Tamil Madhura தமிழ் மதுராவின் சித்ராங்கதா,Tamil Madhura தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 49

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 49

ராஜுவுக்கு ஜிஷ்ணு ஒரு ஆதர்சநாயகன். ரட்சிப்பதும், காப்பதும்தான் கடவுளின் அவதார நோக்கமென்றால் அவரைப் பொறுத்தவரை அவன் நாரணனின் அவதாரம்.

கோதாவரிக் கரையில் இருக்கும் குக்கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் ராஜூவின் தாத்தா. கரைபுரண்டு ஓடும் நதியில் படகோட்டி மக்களை அக்கரையில் சேர்ப்பதுதான் குலத்தொழில். குகனின் வழித்தோன்றல் என்று பெருமையாய் சொல்வார்கள். கோதண்டராமன்தான் அவர்கள் குலதெய்வம். வருடம் ஒருமுறை கொண்டாடும் சீதாராம கல்யாணம்தான் அவர்கள் திருவிழா.

ஒருமுறை வெள்ளத்தால் கிராமமே மூழ்க, பிழைக்க வழியின்றி கோதாவரித்தாயை விட்டு கிருஷ்ணா நதிக்கரையிலிருக்கும் குண்டூருக்கு வந்தார்கள். விவசாயக் கூலியாய் சேர்த்து விடுவதாக சொல்லி கிராமத்து மக்களை பணக்காரர்களின் தோட்டத்தில் கொத்தடிமையாய் சேர்த்து காசு பார்த்தது இடைத்தரகர் கூட்டம். வெளியே போவது சுலபமில்லை. கொன்றே விடுவார்கள். விதியை நொந்து வாழப்பழகிக் கொண்டனர் அனைவரும்.

இருவது ரூபாய் தினக்கூலி வாங்கும் குடும்பத்திடம் நபர் ஒருவருக்கு இரண்டு லட்சம் தந்தால் விடுவிப்போம் என்று கறாராகப் பேசினர் முதலாளி வர்க்கத்தினர். ஆள்பவர்கள் மாறினாலும் மக்கள் நிலை மாறாதது போல, நிலம் பலர் கைகளுக்கு மாறினாலும் அடிமைகளும் நல்ல தொகைக்கு புது முதலாளிகளிடம் விலை பேசப்பட்டனர். எல்லா குடும்பமும் சேர்ந்து குருவி சேர்ப்பது போல பணத்தை சேர்த்து ராஜுவை விடுவித்தது.

“ராஜூ எங்க ஆயுள் இந்த மண்ணுலதான் போகும். நீ வெளிய சம்பாரிச்சு நம்ம இளங்குருத்துகள ஒவ்வொண்ணா காப்பாத்து” என்று கண்கலங்கியவர்களிடம், அவர்கள் வணங்கும் ராமக்கடவுள் முன் வாக்களித்தார் ராஜு.

“பெரியநாணா என்னால எவ்வளவு முடியுதோ அவ்வளவு உழைச்சு பணம் சேர்த்து நம்ம பசங்களை விடுவிப்பேன். அவனுங்களும் என்கூட சேர்ந்து உழைக்க ஆரம்பிகுறப்ப நம்ம கிராமமே விடுதலையாகும். இதை நம்ம ராமைய்யா கண்டிப்பா நிறைவேத்துவார்” என்று கலங்கி விடை பெற்றார்.

முடிந்த அளவு மனைவியுடன் சேர்ந்து உழைத்து கிராமத்து மக்களை விடுதலை செய்தார். குழந்தை குட்டி என்று வந்தால் தனது லட்சியத்துக்குத் தடையாகுமென எண்ணி ஊராருக்காகவே வாழ்ந்து வரும் தம்பதியினர்.

தான் விடுவித்த இரண்டு இளைஞர்களுக்கு வேலை போட்டுத் தரும்படி வந்து ஜிஷ்ணுவிடம் நின்றார். அவர்களது கதையைப் பற்றிக் கேட்டவனிடம் சுருக்கமாக நடந்ததை சொன்னார்.

