Tamil Madhura இனி எந்தன் உயிரும் உனதே,தமிழ் மதுரா இனி எந்தன் உயிரும் உனதே – 16

இனி எந்தன் உயிரும் உனதே – 16

அத்தியாயம் – 16

 

ண்டியை ஒட்டிக் கொண்டு வந்த பாரி. முன் சீட்டில் அவனை நெருக்கியடித்துக் கொண்டு இரண்டு ஆண்கள். பின் சீட்டில் ஜன்னலை ஒட்டிக் கொண்டு அமர்ந்திருந்த லலிதா. அவளை தள்ளிக் கொண்டு மூன்று பெண்கள், மடி மீது அமர்ந்து கொண்டும் இரண்டு குழந்தைகள். அவர்களைப் போகும் வழியில் இருக்கும் ஊரில் இறக்கி விட வேண்டும். பாரியிடம் எத்தனையோ கதைகள் பேசவேண்டும், மனதைத் திறந்து காட்ட வேண்டும் என்றெண்ணி வந்த லலிதாவிற்கு அவனிடம் ஒரு வார்த்தை கூடப் பேச சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.

 

வழியில் ஒருவரை இறக்கிவிட்டால் அடுத்தவரை உடனடியாக ஏற்றிக் கொண்டான். முதலில் உதவி என்று நினைத்தாலும் சிலரிடம் வலிய சென்று அவனாகவே உதவிக் கரம் நீட்டியது என்னவோ லலிதாவிற்கு மனதை உறுத்தியது. தன்னிடமிருந்து தள்ளி நிற்க நினைக்கிறானோ என்ற எண்ணம் அவள் மனதில் வலுப்பெற்றது. அது அவளை சோர்வடையச் செய்தது.

 

‘வேண்டாம் பாரி சில நிமிடங்கள் தா… நானும் நீயும் மட்டும் தனித்திருக்கும் அந்த சிலநிமிடங்களில் உன்னிடம் சிறிது பேச வேண்டும், என் மனதைத் திறந்து காட்ட வேண்டும்’ என்று உரக்கக் கத்த வேண்டும் போலிருந்தது லலிதாவிற்கு.

 

அருகிலிருந்த பெண்கள் இறங்கியதும் சற்று ஆசுவாசப் படுத்திக் கொள்ள நேரம் கிடைத்தது அவளுக்கு. முன் இருக்கையில் பாரிக்கு அருகே ஒருவர் அமர்ந்திருந்தார். அவளிடமிருந்து முன்னிருக்கை பறிக்கப்பட்டு விட்டது. கதவின் வழியே வந்த காற்றை உணர்ந்த வண்ணம் தனது மூச்சுக் காற்றை மெதுவாக வெளியிட்டாள். கண்களை மெல்ல மூடிக் கொண்டாள்.

 

மற்ற யாரும் பார்த்தால் அவள் கண்களை மூடி இளைப்பாறுவது போலத் தோன்றும். ஆனால் பாரிக்கு நன்றாகவே தெரியும் அவள் அவனது உள்ளத்தைப் படிக்க முயல்வது.

 

‘எனது அனுமதியின்றி என் மனதில் நீ நுழைந்திருக்கலாம் ஆனால் இனிமேல் என் மனதைப் படிக்க அனுமதிக்க மாட்டேன்’ என்றெண்ணியவண்ணம் பக்கத்திலிருந்தவரிடம் “எந்த ஊருங்க நீங்க… விவசாயமெல்லாம் எப்படி போயிட்டிருக்கு” என்று ஆரம்பித்தான்.

 

அவரும் தனது வயலைப் பற்றியும் இயற்கை விவசாயத்தில் தனது மகன் பத்து சென்ட் இடத்தில் போட்டிருக்கும் சிறிய காய்கறித் தோட்டத்தைப் பற்றியும் சுவாரஸ்யமாகப் பேசத் தொடங்க. அப்படியே முயன்று அவருடன் பேச்சில் ஒன்றி விட்டான்.

