந்திருக்கும் இவள் யார்? இத்தனை வசதியான பெண்ணை சொந்தக்காரியாக பெற்றிருக்கும் அந்த அதிர்ஷ்டக்கார மாணவன் அல்லது மாணவி யார்? இதுவே அவர்கள் மனதில் தற்போது குத்தாட்டம் போடும் கேள்வி.
அவளையே வெறித்துக் கொண்டிருந்த பெண் ஒருத்தியிடம் “பிரபஸர் சஷ்டியைப் பார்க்கணுமே” என்று குயிலாக அவள் கேட்டதும் அவர்கள் ஆச்சிரியம் எல்லாம் புஸ்சென்றானது.
சஷ்டிக்கு வந்திருக்கும் பார்வையாளரா இவள்! முதலில் அவனுக்கெல்லாம் நட்பு ஒரு கேடா… அதுவும் பெண் ஒருத்தி நட்பாகப் பேசும் அளவுக்கெல்லாம்… ச்சே… ச்சே… சான்ஸே இல்லை. இவளது விரோதிகள் யாராவது பழி வாங்கும் எண்ணத்துடன் சஷ்டியைப் பார்க்க சொல்லி இருப்பார்களாய் இருக்கும்.
“என்ன விஷயமா சஷ்டி சாரைப் பாக்கணும் மேடம்” என்று குழைந்தாள்.
“அதை அவர்கிட்டயே பேசிக்கிறேன்”
இத்துப் போன இந்த அத்துவானக்காட்டில் எப்போதாவதுதான் இந்த மாதிரி வாயை மெல்ல அவல் கிடைக்கிறது. அதுவும் கைக்கு எட்டாமல் இருக்கிறதே! இவளைப் பற்றி சஷ்டியிடம் கேட்க முடியுமா? அவனிடமிருந்து விஷயம் பெயர்ந்தார் போலத்தான்… என்றெண்ணிய வண்ணம் முதல் மாடியின் ஒரு அறையை சலிப்போடுச் சுட்டிக் காட்டினாள் அந்தப் பெண்.
“அங்க போயி உக்காருங்க மேடம். ஸார் கிளாஸ் முடிச்சுட்டு வந்துடுவார்”
“ரொம்ப நேரமாகுமா?”
“அந்த ரூமுக்குப் பக்கத்து கிளாஸ்லதான் பாடம் எடுக்குறார். முடிஞ்சதும் வந்துடுவார்”
குதிகால் செருப்பு டக் டக் என்று சப்தமிட மாடிப்படியில் ஏறிச் சென்றாள்.
“எங்க மாமா ஒருத்தர், கட்டினா இதயம் படத்தில் வர ஹீராவை மாதிரி ஒரு பொண்ணைத்தான் கட்டுவேன்னு ரொம்ப அடம் பிடிச்சாராம். ஹீரா… நடந்து போற இந்தப் பொண்ணு மாதிரியேதான் இருப்பா. இந்தப் பொண்ணு ஒரு வேளை ஹீராவோட சொந்தக்காரங்களா இருக்குமோ. சஷ்டி சார்கிட்ட கேட்டுப் பாப்பமா” ஆர்வம் தாங்காது மற்றொருத்தி சொன்னாள்.
“செருப்பு பிஞ்சுடும். அந்த முசுடுகிட்ட யாரு பேசுறது” என்று முதலாமவள் சொல்லவும் வாயை மூடிக் கொண்டாள். உண்மைதானே…
அவர்களால் முசுடன் என்று பட்டம் கட்டபட்டவன் தெளிவான கணீர் குரலில் முதல் வருட மாணவர்களுக்குப் பாடம் நடத்திக் கொண்டிருந்தான்.
மடிப்புக் கலையாமல் மதிப்பைக் கூட்டிக் காட்டும் வெள்ளை நிற முழுக்கை சட்டை. நல்ல ஊதா நிற கால்சராய். அவனது மாநிற மேனிக்கு அது கச்சிதமாய் பொருந்தியது. குண்டு என்று சொல்ல முடியாது ஆனால் வெயிலில் நின்று உரமேறிய உடல் என்று சொல்லும் வண்ணம் இருந்தது அவனது உடல்வாகும் நிறமும்.
