Tamil Madhura செம்பருத்தி தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 4

தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 4

அத்தியாயம் – 4

 

ஒரு வழியாக மனதை திடப்படுத்திக் கொண்டு முகத்தையும் தலைமுடியையும் சீர்படுத்திக் கொண்டு வெளியே வந்தாள்  செம்பருத்தி. அப்படியே பாத்ரூம் வழியாக ஓடிப் போகக் கூட முடியவில்லை. ஜன்னல்கள் இல்லை, இருந்த சிறு ஜன்னலில் இவள் நுழைந்து தப்பிப்பது முடியாத காரியம். முதலில் இந்த மாதிரி இக்கட்டான சூழ்நிலையில் இருந்து ஓடி தப்பிப்பதற்காகவாவது உடம்பைக் குறைக்க வேண்டும். ஆயிரம் ஆயிரமாக அபராதம் கட்டுவது அவளால் முடியாத காரியம். 

வெளியே காவ்யாவின் தீப்பொறி பார்வையும் ஊசிப் பட்டாசின் குத்தல்களையும் எதிர்பார்த்தவாறே வந்த செம்பருத்திக்கு அவினாஷ் மாத்திரம் அங்கு உட்காந்திருந்தது ஆச்சிரியமே. சீன பீங்கான் கப்பில்  காப்பியை அழகாகக் கையில் பிடித்தவண்ணம் நாசூக்காக அவன் பருகியது மிக அழகாக தோன்றியது செம்பருத்திக்கு. அவன் எதிரே ஒரு சிறிய தட்டில் முக்கோணமாக வெட்டி சிவப்பு தக்காளியையும், பச்சை வெள்ளரியும், பெல்லாரி வெங்காயத்தையும் சீஸ்சையும் நடுவில் வைத்து க்ரில் செய்யப்பட்டு உணவு மணத்தை பரப்பிய சாண்ட்விச் . 

“காலைல சாப்பிடாம வந்ததுதான் எதுலையுமே கவனம் செலுத்த  முடியல. அதனால லைட்டா ஒரு வெஜ் சாண்ட்விச் ஆர்டர் பண்ணேன். நீ என்ன சாப்பிடுவேன்னு தெரியாது. அதனால இதையே உனக்கும் ஆர்டர் பண்ணிட்டேன். உனக்கு ஓகேயா?”

 

உணவின் மணம்  பசியைக் கிளம்பினாலும், காப்பியே முன்னூறு ரூபாய் ஆகும்னு சொன்னானே. இப்ப சாப்பாடு வேற வாங்கி சாப்பிடுறானே. மூணு காப்பி அப்பறம் இந்த கருகின ரொட்டி துண்டும், மேகி டொமேடோ சாஸும் சேர்த்து  ஒரு பிளேட் இருநூறுன்னு சொல்லுவான். யாரோ சொன்னாங்களே, இந்தக் கடைல வேலை பாக்குறவனுக்கெல்லாம் பத்து சதவிகிதம் டிப்ஸ் வேற வைக்கணுமாம். ஏதேது இந்தக் கொள்ளைக்கார கும்பல் எனக்கு ரெண்டாயிரம் செலவு வைக்காம நகராது போல இருக்கே. கவலையாய் அவனைப் பார்க்க, சாப்பிடுமாறு தட்டை அவள் புறம் நகர்த்தினான். 

 

கையில் ஒரு ஆயிரத்து ஐநூறு வைத்திருக்கிறாள். ஒரு வேளை வக்கீல் பீஸ் கேட்டால் என்ன செய்வது என்ற நினைப்பில் தான் அதுவும். இப்போது அது பத்தாது போலிருக்கே முருகா? கவலை ரேகைகள் முகத்தில் படர யோசித்துக் கொண்டிருந்தவளைப் பார்த்து

 

“சாப்பிடும்போது கவலையோ, அவசரமோ படக்கூடாது. அப்பத்தான் உடம்பில் ஒட்டும்னு எங்கம்மா சொல்லுவாங்க” என்று சொன்னதுதான் தாமதம் பக்கென்று சிரித்துவிட்டாள் செம்பருத்தி. 

 

“ஏன் சார் என் உடம்பில் ஒட்டாத மாதிரியா தெரியுது? உங்களுக்கு அப்படி தெரிஞ்சா இன்னைக்கே  கண்ணை டெஸ்ட் பண்ணிக்கோங்க” என்றாள் சிரிப்பின் இடையே.

 

அவன் சிரிக்கவே இல்லை. அவளையே அழமாகப் பார்த்தவன் “நீ மோட்டிவேஷனல் புக்ஸ் படிப்பியா?” என்றான். 

