Tamil Madhura யாழ் சத்யாவின் 'இரு மலர்கள்' யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 3’

யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 3’

அத்தியாயம் – 03

தப்புவாளா கவி?

 

காலை நேரம். வீடே சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. தெய்வநாயகி சமையலறையில் பாத்திரங்களை உருட்டிக் கொண்டிருந்தார். சந்திரஹாசன் வரவேற்பறையில் உதயன் பத்திரிகையைப் புரட்டிக் கொண்டிருந்தார். கவி தனது அறையில் வழக்கம்போல படித்து கொண்டிருந்தாள். வானொலியை அலற விட்டு விட்டு குப்புற படுத்துக் கிடந்தாள் அருணி.

இஞ்சருங்கோ… எத்தினை தரம் உங்களைக் கூப்பிடுறது?” 

விடிய காலமை மனுசரை பேப்பர் கூட வாசிக்க விடாமல் எதுக்கப்பா கத்திக் கொண்டிருக்கிறீர்…?” 

சலித்தவாறே பதில் கூறினாரே தவிர பத்திரிகையை விட்டு கண்களை நகர்த்தவில்லை சந்திரஹாசன்.

இந்த பேப்பரில அப்பிடி என்ன தான் கிடக்கோ தெரியாது. அதைக் கையில தூக்கினால் இந்த மனுசன் அசையாது…” புறுபுறுத்தவாறே வரவேற்பறைக்கு தேநீர் கோப்பையுடன் சென்றார் தெய்வநாயகி. 

ஏனனை… உங்களுக்கு எங்களை ஒவ்வொரு நாளும் ஏதாவது சொல்லாட்டில் நித்திரை வராதோ?” கேட்டபடி தனது தேநீர் கோப்பையுடன் எழுந்து வந்தாள் அருணி.

உனக்கு எத்தினை தரம் சொல்லுறது பல்லுத் தீட்டாமல் தேத்தண்ணி குடிக்காதே என்று…” தனது கோபத்தை எல்லாம் மகளில் காட்டினார். 

சும்மா போங்கோம்மா… நாய், பூனை எல்லாம் பல்லுத் தீட்டிட்டா சாப்பிடுதுகள், குடிக்குதுகள்…” என்றபடி தேநீரை ருசித்து பருகியபடி தந்தையின் அருகில் சென்று அமர்ந்தாள் அருண்யா . 

அப்ப அருண்…. நீயும் நாய், பூனையும் ஒன்று தான் என்று ஒத்துக் கொள்ளுறாய்…” என்று தனது தேநீருடன் வந்து அவர்களுக்கு எதிரே அமர்ந்த கவி,

அப்பா..! நீங்களும் இன்றைக்கு பள்ளிக்கூடத்தடிக்கு வருவியள் தானே…” என்று தந்தையை வினவினாள்.

ஓம் செல்லம்… அப்பா வரத்தானே வேணும்” என்று பத்திரிகையை மூடி வைத்து விட்டு தெய்வநாயகி கொணர்ந்து கொடுத்திருந்த தேநீர் கோப்பையை கையில் எடுத்து கொண்டார்.

அப்பரும் மக்களும் செல்லம் கொஞ்சின போதும் நான் சொல்லுறதை கொஞ்சம் கேட்கிறியளா? ரெண்டு பேரும் இன்றைக்குப் பள்ளிக்கூடம் போக வேண்டாம்.”

அதுதான் ஏன் என்றுறன்…?” என்று தாயுடன் ஒரு சண்டைக்கு ஆயத்தமாகினாள் அருண்யா. 

சும்மா நாட்களில உனக்கு கைகால் நோகும்… வயித்தால போகும்… பள்ளிக்கூடத்தில ஸ்டிரைக் பண்ணப் போறாங்க என்றவுடன ஒண்டும் வரேல்லப் போல”  என்று மகளிடம் பாய்ந்தவர் மீளவும் கணவனிடம் திரும்பினார். 

இங்கையப்பா… இதுகள் போய் கத்த கோபத்தில அவங்கள் சுட்டுக் கிட்டுப் போட்டால் என்னப்பா செய்யிற? அங்க ஒரு பிள்ளையளும் வராதுகள்” என்று ஒரு தாய்க்கே உரிய கவலையுடன் கேட்டார் தெய்வநாயகி. 

