Tamil Madhura இனி எந்தன் உயிரும் உனதே,தமிழ் மதுரா இனி எந்தன் உயிரும் உனதே – 4

இனி எந்தன் உயிரும் உனதே – 4

அத்யாயம் – 4

 

‘நகரேஷு காஞ்சி’ என்று குறிப்பிட்டு சொல்லும்படி பண்டைக் காலத்திலேயே வில் வடிவில் வேகவதி ஆற்றை எல்லையாகக் கொண்டு நிர்மாணிக்கப் பட்டக் காஞ்சி மாநகரம்சைவர்களைக்  கவரும் ஏகாம்பரேஸ்வரரையும், மதுரை மீனாட்சி  காசி விசாலாட்சி வரிசையில் சாக்தர்களின் இஷ்ட தெய்வம காமாட்சி, வரதராஜப் பெருமாள் குடிகொண்டிருக்கும் திவ்ய தேசம் என ஆயிரம் கோவில்களின் நகரம் தனது பழமையைத் தனக்குள்ளே தக்கவைத்திருந்தது.

 

இவற்றை அறியாதவர்கள் கூடக்  கண் கவரும் பலவண்ணப் பட்டுச் சேலைகள்  பற்றி அறியாது இருக்க முடியாது. சில பல மணி நேரம் பயணம் செய்து பாரி காஞ்சியை அடைந்தபோது பிற்பகலாகியிருந்தது. ஒருவழியாக அன்னை சொல்லியிருந்த கடையைத் தேடிக் கண்டடைந்தான். அவனது உறவினர் ஒரு பெண்மணி நன்றாக வாழ்ந்தவராம் அவரது குடும்பம் எப்போதும் இங்குதான் குடும்ப விஷேஷங்களுக்குப் பட்டு எடுப்பது போலும். அதை அவருக்கு நெருக்கமான குடும்பத்தினர் சிலருக்கும் கற்றுக் கொடுத்திருந்தார். மற்ற குடும்பங்கள் தங்கள் சவுகரியத்திற்கு மாறி விட்டிருந்தாலும் பாரியின் அன்னை இந்தப் பழக்கத்தை உறுதியாகப் பிடித்துக் கொண்டார்.

 

காஞ்சிபுரத்திற்கு வந்து இறங்கியபோது பாரிக்கு இரண்டு பிரச்சனைகள். ஒன்று  அமுதாவின் அப்பா  தந்திருந்த விலாசத்தில் வீடு பூட்டியிருந்தது. உடனே அவரிடம் பேசித் தகவலைத் தெரிவித்தான். அவரும் நண்பரைத் தொடர்பு கொண்டுவிட்டுப் பின் விவரத்தை அவனிடம் சொன்னார்.

 

“பிரெண்ட் அவசர வேலையா ஊருக்குக் கிளம்பிட்டாராம் பாரி. நீ வண்டியை ஓட்டிட்டு வந்துடு”

 

“சரிங்க மாமா”

 

“புடவை எடுத்தாச்சா”

 

“இனிமேல் தான் மாமா”

 

“சென்னை பக்கம் மழை வரும்னு வானிலை அறிக்கைல சொன்னாங்களாம்.  சுருக்க வேலையை முடிச்சுட்டுக் கிளம்பப் பாரு” சொந்தக்காரப் பையன், சிறு வயதிலேயே அறிமுகமாகி மாமா மாமா என்று அவர் பின்னால் சுற்றியவன் அதனாலேயே ஒருமையில் அழைத்துப் பழகிவிட்டார். சிரமப்பட்டு அவர் அவனை மாப்பிள்ளை என்று மரியாதையாக விளிக்கும்போது பாரிக்கு சிரிப்புத்தான் வருகிறது.

‘அதுதான் வரலைல்ல விட்டுடுங்களேன்’ என்றும் கிண்டலாக சொல்லிப் பார்த்தான்.துரை கேட்பேனா என்று விடாப்பிடியாய் நிற்கிறார்.

 

அலைப்பேசியை அணைத்தவுடன் வானத்தைப் பார்த்தான். வானம் இருட்டிக் கொண்டு இருந்தது. சீக்கிரம் வேலையை முடிக்க வேண்டும். வண்டியை வேகமாக விரட்டினான்.

