அத்தியாயம் – 04
திட்டுவது ஏனோ?
சில பல மாதங்கள் உருண்டோடின. எல்லோர் வாழ்க்கைகளிலும் பல மாற்றங்களும் நடந்தேறின.
இரு பாடசாலைகளதும் கட்டடங்கள் சில இன்னும் இராணுவத்தினர் வசம் இருந்தாலும் சோதனைச் சாவடிகள் நீக்கப்பட்டு சோதனைகளின்றி மாணவர்கள் நேரடியாக பாடசாலைக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
ஜெனீவா, நோர்வே நாடுகளில் ஆரம்பிக்கப் பட்டிருந்த சமாதான பேச்சு வார்த்தை முன்னெடுப்புகளால் நாட்டிலும் யுத்த நிறுத்தம் இடம்பெற்று அமைதிச் சூழ்நிலை காணப்பட்டது.
கவின்யா உயர்தர பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் முதல் இடத்தையும் அகில இலங்கையில் இரண்டாம் இடத்தையும் பெற்று அவள் பாடசாலைக்கும் பெற்றவர்களுக்கும் அவள் ஊருக்குமே அளப்பரிய பெருமையை சேர்த்திருந்தாள்.
பல்கலைக்கழக விரிவுரைகள் ஆரம்பமாகி ஸாமும் நண்பர்களும் முதலாம் ஆண்டில் பகிடி வதையில் (ராக்கிங்கில்) சிக்கித் தவித்து வெளி வந்து இப்போது தான் நிம்மதியாக மூச்சு விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
கவிக்கு இன்னமும் விரிவுரைகள் ஆரம்பிக்கவில்லை. கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு அனுமதி கிடைத்திருந்தும்,
“உங்கள் எல்லாரையும் விட்டிட்டு என்னால அங்க போய் தனியாக இருக்கேலாது” என்று யாழ் மருத்துவ பீடத்திற்கு விண்ணப்பித்து விட்டு கணனி வகுப்புகளுக்குச் சென்று கொண்டு காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறாள்.
அந்த ‘உங்களில்’ குடும்பத்தினர் மட்டும் தானா அல்லது வேறு யாரும் அடங்குமா என்பதெல்லாம் அவளுக்கே வெளிச்சம்.
சாதாரண தரத்தில் அடியெடுத்து வைத்திருந்த அருண்யா மற்ற மூவரையும் அதிகாலையில் துயிலெழுப்பி விட்டு தான் மேசையிலேயே புத்தகத்திற்கு மேல் படுத்து தூங்கி கொண்டிருக்கிறாள்.
ஸாம் கோஷ்டியை கண்டால் இப்போதெல்லாம் கல்லைத் தூக்குவதில்லை. சினேகமாக சிரித்து விட்டு செல்வாள். இடையிடையே சுதனோ, நிரோஜனோ வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டிக் கொள்வதும் உண்டு.
“ஏன் அருணி! தலைமுடியை கறையான் அரிச்சுப் போட்டுதோ? ஏன் வளருதே இல்லை?”
அக்கறையாக கேட்ட சுதர்சனுக்கு
“உங்கட தலையை அரிச்ச கறையான் தான் என்ர தலையையும் அரிச்சது… அதுதான் வளருது இல்லை சுதா அண்ணா” என்று பதவிசாய் அருணி சொன்ன பதிலுக்கு பிறகு அவன் அவளிடம் வாய் திறப்பதே இல்லை.
கவி கணணி வகுப்புக்கு செல்லும் போது ஸாம் வழக்கம் போலவே பிள்ளையார் கோவில் மதிலடியில் நின்று கண்களாலேயே காதல் கவிதை பாடிக்கொண்டு இருக்கிறான்.
