உள்ளம் குழையுதடி கிளியே – 26

அத்யாயம் – 26

ன்றும் போல அன்றும் காலை வழக்கம் போலவே விடிந்தது. சூரியன் கிழக்கில்தான் உதித்தான். வழக்கம் போல பழனியம்மா இட்லிதான் செய்தார். அதை அசால்ட்டாகத்தான் சின்னசாமிக்கு பரிமாறினார்.

‘இந்நேரம் என் மக மட்டும் இந்த வீட்டில் வாழ வந்திருந்தா இந்தக் கழுதையெல்லாம் இப்படி மரியாதைக் குறைவா நடத்துமா… ’ என்று நொந்தபடிதான் அந்த இட்லிகளையும் விழுங்கினார்.

“ஸ்கூலுக்குப் போயிட்டு வரேன் பாட்டி” என்றவண்ணம் சீருடை அணிந்து கொண்டு தெய்வானையின் கன்னங்களில் பச்சக் என்று எச்சில் பண்ணிவிட்டு ஓடிய துருவ்வையும் அவனை எண்ணி பூரித்தபடி டாட்டா காட்டிய தங்கையையும் எரிச்சலோடுதான் பார்த்தார்.

“பாசமலர் வீட்டுலேயே உக்காந்து என்ன பிரோஜனம்… நம்ம பிள்ளையை அவ பையனுக்குக் கட்டி வைக்க முடியல…” என்று போனில் குத்திக் காட்டிய மனைவி மேல் எல்லா கோவத்தையும் காட்டினார்.

“எல்லாம் உன்னால வந்ததுடி… எந்தங்கச்சியை அனுசரிச்சு போயிருந்தா நமக்கு இந்த நிலைமை வந்திருக்குமா…”

“இப்ப என்ன அனுசரிக்காம இருந்தேன்”

“என் தங்கச்சியோட டவுன் வீட்டில் குடியிருந்துட்டு தோட்டத்து வீட்டுக்கு அவளைத் துரத்தி விட்டுட்ட… அது முதல் தப்பு. அது உன் மருமகன் மனசில் பதியாமையா இருக்கும்.

அடுத்தது உன் முட்டாள் மகனை விட சரத் நல்லா படிச்சுடக் கூடாதுன்னு என்னைப் பாடா படுத்துன… சரத்தை தினமும் ஸ்கூலுக்கு லேட்டா கொண்டுபோய் விட வச்ச… அதுமட்டுமில்லாம அவனைக் காலைல பூரா தோட்டத்தில் வேலை செய்ய வச்ச…

நடந்தது தெரிஞ்ச என் தங்கச்சி உஷாராயி அவன் படிப்பு கெடக் கூடாதுன்னு ஹாஸ்டலுக்கு அனுப்பிட்டா…

இத்தோட வில்லத்தனத்தை நிறுத்தினியா… அவன் காலேஜுல படிக்கிறப்ப… ரெண்டு மூணு பொண்ணுங்க கூட நின்னு போட்டோ பிடிச்சதைக் காட்டியே சரத்துக்கு கேர்ள் பிரெண்ட் இருக்கு… பயங்கரமா ஊர் சுத்துறான்னு கதை கட்டிவிட்ட… அப்பத்தான் யாரும் பொண்ணு தரமாட்டாங்க நம்ம பொண்ணை கட்டி வச்சுடலாம்னு கணக்கு போட்ட…

என் தங்கச்சி நம்பலைன்னாலும் அவன் கூட படிச்ச பொண்ணுங்க ரெண்டு பேரு வீட்டிலிருந்து இவனை மாப்பிள்ளை கேட்டு வரவும் தெய்வானைக்கு திகீருன்னு ஆச்சு…

எல்லாரும் அதிசயப் படுறமாதிரி சரத் பெரிய வேலைல சேரவும் உடனே பொண்ணை இவனுக்குக் கல்யாணம் செஞ்சு தரணும்னு துடியாத் துடிச்ச… நானும் என் தங்கச்சி கைல கால்ல விழுந்து கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணேன். அவன் என்னடான்னா உனக்கும் பேபே உன் குடும்பத்துக்கும் பே பேன்னு கல்யாணத்தை முடிச்சுட்டு ஒரு புள்ளையைப் பெத்துட்டு வந்திருக்கான்”

“இப்ப எதுக்கு இத்தனை கதையையும் இழுக்குறிங்க”

“அவன் தனியா இருந்தப்பயே மாப்பிள்ளையாக்க முடியல… இப்ப பொண்டாட்டியைத் தள்ளி வச்சுட்டு மகளைக் கல்யாணம் பண்ணித்தர உன் ஐடியா எல்லாம் பக்கத்தில் இருக்குறவன் தலையையும் சேர்த்து சுத்தி மூக்கைத் தொடுறாப்பில இருக்கு”

