Tamil Madhura செம்பருத்தி தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 42 (நிறைவுப் பகுதி)

தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 42 (நிறைவுப் பகுதி)

அத்தியாயம் -42

நாட்கள் உருண்டோடி வாரங்களானது. அன்பானவர்கள் ஆறுதலாலும் தேறுதலாலும் அபிராம் மீண்டு வந்தான். ஆனாலும் பல நேரங்களில் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தான். 

நாகேந்திரன் அவன் உடல் தேறும்  வரை அங்கிருந்து விட்டுத்தான் சென்றார். மங்கையும் நாகேந்திரனும் அவனை அப்படியே விட்டு விடாமல் பாதி நாள் கொச்சியிலும் மீதி நாட்கள்  மும்பையிலும் கழிக்கின்றனர். இருவருக்கும் கடமைகள் இருக்கிறதே. அதை அப்படியே விட்டு விட முடியுமா? 

அபிராம்  மாடியில் இருக்கும் மற்றொரு பெரிய அறையை தயார் செய்து அவர்கள் உபயோகத்திற்காக கொடுக்கும்படி கூறிவிட்டான். அனைவரும் கட்டி அணைத்து அன்பு மலர்களே என்று பாட்டு பாடவில்லை. ஆனாலும் ஒருவரின் மீது மற்றவருக்கு இருக்கும் அக்கறையை உணர்ந்தே இருந்தனர். 

அவர்கள் இல்லாத சமயத்தில் அவினாஷ் இவனை கவனித்துக் கொள்கிறான். அவனை மட்டும் விடுதியிலேயே தங்கச் என்று சொல்லிவிட்டான் அபிராம். 

அதற்கு அவன் சொன்ன காரணம்தான் வியப்பு 

“இவன் செம்பருத்தியை பாத்தாலே உருகுறான். ஹைபியையும் ஓவியாவையும் ஒரு ஜெயலலிதா மாதிரி, இந்திராகாந்தி மாதிரி இரும்புப் பெண்மணியா உருவாக்கப் போறேன். அதுக்கு இவன்தான் வில்லன்” என்ற தமையனைப் பார்த்து பல்லைக் கடித்தபடி 

“இவன் போடுற கட்டுப்பாட்டை எல்லாம் பாத்தா அவங்களை ஔவையாராத்தான் மாத்தப் போறான் ராதிகா” என்று சொல்லிவிட்டு தனது பைக்கில் கிளம்பினான் அவினாஷ். 

அவ்வையார் யார் என்று கூகிள் செய்து படித்துவிட்டு நிமிர்ந்தவனின் கண்களில் யோசனையாய் நின்றுக் கொண்டிருந்த ராதிகா பட்டாள். 

“உனக்கு என்ன யோசனை”

“அபி ஊருக்குத் தான் உபதேசமா… நானும் போயி கொச்சில தங்கிக்கிறேன். அவனாவது ஒரே மாதிரி காதலோட செம்பருத்தியைப் பாக்குறான். ஆனா நீ உன் கொள்ளிக்கண்ணை வச்சு என்னைப் பல மாதிரி பாக்குற”

“ஹே ஜங்க்லி ராணி. ஊருக்குத்தான் உபதேசம். நமக்கெல்லாம் இல்லை. இதுதான் முதல் லெசன். இப்ப என் பக்கத்தில் வந்தா அடுத்த லெசன் ஆரம்பிச்சுடலாம்”

“உடம்பு சரியில்லைன்னு காரணம் சொல்லியே ரொம்ப அட்வான்டேஜ் எடுத்துக்குற. உனக்கு ரொம்ப இடம் கொடுத்துட்டேன்”

முகத்தை சுருக்கிக் கொண்டு 

“ரொம்ப தலை வலிக்குது ஜங்க்லி கொஞ்சம் அமுக்கி விடுறியா” என்று முகம் சுருங்கி கேட்டவனிடம், தான் முதலில் சொன்னதை அறவே மறந்து 

“இதோ வந்துட்டேன்… இங்கதானே வலிக்குது” என்று ஓடினாள். 

அடுத்த சில நாட்களிலேயே சேச்சியை  அழைத்து, ராதிகாவைத்  திருமணம் செய்ய ஆசைப்படுவதாக சொல்லிவிட்டான்

“ரொம்ப சந்தோஷம் அபி நீ வழி தவறுற காலத்திலேயே உனக்கு கல்யாணத்தை பண்ணி வச்சிருந்தா இந்நேரம் உன் பையன் டென்த் படிச்சிட்டு இருந்திருப்பான்” என்று கிண்டல் செய்துவிட்டு

“சரி பெரியய்யாகிட்ட சொல்லி  நல்ல நாள் பாக்கலாம்” என்றார்.

“ஏன் இந்த வாரத்தில் நல்ல நாள் இல்லையா?”