ஒருநாள் நண்பர்கள் நால்வரும் கூடியிருந்த வேளை,
“அவள்தான் கம்பஸ் என்ரர் (enter) பண்ணிட்டாளேடா… பிறகேன் இன்னும் லவ்வ சொல்லுறாய் இல்லை…” என்ற சுதனின் கேள்விக்கு,
“கம்பஸ்ல மட்டும் படிப்பில்லையா? எங்களை மாதிரி படிப்பா அவள் படிக்கப் போறாளடா? டொக்டர் என்றால் சும்மாவா? எவ்வளவு கவனமாக படிக்கோணும் என்று தெரியுமா உனக்கு? உயிரைக் காப்பாத்துற என்பது சும்மா விளையாட்டு என்று நினைச்சியா?”
ஸாம் நீட்டி முழக்கிக் கொண்டு போக இடைவெட்டினான் சுதர்சன்.
“எனக்கு டொக்டர் படிப்பை பற்றியெல்லாம் தெரியாது மச்சான்… ஆனால் நீ இப்பிடி சொல்லாமல் இருக்க வேற எவனாச்சும் கொத்திட்டுப் போகப் போறான்… கவனம்”.
“அதையேதான் நானும் சொல்லுறன்டா… கவிட வடிவுக்கு கம்பஸில சீனியர் பொடியள் எல்லாம் விட்டு வைப்பாங்கள் என்று நினைக்கிறியேடா? கொழும்பு கம்பஸ். சிங்கள பொடியள் வேற லைன் போடுவாங்கள்”
“ஓமடா ஸாம்! நிரோ சொல்லுறதும் சரிதான். உன்ர நன்மைக்குத் தான் சொல்லுறம். நீ இப்பிடி வெயிட் பண்ணிட்டே இருந்து இலவு காத்த கிளி கதையா போய்டும்… யோசிச்சு நடடா.”
“நீ பேசாமல் உன்ர அப்பாட்ட சொல்லி கவிட வீட்டில கதைச்சா என்னடா? இப்ப முற்றாக்கி வைச்சிட்டு கம்பஸ் முடிய கட்டலாம் தானே…”
“உனக்கென்ன விசரே சுதா… கவியே இன்னும் ஓகே சொல்லேல. ரெண்டு குடும்பமும் வேற சாதி, வேற மதம்… முதல் ஸாமிட அப்பா சரி சொல்ல வேணும்… அவர் போய்க் கேட்டு கவி வீட்டில மாட்டம் என்றிட்டால் அங்கிள் பிறகு எந்த முகத்தோட கவிட அப்பாட முகத்தில முழிப்பார்?” படபடவென்று பொரிந்து கொட்டினான் சுதன்.
அனைத்துக்கும் காரணமான ஸாம் அபிஷேக்கோ நண்பர்களின் உரையாடலை செவி மடுத்தவாறு சிந்தனை வயப்பட்டிருந்தான்.
ஸாமின் முகத்திற்கெதிரே சொடக்குப் போட்டு அவனை இவ்வுலகுக்கு இழுத்து வந்த நிரோஜன்,
“என்னடா யோசிக்கிறாய்? நாங்கள் உன்ர லவ்வைப் பற்றித் தான் கதைச்சுக் கொண்டிருக்கிறோம். நீ என்னடா என்றால் வாயே திறக்காமல் இருக்கிறாய்? ரெண்டு கிழமையில கவிக்கு கம்பஸ் தொடங்குது. அவள் கொழும்பு போறதுக்கிடையில ஏதாவது செய்”
“கவிட பார்வையில இருந்து அவளும் என்னை லவ் பண்ணுறாள் என்று தெரியுதுடா… ஆனால் சொல்லப் பயமா கிடக்கு… சாதி, மதம் வேற என்று மாட்டன் என்றிடுவாளோ என்று… அவையிட அப்பா எவ்வளவு பெரிய பதவில இருக்கிறார். அவருக்கு பிறகு தலைகுனிவெல்லோ…”
மெதுவாக வாய் திறந்து ஒரு வழியாக தன் உள்ளக் கிடக்கையை வெளிப் படுத்தினான் ஸாம்.