என்ன… சஷ்டி தலைமுடியைக் கொஞ்சம் வெட்டி இருக்கலாம்… நான்கைந்து நாட்களுக்கு முன்னரே முகச்சவரம் செய்திருக்கலாம்… இருக்கலாம், இருக்கலாம் என்றுதான் சொல்கிறேனே தவிர அவனை இதெல்லாம் செய் என்று அவனது பெற்றோர் கூட சொல்ல முடியாது. ஏனென்றால் அவன் ஒரு அடங்காபிடாரி. சாரி, ஹீரோவைப் பற்றி நெகட்டிவாக வேண்டாம் அதனால் அடங்காத காளை, தனிப்பிறவி என்று போட்டுக் கொள்ளவும்.
அன்றைய தினம் திட்டமிட்டிருந்த பாடத்தை நடத்தி முடித்தான் சஷ்டி. அந்தக் கல்லூரி ஜல்லிப்பட்டியில் அவனது அப்பாவிற்கும் சித்தப்பாவிற்கும் சொந்தமானது. அந்த ஊரில் அவர்கள் நல்ல வசதியான குடும்பம்தான். இருந்தாலும் பங்காளிகளுக்குள் இருக்கும் போட்டி பொறாமைகள் என்று சொல்வார்களே அதற்கு அவனது தந்தையும் அவரது உடன் பிறந்தவர்களும் கூட விதிவிலக்கல்ல.
பத்து வயது வரை அண்ணன் தம்பி, அதுக்கு மேல் பங்காளி என்று சும்மாவா சொன்னார்கள். இவனது தாத்தாக்கள் இந்த போட்டியில் சொத்துக்களாய் வாங்கிக் குவித்தார்கள்.
“எப்பா காளிமுத்து ஊர்ல இருக்குற சொத்தெல்லாம் உங்க குடும்பமே வாங்கிப் போட்டுக்கிட்டா மத்தவங்க என்ன செய்றது. இப்போதைக்கு சர்க்கார் ரோட்டை மட்டும்தான் விட்டு வச்சிருக்கீங்க. அதனால இனிமேல் உங்க குடும்பத்துக்கு நாங்க யாரும் சொத்தை விக்கிறதா இல்லைன்னு முடிவு பண்ணிட்டோம்” என்று ஒருவர் தைரியமாகப் பூனைக்கு மணி கட்டினார்.
இனி சொத்து வாங்க முடியாது. எப்படி நம்ம பவரை நிரூபிப்பது என்று மண்டையை உடைத்துக் கொண்ட அடுத்த தலைமுறையினர், வாங்கிய சொத்தைக் கரைத்து தங்களது பெருமையை நிலைநாட்டினார்கள். அதாவது காளிமுத்து ஐந்து வருடம் பாடுபட்டு கோயம்புத்தூரில் வாங்கிய மச்சு கட்டிடம் அப்படியே மூத்த மகன் முருகேசனுக்குப் பிறந்த புத்திரர்கள் அதாவது முதல் பேரனின் எம்பிபிஎஸ் ஆனது. பொள்ளாச்சி தென்னந்தோப்பு இரண்டாவது பேரனின் பிஈ, எம்பிஏ ஆனது.
அடுத்தது சஷ்டியின் தந்தை செந்தில்நாதன். மூன்றாவது வடிவேல் முருகன். செந்திலும் வடிவேலும் ஓரளவு ஒற்றுமை என்பதால் சேர்ந்து ஜல்லிப்பட்டியில் ஒரு கல்லூரி கட்ட முடிவு செய்தார்கள். தன்னைக் கூட்டு சேர்த்துக் கொள்ளாத காண்டில் அண்ணன் முருகேசன் அயராது பாடுபட்டுத் தம்பிகளின் கல்லூரி பொறியியல் கல்லூரி ஆகாமல் பார்த்துக் கொண்டார். அவரது நல்லெண்ணத்தால் கல்லூரியும் கலைக்கல்லூரி ஆனது.