 

“வீடு, வேலைன்னு ஓடிட்டு இருக்குற நேரத்தில் படிக்கிறது குறைவு. நேரம் கிடைக்கும்போது கைல என்ன கிடைக்குதோ அதை படிப்பேன்”

 

“மொபைல் வச்சிருக்கேல்ல”

 

இதென்ன சம்பந்தமில்லாத கேள்வி. ஒரு வேளை காப்பி கொட்டினத்துக்காக மொபைல் போனை எடுத்துப்பானோ?

 

“சைனா மேக் தான் சார். விலை கூட ரொம்ப கம்மி” சன்னமான குரலில் சொன்னாள்.

 

மொபைலில் தன்னம்பிக்கை தரும் ஆடியோ பதிவுகளைக் கூட கேட்கலாமே என்றுதான் சொல்ல வந்தான் ஆனால் செம்பருத்தியின் பதில் அவனுக்கு சுத்தமாய் விளங்கவில்லை. புரியாமல் பார்த்தவனிடம்

 

“நீங்க வித்தா கூட நிறையா காசு ஒன்னும் காசு பெயராது” உதட்டைப் பிதுக்கினாள். 

 

ஒரு வினாடி திகைத்தவன் “ஹா… ஹா…” என்று அடக்க முடியாமல் சத்தமாக சிரிக்க ஆரம்பிக்க 

 

கூட்டமே இல்லாத அந்தக் கடையில் காப்பி ஆத்திக் கொண்டிருந்த ஆசாமியும், துடைத்த டேபிளில் இல்லாத அழுக்கைத் துடைத்தபடி அவினாஷை சைட் அடித்துக் கொண்டிருந்த அந்த பெண்ணும் திரும்பிப் பார்க்கவும், செம்பருத்திக்கு எரிச்சலானது. 

 

“நீங்க இப்படி விழுந்து புரண்டு சிரிக்கிற அளவுக்கு இதொண்ணும் அவ்வளவு பெரிய ஜோக் இல்லை”

 

சிரிப்பினை மட்டுப் படுத்திக் கொண்டான். அப்பொழுதுதான் கவனித்தாள் அவனுக்கு இருந்த வரிசைப்பல்லில் ஒன்றே ஒன்று மட்டும் மேல்வரிசையிலிருந்து லேசாக எட்டிப் பார்த்தது. இதென்ன வாயை இருக்க மூடினாலும் இவனது கண் இவ்வளவு அழகாக  சிரிக்கிறது. யப்பா என்ன பையன்டா இவன். 

 

இந்தக் கண்ணப் பார்த்தாக்க லவ்வு தானா தோணாதா? இவன் கிட்ட போனாக்கா மனம் மானா மாறாதா? மலைத்துப் போய் பார்த்தாள். 

 

“ஜோக் இல்லைன்னு சொல்றியா… சரிதான்… ஆனால் கைல கூட வளையல் போட்டிருக்க, காதில் தங்கத்தில் தோடு, கழுத்தில் கூட செயின் போட்டிருக்க போலிருக்கே. அதெல்லாம் இந்த சைனா மேக்கா இருக்க சான்ஸ் இல்லைல” என்றான் அவினாஷும் விடாமல். 

 

“ஆனால் பித்தளையா இருக்க நிறைய சான்ஸ் இருக்கே” என்றாள் அவளும் சளைக்காமல். 

 

“எல்லாக் கேள்விக்கும் பதிலோட தயாராத்தான் இருக்க, நீ முதலில் சாப்பிடு அப்பறம் உன்கிட்ட எப்படி காசு வசூல் பண்றதுன்னு பாக்குறேன்”

 

“உங்க கூட வந்த பொண்ணுக்கு”

 

“அவ சாப்பிட்டுட்டா… நான்தான் சாப்பிடல”

 

“ஓ… “ என்றபடி மெதுவாகக் சாண்ட்விச்சைக்  கடித்தாள் செம்பருத்தி. எதோ தக்காளி, வெங்காயம் என்று நினைத்துக் கடித்தவளுக்கு நிஜமாகவே சுவையாக இருந்தது வியப்பாக இருந்தது. 

 

சாதாரணமாகவே செம்பருத்திக்கு பசி அதிகம், பிரெட் என்றால் ஒன்றிரண்டு துண்டுகளோடு அவளால் நிறுத்தவே முடிந்ததில்லை. அதுவும் அவளது தந்தையின் மறைவிற்குப் பின்னர் இரவில் தனக்கு மட்டும் சமைக்கப் பிடிக்காத காரணத்தால் கடையிலிருந்து சுவீட் பிரட்டோ அல்லது மில்க் பிரட்டோ வாங்கி வந்து விடுவாள். இரவு நாலு ஸ்லைஸ் மறுநாள் காலை நாலு ஸ்லைஸ் என்று திட்டமெல்லாம் போட்டிருப்பாள் ஆனால் அந்த முழு பாக்கெட் பிரட்டையும் தின்ற உடன்தான் பசி அடங்கும். 

