Tamil Madhura செம்பருத்தி தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 36

தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 36

அத்தியாயம் – 36

 

மந்தாகினி அடுத்து நேரே சென்றது சுதர்சனின் இருப்பிடத்திற்குத் தான். நாகேந்திரன் குடும்பத்தினர் தன் கன்னம்  கன்றும் அளவுக்கு அளித்த பரிசினை சுதர்சனிடம் காட்டினாள்.

 

“உன்னை கை நீட்டி அடிச்சு வெளியே விரட்டிவிட்டு இருக்காங்க. ஒரு வார்த்தை சொல்லு நான் உனக்காக போய் பேசுறேன்” என்றான் சுதர்சன்

 

“எனக்கு பழிவாங்கும் எண்ணமில்லை. எனக்குத் தேவை நாகேந்திரன் மட்டும் தான். அவரை எப்படியாவது என்கூட சேர்த்து வச்சிருங்க சுதர்சன். நான் ஆயுள் முழுவதும் உங்களுக்கு நன்றி கடன் பட்டவளா இருப்பேன்.

 

உங்க கண் முன்னாடி நிக்கிற இந்த அபலையோட வாழ்க்கையைக்  கூட உங்களால சீர்படுத்த முடியவில்லை என்றால் நீங்க ஐபிஎஸ் அதிகாரி ஆகி என்ன பயன்? நீங்களும் அதிகார வர்க்கத்துக்குக் கட்டுப்பட்ட சாதாரண மனிதரே” என்றாள் மந்தாகினி.

 

“கவலைப்படாதே நான் சொல்ற ஹோட்டல்ல போயி தங்கிரு. நாகேந்திரனிடம்  எப்படியாவது பேசி அவனை உனது அறைக்கு வரவழைத்து விடலாம். அதன் பின் அவனால் உன்னை மறுக்கவே முடியாத அளவிற்கு செய்துவிடலாம்”

 

அடுத்தடுத்து காரியங்கள் மின்னல் வேகத்தில் அரங்கேறின. 

 

நாகேந்திரனை, மந்தாகினி தற்கொலைக்கு முயன்றதாகவும், அது விஷயமாகப்  பேச வேண்டும் என்று யாருக்கும் தெரியாமல் விடுதிக்கு வருமாறு அழைத்தான் சுதர்சன். 

 

அங்கு காப்பியினை அருந்தியதும் நாகேந்திரனுக்குத்  தலை சுற்றி மயங்கி விழுந்தார். கண் விழித்த போது மேல் சட்டையில்லாமல் படுக்கையில் நாகேந்திரன். அருகில் யாரோ ஒரு பெண். அந்தப்  பெண்ணைப்  பார்த்தவருக்கு மேலும் அதிர்ச்சி. அவள் மந்தாகினி. மந்தாகினியும் கூட மயக்கத்தில் இருந்தாள். 

 

அது ஒரு மூன்றாம் தர லாட்ஜ். அவர் அதிர்ந்து நின்று கொண்டிருக்கும் போது சில நிமிடங்களில் கதவு தட்டப்பட்டது. வெளியே போலீசார் பத்திரிக்கை நண்பர்களை அழைத்துக் கொண்டு  ரெய்டு வந்திருந்தனர். அந்த ரெய்டில் மாட்டியதாக மந்தாகினி நாகேந்திரனின் புகைப்படங்கள்  காலை செய்தித்தாளில் முதல் பக்கத்தில்  வெளிவந்தது.

 

சுதர்சன் தனது அதிகாரங்களை எல்லாம் பயன்படுத்தி, நாகேந்திரன் மந்தாகினி விடுதில் தனியே சந்தித்ததாகப் பத்திரிக்கையில் வரச் செய்தான். அடுத்தவர் அந்தரங்கங்களை வெளிச்சமிட்டு காண்பிக்கும் ஒரு மூன்றாம் தர வார பத்திரிக்கையில் ‘ராஜாவின் ஜல்சா’ என்ற பெயரில் மேல் சட்டையில்லாமல்  நாகேந்திரனின் படமும் வெளி வந்தது. 

