Tamil Madhura என்னை கொண்டாட பிறந்தவளே,Ongoing Stories,Tamil Madhura தமிழ் மதுரா – என்னைக்‌ ‌கொண்டாடப்‌ ‌பிறந்தவளே‌ – 1

தமிழ் மதுரா – என்னைக்‌ ‌கொண்டாடப்‌ ‌பிறந்தவளே‌ – 1

அத்தியாயம் – 1

‘விர்’ என்ற இரைச்சலுடன் அந்த அலுமினியப் பறவை, ரன்வேயில் ஓட ஆரம்பித்தது. சக்கரங்கள் மெல்ல எழும்பும் தருணம் பெரும்பாலானவர்கள் கண்ணை மூடித் திறந்தனர். எத்தனை முறை விமானத்தில் பயணம் செய்தாலும் அதன் சக்கரங்கள்  தரையை விட்டு வானத்தில் எழும் வினாடி எழுபது சதவிகிதத்திற்கும் அதிகமானவர்களுக்கு ஒரு சிறு கலக்கம் தோன்றி மறைவது வாடிக்கை.  

காற்றைக் கிழித்துக் கொண்டு வானத்தில் உயர்ந்தது அந்தப் பறவை. ஏர் ஹோஸ்டஸ் சொல்படி ‘சீட் பெல்டை’க் கட்டிக் கொண்டு அனைவரும் அமர்ந்திருந்தனர். காதை அடைப்பதைத் தடுக்கும் பொருட்டு சிறு குழந்தைகளும் , சில பெரியவர்களும் கூட மிட்டாயை மென்றபடி சுற்றும் முற்றும் பார்த்தனர். 

அவ்வளவு உயரத்தில் இருந்து பார்க்கும் போது லண்டன் நகரமே மிக அழகாகத் தெரிந்தது. தேம்ஸ் நதியும்,  வரிசையாகக் கட்டப்பட்ட சித்தெரும்பு வீடுகளும், இடையிடையே தெரிந்த பச்சை பூங்காக்களும் அழகுக்கு அழகு சேர்த்தன. 

இது எதையும் ரசிக்கும் நிலையில் அவனில்லை. வெளியே மட்டுமின்றி அவனது மனம் முழுதும் கூட  மேகக் கூட்டம் இடைவெளியின்றி நிறைந்திருந்தது. அவன் மனதில் என்ன நினைக்கிறான் என்பதை அவன் மன மேகத்தை விலக்கி விட்டுப் பார்த்தால் தெரியும். ஆனால் அதற்கு அவனுக்குப் பொறுமையும் இல்லை. மிக முக்கியமாக அவன் அதை விரும்பவும் இல்லை. 

அவனருகில் வலதுபுறம் அமர்ந்திருந்தவர் ஒரு பெரியவர். பையன் வீட்டுக்கு வந்து செல்கிறார் போல இருக்கிறது. வெளிநாட்டில் எத்தனை மாதம் நம் ஊர் முகத்தைக் காணாமல் காய்ந்து போய் இருந்தாரோ தெரியவில்லை. முதலில் கொஞ்சம் தயக்கமாய் அவனைப் பார்த்தவர். 

“ஆர் யூ டமில்?”

ஆமாம் என்பதைப் போல் தலையசைத்தான். 

“அப்பாடி, உங்க ஆறடி உயரம், தங்கக் கலர், அதுவும் மீசை வேற இல்லையா அதான்  பார்த்ததும் பஞ்சாபியோன்னு நெனச்சுட்டேன் தம்பி. நான் மேலூர் பக்கம். தம்பிக்கு எந்த ஊரு?” 

“மெட்ராஸ்” சுருக்கமாகச் சொன்னான்.

“மெட்ராஸ்ல எந்த இடம்?”

“திருவெற்றியூர்”

“அட வடிவுடையம்மன் கோவில் இருக்குற இடம். எங்க சொந்தக்காரங்க அங்க இருந்தாங்க. ரெண்டு தடவை வந்திருக்கேன். இங்க எந்த ஹாஸ்பிட்டல வேலை பாக்குறிங்க?”

“ஹாஸ்பிட்டல வேலை பாக்கல”

“அப்பறம் டென்டிஸ்ட்டா? பிரைவேட் பராக்டிசா?”

