Tamil Madhura ஆடியோ நாவல் (Audio Novels),தமிழ் மதுராவின் 'கடவுள் அமைத்த மேடை' தமிழ் மதுராவின் ‘கடவுள் அமைத்த மேடை – 17’ (நிறைவுப் பகுதி)

தமிழ் மதுராவின் ‘கடவுள் அமைத்த மேடை – 17’ (நிறைவுப் பகுதி)

குயின்ஸ் நெக்லஸ்’ என்று செல்லமாக அழைக்கப்படும் மும்பையின் மரைன் டிரைவ். நீண்ட நாட்களுக்குப் பின் ஒரு ஞாயிறு மாலை தன் தாய் பார்க்கவியை அழைத்து வந்திருந்தான் சுமன்.

 

இரண்டாம் திருமணத்துக்குப் பின் அவன் வாழ்வில் ஏராளமான மாற்றங்கள். அதில் ஒன்று சுயமாய் சிந்திக்கப் பழகியிருந்தான். தவறு ஸ்வப்னா பழக்கியிருந்தாள்.

 

“ஒரு மனைவிக்கு கணவன் மேல நம்பிக்கை இருந்தால்தான் வாழ்க்கை சந்தோஷமா இருக்கும். ஆனா உன்னை எப்படி நம்புறது சுமன். பத்து வருஷமா விரும்பின என்னை ஒரே நாள்ல கழட்டி விட்டுட்டு உன் தங்கை கை காட்டின ஒருத்திக்குத் தாலி கட்டின. அப்படி தாலி கட்டினவளை கடைசி ஆசைன்னு  தங்கை சொன்ன ஒரு வார்த்தைக்குக் கட்டுப்பட்டு டைவர்ஸ் செய்துட்டு என்னைக் கல்யாணம் செய்துட்ட. மொத்தத்தில் நீ அங்கிதா, அம்மா, அப்பா, நான் இப்படி யாராவது ஒருத்தரை சார்ந்தே இருக்க. அதனால் அவங்களுக்கு சாதகமாவே உன் முடிவுகளை எடுக்குற. இப்படி கண்மூடித்தனமா அடுத்தவங்க சொல்றதைக் கேட்கலாமா? ஒரு காரியத்தை செய்றதுக்கு முன்ன நீயே உன்னைக் கேட்டுப்பழகு…

 

கடைசி ஆசை டிராமா போடுறது அங்கிதாவுக்குப்  புதுசா என்ன. நம்ம கல்யாணம் செய்துக்க ட்ரை பண்ணும்போது இதே காரணத்தை சொல்லித்தானே கலைச்சா. அதை நீ யோசிச்சுப் பார்த்தியா. இதை நான் முன்னாடியே உன்கிட்ட சொல்லிருக்க முடியும். ஆனா கேக்குற நிலைமைல நீயும் இல்லை. உன்னை இன்னொரு முறை இழக்கும் தைரியம் எனக்கும் இல்லை.

 

நம்பிக்கை இல்லாம ஏன் என்னைக் கல்யாணம் செய்துட்டேன்னு நீ இப்ப என்னை எதிர்த்துக் கேள்வி கேட்கணும். நான் அதுக்கு உன் மேல இருந்த காதல்ன்னு பதில் சொல்வேன்.

 

யெஸ் சுமன். உன் மேல அவ்வளவு காதலை வளர்த்திருந்தேன். அங்கிதா சம்மதமில்லாம என்னைக் கல்யாணம் செய்துக்க மாட்டேன்னு தெரியும். உன் தங்கை காலைப் பிடிச்சுக் கெஞ்சினேன். அந்தப் பாவிக்கு மனசே இறங்கல…. ”

 

அதற்கு மேல் ஸ்வப்னா பேசுவதைக் கேட்க விரும்பாமல் அங்கிருந்து அகன்றான் சுமன்.கீதாவின் மறுபக்கத்தை எதிர்கொள்ளும் பக்குவம் வர அவனுக்கு சில ஆண்டுகள் பிடித்தது. அவன் தாய்க்கோ என்றுமே அதை ஜீரணிக்க முடியாது.

