Tamil Madhura யாழ் சத்யாவின் 'இரு மலர்கள்' யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 2’

யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 2’

அத்தியாயம் – 02

யாரோ அவர்கள்?

மதியம் பாடசாலை முடிந்ததும் வாயிலில் காத்து நின்ற அருண்யாவையும் ஏற்றிக் கொண்டு வீடு நோக்கி துவிச்சக்கர வண்டியை மிதித்தாள் கவின்யா. 

அக்கா! இன்றைக்கு புதன்கிழமை என்ன? அச்சச்சோ… மறந்தே போனனே… கெதியா வீட்ட போக்கா… சுடுதண்ணி சிவத்தாரிட ஸயன்ஸ் வகுப்பு இருக்கு  ” 

அவளின் அச்சச்சோவிலயே தங்கை ரியூசன் வகுப்பு வீட்டுப்பாடம் செய்ய மறந்து விட்டாள் என்பதை புரிந்து கொண்டவள்,

நீ எப்போதுதான் ஒழுங்காக வீட்டுப்பாடம் செய்திருக்கிறாய்? எப்பிடித்தான் ஓஎல் சோதினை பாஸ் பண்ணப் போகிறாயோ தெரியேல்ல”

என்று தங்கையை மென்மையாக கடிந்தவளுக்கு அப்போது தான் ஞாபகம் வந்தது. அன்று புதன்கிழமை. தனக்கும் ஜெயசீலன் ஆசிரியரின் உயிரியல் வகுப்பு இருப்பது.

ஜெயசீலன் யாழ் மாவட்டத்திலேயே உயிரியல் பாடத்திற்கு பெயர் பெற்ற ஆசிரியர். தனது கணீர் குரலில் அவர் பாடம் எடுக்கும் போது வீட்டுக்கு சென்று திரும்ப ஒரு தரம் படித்தாலேயே அனைத்தையும் மூளையில் பதிய வைக்கக் கூடியது அவரது கற்பித்தல் திறன்.

மிகவும் நகைச்சுவையாக கற்பிக்கும் அவரை மாணவர்களுக்கு எவ்வளவு பிடிக்குமோ அந்தளவிற்கு ஜெயசீலன் என்ற பெயரைக் கேட்டாலே நடுங்குவார்கள்.

காரணம் அவர் மாணவர்கள் அனைவர் பெயர்களையும் சரியாக நினைவு வைத்திருந்து பாடத்தின் இடையிடையே கேள்வி கேட்பார். வகுப்பில் இருக்கும் ஏறக்குறைய நூற்றைம்பது, இருநூறு மாணவர்களுக்கு மத்தியில் பதில் சொல்லாவிட்டால் தலை குனிவாகிப் போய்விடுமே. அதை விட 

என்ன கவின்யா? அப்பா டிஈ (கல்வி பணிப்பாளர்) நீங்கள் என்ன அப்பாக்கு பைல் அடுக்கிக் குடுக்க போகப் போறியளோ?” என்று அவர் நக்கலாக கேட்பதே போதுமே. அது ஏதோ உலக மகா நகைச்சுவை மாதிரி வகுப்பே கொல் என்று நகைக்கும்.

ஒருநாள் அனுபவத்தோடு கவி அவர் பாடமெல்லாம் அன்றன்றைக்கே படித்து விடுவாள். கடைசி நாள் பாடத்தை மனதிலே அசை போட்டவாறு சைக்கிளை மிதித்தவள் அந்த பிள்ளையார் கோவில் சந்தி வருவதைக் கவனிக்கவில்லை. 

ஸாம்… ஸாம்…” 

என்று இரண்டு, மூன்று பேர் இணைந்து அழைத்த குரல் கேட்டவள், இதயம் ஒருகணம் வேகமாக துடிக்க தன்னையும் மீறி கோவில் மதிலடியை நோக்கினாள்.  அவளையே ஒரு சிறு முறுவலோடு பார்த்து கொண்டிருந்த அவனின் விழிகளைத் தன் விழிகளால் தீண்டி,அடுத்த செக்கனே அவள் பார்த்தது பொய்யோ எனும் சந்தேகத்தை அவனுக்கு எழுப்பி விட்டு இன்னமும் வேகமாக சைக்கிளை மிதிக்க ஆரம்பித்தாள்.