 

முடிந்த அளவிற்கு அதன் பிரதிகளை வாங்கி கொளுத்தினர் பாகமங்கலம் குடும்பத்தினர். இருந்தாலும் நாகேந்திரன் மந்தாகினி என்ற பெண்ணுடன் தொடர்பில் இருந்ததாக, திருமணத்திற்கு முதல் நாள் கூட அவளுடன் விடுதியில் கழித்ததாக வந்த செய்தி காட்டுத்தீ போல் பரவியது.

 

கல்லூரியில் கூட அவர்கள் இருவரும் ஒரே நாளில் கல்லூரியை விட்டு நின்ற செய்தி தூசு தட்டி எடுக்கப்பட்டது.

 

சுதர்சன் தனது பழைய பகையை இப்படி சமயம் பார்த்து தீர்த்துக்கொண்டான். அவருக்கு விரித்த வலையில் இந்த அப்பாவி மந்தாகினியும் சிக்கிக் கொண்டாள் என்றே நாகேந்திரன்  நம்பினார். மந்தாகினியும் அவ்வாறே சாதித்தாள். சுதர்சன் பயிற்சிக்காக சென்றது கூட அவளுக்கு நல்லதொரு வாய்ப்பாக அமைந்தது. 

 

மந்தாகினி நினைத்தது போல திருமணம் நின்றுவிட்டது. 

 

விதி வலியது என்று சொல்வார்கள். மந்தாகினியை ஏறெடுத்து பார்க்காமலேயே அவருக்கும் மந்தாகினிக்கும் வேறு வழியே இல்லாமல் திருமணம் நடந்தது.

 

ஆனால் நாகேந்திரனே அறியாதது ஒன்று இருந்தது திருமணத்திற்கு முன்பு பட்டாபிஷேகம் செய்து வைத்தால், நாகேந்திரன் மகன் முறை வந்து விடுவானே என்று எண்ணி, மங்கைக்கு  18 வயது பூர்த்தியானதும் வாளுக்கு மாலை சூட்டி அவரை நாகேந்திரனின் மனைவியாக்கி விட்டு,   சட்டப்படி தனது மருமகனாக பதிவு செய்துவிட்டு, அதன் பின்னர் சம்பிரதாயத்திற்காகவே தாலி கட்டும் சடங்கு பட்டாபிஷேகம் முடிந்ததும் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

 

வாளுக்கு மாலை போடும் விழா என்றுதான் இள வயதினர் நினைத்தார்களே  தவிர, அதனுள் இப்படி சட்டத்தால் நாகேந்திரனையும் மங்கையையும் பூபதி முடிச்சு போட்டு வைத்திருந்தது இவர்களுக்கே தெரியவில்லை.

 

தாய் தந்தை வாழ்த்துக்கள் இன்றி மந்தாகினியுடன் நாகேந்திரனின் வாழ்வு தொடங்கியது. அவன் பாகமங்கலத்திற்குள் காலடி எடுத்து வைக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார் வடிவு. 

 

“கடவுள் போட்ட முடிச்சு. அந்தப் பெண்ணை மருமகளா ஏத்துக்கோ வடிவு. இங்க வந்தா இப்ப என்ன குறைஞ்சு போச்சு” என்று தங்கையிடம் பதமாகச் சொன்னார் பூபதி. 

 

“அண்ணா… உள்ளுணர்வு சம்பந்தப்பட்ட விஷயத்தில் ஆண்களை விட பெண்கள் சொல்வது சரியாக இருக்கும். அவ இந்த வீட்டுக்குள்ள அடி எடுத்து வச்சப்பவே ஒரு கெட்ட எண்ணத்தோட தான் இருந்திருக்கா… இந்த சின்ன குழந்தை மங்கை என்ன செஞ்சா? மங்கையை போய் பாருங்கண்ணா, கைல தழும்பு, முடில பின்னு குத்துறேன்னு தலை முழுசும் குத்தி புண்ணாக்கி இருக்கா… அவ கெட்ட எண்ணமே உருவானவ. 

 

அவ இந்த வீட்டில் காலடி எடுத்து வச்சா இன்னும் என்ன செய்வாளோன்னு என் அடி வயிறு பதறுது. தயவுசெய்து அவளை இந்த பாகமங்கலத்தை மிதிக்க விட்டுறாதிங்க” கண்கள் கலங்க பதறிய தங்கையை சமாதானப்படுத்தி வாக்களித்தார். 