 

அவன் மகன்  வீட்டில் தன்னுடன் விளையாட இன்னொரு பாப்பா வேண்டும் என்று மழலையில் கேட்டதும்தான்  வைஷாலியின் நினைவு வந்தது.

 

ஸ்வப்னா, அவனது தங்கை கீதா எவ்வாறெல்லாம்  விளையாடி தங்கள் காதலைக் கலைத்துத் திருமணத்தைத் தடுத்தாள் என்று ஆதாரத்தோடு விளக்கியபோது வேதனையோடு கேட்டான். தன் தங்கைக்கு இப்படி ஒரு மிருக குணம் இருந்ததை அவனால் இன்னமும் நம்ப முடியவில்லை.

 

அன்று வைஷாலி நான் அந்த மாதிரி தப்பு அர்த்தத்தில் சொல்லல என்று கதறினாளே அது உண்மையாக இருக்குமோ என்ற ரீதியில் சிந்தனை ஓடியது. அவளுக்குக் குழந்தை பிறந்ததே. அது எங்கே? மூன்று வருடங்களுக்கு முன் இனி ஜீவனாம்சம் வேண்டாம் என்று எழுத்துப் பூர்வமாகத் தெரிவித்தாளே என்னவாயிருக்கும் என்பது போன்ற  கேள்விகள் மண்டையைக் குடைந்து  அமைதியைக் கெடுத்தது.

 

ஒரு வேளை அங்கிதா மேல் தவறிருந்தால் வைஷாலி தப்பே செய்யாமல் கஷ்டப்பட்டிருப்பாளே. அவன் மனதில் இருந்த சாத்தான் ஆசைப்பட்ட  ஸ்வப்னாவை அடைய வைஷாலியின் தவறை பூதாகரமாக்கியதோ…. அவள் விஷயத்தில் சுயநலமாக நடந்து கொண்டோமோ என்று மனசாட்சி கேள்வி கேட்க ஆரம்பித்தது.

 

அதனாலேயே இப்போதெல்லாம் தனிமையில் இருப்பதைத் தடுக்க நினைக்கிறான். அவனது யோசனையில் குறுக்கிட்டது அவனது தாயின் குரல்.

 

“ஏண்டா, எனக்கு பேரப்பிள்ளையை வளர்க்கத் தெரியாதா? உன்னையும் உன் தங்கையையும் நல்லா வளர்க்கல… உன் பொண்டாட்டி ஸ்வப்னா பிள்ளையை அவ அம்மா வீட்டில் விட்டு வளர்க்குறா? நீயே சொல்லு” கண்ணில் பெருகிய கண்ணீரைத் துடைத்தார்.

 

“நம்ம கீதாவுக்கு ரொம்ப செல்லம் கொடுத்து பிடிவாதமா வளர்த்துட்டோமாம். குழந்தையை கண்டிக்க வேண்டிய விஷயத்தில் கண்டிச்சு வளர்க்கனும்னு சொல்றா. அது உண்மைதானேம்மா”

 

“என்னவோ போடா நீ உன் பொண்டாட்டிக்கே  சப்போர்ட் பண்ணு”

 

சிறுவயதில் மரைன் டிரைவ் வரும்போது அங்கிருக்கும் சிறிய கடையில் திம்பண்டம் வாங்கி உண்ணுவார்கள். சில வருடங்களாய் எங்கும் செல்ல முடிவதில்லை. இன்று  தாயை சமாதனப் படுத்த நேரம் ஒதுக்கி, ஸ்வப்னாவுக்குத் தெரியாமல் அவரை  அழைத்து வந்திருந்தான்.