“நான் இத்தனை ப்ளான் செஞ்சும் என் வீட்டுக்காரர் இன்னமும் என் நாத்தனார் குடும்பத்துக்கு எடுபுடியாத்தானே இருக்கார். நீங்க உங்க தங்கச்சி சொத்தில் பாதியை வாங்கி என் பெயரில் எழுதிருந்தா அந்த சரத்து கல்யாணம் பண்ணிகிட்டா எனக்கென்ன இல்ல சாமியாரா போயிருந்தா எனக்கென்ன”

“சரத் முன்ன மாதிரி இல்ல. கோயம்பத்தூரில் நல்ல செல்வாக்கு. இங்கதான் பிஸினெஸ் ஆரம்பிக்கப் போறானாம். நம்ம ஏதாவது நோண்டுனா முந்தி மாதிரி இருக்கமாட்டான். நம்ப குடும்பத்தையே ஒரு வழி பண்ணிடுவான். அதுக்கு வாகா உன் மகன் வேற ஏழெட்டு இடத்தில் பஞ்சாயத்தைக் கூட்டிருக்கான்”

“இதயெல்லாம் கவனிக்காம அப்பறம் நீங்க என்னத்துக்கு அங்க தண்டமா உக்காந்திருக்கிங்க”

“ஒரு கடைசி முயற்சி பண்ணலாம்னு பார்க்குறேன்… ஜான்னு ஒருத்தனுக்காக உக்காந்திருக்கேன். அவனை மெட்ராசிலிருந்து தூக்க ஆள் அனுப்பிருக்கேன். இந்தக் கடைசி முயற்சி பலிச்சா இங்கிருப்பேன். இல்லைன்னா கிளம்பிடுவேன்”

ஹிமாவினது கெட்ட நேரம் சின்னசாமியின் கடைசி முயற்சி பலித்தே விட்டது.

மருத்துவமனையில் வேலை செய்யும் சிங்காரத்திடம் ஹிமாவின் தாய் சௌந்திரவல்லி பற்றி தகவல் சொல்லி ஜானைப் பற்றி விசாரித்ததில், அவர்கள் கண்டறிய சுலபமாக சரத் தான் ஜானுக்கும் சிகிச்சைக்கான பணத்தை செலுத்தியிருந்தான். அதன் மூலம் ஜானின் சென்னை விலாசத்தைக் கண்டுபிடித்து, தன் மகன் கதிரிடம் வேலை பார்க்கும் ஆட்களிடம் அவனைக் குண்டுகட்டாய் தூக்கி வர சொல்லியிருக்கிறார்.

**ஜா** ன் சொல்வதைக் கேட்ட சின்னசாமிக்குத் தலையே சுத்தியது…

“என்னடா சொல்றா… அந்தப் பொண்ணுக்கு சரத் ரெண்டாவது புருஷனா…”

‘டேய் சரத் என் கன்னத்துலையா அடிச்ச… உன் வாழ்க்கைல அடிக்கிறேன் பாருடா… ’ என்ற வன்மத்துடன் சொன்னான் ஜான்.

“எனக்குத் தெரிஞ்சு ரெண்டாவது ஆள். நடுவில் யாராவது விட்டுப் போயிருந்தா மூணாவதோ இல்லை நாலாவதோ…”

டென்ஷன் தாங்காமல் அந்த அறையில் குறுக்கும் நெடுக்குமாய் நடந்தார் சின்னசாமி. அவரது மூத்த மகன் கதிர், முதுகில் தட்டி சமாதனப் படுத்தினான்.

“உண்மையை சொல்லு… அந்த சின்னப் பையனும் சரத்தோட மகனில்லையா…”

“அந்தப் பையனுக்கு யார் அப்பான்னு தெரியல… யாருக்குத் தெரியும்… சரத் கூட அப்பாவா இருக்கலாம். நிறைய சான்சிருக்கு. ஆனால் முதல்ல ஒருத்தனைக் கல்யாணம் பண்ணிருந்தா அது மட்டும் நிச்சயம்…”

அவன் சொல்ல சொல்ல கடுப்பானார் சின்னசாமி. முதுகில் தட்டி தந்தையை அமைதிப்படுத்தினான் கதிர். பின்னர்

“டேய், அந்த இளநி சீவுற அருவாளை எடு…” வேலையாளிடம் கட்டளையிட்டான்.

“ஜான், என்னோட ஒரு பக்கத்தைத்தானே பார்த்த, இன்னொரு பக்கத்தை சொல்றேன். நீ பஞ்சத்துக்காகத் ஏமாத்துறவன்… என் பொழைப்பே அதுதான். ஏற்கனவே என் மேல போலிஸ்ல பத்துக்கு மேல புகார் இருக்கு. அத்தோட ஒண்ணா ஒரு கொலை கேஸ் இருந்துட்டுப் போகுது… இல்லையாப்பா…” என்றான் கதிர்.