 

நாகேந்திரனை வேறு இடத்தில் தங்கிக் கொள்ளும்படி சொன்னார். அதன்படி குடும்பத்தை விட்டுவிட்டு கேரளத்தில் இருக்கும் அவர்களது கோடை கால அரண்மனையில் குடியேறினான் நாகேந்திரன். 

 

“வைராக்கியமா நீ நினைச்சபடியே ராணித் தேனீ ஆயிட்டா வாழ்த்துக்கள்” என்ற சுகுமாரனை கணக்கு வழக்கு பார்க்கச் சொல்லி தன்னருகே வைத்துக் கொண்டாள். 

 

சுதர்சனின் தொடர்பினை முதல் காரியமாகத் துண்டித்தாள். முறையற்று கை பற்றியதாலோ என்னவோ பூஜை மந்திரம் தந்திரம் இவற்றை மட்டும் கை விடவில்லை மந்தாகினி. அவைதான் நாகேந்திரனை தன்னுடன் இணைத்து வைத்ததாக முன்பை விட முழுமையாக நம்பினாள். மந்திரவாதிகள் சொன்ன சாங்கியம், சம்பிரதாயம் எல்லாவற்றையும் கண்மூடித்தனமாக கடை பிடித்தாள்.

 

அந்த கோடை அரண்மனை வாசம் தாண்டி அடுத்த கட்டத்திற்கு செல்ல ஆசைப்பட்டாள். பாகமங்கலத்தில் என்னை வேலைக்காரியுடன் உணவு சாப்பிடச் சொன்ன வடிவினை வேலைக்காரிகளுடன் தங்கச் செய்தால் எப்படி இருக்கும்? பழிக்குப் பழி. 

 

கைகேயியிடம் தசரதன் கேட்டதைப் போல, ஒரு நாள் இரவு, தனது பிள்ளையை சுமந்து நிற்கும் மந்தாகினியிடம், அவள் ஆசைப்பட்டதைக் கேட்கச் சொன்னார் நாகேந்திரன். 

 

“ பாகமங்கலம் வீட்டுக்குப் போகணும். நீங்கதானே பாகமங்கலத்து ராஜா, நான் ராணி. எதுக்காக நம்ம அரண்மனையை விட்டுட்டு வெளிய தங்கணும்? நியாயப்படி பார்த்தா அவங்க எல்லாரையும் விரட்டிவிட்டுட்டு நம்மதான் அங்க தங்கணும்”

 

புரியாமல் பார்த்த நாகேந்திரன் 

 

“மந்தாகினி உனக்கு உண்மை தெரியாதா, பெயரளவில் தான் நான் ராஜா. அந்த சொத்துக்களுக்கு எல்லாம் உண்மையான சொந்தக்காரி மங்கைதான். அவதான் ராணி. அவளைக் கல்யாணம் பண்ணிக்கிறவங்கதான் ராஜா. நான் கிடையாது” 

 

மனைவிக்கோ பேரதிர்ச்சி..

 

“அப்ப  இந்த அரண்மனை எல்லாம்”

 

“நம்ம வசிக்கிற இந்த ஒவ்வொரு அடிக்கும் சொந்தக்காரி மங்கைதான். அவளுக்கு கல்யாணமாகி, அவ வீட்டுக்காரன் வெளிய போன்னு சொன்னா நமக்கு போக இடம் வேணுமே? அதுக்காகத்தான் பிசினெஸ் எல்லாம் ஆரம்பிச்சு இருக்கேன்”

 

மந்தாகினிக்கு அதிர்ச்சி. ராஜா பட்டம் கட்டியவுடன் எல்லா சொத்துக்களும் நாகேந்திரனுக்கு உடமையாகிவிட்டன என்று நினைத்தாள். 

 

“உங்க நாகமங்கலம் சொத்து என்னாச்சு?”