 

“இந்த கடை பானிபூரி உனக்குப் பிடிக்குமே. நில்லு ஆளுக்கு ஒரு ப்ளேட் வாங்கிட்டு வரேன்”

 

“ரெண்டு ப்ளேட் பானிபூரி”

 

பில்லிங் கவுண்டரில் இருந்தவனை எங்கோ பார்த்த நினைவு சுமனுக்கு. ஆனால் அவனோ சுமனை வெறுப்புடன் பார்த்தவாறு பணத்தை வாங்கிக் கொண்டான்.

 

“பெரியப்பா… எனக்கு குட்டி பூரி” என்று அங்கு ஏஞ்சல் போல வந்த குட்டிப் பெண்ணின் குரல் கட்டி இழுத்தது சுமனை. இந்த மனிதனுக்கு இவ்வளவு அழகான குழந்தை சொந்தமா… என்று வியந்தபடி நின்றான்.

 

“ஹாய் ஏஞ்சல்” என்று அந்தக் குழந்தையின் கன்னத்தைத் தட்டினான்.

 

“ஹேய் குட்டி, அப்பா வரதுக்குள்ள ஓடி வந்துட்டியா. உன்னை… “ அவளைத் தூக்கிக் கிச்சு கிச்சு மூட்டினான் அவள் தகப்பன். அழகான மகள், பாசமான தந்தை என்று மனதில் நினைத்தான் சுமன்.

“பியூட்டிபுல் பேபி” என்றான் தந்தையிடம் பாராட்டும் விதமாக.

 

“எங்க அப்பா மாதிரியே அழகா இருக்கேன்” என்றாள் அந்த அழகுப் பெண்.

 

தகப்பனின் முகத்தை உற்று நோக்கிவிட்டு “மீசைதான் இல்லை.. இல்லையாப்பா” என்றாள்.

 

“நீ உங்க அம்மா மாதிரி அழகு” என்றான் அவன்.

 

“என்னடா இவ்வளவு நேரம்” என்று கேட்டபடி கடைக்கு வந்து சேர்ந்தார் பார்க்கவி. கடைக்கு சொந்தக்காரனைப் பார்த்ததும் அவருக்கு ஒரே அதிர்ச்சி. ‘இவன் அந்த வைஷாலியின் உறவினன் அல்லவா’ அவரது பார்வையை கண்ட கடைக்காரன்.

 

“ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி இந்தக் கடையை வாங்கிட்டேன்” என்றான் தேவா பார்கவியிடம் .

 

அவனை  நெருங்கிய குழந்தையின் அப்பா “தேவா, என் பொண்ணோட பேவரைட் குட்டி பூரி தாங்க…. அப்பறம் ரெண்டு ப்ளேட் பாவ் பாஜி”

 

“பெரியப்பா, அப்பாவுக்கு காரம் இல்லாம தாங்க” என்றாள் கண்டிப்பாய்.

“உத்தரவு மகாராணி” என்று கிண்டலுடன் சொன்னான் தேவா.

 

சுமனுக்குத் தன்னை அடையாளம் தெரிந்துவிட்டது. அடுத்து என்ன நடக்குமோ என்ற பதைபதைப்பு அவனுக்குள். வைஷாலிக்கு விடிவு பிறந்து அவள் பழைய வாழ்க்கையை மறந்து வாழ்ந்து வருகிறாள். சிவா குடும்பத்துடன் வந்திருக்கும் வேளையிலா சுமன் வரவேண்டும். இவனும் வைஷாலியும் ஒருவரை ஒருவர் பார்க்கக் கூடாது என்றெண்ணியபடி சிவாவுக்கு அவசர அவசரமாய் பானிபூரியைக் கொடுத்தான்.

 

“சிவா, நீங்க கிளம்புங்க, நான் பாவ் பாஜியை அங்கேயே கொண்டு வந்து தரேன்” என்று அனுப்பினான்.

 

அவர்கள் சென்றனர். ஆனால் அந்தக் குட்டிப் பெண்ணைப் பார்த்தவாறே பார்கவி நின்றார். அவர் பார்வை போகும் திசையைக் கண்டு

 

“அழகான குழந்தை இல்லம்மா… அவ அப்பாவை எப்படி கவனிச்சுக்குறா தெரியுமா… இவங்களை மாதிரி மிடில் கிளாஸ் ஆளுங்களுக்கு இருக்கும் சந்தோஷத்தில் பாதி கூட நமக்கு இல்லை” என்றான் பெருமூச்சு விட்டபடி.