உமக்கென்ன விசரே… அவங்களும் மனுசர் தானே… பள்ளிக்கூடத்தை மீட்டெடுக்க வேண்டியது எங்கட கடமை. நானும் போவன்தானே. பிறகேன் பயப்பிடுறீர்? நாங்களே பிள்ளைகளை அனுப்பாட்டில் நல்லாவா இருக்கும்? நீர் சும்மா பயப்பிடாமல் போய் வேலையை

பாரும்” என்றபடி அலுவலகத்திற்கு செல்வதற்கு ஆயத்தமாக எழுந்து சென்றார். 

இந்த வீட்டில என்ர கதைக்கு எப்ப மதிப்பிருக்கு…?” என்று சராசரி குடும்ப தலைவியாக புலம்பியபடி மீதிச் சமையலை முடிக்க சென்றார் தெய்வநாயகி. 

பிள்ளைகளும் ஆயத்தமாகி பாடசாலையை வந்தடைந்தனர். வழக்கம் போல பிள்ளையார் கோவில் மதிலடியில் நின்ற ஸாம் கோஷ்டி இன்று இவர்களைத் தொடர்ந்து பாடசாலைக்கு வந்திருந்தது.

அன்று மாணவர்கள், அதிபர், ஆசிரியர்கள் அனைவரும் பாடசாலைக்கு உள்ளே செல்லாமல் சோதனை சாவடிக்கு வெளியே நின்றிருந்தார்கள். 

தெய்வநாயகி பயந்தது போலில்லாமல் பெரும்பாலான மாணவர்கள் வருகை தந்திருந்தனர். மாணவர்களுக்கு பின்னால் அயல் மக்களும் சில பெற்றோர்களும் கூட நின்றிருந்தார்கள். ஸாமும் நண்பர்களும் மக்களோடு மக்களாக கலந்து நின்று கொண்டனர். கவியை பார்க்க கூடியவாறு ஒரு கட்டை மதில் சுவரில் ஏறி அமர்ந்து கொண்டான் ஸாம்.

இராணுவமே வெளியேறு”

எங்கள் பாடசாலைகளை எங்களுக்குத் தா”

சுதந்திரமாக கற்க விடு”

சோதனை சாவடிகளை அகற்று”

என்பது போன்ற பதாதைகளை தாங்கி ஆண் பிள்ளைகள் ஒரு புறமாகவும் பெண் பிள்ளைகள் ஒரு புறமாகவும் அணி வகுத்து கோஷம் எழுப்பிய வண்ணம் இருந்தார்கள். 

கவின்யா முதல் வரிசையில் நின்று மாணவிகள் வரிசை குழப்பாது மேற்பார்வை செய்து கொண்டிருந்தாள். இடையில் நின்ற அருண்யாவோ உரத்த குரலில் கோஷம் எழுப்பி கொண்டிருந்தாள். 

ஆர்ப்பாட்டம் ஆரம்பித்து ஒரு மணி நேரத்தில் வட மாகாண ஆளுநர் ஜெயரட்ண வருகை தந்திருக்க, வடமராட்சி கல்விப் பணிப்பாளர் சந்திரஹாசன், இரண்டு பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் தலைவர்கள் சிலரும் சேர்ந்து பேச்சு வார்த்தை நடாத்தினார்கள்.

முதல் கட்டமாக சோதனை சாவடிகளை அகற்றுவதற்கு ஒத்துக் கொள்ளப் பட்டது.

அப்போது தான் அந்த அசம்பாவிதம் நடந்தேறியது. தங்களுக்கு சார்பாக தீர்ப்பு வந்த சந்தோச மிகுதியில் மாணவர்கள் உரத்து கோஷமிட்டவாறே பாடசாலைகளை நோக்கி முன்னேறத் தொடங்கினார்கள். அதனை விரும்பாத இராணுவத்தினர் மாணவர்களை அடக்கும் வழி தெரியாது கண்ணீர் புகைக் குண்டை வீசி விட அந்த இடமே அந்த சின்னஞ்சிறுசுகளின் கூக்குரலால் அல்லோகல்லோலப் பட்டது. 

எங்கு செல்வது என்று தெரியாமல் மாணவர்கள் நாலாபக்கமும் சிதறி ஓடினார்கள். பேச்சுவார்த்தை முடித்து சந்திரஹாசன் தனது அலுவலகம் சென்றிருந்தார். 

மாணவிகளுக்கு தலைமை தாங்கி முன்னால் நின்று கொண்டிருந்த கவின்யா எதிர்பாராத நேரம் வீசப் பட்ட புகைக் குண்டின் அதிர்ச்சியால் மயக்கம் போட்டு விழ அவளையும் ஏறி மிதித்து சில மாணவிகள் ஓடினார்கள். 