ஸாமின் பதிலைக் கேட்டு கோபத்தின்உச்சிக்கு சென்ற சுதன்,
“டேய் மச்சான்… எனக்கு வாயில நல்லா வருது… சும்மா கடுப்பைக் கிளப்பாதை… இல்லக் கேக்கிறன்… இந்த ரெண்டு வருசமா இந்த மதிலுக்கு முண்டு குடுக்கேக்க உனக்கு அவள் வேற சாதி, மதம் என்று தெரியாதோ?”
“அதுதானே மச்சான்… இப்ப வந்து பயமாக் கிடக்கு எண்டுறாய்… அப்பிடி என்றால் இந்த காதல் கத்தரிக்காய் ஒண்டும் வேண்டாம் என்றிட்டு எங்களை மாதிரி காணுற பெட்டையளை எல்லாம் சைட் அடிச்சுக் கொண்டு இருந்திராதையன்… ஏன் இந்த வில்லங்கம் எல்லாம்?” என்று சுதனுக்கு ஒத்து ஊதினான் சுதர்சன்.
“அவனே குழம்பிப் போயிருக்கிறான்… நீங்கள் வேற… சும்மா இருங்கோடா…” என்று மற்ற இருவரையும் அடக்கிய நிரோஜன் ஸாமிடம் திரும்பி,
“இங்க பாரு மச்சான்… உன்ர நன்மைக்குத் தான் சொல்லுறன். கவி கொழும்பு போக முதல் லவ்வைச் சொல்லிப் போடு. பிறகு வாற பிரச்சினைய பிறகு பாப்பம்… நாங்கள் எல்லாம் கூட இருக்கிறம் தானே… பிறகேன் பயப்பிடுறாய்?”
காதல் என்றால் உதவிக்கு முன் நிற்பது நட்பு தான் என்பதை அங்கே நிரூபித்து கொண்டிருந்தான் அந்த உற்ற தோழன்.
“டேய் முரளி மாதிரி கிளைமாக்ஸ் வரைக்கும் வெயிட் பண்ணி லவ்வ சொல்லாமல், கெதில சொல்லிட்டு என்ஜோய் பண்ணுற வழியப் பாப்பியாம்… அதை விட்டிட்டு சும்மா கிடந்து நீயும் தவிச்சு, எங்களையும் போட்டு வதைக்கிறாய்” கேலியாக என்றாலும் உண்மையான கரிசனத்தோடு கூறினான் சுதர்சன்.
“சொல்லுற என்று முடிவு பண்ணியாச்சு… எப்பிடிடா சொல்லப் போறாய்? நான் தான் கவி… எங்க சொல்லு பாப்பம்…” ஒத்திகை பார்க்க அழைத்தான் சுதன்.
“முனியம்மா… நீ ரொம்ப அழகா இருக்கிறாய்… எப்ப உன்னை கெட் டுகெதர்ல பாத்தனோ… அண்டைக்கே உன் காலடில விழுந்திட்டன்.. உன் பாட்டைக் கேட்டதும் அப்பிடியே அதில மயங்கி அந்த கண்ணாளன் நான் தான் என்று முடிவெடுத்திட்டன் டார்லிங்.. ஐ லவ் யூ முனியம்மா. உன் பதிலுக்காக காத்திருப்பன்… நல்ல முடிவா சொல்லு…”
ஸாமிற்கு முன்னால் ஒரு முழங்காலை மடித்து அமர்ந்து அவன் வலக்கரத்தை தன் கரத்தில் ஏந்தி ஒரு பாரம்பரிய காதல் விண்ணப்பத்திற்கான ஒத்திகையை அங்கே அரங்கேற்றினான் நிரோஜன்.
நண்பர்கள் மூவரும் வாய் விட்டு நகைக்க,
“சும்மா கலாய்க்காமல் போங்கோடா… நமக்கு இந்தளவு துணிவெல்லாம் இல்லை. நான் வேணும் என்றால் கடிதம் எழுதிக் குடுக்கவே…” கேட்ட ஸாமை நன்றாகவே முறைத்தான் நிரோஜன்.
“சரி. கடிதமே குடு. ஆனால் என்ன எழுத போறாய்?”
