Tamil Madhura தமிழ் மதுராவின் சித்ராங்கதா,Tamil Madhura தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 48

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 48

ரயு இல்லைன்னா எங்களைப் பொதைச்ச இடத்துல புல்லு மொளச்சிருக்கும். அவளுக்கு துரோகம் செய்ய எப்படிடா உனக்கு மனசு வந்தது…” என்று ராம் சட்டென சொல்லிவிட ஜிஷ்ணுவின் முகம் வருத்தத்தால் வாடியது.

“ராசு, தம்பிகிட்ட என்ன மரியாதையில்லாம பேசிகிட்டு… என்னடா நீ இன்னமும் கூரில்லாம இருக்க. அவரை சாப்பிடக் கூட்டிட்டு வா” என்று கடிந்து கொண்டார்.

தனக்குப் பரிந்து பேசிய பொற்கொடியிடம், “சரயுவுக்கு நான் மனசறிஞ்சு துரோகம் செய்யல. ஆனா என்னை அறியாமலேயே எங்கேயோ தப்பு நடந்துடுச்சு” மெதுவான குரலில் சொல்ல,

“மனுசனா இருந்தா தப்பு இருக்கும் தம்பி. இவனுக்கு சரயுன்னா உசுரு. அவ மேல ஒரு துரும்பு பட்டாக் கூடத் தாங்க மாட்டான். அவளும் அப்படித்தான்”

‘நானும் அப்படித்தான்ம்மா சரயு எனக்கு பிராணம்’ என்று மனதில் சொல்லிக் கொண்டான்.

“சாரி விஷ்ணு… சரவெடி விஷயத்துல நான் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுடுறேன். அவ கஷ்டப்பட்டா என்னால தாங்க முடியலடா. அவ அழுது நான் பாத்ததில்லைடா… மனசுல அடக்கி வச்ச துக்கமெல்லாம் வெடிக்க, அபி வயத்துலே இருக்குறப்ப கண்ணீர் விட்டுட்டா. அதை அப்பறமா பேசலாம்” கலங்கினான்.

“அணுகுண்டு, சரயுவும் நீயும் சேர்ந்து வாழுறதைப் பாக்க ரொம்ப சந்தோஷமாயிருக்கு. ஏன் நீதான் ராம்னு சரயு என்கிட்டயிருந்து மறைச்சா?” என்று கடகடவென கேள்விகளைத் தொடுக்க,

குளியலை போட்டவுடன், குட்டி ஷார்ட்ஸ் அணிந்து குடுகுடுவென ஓடி வந்தான் அபி.

“டேய் டிரெஸ்ஸை மாத்திட்டுப் போடா” துரத்தினாள் சரயு. ராம் பிடித்து அவன் பின்னால் செல்லமாய் ஒரு அடி வைக்க,

“எனக்கு வலிக்கலையே” முகத்தை சுருக்கிப் பழிப்பு காட்டினான் அபி.

“ப்பா வெல்கம் டூ சொல்லு” என்று ராமின் மடியில் சட்டமாய் அமர்ந்துக் கொண்டு மிரட்டலாய் சொன்னான்.

“உன் கேள்விக்கெல்லாம் ஒரே வரில பதில் சொல்ல சொல்லி என் பையன் சொல்லிட்டான் விஷ்ணு… சரவெடி இங்க வாடி… ஆரம்பிக்கலாமா சிண்டு” என்று மகனிடம் அனுமதி கேட்க, அவனும் பூஞ்சிரிப்பை சிந்தினான்.

சரயுவும் ராமும் சேர்ந்து அபிமன்யுவின் இரண்டு புறமும் நின்றுக் கொண்டு சோபாவில் அமர்ந்திருந்த ஜிஷ்ணுவிடம்,

“வெல்கம், வெல்கம், வெல்கம் டூ…” என்று இழுக்க, வழக்கமான விளையாட்டு தந்த குஷியில் மேலே தொடர சொல்லி குறுஞ்சிரிப்பால் அனுமதி அளித்தான் சிண்டு.