 

அடுத்த குழப்பம் கடையின் விலாசத்தில். அம்மாவின் சொல்படி அந்தக் கடையின் பெயர் காளி பட்டுப் புடவை கடை. ஆனால் அந்தக் கடைத்தெருவில் ஜெயகாளி, நவகாளி என்று இரண்டு கடைகள் இருந்தது. இதில் எது அம்மா சொன்னது… குழம்பி நின்றான்.

 

“அப்பா காலத்துக்குப் பின்னாடி அண்ணன் தம்பிக்கு சொத்துத் தகராறு, ரெண்டு கடையா பிரிச்சுக்கிட்டாங்க” என்று விடையளித்தார் எதிரிலிருந்த டீக்கடையில் டீ அருந்திக் கொண்டிருந்த பெரியவர் ஒருவர்.

 

“இதில் எந்தக் கடை நல்லாருக்கும்” என்றான் அவரிடமே

 

“ரெண்டுமே வேஸ்ட்” என்றார் பீடியைப் பற்ற வைத்துக் கொண்டே அவனிடம்.

 

கேள்வியாகப் பார்த்தவனிடம் “தரம், நாணயம் எல்லாம் அவங்கப்பா இருந்தவரை தான். மனுஷன் நாணயமான வியாபாரி. பசங்களுக்குக் காசாசை அதிகம்” என்றார் கூடுதல் தகவலாக.

 

அவரை சந்தேகமாகப் பார்த்தான் “உங்கள மாதிரிதான் என் பொண்டாட்டியும் என்னை நம்பாம கடைக்குள்ள போயிருக்கு. நீங்க  ஒண்ணு பண்ணுங்க. பத்து நிமிஷம் உள்ள புடவை எல்லாத்தையும் எட்டிப் பாத்துட்டு வாங்க” என்றார்.

 

அவர் சொல்லியது போலவே கடையின் உள்ளே நோட்டம் விட்டவன் கண்களை கிளிப்பச்சை, அடர் சிவப்பு என்று அனைத்து நிறங்களிலும் புடவைக் கண்ணைப் பறித்தது.

இங்கு பாகுபலி புடவை கிடைக்குமா என்றபடி யோசித்தவனிடம் “சார் என்ன வேணும்” என்றார் மேற்பார்வையாளர்  ஒருவர்.

 

“பாகுபலி சேலைன்னு எதுவும் இருக்கா” என்றான் தயக்கத்துடன். அவரும்

 

“முதல் மாடி” என சுட்டிக் காட்ட அங்கு வந்தடைந்தான். நிஜமாகவே இந்தப் பெயரில் எல்லாம் உடைகள் இருக்கிறதா என்ன? என்றெண்ணி வந்தவனுக்கு விடையாக

 

ஓரிடத்தில் பாகுபலி புடவை என்றும் போட்டிருக்க அங்கே சர்க்கரைப் பாகில் மொய்க்கும் எறும்பினைப் போல இளம் யுவதிகளின் கூட்டம்.

 

இதில் என்ன தேர்ந்தெடுக்க… புடவையின் விலை வேறு பதினைந்தாயிரத்தில்தான் ஆரம்பித்தது. அமுதா சொல்லியதை நினைவிற்குக் கொண்டுவந்து

 

“காப்பர் சல்பேட் ப்ளூ, இங்க் ப்ளூ நிறத்தில் பாகுபலி சேலை இருக்கா”

 

“இங்க் ப்ளூல காப்பர் சல்பேட் பார்டரா இல்லை காப்பர் சல்பேட்டில் இங்க் ப்ளூவா” என்று விற்பனையாளர் கேட்க

 

“எது நல்லாருக்குமோ அதைத் தாங்க” என்றான். அவர் தந்த புடவை நன்றாகவே இருந்தது. ஆடம்பரமாக… வெகு பளிச்சென… ஆனால் அவன் மனதை என்னவோ தொடவில்லை.

 

‘ஏண்டா நீயா கட்டப் போற… அமுதா உடுத்துறது அவளுக்குப் பிடிச்சா போதாதா’ என்று சமாதனப் படுத்திக் கொண்டான்.

 

இருபதே  நிமிடத்தில் புடவை வாங்கிவிட்டு ஆயாசத்துடன் பாரி வெளியே வந்தபோது அந்தப் பெரியவரை மறந்தே விட்டிருந்தான். பலவண்ணங்களில் மின்னிய ரகரகமான  புடவைகள் அவனை மறக்கடித்திருந்தன. இதனால்தான் பொம்பளைங்க கடைக்கு போனால் வர மனசே இல்லை போல. வாங்க முடியாட்டின்னாலும் ஒவ்வொரு புடவையையும் கண்ணால் பாக்குறதிலேயே இவங்களுக்கு எவ்வளவு சந்தோசம்.

