Tamil Madhura தமிழ் மதுராவின் சித்ராங்கதா,Tamil Madhura தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 39

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 39

காலையில், தீயாய் எரிந்த கன்னங்களைத் தடவியபடி கண்ணாடி முன் நின்றான் ஜிஷ்ணு.

“சரவெடி… அடின்னா அடி பலே அடிடி. இந்த மாதிரி ஒரு அறையை நான் யார்கிட்டயும் வாங்கினதே இல்ல. உனக்கு என் மேல வெறுப்பு வரணும்னுதான் அந்த கிஸ்ஸை தந்தேன். இருந்தாலும் தப்பா நெனச்சுக்காதே, அந்த கிஸ் உன்னை மாதிரியே செம ஸ்வீட்டுடி… நான் ரொம்பவே தடுமாறிட்டேன். பாவம் உனக்குத்தான் நேத்து அருவருப்பு, அதுவும் வாந்தி எடுக்குற அளவுக்கு” அவள் ஏதோ எதிரே நிற்பதைப் போல சொன்னான்.

சரயு கையில் வாங்கிய அடியைவிட கேவலமாய் பார்த்த அந்தப் பார்வை அவனைக் கொல்லாமல் கொன்றது.

‘இவ்வளவு காலமா வாங்கின நல்ல பேரையும் மரியாதையையும் அழிக்க ஒரு செயல் போதுமா? பேசாம சரயு கிட்ட நடந்ததை சொல்லிருக்கலாமே…

நடந்ததை சொன்னா அவ என்னை நெனச்சுப் பரிதாபப்படுவா… பெரிய தியாகம் பண்ணுறதா நெனச்சு என் நினைப்பில் அவளோட வாழ்க்கையையும் அழிச்சுக்குவா.. அது எனக்கு வேண்டாம் அவ என் மேல இருக்குற வெறுப்போட யாராவது நல்ல பையனைக் கல்யாணம் செய்து சந்தோஷமா இருந்தா போதும்.

நேத்துக் கொஞ்சம் ஓவரா நடந்துகிட்டோமோ… சரயு கோவமா இருப்பாளா… என்கூட பேச மாட்டாளா… போடா நீயும் உன் படிப்பும்னு தூக்கிப் போட்டுட்டு ஊருக்குப் போயிட்டா என்ன செய்யுறது’.

பயத்துடன் சரயுவின் அறைக் கதவைத் தட்டினான். கதவு திறந்து தானிருந்தது. டிவியில் கார்டூன் ஓடிக் கொண்டிருந்தது. காலையிலேயே குளித்துக் கிளம்பி, பெட்டியிலிருந்த துணிகளை மடித்து வைத்துக் கொண்டிருந்தாள்.

கிளம்பப் போறாளா என்றெண்ணி பதட்டத்துடன், “சாரி சரயு, நான் வேற யாரோன்னு நெனச்சு… நீன்னு தெரிஞ்சிருந்தா அப்படி நடந்திருக்க மாட்டேண்டா. நான் கெட்டவன்தான் ஆனா நீ நெனைக்கிற அளவு கெட்டவன் கிடையாது. ப்ளீஸ் என் மேல இருக்குற கோவத்தை படிப்புல காமிச்சுறாதரா. உன் கிட்ட எப்படி மன்னிப்புக் கேக்கணும்னு சொல்லு அப்படிக் கேக்குறேன்” கெஞ்சியவனை முடிக்க விடாமல்,

“என்னோட காலேஜ் பேக் உங்க ரூம்ல இருக்கு. எனக்கு அது வேணுமே” என்று சரயு கேட்டவுடன்தான் மூச்சே வந்தது ஜிஷ்ணுவுக்கு.

‘அப்பாடா படிப்பை நிறுத்த மாட்டா’ என்று திருப்தியுடன் அவளது பையை எடுத்து வந்து தந்தான். ஒரு வார்த்தை கூட பேசாமல் வாங்கிக் கொண்டவள் யாரிடமோ வாங்கிய கணக்குப் புத்தகத்தைப் பிரித்து வைத்தபடி கணக்குகளை புரிந்து கொள்ள முயற்சி செய்தாள்.

