Tamil Madhura ஓகே என் கள்வனின் மடியில்,தமிழ் மதுரா,தொடர்கள் தமிழ் மதுராவின் ‘ஒகே என் கள்வனின் மடியில் – 2’

தமிழ் மதுராவின் ‘ஒகே என் கள்வனின் மடியில் – 2’

ந்தேரி பகுதியில் இருந்த பணக்கார அப்பார்ட்மென்ட் காம்ப்ளெக்ஸ். வீடுகளின் விலையே அங்கு சில கோடிகளில்தான் ஆரம்பிக்கும். அதைத்தவிர மெயின்டனன்ஸ், இருவத்திநான்கு மணி நேரமும் திறந்திருக்கும் பிரத்யோக ஜிம்மிற்கு என்று வருடத்துக்கு சில லட்சங்கள் செலவாகும்.

விடியற்காலை ஐந்து மணி, அதிகாலை வேளையில் ஜிம்மின்  த்ரெட்மில்லில் ‘தட் தட்’ என்ற ட்ரைனரின் சப்தம் ஒலித்தது. ரன்னிங் டைட்சும் டாப்ஸ்ம் அணிந்த கேட் ஓடிக் கொண்டிருந்தாள். இரவு முழுவதும் அவளால் தூங்க முடியவில்லை. அவள் மனம் முழுவதும் ரூபி நெட்வொர்க் மீட்டிங் என்ற எண்ணமே நிறைந்திருந்தது.

ஆறுமணிக்கு வியர்வையில் தொப்பலாய் நனைந்த உடலை பூந்துவலையால் ஒற்றி எடுத்தாள். வெளிக்காற்றை சற்று சுவாசித்தபடியே வீட்டுக்கு சென்றாள். சாவியால் கதவைத் திறந்தவள் காற்றில் கலந்து வரவேற்ற  டிகாஷனின் நறுமணத்தை உள்ளிழுத்து அனுபவித்தாள். பூட்டியிருந்த வீட்டைத் திறந்து காப்பி போடும் ஆள்

“கல்பனா… “

“காப்பி வாசத்தை வச்சுக் கண்டுபிடிசுட்டியா”

“எஸ்…”

“நேத்து லேட்டாத்தானே வீட்டுக்கு போன. இத்தனை காலைல வந்துட்டியே”

“நான் நல்லா தூங்கி ரெஸ்ட் எடுத்துட்டு வந்தேன். நீ தூங்கியே இருக்க மாட்டியே”

பதில் சொல்லாது புன்னகைத்தாள்.

“குளிச்சுட்டு வா…. பிரேக்பாஸ்ட் செய்றேன்”

“கல்பனா… காபிக்கு தாங்க்ஸ் ஆனால் நான்தான் ப்ரேக்பாஸ்ட் செய்வேன்”

“சரி… அதுக்குள்ளே நீ சொன்ன திருத்தங்களை பவர் பாய்ண்டில் செய்துடுறேன்”

“நானே திருத்தி உனக்கு மெயில் பண்ணிட்டேன். நீ ஒரு தடவை சரி பாத்துடு” என்றபடி குளியலறையில் புகுந்தாள்.

தலையில் மிதமான சூட்டில் வெந்நீர் விழ திங்கழன்று எப்படி பேச ஆரம்பிக்க வேண்டும் என்று மனதுக்குள் ஒத்திகை பார்த்தாள்.

“பலம், மானிடரை கவரும் விஷயம். அது காராய் இருக்கட்டும் இல்லை மனிதனாய் இருக்கட்டும்…. அழகு முதலில் ஈர்த்தாலும் பலமே கடைசி வரை நிலைத்திருக்க செய்யும். உறுதியான காரை நாம் வாங்க நினைப்பதும் பலசாலியான ஆண்மகனை மனது விரும்புவதற்கும் இந்த விஷயமே காரணம். ரூபி நெட்வொர்க்கில் சிக்னலின் பலத்தை நம்பியே களமிறங்கி இருக்கிறோம். முயற்சித்துப் பாருங்கள் பின்னர் எந்த தூண்டுதலும் இல்லாமலேயே காதலிக்க ஆரம்பித்து விடுவீர்கள்”

சரியாக வாக்கியங்கள் அமைந்தது சந்தோஷமாக இருந்தது சீட்டியடித்தபடி குளித்தாள்.