“அவசரத்தைப் பாரு. பாகமங்கலம் ஜமீன் கல்யாணம்னா சும்மாவா? அழைப்பிதழ் ரெடி பண்றதிலிருந்து சாப்பாடு வரை எத்தனை வேலை இருக்கு. குறைஞ்சது ஆறேழு மாசமாகும்”

“ஆறு மாசமா? அப்ப ரெண்டு முகுர்த்தமா பாருங்க”

“எதுக்கு ரெண்டு முகுர்த்தம்? அவினாஷ் இப்போதைக்கு கல்யாணம் வேண்டாம்னு சொல்லிட்டான்”

“அவினாஷுக்கா முகுர்த்தம் பாக்குறேன். நான் இன்னும் அந்த அளவுக்கெல்லாம் திருத்தல. ஆறு மாசம் கழிச்சு ரெண்டு முகுர்த்தமா  பார்த்தா கல்யாணமும் வளைகாப்பும் சேர்த்து வச்சுடலாம். ஒரே செலவா முடிஞ்சுடும். இன்னும் ரெண்டு மூணு மாசம் தள்ளிப்போனா கல்யாணமும் என் பொண்ணோட பேர் சூட்டு விழாவும் சேர்த்து வச்சுடலாம்”

“அபிராம் இதெல்லாம் எப்ப நடந்தது? அதுவும் வயசுக்கு வந்த பிள்ளைங்க வீட்டில் இருக்காங்க… அடங்க மாட்டியா? பொறுப்பு இருக்கா? அடுத்த முகுர்த்தத்திலேயே கல்யாணத்தை பண்ணி அடக்கி வைக்கிறோம். கல்யாணம் பண்ண அரண்மனை ரெடியாகணுமே… ” பட படவென ஆரம்பித்தார் லீலாம்மா. 

“லீலாம்மா… வெளிய எங்கயும் வேண்டாம். இந்த வீட்டிலேயே கல்யாணம். லீலாம்மாதான் என் சார்பில் எல்லா வேலையும் முடிக்கணும்”

தலையில் குட்டிவிட்டு “ஏன் உனக்கு வேற வேலை இருக்காக்கும். கல்யாணம் முடியுற வரைக்கும் ராதிகாவை செம்பருத்தி ரூமில் தங்கப்போறா… “

அடுத்த சுப முகூர்த்தத்திலேயே அபிராமின் விருப்பப்படி மிக எளிமையாக அந்த வீட்டிலேயே திருமணம் நடந்தது. மங்கையும் நாகேந்திரனும்  தாலி எடுத்துக் கொடுக்க, அதனை ராதிகாவின் கழுத்தில் கட்டினான்.

ஒரு சின்ன பிரசண்ட் என்று ஆரம்பித்த மங்கையிடம் “மன்னிச்சுக்கோங்க, அம்மா உங்க கிட்ட இருந்து நிறைய பறிச்சுட்டாங்க. இனிமேலும் எதுவும் வாங்குறதுக்கு எனக்கு விருப்பமில்லை. பாகமங்கலம் சொத்தாகட்டும் வாரிசு பட்டமாகட்டும் எதுவுமே எனக்கு உரிமை இல்லாதது. 

அப்பா, நீங்க உங்களோட சம்பாத்தியத்தில் எனக்கு எழுதி வச்ச சொத்துக்களைக்  கூட சரிபாதியா பிரிச்சு அவினாஷுக்கும் எழுதி வச்சிருங்க. ஏன்னா அதில் அவனுக்கும் பங்கிருக்கு”

தான் நாகேந்திரனின் மகன் என்று நியாயமாக நடந்து உணர்த்திய பெரிய மகனைப்  பெருமையுடன் பார்த்தார் தந்தை.

“அவருக்கு மட்டுமில்லை அபி. எனக்கும் நீங்க ரெண்டு பேரும் வாரிசுகள்தான். பாகமங்கலத்து தொழில் பொறுப்புக்களை அவினாஷ் கவனிக்கட்டும். நாங்க நடத்திட்டு வரும் ட்ரஸ்ட்டின் பொறுப்பை ஏத்துக்கும் தகுதி உனக்கு மட்டும்தான் இருக்கு. காயம்பட்ட ஒவ்வொருத்தரும் உன் நிழலில் இந்த வீட்டில் நிம்மதியா இருக்காங்க. இந்த நிம்மதியையும் எதிர்காலத்தையும் நீ எல்லா குழந்தைகளுக்கும் கொடு”

*** 

 அபிராம் அவசரமாக கையெழுத்து போடவேண்டிய கடிதங்களை சரிபார்த்து ராதிகாவிடம் தந்துவிட்டு 

ஏதோ நினைவு வந்தவனாக “ஹைபி எங்க? காலைல இருந்து ஆளே காணோம்.” என்றான்.

“அவ காலேஜுக்கு போயிருக்கா. ஹால் டிக்கெட் வாங்கணுமாம். அடுத்த வாரம் செமஸ்டர் ஆரம்பிக்குதுல்ல” என்றாள் ராதிகா.