தான் மருத்துவர் என்று முடிவு கட்டிக் கொண்டு பேசியவரிடம் முதன் முறையாக எரிச்சல் தோன்றியது “நான் டாக்டர் இல்ல”

இது அவரது ஆர்வத்தைக் கொஞ்சம் குறைத்தது. 

“அப்ப சாப்ட்வேரா? இந்த ‘சி’,’ ஜாவா’ அப்படி இப்படின்னு சொல்லிகிறாங்களே. தம்பி அதுவோ?”

“இல்ல”

“அப்ப என்ன வேலை பாக்குறிங்க?”

இப்படித்தான் சிலர், பக்கத்தில் அமர்பவர்கள்  தாங்கள் கேட்கும் கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டும் என்று எதிர் பார்கிறார்கள். மேலே மேலே கேள்வி கேட்டு தொனதொனக்கும் அவரிடம் இருந்து எப்படி தப்பிப்பது என்று தெரியாமல் யோசித்தான். 

முகத்தில் அடித்தாற்போல பேசி விடலாம், ஆனால் அது அவரைக் கஷ்டப்படுத்தும். இன்னும் ஆறேழு மணி நேரம் உடன்  பயணம் செய்ய வேண்டும். ஏதாவது பேசப் போய் இந்தப் பயணம் அவனுக்கும் அவருக்கும் நெருஞ்சி முள்ளில் அமரும் தர்மசங்கடத்தை உருவாக்கி விட வேண்டாம் என்று நினைத்தான்.

“அக்…” அவனை முழுவதுமாக முடிக்கக் கூட விடவில்லை அவர். 

“அக்கவுன்டண்டா? நெனச்சேன் நம்ம ஊருல கூட நல்ல மரியாதை. என்ன  சி. ஏ பாசாகுறது தான் கஷ்டம். என் பையன் இங்க ஆர்பிஎஸ் பாங்க்ல வேலை பாக்குறான். ஆமா உங்க ஆபிஸ் எங்க இருக்கு?”

“ஹீத்ரூ  பக்கத்துல…  ”.

 ‘அக்கௌன்ட்டன்ட்  ஆபிஸ்’ ஒன்றில் வேலை பார்க்கிறேன்னு சொல்லிக் கூட அவன் முடிக்கவில்லை அதற்குள் அவர் பதலளித்து விட்டார். அடுத்தவர் பேசுவதை முழுமையாக் கூட கேட்கப் பொறுமையின்றி எல்லாமே தெரிந்தது போல் பேசும் இவரின் போக்கிலேயே விட்டுவிடலாம் என்று முடிவு செய்து விட்டான். 

“அப்ப ‘ப்ளைட்’ பிடிக்க சௌரியம்தான். என் பேர் விவேகானந்தன். நான் ஒரு வியாபாரி. மார்கெட்ல மண்டி வச்சிருக்கேன். எனக்கு நாலு பிள்ளைங்க. ரெண்டு பொண்ணு ரெண்டு பையன். பொண்ணுங்கள பக்கத்துலையே கொடுத்துட்டேன்” கேட்காமலேயே விவரம் சொல்லிக் கொண்டு வந்தார்.

 பின் நினைவு வந்தவராக “ உங்க பேர் என்ன தம்பி. நானும் அப்பைல இருந்து தம்பி தம்பின்னு கூப்பிட்டுட்டு இருக்கேன்”

“அரவிந்த்”

“ஆள மாதிரியே பேரும் அழகா இருக்கு”

இருவரும் பேசும் போது இடைமறித்த ஸ்ராவனி “அப்பா பாத்ரூம்” என சொல்ல 

“பாவம் வய்ப்க்கு வேலை போல இருக்கு, அதுனாலதான் வரலையா ” என்று சொல்லிக் குடும்பத்தைப் பற்றி கண்டறிய முயன்றவரைக்  கண்டு கொள்ளாமல் குழந்தையை வாஷ்ரூமுக்கு கூட்டிக் கொண்டு போய் விட்டு விட்டு மெதுவாகவே வந்தான்.

இடையே உணவு வந்துவிட, இடது புறம்  திரும்பிக் கொண்டு உணவை ஸ்ராவனிக்கு ஊட்டி விட்டபடியே தானும் தனக்கு அளிக்கப்பட சண்ட்விச்சை சாப்பிட்டு முடித்தான்.  எப்படியோ ஒரு அரைமணி நேரம் அவரைத் தவிர்த்தான். அவரும் இடையில் வேறு யாரோ ஒருவரிடம் பேச ஆரம்பித்திருந்தார். 