ஒரு கணத்தில் நடந்து விட்ட அசம்பாவிதத்தை உணர்ந்து மாணவர்களை நோக்கி முன்னேறிய பெற்றோர்களும் பொது மக்களும் சிதறி ஓடிய மாணவர்களை அமைதிப் படுத்தி விழுந்த மாணவர்களை எழுப்பி உதவி செய்து நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள்  கொண்டு வர முனைந்தனர். 

கவி விழுவதை மதில் மேலிருந்து பார்த்துக் கொண்டிருந்த ஸாம் “கவி…” என்று கத்திக் கொண்டே அவளை நோக்கி ஓடினான். நண்பர்களும் தொடர்ந்து செல்ல வழியில் “அக்கா… அக்கா…” என்று அழுது கொண்டிருந்த அருணியிடம்,

நீ சுதனோட வீட்ட போ… நான் கவிய கூட்டிட்டு வாறன்.” என்று சொல்லி விட்டு கவியை நோக்கி சென்றான்.

ஒரு வருடமாக அவன் கவி மேல் கொண்டிருந்த காதலை அறிந்திருந்த அருண்யா எப்படியும் கவியைக் கூட்டி வந்திடுவான் என்ற நம்பிக்கையில் சுதனின் சைக்கிளில் ஏறி வீடு நோக்கி சென்றாள். சுதர்சனும் அவர்கள் கூடச் சென்றான்.

விழுந்து கிடந்த கவியை ஆசிரியர் ஒருவர் சுவர் ஓரமாக எழுப்பி இருத்தியிருந்தார். மாணவர்கள் சிலர் அவளுக்கு மேல் ஏறி ஓடியதில் அவளால் எழுந்து நிக்க முடியாதிருந்தது. ஆசிரியர் என்ன செய்வது என்று முழித்துக் கொண்டு நிற்க, அவ்விடம் விரைந்த ஸாமும் நிரோஜனும் ஒரு செக்கன் என்ன செய்வது என்று யோசித்து விட்டு,

என்ர ஒன்றுவிட்ட தங்கச்சி தான்… நாங்கள் கூட்டிட்டு போறம்” என்றான் நிரோஜன். அந்த ஆசிரியர் யோசனையோடு கவியை நோக்க, அந்த இடத்தில் இருந்து சென்றால் போதும் என்ற மன நிலையில் இருந்த கவியும்,

ஓம் ரீச்சர்… நான் இவையோட போறன்…” என்று தடுமாறியவாறே எழுந்தாள். விழ எத்தனித்தவளை தாங்கி பிடித்த ஸாம் அவளைக் கைத்தாங்கலாக தனது மிதிவண்டி நிற்கிற இடம் நோக்கி அழைத்து செல்ல காயம் பட்ட காலை நொண்டியபடி கவியும் சென்றாள். ஆசிரியரும் மற்றைய மாணவர்களை கவனிக்க சென்றார். 

மிதிவண்டி தரித்து நின்ற இடத்துக்கு சென்றதும் நிரோஜன் வண்டியை எடுத்து கொடுத்து விட்டு,

என்ர சைக்கிளில ஏத்தனடா… உன்ரைக்கு ஹரியர் (பின்னிருக்கை) இல்ல…” என்றான். 

பின்னுக்கு இருந்து தலையைச் சுத்தி விழுந்தாலும்… முன்னுக்கே இருக்கட்டும்…. முன்னால ஏறும் கவி…” என்றவாறு சைக்கிளில் ஏறி அமர்ந்தான் ஸாம்.

அவளோ அசையாமல் நின்று கொண்டு நிரோஜனை நோக்கி,

அண்ணா! அருண்… அவள் எங்க போனாலோ தெரியேல்ல.” என்று அழுகையை அடக்கிய குரலில் உரைத்தாள்.

உம்மட தங்கச்சிய சுதன் ஆக்கள் கூட்டிட்டுப் போய்ட்டாங்கள் நீ கெதியா ஏறு. இனி என்ன நடக்குமோ தெரியாது. அதுக்கிடையில வீட்ட கொண்டு போய் விட”

என்ற ஸாமின் பேச்சுக்கு மறு வார்த்தை கூறாமல் வேகமாக துடித்த இதயத்தை  அடக்கும் வழி தெரியாது வீடு போய்ச் சேருவதே பிரதான நோக்கமாக சைக்கிள் முன் பக்கத்தில் ஏறி அமர்ந்தாள் கவி. 