“இவன் பொய் மட்டும் சொல்றான்னு தெரிஞ்சது… போட்டுத் தள்ளிடு…” என்றார் சின்னசாமி சினம் கக்கும் விழிகளுடன்.

சொன்னதை செய்வேன் என்பதைக் காட்ட, அந்தக் கூர்மையான அரிவாள் முனையால் மிக லேசாக ஜானின் கன்னத்தில் கோடு போட்டான் கதிர். வினாடிகளில் சிவப்பாக வெளிவந்த ரத்தத்தைப் பார்த்து பயந்துவிட்டான் ஜான்.

அவனாவது அடிக்க மட்டும்தான் செஞ்சான். இவன் கழுத்தை சீவிடுவான் போலிருக்கே. சட்டியிலிருந்து தவறி அடுப்பில் விழுந்ததைப் போல ஆயிற்று அவன் நிலை.

“எனக்குத் தெரிஞ்சதை சொல்லிடுறேன்… அந்தப் பொண்ணு ஹிமா நல்ல குடும்பத்துப் பொண்ணுதான். குழந்தை பிறந்த சில மாசத்தில் ஒரு விபத்தில் அவளோட அப்பாவும், புருஷனும் செத்துட்டாங்க. அவ அம்மாவுக்கு உடம்பு சரியில்லை.

என்னோட பொண்டாட்டி க்றிஸ்டியும், ஹிமாவும் பிரெண்ட்ஸ். ஒரே கம்பனில வேலை பார்த்துட்டு இருந்தாங்க. சரத் எப்பப் பார்த்து கல்யாணம் பண்ணிருக்கார்னு யாருக்கும் தெரியல. ஆனால் சரத்துக்கு அந்தப் பொண்ணை முன்னாடியே தெரியும் போலிருக்கு”

“இப்ப உண்மை வெளிய வருதா… அப்பறம் ஏண்டா அவளைப் பத்தித் தப்புத் தப்பா சொன்ன… சரத்துக்கும் உனக்கும் என்னடா பிரச்சனை…”

“சரத், என் மனைவிக்கு சப்போர்ட்டா என்னை அடிச்சு டைவர்ஸ் பத்திரத்தில் கையெழுத்து போட வச்சான். அந்தக் கோவத்தில் உண்மையை மாத்தி சொன்னேன்”

“எங்க குடும்பத்தைப் பத்தி உனக்கு இன்னமும் சரியாத் தெரியல… ஹிமாவைப் பத்தியும் சரத்தைப் பத்தியும் இனிமே வாயைத் திறந்தது தெரிஞ்சாலே ஜான்னு ஒருத்தன் இந்த உலகத்தில் இருக்க மாட்டான். புரியுதா…”

“ம்… ம்…”

“இந்த விஷயத்தை இன்னும் எத்தனை பேருகிட்ட சொன்ன”

“உங்ககிட்ட மட்டும்தான் சொல்லிருக்கேன்”

“டேய் இவனை ரெண்டு நாள் தங்க வச்சு நல்லா கவனிச்சு ஹாஸ்பிட்டலுக்கு அனுப்பு”

“நான்தான் யாருகிட்டயும் சொல்லலையே…” என்றான் ஜான் கதறல் குரலில்.

“நல்லவனா இருந்தா… அந்தப் பெண்ணைப் பத்தி நல்லவிதமா சொல்லிருக்கணும். எடுத்தவுடனே அவளோட நடத்தையைப் பத்தி கேவலமா பேசுன நாதாரிதானே நீ… ரெண்டு நாள் நல்லா கவனிச்சு அனுப்புங்கடா…” என்றான் கதிர்.

“அப்பா… இங்க வாங்க…” என்று சின்னசாமியை வேறு பக்கமாக அழைத்து சென்றான்.

“இதுவரைக்கும் நீங்க செஞ்ச தப்பெல்லாம் போதும். ஜான் சொன்ன விஷயத்தை வெளில சொல்லிட்டு இருக்காதிங்க… குறிப்பா அம்மாகிட்ட சொல்லிடாதிங்க… அவங்க ஓட்டவாய், ஊர் முழுசும் பரப்பிடுவாங்க…

சரத்தும் நம்ம குடும்பத்தை சேர்ந்தவன்தான்… இதை நம்ம நினைக்கலைன்னாலும் அவன் மறக்கல. எனக்கு ஒண்ணுன்னதும் பக்கத்தில் துணையா நின்னது அவன்தான்.