உதவி வேண்டுமா என்று பேச்சுக்குக் கூடக் கேட்கவில்லை ஜிஷ்ணு. ‘இவ வேற ஆமாம் சொல்லித்தான்னு சொல்லிட்டா… நான் படிச்ச காலத்திலேயே கிளாசை கவனிச்சதா சரித்திரமில்ல… சொல்லித் தர அளவுக்குக் கணக்கெல்லாம் தெரிஞ்சிருந்தா நாமே போயி உதவிக்கரம் நீட்ட மாட்டோமா? வச்சுகிட்டா வஞ்சன பண்ணுறோம்’ மனதினுள் நினைத்தவாறு கையை அலம்பிவிட்டு அவளுக்கும் சேர்த்து டீயைக் கலந்தான்.

படிப்பில் ஆழ்ந்திருந்தவளின் கன்னத்தில் லேசாகத் தட்டி டீக்கப்பைத் தந்தான். ஜிஷ்ணுவின் கரங்கள் தொட்டதால் கன்னத்தில் பட்ட ஈரத்தை அழுத்தித் துடைத்தபடி பேசாமல் வாங்கிக் கொண்டாள் சரயு.

தனது டீயை அருந்தியவாறே கையில் இருந்த செய்தித்தாளின் மேல் வலது கண்ணும், அவள் மேல் இடதுகண்ணும் முழு மனதையும் வைத்த படி அவளுக்கு எதிரே இருந்த சோபாவில் அமர்ந்து கொண்டான் ஜிஷ்ணு.

காலையில் குளித்து ஆகாயத்தின் அடர் நீலத்தில் மெஜந்தா நிற நூல் வேலைப்பாடு செய்த சுடி அணிந்திருந்தாள். கல்லூரியில் துப்பட்டா கண்டிப்பாக அணிய வேண்டும் என்ற விதிமுறை இருப்பதால் அதனை கவனமாக எடுத்து மேசையின் மேல் வைத்திருந்தாள். முதல் நாள் கடைக்கு செல்லும்போது,

“விஷ்ணு நான் பாதிநாள் கிளம்புற அவசரத்துல துப்பட்டாவை மறந்துடுவேன். அதனால பைலையே ரெண்டு துப்பட்டா எதுக்கும் வச்சுக்குறேன்”

என்று அந்த அழகி செல்லமாய் தலை சாய்த்துக் கேட்கும் போது மறுக்க ஜிஷ்ணு என்ன கல்லில் வடித்த சிலையா?

ஒரு வெள்ளை மற்றும் கருப்பு நிற துப்பட்டாக்களை வாங்கித் தனது பையில் திணித்திருந்தாள்.

சாதாரணமாக சரயுவைப் பார்த்த ஜிஷ்ணுவின் பார்வை சில நிமிடங்களில் அவனை அறியாமலேயே ரசனையாக மாறிப்போயிற்று. அவளது குட்டி ஜிமிக்கியும், கைகளில் கட்டியிருந்த சிவப்புக் கயிறும் கூட அவனது பார்வைக்குத் தப்பவில்லை. சைட் போஸில் கூர்மையாய் மூக்கும், குடை போல் கவிழ்ந்த இமைகளும், அவ்வப்போது அவள் புருவத்தை சுருக்கி சிந்தனை செய்யும் அழகும் அவன் கண்களை சரயுவிடமிருந்து திரும்பவே விடவில்லை. ஈரமாய் இருந்த செவ்விதழ்களுக்கு நடுவில் பேனாவை வைத்துக் கடித்தபடி பாடத்தினைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தாள். ‘ஸ்கூல்ல பென்சிலைக் கடிச்ச குணம் இன்னமும் மாறல’ புன்னகைத்தபடி,

“சரயு, பேனாவைக் கடிக்காதே” என்று ஒரு குரல் கொடுத்தான். திடுக்கிட்டுப் பேனாவை எடுத்துவிட்டு ஜிஷ்ணுவைப் பார்த்தாள் சரயு. ‘இவன் பேப்பரை படிக்கலையா? என்னைத்தான் உத்துப் பாத்துட்டு உட்கார்ந்திருக்கானா?’ திகைப்பு தெரிந்தது சரயுவின் கண்களில்.