வெளியே வந்தபோது கல்பனா வேலையில் இறங்கி இருந்தாள்.

“கேட் உரையாடல் பகுதி கச்சிதமா அமைஞ்சுடுச்சு போலிருக்கு”

“நீ இருக்கன்னு மறந்துட்டேன். ரொம்ப சத்தமா பேசிட்டேனோ”

“பீல் ப்ரீ டியர். உன்னோட ரெகுலர் பழக்கவழக்கத்தில் எதையும் மாதிக்காதே”

“உனக்கே தெரியுமே… முதன் முதலில் மீட்டிங்ல பேசினப்ப பயத்தில் நாக்கு ஒட்டிட்டு தொண்டையிலிருந்து காத்துத்தான் வந்தது. ஓ காட்… எவ்வளவு எம்ப்ராசிங் மொமன்ட். அதை நினைச்சாலே சுவத்தில் முட்டிக்கணும் போலிருக்கும்”

“கேட் அப்ப நீ சின்ன பொண்ணு. காலேஜ் முடிச்சுட்டு வந்து புதுசு. உங்க அப்பாவோட கம்பனி விக்க மாட்டேன்னு உறுதியோட குருவி தலைல பனங்காய் சுமந்த மாதிரி சுமந்துட்டு இருந்த”

“ஓகே. அந்த டாபிக்கை விடு” பெற்றோர் பற்றிய பேச்சு வந்தாலே கேட் அதைத் தொடர விடுவதில்லை. கல்லூரியில் படிக்கும்போதே விபத்தில் மறைந்து விட்ட  பெற்றோரையும். காதலித்த பெண்ணைக் கல்யாணம் செய்து வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்ட தன் சுயநல அண்ணனையும் அவள் நினைத்து என்னாகப் போகிறது. அதற்கு உருப்படியாய் ரூபி நெட்வொர்க் பற்றி ஆர்டிகல் படிக்கலாம். .

சமையலறையில் நுழைந்து பவுலில் முட்டைகளை உடைத்து ஊற்றி கலக்க ஆரம்பித்தாள்  கேட்.

“கல்பனா… பிரட் டோஸ்ட், சீஸ் ஆம்ப்லட் செய்யப் போறேன் ஓகேயா”

“ஓகே. நான் ரெண்டு பேருக்கும் காப்பி போடுறேன்”

காப்பி மேக்கரில் பொடியைப் போட்டு ஆன் செய்தாள் கல்பனா.

“அந்த முதல் மீட்டிங்கில் ஜான் மட்டும் என் நிலைமையை பார்த்து சுதாரிச்சுட்டு எடுத்து கொடுக்கலைன்னா கேலிக் கூத்தாயிருக்கும்”

“போட்டி கம்பனி ஜகா வாங்கிட்ட விஷயம் கூட ஜான்தான் போன் பண்ணி சொன்னான்”

“அவன் கூட பேசி நாளாச்சு. டைரில மார்க் பண்ணிக்கோ இந்த வாரம் கூப்பிடணும்”

ஜான் இவர்கள் நிறுவனத்தில் வேலை செய்தவன். கேட்டின் பெற்றோர் மறைந்த சமயம் உறவினர்கள் நண்பர்கள் தொழிலாளர்கள் அனைவரும் தள்ளிச் சென்றுவிட, கேட்டின் சகோதரன் வந்த விலைக்கு நிறுவனத்தை விற்றுவிட்டு ஓட நினைக்க, கல்லூரியில் படித்துக்குக் கொண்டிருந்தவள்

“நீ வீடு, நிலம் மத்த சொத்துக்கள் எல்லாத்தையும் நீயே எடுத்துக்கோ ஆனால் அப்பாவோட கம்பனியும், அந்தேரில இருக்கும் ரெண்டு பிளாட்டும் எனக்குத் தந்துடு” என்று பேரம் பேசினாள்.