இவங்களுக்கு வேற வேலையே இல்லை. காலமை காணேல்ல. எங்க தோட்டம் கொத்த போய்டாங்களோ? மெதுவாகப் போ அக்கா… கேட்போம் அவங்களை…” அருணி சொல்லவும்,

உனக்கு விசரே… பேசாமல் வாயை மூடிக் கொண்டு வா. காகம் கரையுது என்றால் நீயும் அதுக்கு பதில் சொல்லிக் கொண்டு இருப்பாயோ?” என்று இவள் அவர்களோடு வம்புக்கு போனாலும் போவாள் என்ற பயத்தோடு தங்கையை அடக்கினாள் கவின்யா.

அடங்கினால் தான் அவள் அருண்யா இல்லையே.

சகோதரிகள் அவர்கள் அருகே நெருங்கியதும், “கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை…” என்று ஒருமித்த குரலில் பாடத் தொடங்கினார்கள் அங்கே நின்றிருந்த நால்வரில் மூவர்.

ஒரு வருஷமா ஒரே பாட்டைக் கேட்டு காது புளிச்சுப் போச்சு… சீடியை மாத்துங்கடா…” என்று அருணி அவர்களுக்கு கேட்க உரக்கவே சொன்னாள். 

எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டியா அருண்?  நீயும் அந்த லூஸுகளுக்கு திருப்பி பதில் சொன்னால் உனக்கும் அதுகளுக்கும் என்ன வித்தியாசம்? எப்பதான் நீ மச்சுவேட் ஆகப் போறியோ தெரியேல்ல” என்று சலித்தபடி பயணத்தை தொடர்ந்தாள் கவி.

சகோதரிகள் அப்பால் சென்றதும் பாடிய மூவரும் அந்த நாலாமவனைக் கேலி பேசத் தொடங்கினார்கள். 

எப்ப மச்சி கவியோட கதைக்கப்  போகிறாய்?”

கேட்ட சுதனுக்குப் பதில் ஏதும் சொல்லாமல் கவி போவதையே பார்த்துக் கொண்டிருந்தான் ஸாம் எனும் ஸாம் அபிஷேக்.

தேவி ஸ்ரீ தேவி உன் திருவாய் மலர்ந்தொரு
வார்த்தை சொல்லிவிடம்மா”

என்று பாட ஆரம்பித்தான் சுதர்சன். 


பாவி அப்பாவி உன் தரிசனம் தினசரி
கிடைத்திட வரம் கொடம்மா” என்று மிகுதியை முடித்தான் நிரோஜன்.

கவியும் அருணியும் கண்ணை விட்டு மறைந்ததும் நண்பர்களை நோக்கித் திரும்பியவன்,

அவளுக்கு ஏஎல் எக்ஸாம் முடியட்டுமடா… இப்ப லவ் அது இதென்று அவளைக் குழப்பக் கூடாது. எப்பிடியும் டிஸ்றிக்ல ( district)  முதல் ஆளாக வருவாள் என்று நினைக்கிறேன். போனகிழமை ஜெயசீலன் சேரைக் கண்டனான். அவரும் சொன்னார். நல்லா படிக்கிறாளாம் என்று”

சும்மா சீனைப் போடாமல் போடா… நீ இப்பிடி ஒரு வருசமா இந்த மதிலுக்கு காவல் இருக்கிறதால மட்டும் அவளைக் குழப்பேலப் போல” கொஞ்சம் கடுப்பாகவே கேட்டான் சுதர்சன். 

சுதர்சன் கேட்கிறது உண்மை தானேடா.. அன்றைக்கு கெட் டு கெதர்ல (get together) அவள் ‘கண்ணாளனே’ பாடின நாளில இருந்து நீயும் இந்த மதில்ல காவல்  இருக்கிறாய். எலியோட சேர்ந்த எலிப் புளுக்கையாய் நாங்களும் சேர்ந்து காய்கிறோம். இதெல்லாம் என்ன காதலோ…” என்று சலித்து கொண்ட சுதனுக்கு பதிலிறுத்தான் நிரோஜன்.