“அப்ப நான் உங்களுக்குத் தந்த போனசை இந்தப் பசங்க விடுதலைக்கு தந்துட்டிங்க” என்றவனிடம் பதில் சொல்லாமல் சிரித்தபடி வேலையை கவனித்த ராஜுவை சில நிமிடங்கள் உற்றுப் பார்த்தான் ஜிஷ்ணு. அந்தப் பார்வைக்கு அர்த்தம் சில மாதங்களில் விளங்கியது. ஆம் அது கண்ணன் குசேலனைப் பார்த்த பார்வை என்று பின்னர் தெரிந்து கொண்டார்.

கையைப் பிசைந்தபடி சொன்னார் ராஜு, “பாபு குடியிருக்குற வீட்டைத் தவிர எல்லாத்தையும் அடகு வச்சு புது பிசினெஸ்ல போடப்போறேன்னு சொல்லுறிங்க. நஷ்டம் வந்தா நம்மால தாங்க முடியாது. எதுக்கும் நீங்க கொஞ்சம் யோசிச்சுட்டு செய்ங்க”. அவரது குரலில் முட்டாள்தனமான அவனது செய்கையால் ஏற்பட்ட கோவத்தை அடக்கிக் கொள்ளும் எண்ணம் தெரிந்தது.

“ராஜு இதுனால நான் தெருவுல நின்னாக் கூட சந்தோஷமா ஏத்துக்குவேன். நஷ்டமானா என்ன ராஜு, நான் படிச்ச படிப்புக்கு ஒரு சின்ன வேலை கூடவா கிடைக்காது. அதை வச்சு மூணுவேளை சாப்பிட்டுக்குறேன்” புன்னகையோடு சொன்னான் ஜிஷ்ணு.

“பாபு, சாப்பிடுறது மட்டுமா வாழ்க்கை… உங்க வீட்டுல இப்ப உயரத்துல நிக்குற உங்களை அண்ணாந்து பாக்குறாங்க. இங்கேருந்து கீழ விழுந்தா அடி பலம்மா இருக்கும் பாபு” என்று வருத்ததோடு சொன்னவரின் வாயைத் தன் புன்முறுவலால் அடைத்தான்.

புது தொழிலைத் தொடங்க என்று அழைத்து சென்றவனுடன் மனத்தாங்கலால் சிந்தனையில் ஆழ்ந்தபடியே காரில் வந்தவருக்கு, தன் கிராமமக்கள் கொத்தடிமையாய் இருக்கும் நிலத்துக்கு வந்ததும்தான் உண்மை புரிந்தது.

“இந்த நிலத்தை அப்படியே உங்க சொந்தக்காரங்களோட சேர்த்து விலைபேசி வாங்கிட்டேன் ராஜு. பணம் பத்தலைன்னுதான் எல்லாத்தையும் அடமானம் வச்சேன். உங்ககிட்ட சொன்னாத் தடுப்பிங்கன்னுதான் சொல்லல.” என்றவாறே கீழே இறங்கி ராஜுவுக்குக் கார் கதவைத் திறந்து விட்டான் அந்த செயல்வீரன்.

பண்டிகையை வரவேற்பதைப் போல அவர்களை ஆரவாரமாய் வரவேற்ற மக்கள், காரிலிருந்து இறங்கிய ராஜுவைத் தூக்கி தங்கள் மகிழ்வைத் தெரிவிக்க, புன்னகையுடன் காரில் சாய்ந்தவாறு பார்த்துக் கொண்டிருந்தான் ஜிஷ்ணு.

கண்கள் பணிக்க நின்ற ராஜு, “நானா இதுக்குக் காரணம்… இல்லவே இல்ல… தன் சொத்து சுகம் எல்லாத்தையும் அடமானம் வச்சு நம்மள மீட்ட அந்த தேவுடுதான் இனிமே நமக்கு எல்லாமே” என்று தளுதளுக்க ஒரு உணர்ச்சிப் பிரளயமே நடந்தது அங்கு.