கம்பனி இறங்குமுகமாக செல்கிறது. அவனது மட்டித் தங்கை அன்றைய நிலவரப்படி சொத்தில் கால்வாசி கூட கேட்கவில்லை. பேரம் படிந்து சகோதரன் கிளம்பிவிட்டான்.

அதன்பின் ஒருநாள் கல்பனாவையும், ஜானையும் அழைத்தாள்.

“நீங்க ரெண்டு பேரும் இந்த நிறுவனத்தின் தூண்கள். நான் தொழில் கத்துக்குற வரை இருந்தால் சந்தோஷப்படுவேன். பதிலுக்கு இரண்டு வருட சம்பளத்தை அட்வான்சா இப்பயே தரேன்” என்று டீல் பேசிய சிறு பெண்ணை வியப்போடு பார்த்தனர்.

“ஓகே… நாங்க இருக்கோம். ஆனால் பணத்துக்காக இல்லை, பாஸ் குடும்பத்துக்கு நன்றிக் கடனா” சம்மதித்தான் ஜான். அவன் அறிந்தவரை கேட் அத்தனை அறிவாளியான பெண் கிடையாது. இவளால் எப்படி இந்தத் துறையில் முன்னேற முடியும் என்ற எண்ணம். ஆனால் இந்தப் பெண்ணுக்கு கற்பூர புத்தி இல்லாமல் இருக்கலாம். ஆனால் உழைப்புக்கு அஞ்சாதவள் என்று ஓரிரு மாதங்களிலேயே புரிந்துக் கொண்டான்.

“ஜான். சிலருக்கு ஒரு தடவையில் புரிஞ்சுடும். எனக்கு ரெண்டு தடவை அதிகம்  விளக்க வேண்டி வரலாம். அதனால் உனக்கு எரிச்சல் ஏற்படும். சோ நீ சொல்லித் தரதை இந்த கேமிராவில் ரெக்கார்ட் பண்ணிக்கிறேன்” என்றவளிடம் அனுமதி அளித்தான்.

ஒவ்வொரு நாள் ஜான் சொல்லித் தருவதையும் இரவு வீடியோவில் திருப்பித் திருப்பிப் பார்த்து புரிந்துகொண்டு காலை அவனிடம் சந்தேகம் கேட்பவளின் மேல் ஜானுக்கு மரியாதை தோன்றியது. தொழிலின் நெளிவு சுளிவுகளை சிரத்தையோடு கற்றுக் கொண்டாள்.

முன்னேறும் துடிப்பும், தளராத உழைப்பும் இருந்த இடத்தை நோக்கி வெற்றி பயணித்தது. கேட் இனிமேல் தனியாக சமாளித்துக் கொள்வாள் என்ற நம்பிக்கை வந்ததும் புதிதாய் ஒரு விளம்பர நிறுவனம் ஆரம்பித்து சென்றுவிட்டான் ஜான். அவன் நிறுவனம் ஆரம்பிக்க பண உதவி செய்த கேட்டுடன் தொழிலை மீறிய நட்பும் அன்பும் உண்டு.

கல்பனாவும் கேட்டும் காலை உணவை உண்டபடி ஜானுடனான நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்கள்.

“கேட், ஜான் கூட எலிஜிபில் பேச்சுலர். அழகன். ரெண்டு பேரும் ஒரே அலைவரிசையில் சிந்திக்கிறவங்க. அத்தோட அவன் ஏற்கனவே உன்னை மணக்க விருப்பம் தெரிவிச்சிருக்கான். அவனோட உன் வாழ்க்கையை இணைச்சுட்டா சிறப்பா இருக்குமே”

“அவனுக்கு என் மேல லவ்வெல்லாம் இல்லை கல்பனா”

“அது எனக்கும் தெரியும். ஆனால் அவன் ஒரு நல்ல தோழன், நல்ல கணவனாவும் இருப்பான்”

“கல்பனா… என் கல்லூரித் தோழிகள் பலருக்கு ஜான் மேல் கிரேஸ். படிக்கும்போது நான் கூட அவனை சைட் அடிச்சிருக்கேன். ஆனால் அதெல்லாம் ஒரு காலம். இப்ப இந்த வயசில் மயக்கமெல்லாம் இல்லை. இந்த நொடி என் வாழ்க்கையே என் விளம்பர நிறுவனம்தான்”

