Tamil Madhura செம்பருத்தி தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 40

தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 40

அத்தியாயம் – 40

மடத்தில் அமர்ந்து கிறுக்குசாமி பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தனர் நாகேந்திரனும் மங்கையும். 

“குழந்தை உன் பேரு என்னடாப்பா?”

“அவினாஷ்”

“எங்கப்பன் மலையாண்டியோட அப்பன் சடையாண்டி பேரை வச்சிருக்கியா நீ?” என்று சிரித்தார். 

மனம் அமைதியைத் தேடும்போதெல்லாம் ஆண்டியப்பனின் கோபம் குறைந்து அமைதி அடைந்த பழனிக்கு  நாகேந்திரன் வந்துவிடுவார். கிறுக்குசாமியுடன் மடத்தில் அமர்ந்து சிறிது நேரம் பேசுவதிலேயே அவரது மனம் சாந்தி பெற்று தெளிவடைந்துவிடும். இந்த முறை மங்கையுடன் வந்துவிட்டார். 

“சாமி, எனக்கு மந்தாகினியோட போக்கே பயம்மா இருக்கு. என் மகன் அவினாஷை ஏதாவது செய்துடுவாளோன்னு ராப்பகலா தூங்காம கொள்ளாம தவிச்சுட்டு இருக்கேன்” என்றார் பெரும் கவலையுடன். 

“மந்திரத்தால் மாங்காயைப் பழுக்க வைக்கிறது உண்மையா இருந்தா மந்திரத்தால் ஒருத்தனை அழிக்கிறதும் நடக்கலாம்” என்றார் கிறுக்குசாமி அலட்டிக் கொள்ளாமல். 

“அப்ப அதெல்லாம் உண்மையில்லையா சாமி”

“உண்மையா… அந்த உண்மையைத்தான் நானும் தேடிகிட்டு இருக்கேன். எதிரியைத் தடுக்க பதில் கட்டு போடுறேன். ஏவலை நிறுத்துறேன் அப்படின்னு எல்லாம் சொல்ல நான் ஒன்னும் மந்திரவாதி இல்லை. எல்லாத்தையும் கடந்து உள்ளே இருக்கும் உண்மையை உணர முயற்சிக்கும் ஆன்மீகவாதி”

“இதை அப்படியே விட்டுடலாமா. கண்டுக்காம போய்டலாமா?” 

“விட முடியாதே… எப்ப உன் மனசு இது உண்மையா இருக்குமோன்னு நினைக்க ஆரம்பிச்சுச்சோ அப்பயே அது உண்மைன்னு பயப்பட ஆரம்பிச்சுருச்சு. கண்டுக்காம விட முடியாது. அப்பறம் ஒரு அண்டங்காக்கா பறந்தா கெட்டதுன்னு நினைப்ப, நாய் குளிருக்கு ஊளையிட்டா துக்க செய்தி வருமோன்னு பதறுவ”

உண்மைதான் இதெல்லாம் அவருக்கும் மங்கைக்கும்  இருந்தது. 

“என் படிப்பும், சுயசிந்தனையும்  இதெல்லாம் மூடநம்பிக்கைன்னு சொல்லுது. ஆனால் நீ கற்றது கையளவுதான்னு இன்னொரு பக்கம் மனசு சொல்லுது. ஒருவேளை என் அறிவால் உணர முடியாத இந்த மந்திர மாயமெல்லாம்  உண்மையாயிட்டா அவினாஷை எப்படி காப்பாத்துறதுன்னு பயம்மா இருக்கு” தழுதழுத்தார் மங்கை. 

“புரியுதும்மா…  உன் மனசோட போக்குக்கே வர்றேன். இருட்டுன்னு ஒன்னு இருந்தால் வெளிச்சம்னு இன்னொன்னு இருக்குமே? உனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கா… கடவுளை மீறின சக்தி இல்லைன்னு நம்புறியா?”