 

பார்க்கவி சுமன் பேசியதைக் கண்டு கொள்ளவே இல்லை. “சுமன் அந்த குழந்தையைப் பார்த்தா சின்ன வயசு அங்கிதாவை பாக்குறமாதிரியே இருக்குடா. அவளை நான் மறுபடியும் பார்த்தே ஆகணும்” என்று பிடிவாதமாய் சொன்னார்.

 

அவர்களை எங்கு தேடியும் காண முடியவில்லை.

 

“அம்மா அந்த தேவாவுக்கு தெரிஞ்சவங்களா இருப்பான் போலிருக்கு. அவன்கிட்ட கேக்கலாம்”

 

அவர்கள் அங்கு சென்றபோது அந்த குடும்பத்துடன் பேசிக் கொண்டிருந்தான் தேவா.

 

“என்ன செய்ய சிவா சார். சோனா செஞ்ச ஆடம்பர செலவால செந்தில்  வீட்டையே விக்க வேண்டியதாயிடுச்சு. இப்ப தாராவில எங்க பிளாட்டுக்கு பக்கத்து பிளாட்டில் வாடகைக்குக் குடியிருக்காங்க”

 

“அத்தையாவது  எங்க கூட வந்து தங்கலாமே தேவா. அவங்ககிட்ட சொல்லுங்களேன்”

 

“அத்தைக்கு பேரப்பிள்ளைகளை சோனாகிட்ட விட பயம். பேசாம சாலியோட டெலிவரிக்கு வரப்ப ஒரு ஆறு மாசம் பிடிச்சு வச்சுக்கோ… என்ன நான் சொல்றது” என்றான்.

சிவாவிடம் தேவா பேச, அவனது கைகளில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் தீபிகா. அவனருகே சற்று பூசினார்போன்ற உடலுடன், அழகான மஞ்சள் நிலவு முகத்துடன், பொங்கிப் பூரித்த மகிழ்வுடனும் மேடிட்ட வயிறுடன் நின்றாள் வைஷாலி.

 

“அப்ப நாங்க கிளம்புறோம் தேவா” என்று கிளம்பினான் சிவா. அவர்கள் சுமனை கவனிக்கவில்லை.

 

“டாக்ஸி வேண்டாம். வீட்டுக்கு ட்ரைன்ல போலாம் சிவா”

 

“மனைவி சொல்லே மந்திரம். ட்ரைன்லயே போலாம் வா” என்றபடி நடந்தார்கள்.

 

“வைஷாலி” முணுமுணுத்தாள் பார்க்கவி “அப்ப அந்தக் குழந்தை…. “ வார்த்தைகள் வராமல் திணறினாள்.

 

கணவன் மனைவி இருவரும் பேசியபடி நடக்க, வேடிக்கை பார்த்தபடி வந்த தீபிகா, சுமனைக் கண்டதும் சிரித்தாள்.

 

“பை அங்கிள்” என்று டாட்டா காட்டினாள்.

‘அம்மா அந்த அங்கிள்தான் என்னை கொஞ்சினார்” என்று தாயிடம் காட்டித் தந்தாள். சுமனைப் பார்த்த வைஷாலி அதிர்ந்து நின்றாள். ஒரு சில வினாடிகளில் சுதாரித்துக் கொண்டவள்.

 

“வாங்க சிவா, நம்ம வீட்டுக்குப் போலாம்” சுமனை ஒரு வழிப்போக்கனைப் பார்ப்பது போல வெறித்துவிட்டுக் கணவனுடன் நடந்தாள்.