செந்தில்நாதனுக்கு ஒரு பெண், பின்னர் நம் சஷ்டி பய்யன். “சஷ்டி, டாக்டர் டிகிரி முக்கியம்டா மகனே” என்று தினமும் தவறாமல் பிகில் ஊதியபடி இருந்தார். எல்லாவற்றிற்கும் மண்டையை ஆட்டும் சஷ்டி கடைசியில் ‘என் வழி தனி வழி… ஆனா அது கண்டிப்பா நீ சொல்ற வழி கிடையாது’ என்று வந்து நிற்பான்.
இவனின் இந்த குணம் பற்றி அறியாது பதினொன்றாம் வகுப்பில் அறிவியல் பாடம் மட்டும்தான் படிப்பேன் என்று அவன் சொன்னதும் செந்தில்நாதன் பூரித்துத்தான் போனார். கணக்கையும் எடுக்க சொல்லலாமே என்று அறிவுறுத்தியவர்களிடம் “அர்ஜுன அம்புக்கு தாக்கப்போற கிளி கண்ணு மட்டும்தான் தெரியுமாம். அது மாதிரி எங்க சஷ்டிக்கு டாக்டர் மட்டும்தான் தெரியுமாக்கும்” என்று சொல்லி வாயடைத்தார்.
சஷ்டியும் உயிரியல், தாவரவியல் இரண்டிலும் வகுப்பில் முதல் மார்க் வாங்கி பூரிக்க செய்தான். கடைசியில் பிளஸ்டூ தேர்வில் அந்த இரண்டு பாடத்தில் மட்டும் நூற்றுக்கு நூறு. மற்ற பாடங்களில் தட்டுத் தடுமாறி அறுபது மார்க் வாங்கி ரிசல்ட் வந்தபின் ஒரு வருடம் செந்தில்நாதனை ஊரார் கண்ணில் படாமல் தலைமறைவாக ஒளியச் செய்தான்.
கோவையில் கல்லூரி சேர்ந்துவிட்டு, விடுமுறை தினங்களில் வீட்டில் வந்து மரம், செடி, பூ இதெல்லாம் வரைந்து கொண்டிருப்பவனைக் கண்டால் பத்திக் கொண்டு வரும் செந்தில்நாதனுக்கு.
“உங்கண்ணனுக்கு டாக்டர் பொண்ணை நிச்சயம் பண்ணிருக்காங்க. உனக்கெல்லாம் எங்கிருந்து பொண்ணு பாக்குறது. வீடு பூரா காஞ்ச பூவும் பழமும் பொறுக்கி வச்சிருந்தா காய்கறிகாரியும் பூக்காரி பொன்னம்மாவையும்தான் கட்டி வைக்கணும்.
என்னால ஊருக்குள்ள தலை காமிக்க முடியல. ஏண்டா விவசாயப் படிப்பாவது படிச்சிருந்தா என் மவன் புதுசா விவசாய ஆராய்ச்சி பண்ணப்போறான்னு சொல்லி பண்ணையார் பொண்ணுங்க யாரையாவது கட்டிருக்கலாம்ல”
“அதெல்லாம் சரிவராது. பூக்கார பொன்னம்மாதான் நான் கேக்கற பூவை எல்லாம் தேடிக் கண்டுபிடிச்சு கொண்டு வந்து தருது. அதனால அதையே கட்டி வச்சாலும் எனக்கு ஓகே” என்று சொல்பவனைக் கண்டு
“அடி செருப்பால. டாக்டருக்கு படிக்க சொன்னா தாவரவியல் சேர்ந்து எனக்கு துரோகம் செஞ்சல்ல. லவ்வு கிவ்வுன்னு எவளையாவது இழுத்துட்டு வந்து நின்ன அப்பறம் தெரியும் சேதி. எனக்கு டாக்டர் மருமகதான் வேணும். தேடிக் கொண்டு வரேன்” என்று சபதம் ஏற்றிருக்கிறார்.
சஷ்டி இதில் எல்லாம் ஆர்வம் காட்டவில்லை. அவனுக்கும் ஆஃபர் வராமல் இல்லை. மூன்றாவது வருடம் படிக்கும்போது அவனது வகுப்புத் தோழி ராதா தினமும் பளிச் உடையில் தலை நிறைய மல்லிகையோடு மயக்கும் வாசனையில் அவனருகில் வந்து அமர்ந்து கொள்வாள். வகுப்புக்கு சஷ்டி இவனது ஆள் என்று அறிவிக்கிறாளாம்.