“நம்புறேன் சாமி”

“சரி, அவினாஷ் இங்க வா. தாத்தா உனக்கு கந்தசஷ்டி கவசம் புத்தகத்தைத் தரேன். அதைப் பாடமாக்கிக்கோ. தினமும் ரெண்டு வேளை குளிச்சுட்டு அந்த வேலனை வணங்கு. அவன் உனக்குக் காவலாய் நின்று காப்பான் என்று நம்பு”

“இதனால் என்ன பிரயோஜனம் தாத்தா?”

“பயப்படுற மனசு இருக்கே அது மணல் மாதிரி. காத்தடிக்கிற திசை எல்லாம் அல்லாடும். உறுதியான மனசு பாறை மாதிரி, அதை எந்த சக்தியாலும் ஒன்னும் செய்ய முடியாது. அது எவ்வளவு பெரிய மந்திரமா இருந்தாலும் உன்னை எதுவும் செய்யாதுனு உன் மனசு நம்பனும். அதுக்கு  பக்குவத்தை அடைய உதவி செய்றதுதான் இறைபக்தி. முதல் முதலில் எழுதப் பழகும்போது  கை பிடிச்சு எழுதினியே அதே மாதிரிதான். இந்த மந்திரம் உன் மனம் உறுதி பெற துணை நிற்கும்”

“இந்த ஒரு மந்திரம் மட்டும்தான் ஹெல்ப் பண்ணுமா தாத்தா”

“எனக்கு உதவியது இந்த மந்திரம். மத்தவங்களுக்கு வேற மந்திரம் உதவி இருக்கலாம்”

“சரி தாத்தா” 

“மந்திரம் மாயம் ஏவல் இதெல்லாம் உண்மையான்னு கேக்குறிங்க. அதெல்லாம் விட ஒரு சத்தியமான உண்மை இருக்கு. சக மனுஷனுக்கு  தீமையோ கொலையோ செய்தா அது சாபமாகவோ இல்லை பாவமாகவோ நம்ம ஆன்மாவில் பதிஞ்சுரும். ஏழேழு ஜென்மத்துக்கும் நம்மை விடாம துரத்தும். அந்தப் பொண்ணு அதெல்லாம் செய்யுது. பாவத்தை அடுக்கிக்குது. பாவத்தின் சாபமெல்லாம் அது மிகவும் பிரியம் வச்சுருக்குற ஒரு இடத்தில்தான் விடியும். அதாவது கத்தியை எடுத்தவனுக்குக் கத்தியாலயே ஆபத்து. இதை சொல்லி நல்லபடியா மனசுக்கு மருத்துவம் பாருங்க” என்றார் கிறுக்குசாமி. 

ஆனால் மருத்துவம் பார்க்கும் கட்டமெல்லாம் தாண்டியிருந்தாள் மந்தாகினி. 

அவினாஷை அழிக்க வேண்டும் என்ற எண்ணம் அவனை சிறுவனாகப் பார்த்த நிமிடத்திலிருந்து அவளது மனதில் வேரூன்றி  நிற்கிறது. 

அவனை மங்கையை செய்தது போல ஆள் வைத்து அடிக்க முடியவில்லை. அப்படி ஏதாவது  நடந்தால் பாகமங்கலத்தின் ஜமீனாக மகேந்திரனின்  மகன்  தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று மங்கையின் தந்தை பூபதி அவரது மறைவிற்கு முன்னரே உயில் எழுதி வைத்ததாக சுதர்சன் அவளிடம் எச்சரித்து ஒழுங்காக வாழும்படி சொல்லியிருந்தான். 

சுதர்சன் மந்தாகினியின் உண்மை முகம் அறிந்தவுடன்  நேரில் வந்து திட்டினான். எச்சரித்தான். அதன்பின் பெரிதாக அவனால் ஒன்றும் பிரச்சனை இல்லை. சொல்லப்போனால் வடநாட்டில் வேலை பார்த்து வரும் அவன்தான் ஒரு வகையில் அபிராமிற்கு காட் பாதர். அபிராம் இரண்டு மூன்று முறை சிறு விதி மீறல்கள் செய்து மாட்டிக் கொண்டபோது காப்பாற்றி இருக்கிறான். அதனால் அபிராமின் அன்பிற்கும் நம்பிக்கைக்கும் பாத்திரமானான். 