“வெல்கம் டூ த பாலஸ் ஆப் அவர் பிரின்ஸ் அபிமன்யு தாரணிக்கோட்டா” தோழர்கள் இருவரும் கோரசை முடிக்க, அதிர்ச்சி தாங்காமல் எழுந்து நின்றுவிட்டான் ஜிஷ்ணு தாரணிக்கோட்டா…

குவ லோனா கோதாரி எறுபிக்கிந்தி

ஆ எறுபேமோ கோரிண்டா பண்டாயிந்தி

பண்டின சேதிக்கென்னோ சிக்குலோச்சி

ஆஹா சிக்கந்தா சீர கட்டிந்தி

சீரலோ சந்தமாமா எவ்வரம்மா

ஆகும்மா சீதம்மா…

அழகான கிராமியப் பாடலைப் பெண்கள் பாட, பாஷை புரியாவிட்டாலும் அதன் இனிமையில் தன்னைத் தொலைத்தாள் சரயு.

“ஜிஷ்ணு இந்தப் பாட்டு எவ்வளவு அழகாயிருக்கு… என்ன அர்த்தம்?” மாப்பிள்ளை மாதிரி உரிமையோடு அவள் பக்கத்திலமர்ந்திருந்தவனிடம் கேட்டாள். மென்மையான குரலில் சொல்லத் தொடங்கினான்.

காலைக் கதிரவனின் செந்நிறக் கதிர் பட்டு செம்மையானது கோதாவரி.

அந்த செம்மையை அப்படியே நீரின் வழியே மருதாணிச் செடியிடம் சேர்பித்தது. அந்த மருதாணிதான் அவள் உள்ளங்கை வெட்கத்தால் செக்கச் சிவந்திருப்பதற்குக் காரணம். அந்த வெட்கத்தையே புடவையாக அணிந்து, நிலவைப் போல ஒளிரும் அந்தப் பெண் யார்? அந்த அழகிதான் சீதம்மா (சீதை).

வாய் அர்த்தத்தை சொன்னாலும் கண்கள் அவளையே பார்த்தது.

சீதாராமனின் திருமண உற்சவம் முடிந்தபின் நடந்த பாட்டுக் கச்சேரியில் லயித்திருந்தாள் சரயு. பாடலில் சொல்லப்பட்ட மிதிலா ராஜகுமாரி ஜானகியினைப் போல் சிவப்பு நிறப் பட்டில், சிவந்த வளையல்களில், எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தார் போல் அவள் கழுத்தை அலங்கரித்த சிவப்பு நிற பாசிமணியில் பன்மடங்கு அழகு பெருகி ஜொலித்தாள் சரயு.

ஜிஷ்ணுவுக்கு சரயுவை அன்றுதான் முதன் முதலாகப் பார்ப்பது போலத் தோன்றியது. பேசிச் சிரிக்கும் போது சேர்ந்தே சிரிக்கும் சின்ன விழி மீன்களை, அதில் அழுத்தமாய் எழுதப்பட்டிருந்த கருநிற கண்மஷியை, ஊஞ்சல் கட்டி ஆடலாம் போன்ற அடர்த்தியான சடையை, தாழம்பூ உடலைத் தழுவிய உடையை, அவன் உள்ளத்தைத் திருடிய அந்த செந்தமிழ் நாட்டுத் திருமகளை விழியெடுக்காமல் பார்த்தான்.

மை வைத்தக் கண்களின் பின்னால் போகிறதே மதி போகிறதே

தூண்டிலிடும் இடையின் அழகில் போகிறதே மதி போகிறதே

அசரடிக்கும் இதழின் அழகைப் பார்த்து பைத்தியமே பிடிக்கிறதே

உன் வசீகரத்தால் நான் பித்துப் பிடித்து அலைகிறேன்

இந்த அழகை நீண்ட நாட்கள் தவற விட்டுவிட்டேன்

என் இதயம் உன்னிடமே செல்கிறது

இந்த அற்புதமான உணர்வுதான் காதலா?

சரயு, ஜிஷ்ணுவின் கண்ணிமைக்கா பார்வையிலேயே அவன் மனதைப் படித்தாள்.

உன்னைப் பித்துப் பிடிக்க வைப்பது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.

என் மீதான உன் காதலை வெளிக்கொண்டு வருவது எனக்கு சந்தோஷமாய் இருக்கிறது.

