Tamil Madhura தமிழ் மதுராவின் சித்ராங்கதா,Tamil Madhura தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 41

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 41

இன்று

மியூனிக்

காலை வழக்கம்போல் மெதுவாக எழுந்து, வேகமாய் அலுவலகத்துக்குக் கிளம்பினாள் சரயு.

‘பத்து வருஷமா இதே தொல்லை. இவனால என் தூக்கமே கெட்டுப் போகுது’ மனதினுள் ஜிஷ்ணுவைத் திட்டியபடியே சாவியை ஸ்டைலாய் சுழற்றியவாறு, கோட்டை எடுத்துத் தனது தோளில் போட்டுக் கொண்டாள்.

வாசலில் நிறுத்தியிருந்த காரில் ஏறும்முன், எதிரே சற்று தொலைவில் இருந்த சிறிய கபே வாசலில் போடப்பட்டிருந்த டேபிளில் காப்பியை அருந்தியபடியே அவளைக் கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்த ஜிஷ்ணு பட்டான். அருகே இருந்த காலி கப்புகள் அவன் நீண்ட நேரமாய் அங்கு காத்துக் கொண்டிருந்ததை பறைசாற்றின.

‘ஓ ராத்திரி பண்ண கேப்மாரித்தனத்துக்கு மன்னிப்புக் கேட்க, காலைலயே கூர்க்கா வேலை பாக்க வந்தாச்சா’ அவனை அலட்சியமாய் பார்த்தவாறே ஒரு சிக்லெட்டை வாயில் மென்றபடி காரைக் கிளப்பினாள்.

‘சந்தனாவையும் பின்னியையும் ப்ளைட்டுல ஏத்தி விட்ட கையோட இவ வீட்டு வாசல்ல தேவுடு காக்குறேன். எவ்வளவு திமிரா பார்த்துட்டு போறா பாரேன்’ திட்டியபடி தனது காரில் ஏறி அவளது காரைப் பின் தொடர்ந்தான்.

கண்ணாடியில், பின்னால் வரும் அவனைப் பார்த்து பழிப்புக் காட்டியபடி பபுள்கம்மில் ஒரு பெரிய முட்டை விட்டவளைப் பார்த்து திகைத்து சிரித்த ஜிஷ்ணு சற்று பின்தங்க, அந்த இடைவேளையில் காரில் சிட்டாய் பறந்தாள். தொடர முயன்ற ஜிஷ்ணுவுக்கு அவளைப் பிடிக்க முடிந்தால் தானே, சந்து பொந்துகளில் புகுந்து சென்றுவிட்டாள்.

‘சனிக்கிழமையும் அதுவுமா எங்க போனா?’ யோசித்தவன் அவள் அலுவலகத்துக்கு சென்றதை அரைமணியில் கண்டுபிடித்தான்.

‘என் கண்ணுல மண்ணைத் தூவிட்டு மறையுறதே இவளுக்குப் பொழப்பாப் போச்சு’ திட்டியபடி அவளது அலுவலகத்துக்கு எதிரே இருந்த பார்க்கில் அமர்ந்தான். ‘எப்படியும் வெளிய வந்துதானே ஆகணும்’

தியம் சரயு அலுவலகத்துக்கு எதிரே இருந்த சிறிய கடைக்கு உணவு வாங்க சென்றாள். மால்கமிடம் பேசியபடியே காரட், வெள்ளரி கலந்த காய்கறி சாலட், பழரசம், சிறிய யோகர்ட் டப்பா என்று எடுத்து பில் போட நின்றவளின் முன்னே குதித்து நின்றான் ஜிஷ்ணு.

“வாட் ய ஸ்வீட் சர்ப்ரைஸ். நல்லா இருக்கியா சரயு?” கண்களில் ஆச்சரியம் விலகாமல் கேட்டான் சந்தனாவின் தகப்பன்.

முதல் முறை சந்தனாவைத் தேடி வந்த போது பேசிய அதே வசனத்தை அச்சு பிசகாமல் அதே உணர்ச்சிகளுடன் பேசிய ஜிஷ்ணுவைப் பார்த்து அசந்து நின்றுவிட்டாள்.

“உனக்குத் தெரிஞ்சவரா சரயு?” என்ற மால்கமின் கேள்விக்குக் கூட அவளால் பதில் சொல்ல முடியவில்லை.