கேட்ட சுதனுக்கு பாட்டாகவே பதில் கொடுத்தான் சுதர்சன்.
“கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே
பொன்மணி உன் வீட்டில் சௌக்யமா நான் இங்கு சௌக்யமே
உன்னை எண்ணி பார்க்கையில் கவிதை சொட்டுது
அதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது”
சுதர்சன் பாடுவதைக் கேட்டு அசடு வழிந்தவாறே,
“என்ன எழுதுற என்று நீங்கள் தானடா சொல்லோணும்?” என்ற ஸாமின் முதுகில் ஓங்கி ஒன்று போட்டான் நிரோஜன்.
“டேய் ஸாம்… சத்தியமா உன்னில கோபம் கோபமா வருது. கொஞ்சம் ஆம்பிளையா துணிவா இருடா… லவ்வ சொல்லுறதுக்கே நீ இவ்வளவு யோசிச்சால், பின்னால வரப் போற பெரிய பிரச்சினைகள் எல்லாத்தையும் எப்பிடிச் சமாளிப்பாய்?”
கொஞ்சம் கோபமாகவே கேட்டான் சுதர்சன்.
“சும்மா கத்தாதையடா… லவ் பண்ணிப் பார். அதிட அவஸ்தை தெரியும். உங்களுக்கு எல்லாம் அது புரியாது… நீங்களும் எவளுக்குப் பின்னாலயாச்சும் போவியள் தானே… அப்ப உங்கள் எல்லாரையும்
கவனிச்சுக் கொள்ளுறன்” தானும் கொஞ்சம் சூடாகவே பதிலிறுத்தான் ஸாம்.
“சரி…. சரி… கடுப்பாகதை மச்சான். கடிதத்தில என்ன எழுதுற என்று பாப்பம். பேப்பரையும் பேனையும் எடு” என்று நிலமையை சுமுகமாக்க முற்பட்டான் சுதன்.
தனது கொப்பியிலிருந்து ஒற்றையைக் கிழித்து நீட்டிய நிரோஜன்,
“மனசில தோணுற எல்லாத்தையும் நீயே எழுதுடா… இதுக்கு நாங்க ஹெல்ப் பண்ணக் கூடாது” என்றான்.
“சரியடா” என்று கூறி வாங்கியவன் மிதிவண்டியின் பின்னிருக்கையிலிருந்து இருக்கையில் கொப்பியை வைத்து தன் உள்ளத்தை திறக்கலானான்.
“அன்பிற்கினிய கவிக்கு…
எப்படி ஆரம்பிப்பது, எப்படி எழுதுவது என்றே தெரியவில்லை.
உண்மையில் உன்னை வெள்ளைச் சட்டையோடு காணும் போதெல்லாம் எனக்கு எந்த உணர்வும் தோன்றவில்லை.
என்றைக்கு உன்னை சேலையில் பார்த்தேனோ அன்றிலிருந்து என் மனம் என்னிடம் இல்லை. நீ பாடிய போதோ என் சர்வ நாடியும் உன் வசம்.
தினமும் உனைப் பாராமல் தூக்கம் வருவதில்லை. கொழும்பில் இருந்த வேளையிலும் இப்போது கம்பஸ் செல்லும் போதும் எனக்கு ஆறுதல் அளிப்பது அன்று உன் வீட்டிலிருந்து திருடி வந்த உன்னுடைய புகைப்படம் தான்.
தினமும் கண்ணாடியில் முகம் பார்க்கும் வேளையில் உன் தங்கை கல்லால் தந்த வடுவைக் காதல் சின்னமாகவே தடவி மகிழ்கிறேன்.
எங்கள் காதலுக்கு சாதி, மதப் பெயரால் எதிர்ப்பு வரலாம். ஆனால் உனக்கு சம்மதம் என்றால் எதையும் வென்று உன் கரம் பிடிப்பேன்.
விழிகளால் தூண்டிலிடும்
இரக்கமில்லாதவளே…….