ஆகையால் இன்றுவரை துரோகங்கள் பல செய்திருந்தும் இந்த மந்தாகினி  நாகேந்திரனின் மனைவி என்ற பதவியால் தப்பித்து வருகிறாள். அந்தப் பதவியை  அவ்வளவு சீக்கிரம் விட்டுவிட முடியுமா?

அவினாஷை ஆட்களை வைத்து அடித்து கொலையாக செய்தால்தான் பிரச்சனையே. இதுவே விபத்தாய் அல்லது தற்கொலையை இருந்தால். அவளுக்கோ இல்லை அபிராமிற்கோ பிரச்சனை இல்லை. அது பலிப்பதற்காகத்தான்  இத்தனை வருடங்களும் பல பூஜைகளை செய்து வருகிறாள். இருந்தும் அவினாஷ் திம்மென்று அசையாமல் நிற்கிறான். 

ஒன்றை கவனத்தில் கொள்ள மறந்தாள் மந்தாகினி. அடுத்தவருக்கு தீங்கு நினைத்து நினைத்து மனசில் விஷவிருட்சத்தை வளர்த்து அந்த விஷம் அவளையே கொஞ்சம் கொஞ்சமாக அரித்துக் கொண்டிருந்தது. சர்க்கரை, ரத்தக்கொதிப்பு, இதயநோய் எல்லாம் அவளுக்கு நெருங்கிய நண்பர்களாகி இருந்தனர். 

இன்று அவளது கனவுக்கே கேடு  வரும் போலிருக்கிறது. அவினாஷ் பதினெட்டு வயதினை நெருங்கி வருகிறான். அவனுக்கு பட்டம் கட்டிவிட்டால் அபிராம் என்ன செய்வான்? 

அதற்காக இன்னொரு ஸ்பெஷல் பூஜை. இந்த துர்தேவதை பயங்கர கொடூரமாம். மந்திரம் சொல்லி எழுப்பி விட்டால் உயிர் காவு வாங்காமல் போகாதாம். ஐந்து நாட்கள் இரவும் பகலும் பூஜை செய்ய வேண்டி இருக்கிறது. நாளை அவினாஷ் விமானத்தில் பயணம் செய்கிறானாம். விமானத்தில் அவனுக்கு ஏதாவது நேர்ந்தாலும் பரவாயில்லை. இல்லை விமானமே கிராஷ் ஆனாலும் அவளுக்கு கவலை இல்லை. அவள் தொடங்கிய போரில் அபிராம் வெற்றிக்கொடி  நாட்ட  வேண்டும். அவளது கனவுகள் அவள் மகன் மூலம் நிறைவேற வேண்டும். 

வீட்டில் ஒரு காக்காய் குருவி கூட இல்லை.  வீடு முழுவதும் விளக்கேற்றினாள். கோழியை அறுத்து அது துடிதுடித்து அடங்குவதை பார்த்திருந்தாள். பின்னர் அதன் தலையைத் திருகிப் போட்டுவிட்டு, எழுதி வைத்திருந்த மந்திரங்களை உச்சாடனம் செய்ய ஆரம்பித்தாள். 

எலெக்ட்ரிக், எலெக்ட்ரானிக் பொருட்கள் இந்த தெய்வத்திற்கு ஆகாதாம். அதனால்தான் மின் இணைப்பைத் துண்டித்து அகல்விளக்கு ஏற்றி இருக்கிறாள். செல்போன் எல்லாவற்றையும் எடுத்து மூடி வைத்துவிட்டாள். 

அபிராமைப் பார்க்கப் போவதாக சுகுமாரனிடமும் மற்றவர்களிடமும் சொல்லிவிட்டு தன்னைத் தொடர்பு கொள்ள முயற்சிக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டாள்.அபிராமோ ஸ்விசர்லாந்து சென்றிருக்கிறான். கேளிக்கைகளில் ஈடுபடுவதில் அவளைத் தொடர்பு கொள்ள முயற்சிக்கவே மாட்டான். 