“சஷ்டி, தினமும் என்கிட்ட என்னவோ கேட்க நினைக்கிற ஆனால் நிறுத்திடுறியே. என்னன்னு கேளேன்” கிளியாகக் கொஞ்சினாள்.
“ராதா, தினமும் மல்லிகைப்பூ வச்சுட்டு வர்ரியே. அதில்தான் டவுட்”
“உனக்காகத்தான் சஷ்டி. இப்பவாவது புரிஞ்சுகிட்டியே. இதில் என்ன சந்தேகம்”
“இதுக்கு பேரு அரேபியன் ஜாஸ்மின். பொட்டனிக்கல் நேம் ஜாஸ்மின் சம்பக் -ன்னு போட்டிருக்காங்க. இதே மாதிரி ஜஸ்மீனியம் பாலியந்தெம், ஜாஸ்மினியம் மல்டிப்லோரம்னு நிறைய வெரைட்டி இருக்குதாம். எங்க பூக்காரம்மாவுக்குத் தெரியல. எனக்கு அதையெல்லாம் வாங்கிட்டு வந்து தரமுடியுமா. ஜாஸ்மின் சம்பந்தமா பேப்பர் பிரெஸென்டேஷன் பண்ணனும்”
அதன்பின் ராதா திரும்பிப் பார்ப்பாளா என்ன. இதை சஷ்டி விவரம் தெரியாமல் கேட்டானா இல்லை தெரிந்து கொண்டே செய்தானா என்பது இன்றளவும் புரியாத புதிர்தான். இருந்தாலும் இந்த சம்பவத்திற்குப் பின் விஸ்வாமித்திரனின் தவத்தை கலைக்க வந்த மேனகை மாதிரியெல்லாம் எந்த விதமான இடையூறும் இன்றி முதுகலை தாவரவியல் படித்து முடித்துவிட்டு ஆராய்ச்சியும் முடித்துவிட்டான்.
“என் மகனைக் கரிச்சுக் கொட்டினிங்களே… இன்னைக்கு அவனும் ஒரு டாக்டர் பாத்துக்கோங்க” என்று இடித்துக் காட்டும் மனைவி வேணியிடம்
“அதுக்காக நாளைக்கே ஒரு கிளினிக் தொறந்துட முடியுமா? இல்லை, உன் மவன்தான் ஊசி போட்டு மருந்து மாத்திரை எழுதித் தர முடியுமா? என்ன இருந்தாலும் ஊசி போடுற டாக்டர் தான் டாக்டர். உன் மவன் ஊசி போட முடியாத வெறும் பேப்பர் டாக்டர். இவனுக்கு நான் எப்படி பொண்ணு பாக்குறது” என்பார் விரக்தியோடு.
“இங்க பாருங்க… கிடைக்கிறது கிடைக்காம போகாது. என் மகனுக்கு படிப்பு இல்லையா இல்லை அழகு இல்லையா. பொண்ணு கிடைக்காதுன்னு இளக்காரமா இனிமே என்கிட்ட பேசாதீங்க”
“டாக்டர் இல்லையேடி… எங்கண்ணன் மருமகளை விட பெரிய சம்பந்தம் எப்படி வரும்”
“எல்லாம் வரும். என் மகனைத் தேடி வருவா பாருங்க” என்று நம்பிக்கையோடு சொல்வார் வேணி.
Ha ha PhD pannina manushana ipidi kaluvi oothuraru avangappa. Hero sir en ipidi thadi paratai thalainu kumki hero mathiri ulathureenga. Ivaru thedi vantha BMW chittu yarungo
Athan. Pongal vaazhthukkal Selva
Vanakkam Tamil Madhura madam,
Iniya pongal vazhthukkal!
Aarambame asaththal….
Nice ud.
With respect,
Parvathy
நன்றி பார்வதி. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
Hi mathura. Arambam asathal. Aval sashti intro ud ku waiting. Entire family names ellame murugan mayam
Thanks Sarada. Kandu pidichutingale. Murugan special year.