 

சுமன் எந்தக் குழந்தையை பார்க்கக் கூட மறுத்தானோ அந்தக் குழந்தை யாரோ ஒருவனை தகப்பனாக ஏற்றுக் கொண்டு அவனை ஒதுக்கி வைத்துவிட்டது. இதைவிட அவனுக்கு வேறு தண்டனை இருக்கிறதா? கண்களில் வலியுடன் நின்றான்.

 

தேவா எது நடக்கக் கூடாது என்று நினைத்தானோ அது நடந்தே விட்டது. கடவுள் நடத்தும் நாடகத்தைக் கண் முன் பார்க்கும் சாட்சியானான்.

 

சிவா, மனைவி மகளை ஏற்றிவிட்டு பக்கத்திலிருந்த பெரியவர் ஏற உதவி புரிவதற்குள் ட்ரைன் கிளம்பிவிட்டது. வேறுவழியில்லாமல் நகரத்தொடங்கியிருந்த இரயிலில்  பக்கத்து கம்பார்ட்மென்ட்டில்  ஏறினான் சிவா. அடுத்த ஸ்டாப்பில் இறங்கி வைஷாலி ஏறிய பெட்டிக்கு சென்றடைவதற்குள் கண்கள் கலங்கி கிட்டத்தட்ட அழுதிருந்தாள் அவனது ஷாலு.

 

“அழாதம்மா, அப்பா வந்துடுவார்” சமாதனப் படுத்தினாள் தீபிகா.

 

“என் பொண்ணுக்கு இருக்குற நம்பிக்கை கூட என் மேல உனக்கில்லையே” என்ற சிவாவின் குரல் கேட்டு இருவரும் ஓடிப் போய் அவனிடம் நின்று கொண்டனர்.

 

“ஏன் ஓடி வந்து ஏறுற?” வைஷாலிக்குக் கோவம் வந்தால் மரியாதை குறைந்துவிடும்.

 

“மும்பைக்கர்ம்மா… இப்படித்தான் ஓடி வந்து ஏறணும்”

 

“ஐய்யோடா… யாரோ மும்பை வேண்டாம். சாப்பாடு நல்லால்ல. ஊர் நல்லால்ல. எங்க பாரு கச கசன்னு கூட்டம். சீக்கிரம்  இந்த ஊரை விட்டு போய்டுவேன்பான்னு ரங்கா அண்ணன் கிட்ட சொன்னாங்களாம்”

 

“இந்த மும்பைலதான் என் மேல உயிரையே வச்சிருக்கும் பொண்ணு, அழகான மனைவி, அவ வயத்தில் வளரும் குட்டி பாப்பா, நிறைவான வாழ்க்கை எல்லாம் கிடைச்சது. இனிமே நம்ம ஜாகை இங்கதான்” என்றான்.

 

கூட்டம் குறைந்திருந்ததால் மூவரும் அமர்ந்து கொண்டனர். சிவா மடியில் தீபிகா உறங்க ஆரம்பித்திருக்க, வைஷாலி அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.

 

“இன்னைக்கு பீச்ல பார்த்த ஆள் சுமன். என்னோட…”

 

நிறுத்தும்படி ஜாடை காட்டியவன் “தெரியும். உங்க அம்மாவை மருத்துவமனைல சேர்த்தப்ப காமிச்சிருக்க”

 

“உங்களுக்கு அடையாளம் தெரிஞ்சதா”

 

தலையாட்டினான். சிறிது நேரம் கழித்து சொன்னான். “தீபாவை என் பொண்ணுன்னு நினைச்சுட்டு கொஞ்சினார். அவருக்கு உண்மை தெரிஞ்சா வீணா மனவருத்தம். அதனாலதான் உங்களை சீக்கிரம் கிளப்பிக் கூட்டிட்டு வந்தேன். ஆனால் பச்… பாப்பா சுமனை அங்கிள்ன்னு கூப்பிட்டதுதான்  கொஞ்சம் உறுத்தலா இருக்கு”

 