“சரி அவினாஷ் எங்க போனான்? இந்த டாக்குமெண்ட்ஸ் எல்லாம் அவன் நேரடியா கவனிச்சுக்குற வேலைகளாச்சே” என்று கேட்டான்

“செம்பருத்தி ஹால் டிக்கெட் வாங்கணும்ல, சாரதி வேலை பார்க்கிறதுக்கு போய் இருக்கார்” என்றாள் ராதிகா.

“வீட்ல கோபன் இல்லையா?”

“டியூப் லைட்டாட்ட  பேசாதீங்க அபி. ரெண்டு பேரும் இதுதான் சாக்குனு ஊர் சுத்த போயிருக்காங்க.அப்ப கோபன கூட்டிட்டா போவாங்க”

“சரி, ஹைபி வந்த உடனே என்ன பார்க்க வர சொல்லு.அவ என்னைப் பார்க்க வந்து அஞ்சு நிமிஷம் கழிச்சு அவினாஷை பாக்க வரச் சொல்லு”

வீட்டுக்கு வந்த செம்பருத்திக்கு அபிராமிடமிருந்து  சராமாரியாகத்  திட்டு விழுந்தது

“பரீட்சைக்கு படிக்கணும்னு அறிவு வேண்டாம். அவன் கூட ஊர் சுத்துனா படிப்புல எப்படி கவனம் போகும். பரிட்சை முடியறதுக்குள்ளார இன்னொரு தடவை உங்க ரெண்டு பேரையும் பார்த்தேன். உன்னைத் தொலைச்சிட்டேன்” என்றான்.

அவன் திட்டுவதை காதல் வாங்கிக் கொண்டே அவினாஷும் அறைக்குள் நுழைந்தான். எதிரில் வந்த அவினாஷை முறைத்துக் கொண்டே செம்பருத்தி படிக்கச் சென்றாள்

அவினாஷ் அபிராமிற்கு எதிரே இருந்த  இருக்கையில் அமர்ந்ததும் ஆரம்பித்தான் தமையன்

“என்ன ராசாளி இந்த பக்கமே சுத்துறாப்புல இருக்கு…”

“அப்படிலாம் இல்லையே… இந்தப்  பக்கம் ஒரு வேலையா வந்தேன். செம்பருத்தி நடந்து வந்துட்டு  இருந்ததைப் பார்த்து லிப்ட் கொடுத்தேன் அவ்வளவுதான்”

புருவத்தை நெரித்தபடி  படி பார்த்தவன் “டேய் நீ எல்கேஜி படிக்கிற ஸ்கூல்ல நான் பிஎச்டி. என் காதுல பூ சுத்தாத”

“சரி, நான் தான் கூட்டிட்டு போய் போயிட்டு வந்தேன் அதுக்கு என்ன இப்ப? ரொம்பத்தான் ஓவரா மிரட்டுற”

“அப்படித்தான் மிரட்டுவேன். இங்க பாரு, செம்பருத்தி இவ்வளவு நாளு வீட்டுக்குள்ளார வளர்ந்த பிள்ளை. இப்பதான் வெளி உலகத்தை பார்த்துட்டு தன்னைத்தானே கண்டுபிடிக்க ஆரம்பிச்சிருக்கா.

இந்த சமயத்துல காதல் கத்திரிக்காய் கல்யாணம்னு  அவளைக் கூட்டிட்டு போயி ஒரு போன்சாய் செடியா மாத்திடாதே”

“அப்படி எல்லாம் கிடையாது நானும் அப்பா மாதிரி அவளுக்கு சப்போர்ட்டா இருப்பேன்” முணுமுணுத்தான் அவினாஷ்

“அதெல்லாம்  சரிப்பட்டு வராது. ஹைபியை  டாக்டரேட் எல்லாம் படிக்க வைக்கணும்னு நான் முடிவு பண்ணி இருக்கேன். இன்னும் கொஞ்ச நாள், ஒரு ஏழெட்டு வருஷம்  கழிச்சு அவளே உன்னைக்  கல்யாணம் பண்ணிக்கிறேன்னு என்கிட்டே சொன்னா அதுக்கப்புறம் யோசிச்சு என் முடிவை சொல்றேன்”

“இதெல்லாம் உனக்கு நியாயமா படுதா அபிராம்? எனக்கு ஸ்ட்ரைட்டா அறுபதாம் கல்யாணம் பண்ணி வைக்க பிளான் போடுறியா?”

“ஃபேர் கேம். உனக்கு எவ்வளவு சாய்ஸ் இருந்துச்சு… ஏன் காவியா கூட உன் பின்னாடி எப்படி சுத்துனா? நாலு பொண்ணுங்களை பாத்துட்டு உனக்கு புடிச்ச மாதிரி செம்பருத்தி சூஸ் பண்ணல. அதே மாதிரி அவளுக்கும் சாய்ஸ் வேண்டாமா?”