 

காயசண்டிகைக்கு யானைத்தீ என்ற பெரும் பசி நோய் இருந்ததாம். அது தனக்கும் இருக்கிறதோ என்ற சந்தேகம் அவ்வப்போது அவளுக்கும் தோன்றும். அவளது தோழி டாக்டர் மாரியம்மாவிடம் கூட கேட்டுவிட்டாள்  

 

“அக்கா,  காயசண்டிகைக்கு என்ன சாப்பிட்டாலும் பசி அடங்காதாம். யானைத்தீனு ஒரு நோய் இருந்ததுன்னு கூட தமிழம்மா சொல்லிக் கொடுத்தாங்கல்ல, எனக்கும் அது மாதிரி ஏதாவது நோய் இருக்கான்னு பாருங்க அக்கா. பசி அடங்கவே மாட்டிங்குது. ஒரு நாளைக்கு அஞ்சு வேளை சாப்பிடுறேன். நடு ராத்திரி எல்லாம் எந்திரிச்சு சாப்பிடுறேன் அக்கா. பயம்மா இருக்கு”

 

“அதுக்குப் பேரு  ஸ்ட்ரெஸ் ஈட்டிங்டீ. உனக்கு என்ன வயசாச்சு. இருபத்தி ஒன்னு தானே. முதலில் நல்ல காலேஜ்ல சேர்ந்து படி. உன் வயசு பிள்ளைகள் கூட பழகு. மற்ற விஷயங்களில் கவனம் போகப் போக ஸ்ட்ரெஸ் போகும். சாப்பாட்டு ஆசையும் குறையும். பேசாம சொந்தக்காரங்க யார் வீட்டுக்காவது போகலாமே”

 

“நடக்குற கதையா பேசுங்க அக்கா. என் அத்தை குடும்பம் ஒண்ணுதான் எங்களுக்கு நெருங்கின சொந்தம். தோட்டத்துக்கு நடுவுல இருந்த வீட்டை தோட்டத்தோட சேர்த்து வித்ததுக்கு அப்பறம், கிராமத்தில் இருக்குற சின்ன வீட்டுக்கு வந்துட்டோம். 

 

அக்கம் பக்கத்தில் வீடு இருக்குறதால ஏதோ இவ்வளவு கஷ்டத்துக்கும் உங்களை எல்லாம்  பாத்துட்டு பைத்தியம் பிடிக்காம இருக்கேன். இப்பல்லாம் இதுவே போதும்னு தோணுதுக்கா. என்ன சாப்பாடு பிடிச்சா சாப்பிட்டுப் போறது. நோய்  ஏதாவது வந்தால் சீக்கிரம் போய்டலாமேன்னு கூட தோணுதுக்கா”

 

அவளது மன அழுத்தம் அதிகமாவதைக் கண்டு வேறு இடத்துக்கு வேலைக்காவது செல் என்று பார்க்கும்போதெல்லாம் மிகவும் வற்புறுத்தி வருகிறார் மாரியம்மா. 

 

எங்கெங்கோ மனம்  பயணம் செல்வதை உணர்ந்து தனது கட்டுப்பாட்டுக்கும் கொண்டு வந்தாள். அவினாஷ் யாருடனோ தொலைப்பேசியில் பேசிக் கொண்டிருந்தான். கொஞ்சம் இறுக்கமான பேச்சு. பிசினெஸ் விஷயம் போல. 

 

ஒரே பிரெட் துண்டு கூட இருந்த சாலட் மற்றும் பழம் நறுக்கி போட்ட யோகர்ட் வயிறு முழுவதும் நிறைவது கண்டு ஒரே ஆச்சிரியம் செம்பருத்திக்கு. 

 

அவளது நிம்மதியைக் குலைப்பது போலவே டக் டக் என்ற குளம்போசையுடன் அவர்கள் இருக்கும் இடத்தை நெருங்கிய காவ்யா “ஹ்ஹம்ம்… “ என்று கனைத்தாள். அவளது கையில் ஒரு பை. அவினாஷ் கண்ணைக் காட்ட அதனை டேபிளில் செம்பருத்தியின் முன்னே தூக்கி போட்டாள் இல்லை கிட்டத்தட்ட எறிந்தாள். 

 

“காவ்யா… அதை கையில் எடுத்துக் கொடு” என்று அவன் கண்டிப்புக் குரலில் சொல்லவும் 

 

“இந்தாங்க மேடம். பெரிய மனசு பண்ணி தயவு செய்து வாங்கிக்கிறிங்களா” என்று போலியான பவ்யத்தோடு காவ்யா செம்பருத்தியிடம் நீட்டி முழக்க. 