 

அவன் மனதைப் படிக்க முயன்ற லலிதாவின் முயற்சி பலிக்காதது அவளுக்கும் வருத்தமே. முகம் முழுவதும் எரிச்சலாக பாரியை முறைத்தாள். அவளை தனது புருவத்தை உயர்த்தி ஏமாந்தாயா என்பது போல பாரி பார்க்க… இவன் வேண்டுமென்றே தனது முயற்சிக்கு ஒத்துழைக்க மறுக்கிறான் என்பது அவளுக்கு நிரூபணமானது.

 

“இன்னும் கொஞ்ச நேரம் தான் லலிதா அப்பறம் உங்க வீட்டில் போயி நிம்மதியா தூங்கலாம்”

 

“நீங்க தம்பி” என்றார் அருகிலிருந்தவர்.

 

“உங்க எல்லாறையும் இறக்கி விட்டுட்டு நானும் என்னோட தினசரி வாழ்க்கைக்குத் தயார்” என்றான்.

 

அவர் வழியிலேயே இறங்கிவிட அவர்கள் இருவர் மட்டும்.

 

“பாரி… பஸ் ஸ்டாப் ஸ்டாப்பா நின்னு மக்களை ஏத்திக்கறது உங்க சேவை மனப்பான்மையை மட்டும் இல்ல என் கூட நீங்க பேசுறதைத் தவிர்கிறதையும் காட்டுது. என்ன ஆனாலும் நான் உங்க கூட பேசியே ஆகணும்”

 

“பிரச்சனைல இருக்கவங்களை அப்படியே என்னால் விட்டுட்டுப் போக முடியாது. உனக்கும் இதே மாதிரி உதவிதான் செஞ்சிருக்கேன். அதை மறந்துடாதே” என்றாள்.

 

“அதை என் உயிருள்ளவரை மறக்க முடியாது. ஆனால் நான் சொல்ல வந்ததை என்னால சொல்லாமலும் இருக்க முடியாது. நீங்க என் கூட தனியா பேசறதை தவிர்த்தா மூன்றாம் மனிதருக்கு முன்னாடி பேசவும் தயங்க மாட்டேன்” என்று கூறியவளின் கண்களில் அசாத்திய உறுதி.

 

“இன்னும் பதினஞ்சு நிமிஷத்தில் உங்க ஊர் வந்துடும். அதுக்குள்ளே நம்ம  தனியா பேச என்ன இருக்கு”

 

“தனியா ஒரு ராத்திரியை பேசியே கழிச்சோம். அப்ப என்ன பேசினோம். இப்ப ஏன் சில நிமிடங்கள் என் கூடத் தனியா செலவழிக்கக் கூட பயப்படுறிங்க”

 

“புரியாம பேசாதே லல்லி. இது உங்க ஊர். யாராவது தெரிஞ்சவங்க பாத்துட்டு ஏதாவது சொல்லிட்டா… கல்யாணம் நிச்சயமான பொண்ணு இதனால உனக்குப் பிரச்சனை வந்திடக் கூடாதுன்னு பார்க்குறேன்”.

 

“ஏன் பிரச்சனை வருது?”

 

“நம்ம சமுதாயத்தால சில விஷயங்களை ஒத்துக்க முடியாது”

 

“சமுதாயத்தைப் பத்தி எனக்கு அக்கறையில்லை. என் மனசு சொல்றதை மட்டும் கேட்கிறதா முடிவு பண்ணிட்டேன்” என்றவளை வாய் பிளந்து பார்த்தான்.

 

“பாரி கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நீங்க ஒண்ணு தரேன்னு சொன்னிங்களே அது எனக்கு வேணும்” என்றாள் தீர்க்கமாக

 

“என்ன வேணும்” என்றான் குழப்பத்துடன்

 

“நீங்க தர்றதா சொன்ன அந்த நிச்சயதார்த்தப் புடவை எனக்கே எனக்குன்னு வேணும். அந்தப் புடவையைத் தவிர வேற எதுவும் என் மனசுக்குப் பிடிச்சதாவும் எனக்குப் பொருத்தமாவும் அமையும்னு தோணலை. எனக்குத் தருவிங்களா” என்றாள் அவனை நேர் பார்வை பார்த்தபடி.