எத்தனை முறைதான்
உன் விழி வலையில்
சிக்கித் தவிப்பேன் நான்……
ஒவ்வொரு முறையும்
உன் விழி உரசலில்
பற்றிக் கொள்வது
எனக்குள் இருக்கும் – உன்
இதயமென்பதை மறந்தாயா……
சின்ன சின்ன சந்தோஷங்களை
வலையாக நெய்தாயோ….
சிக்கிக் கொண்டேன் காதலுடன்……
ஆயுள் சிறை தந்துவிடு……
உன் பதிலுக்காய் உயிரைக் கையில் பிடித்து காத்திருக்கும்
அன்பன்
அ. ஸாம் அபிஷேக்.
கடிதத்தை நான்காக மடித்தவன் ஓர் மிகப் பெரும் தவறை செய்தான். அப்போது தான் ரியூசன் வகுப்பு முடிந்து வந்து கொண்டிருந்த அருண்யாவை மறித்தான்.
“அருண்… ஏய் அருண்… நில்லுடி…!”
“என்னடா?”
“என்ன மரியாதை இல்லாமல் கதைக்கிறாய்?”
“அப்ப நீங்கள் மட்டும் டி போடலாமா? நான் என்ன உங்கட சொந்த பந்தமோ இல்லை என்றால் ப்ரண்ட்டோ? டி போடுறாராம்… ஆரிட்ட அதுவும்…” என்று முறைத்தவளோடு சண்டைக்குப் போனால் தனக்கு ஆக வேண்டிய காரியம் கெட்டுப் போய்விடும் என்று புரிய,
“அருண்! அக்கா எப்ப கொழும்பு போறா?”
“அக்கா ஏன் கொழும்பு போக வேணும்?” புரியாதவளாய் கேட்டாள் அருணி.
“விளையாடாதை அருண்யா. கம்பஸ் போக அக்கா கொழும்பு போகத் தானே வேணும்” என்று விளங்கப் படுத்தினான் ஸாம்.
‘ஓ… ஐயாக்கு விசயம் தெரியா போல… இப்பிடியே நினைச்சுக் கொண்டு இருக்கட்டும்’ என்று மனதில் எண்ணமிட்டவாறே தனது குணத்தைக் காட்டினாள்.
“அடுத்த கிழமை போறாள். அக்காவுக்கு ஏதும் சொல்லோணுமே?” என்று பாசமொழுக கேட்டாள். அவள் அன்பிலேயாவது ஸாம் நிதானத்திற்கு வந்திருக்க வேண்டும். அவன் கஸ்ட காலம். அவனுக்கு தன் காதலை தெரிவிப்பது மட்டுமே நோக்கமாக இருந்ததேயன்றி தெரிவிக்கும் முறையின் சாதக பாதகங்களை சீர் தூக்கிப் பார்க்க மறந்து விட்டான்.
அருணி கேட்டதும் தான் தாமதம். கடிதத்தை அவளிடம் கொடுத்து,
“அருண்! அச்சாப் பிள்ளை எல்லோ… அக்காட்ட இதைக் குடுத்து விடும். ப்ளீஸ்…” என்றான்.
அருண்யாவோ கோபத்தின் உச்சிக்கு சென்றாள். ‘என்ன துணிவிருந்தால் தங்கச்சி என்னை தூதுப் புறா ஆக்குவான்? என்னைப் பாக்க என்ன இளிச்சவாய் மாதிரி கிடக்கோ இந்த நெட்டைக் கொக்குக்கு? லைட் ஹவுஸ் மாதிரி வளர்ந்த தான் மிச்சம். லவ்வை நேராச் சொல்ல துப்பில்லை. இந்த காலத்தில போய் கடிதம் தந்து விடுது லூஸு’.
கண நேரத்திற்குள் அவனை அர்ச்சித்து முடித்தவள் முகத்திலே எதையும் வெளிக்காட்டாமல்,
“சரி.. சரி… தாங்கோ… குடுத்து விடுறன்…” என்று வாங்கிக் கொப்பிக்குள் வைத்துக் கொண்டாள்.