காலியான தட்டுக்களையும், பழரசம் தந்த டம்ளர்களையும் விமானப் பணிப்பெண்  வசம் தந்த பின், மீண்டும் பெரியவர் மறுபடியும் குடும்ப விவரம் பற்றிக் கேட்க, 

“கொஞ்சம் குழந்தையை பார்த்துக்கோங்க நான் வாஷ்ரூம் போயிட்டு வந்துடுறேன்” என்று சொல்லி சென்றான். 

அவன் திரும்பி வந்தபோது ஸ்ராவனியுடன் பேசிக்கொண்டிருந்த அவரது பார்வையில் ஒரு பரிதாபம் வந்திருந்தது. அவனிடம் ஸ்ராவணியை ஒப்புவித்தபின் கால்  மரத்து விட்டதால் எழுந்து ஒரு நடை நடந்து வருவதாகச் சொல்லி சென்றார். 

அவர் சென்றதும் தனது செல்ல மகளிடம் கேட்டான் அரவிந்த் “ ஸ்ராவணி அவரு என்னம்மா கேட்டாரு?”

மெதுவாக சொன்னது குழந்தை “அந்தத் தாத்தா உங்க அம்மா வரலியான்னு கேட்டாரு. நான் அம்மா இல்லை சாமி கிட்ட போய்ட்டாங்கன்னு சொன்னேன்”

அவரது பார்வையில் தெரிந்த பரிதாபத்தின் அர்த்தம் புரிந்தது அரவிந்துக்கு.

அவனுக்கு அவர் மனதில் என்ன நினைத்திருப்பார் என்று ஆராய்வதைவிடவும் ஏராளமான வேலைகள் இருந்தன. இப்படி திடுதிப்பென கிளம்பி வருவதற்காக அலுவலகத்தில் ஏற்கனவே இருந்த விடுமுறை பத்தாமல், சம்பளப் பிடிப்புடன் வேறு விடுமுறை எடுக்க வேண்டியதாகி விட்டது. இருக்கும் லீவில் பாதிக்கு மேல் போன முறை ஸ்ராவனிக்குக்  காய்ச்சல் வந்தபோது பார்த்துக் கொள்ள எடுத்து விட்டான். மறுபடியும் விடுமுறை என்று வந்து நின்றவனிடம் சற்று சுணங்கிக் கொண்டேதான் சம்மதித்தனர் அவனது ஆபிசில். 

அவன் லீவ் வாங்குவதற்குக் கஷ்டப்பட்டதை  விட அதிகம் கஷ்டப்பட்டது ஸ்ராவனிக்கு லீவ் வாங்கத்தான். ஸ்ராவனியின் பள்ளி தலைமை ஆசிரியை கண்டிப்பாக இருவாரங்களுக்கு மேல் விடுமுறையை நீட்டிக்கக்கூடாது என்று சொல்லி அவன் சூடம் அடித்து சத்தியம் செய்யாத குறையாக உறுதிமொழி தந்தபின் தான் சரி எனத்  தலையாட்டினார். 

நான்கு நாட்கள் வேலை அவனுக்கு பெண்டெடுத்து விட்டது. மாலையில் அவளைப் பள்ளியிலிருந்து கூட்டிக் கொண்டு வந்து பார்த்துக் கொள்ளும் ரீமாவிடம் இரண்டு வாரம் வர வேண்டாம் என்று சொல்லிவிட்டான். முதல் நாள் வீட்டிற்கு வந்தபோது, வீட்டில் வேலைகள் அம்பாரமாய் குவிந்திருந்தன. 

குன்றாய்க் குவிந்திருந்த ஸ்ராவனியின் யூனிபார்ம் மற்றும் அவனது துணிகளை லான்ட்ரோமேட்டில் கொண்டு போய் துவைத்துக் கொண்டுவந்தான். அதனை மடித்து வைக்க மலைப்பாய் இருந்ததால் அப்படியே ஒரு மூலையில் போட்டான். பாத்திரங்களைக் கழுவிக் கவிழ்த்தான். பசியில் இருந்த ஸ்ராவனிக்கு ஒரு கிரீன் ஆப்பிளைக் கொடுத்துவிட்டு, ‘காலையில் இருந்து காபியை மட்டும் குடித்து என்னை வாட்டுகிறாயே என்னையும் கொஞ்சம் கவனி’ என்று சத்தம் போட்ட தனது வயற்றுக்கும் ஒரு ஆப்பிளைக் கொடுத்து சமாதானப் படுத்தினான். 