“அப்பா…. நியாய புத்தியப்  பாத்து புல்லரிச்சு போயிட்டேன்”

“ராதிகா எங்க ரெண்டு பேருக்கும் டீயும்  ஸ்னாக்ஸும் இங்கேயே கொண்டு வரச் சொல்லு”

திருமணத்திற்கு அவினாஷும் செம்பருத்தியும் அழகான தங்க பூண் போட்ட வாக்கிங் ஸ்டிக் ஒன்றைப்  பரிசாக வழங்கி இருந்தார்கள். பாலன்ஸ் செய்து அவன் தடுமாறி நடப்பதே தெரியாதவண்ணம் அதனை ஸ்டைலாகப் பிடித்தபடி அவன் நடையைப் பழக்கிக் கொண்டான். 

பால்கனியில் அமர்ந்து கொண்டு டீ  அருந்தியப்படியே சகோதரர்கள் இருவரும் பேசினார்கள்.

“காவ்யாக்கு பெயில் கிடைச்சதும்  பார்த்துட்டு வந்த போல, ரொம்ப நேரம் பேசிட்டு இருந்ததா கேள்விப்பட்டேன்”

“பேச்சா… ஒரே சண்டை. என்னை விட செம்பருத்தியை  எப்படி உனக்குப்  பிடிச்சது என்னை  விட அவ எதுல பெட்டர்? அப்படின்னு ஏகப்பட்ட கேள்வி”

“என்ன பதில் சொன்ன?”

“நம்ம எல்லாத்தையும் விட அவ எவ்வளவோ பெரியவ…

உலகத்தில் இரண்டே பேர் தான் அபி. சந்தர்ப்பம் கிடைச்சவங்க, கிடைக்காதவங்க. இதில் சந்தர்ப்பம் கிடைக்காமல், தன்னை நிரூபிக்க முடியாமல் இருந்தவ தான் செம்பருத்தி. அவளுக்கு ஒரு சின்ன சந்தர்ப்பம் கிடைத்தது. ஒரு சின்ன வேலைதான் கொடுத்தேன். ஒரு சாதாரணமான பொண்ணா இருந்தா வேலை, சம்பளத்துல  கொஞ்சம் சேர்த்து வச்சிருப்பா. நிம்மதியா இருந்திருப்பா. ஆனால் இந்த சின்ன வேலையில செம்பருத்தி செய்த சாதனைகள் பெருசு.

என்ன ஆகப்போகுது ஒரு கை பாத்துடலாம் என்று துன்பத்துக்கு அஞ்சாத துணிவு. உண்மையா இருப்பதால யாருக்கும் பயப்படாத மனசு, நேர்மை தடுமாறாத குணம், தாய்மை உள்ளம் இதெல்லாம் உன்கிட்ட பெரிய மாற்றத்தை உருவாக்குச்சு. 

இந்த ரெண்டு வருஷத்தில் அவள் எவ்வளவு கத்துருக்கா தெரியுமா? ஒரு டிகிரி படித்தது மட்டுமில்லாமல் பிசினெஸ்  கம்யூனிகேஷன், புது மொழிகளை பேசும் அளவுக்கு தேர்ச்சி பெற்று இருக்கா. 

நம்முடைய கணக்கு வழக்குகளை பார்த்திருக்கா இதன் மூலம் நம்ம தொழில்களை பத்தின அறிவு… இன்னும் சில வருட பயிற்சியில இதெல்லாம் தானே சமாளிக்கிற அளவுக்கு ஒரு திறமை வாய்ந்த ஆள மாறிடுவா.

நல்லா யோசிச்சு பாரு நம்ம ராஜ குடும்பத்தில் இருக்கிற பள்ளியில் இதெல்லாம் தானே நமக்கு பாடமா சொல்லித்  தராங்க. நம்ம பள்ளில போய் கத்துக்கிட்டது எல்லாமே செம்பருத்தி தன்னால படிச்சிருக்கா… அதுவும் இவ்வளவு குறுகிய காலத்தில்.

ஒரு உயர் பதவியில் இருக்கிறவங்க ரோல் மாடலா இருக்கணும். அந்த வகையில செம்பருத்தி பெண்களுக்கு ஒரு ரோல் மாடல் தான்.

நம்ம கிட்ட இருக்கிற சொத்துகளில்ஒரு சிறு பகுதியை அடுத்தவங்களுக்கு தருவோம். ஆனால் செம்பருத்தி  ஆதாரமா இருக்கிற ஒரே வீட்டைக்  மிகக் குறைஞ்ச  வாடகைக்கு அவளோட தோழிக்குத் தந்தா. அந்த நல்ல மனசு எங்க போயி கத்துக்க முடியும். 

சொல்லப்போனால் இதைவிட ஒரு நல்ல மனைவி எனக்கு எங்க கிடைப்பா?”