‘நல்லா இளைச்சுட்டா… முகத்துல கண்ணு மட்டும்தான் லைட் போட்டாப்புல எரியுது… மத்தபடி அந்தப் பஞ்சுக் கன்னம் குறைஞ்சுடுச்சு… ஏன்ரா இப்படி ஒல்லியாயிட்ட? நீயென்ன செய்வ… நாணா உடம்பு சரியில்லாம இருந்தார். நீதானே சமையலும் செய்துட்டுப் படிக்கவும் செஞ்சிருக்கணும். உடம்பு சரியில்லாதவரை கவனிச்சிருக்கணும். சரியா எங்க சாப்பிட்டிருக்க போற?

என்னதான் ஒல்லியா போயிட்டாலும் இன்னமும் இவ அழகிதான். சிற்பி செதுக்கின சிலையாட்டம், விளையாட்டு இவளை அழகான பெண்ணா செதுக்கிருக்கு. காலேஜ்ல எத்தனை பேர் இவளை நெனச்சுத் தூக்கத்தைத் தொலைக்கப் போறானுங்களோ… எத்தனை பேர் தெய்வீகக் காதலோட பின்னாடியே சுத்தப் போறானுங்களோ… சரயு, விஷ்ணுவ நம்பிட்டிருக்காம, அப்படி சுத்துற பசங்கள்ள யாராவது நல்ல பையனாப் பாத்துக் கல்யாணம் செய்துக்கோரா’

சரயுவை ஸ்கேன் செய்தவண்ணம் அமர்ந்திருந்தான். சரயு இரண்டு மூன்று முறை அவனைத் திரும்பிப் பார்த்துவிட்டாள். சரயு பார்க்கும்போது கையிலிருக்கும் புத்தகத்துக்குக் கண்ணைத் திருப்பிவிடுவான். நெஞ்சு முட்ட என்னன்னவோ ஆசைகள். ஆனால் எல்லாம் நிறைவேறாக் கனவுகளாய் மாறியதை நினைத்துப் பெருமூச்சு விட்டான்.

சரயு ஏதோ நிலை கொள்ளாமல் தவிப்பதைப் போலத் தெரிந்தது. படிப்பின் மேலிருந்த அவளது கவனம் கலைந்திருந்தது. கைகள் பேனாவைத் தூக்கி எறிந்துவிட்டு பக்கத்திலிருந்த கியூபை எடுத்து அழுத்தமாய்த் திருவின. கவுச்சில் இங்குமங்கும் இருப்புக் கொள்ளாமல் தவித்தாள்.

“சரயு… என்ன வேணும்… பசிக்குதா… சாப்பாடு கொண்டு வர சொல்லட்டுமா?”

“சரி” வேகமாய் சொன்னாள்.

எழுந்து சென்று ரூம் சர்விசுக்கு இண்டர்காமில் உணவை அறைக்கு அனுப்ப சொல்லிவிட்டு, சில நிமிடங்கள் கழித்து வந்து பார்த்த ஜிஷ்ணுவுக்கு, சரயுவிடம் ஏதோ மாற்றம் தெரிந்தது. அவளது அசௌகரியம் குறைந்து அமைதியாக புத்தகத்தில் கண் பதித்திருந்தாள்.

‘என்ன ஆச்சு?’ மெதுவாய் அவளை ஆராய ஆரம்பித்தான். புரிந்தவுடன் கன்னத்தில் பளாரென அறை வாங்கியதைப் போல் நின்றான். சரயுவின் கழுத்தை சுற்றி அழகாய் ஒரு துப்பட்டா குடியேறியிருந்தது.

‘இதுக்குத்தான் நெருப்புல உட்கார்ந்தது மாதிரி தவிச்சுப் போனாளா? நான் உன்னைத் தப்பாப் பாத்தது கூட இல்லையேரா…’ தீக்கங்கினால் சுட்டதைப் போலத் துடித்துப் போனான்.