அப்பாடா மந்திர உச்சாடனத்தை செய்யலாம். மூன்று நாட்கள் தொடர்ந்து சொல்லவேண்டும். 

மந்திரத்தை ஆரம்பித்த பொழுதே அவளுக்கு நெஞ்சை அடைப்பது போல இருந்தது. இருந்தும் உச்சஸ்தாயில் தொடர்ந்து கொண்டே இருந்தாள். ஒரு மணி நேரம் சென்றது. 

யாரது, யாரோ நிழல் உருவம் போலத்  தெரிகிறதே. 

இல்லை இதெல்லாம் மனப்பிரமை. இப்படித்தான் மாய உருவங்கள் தெரியும், பயப்படுத்தி மந்திரங்கள் சொல்வதைத் தடுக்கும்  என்று நம்பூதிரி சொல்லி இருக்கிறான். 

 

ஹ்ரீம், ஹம்… ஹக்… தொடர்ந்தாள். 

என்னவோ அடைக்கிறதே. உடல் முழுவதும் வேர்த்துக் கொட்டியது. அப்படியே நெஞ்செல்லாம் அடைத்தது. 

மலர்களைத் தூவ முடியவில்லை. ஏனென்றால் கைகளைத் தூக்க முடியாத அளவுக்கு பாரமாய் இருந்தது. தோள்பட்டை வலித்தது. வியர்வையில் உடலெல்லாம் நனைந்தது. தாகத்தால் நா வறண்டது. 

யார்.. யாராவது இருக்கிறீர்களா?  யாருமே இல்லையே… ஒரு வாய் தண்ணீர் தாங்களேன். 

இதற்கு மேல் அவளால் தாங்க முடியாது. ஒரு வாய் தண்ணீராவது கண்டிப்பாகத் தேவை. மந்திரத்தை நிறுத்திவிட்டு எழுந்து நிற்க முயன்றாள். அவளால் முடியவில்லை. தவழ ஆரம்பித்தாள். அப்படியே தவழ்ந்து தவழ்ந்து செல்வதற்குள் அப்படியே ஓரிடத்தில் அவளது அசைவு நின்றது. 

மந்தாகினி அவள் ஆசைப்பட்டது போல அரண்மனையில், அள்ள அள்ளக் குறையாத செல்வங்களுக்கு மத்தியில், ஒரு வாய் தண்ணீர் தர ஆளின்றி அனாதையாக செத்துப் போனாள். அவள் இறந்ததைக் கூட  மூன்று நாட்கள் கழித்து வந்த வேலைக்காரர்கள் கதவை உடைத்துத்தான் கண்டுபிடித்தார்கள். 

ந்தாகினியின் வாழ்க்கை இப்படித்தான் முடிந்தது. அவளது இப்போது அவளது பேராசையை, தாய்ப்பாசம் மிக்க அபிராம் தொடரப் போகிறானா? இல்லை உண்மையை உணர்ந்து நியாய புத்தியுடன் நடக்கப் போகிறானா? என்ற கேள்வி அங்கிருந்தவர்கள் பார்வையில் இருந்தது. 

அபிராம் விக்கித்து உட்காந்திருந்தான். அவனே அறியாத அவனது வாழ்க்கையின் பக்கங்கள் லீலாம்மாவின் உதவியால் அவன் கண்முன் விரிந்து நின்றது. 

 

இதைப் பொய் என்று அவனால் மறுக்க முடியாது. ஏனென்றால் சுகுமாரன், சுதர்சன், லீலாம்மா என்று அவனது நலம் விரும்பிகள் எல்லாரும் அதில் பங்கு பெற்று இருக்கிறார்கள். 

லீலாம்மாவின் ஆதாரங்கள் அனைத்தும் புரட்டு என்று ஒதுக்க முடியாத அளவுக்கு பலமானவை. மங்கை, நாகேந்திரன் திருமண விவரமே ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் போல இருந்தது. 

அனைத்திற்கும் மேலாக அவனது அன்னை இறந்த விதம். அவள் பாகமங்கலத்து அரச பதவியின் மேல் கொண்டிருந்த வெறி இவை அனைத்தும் உண்மை என்று அவனது நியாய புத்தி அடித்து சொன்னது. 