சரயுவின் அதிர்ச்சியைக் கண்டு மால்கம் தானே சென்று ஜிஷ்ணுவிடம் அறிமுகப்படுத்திக் கொண்டான். இருவரும் ஐந்தே நிமிடத்தில் சிரித்து பேசும் அளவுக்கு நெருங்கிவிட்டனர். மால்கம் கேக் வகைகளை ஆராய்ந்து கொண்டிருக்க இன்னமும் கண்களில் அதிர்ச்சி விலகாமல் நின்ற சரயுவிடம்,

“ஏண்ட்டி(என்ன) சரவெடி, எந்துக்கு இந்த பெத்த ஷாக்” என அவள் கன்னத்தை சுண்டியபடியே கேட்க,

“எப்படிடா இப்படி நாலு சிவாஜி பத்து நாகேஸ்வரராவ் கலந்த மாதிரி நடிக்குற… அன்னைக்கும் இதே மாதிரிதானே பேசின… கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதானே என்னைப் பார்த்த, என்னமோ வருஷக்கணக்கா பிரிஞ்சிருந்த மாதிரி சீன் போடுற”

“சரயு டார்லிங், உலகத்துல இருக்குற பாதி கார் கம்பனிஸ்க்கு உன்னைத் தேடி போயிருக்கேன் தெரியுமா? நீ ஜெர்மனில இருக்குறதா கேள்விப்பட்டேன். நீ புத்திசாலித்தனமா நடக்குறதா நெனச்சுட்டு, உங்க அக்காகிட்ட கூட வெளிநாட்டுல இருக்குறத மறைச்சாலும், நீயும் நானும் சந்திச்சே ஆகணும்னு அவன் எழுதிருக்கானே.

மூணு மாசம் முன்னே உன் ரூம்மெட் சைத்தன்யாவோட கிளாஸ்மெட் உன்னை பிரான்க்போர்ட்ல பார்த்ததா தகவல் கிடைச்சது. நீதான் ஆட்டோமொபைல் காதலியாச்சே… அதனால இந்த ஊர்ல இருக்க சான்ஸ் இருக்குன்னு முடிவு பண்ணிட்டு அவசர வேலைகளையெல்லாம் முடிச்சுட்டு, இங்கேயும் ஹோட்டல் பிஸினெஸ் ஆரம்பிக்கணும்னு ஒரு புது வேலையை ஏற்படுத்திக்கிட்டுக் கிளம்பினேன். அந்த சமயம் பார்த்து சந்தனாவும் கூட வர ஆசைப்பட்டா. பின்னியும் வரேன்னு சொன்னாங்க. சோ குடும்பமா கிளம்பிட்டோம்.

உன்னைத் தேடித்தான் இந்த ஊருக்கு வந்தேன். ஆனா சந்தனாவோட உன்னைப் பார்ப்பேன்னு நினைக்கல. சந்து என்கிட்டே போன்ல பேசினப்ப பின்னிகிட்ட பேசின உன் குரல் கேட்டது. நான் எவ்வளவு சந்தோஷப்பட்டேன் தெரியுமாடி… வானத்துல பறக்காத குறை…

வேகமா ஓடி வந்தேன். நீ சந்தனாகிட்டயும் பின்னிகிட்டயும் பேசிகிட்டே சாப்பிட்டல்ல, வெளில இருக்குற தெருமுனைல நின்னு ஆறு சிகரெட், நாலு காபி காலி பண்ணிட்டே கண்ணாடி வழியா உன்னை ரசிச்சு பார்த்துட்டே இருந்தேன்.

உன் கூட உட்கார்ந்திருந்தா நீ சாப்பிடுற அழகை எப்படி ரசிக்க முடியும் சொல்லு. சந்தனா, பின்னி ரெண்டு பேரு முன்னாடி உன்கிட்ட ஜென்ட்டில்மென் வேஷம் வேற கட்டணும்” ஜிஷ்ணு அவளை சந்தித்த விதத்தை சொல்ல, ‘உன்னைத் தேடியே அவன் வந்திருக்கான்’ என ராம் சொன்னது எவ்வளவு தூரம் உண்மை என்று நினைத்தபடி ஆவெனப் பார்த்திருந்தாள்.

மஞ்சள் நிலவைக் கண்டு கண் சிமிட்டியபடி, “நல்ல வேளை பேபி, நிஜமான ஸ்வீட் சர்ப்ரைஸா உன்னை பார்க்கல. அப்படி மட்டும் பார்த்திருந்தேன் நேத்து நைட் தந்த கிஸ் எல்லாம் அந்த மீட்டிங்லையே உனக்குக் கிடைச்சிருக்கும்” கூலாய் சொன்னான்.

“உன்னை…” கையில் நறுக்கென சரயு கிள்ள,

“எனக்கு வலிக்கலையே” என்று சரயுவிடம் பழிப்பு காண்பித்த ஜிஷ்ணுவிடம் தென்பட்ட சிறு குழந்தையைக் கண்டு திகைத்தாள் சரயு.