அரவிந்துக்கு காபி இருந்தால் போதும், அதைக் குடித்து விட்டே ஒரு நாள் முழுவதும் கூட இருந்து விடுவான். 

அவன் உடன் வேலை செய்யும் ஐவனின் “என்ன மேன், சாப்பிடாமல் சிக்கனம் செய்கிறாயா?”, என்ற கேள்விக்கு புன்னகையே பரிசாகக் கொடுப்பான். 

 ரைஸ் குக்கரில் அரிசியைக் களைந்து வைத்தான். ஸ்ராவனிக்கு கிரேயானைக் கொடுத்து படம் வரைய சொல்லி விட்டுத் தானும் தனது ஆபிஸ் வேலையில் ஆழ்ந்து விட்டான். 

சற்று நேரத்தில் அப்பாவும் பெண்ணும்  சாதத்துக்கு கொஞ்சம் தயிரையும் உருளைக் கிழங்கு சிப்சையும் தொட்டுக் கொண்டு சாப்பிட்டு முடித்தார்கள். 

அவனுக்கும் ஆசை தான் தன் பெண்ணுக்கு விதவிதமாக சாப்பாடு தர வேண்டும் என்று. ஆனால் தினமும் ஒரு சாதம் ஒரு குழம்பு வைப்பதற்குள் விழி பிதுங்கி விடுகிறது. அவனது பெண்ணோ தந்தை தரும் குழைந்த சாதத்தையும், தாளிக்காத பருப்பையும், சமைக்க முடியாத நாளில் அவன் தரும் பச்சை லெட்டுஸ் அடங்கிய அரைகுறை சான்ட்விச்சையும்  கூட வேண்டாம் என்று சொல்லாமல் வேகமாக சாப்பிட்டு முடிப்பாள். பாதி வைத்திருந்தாள் என்றாள் ஏதோ உடம்பு சரியில்லை இல்லை சாப்பாடு பிடிக்கவில்லை என்று தெரிந்து கொள்ளலாம். 

அதிகம் பேசாத குழந்தை. ஆனால் அவள்தான் அவனின் உயிர். ஸ்ராவனியைத் தூங்க வைத்தபின் மீதம் இருந்த வேலைகளை முடித்து விட்டு, டாகுமென்ட்சை தனது உடன் வேலை செய்யும் ஐவனுக்கு மெயில் செய்து முடிக்க நான்கு மணியாகிவிட்டது. பின்னர் வேண்டிய துணிகளை அறைகுறையாக எடுத்து வைத்து விட்டு, மூன்று மணி நேரம் கூட முழுவதுமாக உறங்கவில்லை. 

காலையில் எழுந்து கிளம்பி, ஸ்ராவனியையும் கிளப்பிக் கொண்டு வந்து விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்திருந்தான். நான்கு நாட்களாக அவனது அலைச்சல் அதிகமாக இருந்ததால் ஸ்ராவனியைத் தட்டிக் கொடுத்துக் கொண்டே அவனும் உறங்கி விட்டான். 

விவேகானந்தன் கிராமத்து மனிதர். கிராமத்தில் அக்கம் பக்கத்து வீடுகளில் ஒண்ணு மண்ணாய்ப்   பழகியவர் அவர். அவரால் சோறு தண்ணி கூட இல்லாமல் இருக்க முடியும் ஆனால் பேசாமல் இருக்க முடியாது. ஒரு நடையுடன் தமிழ் தெரிந்த எல்லாரிடமும் ஒரு ரவுண்டு  பேசிவிட்டு வந்திருந்த விவேகானந்தன் அசதியில் தனது மகளின் தோளின் மேல் கையைப் போட்டபடி இறுக்கிக் கொண்டு தூங்கும் அரவிந்த்தைப் பார்த்தார். 