மனுஷன் தடுமாறுறது இயல்பு. அவன் வாழ்க்கையில் எங்கேயோ தடுமாற்றம் இருக்கு. அதையே சாதகமா எடுத்துட்டு அவனைப் பத்தி தப்பா பேசுறது மல்லாத்து படுத்துட்டு துப்புற மாதிரி. அது நம்ம மேலதான் விழும்”

“ம்… எனக்குப் பட படன்னு வருது” என்றார் சின்னசாமி.

“நீங்க நம்ம வீட்டுக்குப் போயி தூங்குங்க… நான் ராத்திரி வந்து பேசுறேன்” என்று கையோடு காரில் ஏற்றி அனுப்பி வைத்தான்.

கதிர் வேலைகளை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தபோது சின்னசாமி அங்கிருந்து கிளம்பி விட்டிருந்தார்.

“அம்மா… அப்பா எங்க… வீட்டுக்குத்தானே அனுப்பினேன்…”

“என்னமோ தெரியல அங்கேயும் அங்கேயும் நடந்தாரு… என்கிட்டே கூட ஒண்ணும் சொல்லல… திடீருன்னு பார்த்தா காணோம்”

“எங்க போனாரு…”

“வேற எங்க போயிருப்பாரு… அவரு தங்காச்சியைப் பார்க்கக் கிளம்பிருப்பார். அவதானே அவருக்கு முக்கியம்…” அவர் ஒரு பக்கம் புலம்ப…

“அப்பா அங்க போயி என்ன குழப்பம் செஞ்சுருக்காரோ…” என்று வாய்விட்டுப் புலம்பியபடி காரை எடுத்தான்.

சரத்தின் வீட்டிற்கு அழைக்க முயன்றான் ஆனால் எடுப்பாரில்லை. வேறு வழியில்லாமல் சரத்துக்கு அழைத்துப் பார்த்தான். ஆனால் விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்த சரத்திடம் அவனால் தகவல் சொல்ல முடியவில்லை.

தந்தை ஏதாவது குழப்பம் செய்து அது சரத் ஹிமாவின் பிரிவிற்கு வழி வகுத்து விடுமோ என்ற அச்சம் அவன் மனதில் தோன்றியது.

ஆனால் சின்னசாமியே அறியாது அவருக்கு கூட்டாக வேறொரு நபரும் அந்த உறவை உடைக்க தீவிரமாக இறங்கியிருந்தார்.

நாலாபக்கமும் சூழ்ந்த பிரச்சனையை உடைக்க ஹிமா தனியாகப் போராடிக் கொண்டிருந்தாள். ஆனால் ஒரு கட்டத்தில் அனைத்தையும் இழந்து நிராயுதபாணியாக வீட்டை விட்டு வெளியேறினாள்.

என்ன செய்வது விதி இரண்டு நபர்களை அருகருகே கொண்டு வருவதுதான் விதியின் வேலை. அவர்களை இணைத்து வைப்பது காதலின் வேலை அல்லவா.

1 thought on “உள்ளம் குழையுதடி கிளியே – 26”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

உள்ளம் குழையுதடி கிளியே – 16உள்ளம் குழையுதடி கிளியே – 16

அத்தியாயம் – 16 சின்னையன் வேக வேகமாய் நடந்து மெதுவாக வீட்டுக் கதவைத் திறந்து, இருட்டில் சந்தமெழுப்பாமல் பூனை போல நடந்து ஹாலில் விரித்த பாயில் படுத்து போர்வையைப் போர்த்திக் கொண்டார். இது எதையும் அறியாத சரத் அறைக்குள் நுழைந்து மும்முரமாக

தமிழ் மதுராவின் ‘ஒகே என் கள்வனின் மடியில் – 10’தமிழ் மதுராவின் ‘ஒகே என் கள்வனின் மடியில் – 10’

பெங்களூரில் அவர்கள் விமானம் தரையிறங்கியது. உஷ்ணம் சற்றும் குறையாமல் காதம்பரி இருக்க, சோனாவுக்கு டாட்டா காட்டிவிட்டு, பிரியாவிடை பெற்று வந்தான் வம்சி. எரியும் நெருப்பில் எண்ணை ஊற்றியது போலாயிற்று காதம்பரிக்கு. ‘சவாலா விடுற சவால்… அதுவும் காதம்பரிகிட்ட… காலேஜில் எத்தனை பசங்க

காதல் வரம் ஆடியோ நாவல் – 2 youtube linkகாதல் வரம் ஆடியோ நாவல் – 2 youtube link

வணக்கம் தோழமைகளே காதல் வரம் ஆடியோ நாவல் நீங்கள் கேட்டு மகிழ வசதியாக இப்பொழுது youtube லும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. கேளுங்கள்… சேனலில் மற்ற நாவல்களைக் கேட்க வசதியாக சப்ஸ்க்ரைப் செய்துக் கொள்ளுங்கள். தங்களது ஆதரவிற்கு நன்றி. அன்புடன், தமிழ் மதுரா