‘இதுவரை நீ இப்படி இல்லையேரா… என் மேல அவ்வளவு நம்பிக்கை வச்சிருந்தியே… நீ நேத்து அடிச்சது கூட இவ்வளவு வலிக்கல பங்காரம்…’

அவன் தொட்டக் கன்னங்களை அழுத்தித் துடைத்துக் கொண்டது நினைவுக்கு வந்தது.

‘கன்னத்துல பட்ட ஈரத்தைத் துடைக்கல… என் மேல இருந்த நல்ல அபிப்பிராயத்தைத் தான் துடைச்சுத் தூக்கி எறிஞ்சுட்ட… பரவால்ல என் மேல உனக்கு எவ்வளவு கோவம் வருதோ அவ்வளவு நல்லது. நீக்கோசம் எதைனா சரி’ மனத்தைக் கல்லாக்கிக் கொண்டான்.

சிறிது நேரம் கழித்து சாப்பிட அழைத்தான்.

“சரயு…”

“சொல்லுங்க”

“சாப்பாடு பிடிச்சிருக்கா”

‘விஷ்ணு சாம்பார் நல்லாருக்கு, சட்னி ஓகே… கேசரி ரொம்ப நல்லா இருக்கு… உன்னிதும் எனக்குத்தான் வேணும்… நீ வேணும்னா ஒரே ஒரு ஸ்பூன் சாப்பிட்டுக்கோ. உனக்குத்தான் காபி பிடிக்குமே ரெண்டு கப்பையும் நீயே எடுத்துக்கோ…’ என்று லொட லொடவென அவள் பேசுவதைக் கேட்கும் ஆவலில் கேட்டான்.

“பிடிச்சிருக்கு” ஒரு வரி பதில் வந்தது.

“உனக்கு வேற ஏதாவது வேணுமா… ஸ்வீட் இன்னொரு கப் சொல்லட்டுமா?”

“வேண்டாம்” வேறு பேச்சு பேசாமல் தலை குனிந்தபடி அமைதியாய் உண்டாள். அதனால் ஜிஷ்ணுவும் கஷ்டப்பட்டு உண்டான். ஐந்து நிமிடங்களில் கோழி இரையை விழுங்குவதைப் போல ருசியறியாமல் விழுங்கி முடித்தாள்.

“நான் ஒரு போன் பண்ணனும். நீங்க சாப்பிடுறதுக்குள்ள பேசிட்டு வந்துடுறேன்”

“என் மொபைலிலிருந்து பேசு”

“வேண்டாம்… ” அவனது பதிலை எதிர்பார்க்காது எழுந்தாள்.

“அப்ப ஹோட்டல் போனிலிருந்து பேசு” என்ற அவனது கட்டளையை மீற மனமில்லாது, எப்படி பேச வேண்டும் என்று விவரம் கேட்டுக் கொண்டாள். ஜிஷ்ணுவும் உடை மாற்றி வர அவனது அறைக்குச் சென்றான்.

சரயு அழைத்தது லக்ஷ்மியை. “அக்கா… நீயும் மச்சானும் என்ன மன்னிச்சுருங்க… எனக்குக் கல்யாணம் வேணான்னு எத்தன தடவ சொன்னேன்… நீங்க காதுல வாங்கவே இல்ல… எனக்கு ஆம்பளைங்களே பிடிக்கலக்கா… அப்பாவ மாதிரியோ, சம்முவம் மச்சான மாதிரியோ இங்க யாரும் நல்லவனில்ல… எவன் மேலயும் நம்பிக்க வரமாடேங்கு… யார நம்பன்னு தெரியல… பயம்மா இருக்கு…

நான் நல்லாருக்கேன்… சந்தோஷமா இருக்கேன்… பாதுகாப்பா இருக்கேன்… நான் நெல்லையப்பனோட பொண்ணு, கண்டிப்பா தப்பு வழில போவ மாட்டேன்… நான் ஓடி வந்ததால உனக்குத் தலை குனிவு… ஆனா உன் மேல இருக்குற பாசத்துக்காக என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது.