ஒருவன் மகளின் பிழையை பொறுத்துக் கொண்டு தண்டிப்பான். மனைவியின் பிழையை ஏற்றுக் கொண்டு கண்டிப்பான். ஆனால் இங்கு இவன் தாயே பிழையாகிப் போனாளே. இதனை எப்படி ஜீரணிப்பான்?. 

அபிராமின் யோசனையைக் கண்டு துணுக்குற்ற காவ்யா வாயைத் திறந்தாள் “இதுக்கெல்லாம் ஆதாரம் தாங்க பாக்கலாம். ஆதாரத்தை என் கண்ணு முன்னாடி காமிங்க. அதுக்கப்பறம் பேசுங்க”

“உன் கண்ணு முன்னாடி இருக்குற லீகல் டாக்குமெண்ட்ஸ், சுதர்சனோட ஒப்புதல் வாக்குமூலம் இத்தியாதி இத்தியாதி இதெல்லாம் என்ன காவ்யா?” என்றாள் செம்பருத்தியும் கடுப்புடன். 

“அதெல்லாம் நான் நம்ப மாட்டேன். சுதர்சன்னு ஒரு ஆள். என்னவோ கிறுக்கினா அதெல்லாம் உண்மை ஆயிடுமா? இது மாதிரி ஆயிரம் லீகல் டாகுமெண்ட்ஸ் நானே தயாரிச்சுத் தந்திருக்கேன். முதல்ல உங்களுக்கெல்லாம் மலையாளம் தெரியுமா? எங்கத்தை மலையாளத்தில் நம்பூதிரிக்கு எழுதினதாவும், மங்கை கல்யாணத்தைக் கெடுக்க எழுதின மொட்டைக் கடுதாசின்னும் சொல்றதை நான் நம்ப மாட்டேன்”

“சேச்சிக்கு மலையாளம் எழுத படிக்க தெரியும்”

“இந்தம்மாவே மங்கையோட கையாள். இந்தம்மா சொல்றதை எல்லாம் சாட்சியா எடுத்துக்க முடியாது. எங்கத்தை பத்தரை மாத்துத் தங்கம். அதை மட்டும் மனசில் வச்சுக்கோ அபிராம். இவங்க சொல்றதெல்லாம் அக்மார்க் பொய்”

“எல்லாரும் இங்கிருந்து போங்க. ப்ளீஸ் லீவ் மீ அலோன்” என்று கத்தினான் அபிராம். 

உடனே அனைவரும் அங்கிருந்து அகன்றார்கள்.

வெளியே வாசலில் தயங்கி நின்றாள் ராதிகா. “அவரை இந்த மாதிரி நிலைல தனியா விட முடியாது”

“ஹீ நீட்ஸ் சம் டைம் டு டைஜஸ்ட் தி ட்ரூத். நான் இங்க கேமிரா செட் பண்ணி வச்சுட்டேன். நம்ம பக்கத்து ரூமிலிருந்து மானிட்டர் பண்ணலாம். ஏதாவது எமர்ஜென்சின்னா  அடுத்த வினாடி இங்க இருப்போம்” என்று சொல்லி ராதிகாவை பக்கத்து அறைக்கு அழைத்துச் சென்றாள் செம்பருத்தி. 

தான் நம்பி சாய்ந்தது தாயின் மடி என்று நினைத்தேனே அது படமெடுத்து ஆடும் கருநாகத்தை தலை என்று சொல்கிறார்களே. மனம் நொறுங்கி அமர்ந்திருந்தான்.

அவனது நியாய புத்தி இதுவரை மங்கையோ அவினாஷோ ஒரு முறை கூட அவனைக் காயப்படுத்தவோ, தோற்கடிக்கவோ முயன்றதில்லை என்று சொன்னது. என்னைக் கொலை செய்ய முயன்றார்கள் என்றால் இரண்டு முறை என் உயிரைக் காப்பாற்ற அவசியமில்லையே. என்னைப் பாதுகாக்கத்தானே இத்தனை ஆட்கள் சுற்றி காவலாய் நிற்கிறார்கள். 