இதுவே இன்னொரு சாதாரண தருணமாக இருந்திருந்தால்,

றெக்கை கட்டிப் பறக்குதடி 

அபிஷேக்கோட சைக்கிள் 

வெக்கப் பட்டு ஏறிக்கோடி

ஐயாவோட பைக்கில்”

என்று ஒரு டூயட்டே பாடி முடித்திருப்பான் ஸாம்.

காலை நொண்டிக் கொண்டு வந்தாளே என்னாகிச்சுதோ என்ற வேதனையும், கவனமாக வீட்டில் கொண்டே விட வேண்டும் என்ற கவலையுமே அவனிடத்தில் இருந்த படியால் தன்னவளை முதன்முதலாக ஸ்பரிசித்ததோ அவள் தன்னிரு கைகளுக்குமிடையில் அத்தனை நெருக்கமாக வருவதோ மனதில் பதியவில்லை. 

கவிக்கும் எதிர்பாராமல் நடந்த சம்பவங்களால் அவன் கைச்சிறையே பாதுகாப்பாக உணர்ந்தாள். இதுவரை அவன் காதல் புரிந்திருந்தாலும் அவன் இத்தனை தூரம் தன்னை பாதுகாப்பதை உணர்ந்து நெகிழ்ந்து போனாள். தன் மனதில் அவன் இடம் பிடித்ததை உணர்ந்து கொண்டவள் ஏஎல் (+2) எக்ஸாம் முடியும் வரை முன்பு மாதிரியே அவனோடு கதைப்பதில்லை என்று உறுதி எடுத்து கொண்டாள்.

அவர்கள் வீட்டை அடைந்த போது பதட்டத்தின் உச்சக் கட்டத்தோடு வீட்டு வாசலிலேயே காவல் நின்றார் தெய்வநாயகி. சந்நிதி கந்தனுக்கு பால்குடம் எடுப்பதாக வேண்டிக் கொண்டவர் கவியைக் கண்டதும் தான் ஆசுவாசமாய் மூச்சு விட்டார். 

உனக்கு ஒண்டும் காயமில்லையே கவி… விழுந்து போனாய் என்று அந்த தம்பியவை சொல்லிச்சினம். ஏன் வெளில நிக்கிறியள்? உள்ள வாங்கோ. உங்கட ப்ரண்ட்ஸ்சும் உள்ள தான் இருக்கினம்”.

அங்கே சுதனும் சுதர்சனும் குளிர் பானம் அருந்திக் கொண்டிருக்க அருணி அவர்களுக்கு வகுப்பெடுத்துக் கொண்டிருந்தாள்.

ஸாமும் நிரோஜனும் உள்ளே வர தாயின் கையணைப்பில் சென்று அமர்ந்தாள் கவி.

அருணி! அக்கா வந்திட்டாள் என்று அப்பாக்கு போன் பண்ணி சொல்லு. நான் தம்பியவைக்கு ஜூஸ் கொண்டு வாறன்” என்றபடி தெய்வநாயகி சமையலறைக்கு விரைய

கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவ விட விரும்பாத ஸாம்,

காலில நல்லா அடிபட்டிருக்குப் போல. இண்டைக்கே டொக்டரிட கொண்டு போய்க் காட்டுங்கோ” என்று கரிசனையாக உரைத்தான்.

ம்.. ஓகே… பின்னேரம் அப்பா வரப் போறன்… என்னையும் அருணையும் கொண்டு வந்து விட்டதுக்கு ரொம்ப தாங்ஸ்” என்று மறவாமல் அனைவரையும் பார்த்து நன்றி உரைத்தாள் கவி. 

நிரோஜன் ஏதோ சொல்ல வாயைத் திறக்கவும்

எங்களுக்கிடையில எதுக்கு தாங்ஸ்” என்று அவனை முந்திக் கொண்டு தங்கள் உறவை நிலை நிறுத்த முயன்றான் ஸாம்.

எதுவும் கூறாமல் தன்னை நேராக நோக்கியவளை,

கவி! நான் ரெண்டு நாளில கொழும்பு போறன்… சார்ட்டட் எக்கவுண்டிங் படிக்க போறன். கம்பஸ் தொடங்கத் தான் வருவன். அதால கொஞ்ச நாளைக்கு உம்மளைப் பாக்க வர முடியாது. 

எக்ஸாம் வடிவா செய்யுங்கோ. அகில இலங்கையிலயே முதலாவதாக வர வாழ்த்துக்கள். எப்பவும் உங்கட நல்லதுக்காக கும்பிடுவன்” என்று தனது முற்கூட்டிய வாழ்த்துக்களையும் தெரிவித்து கொண்டான். 