அழகான இளைஞன். செதுக்கி வைத்தாற்போல் இருக்கும் முகமும், அமைதியான சுபாவமுமாய் இருக்கிறான். இவன் நிச்சயம் கெட்டவனாக இருக்க முடியாது. தூக்கத்தில் கூட   இறுகி இருந்த அவனது உதடுகள் நான் அழுத்தமானவனாக்கும் என்னை விட்டு எட்டியே நில் என்றது. அவனையே உரித்து வைத்திருக்கும் மகள். சின்ன சீனாபொம்மை போல் இருக்கிறாள். வீட்டில் ஒரு பெண் இல்லாமல் இருவரும் ஒரு இயந்திரமாய் யாரிடமும் ஒட்டாமல் இருந்தது போல் தோன்றியது அவருக்கு.

இந்தக் காலத்துப்  பசங்க விளக்கேற்ற ஒரு பெண் வேண்டும் என்றால், ‘வீட்டு விளக்கா, ஒரு சுவிட்சைத் தட்டினால்  அது தானாக எரித்து விட்டுப் போகிறது’ என்று கிண்டல் செய்கிறார்கள். ஒருவனின் சந்ததியை அவனோடு அழிந்து விடாமல்  தன்னுடைய உயிராகிய விளக்கால் அவனது வாரிசின் மூலம் ஏற்றித் தழைக்க வைப்பவள் அல்லவா மனைவி. 

வாழ்க்கை விளக்கேற்ற அல்லவா ஒரு குடும்ப விளக்கைத் தேடுகிறார்கள். ஒரு ஆணின்  வாழ்க்கைக்கு அர்த்தம் கிடைப்பது இன்பத்திலும் துன்பத்திலும் கூட வரும் ஒரு இனிமையான இணையால் அல்லவா?  இவனது வாழ்வு இப்படியே உயிர்ப்பு இல்லாமல் தொடர்ந்தால், இவனும் ஒரு இயந்திரமாகி தனது சின்ன மகளையும் அவ்வாறே ஆக்கிவிடுவான்.அவருக்கு பரிதாபம் சுரத்தது. 

‘கடவுளே,  இந்தப் பையனுக்கு வாழ்க்கையில் ஒரு பிடிப்பைத் தா. தனியொரு அன்றிலாய் தவம்  இருக்கும் இவனுக்கு ஒரு ஜோடிப் பறவையைத் தா’ இறைவனைத் துதித்தார்.

நமக்கு சம்மந்தமே இல்லாதவர்கள் நம் நன்மை வேண்டி செய்யும் வேண்டுதல் கண்டிப்பாகப் பலிக்கும் என்பார்கள். 

பெண் அன்றில் வருவாளா?

அவ்வாரன்றில் வராமலே போய் விடுவாளா? 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 6என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 6

அரவிந்துக்கு உறவினர்களின் கேள்வி காதில் விழுந்ததும் திகைப்பு. கல்யாணத்துக்கு முன்னே ஸ்ராவணி பிறந்து விட்டாளா? என்ற கேள்விதான் அந்தத் திகைப்புக்குக் காரணம். யாரைப் பார்த்து இந்த வார்த்தை கேட்டு விட்டார்கள். நானா? மூன்று அக்கா இரண்டு தங்கைகள் இருக்கும் நானா தாலி

என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 3என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 3

அத்தியாயம் – 3 நாதனும்  கதிரும் விடியும் முன்பே  கிளம்பி ஏர்போர்ட் வந்திருந்ததால் இப்போது அவர்களுக்குத் தூக்கம் கண்ணை சுழட்ட ஆரம்பிக்க, காரிலே உறங்க ஆரம்பித்திருந்தனர். அரவிந்துக்குத் தூக்கம் கலைந்திருந்ததால் ஜன்னல் வழியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்திருந்தான்.  கடற்கரை ரோட்டில் கார் 

என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 15என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 15

அத்தியாயம் –15  சத்யா ஆட்டோவை செலுத்திக் கொண்டிருக்கும் பன்னீரை ஓரக் கண்ணால் பார்த்தபடியே பயணம் செய்து கொண்டிருந்தாள். அவள் சென்னையில்  வேலைக்கு சேர்ந்து மூன்று வருடங்களும் பன்னீரின் ஆட்டோவில் தான் காலையிலும் மாலையிலும் சென்று வருகிறாள். பன்னீருக்கு யாரும் இல்லை. எங்கோ