உன்னை தொல்லை செய்வது எனக்கு ஆனந்தம்

உன்னை தூண்டிவிடுவது எனக்கு விளையாட்டு

உன்னைக் கஷ்டப்படுத்துவது எனக்கும் வருத்தமாகத்தானிருக்கிறது

இருந்தாலும் இதைத் தொடரவே எனக்கு விருப்பம்

இதைக் காதல் என்றே வைத்துக் கொள்ளலாமே!!!

குறும்புச் சிரிப்பால் அவனது பார்வைக்கு பதிலளித்தாள். பதிலை உள்வாங்கிய ஜிஷ்ணு ச்சே என்று அலுத்துக் கொண்டான்.

இது உனக்குப் புரிகிறதா?

இல்லை நானே வாய்திறந்து சொல்ல வேண்டுமா?

– என் கனவு முழுதும் நீதான் ஆத்மார்த்தமாக நிரம்பியிருக்கிறாய் என்று

அவனது கண்கள் கேட்ட கேள்விக்கு கையைக் கட்டி சளைக்காமல் அவனை பதில் பார்வை பார்த்தாள்.

உன் கண்முன்னே காத்திருக்கிறேன்,

அதை உன் வாயால் நீ சொல்லி நான் கேட்பதற்கு

இதற்குமேல் வேறென்ன விளக்கம் சொல்வது என்றெண்ணி பெருமூச்சு விட்டான்.

எனது மௌனம் ஆயிரம் விதங்களில் நீ இருக்குமிடங்களில் எல்லாம் நானிருப்பதை உணர்த்தவில்லையா?

மௌனமாய் கைகளை நீட்டினான் ஜிஷ்ணு.

உன்னைப் பார்த்தவுடனே நான் உன்னுடையவளாகிவிட்டதை நீ உணரவில்லையா?

தனது கைகளை அவனிடம் தந்தாள் சரயு. தன்னிடம் அடைக்கலமான கைகளை அழுத்தமாகப் பற்றிக் கொண்டான் ஜிஷ்ணு.

முனாவிடம் விவாகரத்துக்குக் கையொப்பமிட்டது வீட்டில் ஒரு பெரிய பூகம்பத்தைக் கிளப்ப, யார் கண்ணுக்கும் சிக்காமல் வரலட்சுமியை துணைக்கு அழைத்து சென்று கையோடு சந்தனாவை கொடைக்கானலில் இருக்கும் பள்ளியில் சேர்த்துவிட்டு குண்டூர் வந்தான்.

குண்டூரில் இறங்கியவுடன் ஜிஷ்ணுவைத் தொலைப்பேசியில் அழைத்த கொண்டல்ராவ், தனது திருமணத்துக்கு வராமலிருந்ததற்காக சரமாரியாக திட்டி, மாலை நடக்கும் வரவேற்பிலாவது கலந்து கொள்ளும்படி ஆணையிட்டான். நண்பனின் வேண்டுகோளைத் தட்ட முடியாது, இரண்டு நிமிடம் தலையைக் காட்டி சென்று விடலாம் என்ற எண்ணத்துடன் ராஜுகோகுலத்தையும் அழைத்துக் கொண்டு ரிஷப்ஷனுக்கு ஜிஷ்ணு சென்றான்.

அங்குதான் அவன் சீதையைக் கண்டான். அமாவாசை தினத்தில் தன் பால்நிலவைக் கண்ட அதிர்ச்சியில் மலைத்து நின்றான்.

கிளிப்பச்சையில் கரும்பச்சை முத்துவேலைப்பாடு செய்யப்பட்ட டிசைனர் சுடிதார் பொன்னிற மேனியைத் தழுவியிருக்க, மீனாட்சி கையில் ஏந்திய கிளியாய், மயக்கும் புன்னகையுடன் மோகினியைப் போல நின்ற சரயு, மணமகளிடம் பரிசினைத் தந்தாள்.

உள்ளுணர்வு என்னமோ சொல்ல, யாரோ பிடித்து உலுக்கியதைப் போல விலுக்கென நிமிர்ந்தாள் சரயு. மண்டபத்தை சுற்றிலும் கண்ணை அவசரமாக சுழலவிட்டவள் ஜிஷ்ணுவின் மேல் நிறுத்தினாள். ‘விஷ்ணு’ அவள் இதழ்கள் மெலிதாய் பிரிந்ததை அத்தனை தொலைவிலிருந்தும் ஜிஷ்ணுவால் பார்க்க முடிந்தது.

