Tamil Madhura சிந்தனை துளிகள் இன்று ஒரு தகவல் -13

இன்று ஒரு தகவல் -13

அது ஒரு ஜென் மடாலயம். அங்கிருந்த சீடர் களுக்கு தத்துவ கதை ஒன்றை குரு கூறினார். அந்தக் கதை இதுதான்.

அவன் ஒரு கல் உடைக்கும் தொழிலாளி. அந்தத் தொழிலில் அவனுக்கு பெரிய வருமானம் ஒன்றும் கிடைக்கவில்லை. அன்றாட வாழ்க்கையை ஓட்டுவதே பெரும் சுமையாக இருந்தது. அதனால் அவனுக்கு வாழ்க்கையே வெறுப்பாக இருந்தது.

ஒரு நாள், அவன் போன வழியில் ஒரு பணக்கார வீடு தென்பட்டது. அந்த வீட்டின் வாசல் வழியே அவன் கண்ணில் பட்ட அத்தனை பொருட்களும், செல்வங்களும் அவனை விழிபிதுங்க வைத்தன.

அடடா.. அந்த பணக்காரனுக்கு எத்தனை செல்வாக்கு. பணக்காரன் மீது பொறாமையாக இருந்தது. தனக்கும் அப்படி ஒரு வாழ்க்கை கிடைத்தால் எப்படியிருக்கும்? என நினைத்துப் பார்த்தான்.

என்ன அதிசயம்! அவன் பணக்காரனாகி விட்டான். வாழ்க்கையில் அவன் நினைத்துப் பார்த்திராத அளவுக்கு செல்வங்கள் குவிந்துவிட்டன.

மற்றொரு நாள் ஒரு பெரிய அரசு அதிகாரி பல்லக்கில் அவனை கடந்து சென்றார். அந்த அதிகாரியின் பின்னே பல சேவகர்கள், படை வீரர்கள். மக்கள் பயந்து கும்பிட்டு வழிவிட்டனர். அதிகாரியின் உத்தரவு தூள் பறந்தது. எப்பேர்ப்பட்ட பணக்காரனும் விழுந்து வணங்கினான். இப்போது கல் உடைப்பவன் மனசெல்லாம் அந்த அதிகாரிதான் நின்றார்.

‘இருந்தா இப்படியல்லவா இருக்கணும். என்னா அதிகாரம்’ என்று நினைத்தான். அவன் நினைப்பு பலித்தது. பெரும் அதிகாரம் படைத்த அதிகாரியாகி விட்டான். அவனைப் பார்த்தாலே எல்லோரும் பயந்தனர். கொஞ்ச நாளில் மக்கள் வெறுக்கும் அளவுக்கு அவன் அதிகாரம் எல்லை மீறிப் போனது.

ஒரு கோடை நாள், தனது பல்லக்கில் பயணித்துக் கொண்டிருந்தான், இப்போது அதிகாரியாக இருக்கும் கல் உடைப்பவன். வெயில் சுள்ளென்று சுட்டது. இருக்கையில் உட்காரவே முடியாத அளவு வெப்பம் தகித்தது. அண்ணாந்து பார்த்தான். வானத்தில் கம்பீரமாக தகதகத்தது சூரியன்!

‘ஓ! உலகத்துக்கு மேலே உட்கார்ந்துகிட்டு இந்த சூரியன் என்னமா ஆட்டிப் படைக்குது. இருக்கட்டும்! நானும் சூரியனாகி எல்லாரையும் எனக்கு கீழே வச்சி வாட்டி எடுப்பேன்’ என்றான்.

அவன் இப்போது சூரியனாகிவிட்டான்!

தனது கிரகணங்களை பல மடங்கு வெப்பமாக்கி பூமியில் செலுத்தி அத்தனைப் பேரையும் துன்புறுத்தினான். அவனுக்கு விவசாயிகளும் தொழிலாளர் களும் சாபமிட்டனர். அந்த நேரம் பார்த்து ஒரு கரிய மேகம் கடந்துபோனது. சூரியன் அந்த மேகத்துக்குள் மறைய, மக்கள் மகிழ்ந்தார்கள்.