மால்கம் வந்துவிட அனைவரின் உணவுக்கும் சேர்த்து பில் பே செய்த ஜிஷ்ணு, “வா சரயு அந்த பார்க்குல உட்கார்ந்து சாப்பிடலாம்” என்றான்.

“ஆபிஸ் போகணும். எனக்குத் தலைக்கு மேல வேலையிருக்கு” என்றாள் சரயு.

“அப்படியா… நீ ஹேர் ஸ்டைலிஸ்டாவா வேலை பாக்குற?” என்றவன்,

“மால்கம், சரயுவை ரொம்ப நாள் கழிச்சு பாக்குறேன் பட் பேசத்தான் நேரமில்லை. நான் ப்ரீதான். ஆனா நீங்க ஆபிசுக்குப் போகணுமே. சனிக்கிழமை கூட சரயு வேலை செய்ய வேண்டியிருக்கு பாருங்க” என்றான் சோகமாக.

“நோ ஜிஷ்ணு. அடுத்தவாரம் ரெண்டு பேரும் லீவ்ல போறோம். நான் அதுக்கு முன்னாடி முடிக்க வேண்டிய சில வேலைகள் இருந்தது. அதுக்கு ஹெல்ப் பண்ணத்தான் சரயு வந்தா. அவளோட பகுதி எல்லாம் முடிஞ்சது. இன்னைக்கு காலைலயே ஆபிஸ் வெண்டிங் மெஷின்ல இருக்குற சாக்லெட், சிப்ஸ், பிரிட்ஜ்ல இருக்குற பால், டீ எல்லாம் காலி பண்ணிட்டா. அப்பறம் கண்டிப்பா லஞ்சுக்கு பசிக்கணும்னே ஸ்குவாஷ் வேற விளையாடிட்டு வந்தா.

இதெல்லாம் போரடிச்சு போயிடுச்சு போலிருக்கு. உட்கார்ந்து என்னை டாக்குமென்ட் கூட அடிக்க விடாம அறுத்துகிட்டு இருக்கா. நீங்க கூட்டிட்டு போயிட்டா நான் கொஞ்சம் நிம்மதியா வேலை செய்வேன்”

“அப்படியா சொல்லுறிங்க… சரி, உங்களப் பாத்தாலும் பாவமா இருக்கு. அதனால இவளை நான் கடத்திட்டு போறேன். நீங்க நிம்மதியா இருங்க” என்றான் கண்கள் முழுவதும் சிரிப்போடு.

“தாங்க் காட். ஜிஷ் உங்க உதவியை உயிருள்ளவரை மறக்கமாட்டேன். சரயு… நான் ஆபிசுக்கு போறேன். உன் வேலைதான் முடிஞ்சுடுச்சே, நீ உன் பிரெண்ட் கூட பேசிட்டு அப்படியே வீட்டுக்கு ஓடிப் போயிடு. இன்னும் ஒரு வாரத்துக்கு ஆபிஸ் பக்கம் எட்டிப்பாக்காதே. அப்படி வந்தன்னு கேள்விப்பட்டேன் கொன்னுடுவேன்” என்று மிரட்டிச் சென்றான்.

“போடா எட்டப்பா. ஓசி லஞ்சுக்காக என்னைக் காட்டிக் கொடுத்துட்டியேடா” கத்திய சரயுவைப் பார்த்து வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்தான் ஜிஷ்ணு.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 14தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 14

இன்று மியூனிக் அலுவலகத்திலிருக்கும் போது ராமை அழைத்தாள் சரயு. குசலம் விசாரித்தபின் ஜிஷ்ணு வந்திருப்பதைச் சொன்னாள். எதிர்பாராதவிதமாக அவனை சந்தித்ததையும் மறைக்கவில்லை. ராமுக்குத் தெரியாத ரகசியம் அவளிடம் ஏதுமில்லை. “எந்த ஜிஷ்ணு… ஓ… உன் அடலசன்ட் க்ரஷா? அவன் எங்க இந்தப்

தமிழ் மதுராவின் ‘உன்னிடம் மயங்குகிறேன் – 10’தமிழ் மதுராவின் ‘உன்னிடம் மயங்குகிறேன் – 10’

அத்தியாயம் – 10 “அம்மா நீங்க செஞ்சது நல்லாயிருக்கா? நந்தனாவைக் கல்யாணத்துக்குப் பேசிட்டு வாங்கன்னு சொன்னா அவ அக்காவைப் பேசிட்டு வந்து நிக்கிறிங்க” “நான் சொலுறதைக் கேளு. அந்த நந்தனா நமக்கு சரிவரமாட்டா. அவ அழகுதான் ஒத்துக்கிறேன். ஆனா அழகு, மனைவிக்கு