அவனது அம்மா அனாதையாய் இறந்த அரண்மனைக்குள் அடியெடுத்து வைக்க மனமில்லாமல் இவன்தான் இந்த வீட்டில் தொடர்ந்து இருக்கிறானே தவிர, அவர்கள் யாரும் கொச்சி அரண்மனையில் தங்க வேண்டாம் என்று சொன்னதில்லை. இன்று வரை அவனுக்காக அரண்மனையைப்  பராமரித்தே வருகின்றனர். 

அவனது தந்தை உழைத்து சேர்த்த சொத்து முழுவதும் இன்றும் அபிராமின் பெயரில்தான் இருக்கிறது. அதில் வரும் வருமானத்தை இந்த நிமிடம் வரை அவன்தான் அனுபவித்து வருகிறான். அதுமட்டுமில்லை இப்போது மங்கையின் சொத்தான இந்த வீட்டினைக் கூட அவன்தான் அனுபவிக்கிறான். உரிமை உள்ளவனோ ஒருதரம்  கூட இந்த வீடு என்னுடையது. என் அம்மாவின் சொத்து என்று சொன்னதே இல்லை. 

அவினாஷை எத்தனை முறை வீட்டை விட்டு வெளியே போக சொல்லி இருக்கிறேன். ஆனால் இதெல்லாம் அவினாஷுக்கு அல்லவா உடமையானது. என்ன ஒரு பைத்தியக்காரத்தனத்தை செய்திருக்கிறேன். எனக்கு உடமை இல்லாதது சொந்தமில்லாததை சொந்தக்காரர்களைத் துரத்திவிட்டு வெட்கமில்லாமல் அனுபவித்து இருக்கிறேனே. 

அவனது மனத்தினைப் போன்று இருண்டிருந்த வானத்தை வெறித்தான்.அவன் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. 

வீடியோ வழியே அவனை கவனித்துக் கொண்டிருந்த ராதிகாவின் கண்களிலும் கண்ணீர். எழுந்து அபிராமை  செல்ல முயன்றவளின் கைகளைப் பிடித்துத் தடுத்தாள் செம்பருத்தி. 

“அவர் அழட்டும் ராதிகா… அழுகை ஒரு வடிகால். எத்தனை நாள் ஆம்பளை சிங்கமா அழாம இருன்னு சொல்லி சொல்லி ஆண்களின்  உணர்ச்சிகளை அடக்கி வச்சுப் பழக்கப்போறோம். ஒரு நாள் அழுதுட்டா அவரது கவலை பாரம் எல்லாம் தீர்ந்துடும்”

ராதிகா அமர, காளியம்மாவிடம் அவளுக்கு ஒரு கப் டீ ஒன்றைப் போட்டு எடுத்து வரச் சொன்னாள். 

“ராதிகா நான் சமீபத்தில் ஒரு ஆர்டிகல்  படிச்சேன். அதில் சொல்லப்பட்ட சில சம்பவங்கள் நாம் பேசவே தயங்குறது. அது என்ன சொல்லுதுன்னா உலகத்தில் மிகவும் உயர்ந்த வரம் என்ன தெரியுமா தாய்மை. தாய்மைன்னா குழந்தை பெத்துக்குறது மட்டுமில்ல. ஒரு குழந்தையை நல்லவனா தயார்ப்படுத்தி உலகத்துக்குத் தர்றது. 

பலர் அம்மா வேலையை அழகா செஞ்சாலும் சிலரால் இதை சரிவர செய்ய முடியல. சுயநலம், தன்னலம் பிடிச்ச சில அம்மாக்கள் இருக்காங்க. அவங்க பிள்ளைகளை ஒரு தனிப்பட்ட உயிராவே நினைக்கிறதில்லை.  மாறா தங்களோட கைப்பாவையாத்தான் ட்ரீட் பண்றங்க. 