 

“எங்க இருந்தது? எங்க அப்பா மது மாது சூது இதுல ஒன்னு கூட விட்டதில்லை. எதுவும் இல்லாம கிட்டத்தட்ட அகதிகளாதான் மாமா வீட்டுக்கு வந்தோம்”

 

“அதெப்படி அகதிகளாவிங்க. பாகமங்கலத்தில் உங்க அம்மாவுக்கு பங்கு இருக்கே. அதுக்கு நீங்க தானே உடமைப்பட்டவர்”

 

“பாகமங்கலத்து சொத்துக்களை எல்லாத்தையும் சேர்த்தேதான் எங்க அப்பா அழிச்சார். இப்ப இருக்குறது எல்லாம் என் மாமாவுக்கும் அவர் மகள் மங்கைக்கும் உடமையானது”

 

நாகேந்திரன் வெத்து ராஜாவா?

 

என் சந்தோஷத்துக்கு  மாமனார் வடிவில் ஒரு வில்லனா? 

 

மங்கைக்குக் கல்யாணமாகிவிட்டால் இந்த ராஜவாழ்க்கை முடிவுக்கு வந்துவிடுமே! 

 

“மங்கைக்கு எப்ப கல்யாணம்?” 

 

“அவ வாழ்க்கையை அழிச்ச நான் அதை எப்படி மாமாகிட்ட கேக்குறது சொல்லு? என் தம்பிக்கு வேற இடத்தில் திருமணம் நிச்சியமாயிருக்கு. இல்லைன்னா அவனுக்காவது பார்க்கலாம்”

 

“உங்க அம்மா மங்கையை உங்க அண்ணனுக்கு கல்யாணம் பண்ணி வச்சுடப் போறாங்க”

 

“அண்ணனுக்கு உடல் நலக்குறைவு. அவன் நல்லபடியா இருந்திருந்தால் எனக்கும் மங்கைக்கும் திருமணமே நிச்சியமாயிருக்காது. அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையும் வரை எனக்கு மனசு நிம்மதியே கிடையாது மந்தாகினி” என்றார் பெருமூச்சு விட்டபடி. 

 

ஒன்றிரண்டு நாட்களில் நாகேந்திரனின் அண்ணன் மறைந்து விட்டதாகத் தகவல் வந்தது. 

 

“நல்ல ராசி” என்றாள் மந்தாகினி. 

 

“யாருக்கு நல்ல ராசி”

 

“இப்பத்தான் உங்க அண்ணனுக்கு மங்கையைக் கல்யாணம் பண்ணி வைக்கலாமேன்னு சொன்னேன். அதுக்குள்ளே அவனை முழுங்கிட்டா. மங்கையோட கல்யாண ராசி நல்லாவே  இருக்கு” 

 

“சீ சீ இதென்ன பேச்சு மந்தாகினி. என் அண்ணனுக்கு ஏற்கனவே உடல்நிலை சரியில்லைன்னு சொல்லிருக்கேன். அதுக்கும் மங்கை திருமணத்துக்கும் என்ன சம்பந்தம்? இன்னொரு தரம் இப்படிப் பேசாதே” என்று கடுமையாகவே சொன்னார் நாகேந்திரன். 

 

பாகமங்கலத்திற்கு சென்ற நாகேந்திரனுக்கும்  மங்கையைக் காணும்போது தாளாத மனவருத்தமே. 

 

இந்தப் பெண்ணின் வாழ்க்கை மலராமல் எப்படி நான் எனது திருமண வாழ்க்கையில் மூழ்கிப் போனேன் என்று மனதிற்குள் குமுறினார். 

 

“மங்கை உன்கிட்ட மன்னிச்சுக்கோன்னு கேட்கக் கூட தகுதி இல்லாதவனாயிட்டேன். நடந்ததை எல்லாம் மறந்துட்டு நல்லவனா பார்த்து உன் வாழ்க்கையை அமைச்சுக்கோ” என்று மங்கையிடம் அறிவுரை சொன்னார். 

 

“அதைப்பத்தி அப்பறம் பார்க்கலாம் நாகேந்திரா. இப்ப போய் உன் அம்மாவைப் பாரு” என்று அனுப்பி வைத்தார் பூபதி. 