‘ஓகோ.. மேகம் நினைச்சா சூரியனையே காலி பண்ணிடுமா! அப்ப நானும் மேகமாகிட்டா போச்சு’ என நினைத்தான். நினைத்தபடி மேகமாகிவிட்டான்.

இப்போது பூமியெங்கும் மழையை மடை திறந்த வெள்ளம் போல கொட்டினான். எங்கும் வெள்ளக்காடு. மக்கள் சபித்தனர். திடீரென பலத்த காற்று வீச, மேகம் தாக்குப் பிடிக்காமல் ஓடிப் போனது.

‘இந்த காற்றுக்கு எவ்வளவு சக்தி.. நானும் காற்றாக மாறி உலகத்தை ஒரு வழி பண்றேன்’ என்று நினைத்தான் மேகமாக இருந்த கல் உடைப்பவன்.

அப்படியே நடந்தது. மேகம் இப்போது வலிமையான காற்றாகி மாறி, பூமியையே ஆட்டிப் பார்த்தது. மரங்களையும் வீடுகளையும் பெயர்த்தெடுத்து வீசியது. மக்கள் கோபமாகி திட்டித் தீர்த்தனர். அப்போது திடீரென ஏதோ ஒரு பெரிய உருவம் தடுத்து நிறுத்தியது போல உணர்வு. பார்த்தால் ஒரு பெரும் பாறை.

‘காற்றையும் தடுக்கும் அளவு இந்தப் பாறைக்கு பலமா, நானும் பாறையாவேன்’ என்றான். பாறையானான். பூமியில் யாராலும் அசைக்க முடியாத பலத்துடன் இருந்தான். அப்போதுதான் அந்த சத்தம் கேட்டது. ஒரு உளியை வைத்து தன் மீது யாரோ அடிக்கும் சத்தம்.

‘அட.. உலகின் சர்வ பலம் மிக்க இந்த பாறையை விட பலமானவன் யாரடா அது?’ என்று பார்த்தான், பாறையாக இருந்த கல் உடைப்பவன்.

அந்தப் பாறையை உளியால் உடைத்துக் கொண்டிருந்தான் ஒரு கல் உடைப்பவன்.

கதையை சொல்லி முடித்த குரு, ‘ஒன்றை விட ஒன்று சிறந்ததாக இருக்கிறது என்று நினைத்துக் கொண்டு, மனதை மாற்றிக்கொண்டே செல்லக் கூடாது. எப்போதும் உன்னை விட உயர்ந்தவர் இல்லை என்று நினைக்க வேண்டும்’ என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

இன்று ஒரு தகவல் -8இன்று ஒரு தகவல் -8

சமையலறையில் மரங்களின் பயன்பாடு மிகுதியாக உள்ளது. இதில் மசாலா பொருட்கள் வைக்கும் அஞ்சறைப் பெட்டி முக்கியமானது. இதனை கொடுக்காப்புளி, பலா மரங்களில் செய்வதுதான் நல்லது. ஏனெனில் இவற்றில் செய்யும் போது ஒரு அறையில் வைக்கப்படும் மசாலா பொருளின் வாசனை மற்றொரு அறையில்

இன்று ஒரு தகவல் -3இன்று ஒரு தகவல் -3

ஆமை ஒன்று ஆற்றைக் கடப்பதற்காக ஆற்றில் இறங்கியது. அப்போது ஒரு தேள் ஓடி வந்து, ” ஆமை அண்ணா..! நான் அவசரமா அக்கரைக்குப் போக வேண்டி இருக்குது. உன் முதுகில் ஒரு ஓரமா இடம் கொடுத்தீன்னா நான் பாட்டுக்கு அமைதியா அக்கரை

இன்று ஒரு தகவல் -4இன்று ஒரு தகவல் -4

கீழே உள்ள சொற்களைக் கவனியுங்கள். ஆரம்பத்தில், அவற்றைப் படிப்பதில் உங்களுக்கு சிரமம் இருக்கும். இருப்பினும், படிப்படியாக உங்கள் மூளை வார்த்தைகளை சரியாக விளக்கும். இந்த வார்த்தைகள் உங்கள் மூளையுடன் பேசுவதற்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்….. 7H15 M3554G3 53RV35 7O PR0V3