இதுக்கு  ஒரு உதாரணம் எங்க அத்தை. உங்களுக்கு கஷ்டப்பட்டு  சாப்பாடு போட்டேன், துணிமணி வாங்கித் தந்தேன், பீஸ் கட்டினேன், கல்யாணம் பண்ணித்தந்தேன் உங்க அப்பா கிட்ட எவ்வளவு கஷ்டத்தை அனுபவிச்சு உன்னை வளர்த்தேன். நீ இருக்குற வாழ்க்கை நான் போட்ட பிச்சை. அப்படின்னு சொல்லி சொல்லிக் காமிப்பாங்க. 

இதுனால பிள்ளைகள் அவங்களுக்கு கடமைப்பட்டவங்களாகவும் அம்மா சொல்றதை எல்லாம் கேட்கலைன்னா தப்பு செய்றோம் என்ற குற்ற உணர்ச்சியும் உண்டாகிடும். 

அத்தை பொண்ணு ரொம்பவே பாவம். அம்மா சொல்றதை அப்படியே கேட்டால் அவங்க வீட்டில் தகராறு வரும். ஆனால் இந்த அம்மாக்களுக்கோ பெண்களின் கஷ்டம் இயலாமை பத்தி  எல்லாம் கவலை இல்லை. 

“பாரு பாரு கல்யாணம் ஆனதும் பெத்து வளர்த்த தாய் தந்தையை மறந்துட்டு வீட்டுக்காரன் வீடே சொர்க்கம்னு சொல்லுது. நாங்கதான் உனக்கு சாப்பாடு போட்டு வளர்த்தோம். அந்த நன்றி இருக்கா பாரு” என்று வார்த்தையால் குத்திக் கிழிக்கத் தயங்க மாட்டாங்க. 

அவங்களைப்  பொறுத்தவரை தான் நினைக்கிறது நடக்கணும். அப்படி நடக்கலைன்னா ஊரு பூரா பிள்ளைகளைப் பத்தி குறை சொல்லிட்டு வருவாங்க. 

மந்தாகினியும்  டாக்சிக் மதர்தான். அவங்களோட விஷத்தன்மை யாருமே கற்பனை கூட செஞ்சு பார்க்க முடியாதது.  எப்படின்னா தனக்குப் பிடிச்ச வாழ்க்கையைத்தான் அபிராம் வாழணும்னு பல குறுக்கு வேலைகளை செஞ்சாங்க. அதாவது அவங்களோட வாழ்க்கையின் தொடர்ச்சியாத்தான் அபிராமின் வாழ்க்கையைப் பாத்தாங்களே தவிர, அவருக்குன்னு ஒரு மனசு இருக்கு ஒரு ஆசை இருக்குன்னு நினைக்க மறுத்தாங்க. தனக்குப் பிடிக்காதவர்களை அபிராமின் எதிரின்னு சொல்லி சொல்லி பதிய வச்சாங்க. 

கடைசில அபிராம் தனக்கு ஆக்சிடென்ட் ஆனதும் யாரை நம்புறது? எது உண்மைன்னு திக்குத் தெரியாம நின்னார். இப்படி அவரை தத்தளிக்கும்படி வச்சதும் அவரோட அம்மாதான். 

மந்தாகினி மட்டும் நினைச்சிருந்தால் ஒழுங்கா படிச்சு வேலைக்கு போய் ஒரு வாழ்க்கையை அமைச்சிருந்திருக்கலாம். ஒருவேளை நாகந்திரனுடன் வாழ்க்கை அமைஞ்சதும் இப்ப இருக்குற சொத்தே போதும்னு மங்கைக்கு வேற இடத்தில் கல்யாணம் பண்ணி வச்சிருக்கலாம். இது எதுவுமே அவங்க செய்யல. அவங்களோட கஷ்டமெல்லாம் பேராசையின் விளைவுதான். 