 

வடிவோ மகனிடம் “நல்லவேளை நீ மட்டும் வந்த, உன் பொண்டாட்டியை கூட்டிட்டு மட்டும் இந்த வீட்டு வாசலை மிதிச்சுடாத”

 

“அவ நல்ல பொண்ணும்மா… சுதர்சன் அவளை விரும்பினான். அவன் தொந்தரவு தர ஒவ்வொரு சமயமும் நான்தான் மந்தாகினியைக் காப்பாத்தினேன். அது ஒரு சமயத்தில் கைகலப்பில் முடிஞ்சது. நான் எல்லாரு முன்னாடியும் கை நீட்டி அடிச்சதைத் தாங்க முடியாத சுதர்சன் சமயம் பாத்து என்னை அவமானப் படுத்தி  பழி வாங்கிட்டான். என்னோட சேர்ந்து பாவம் அவளும் இந்த சதி வலைல சிக்கிட்டா”

 

“போடா முட்டாள். அவதாண்டா சதிகாரி. அதை ஒரு நாள் புரிஞ்சுப்ப”

 

“அம்மா அப்படி எல்லாம் சொல்லாதிங்க. அதுவும் அவ இப்ப நம்ம குடும்பத்து வாரிசை சுமந்துட்டு இருக்கா… “ குழந்தை பற்றிய செய்தி அவரது கோபத்தை சற்று தணித்தது. 

 

“இருந்தாலும் நாகேந்திரா… அவளை முழுசா நம்பிடாதே. நம்ம மங்கை இருக்காளே சூதுவாது தெரியாதவ. அந்தக் கைகாரி இருக்காளே மங்கையை முழுங்கி ஏப்பம் விட்டுருவா… அதனால அவளால மங்கைக்கு ஏதாவது ஆபத்து வந்தது, நீ மங்கை பக்கம்தான் நிக்கணும். அவளை பாதுகாக்கிறது உன்னோட கடமை. மங்கையை பாதுகாப்பேன்னு என் மேல சத்தியம் பண்ணு”

 

“உன் மேல சத்தியமா மங்கையைப் பாதுகாப்பேன். போதுமா… “ என்று சொல்லிட்டே மங்கையை சந்திக்கச் சென்றார் நாகேந்திரன். 

 

நாகேந்திரன் கண்ணில் இருந்து மறைந்து தாயைப் பார்க்க சென்றதும் அலுவலக அறையில் தாய் மாமனைக் கேள்வி கேட்டான் மகேந்திரன். 

 

“மாமா… லீகலா மங்கையோட கணவனா வீரபாகுன்னுதான் இருக்கு. வீரபாகுன்னா நாகேந்திரன்தானே. அண்ணன்கிட்ட எடுத்து சொல்லுங்க. சொல்லப்போனா மங்கைதான் அவனோட முதல் மனைவி. அந்தப் பொம்பளை கூட பண்ணின கல்யாணம் கூட செல்லாதுன்னு ப்ரூவ் பண்ணிடலாம்”

 

“பெண் பாவம் பொல்லாதது மகேந்திரா. இப்போதைக்கு இந்த விஷயத்தை ஆறப்போடு. காலம் இதுக்கு ஒரு தீர்வு சொல்லும்”

 

“நம்ம மங்கையோட கதி” கேள்வி கேட்டான் மகேந்திரன். 

 

“அதை அவளோட வீட்டுக்காரனே முடிவெடுக்கட்டும்” என்று சொல்லிவிட்டு கவலை தோய்ந்த கண்களை மூடிக் கொண்டு உணர்வுகளை அடக்க முயன்றார் பூபதி.

 

மங்கைக்கு நடந்த சம்பவங்கள் நிறைய பாடத்தைக் கற்றுத் தந்தது.அவளை அழகற்றவள் என்று பலர் காது பட பேசி இருக்கிறார்கள். குட்டை, குண்டு, கருப்பு இதெல்லாம் அழகற்றவர்களது அறிகுறி என்றல்லவா மனித மனம் சொல்கிறது. பதின் பருவத்தில் பல நாட்கள் இந்த சாடைப்பேச்சால் மனமுடைந்து கண்ணீர் விட்டிருக்கிறார். 