“அந்த அம்மாயி யார் பாபு?” ஜிஷ்ணுவின் மலர்ச்சியைப் பார்த்து அவன் கண்கள் சென்ற திக்கில் நோக்கிய ராஜு வினவினார்.

“சரயு” என்று பூப்போல் அவளது பேரை சொன்னான் ஜிஷ்ணு.

எதிர்பாராமல் கிடைத்த ஜிஷ்ணுவின் தரிசனத்தால் சரயுவின் செம்மாதுளை நிற இதழ்கள் தானாய் மலர்ந்து முல்லைப் பற்கள் மின்னலிட புன்னகை சிந்தியது. அவசர அவசரமாய் அவனைப் பார்த்தபடியே மற்றவர்களிடம் விடை பெற்று ஜிஷ்ணுவிடம் ஓடி வந்து மூச்சு வாங்க நின்றாள்.

“ச்சை… த்தன்யா ரூம்மேட்” சரயு மணப்பெண்ணை சுட்டிக்காட்ட,

“கொண்டல்ராவ் ரூம்மேட்” என ஜிஷ்ணு மணமகனை அவளுக்கு சுட்டிக் காட்டினான். சூரியகாந்தியாய் மலர்ந்த முகங்களை ராஜு சந்தோஷமாய் பார்த்தார். ‘சீதம்மா ஒச்சிந்தி…’ (சீதம்மா வந்தாச்சு) என்று அவரது மனது சொன்னது.

இருவரும் சேர்ந்தே உணவு உண்ண சென்றனர். தனக்குப் பரிமாறிய இனிப்பை சற்று ருசி பார்த்துவிட்டு, அவளுக்குப் பிடிக்கும் என்றெண்ணி ஜிஷ்ணு சரயுவின் இலையில் வைக்க, தன்னுடைய பப்படத்தையும், கத்தரிக்காய் புளிக்கூட்டையும்,

“ஜிஷ்ணு நல்ல காரமா புளிப்பாயிருக்கு உங்களுக்குப் பிடிக்கும்…” என்று சொல்லி வைத்தாள் சரயு. என்ன சாப்பிட்டோம் என்றே தெரியாமல் அவளது முகத்தை பார்த்தவாறே சாப்பிட்டான் ஜிஷ்ணு. இனிப்பை உண்டவள் மற்றவற்றில் போடப்பட்டிருந்த மிளகாய்களைக் கண்டு எதையும் உண்ணவில்லை.

நண்பர்களிடமும் அவ்வப்போது தென்பட்ட தெரிந்த முகங்களிடமும் அவசர அவசரமாய் குசலம் விசாரித்துவிட்டு சரயுவிடம் ஓடி வந்தான் ஜிஷ்ணு.

இருவர் முகமும் புன்னகையைப் பூசிக்கொள்ள, ஏனோதானோ என்று வரவேற்பில் கலந்து கொள்ள வந்த இருவரும், பாட்டுக் கச்சேரியில் அருகருகே அமர்ந்தபடி ஒன்றிப்போனார்கள்.

ஜிஷ்ணு ஓரக் கண்ணால் அவளைப் பார்த்தான். தனது கை பட்டும் படாமல் மெலிதாக அவளைத் தீண்டும் வண்ணம் வைத்துக் கொண்டான். அவனது கள்ளத்தனத்தை கண்டுகொண்டு குறுகுறுவென அவனைப் பார்த்தாள் சரயு. விட்டுத் தள்ளி நிற்கத்தான் நினைக்கிறாள், பாழும் மனது சொன்னாலும் கேட்பதில்லையே.

‘படிச்சு முடிச்சுட்டேன்… இப்போதைக்கு ஒரு கம்பனில வேலை பாக்குறேன். லக்ஷ்மி அக்கா கல்யாணம் பண்ணிக்க சொல்லுறா. எவ்வளவு நாள்டா என்னால தள்ளிப் போட முடியும்.