“எனக்கு இல்லை சிவா… சுமன் பயாலஜிக்கல் பாதரா இருக்கலாம். ஆனால் தீபிகாவைப் பத்தித் தெரிஞ்சுக்க அவர் நினைச்சதுமில்லை அவ மேல அக்கறைப் பட்டதுமில்லை. அவளுக்கு ஒரு அடையாளமும், தகப்பனோட அன்பும், பாதுகாப்பும்  தந்தது நீங்கதான். அப்ப நீங்கதானே தகப்பனா இருக்க முடியும்”

 

சொந்தம் பந்தம் என்பது எல்லாம் சொல்லித்தெரிந்த முறைதானே

சொர்க்கம் நரகம் என்பது எல்லாம் சூழ்நிலை கொடுத்த நிறம்தானே

 

வைஷாலியின் வாதத்துக்கு எதிர்வாதம் செய்ய சிவபாலனிடம் வார்த்தைகளில்லை. சற்று நேரம் பொறுத்து சொன்னான்.

 

“உனக்கு சுமன் குடும்பத்தில் செஞ்ச துரோகத்துக்கு இதைவிடப் பெரிய தண்டனை இருக்க முடியாது”

 

“சுமனை விடுங்க, எங்க அண்ணி சோனாவுக்கும் சரியான தண்டனை கிடைச்சிருக்குன்னு அம்மா சொன்னாங்க. இவங்க எல்லாரைவிடவும் பயங்கரமான தண்டனை நர்த்தனாவுக்குத்தான்”

 

புரியாமல் கண்களால் வினவினான் சிவா.

 

“அவ கையில் ஒரு விலை மதிப்பில்லாத புதையல்  கிடைச்சது. அதை தூக்கி எறிஞ்சுட்டா. அந்தப் புதையலை நான் சந்தோஷமா அனுபவிச்சுட்டு இருக்கேன். ஆனால் அவளோ இன்னமும் கை விட்டுப்  போன பொருளின் மதிப்பு தெரியாம இருக்கா”

 

“விடு ஷாலு.. அதைப் பத்திப் பேசாதே. உடன்பாடு இல்லாதவங்களோட வாழும் வாழ்க்கை புத்துக்குள்ள பாம்புடன் இருப்பது போலக் கொடுமையானதுன்னு நம்ம வள்ளுவரே சொல்லிருக்கார். அந்த வகையில் நம்ம ரெண்டு பேருக்கும் விடுதலைதான்.” என்று அவளை அடக்கிவிட்டான்.

‘ஒரு நாள் அவ குடும்பம் அவளை சுயநலமா பயன்படுத்திட்டது தெரிய வரும். அழகான கூட்டைவிட்டு வெளியேறி, வல்லூறுகளிடம் மாட்டியது தெரியவரும். அவ திருந்தினாலும் அவள் இழந்தது திரும்பக் கிடைக்காது’ நினைத்துப் பெருமூச்சு விட்டாள்.

 

“சுமனை தெரிஞ்சும் எப்படி வெளில காமிச்சுக்காம இருந்திங்க”

 

“நர்த்தனாவை நேரில் பார்த்தாலும் என் ரியாக்ஷன் இப்படித்தான் இருக்கும்”

 

“உங்களால் எப்படி முடியுது சிவா?”

 

“சிம்பிள் ஷாலு…. என்னைப் பொறுத்தவரை அவங்க மூணாவது மனுஷங்க. என் வாழ்க்கையில் வர அவங்களுக்கு அனுமதி இல்லை. கடவுள் ஒவ்வொரு ஜோடிக்கும் பார்த்துப் பார்த்து மேடை அமைச்சிருக்கான். அந்த ஜோடிகளால் மட்டும்தான் மனசொப்பி வாழ முடியும். மனுஷங்க கர்மவினையால் யாரை யார் கூட வேணும்னாலும் ஜோடி சேர்க்கலாம். ஆனால் ப்ராப்தம் இருந்தால்தான் அவங்க கடைசி வரை ஒண்ணா இருக்க முடியும்.