நான் படிக்கணும்… படிச்சு நல்ல வேலைக்குப் போவணும்… என்னைப் படிக்க வச்சவரோட கடனை வட்டியும் முதலுமா அடைக்கணும்… அதைத் தவிர என் மனசுல வேற எந்த எண்ணமுமில்ல… நான் இருக்குற எடத்தை சொன்னா நீ மறுபடியும் கல்யாணம் பண்ணி வைக்கிறேன்னு வருவ, இன்னொருத்தி இருக்காளே அவ குழந்தைப் பிச்சைக் கேட்டு வருவா… இதெல்லாம் எனக்கு வேண்டாம்… சரயுன்னு ஒருத்தி உங்க கூட பொறக்கலன்னு நெனச்சுக்கோ… என்னைத் தேடாதிங்க… நான் மேல படிக்கப்போறேன்… படிப்பாச்சும் நான் ஆசைப்பட்டத படிக்கிறேனே… என்னை விட்டுடுங்களேன்”

வேகமாய் ஓடி வந்த ஜிஷ்ணு அவள் பேசுவதைக் காதில் வாங்கியபடி நின்றான். அவனது கைகளை அழுத்தி உணர்வுகளைக் கட்டுப்படுத்தினான்.

‘என் தங்கத்துக்கு டெடிக்கேஷன் அதிகம். அதனால இனிமே அவளோட கவனம் முழுசும் படிச்சு முடிக்கிறதுல இருக்கும். இந்த மூணு வருஷத்தில் எவ்வளவோ நடக்கலாம். அவளுக்கு ஏத்த ஒருத்தன் அவ கண்ணு முன்னாடி வரலாம். அவனோட சரயுவோட வாழ்க்கை சந்தோஷமா அமையலாம். அதுதானே எனக்கும் வேணும்’ என்றபடி அவள் அறைக்கதவைத் தட்டினான்.

“சரயு கிளம்பிட்டியா?”

“நான் அப்பவே ரெடி. வாங்க போகலாம்” என்றபடி தோளில் பையை மாட்டியபடி நடந்தாள். வழக்கமாய் ஜிஷ்ணுவின் கையைக் கோர்த்துக் கொண்டு நடப்பவளின் இருகைகளிலும் ஏராளமான புத்தகங்கள்.

“எதுக்கு ஸ்கூல் பிள்ளை மாதிரி இவ்வளவு புக்ஸ் எடுத்துட்டு போற?” கேள்வி கேட்டவாறே ஜிஷ்ணுவும் சில புத்தகங்களை வாங்கிக் கொண்டான்.

“எங்க ஊர் பொண்ணு ஒருத்தி ஹாஸ்டல்ல இருக்கா. அவ ரூமுல இந்த புக்ஸ் எல்லாம் வச்சுடலாம்னு பாக்குறேன்” என்றபடி நடந்தாள்.

வண்டியில் செல்லும்போது சரயு அவ்வளவாய் பேசவில்லை. “அப்பறம் கிளாஸ் எப்படி இருக்கு சரயு? நிறையா பாடம் போயிடுச்சா?”

“ஆமாம் அதைத்தான் கிளாஸ்மெட்ஸ் நோட்ஸ் வாங்கிப் படிச்சுட்டு இருக்குறேன்”

“அப்பறம் நேத்து உன்னை ராக் பண்ணாங்களே… அந்த வாக்கியம்…”

“A big black bug bit the big black bear, but the big black bear bit the big black bug back!” கடகடவென பத்து தடவைகள் தப்பில்லாமல் சொன்னாள்.

“சரவெடி கலக்கிட்ட போ… ஒரே ஈவினிங்ல… எப்படிடி இது!!!!!!” ஆச்சரியத்துடன் கேட்டான்.

“நேத்து நீங்க சொன்னவுடனே எழுதி வச்சுட்டேன். ராத்திரி தூக்கம் வரல. சோ ப்ராக்டிஸ் பண்ணேன்”

“அதானே… என் சரயுகிட்டயா வாலாட்ட முடியும்… இன்னைக்கு செத்தானுங்க சீனியர்ஸ்”

அவனை விளங்காத பார்வை பார்த்தாள். என்ன என்று பார்வையாலேயே வினவினான் ஜிஷ்ணு.

“இல்ல என். சரயுன்னு இனிசியலோட சொல்லுறிங்க”

“ஹா ஹா அது என்னோட சரயுன்னு சொன்னேன்” அவனது பதிலுக்கு அவளிடமிருந்து எதிரொலி இல்லை.