“சரிடா அடுக்கி கிட்டே போகாத உன்னைய பார்த்தாலே எனக்கு குளக்கரை  பிள்ளையார் தான் ஞாபகம் வர்றார். அவரால் தான் கண்டுபிடிக்க முடியல. நீயாவது உனக்கு ஒரு பொண்ண கண்டுபிடிச்சிட்டியே சந்தோஷம்”

“நீ என்ன சொல்ற? நான் பிள்ளையார் மாதிரி ஓவர் எக்ஸ்பெக்டேஷன் வச்சிருந்தேன்னு சொல்றியா? இல்ல செம்பருத்திக்கு  எங்க அம்மா மாதிரியே குணம் இருக்குன்னு சொல்றியா”

“ரெண்டும் தாண்டா”

“சரி செம்பருத்தி டாபிக்கை விடு. உனக்கும் எனக்கும் நடந்த அக்னி நட்சத்திரம் வார்லயாரு ஜெயிச்சானு நினைக்கிற”

“இனி வரைக்கும் நீ தான் வாரிசு அப்படின்னு நாங்க எல்லாம் ஒத்துக்குறோம் நீ தான் வேண்டாம்னு சொல்லிட்டஎனக்கு பட்டம் கட்ட சொல்லிட்ட”

“முதல்ல அந்த பட்டத்துக்கு நான் தகுதியானவன் கிடையாது. நீங்கள் எல்லாம் போனா போகுதுன்னு விட்டுக் கொடுத்து கிடைக்கிற பட்டம் எனக்கு வேண்டாம்”

“ஓ அதனாலதான் எனக்கு விட்டுக் கொடுத்துட்டியோ?” என்றான் அவினாஷ்

“இடியட், நான் அந்த கேம்ல இல்லடா. அந்த நாற்காலிக்கு அந்த பதவிக்காக இங்க எவ்வளவு போட்டி, எத்தனை குற்றங்கள், எவ்வளவு மனசு வருத்தம்… அது எனக்கு வேண்டவே வேண்டாம்”

இவனா தந்தையிடம் வாரிசு பட்டம் கேட்டு நீதிப்போராட்டம் நடத்தினான் என்று ஆச்சிரியமாக இருந்தது அவினாஷுக்கு. அது உண்மை தெரிவதற்கு முன். அது தெரிந்ததும் அவனது தாய் செய்தது தவறினை செய்ய முயல்கிறான் என்பது அவனுக்கும் புரியாமலில்லை. 

“இன்னைக்கு என்னோட சிகரெட் கோட்டா… “ என்றபடி சிகரெட்டை பற்றி பற்ற வைத்துக் கொண்டு உள்ளே இழுத்தான் அபிராம். பின்னர் தம்பியைப் பார்த்து கேட்டான்.  

“நீ சிகரெட் பிடிப்ப?”

“அதான் எனக்கும் சேர்த்து ஊரில் இருக்குற கெட்டப்பழக்கம் எல்லாம் நீயே கத்துருக்கியே”

“சரிப்பா ஹீரோ, நான் வில்லனாவே இருந்துக்குறேன். ஆனால் இந்த வில்லன் பாகமங்கலத்தை அவ்வளவு சீக்கிரம் மாட்டான். 

நீதான் பாகமங்கலத்தோட ராஜா அத நானே மனசார ஏத்துக்கிறேன். ஆனால் பாகமங்கலத்தோட ராணியை செதுக்குறது நான்தான். அந்த வகையில பாகமங்கலத்தோட எதிர்காலமே  என் கையில் தான். சோ ஐ அம் தி குயின் மேக்கர்”

“நீதான் குயின் மேக்கர்னு நான் மனப்பூர்வமான ஏத்துக்குறேன். எப்படித்தான் இந்த பொண்ணுங்க எல்லாரும் உன்னைப் போயி  நம்புறாங்களோ தெரியல. கன்னி ராசியா நீ?”

“கண்ணன் ராசி”. 

***

ஒரு வழியாக செம்பருத்திக்குப் பரீட்சை முடிந்தது. அவளுக்கும் ஓவியாவிற்கும் தேர்வு முடிந்ததும்தான் ஹனிமூன் கிளம்பினான் அபிராம். அதுவும் ராதிகா ஆசைப்பட்டதால் கொடைக்கானலில்தான் தேனிலவு. 

“அபிராம், ராதிகாவை பத்திரமா பாத்துக்கோ… வயத்தில் பிள்ளை வேற, எங்க போனாலும் பத்திரமா போயிட்டு வா… சூசைட் பாயிண்ட் எல்லாம் ராதிகாவைக் கூட்டிட்டுப் போக வேண்டாம், மழை பெய்ஞ்சுட்டு இருக்கு, வழுக்கி கிழுக்கி விட்டுரப் போகுது” கவலையாக அவனுக்கு மட்டும் காதில் கேட்கும்படி மெதுவாகச் சொன்னார் லீலாம்மா. 