 

நீ ரெண்டாவது வருடம் கல்லூரில படிக்குபோதே உன்னைக் கல்யாணம் செய்துக்க விரும்பினேன். அப்ப சூழ்நிலை சரிவரல. நம்ம ரெண்டு பேரோட வாழ்க்கை எப்படி எப்படியோ பயணிச்சு மறுபடியும் ஒண்ணு சேர்ந்துட்டோம். அப்ப என்ன அர்த்தம்? இதுதான் நமக்கான வாழ்க்கை. நமக்குக் கடவுள் அமைத்த மேடை இதுதான். அடிச்சு பிடிச்சு இங்க வந்துட்டோம்.

 

என் வாழ்க்கையே நிறைவா சந்தோஷமா இருக்கு. இந்த சந்தோஷத்தில் பழைய நினைவுகளை சுமந்து எதுக்குக் கவலைப் படணும். போகி அன்னைக்கு குப்பையை எரிப்போமே அதுபோல நமக்குப் பிடிக்காத விஷயங்களை மனசிலிருந்து கழிச்சுட்டு,  நிகழ்காலத்தோட ஒவ்வொரு துளியையும் அனுபவிப்போம்”

 

“நிச்சயம் சிவா. நம்ம குடும்பத்தை பார்க்கவே எனக்கு நேரம் பத்தல. இதில் எதுக்கு மத்தவங்களைப் பத்தி சிந்திச்சு நம்மையும் வருத்திக்கணும்” அவளது பூஞ்சிரிப்பை ரசித்தவாறு அவள் முகத்தில் மறுபடியும் மகிழ்ச்சியைக் கொண்டு வந்த மனநிறைவோடு,  வைஷாலியருகே நெருங்கி அமர்ந்தான். தன் காதலைக் கண்டெடுத்த திருப்தி அவன் முகத்தில் தெரிந்தது.

 

கோடையில வெயில் போல என்னுயிரே நீயிருக்க

வாடையிலும் அனலாக வருவேன் உன்கூட

காலையிளங்கதிராக கண்ணருகே நீயிருக்க

மாலைவரும் நிலவாகித் தொடுவேன் காத்தோட

போன ஜென்மத்துல செஞ்ச தவம் இதுவோ

இன்னும் கோடி ஜென்மம் கூட வரும் உறவோ.

 

ஆம் கடவுள் அமைத்த மேடை என்றுமே தப்பாகிப் போனதில்லை. தடக் தடக் என அந்த வார்த்தைகளை ஆமோதித்த ரயிலின் ஓசையை அனுபவித்தபடியே அந்த மும்பைக்கரின் குடும்பம் பயணித்தது.

 சுபம் 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் ‘ஒகே என் கள்வனின் மடியில் – 14’தமிழ் மதுராவின் ‘ஒகே என் கள்வனின் மடியில் – 14’

சிலநாட்களில் உறவினர்கள் அனைவரும் சென்றுவிட, கர்ப்பகாலத்திலும் விடுப்பு எடுக்காமல் தன்னை தினமும் பார்க்க வரும் கல்பனாவை வர வேண்டாம் என்று சொல்லிவிட்டாள் காதம்பரி. அண்ணனோ தனது சோகத்தை ஆற்றிக் கொள்ள காதலியின் வீட்டில் தங்கிவிட்டான்.   வேலைகாரி வேறு “பாப்பா ரெண்டு

தமிழ் மதுராவின் ‘ஒகே என் கள்வனின் மடியில் – 3’தமிழ் மதுராவின் ‘ஒகே என் கள்வனின் மடியில் – 3’

அந்தக் கருநீல மீட்டிங் சூட் கேட்டின் உடலைக் கச்சிதமாய் கவ்வியிருந்தது. மிகச் சிறிய வைரத் தோடு, அதே டிசைனில் சிறிய பென்டன்ட் மற்றும் கையில் ரோலக்ஸ் வாட்ச். பார்ப்பவர் கண்ணைக் குத்துவது  போன்ற  லிப்ஸ்டிக்கும் முகப்பூச்சும் அவளுக்கு அறவே பிடிக்காது என்பதால்