“காலேஜ் ரெஜிஸ்டர்ல சரயு நெல்லையப்பன்னு தந்திருக்கிங்க. என். சரயுன்னு மாத்த சொல்லி லெட்டர் எழுதித் தந்திருக்கேன்”

“சாரிரா தமிழ்நாட்டுல இனிஷியல் தானே போடுவிங்க. நான் எங்க ஊர் நினைவில தந்துட்டேன்”

“உங்க ஊருல எப்படி வைப்பிங்க. உங்க பேரு என்ன?”

“அம்மோ… எவ்வளவு சீக்கிரம் கேக்குற… என் பேரு ஜிஷ்ணு தாரணிக்கோட்டா.”

“உங்க அப்பா பேரு தாரணிக்கோட்டாவா?”

“இல்லரா நாங்க எங்க ஊரு பேரு இல்லை குடும்பப் பேரை எங்களோட பேரோட சேர்த்துக்குவோம். தாரணிக்கோட்டா என்னோட ஊரோட பேரு. குண்டூர் பக்கத்துல இருக்கு, அதுதான் எங்க குடும்ப வழக்கம். எங்கப்பாவோட பேரு சலபதி தாரணிக்கோட்டா. அம்மா பேரு ஜெயசுதா தாரணிக்கோட்டா”

“ஸ்ரீஹரிகோட்டா மாதிரி உங்க ஊரு பேரு தாரணிக்கோட்டாவா” என்று சரயு கிண்டலடித்த பொழுதே கல்லூரி வந்துவிட்டது.

“வரேன் டிராப் பண்ணதுக்கு தாங்க்ஸ்” என்றபடி கார்க் கதவைத் திறந்தாள்.

“கிளம்புறியா… வேற ஏதாவது மறந்துட்டியா…?” ஏக்கத்தோடு கேட்டான் ஜிஷ்ணு. முதல்நாள் மூக்கோடு மூக்கு வைத்து பேசினாளே. இன்னொருதரம் அப்படி பேச மாட்டாளா என்ற ஆசை அவன் மனத்தைக் கொன்றது.

“ஆமா மறந்துட்டேன். ஈவ்னிங் நீங்க வர வேண்டாம். எனக்கு மாத்ஸ் ஸ்பெஷல் கிளாசிருக்கு. அப்பறம் ஹாஸ்டல் ரூம் ஒண்ணு காலியாயிருக்குன்னு சொன்னாங்க. அதை பார்த்துட்டு நானே வந்துடுறேன்”

“தனியா எப்படிடி வருவ… எனக்கு ஒண்ணும் வேலையில்ல… நான் வந்து காத்திருக்கேன்”

“நான் தனியா வந்துடுவேன். பஸ் எல்லாம் விசாரிச்சு வச்சிருக்கேன். எப்படியும் நாளைல இருந்து தனியாத்தானே லைப்பை பேஸ் பண்ணனும். அதை இன்னைக்கே ஆரம்பிச்சுடுறேன். நீங்க கிளம்புங்க ஜிஷ்ணு”

அவள் பேசிக் கொண்டிருந்தபோதே உரத்தக் குரலில் கத்தியபடி ஒரு பெண் ஓடி வந்தாள்.

“ஏலே சரயு… நீ இங்கத்தானிருக்கியா… என் ரூம்ல அந்தத் தெலுங்குக்காரி ஒரு வழியா ஒளிஞ்சுப் போறாடி… டாக்டர் சீட்டு கெடச்சிருக்குதாம்… நான் உன்னத்தேன் அந்த ரூமுக்குப் போடணுமின்னு வார்டன் கிட்ட கெஞ்சிக் கேட்டிருக்குதேன். இருந்தாலும் மூணாவதா இருக்காளே அந்த சைத்தன்யா அவளும் தெலுங்குதேன். பயங்கர திமிரு புடிச்சவ.. கான்வென்ட்ல படிச்சாளாம்… அதனால ஒரே பீட்டர் விடுவா… அப்பறம் ரெண்டு பேரும் என்னை தெலுங்குல கேலி பேசி சிரிப்பாளுக… எனக்கு எம்புட்டு அழுக அழுகயா வரும் தெரியுமா?”