 

“வாங்கிக்கோமா… ப்ளீஸ்…” என்றவன் “காவ்யா நீ காரில் காத்திரு நான் வந்துட்டேன்” என்றபடி தனது அலைப்பேசியில் மறுமுனையில் பேசிக் கொண்டிருந்தவரிடம்

 

“ஒரு நிமிஷம் லைன்ல இருங்க…” என்று சொல்லி மியூட் செய்தான். . 

 

“சாரிம்மா ரொம்ப அவசர வேலை. நான் கிளம்புறேன். நீ சாப்பிட்டுட்டு பத்திரமா போய்டுவேல்ல” என்று ஏதோ ஒவ்வொரு நாளும் அவன்தான் பார்த்துக் கொள்வதைப் போல கேட்க. 

 

“நான் போய்டுவேன் சார். நீங்க கிளம்புங்க” என்றாள். 

 

நல்லவேளை கிளம்புகிறான். இனி மேனேஜர் கை காலில் விழுந்து காசைக் கட்ட வேண்டியதுதான். 

“பை” என்றபடி  “இன்னும் பத்து நிமிஷத்தில் இருப்பேன்” யாரிடமோ சொல்லியபடி  ரஜினியின் வேக நடையில் மறைந்தான். 

அவன் சென்ற திசையையே பார்த்துக் கொண்டிருந்தவள். பில் இன்னும் வராததைக் கண்டு 

“பில்” என்றாள்  அங்கு இருந்தவளிடம். 

“ஸார் கட்டிட்டாங்க மேடம். இங்க பக்கத்தில் ஒரு டாக்சில உங்களை இறக்கி விடச் சொல்லி அதுக்கும் பே பண்ணிட்டாங்க”

 

திகைத்துப் போய் பேச வாய் எழும்பாமல் அவள் முன் இருந்த அந்த பாக்கெட்டைப் பிரித்தாள். அழகான நீல வண்ணத்தில் வெள்ளை நூல் வேலைப்பாடு செய்யப்பட்டிருந்த டாப்ஸ். 

 

அவளது உடையில் காப்பி கொட்டிவிட்டதால், வேலைக்கு காப்பிக் கரை உடையுடன் செல்ல வேண்டாம் என்று புதிய குர்த்தி வாங்கி வரச் சொல்லி காவ்யாவை அனுப்பி இருக்கிறான். அதுவும் அவள் அப்போது அணிந்திருந்த பாண்ட்டுக்கு பொருத்தமான டாப்ஸ். என்ன ஒரு அக்கறை, சமயோசித புத்தி. அப்படியே பச்சக் என்று அவளது மனதில் பசை போட்டு ஒட்டிக் கொண்டான் அவினாஷ். 

 

இதுவரை ஏன் வாழ வேண்டும் என்று தெரியாமல் சோகத்திலேயே மூழ்கியிருந்த செம்பருத்திக்கு சில்லென ஒரு தென்றல் வருடியதைப் போல, இருண்ட  மனதில் ஏற்றிய மெல்லிய அகல்விளக்கைப் போல இருந்தது. 

2 thoughts on “தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 4”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 40தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 40

அத்தியாயம் – 40 மடத்தில் அமர்ந்து கிறுக்குசாமி பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தனர் நாகேந்திரனும் மங்கையும்.  “குழந்தை உன் பேரு என்னடாப்பா?” “அவினாஷ்” “எங்கப்பன் மலையாண்டியோட அப்பன் சடையாண்டி பேரை வச்சிருக்கியா நீ?” என்று சிரித்தார்.  மனம் அமைதியைத் தேடும்போதெல்லாம் ஆண்டியப்பனின் கோபம்

தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 11தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 11

அத்தியாயம் – 11   இப்போது என்ன செய்வதென்றே செம்பருத்திக்கு ஒன்றும் புரியவில்லை. கெட் அவுட் என்றால் இப்போதைக்கு அறையை விட்டு கெட் அவுட்டா? இல்லை நிரந்தரமாக வீட்டை விட்டே கெட் அவுட்டா?    யாரிடம் கேட்கலாம்? இவளை இந்த வேலைக்குச்

தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 7தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 7

அத்தியாயம் – 7    எர்ணாகுளம் செல்ல முதல் வகுப்பில் ட்ரெயின் டிக்கெட் எடுத்து தந்திருந்தார்கள். பயணத்திட்டம் ஒன்றும் அப்படி சோர்வு தரும் விஷயமாகத் தோன்றவில்லை செம்பருத்திக்கு.    திருநெல்வேலியிலிருந்து குஜராத்தின் ஜாம்நகருக்கு செல்லும் தொடர்வண்டியில் காலை 8 மணிக்குக் கிளம்பினால்