 

“மங்கை, இருக்குற நகை எல்லாத்தையும் போட்டுக்கோ. நல்ல பட்டுப் பாவாடையா கட்டிக்கோ இல்லைன்னா உனக்கும் மத்தவங்களுக்கும் வித்யாசம் தெரியாம போயிரும். லீலாவை இளவரசின்னு நினைச்சுக்கப் போறாங்க”

 

இந்தப் பேச்செல்லாம் தாங்க முடியாது அறைக்குள் முடங்கிக் கொள்வாள். அந்த அறையில் அவளுக்குத் துணை இருந்தது என்னவோ புத்தகங்கள்தான். தான் இப்படிப் பிறந்தது என் குற்றமல்ல. இவர்களது வரையறைக்குள் அடங்காததால் நான் பாவப்பட்டவளும் இல்லை. என்று அவளால் மனதைத் தேற்றிக் கொள்ள முடிந்தது. நாகேந்திரன் அவளைக் கதாநாயகர்களைப் போலக் காதலிக்கவில்லை என்றாலும் ஒரு நாளும் அவரது பார்வை அன்பைத் தவிர வேறொன்றையும் காட்டியதில்லை. 

 

அந்த நாகேந்திரனுக்குத் தான் தகுதியானவள் இல்லை என்ற தாழ்வு மனப்பான்மை அவள் மனத்தைக் கொன்றது. 

 

உருவம் இயற்கை கொடுத்தது. கை கால் மனம் நன்றாக இருக்கும் வரை அதற்கு நான் நன்றிக்கடன் பட்டவள். ஆனால் அவளைப் படிக்காதவள், அறிவற்றவள் என்று ஒருத்தி ஏளனம் செய்திருக்கிறாளே அதைத்தான் மங்கையால் தாங்க முடியவில்லை. 

 

படிப்பு, நான் ஏன் படிக்கக் கூடாது. ஏதோ ராஜவம்சத்தால் பிறந்ததால் நான் பிழைத்தேன் என்று புறம் பேசுபவர்களிடம் எனக்கென்று ஒரு தனி அடையாளம் உண்டு என்று காட்ட வேண்டும். 

 

“என்னை பம்பாய்க்கு அனுப்பி படிக்க வைக்க சொல்லுறிங்களா அத்தான்” தன்னை சந்திக்க வந்த நாகேந்திரனிடம் வேண்டுகோள் வைத்தாள் மங்கை. 

 

“நானா… நான் சொன்னா எப்படிம்மா கேட்பாங்க”

 

“நீங்க சொன்னா அப்பா தட்ட மாட்டார்னு எனக்கு நம்பிக்கை இருக்கு அத்தான்”

 

“ஆனாலும் பம்பாய்க்கு  ஏன்? பக்கத்தில் ஏதாவது ஒரு கல்லூரில சேர்ந்து படிக்கலாமே?”

 

“தெரியல அத்தான். பக்கத்தில் எங்கேயும் படிக்க விருப்பமில்லை. மெட்றாஸ்னா கூட என்னைப் பத்தி, உங்களைப் பத்தி, நம்ம கல்யாணம் நின்னு போனதைப் பத்தி தெரிஞ்சவங்க நிறைய பேர் இருப்பாங்க. அவங்களும் பத்திரிகை படிச்சிருப்பாங்களே”

 

கூனிக் குறுகினார் நாகேந்திரன் “நான் எந்த தப்புமே செய்யல மங்கை”

 

“நான் நம்புறேன் அத்தான். ஆனாலும் என்னோட நம்பிக்கை இப்ப எந்த வகையிலும் நம்ம வாழ்க்கையை மாத்தப் போறதில்லை. அதனால அடுத்ததா என்ன செய்றதுன்னு யோசிக்க ஆரம்பிச்சுட்டேன். 

 

நானும் உங்களை மாதிரியே நம்ம குடும்பத்தோட எந்த அடையாளமும் இல்லாம. மும்பைக்கு தனியா போயி படிக்கணும். நான் யாரு, என்னால இந்த சமுதாயத்துக்கு என்ன பிரயோஜனம்னு எனக்கே தெரியல. அதைக் கண்டுபிடிக்கணும். 

 

சாதாரணமா எந்த ஒரு சலுகையும் இல்லாம என் மார்க்குக்கு இடம் தர்ற  கல்லூரில சாமானியப்பட்ட மக்களோட படிக்கணும். அவங்களை மாதிரியே என் வாழ்க்கை இருக்கணும். நானே சம்பாதிக்கணும். என் சம்பாத்தியத்தில் எப்படிப்பட்ட வாழ்க்கை நடத்த முடியும்னு பாக்கணும்” என்றாள் தீர்மானமான குரலில். 