“அதெல்லாம் பத்திரமா பாத்துக்குறேன் லீலாம்மா… இப்பத்தான் கல்யாணம் வேற முடிஞ்சிருக்கு. இவளுக்கு ஏதாவது ஒண்ணுன்னா நான் என்ன பண்ணுவேன்”

“இப்பயாவது புத்தி வந்ததே”

“ஆமா… பொண்ணு கிடைக்கிறதே கஷ்டமா இருக்கு. ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்க எங்க போயி பொண்ணு தேடுவேன். அந்தக் கல்யாணத்துக்கு வேற செலவு பண்ணனும். அதுக்காகவாவது ராதிகாவை பத்திரமா பாத்துக்கிறேன் ” பாவமாக சொல்ல

“டேய்… உனக்கு வாயிருக்கே… அபசகுனமா பேசாதே… அபிராம், இன்னும் நாலு மாசத்தில் வளைகாப்புன்னு சொன்னியே… இந்த சமயத்தில் இதெல்லாம் தேவையா?”

“வளைகாப்பா? அப்படி சொன்னதாலதானே உடனே கல்யாணத்தைப் பண்ணிங்க… “

“அதுவும் பொய்யா… “ லீலாம்மா அதிர்ச்சியுடன் திகைத்து நிற்க, 

“அபிராம் லேட்டாச்சு. ஸெல்ப் ட்ரைவ் வேணாம். எங்க போகணும்னாலும்  கோபன்தான் உன்னை கூட்டிட்டுப் போவான்” என்று தந்தை எச்சரித்ததை ஏற்றுக் கொண்டு 

“எங்கயாவது போனாத்தானே… “ என்று ராதிகாவைப் பார்த்து கண்சிமிட்டியபடியே கிளம்பியவனை வழியனுப்பி வைத்தனர் குடும்பத்தினர்  அனைவரும். 

அவர்கள் சென்று ஒரு சில நிமிடங்களில் அவினாஷின் கண்கள் செம்பருத்தியை சந்தித்து வில்லன் இன்னும் ஒரு மாசத்துக்கு எட்டிப்பாக்கமாட்டான் ‘மஞ்சள் பூவே கொஞ்சிடலாமா? காதல் தேசம் சென்றிடலாமா?’ என்று கேட்டது. 

 கண்களின் பாஷையைப் புரிந்து கொண்டு நழுவினாள் செம்பருத்தி. 

செம்பருத்தியை அழைத்துக் கொண்டு சிலுசிலுவென்ற  தூறலின் இடையில் பைக்கில் பறப்பது மிக மிக சுகமான அனுபவமாக இருந்தது அவிநாஷுக்கு. வழக்கம்போல் பக்கத்தில் இருந்த டீக்கடையில் ஒரு டீ வாங்கி, கப்பில் ஒருவரும் சாசரில் மற்றொருவருமாகப்  பருகிய போதுஇதனை விட மகிழ்ச்சியான தருணம் அவர்கள் வாழ்க்கையில் இருக்குமா என்பது இருவருக்கும் தெரியவில்லை. சின்ன சின்ன சம்பவங்களின் இன்பங்கள் தானே வாழ்க்கையையே வண்ணமயமாக மாற்றுகின்றது. 

ஆரஞ்சு வண்ணத்தில் மாறத்தொடங்கியிருந்த அந்த மாலை வேளையில் தாங்கள் வழக்கமாக அமரும் பாறையின் மேல் அமர்ந்து கொண்டு கடலின் அழகை ரசித்தபடி, தன் மனதில் உறுத்திக் கொண்டிருந்த சந்தேகத்தைக்  கேட்டாள்  செம்பருத்தி. 

“என்னோட வாழ்க்கை ஒரு போராட்டம் நிறைந்த பயணம் அவினாஷ். நான் வாழ்க்கையில சந்திச்ச ஒவ்வொரு மனிதரும் ஜலப்பிரியாவிலிருந்து காளியம்மாக்கா வரை  ஏதோ ஒரு வகையில என் லைஃப் நல்லா இருக்க, என்னை நானே செம்மைபடுத்திக்க எனக்கு உதவி இருக்காங்க.

இப்படி எல்லாம் இருக்கக் கூடாதுன்னு சிலரிடம் பாடம் கத்திருக்கேன். எந்தெந்த குணமெல்லாம் எனக்கு வேணும்னு பலரிடம் கத்திருக்கேன். எந்த வகையில் பார்த்தாலும் நான் முதல் முதலில் உங்களை பார்த்தப்ப நான் உங்களுக்கு பொருத்தம் இல்லாதவளாத்தான் நினைச்சேன். இப்பயும் அதுதான் நினைக்கிறேன். எதை வைத்து உங்களுக்கு என்ன பிடிச்சதுன்னு எனக்கு இன்னமும் தெரியல”

“நீ ஒவ்வொரு நாளும் மெருகேறுவதைநான்கவனிச்சுட்டு தான் இருக்கேன் செம்பருத்தி. உன்னை மாதிரியே நானும் ஒவ்வொரு நாளும் என்னை செதுக்கிட்டு இருக்கேன். உன் வயசுப்  பொண்ணுங்க எல்லாருக்கும் மனசுல ஒவ்வொரு ஆணுக்கும் அழகான பெண்ணைத்தான் புடிக்கும் அப்படின்ற மாதிரிஒரு நினைப்பில் இருக்கிங்க. அது சரி இல்லை.  