தாய்மை எத்தனை உயர்வுன்னு பேசுற நம்ம, இந்த  டாக்சிக் மதர்ஸ் பத்தி பேச ரொம்பவே தயங்குறோம். இதெல்லாம் செய்யக் கூடாதுன்னு தெரிஞ்சால்தானே ஒவ்வொருத்தரும் நம்ம போகும் பாதை தவறுன்னு உணர முடியும்”

செம்பருத்தி சொன்னது அனைத்தும் சத்தியமாகப் பட்டது ராதிகாவுக்கு. காசுக்காக, தான் பெற்ற குழந்தையைத் தகாத செயலுக்குப் பயன்படுத்தும் எத்தனை பெற்றோர்களை சேவை மையத்தில் பார்த்திருக்கிறாள். அவர்கள் டாக்சிக் பேரெண்ட்ஸ் மட்டுமல்ல டாக்சிக் ஹியூமன்ஸ். 

இரவு முழுவதும் அவர்கள் இருவரின் பேச்சில் கழிந்தது. 

நள்ளிரவுக்கு மேல் அவினாஷ் மெதுவாக அங்கு வந்தான் “அபிராம்”

“அவருக்கு மருந்து கொடுத்து தூங்க வச்சாச்சு. தூக்க மாத்திரை அவரது வலிகளுக்கு நிவாரணியா இருக்கும்”

அவனை அறைக்கு சென்று பார்த்துவிட்டு வந்த அவினாஷ் “செம்பருத்தி நான் கொஞ்சம் தூங்கணும்” என்றான். 

“பக்கத்து ரூமை ரெடி பண்ண சொல்றேன் அவினாஷ்”

“இல்ல இங்க தூங்கினா அபிராம் கண்ணுல காலைல பட்டா ரொம்ப கில்டியா பீல் பண்ணுவான்”

“ஹோட்டலுக்கு போறிங்களா”

“இல்லை இப்ப நான் அவன் பக்கத்துலயே  இருக்கணும். ஆனால் அவன் கண்ணில் படாம தள்ளி இருக்கணும்.  அதனால கார்ல தூங்குறேன். ஏதாவது தேவைன்னா எழுப்பிவிடு”

“நல்லாருக்கே நீ கார்ல தூங்குவியா. கீழ ஒரு ரூமை ரெடி பண்ணித் தரேன். தூங்கு” என்றார் சேச்சி கண்டிப்புடன். 

ஊசி விழுந்தால் கூட கேட்கும் அந்த அமைதியான இரவில் பக்கத்து அறையில் தூக்கக் கலக்கத்தில் அவர்கள் பேசியதைக் கேட்டுக் கொண்டிருந்த அபிராமின் கண்களில் இருந்து அவனையும் அறியாமல் நீர் வழிந்தது. 

1 thought on “தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 40”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 29தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 29

அத்தியாயம் – 29   “அபி… “ ராதிகாவின் குரல் அபிராமை இந்த உலகிற்கு இழுத்து வந்தது.    ராதிகாவை நிமிர்ந்து பார்த்தான்.   “மௌனம் போதும் அபி.இதுவரை நடந்தது தப்போ சரியோ எனக்கு தெரியாது. ஆனா நீங்க மங்கை ஆன்ட்டியைப்

தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 35தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 35

அத்தியாயம் – 35  ஆத்திரத்தில் கொதித்துக் கொண்டிருந்தாள் மந்தாகினி. நாகேந்திரன் ராஜ வம்சத்தினன் என்பதாலா? அது மட்டும் அவளது ஆத்திரத்திற்குக் காரணமில்லை. அவன் பட்டாபிஷேகத்தினை ஒட்டி அவளுக்கு இழைக்கப்பட்ட அவமானம்தான். பட்டாபிஷேக விழா முடிந்து  நகர்வலமாக சென்று அவர்களது குலதெய்வமான முருகப்

தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 12தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 12

ஹலோ பங்காரம்ஸ், கதையைப் பற்றிய உங்களது கருத்துக்களுக்கும் தனிப்பட்ட மின்னஞ்சல்களுக்கும் கோடான கோடி நன்றிகள். நீங்கள் சொன்னபடியே செம்பருத்தி உங்களது வாழ்க்கையிலும் ஏதோ ஓரிடத்தில் பாசிட்டிவான தாக்கத்தை ஏற்படுத்துவாள் என்று நம்புகிறேன். சாரிப்பா, சென்ற வாரம் அலுவலக வேலைல பிஸி. அப்டேட்