இருவரும் பேசுவதை சுவாரஸ்யமாக கவனித்துக் கொண்டிருந்தான் ஜிஷ்ணு.

“இவருதேன் உங்க மாமாவா… சொவமா இருக்கியளா மாமா?” என்று அன்பொழுகக் கேட்ட அந்தப் பெண்ணைப் பார்த்துப் புன்னகையுடன் தலையசைத்தான்.

‘டேய் ஜிஷ்ணு, காலேஜ் பொண்ணுங்கல்லாம் உன்னை மாமான்னு கூப்பிடுறாங்க. உனக்கு வயசாயிடுச்சு போலிருக்கேடா’ வருத்தப்பட்ட மனசை ‘மாமா என்ன தாத்தான்னு கூடக் கூப்பிடட்டும் ஆனா அண்ணன்னு கூப்பிடாம இருந்தா சரி’ சமாதானப்படுத்தினான்.

“இவ லில்லி. பாளையங்கோட்டைல இருந்து படிக்க வந்திருக்கா. இங்க ட்ரிப்பில் ஈ ரெண்டாவது வருஷம் படிக்கிறா. இவ ரூமுல ஒரு எடம் இன்னைக்குக் காலியாகுது. அங்கத்தான் கேக்கலாமின்னு இருக்கேன்” என்றாள் சரயு.

“மூணு பேர் ரூமை ஷேர் பண்ணிட்டா ப்ரைவசி இருக்காது சரயு. உனக்குத் தனி ரூம் சொல்லிருக்கேன். கூடக் கொஞ்சம் நாளானாலும் பரவாயில்ல. அவசரப்பட வேண்டாம்” ஜிஷ்ணு வலியுறுத்தினான்.

“ப்ளீஸ் மாமா இந்த தெலுங்கு காலேஜ்ல ப்ரீ சீட்ல வந்து தனியா ஹாஸ்டல்ல மாட்டிகிட்டேன். ஒரு வருசம் செண்டு எங்க ஊர் ஆளுங்களப் பாக்கேன். எங்களப் பிரிச்சுடாதீக மாமா” என்று பாவமாய் முகத்தை வைத்துக் கொண்டு சொன்னாள் லில்லி.

“எனக்குத் தனி ரூம் வேண்டாம். லில்லி ரூம்ல இடம் கெடச்சவுடனே போயிடுவேன்” என்று சரயு திட்டவட்டமாய் சொன்னவுடன் ஜிஷ்ணுவுக்கு மறுக்க வழியில்லாமல் போயிற்று.

“எட்டி கார்டியன் அட்ரஸ் பில் பண்ணியா” நினைவுபடுத்தினாள் லில்லி.

“கார்டியன் அட்ரஸ் அப்பறம் காண்டாக்ட் டீடைல்ஸ் கேட்டாங்க. தொடர்பு கொள்ள லக்ஷ்மி அக்காவோடது தந்திருக்கேன். கார்டியன் உங்களோடது தரட்டுமா? சும்மா பேருக்குத்தான் தருவேன். உங்களை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்” என்று தீவிரமான முகத்தோடு சொன்னாள் சரயு.

“உனக்கு கார்டியன் நான்தான் சரயு. அந்த உரிமையை உங்க அக்காவுக்குக் கூட விட்டுத் தர மாட்டேன்” பார்மை வாங்கி தாரணிக்கோட்டை அட்ரஸ்சை நிரப்பித் தந்தான் ஜிஷ்ணு.

காலேஜ் பெல்லடிக்கும் நேரமாகிவிட்டதால் “தாங்க்ஸ்” சொல்லி சிக்கனமாய் புன்னகைத்து விட்டு லில்லியுடன் சென்று விட்டாள்.

“தாங்க்ஸ்” என்று சரயு சொன்னதைப் போலவே சொல்லிப்பார்த்தான் ஜிஷ்ணு.