உனக்கு வரக் கஷ்டம் என்றால் நீ  வராதேடா… ஸாம் கவிட்ட லவ்வை இப்ப சொல்லி, பள்ளிக்கூடம் முடிய முதல் என்ன காதல், கத்தரிக்காய் வேண்டிக் கிடக்டென்று அவள் வீட்டுக்கு பயந்து நோ சொல்லிட்டால் என்ன செய்யிறடா?” என்ற தன் நெடு நாளைய சந்தேகத்தை கேட்டான் சுதன்.

ஏற்கனவே ஹிந்து, கிறிஸ்டியன் பிரச்சினை வேற. கவிட அப்பா சந்நிதி கோயிலுக்கு ஒவ்வொரு நாளும் போகிற ஆள். தேருக்கு ஒவ்வொரு வருசமும் தூக்குக் காவடி எடுக்கிறவர் தெரியும் தானே. அந்தாளாவது ஓகே சொல்லுறதாவது” என்று உற்ற தோழனின் காதல் என்னாகப் போகுதோ என்ற கவலையோடு உரைத்தான் சுதர்சன். 

ஓமடா சுதா… அன்றைக்கு காலமை நான் இதில உங்களுக்கு காத்துக் கொண்டு நிக்க அந்தாள் சந்நிதில (முருகன் கோவில்) போய் தம்பிய பார்த்திட்டு இங்க  அண்ணனுக்கும் (பிள்ளையார் கோவில்) சைன் போட வந்துவிட்டார். என்னைக் கண்டிட்டு கேட்டார்,

நீர் செல்வராசாட மகனெல்லே… ஒவ்வொரு நாளும் இதில என்ன செய்யிறீர்? கம்பஸ் தொடங்கிற வரை வலயத்தில கொம்பியூட்டர் கோர்ஸ் நடக்குது வந்து படியுங்கோ’ என்றார். நானும் ஓகே சேர் என்றிட்டன்”

ரெண்டு மாச கோர்ஸாம். நான் நாலு பேரிட பேரும் பதிஞ்சிட்டன்” என்று கூறிய சுதன் தாங்கள் கொஞ்சம் நல்ல பையன்கள் தான் என்பதையும் தெரிவித்தார்கள்.

கவி வீட்டில சொல்லியிருப்பாளோ?” குரலிலே கொஞ்சம் பயம் எட்டிப் பார்க்க கேட்டான் சுதர்சன். 

கவி சொல்லி இருக்க மாட்டாளடா. அவளுக்கு பின்னால  இருந்து போகுமே ஒரு குரங்கு அது வேணும் என்றால் சொல்லி இருக்கும்” என்றவாறு தன் நெற்றிக் காயத்தை தடவினான் அது வரை அமைதியாக நண்பர்களின் உரையாடலை கேட்டுக் கொண்டிருந்த ஸாம்.

ஆம். ஒருநாள் இவர்கள், “கவி… கவி…” என்று கத்தவும் கையோடு கொண்டு வந்திருந்த சிறு கூழாங்கல்லால் தன் வேலையைக் காட்டி விட்டாள் அருண்யா. கல்லின் நுனி நெற்றியில் பட்டு மாறாத சிறு வடு ஒன்றை ஏற்படுத்திவிட்டது ஸாமுக்கு. 

அன்றிலிருந்து அருண்யா மேல் அவனுக்கு அப்படி ஒரு கடுப்பு. கவியின் தங்கை என்பதற்காகவே பொறுமையை இழுத்து பிடித்து வைத்திருக்கிறான், கவிக்கும் தனக்கும் கல்யாணம் முடிந்ததும் அருணியை நன்கு கவனிக்க வேண்டும் என்ற வைராக்கியத்துடன். 

கவியும் என்னை லவ் பண்ணுகிறாள் என்று எனக்குத் தெரியும். ஆனால் நானும் அவளும் எங்களுடைய காலில நிற்கிற நிலைக்கு வரும் வரை அவளைக் குழப்பக் கூடாது. அதாலதான் இன்னும் அவளிட்ட ஐ லவ் யூ சொல்லேல்ல.