அப்ப எங்களுக்காக எல்லாம் கும்பிட மாட்டியளா?” கேட்டவாறே வந்தமர்ந்தாள் அருணி.

ஏன் இன்னும் என்ர மண்டைய நல்லா உடைக்கவோ?”

நீங்கள் சரியா நெத்திய கல்லுக்கு நேராக காட்டுவியள் என்று எனக்கெப்பிடி தெரியுமாம்? சரி.. சரி… சொறி… இனி அடிக்கேல” என்று பெரிய மனதாய் மன்னிப்பும் கேட்டு அவர்களை பிழைத்துப் போகவும் விட்டாள்.

குளிர் பானங்களோட வந்த தெய்வநாயகி அவர்களிடம் கொடுத்து உபசரித்து,

ரொம்ப நன்றி தம்பியவை. காலமையே சொன்னான். பள்ளிக்கூடம் போக வேண்டாம் என்று. கேட்டால் தானே. ஏதோ சந்நிதியான் புண்ணியத்தில நீங்கள் கவனமாக கூட்டி வந்திட்டியள். சமைக்கிறன். மத்தியானம் சாப்பிட்டிட்டுப் போங்கோவன்” என்று தனது விருந்தோம்பல் குணத்தைக் காட்டினார். 

இல்லை அன்ரி. வீட்ட தேடுவினம். இன்னொரு நாள் ஆறுதலா வந்து சாப்பிடுறம். நாங்கள் போட்டு வாறம்” என்றபடி நால்வரும் விடை பெற்றுக் கொண்டு எழுந்தார்கள். 

கவியிடம் கண்ணாலேயே சிறிது காலத்திற்கு பார்க்க முடியாத பிரிவுத் துயர் பளிச்சிட பிரியா விடை பெற்றவன் யாருக்கும் தெரியாமல் அவர்கள் இருந்த ஸோபாக்கு அருகிலிருந்த மேசையில் வைக்கப் பட்டிருந்த கவியின் சட்டம் இட்ட புகைப்படத்தை எடுத்து அருகில் நின்ற சுதனின் கையில் திணித்தான்.

சுதனும் சைக்கிள் எடுக்கும் சாட்டில் உடனடியாக வெளியே சென்றான். 

வாயில் வரை சென்று அவர்களுக்கு விடை கொடுத்து அனுப்பி விட்டு வந்த தெய்வநாயகி,

இந்த காலத்திலயும் இவ்வளவு தங்கமான பொடியள்… நாலு பேரும் நல்லா இருக்கணும்” என்று வாய் விட்டே வாழ்த்தினார். 

அதைக் கேட்டு மனம் குளிர்ந்த கவியோ அல்லது தெய்வநாயகியோ அறிந்திருக்கவில்லை. அதே வாயால் அவர்களை நாசமாக போகச் சொல்லி அவர் திட்டப் போவதை.

தெய்வநாயகி திட்டும்படி என்ன நடக்கப் போகிறது?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 19’யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 19’

அத்தியாயம் – 19 யாதவ்வின் காதல் ஈடேறுமா?     கவின்யாவின் அறையில் உடை மாற்றி அங்கிருந்த ஒற்றை ஸோபாவில் அமர்ந்திருந்தான் யாதவ். கவியோ அணிந்திருந்த நகைகளைக் கழற்றி அந்த ஒப்பனையைக் கலைப்பதில் ஈடுபட்டிருந்தாள். நெற்றிச்சுட்டியை எடுத்து விட்டு அவள் நீண்ட

யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 24’யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 24’

அத்தியாயம் – 24 மாறுவாளா அருண்யா?      ஸாம் வைத்தியசாலையிலிருந்து வீட்டிற்கு திரும்பிய போது அங்கே அருண்யா அவனுக்காகக் காத்துக் கொண்டிருந்தாள்.     அவளைக் கண்டதும் கண்களில் முட்டிய நீரை சுண்டி விட்டபடி உள்ளே நுழைந்தவனைக் கண்டதும் தொலைக்காட்சி

யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 30’யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 30’

அத்தியாயம் – 30 மனம் மாறுவாளா அருண்யா?     அடுத்த நாள் காலை. அதிகாலையிலேயே விழிப்பு தட்டி விட கண் விழித்தவன் கட்டிலை விட்டு எழ எத்தனிக்க அவனை அணைத்தவாறு தன்னை மறந்து துயின்று கொண்டிருந்தாள் அருண்யா.