“என்னைக்காவது எனக்கு தாங்க்ஸ் சொல்லிருக்காளா? இப்ப பிரெண்ட் முன்னாடி பெருசா பிலிம் காட்டுறா பாரேன்” என்று புன்னகைத்தவன் ஏதோ நிரட காரினை ஓரமாய் பார்க் செய்துவிட்டு யோசித்தான்.

‘இல்லையே… காலேல இருந்து அவகிட்ட ஏதோ மாற்றம்.

எழுந்திரிச்சதுல இருந்து இப்ப வரைக்கும் நாலு அடியாவது அடிச்சிருப்பா… ஆனா இன்னைக்கு என்னைத் தொடவே இல்ல. என் கையை கோர்த்து நடக்குறதை அவாய்ட் பண்ணுறதுக்காகவே அத்தனை புக்ஸ் எடுத்துட்டு வந்திருக்கா…

அவள் பேசியதை மனதுக்குள் ஓட்டிப் பார்த்தான்.

“நான் அப்பவே ரெடி. வாங்க போகலாம்”

“சொல்லுங்க”

“என்னோட காலேஜ் பேக் உங்க ரூம்ல இருக்கு. எனக்கு அது வேணுமே”

“உங்க ஊருல எப்படி வைப்பிங்க. உங்க பேரு என்ன?”

“நான் தனியா வந்துடுவேன். பஸ் எல்லாம் விசாரிச்சு வச்சிருக்கேன். எப்படியும் நாளைல இருந்து தனியாத்தானே லைப்பை பேஸ் பண்ணனும். அதை இன்னைக்கே ஆரம்பிச்சுடுறேன். நீங்க கிளம்புங்க ஜிஷ்ணு”

நீ வா போ என்ற அழைப்பு அவளிடமிருந்து விடை பெற்றிருந்தது. நீங்க வாங்க என்று மூன்றாம் மனிதனிடம் பேசுவதைப் போலவே பேசி இருக்கிறாள். முக்கியமாய் விஷ்ணு என்று அழைக்கவே இல்லை. ஜிஷ்ணு என்றே கூப்பிட்டிருக்கிறாள். அவன் எதிர்பார்த்தது தான் என்றாலும் இத்தனை விரைவாகவா? தாங்க முடியவில்லை ஜிஷ்ணுவால்.

‘பங்காரம்… உன் விஷ்ணுவை இவ்வளவு சீக்கிரம் மறந்துட்டியாரா?’

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 22என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 22

அத்தியாயம் – 22 ட்ரெயினில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தான் அரவிந்த். மனைவியையும் குழந்தையையும் எப்போதடா பார்ப்போம் என்றிருந்தது அவனுக்கு. அப்பாடா இன்று வெள்ளிக் கிழமை. இன்னும் இரண்டு நாட்கள் ஸ்ராவனியும் சித்தாராவும் அடிக்கும் லூட்டியை ரசித்துக் கொண்டிருக்கலாம். நிமிடமாய் நேரம் பறந்து

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 62தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 62

காலையிலிருந்து பொற்கொடி அபியை ஜிஷ்ணுவைப் பார்த்து அப்பா என்று சொல்ல ட்ரைனிங் கொடுத்துக் கொண்டிருக்கிறார். அவனோ ராமைத் தான் அப்பா என்றழைப்பேன் என்று அழிச்சாட்டியமாய் நிற்கிறான். “அம்மா அவனை கம்பெல் பண்ணாதிங்க” என்று விஷ்ணு அழுத்தி சொன்னான். “அவன் அணுகுண்டை அப்பாவாவே

தமிழ் மதுராவின் ‘உன்னிடம் மயங்குகிறேன் – 14’தமிழ் மதுராவின் ‘உன்னிடம் மயங்குகிறேன் – 14’

அத்தியாயம் – 14   ‘கௌமாரியம்மா என் மேல அன்பு செலுத்த இந்த உலகத்தில யாருமே இல்லையான்னு உன்னைக் கேட்டுட்டுத்தான் தற்கொலைக்கு முயற்சி செஞ்சேன். ஆனா என்னைக் காப்பாத்தி புது வாழ்க்கை தந்த ப்ரித்வியை நல்லா வை. இனிமேலும் ப்ரிதிவியை சோதிக்காதே.