 

“என்ன தம்பி நான்தான் இங்க வாங்காதிங்கன்னு சொன்னேனே” என்று பக்கத்திலிருந்து குரல் வரவும்தான் வாசலில் பெரியவர் சொல்லி அனுப்பியது  மறுபடியும் நினைவு வந்தது.

 

“இல்லைங்க இந்த மாதிரி புடவைதான் என் மாமா பொண்ணு கேட்டுச்சு. அதுதான் வேற எங்கேயும் கிடைக்குமான்னு தெரியல…” என்றான் அரைப் புன்னகையோடு.

 

“முறைப் பொண்ணுக்கு வாங்கிட்டு போறிங்களாக்கும்”

 

“முதல் புடவையா”

 

“ஆமாங்க”

 

“எவ்வளவு ஆச்சு”

 

“பதினஞ்சாயிரத்து ஐநூறு”

 

“சீப்பா இருக்கே” என்றார் அவர் அசால்ட்டாக

 

“என்னது சீப்பா. மூவாயிரத்துக்கே இதை விட நல்ல பட்டுப் புடவை கிடைக்குது. இது ரொம்ப ஜாஸ்தி”

 

“என்ன தம்பி, முதல் முறையா புடவை எடுக்க வர்றிங்களா”

 

அவ்வளவு வெளிப்படையாகவா தெரிகிறது “ஆமாங்க” என்றான் கூச்சத்தோடு.

 

“அதுதான் விலைவாசி தெரியல”

 

“இந்த விலையே கம்மின்னு சொல்றிங்களா”

 

“பின்ன பட்டுநூலும், ஜரிகையும் என்ன விலை விக்குது. கூலி வேற… அசல் பட்டுன்னா விலை கொடுத்துத்தான் ஆகணும்” என்றவரின் மனைவியும் விரைவில் வந்துவிட

 

“அசல் பட்டுப் புடவை வேணும்னா சொல்லுங்க எனக்குத் தெரிஞ்ச ஒருத்தர் இருக்கார். நெசவு செய்றவர். நியாயமா விலை இருக்கும். அவர்கிட்ட கூட்டிட்டுப் போறேன்”

அவன் யோசிப்பதைப் பார்த்துவிட்டு

“டிசைன் பார்த்து ஆர்டர் பண்ணிட்டு, முன்பணம் கட்டினால் மட்டும் போதும். டிசைன் பொறுத்து அவங்க நெய்ய பதினஞ்சு நாளாவது ஆகும். புடவை வாங்கும்போது முழு பணமும் கட்டிக்கலாம்” என்று நம்பிக்கை தந்தார்.

 

சில வினாடிகள் யோசித்தான் பாரி பின்னர் இவ்வளவு தூரம் வந்தாச்சு அசல் பட்டு எப்படி இருக்குன்னாவது பாக்கலாமே என நினைத்தான் போலிருக்கிறது பெரியவரிடம் தலையாட்டிவிட்டான்.

 

அடுத்த சில நிமிடங்களில் காஞ்சீபுரத்தை ஒட்டியிருந்த அந்த கிராமத்துப் பகுதியில் இருக்கும் ஒரு நெசவாளரின் வீட்டின் முன் அவனது வண்டி நின்றது.

 

வாசலில் சாயத்தின் நனைத்து காயவைத்த பட்டுநூல்களையும், ‘சடக் சடக்’ என்ற தறிகளின் தாளலயத்தையும் அனுபவித்த படியே உள்ளே நுழைந்தான்.

 

அவனை வரவேற்ற ஒரு நபர். “சண்முகம் அனுப்பினாரா… அந்த ரூமில் மாடல் சேலை எல்லாம் இருக்கு பாருங்க. அதில் உங்களுக்குப் பிடிச்சதை எடுத்து வைங்க விலை சொல்றேன்” என்றார்.