“’இந்த வயசா’… உனக்கு அப்படி என்ன வயசாச்சு? முப்பது வயசெல்லாம் இப்ப டீன் ஏஜ் ஆக்கிட்டாங்க தெரியுமா…. அது அடிப்படையில் பாத்தா  உனக்கு டீன் ஏஜ் தொடங்கவே இன்னும் ரெண்டு வருஷம் இருக்கு. சோ கல்யாணம் கட்டிட்டு செட்டில் ஆகும் வழியைப் பாரு”

“இந்தப் பேச்சை விடு கல்பனா. டேட், லவ் மாதிரி சமாச்சாரங்களுக்கு எனக்கு நேரமில்லை. படிச்சுட்டு இருந்தப்ப எந்த எக்ஸ்போசரும் இல்லை. அதனால் காதல் தெய்வீகம், புடலங்காய் இப்படியெல்லாம் தோணுச்சு. இப்ப அதெல்லாம்  ஆணையும் பெண்ணையும் இணைச்சு வைக்க சமுதாயம் உருவாக்கின கட்டுக் கதைன்னு படுது. ரெண்டு தனி மனிதர்களை காலம் முழுவதும் இணைக்கும் பெவிகால்தான் காதல். இந்த பிஸினெஸில் தனித்துவத்தை இழந்து  நஷ்டப்படுறவங்க என்னமோ பெண்கள்தான்.

என்னையே எடுத்துக்கோ தினமும் நடுராத்திரி வரை வேலை செய்துட்டு வீட்டுக்கு பாதி உயிரா வரேன். காலையில் எழுந்து ஓட வேண்டிருக்கு. இதுக்கு இடையில் காதல் எல்லாம் முடியாத சமாச்சாரம். இந்த வினாடி எந்த ஆம்பளையும் பாத்து என் மனசில் காதல் பட்டாம்பூச்சி பறக்கல”

“யாருக்கு மாப்பிள்ளை யாரோ….. அவர் எங்கே பிறந்திருக்கிறாரோ….               எந்த பார்வைபட்டு, சொந்த உள்ளம் கெட்டு, எங்கே மயங்கி நின்றாரோ”

“இதென்ன பாட்டு கல்பனா… உன் கட்டைக் குரலில் கூட வெரி ஸ்வீட்…… எங்கே பாடு”

“கட்டவிழ்ந்து கண் மயங்குவாரோ                                         அதில் கைகலந்து காதல் புரிவாரோ                                     தொட்டுத் தொட்டு பேசி மகிழ்வாரோ                                      இல்லை தூர நின்று ஜாடை புரிவாரோ”

“இது எதுவும் நடக்க இப்போதைக்கு வாய்ப்பில்லை”

“உனக்கான மாப்பிள்ளை எங்கேயோ பிறந்திருக்கான். அவனைப் பார்த்ததும் உன் மனசில் பட்டாம்பூச்சி பறக்கும் பாரு”

“பறக்கும்போது பாக்கலாம். நீ அந்த ரூபி பத்தின விடியோ லிங்க் அனுப்புறேன்னு சொன்னியே”

“அதுவா யூடியூபில் வம்சி கலந்துட்ட நிகழ்ச்சி ஒண்ணு பார்த்தேன். ஒரு ரெண்டு செகண்ட் அவன் முகத்தை க்ளோஸ்அப்ல காமிச்சாங்க பாரு. த்சு… த்சு…”

“அடக்கடவுளே…. அவ்வளவு பரிதாபமாவா இருந்தான்”

“அடிப்போடி…. கடவுளே… வம்சியை ஒரு பதினஞ்சு வருஷத்துக்கு முன்ன நான் பாத்திருக்கக் கூடாதா…”

அந்த நிமிடம் வரை அவனைப் பற்றி பத்திரிக்கைகளிலும் நெட்டிலும் படித்ததோடு சரி. ஒரு போட்டோ கூட பார்த்ததில்லை. புகைப்படம் வெளியாவதை அவனும் விரும்புவதில்லை என்று கேள்விப் பட்டிருக்கிறாள்.