அழகு ஒவ்வொருத்தரின் பார்வையிலும் வேறுபடும். என்னைப்  பொறுத்தவரை என்னோட போராட்டம் நிறைஞ்ச வாழ்க்கையில் இன்னொரு போராளிதான் அழகு. ஒரு பெண்ணை மதிக்கிறதுதான் ஆண்மை. 

ஆணோ பொண்ணோ சைட் அடிக்கிறது வேற. அதை வச்சு அவங்களை எடை போடக்கூடாது. ஒவ்வொரு ஆணும் யாரு கூட தன் வாழ்நாள் முழுவதும் கழிக்க முடியுமோ அவங்க கிட்டத்தான் வாழ்க்கையை ஒப்புவிக்க ஆசைப்படுவான். 

ஒரு ஆண் ஒரு பெண் கிட்ட முழுமையா சரணடைஞ்சிட்டா அவளைத் தவிர வேற யாரும் அவன் கண்ணுக்கு அழகா தெரியவே மாட்டாங்க. அந்த வகையில் பார்த்தா நீ தான் எனக்குப்  பேரழகி”

இன்னமும் முழுமையாக அவள் முகம் தெளிவடையாததைக் கண்டு, அவளது வதனத்தைக் கையில் ஏந்தியவன் மெலிதாக நெற்றியில் முதன் முறையாக அவனது இதழ்களைப் பதித்தான். 

“செம்பருத்தி, சந்தேகம் காதலோடு அஸ்திவாரத்தையே அசைச்சுடும். அது நமக்கு வேணாமே… உனக்குப் புரியுற மாதிரி ஒன்னு சொல்லுறேன். அதுக்கப்பறமாவது உன் மனசு தெளிவடையுதான்னு பாக்குறேன். 

இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொரு மனிதப் பிறவிக்கும் தனது இணைக்கான தேடல் இருந்துட்டே தான் இருக்கும். 

நான் கேள்விப்பட்ட நாடோடிக் கதை ஒன்னு சொல்லட்டுமா…  முன்னொரு காலத்தில் ஆதியில் படைக்கப்பட்ட மனிதனுக்கு ரெண்டு முகங்களும் நாலு கைகளும், நாலு கால்களும் இருந்துச்சாம். இதனால அளப்பரிய ஆற்றலோடு இருந்தானாம். ஆற்றல் தந்த மமதையால தன்னைப் படைச்ச கடவுளையே மீறி நடக்கத் துணிஞ்சானாம். அதனால கடவுள் அவனை இரண்டா கிழிச்சுப் போட்டாராம். 

ரெண்டு காலோட இருந்த மனிதனால் தன்னோட கடமைகளை எல்லாம் செய்ய முடிஞ்சாலும் எதோ முழுமை அடையாத உணர்வோடேயே இருந்தானாம். அதுக்குக் காரணம் தன்னை விட்டுப் பிரிஞ்ச அந்த பாகம்தான்னு உறுதியா நம்ப ஆரம்பிச்சான்.

அதுக்கப்பறம் பிறந்த மனிதன் ஒவ்வொருத்தரும் தன்னோட அடுத்த பாதியைத் தேடி அலைய ஆரம்பிச்சானாம். எப்ப அவனோட அடுத்த பாதியை பாக்குறானோ  அந்த வினாடியே அவன் அன்பு , நட்பு, காமம் இப்படி எல்லா உணர்வுகளாலும் தொலைஞ்சு போறான். அவங்களை விட்டுப் பிரிய முடியாம தவிக்கிறான். ஓருயிரா மாறத் துடிக்கிறான். ஏன்னா அவங்க ரெண்டு பேரும் வேறு வேறு இல்ல. 

மொத்தத்தில் அவங்க ரெண்டு பேரும் சேர்ந்தால்தான் அவனோட வாழ்க்கை முழுமை அடையுது. அந்த உணர்வுக்குப் பெயர் உண்டு அதுதான் காதல். 

உன்மேல அதே மாதிரி ஒரு காதல்தான் எனக்கு. நீதான் என்னோட அந்த இன்னொரு பாதின்னு என் மனசு சொல்லுது. உன்னாலதான் என் வாழ்க்கை முழுமை அடையும்னு நம்புறேன்.  இதை உன்னால புரிஞ்சுக்க முடியுதா?”