அதேநேரம் என்னால அவளைப் பாக்காமல்  இருக்கேலாதுடா. அதோட கவிக்கும் நான் அவளுக்காக காத்திருக்கிற தெரியத்தானே வேணும். அதுக்காகத் தான் இங்கே வந்து அவளைப் பாப்பது” என்று தன் நடவடிக்கைகளுக்கு விளக்கம் கூறினான் ஸாம்.

எல்லாம் ரெண்டு மாசத்தில கம்பஸ் தொடங்கிற வரைக்கும் தானே. ஏதோ நடத்து மச்சி… அம்மா மாவரைக்க தந்துவிட்டவ. மில்லுக்கு போய் எடுக்க வேணும். நான் போய்ட்டு வாறன்… நாளைக்கு காலமை பாப்பம்” என்றவாறு புறப்பட்டான் சுதன்.

மற்றவர்களும் ஒருவரிடம் ஒருவர் விடைபெற்றுக் கொண்டு அந்த இடத்தை விட்டு தங்கள் தங்கள் வீடுகள் நோக்கி துவிச்சக்கர வண்டிகளை மிதிக்கத் தொடங்கினார்கள். 

நால்வரும் பாலர் வகுப்பிலிருந்து ஒன்றாகப் படித்து இன்று ஒன்றாகவே யாழ் பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்திற்கு தெரிவாகி பல்கலைக்கழக விரிவுரைகள் ஆரம்பிப்பதற்காக காத்திருப்பவர்கள். 

போன வருடம் கவியின் பாடசாலையில் நடந்த உயர்தர மாணவர்கள் ஒன்று கூடலுக்கு சகோதரப் பாடசாலையான ஹாட்லி கல்லூரியில் இருந்து இவர்கள் நால்வரும் சென்றிருந்தார்கள். 

அங்கே பட்டாம்பூச்சிகளாய், பல வண்ண புடவைகளில் சுற்றித் திரிந்த மாணவிகளில் இடையைத் தாண்டிய நீண்ட ஒற்றை ஜடை அசைந்தாட அங்குமிங்குமாக ஓடித் திரிந்து அனைத்தையும் மேற்பார்வையிட்டு கொண்டிருந்த கவி ஸாமின் கண்களை விட்டு நகர மறுத்தாள்.

நிகழ்ச்சிகளில் ஒன்றாக கவின்யாவின் பாடல் இடம் பெற்றிருக்க, இவள் பாடியதோ ‘கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை…’ கேட்பவர் மெய் மறக்க தன் குரல் வசியத்தால் கட்டிப் போட்டவள் யதார்த்தமாக எதிரே பார்த்துக் கொண்டு பாட, எதிரே அமர்ந்திருந்த ஸாமோ அவள் தன்னையே பார்த்துப் பாடுவதாக எண்ணி மெய்யுருகிப் போனான். 

கவியின் பார்வை அவனை தீண்டி மீண்டிருந்தாலும் அவன் தன்னை ரசித்துக் கொண்டிருப்பதை பெரிதாக எடுக்கவில்லை. ஆனால் ஸாமோ அன்றிலிருந்து இன்று வரை காலையும் மாலையும் அந்த பிள்ளையார் கோவில் மதிலடியில் அவளைக் காணத் தவமிருக்கவும் மறக்கவில்லை. கவி நாமம் ஜெபிக்கவும் தவறவில்லை. 

கவியின் அழகைப் பார்த்து காதலிக்கிறானா? அவள் குரல் இனிமையில் சொக்கி காதலிக்கிறானா? என்று கேட்டால் அவனுக்குப் பதில் சொல்லத் தெரியாது. ஆனால் அவன் உலகம் அவள்தான் என்று அவன் உள்ளம் முடிவெடுத்து விட்டது  அவளைக் கண்ட அந்த நொடியில் இருந்து. 

காரண காரியங்கள் பார்த்து காதல் வந்தால் பிறகெப்படி அது காதலாகும்

ஸாம் பருத்தித்துறைக்கும் வல்வெட்டித் துறைக்கும் இடையில் இருக்கும் மீனவக் கிராமமான இன்பருட்டியில் வசிக்கும் மீனவ சங்கத் தலைவர் அந்தோனிப்பிள்ளையின் மகன். 