 

அசந்து போய் அவளைப் பார்த்தான் தன் காதலை, தன் மீதுள்ள அவளது நாட்டத்தை எவ்வளவு நாகரீகமாகவும் அழுத்தமாகவும் சொல்லிவிட்டாள் இந்தப் பெண்.

 

ஒரு மணி நேரத்திற்கு முன்பு இப்படிக் கேட்டிருந்தால் தூக்கித் தட்டாமாலை சுற்றியிருப்பான். ‘உனக்கு சொந்தமானதை எடுத்துக்க எதுக்கு லல்லி அனுமதி கேக்குற’ என்று கேலி செய்திருப்பான். ஆனால் அது எதுவும் இப்போது முடியாது.

 

வாராமல் வந்த செல்வத்தை, தேடாமல் கூடி வந்த தாழம்பூச்சரத்தை சூடாமல் விலக்கி வைப்பது கஷ்டமாகவே இருந்தது.

“லலிதா உங்களை புத்திசாலின்னு நினைச்சேன்”

 

“என் மேல உங்களுக்கு நாட்டம் இருக்கிறது எனக்குத் தெரியும் பாரி. அதனால இந்தப் பூசி மொழுகும் வேலை எல்லாம் வேண்டாம்”

 

“என் வயசு ஆணுக்கு யார் மேலதான் நாட்டம் இல்லை. கண்ல படுற அழகான பெண்களை எல்லாம் கல்யாணம் பண்ணிக்கனும்னு தான் தோணும்”

 

“இல்லை… உங்களுக்கு நான் என்ன சொல்றேன்னு புரியும்”

 

“லலிதா… இந்த வயசில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சில மணி நேரங்கள் பழகினாலே ஈர்ப்பு தோணுறது இயல்பு. நம்ம சூழ்நிலை அந்த மாதிரி ஈர்ப்பைக் கொண்டு வரும். ஆனால் புத்திசாலிகள் இந்த குறுகிய காலத்தில் முடிவெடுக்க மாட்டாங்க”

 

“எப்பேர்பட்ட புத்திசாலியா இருந்தாலும் நான் இப்ப எடுக்குற முடிவைத்தான் எடுத்திருப்பாங்க” என்றாள் உறுதியுடன்

 

“லலிதா உங்ககிட்ட எப்படி சொல்றதுன்னே புரியல… ஒரு விதை நெல்லாகிப்  பயன் தர சில மாசமாகும், ஒரு மரம் உருவாகிப் பயன்தர வருஷக்கணக்காகும். ஆனால் நெல்லுக்கும், செடிக்கும் நடுவில் முளைக்குற களை இருக்குப் பாருங்க அது சில நாள் நம்ம கவனிக்கலன்னாலே சரசரன்னு வளந்துடும்.

 

காதல் உணர்ச்சி கூட அப்படித்தான். பாத்து பாத்து உறவுகள் ஏற்பாடு செஞ்சு பாதுகாக்கும்போது மெதுவா உறுதிப் பட வளரும். தான்தோன்றித்தனமா வளரும் இந்தக் களையைப்  பிடுங்கி எரியுறதுதான் உங்க வாழ்க்கைக்கு நல்லது” என்றான் இரும்புக் குரலில்.

“என் உணர்வுகளை நானே வாய்விட்டு சொன்னதால என்னைக் கேவலமா நினைக்கிறிங்களா பாரி” அவளது குரலில் தழு தழுப்பு.

 

‘எனக்கு இல்லாத துணிவு உனக்கு இருக்குறதை நெனச்சு பூரிச்சு போறேன் லல்லி’ என்று மனத்தினும் நினைத்த வண்ணம் “என்னோட நினைப்பு எந்த விதத்திலும் உங்களுக்கு உதவப்போறதில்லை. இந்த நிமிஷத்திலிருந்து உங்களுக்கு நிச்சயம் செஞ்சிருக்கவரோட நினைப்புத்தான் உங்களுக்கு இருக்கணும்”

 

“அதுதான் உங்க முடிவா”

 

“அது உங்களுக்கும் சேர்த்து நான் எடுக்கும் முடிவு”

 

“பாரி…” அவளது கண்கள் கலங்கின.