திருட்டு படவா, தெரியாம படுற மாதிரி கையை உரசுற, தோளை உரசுற, என் கண்ணு வழியா எனக்குள்ள புதைஞ்சுடுற மாதிரி பாக்குற. உன் காதலை மனசுக்குள்ளயே அடக்கி வச்சிருக்கியா?

என் தோளோடு தோள் உரசுனா மட்டும் போதுமா விஷ்ணு… இப்படி எப்பையாவது மட்டும் உன்னை பாக்குறது எனக்குப் போதவே மாட்டேங்குது. எப்படா என்னை உன் கூடவே வச்சுக்கப் போற? நான் உன் கூடவே, உன் முகத்தைப் பார்த்துகிட்டே இருக்கணும்னு நினைக்கிற மாதிரி, என்னை உன்கூடவே வச்சுக்கணும்னு நீயும் நினைக்கணுமே…

‘கடல் மணலைக் கூட எண்ணலாம், அர்ஜுனன் பொண்டாட்டியை எண்ண முடியாது’ன்னு எங்க பாட்டி சொல்லும். உன் பேருக்கு ஏத்த மாதிரி நீயும் அப்படியே இருக்கியா… நான் உன் வாழ்க்கைல கடல் மணல்ல இருக்குற ஒரு துகளா இல்ல நீ பொத்திப் பாதுகாக்குற பவளப் பாறையா? எனக்கு உன் வாயால எப்ப சொல்லுவ விஷ்ணு’ மனதினுள் அவனிடம் பேசியவள் வழக்கம் போல வெளியே சொல்லாமல் மறைத்தாள்.

“உங்களுக்கு பயங்கர அலைச்சலா ஜிஷ்ணு?”

“ஆமாம் கொஞ்சம் அலைச்சல்… ஏன் கேக்குற?”

“இளைச்சு, கருத்து போயிட்டிங்க… கண்ணெல்லாம் சிவந்து… மிளகாய் தோட்டம் வச்சுருக்கிங்கன்னு தெரியும். அதுக்காக மிளகா வத்தலோட சேர்ந்து நீங்களும் காஞ்சிங்களா… உடம்பை பார்த்துக்க மாட்டிங்களா?” குரலில் அவன் உடம்பை சரியாக கவனிக்கவில்லை என்ற ஆதங்கம் தெரிந்தது.

ஜிஷ்ணுவுக்கு தன்னை அவள் கவனிக்கிறாள் என்பதே மனதில் சந்தோஷப்பூ பூக்கச் செய்தது.

“உன் தங்கக்கலர் கூட என்னைக் கம்பேர் பண்ணாதேரா. பயங்கர கருப்பாத்தான் தெரியுவேன். பட் உன்கிட்ட நிறையா மாற்றம். பெரிய பொண்ணாயிட்ட… சக்கரம் கட்டிட்டு சுத்துற உன்னோட கால், இப்பத்தான் கொஞ்சம் நடக்க ஆரம்பிச்சுருக்கு. கொஞ்சம் நிதானமா பேசுற” சில மணி நேரங்களில் தான் அவளிடம் கண்டறிந்த மாற்றங்களை சொன்னான்.

மொழி புரியாவிட்டாலும் அந்த ஆத்மார்த்தமான உரையாடலை ராஜு உணர்ந்து அவர்களுக்கு சற்று தனிமை கொடுத்து நகர்ந்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 50தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 50

இரவு ராஜுவின் வீட்டிலேயே சரயுவைத் தங்க வைத்தார்கள். வீட்டின் முன் நின்று வரவேற்ற வேம்பும், பின்கட்டிலிருந்த கிணறும் சரயுவுக்கு தன் வீட்டை நினைவு படுத்தியது. ஆனாலும் அவள் வீடு பெரியது. ஒரு தெருவில் ஆரம்பித்து பின் தெருவில் முடியும். இந்த வீடு

என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 29என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 29

அத்தியாயம் -29   கல்லாய் இறுகிய முகத்துடன் வீட்டிற்கு நடந்து வந்துக் கொண்டிருந்தாள் சித்தாரா. அவளின் நிலை கண்டு சந்திரிகாவின் கண்களில் நீர். “சித்து மனசைத் தளர விடாதே. இந்த சைலஜாவப் பார்த்தாலே எனக்கு நல்ல அபிப்பிராயம் வரல. இவ்வளவு நேரம்