 

அவள் குரலில் தெரிந்த உறுதி, நிமிர்வு அவரை சம்மதம் சொல்ல வைத்தது. 

 

“சரிம்மா… ஏற்பாடு செய்றேன்”

 

அரச வாழ்க்கை வாழ்ந்த சின்னக் கிளி ஒன்று கூட்டை விட்டு அறிவைத் தேடி சென்றது. வெளியே சுற்றிய நாகம் ஒன்று பாகமங்கலத்தைக் கைப்பற்ற துடிக்கும் ஆசையில் எர்ணாகுளத்தில் அரண்மனையில் குடியேறியது. ராணி என்று தன்னைப் பறைசாற்றிக் கொண்டு விழாக்களிலும், பெரிய மனிதர்களிடத்திலும் தனது அங்கீகாரத்தை உறுதி செய்ய ஆரம்பித்தது. 

 

மங்கை தனது கல்லூரிப் படிப்பைத் தொடர்ந்த பொழுது ஒரு நன்னாளில் அபிராமைப் பெற்றெடுத்தாள் மந்தாகினி. 

 

“பாகமங்கலத்துக்கு வாரிசைப் பெத்துத் தந்துட்டேன்” என்று அனைவரிடமும் பெருமை பீற்றிக் கொண்ட  மந்தாகினியை முதல் முறையாக வெறுப்புடன் பார்த்தார் நாகேந்திரன். 

 

“கனவு காணாதே மந்தாகினி… மங்கை படிச்சுட்டு இருக்கா… எப்படியாவது அவளுக்கு கல்யாணம் பண்ணி வச்சாத்தான் எனக்கு நிம்மதி”

 

“முட்டாள்தனமா பேசாதிங்க. அவளுக்கு கல்யாணமாகாம இருந்தால்தான் நம்ம மகன் ராஜாவாவான். அதனால நீங்க மட்டுமில்ல உங்க குடும்பத்தில் யாரும் மங்கையோட கல்யாணத்தைப் பத்தி பேசக்கூடாது” என்றதைக் கேட்டு அதிர்ச்சியில் உரைந்தார். அழகான மந்தாகினியின் முகமே அந்தக் கணத்திலிருந்து சூனியக்காரியின் விகாரமாகத் தெரிந்தது நாகேந்திரனுக்கு. 

 

தாய் சொன்னதின் அர்த்தம் அவருக்கு கொஞ்சம் கொஞ்சமாய் விளங்கத் தொடங்கியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 26தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 26

அத்தியாயம் – 26   தென்காசி பஸ்ஸ்டாண்ட்டில் இருட்டும் நேரத்தில் பஸ்ஸில் இருந்து ஒரு உருவம் இறங்கியது. மறைந்து மறைந்து இருட்டில் நடந்து யார் கண்ணிலும் படாதவாறு லாவகமாய் நழுவி ஒரு தெருவுக்குள் சென்றது. அந்தத் தெருவில் அனைவரும் உறங்க ஆரம்பித்ததை

தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 6தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 6

அத்தியாயம் – 6   அதன் பின் நாட்கள் வேகமாக ஓடின. வக்கிலிடம்  பேசி, தனக்கு அந்த விளம்பரத்தில் இருக்கும் வேலையில் தோன்றிய ஆர்வம் பற்றியும், அந்த வேலை தனக்கு பொருத்தமாக இருக்குமா என்றும் விசாரித்தாள்.    அவருக்கு திகைப்பு தோன்றினாலும்

தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 15தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 15

அன்புள்ள தோழமைகள் அனைவருக்கும் இனிய ரமலான் வாழ்த்துக்கள்!   அன்புடன், தமிழ் மதுரா. அத்தியாயம் – 15   வீட்டின் அந்த இரவுப் பொழுது மிகவும் உணர்ச்சிகரமானதாக இருந்தது. அபிராம் உணவு உண்ணும் மேஜையில் அமர்ந்திருந்த பொழுதுதான் செம்பருத்திக்கு அவன் யார்