ஸாமும் அவனுக்கு மேல் இரண்டு அண்ணன்களும் மட்டுமே. சிறு வயதில் தாயை இழந்தவர்களை அந்தோனிப் பிள்ளையே தனியாளாக வளர்த்து ஆளாக்கியிருந்தார். 

ஸாமுக்குப் பத்து வயதிருந்த போது ஒருநாள் அந்தோனி கடலுக்குப் போயிருந்த வேளை கூட சென்ற படகுகளில் வந்தவர்கள் கடலில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் அந்தோனி இறந்து விட்டதாக கூறக் கேட்டு மயங்கி சரிந்த ஸாமின் அன்னை மீள எழவே இல்லை.  

சில மணித்தியாலங்களின் பின் தோள் பட்டையை உராய்ந்து சென்ற துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் உயிரைக் கையில் பிடித்தபடி நீந்திக் கரை வந்தவருக்கு மனைவியின் உயிரற்ற உடலே பார்க்க கிடைத்தது.

தளர்ந்து போய் அமர்ந்து விட முடியாது அவர் கண் முன்னால் அவர் பெற்ற மூன்று ஆண் மகவுகளும்.

தினம் தினம் செத்துப் பிழைக்கும் நிம்மதியற்ற இந்த கடல் தொழில் இல்லாமல் தனது பிள்ளைகளை பெரிய படிப்பு படிப்பிக்க வேண்டும் என்ற மனைவியின் ஆசையை தனது வாழ்க்கை இலட்சியமாகக் கொண்டு அதை நிறைவேற்றவும் செய்தார்.  

ஸாமின் மூத்த அண்ணன் ஹெவின் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் இறுதி ஆண்டும், இரண்டாவது அண்ணன் டேவிட் மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் பொறியியல் இரண்டாம்ஆண்டும் படிக்கிறார்கள். அவர் ஆசையை பூர்த்தி செய்யும் முகமாக ஸாமும் இப்போது முகாமைத்துவபீடத்திற்குத் தெரிவாகி விட்டான்.

இப்போது ஸாம் அபிஷேக்கோ நாளைக்கு தன்னவளுக்கு வரப்போகும் ஆபத்தை அறியாமல் அவளைப் பற்றிய சிந்தனைகள் மனதில் ஓட வாயோ ஏஆர் ரஹ்மானின்

சொல்லாயோ சோலைக் கிளி சொல்லும் உந்தன் ஒரு சொல்லில் உயிர் ஒன்று ஊசல் ஆடுதே’

பாடலை விசிலடிக்க வீடு நோக்கிச் சென்று கொண்டிருந்தான். 

கவின்யாவுக்கு வரப் போகும் ஆபத்து என்ன

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 14’யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 14’

அத்தியாயம் – 14 யாதவின் காதல் கைகூடுமா? பெற்றோர் என்ன பதிலோடு வரப் போகிறார்களோ தெரியவில்லை என்று மிகுந்த பதட்டத்தில் இருந்தான் யாதவ். ஒவ்வொரு நிமிடங்களும் ஒவ்வொரு யுகங்களாய் எப்போது கவியை திரும்ப காண்பேன் என்று தவித்தான். மனமெங்கும் காதல் பட்டாம்

யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 24’யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 24’

அத்தியாயம் – 24 மாறுவாளா அருண்யா?      ஸாம் வைத்தியசாலையிலிருந்து வீட்டிற்கு திரும்பிய போது அங்கே அருண்யா அவனுக்காகக் காத்துக் கொண்டிருந்தாள்.     அவளைக் கண்டதும் கண்களில் முட்டிய நீரை சுண்டி விட்டபடி உள்ளே நுழைந்தவனைக் கண்டதும் தொலைக்காட்சி

யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 6’யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 6’

அத்தியாயம் – 06 கவி சந்தித்தாளா ஸாமை?    கவின்யாவுக்கு பல்கலைக்கழக விரிவுரைகள் ஆரம்பமாகியது. பல்கலைக் கழக வாழ்விலே முதலாவது நாள்.      வெண்ணிற பருத்தி ஷல்வாரில் இடப் பக்கத் தோளில் ஷோலை நீள வாக்கில் போட்டிருந்தாள். இடது கையில்