 

“உலகத்தில் நீங்க பார்த்தது கொஞ்சம் தான் லலிதா. இந்த உலகத்தில் மாத்த முடியாததோ மறக்க முடியாததோ எதுவும் இல்லை. இந்த சில மணி நேரத்தோடத் தாக்கம் சில நாட்களில் உங்களை விட்டு மறைஞ்சுடும்”

 

“பாரி… நான் இயற்கையை ரொம்ப நேசிக்கிறேன். எனக்குப் பொருத்தமானவரா, வாழ்க்கைத் துணையா இயற்கையே உங்களைத் தான் தேர்ந்தெடுத்திருக்கிறதா நம்புறேன். அது உண்மைன்னா அந்த இயற்கையே நம்மை இணைச்சு வைக்கும்”

 

“இந்த மாதிரி பைத்தியக்காரத்தனத்தை நான் என்கரேஜ் பண்றதில்லை லலிதா. என்னைக் கல்யாணம் பண்ணிக்க அமுதா காத்திருக்கா. அவளை என்னால உதாசீனப் படுத்த முடியாது. சீக்கிரம் உங்க கல்யாணப் பத்திரிகை அனுப்புங்க… கல்யாணத்துக்கு என் மனைவியோட கண்டிப்பா வந்துடுறேன்” என்று இரும்பைப் போன்ற இறுக்கத்துடன் சொல்லி முடித்தவன் அதே வேகத்தில் அவளது வீட்டில் இறக்கிவிட்டான்.

 

எண்ணி மூன்றே நிமிடங்கள் மட்டுமே லலிதாவின் வீட்டில் இருந்த பாரி அதுவும் கூட லலிதாவின் தந்தையின் வற்புறுத்தலால் மட்டுமே.

“லேட்டாச்சு மன்னிச்சுக்கோங்க நான் கிளம்புறேன். மீண்டும் லலிதாவின் கல்யாணத்தில் சந்திக்கலாம். நீங்களும் குடும்பத்தோட எனக்கும் அமுதாவுக்கும் நடக்க இருக்கும் கல்யாணத்தில் கலந்துக்கணும்” என்று அழைத்துவிட்டுக் கிளம்பினான்.

 

அவன் கிளம்பி சென்ற சில நிமிடங்களிலேயே லலிதாவிடமிருந்து ஒரு செய்தி வந்தது.

“பாரி பொய் சொல்வது உங்களுக்கு இயல்பாகக் கை வரலாம். என்னால் அது முடியாது. எனக்கான அந்த சேலை என்னை அடைந்தே தீரும். எனது ஒரு மண்டல தவம் இன்றையிலிருந்து ஆரம்பம்”

அவளது உள்ள உறுதியை நினைத்து அவனால் வியக்க மட்டுமே முடிந்தது. மூடிய அவனது கண்களிலிருந்து சில நீர்த்துளிகள் வழிந்தன.

19 thoughts on “இனி எந்தன் உயிரும் உனதே – 16”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

உன்னையே எண்ணியே வாழ்கிறேன் – 5உன்னையே எண்ணியே வாழ்கிறேன் – 5

போதையின் ஆரம்பக் கட்டம். ஆனாலும்  நிதானமாகவே கடற்கரை மணலில் நடந்தான் ராபர்ட். அவனை சந்திப்பதாக சொல்லியிருந்த மூன்று நடிகர்களும் வீட்டுக்கு வரவில்லை. ஒரு நேர்காணலுக்கே நேரத்தோடு வர முடியாதவர்களை நம்பி எப்படி இவ்வளவு பெரிய பொறுப்பை ஒப்படைப்பது. தமிழ் நாட்டின் சாபம்

மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் – 28மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் – 28

28 அந்த உணவுத் திருவிழா வெற்றிகரமாக முடிந்தது. மதுரா டிவி, வைகை டிவி முதலிவை போட்டி போட்டுக் கொண்டு அதைப் பற்றி பேச, பஹரிகா ஒரே நாளில் ஏகப்பட்ட பேரைச் சென்றடைந்தது. அதிதிக்கும் இது ஒரு நல்ல விளம்பரமாக இருந்தது என்றால்