 

அங்கு கூட்டம் இருக்கவும் சற்று தாமதித்தான். அதற்குள் ஆண்களின் சம்பாஷணை ஆரம்பித்தது. அவனது விவரங்களைக் கேட்டவர் தன்னைப் பற்றியும் சொன்னார். “இது எங்க பரம்பரை தொழிலுங்க. அப்பா தாத்தா கிட்டேருந்து வந்தது”

 

“அம்மாவோட கூரைப் புடவையே ஆயிரம் ரூபாய்தான்னு சொல்லிருககாங்க. இப்ப பதினஞ்சாயிரம் இருபதாயிரம் புடவை கூட விலை மலிவுன்னு சொல்றாங்களே. ஆனாலும் சேலை ஏன் இவ்வளவு அநியாய விலை விக்குது” என்று அப்பாவியாகக் கேட்டவனிடம்

 

“பட்டு நூல் விலை ஏறிடுச்சு. ஜரிகை வேற குஜராத்லேருந்து வருது தம்பி. ஒரு மார்க்கு ஜரிகை விலை பத்தாயிரத்தைத் தாண்டிருச்சு. ஒரு ஆடம்பரமான சேலை நெய்யக் குறைஞ்சது  அரைக்கிலோ ஜரிகை வேணும். அதைத்தவிர நெசவாளிக்கு ஒரு புடவைக்கு குறைஞ்சது அஞ்சாயிரம் கூலி தரணும்”

 

“அஞ்சாயிரமா?”

 

“ஒரு நெசவாளி ஒரு மாசத்துக்கு மூணு புடவைதான் அதிகபட்சம் நெய்ய முடியும். நடுவில் உடம்பு கிடம்பு சரியில்லைன்னா வருமானமில்லை. பத்து பன்னண்டு மணி நேரம் தறில உக்காந்தா முதுகு கை காலெல்லாம் விட்டுப் போயிரும். அதுக்கு இந்தக் கூலியாவது வேணாமா…

அது தவிர இப்பல்லாம் மெஷின் வந்துடுச்சு. விலையைக் குறைக்க ஜரிகைல தரத்தைக் குறைக்கிறது, காப்பர் உபயோகிக்கிறது, செயற்கை பட்டுன்னு ஆரம்பிச்சுட்டாங்க. முந்தி அளவுக்கு பெருசா வரவேற்பில்லை. இதுனாலேயே நெசவாளிங்க  எல்லாம் வேற வேலை தேடிட்டு போய்ட்டாங்க தம்பி”

 

‘விவசாயம், மீன்பிடி தொழிலைப் போல இதுவும் அரசாங்கம் சீர்செய்ய வேண்டிய ஒரு துறைதான் போலிருக்கு’ என்றவண்ணம் அவர் சொன்ன அறைக்குள் நுழைந்தான்.

 

அந்த சிறிய அறையில் நுழைந்த பொழுது வானவில்லின் வண்ணங்கள் போல அனைத்து நிறங்களிலும் புடவைகள் இறைந்து கிடந்தன. அவற்றை சில பெண்கள் பார்வையிட்டுக் கொண்டிருந்தனர். பாய் ஒன்றை விரித்து ஒருவர் ஒவ்வொரு பட்டுப் புடவையாக ஜரிகை தெரியும் வண்ணம் நேர்த்தியாகப் பிரித்துக் காட்டினார்.

 

சிவப்பு, இளஞ்சிவப்பு, கரும்பச்சை, சந்தனமஞ்சள் என்று பலவண்ணங்களில் பளிச்சென கான்ட்ராஸ்ட் பார்டர் மற்றும் ஸெல்ப் பார்டருடன் இருந்த ஒவ்வொரு சேலையும் மனதைக் கொள்ளை கொண்டன.

 

நெசவாளர்கள் அனைவரின் வாழ்க்கையும்  செம்மை பெற ஆவன செய்வதெல்லாம் இவனால் முடியாத காரியம். அதனால் அவனால் முடிந்த காரியமாக திருமணம் முடிந்ததும் மனைவிக்கு வருடம் ஒரு பட்டுப் புடவையாவது இங்கு வந்து வாங்கித் தர வேண்டும் என்று நினைத்தான்.

 

சே அப்போதும் கூட மனைவி என்றுதான் நினைக்க வருகிறதே தவிர அமுதாவுக்கு என்று நினைக்க முடியவில்லை. ஒருவேளை இருவருக்கும் திருமணம் முடிந்ததும் அப்படி நினைக்க மனம் வரும் போலிருக்கிறது. என்றபடி புடவைகளில் பளிச்சென தன் மனதில் பதியும் ஒன்றைத் தேடத் துவங்கினான்.