“நான் நாளைக்கு கம்பஸ் க்குப் போய்டுவன். அக்காட பதிலை வாங்கி சனிக்கிழமை தாரும்…” என்று அவளுக்கு விடை கொடுத்து அனுப்பி விட்டு ஒரு ஆசுவாசப் பெருமூச்சை வெளியேற்றினான்.
“இருட்டுதுடா. வீட்ட போவம்… யோசிக்காமல் போய் படுடா.. கவி நல்ல பதிலா சொல்லுவாள்…” என்று சுதர்சன் கூறவே அனைவரும் தங்கள் தங்கள் வீடுகள் நோக்கி கலைந்து சென்றனர்.
ஸாமின் மனது மட்டும் பரீட்சை எழுதி விட்டு காத்திருக்கும் மாணவனாய் படபடத்துக் கொண்டிருந்தது.
வீட்டை அடைந்த அருண்யா முதல் வேலையாக கவியை தேடிக் கொண்டு சென்றாள். வீட்டின் பின்புறம் அவள் கையால் உண்டாக்கியிருந்த கத்தரி, தக்காளி செடிகளுக்கு நீர் விட்டு கொண்டிருந்த கவியின் முன்னால் சென்று கடிதத்தை ஆட்டிக் காட்டினாள்.
தன் மன்னவன் சேதி அனுப்பியிருப்பது தெரியாமல் மும்மரமாக தண்ணீர் பாய்ச்சிக் கொண்டு,
“என்ன பேப்பர்? என்ன விசயம் என்று கெதியா சொல்லு அருண்? இருட்ட முதல் தண்ணி ஊத்தி முடிக்க வேணும்?”
“ஸாம் உன்னட்ட குடுக்கச் சொல்லி தந்து விட்டவர்… நீ கொழும்பு கம்பஸ் போறாய் என்று நினைச்சுக் கொண்டு இருக்கிறார்… நானும் அப்பிடியே ஓம் என்று சொல்லிப் போட்டன்…”
“பாவம். நான் கொழும்பு போகப் போறன் என்று கவலைப் பட்டுக் கொண்டு இருக்கப் போறார்… ஏண்டி பொய் சொன்னனி?” தண்ணீர் வாளியைக் கீழே போட்டு விட்டு சட்டையில் ஈரம் போக கையைத் துடைத்தவாறே கடிதத்தை வாங்க கையை நீட்டினாள் கவி.
“அவர் என்னை டி போட்டுக் கூப்பிட்டவர்… அதுக்குத் தண்டனை தான். நான் தான் கடிதம் முதல் வாசிப்பன்” என்றபடி தோட்டத்தை சுற்றி ஓடி பின் வீட்டினுள்ளே ஓடினாள் அருணி.
“ப்ளீஸ் அருண்! நீ என்ன கேட்டாலும் செய்யிறன்… கடிதத்தை தா..” என்றபடி அவளைத் துரத்திப் பிடிக்க முயன்றாள்.
ஸாமின் துரதிர்ஷ்டமோ கவியின் கஷ்ட காலமோ கடிதத்தை உயர்த்தி பிடித்து கொண்டு ஓடிய அருணி எதிரே வந்த தெய்வநாயகியில் மோதி விட்டாள்.
“ரீயூசனால வந்து உடுப்புக் கூட மாத்தாமல் உங்க என்ன ஓடித் திரியிறாய்? உது என்ன கடிதம்?” என்று அருணியோ கவியோ எதிர் பார்க்காத விதத்தில் அருணியின் கையிலிருந்த கடிதத்தை எட்டிப் பறித்து விரித்து வாசிக்கத் தொடங்கினார்.
வாசிக்க வாசிக்க முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க எண்ணெயில் போட்ட கடுகாய் ஸாமையும் நண்பர்களையும் தாளிக்கத் தொடங்கினார்.
தெய்வநாயகி ஸாமையும் நண்பர்களையும் அப்படி என்ன வறுத்தெடுத்தார்?