“வீடியோவைப் போடேன்… அந்த அழகு சுந்தரம் எப்படித்தான் இருக்கான்னு பாக்குறேன்”

வீடியோ ஓடியது. ஏதோ ஒரு இரவு விருந்து. காமிரா அங்கிருந்த  அனைவரையும் காண்பித்துவிட்டு வம்சிகிருஷ்ணாவை ஜூம் செய்தது. முப்பத்தி ஐந்து வயது சொல்லலாம். கிரீம் நிறத்தில் டின்னர் சூட். கருப்பு நிறத்தில் சாட்டின் ஷால் காலர். அவனுக்கு அட்டகாசமாய் பொருந்தியது. மாநிறம்தான் ஆனாலும் துளைக்கும் கண்கள், செதுக்கிய முகவாய் என்று பார்க்கும் அனைவரின் மனதிலும் தென்றல் வீசச் செய்தான். அருகில் அமர்ந்திருந்தவர் ஏதோ சொல்ல புன்னகைத்தபடி வலக்கையை முகத்துக்கு நேரே காற்றி அசைத்து  மறுத்தான். அந்த முத்துப் பற்கள் அவனது சிரிப்புக்கே ஒரு தனி கவர்ச்சியை தந்தது. ஓடிக் கொண்டிருந்த வீடியோ கல்பனாவின் தயவால் அப்படியே பிரீஸ் ஆனது. மாயை ஒன்றிலிருந்து விழித்தது போல தலையை உலுக்கிக் கொண்டாள் கேட்.

“பாத்தியா என்ன ஒரு லவர்பாய்”

“ஒத்துக்குறேன். செம ஹான்ட்சம்தான். அதனாலதான் மண்டைகனம் கொஞ்சம் அதிகமாவே இருக்கு”

கைகளை ஸ்க்ரீனில் தெரிந்த வம்சியை நோக்கி காண்பித்த கேட் சொன்னாள்

“லவர்பாய் வம்சி… உன்னை சந்திக்க நான் ரெடி”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

பேரறிஞர் அண்ணாவின் ‘ரங்கோன் ராதா’ – இறுதிப் பகுதிபேரறிஞர் அண்ணாவின் ‘ரங்கோன் ராதா’ – இறுதிப் பகுதி

ராதாவின் ‘அன்பை’ நான் பெற்றுவிட்டேன் – இனி என் தகப்பனாரின் அனுமதிதான் தேவை. நாகசுந்தரம்தான் இதற்குத் ‘தூது’. சுலபமாகவும் வெற்றியாகிவிட்டது. நாங்கள் ‘நாயுடு’ குடும்பம்! எனவே, பர்மா நாயுடு ஒருவர் வந்திருக்கிறார். அவருடைய மகள் ராதாவைத்தான் கலியாணம் செய்து கொள்ள விரும்புகிறான்

உன்னையே எண்ணியே வாழ்கிறேன் – 7உன்னையே எண்ணியே வாழ்கிறேன் – 7

முகமெல்லாம் சிரிப்புடன் மாரா ஜெயேந்தரிடம் சந்தோஷத்தைப் பகிர்ந்து கொண்டாள். “ஹன்ட்ரெட் பெர்சென்ட் என்னை அவன் நம்பிட்டான். என்னை நம்பு ஜெய் அவன் கண்ணைப் பார்த்தே சொல்லிடுவேன். கண்டிப்பா அவன்கிட்ட மாற்றம் தெரியும்” “தெரியுது. நேத்து கவுன்சிலிங் தர்ற இடத்துக்குத் தானா போயிருக்கான்,

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 39ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 39

உனக்கென நான் 39 ” நீ ஏண்டி வந்த ” என்ற தாயிடம் தன் தந்தையிடம் வாங்கி வந்திருந்த அனுமதி கடித்ததை ஓப்பித்தாள். ” மறுபடியும் உனக்கு செல்லம் குடுக்க ஆரம்பிச்சுட்டாரா அவரு! கேட்டா என் பொண்ணுக்கு நான் செல்லம் குடுப்பேன்