 

முதல் பார்வையிலேயே  அவன் மனதைக் கொள்ளை கொண்டது அந்தப் புடவை. அங்கிருந்த அனைத்திலும் அது ஒரு தனித்தன்மையுடன் மிளிர்ந்தது. சூரியன் உதயமாகும் பொழுது தோன்றும் காலை வேளையில் ஆரஞ்சும் மஞ்சளும் கலந்து ஒரு நிறம் தகிக்குமே அந்த நிறம். சூரிய மஞ்சள்  பச்சைப் புல்வெளியில் பட்டால் எப்படி இருக்கும் அதே போன்றதொரு பச்சை நிறத்தில் பார்டர். முந்தானை இரண்டிலும் கலக்காமல் அவனைப் பொறுத்தவரை வித்யாசமாக மெஜந்தா நிறத்தில் இருந்தது. ஆனாலும் அது வெகு பொருத்தமாக இருந்தது.

 

அது புடவையால் மட்டுமில்லை அது ஒய்யாரமாகத் தழுவியிருந்த  பெண்ணின் உடல்வாகால் கூட என்பதை அவனது மனம் சந்தோஷமாக ஒத்துக் கொண்டது.

 

மின்விளக்குகளின் வெளிச்சத்தில்  அந்தப் புடவையின் மஞ்சளும், சிவப்பும்  அந்தப் பெண்ணின் கன்னத்தில் பட்டுப் பிரதிபலிப்பதைப் போன்றதொரு தோற்றத்தைத் தந்தது.

 

அவனது கண்கள் அந்த அழகைப் படம் பிடித்துக் கொள்ள எண்ணி முடிந்த அளவுக்கு பெரிதாக விரிந்தது. “பிரமாதம்” என்று அவனையறியாமலேயே அவன் வாய் முணுமுணுத்தது.

6 thoughts on “இனி எந்தன் உயிரும் உனதே – 4”

  1. Wow mam…handloom weavers pathi nenga sonnathu appadiye 100% true….nangalum silk saree weavers family than…handlooms down anathala…antha business vittu vanthachi….Nice epi…

  2. ஹை… ஐயா கவிந்திட்டாரே… எங்களின் கலாசாரம் சொல்லும் தொழிலான நெசவின் இன்றைய நிலை மனம் வருந்தத் தக்கது தான் . அழகாக சொல்லி இருக்கிறீர்கள் அக்கா. அடுத்த அத்தியாயத்திற்கு ஆவலோடு காத்திருக்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஒகே என் கள்வனின் மடியில் – 1ஒகே என் கள்வனின் மடியில் – 1

ஹாய் பிரெண்ட்ஸ், எப்படி இருக்கிங்க? உங்களைப் பார்க்க ஒரு சின்ன காதல் ஸ்டோரியுடன் வந்துட்டேன். இரண்டு டீசர் வழியாக உங்களுக்கு அறிமுகமாக வம்சிக்கும் கேட்டுக்கும் நீங்க அளித்த வரவேற்புக்கு நன்றி. இந்த கதையை லாஜிக் எல்லாம் பாக்காம ஜாலியா படிங்க. படிச்சுட்டு

நிலவு ஒரு பெண்ணாகி – 3நிலவு ஒரு பெண்ணாகி – 3

ஹாய் பிரெண்ட்ஸ், போன பதிவுக்கு கருத்து தெரிவித்த, லைக்ஸ் போட்ட அனைவருக்கும் என் நன்றிகள். மூன்றாவது பதிவைப் படித்துவிட்டு உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். நிலவு ஒரு பெண்ணாகி – 3 அன்புடன், தமிழ் மதுரா Premium WordPress Themes DownloadPremium

மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய்- 35மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய்- 35

35 இரண்டு நாட்களுக்கு முன்பே அதிகாலை நேரத்தில், யார் கண்ணிலும் படாமல், மீனாட்சியை வணங்கி விட்டு, தன் தந்தையிடமும், கமலம் மற்றும் மூர்த்தியிடமும் ஆசிர்வாதம் வாங்கி வந்திருந்தாள் சுஜி. தனக்கு உபகார சம்பளம் வழங்கி, படிப்பதற்கு உதவி செய்த தொண்டு நிறுவனத்திற்கு