அன்றிலிருந்து அவர்கள் ராஜா ஜிஷ்ணுதான். அவனில்லாமல் அந்த ராஜ்ஜியத்தில் ஒரு காரியமும் நடக்காது. சிலர் தங்கள் குழந்தைகளுக்கு ஜிஷ்ணு என்ற பெயரை சூட்டிவிட்டு, அதைக் கூப்பிட்டால் மரியாதையில்லை என்றெண்ணி ‘சின்னா’, ‘நயனா’ என செல்லப் பெயரில் மகனை அழைக்கிறார்கள்.

ராஜு, ராமனின் பாதம் பணியும் அனுமனைப் போல ஜிஷ்ணுவின் நிழலாய் மாறிப் போனார். ஜிஷ்ணு விவாகரத்துக்குக் கையெழுத்துப் போட்டதைக் கேள்விப்பட்டு இரண்டு நாளாய் அவனறியாமல் கண்ணீர் வடிக்கிறார். மறுநாள் காலை அவர்கள் வழக்கமாய் நடத்தும் சீதாராமன் கல்யாணத்தில் கூட கலந்து கொள்ள கூட ஆர்வமின்றி, ஜிஷ்ணுவுடன் சேர்ந்து கொண்டல்ராவின் திருமண வரவேற்பில் தலையைக் காட்ட வந்தவருக்கு, அங்கு சரயுவைக் கண்டது தெய்வ சங்கல்பமாய் தோன்றியது.

இரவு பஸ்ஸில் சென்னைக்கு செல்ல வேண்டும் என்று சரயு சொன்னதும் ஏமாற்றத்தால் வாடிய ஜிஷ்ணுவின் முகம் கண்டு பொறுக்காமல் வேண்டுதல் விடுத்தார் ராஜு.

“நாளைக்கு பிரம்ம முஹுர்த்தத்துல சீதாராம கல்யாண உற்சவமிருக்கும்மா… அதுல நீங்களும் பாபுவும் வந்து கலந்துகிட்டா எங்களுக்கு சந்தோஷமாயிருக்கும்மா”

தயங்கியவளை, “இரு சரயு, நாளைக்கு ஈவ்னிங் நானே உன்னை அதே பஸ்ஸில் ஏத்தி விடுறேன்” தனது ஆசையையும் வெளியிட்டான் ஜிஷ்ணு.

“அதே பஸ் ஓகே. அதே டிக்கெட் செல்லுமா?”

“வாயாடி… புது டிக்கெட் வாங்கி ஏத்தி விடுறேன். இன்னைக்கு ராத்திரி குண்டூர்ல தூங்கிட்டு விடியுறதுக்கு முன்ன கிராமத்துக்குக் கிளம்பணும். அங்கதான் கல்யாணம்… சரியா?” என்று சொன்னான் ஜிஷ்ணு.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 7தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 7

மறக்காமல் பன்னிரண்டு மணிக்கு ஜிஷ்ணுவை அழைத்தாள் சரயு. “சொல்லு ஜிஷ்ணு” “இன்னைக்கு நீ சொன்ன இடத்துல சைட் சீயிங் டூர் ஒண்ணு ஏற்பாடு செஞ்சுருக்கேன். மத்தபடி ஆட்டோமொபைல் சம்மந்தமான இடத்தைப் பாக்க நீயும் வந்தா நல்லாயிருக்கும் சரயு. உன்னால முடியும்னா வரப்பாரேன்”

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 55தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 55

காலை புத்தம் புதிதாக அவளுக்காகவே விடிந்ததைப் போல் சரயுவுக்குத் தோன்றியது. தூக்கத்தில் ரங்கராட்டினம் சுற்றுபவளை தனது பரந்த தோள்களுக்கிடையே அடக்கி தப்பித்து விடாமல் கைகளால் சிறை செய்திருந்தான் அவள் அன்புக் கணவன். நீண்ட நாட்களுக்குப் பிறகு மிகவும் சந்தோஷமாய் உணர்ந்தாள். சிறு