மனம் மலர்ந்து தலை அசைத்தாள் செம்பருத்தி. மெல்லிய காற்று வீசிய அந்த மாலை மங்கும் வேளையில் அவினாஷின் மேல் சாய்ந்து கொண்ட போது முன்பு எப்போதும் இல்லாத நிறைவு அவளது முகத்தில். 

ஆரைக்குளத்தில் ஊராரின் உருவக் கேலியிலிருந்து தப்பிக்க வேண்டி ஆரம்பித்த இந்த மலரின் பயணம், பாகமங்கலத்தின் பட்டத்து இளவரசனின் காதலைக் கைப்பற்றியதோடு  முடிந்து விடாது. இந்த செம்பருத்தி தன்னுடன் கை கோர்த்த தென்றலுடன் சேர்ந்து இந்த உலகையே வெல்லும் நாள் வெகு தொலைவில் இல்லை.

சுபம்

 

டியர் பங்காரம்ஸ்,

வாரம் ஒரு பதிவு போட மட்டும்தான் நேரமிருந்தது. இருந்தாலும் எனது சூழ்நிலையைப் புரிந்து கொண்டு காத்திருந்து படித்து, கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டு செம்பருத்திக்கு இத்தனை நாளும் ஆதரவளித்த அனைத்து வாசகர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

இந்தக் கதை எழுத ஆரம்பித்ததும் பல சகோதரிகள் என்னிடம் தாங்களும் உருவக்கேலிக்கு ஆளானதை பகிர்ந்து கொண்டார்கள். ஒருவரின் உடலமைப்பு இயற்கையானது. அதனை சொல்லி உருவக்கேலி செய்பவர்களை இனியாவது நாம் ஊக்குவிக்காமல் இருப்போம். முன் தோன்றிய மூத்த குடிகள் என்று சொல்வதற்கான அடையாளம் அதுதான்.

இந்தக் கதை செம்பருத்தி என்ற பெண் எப்படி முயன்று தன்னிடமிருந்த தாழ்வு மனப்பான்மையை முறியடித்து வாழ்க்கையின் அடுத்தடுத்த படிகளுக்கு செல்கிறாள் என்பதை சொல்லும் சிறு முயற்சியே…

இந்த மலரின் பயணம் உங்களுக்கு நிறைவைத் தரும் என்று நம்புகிறேன். மீண்டும் அடுத்த கதையில் சந்திப்போம்.

அன்புடன்,

தமிழ் மதுரா

9 thoughts on “தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 42 (நிறைவுப் பகுதி)”

    1. அப்படியா… காஞ்சனா மேடம் அளவுக்கு தெளிவா சிந்திக்கிறேனா? என்னாலயே நம்ப முடியலையே.

  1. Wow _different story. Semba self made woman. Jalapriyathan முக்கிய காரணம்.அ ந்த பயணம் இதோ அபி என்ற நல்ல மனம் கொண்டவனால் கூர் தீட்டப்பட்டு அவின்ஷ் என்ற காதலனால் அன்பும் பெண்மையும் மலராக துளிர்க்க விட்டு காளியம்மா ஓவியா leelamma (இவங்க ஒரு புரியாத புதிர் இன்றும்) வித விதமான பெண்களுடன் கலந்து தண்ணி சுயம்புவாக செதுக்கி கொண்ட சுயம்பு..ஆனால் அவளுடைய மனித தன்மை இரக்க குணம். நேர்மை கற்பூரம் புத்தி……
    பெண்ணியம் இதுதானோ

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 5தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 5

அத்தியாயம் – 5   அந்தக் குர்த்தியிடமிருந்து சற்றும் பார்வையை விலக்க முடியாது  “சூப்பர்டி” என்றாள் ஜலப்பிரியா.    “என்ன கலர், துணி தரம் கூட ஏ 1. கண்டிப்பா கூடுதல் விலையாத்தான் இருக்கும். காப்பி கொட்டினத்துக்காகவா இவ்வளவு விலைல எடுத்துக்

தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 26தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 26

அத்தியாயம் – 26   தென்காசி பஸ்ஸ்டாண்ட்டில் இருட்டும் நேரத்தில் பஸ்ஸில் இருந்து ஒரு உருவம் இறங்கியது. மறைந்து மறைந்து இருட்டில் நடந்து யார் கண்ணிலும் படாதவாறு லாவகமாய் நழுவி ஒரு தெருவுக்குள் சென்றது. அந்தத் தெருவில் அனைவரும் உறங்க ஆரம்பித்ததை

தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 32தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 32

அத்தியாயம் – 32   நாகேந்திரன் தனது வீட்டை விட்டு சென்னைக்குப் படிக்க வந்ததே ஒரு கதை. பட்டாபிஷேகம் செய்வதற்கு முன்பு திக்விஜயம் அனுப்புவதைப் போல இவரை மதராஸ் கல்லூரியில் முதுகலை படிக்க அனுப்பி இருந்தார்கள். அதற்கு ஒரே காரணம் மங்கை