Tamil Madhura தமிழ் மதுராவின் சித்ராங்கதா,Tamil Madhura தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 35

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 35

 சாதிச்சுட்டிங்க பாபு” கை குலுக்கினார் ராஜு.

“சாதிச்சுட்டோம்” திருத்தினான் ஜிஷ்ணு.

அவனது உழைப்புக்குக் கிடைத்த பலன். முதன் முறையாக, கடன் போக லாபமாய் அரை கோடி அவன் கைகளில் நின்றது. சந்தனா பெயரில் ஒரு நூறுகிராம் தங்கக் கட்டி வாங்கினான். வேலை செய்பவர்களுக்கு இனிப்பு வழங்க சொன்னான். ராஜுவுக்கு இரண்டு லட்சம் போனசாகத் தந்தான். இந்த வெற்றி அவரால் தான் சாத்தியமாயிற்று. அமெரிக்காவிலிருந்து அவன் யோசனை சொல்ல, அவனது கண்ணாக இருந்து அனைத்தையும் செய்தது அவர்தான்.

ஜமுனா அப்படியா என்று கேட்டுக் கொண்டாள் அவ்வளவுதான். அவளுக்கு எதுவும் வேண்டுமா என்று கேட்டதுக்கு,

“இப்ப நானென்ன ஆஆ…ன்னு வாயைத் திறந்து ஆச்சரியப்படணுமா… என்னை உன் காதலி மாதிரி பிச்சைக்காரின்னு நெனச்சியா… பணம் என்கிட்டே ஏராளமா இருக்கு ஜிஷ்ணு… நீ சம்பாதிச்சு நான் சாப்பிடணும்னு எனக்குத் தலையெழுத்தில்ல… அந்த அரவ்வாடை மறந்துட்டு வா… இன்னொரு குழந்தை பெத்துக்கலாம்” என்றவளிடம் மறுமொழி கூறாமல் போனை வைத்தான்.

இந்த அரைகோடி, ஜமுனாவுக்கு ஒரு விழாவுக்கு நகை வாங்கும் செலவு. அதனால் பெரிதாகத் தெரியவில்லை. அவர்களது உறவு என்னவோ தண்ணீரில் கலந்த எண்ணையாய் ஒட்டாமல் தொடர்ந்து கொண்டிருந்தது. ஏதோ ஜிஷ்ணு சொன்ன வார்த்தைக்காக அவன் அமெரிக்காவிலிருக்கும் போது அம்மா வீட்டிலிருந்து அவனது அப்பார்ட்மென்ட் வருவாள். அதுவும் ஜிஷ்ணு ஊருக்கு சென்றதும் அப்பார்ட்மெண்டை நன்றாகத் துடைத்து சுத்தம் செய்து, மளிகை சாமான்களை வாங்கி நிரப்பிவிட்டு மாமனார் வீட்டிற்கு சென்று அழைத்து வருவான். ஜமுனாவுக்கு சமைக்கத் தெரியாது என்பதால் அங்கிருக்கும் சமயங்களில் ஜிஷ்ணுதான் சமையலும் செய்வான்.

இவ்வளவும் செய்தும் கடந்த நான்கைந்து மாதங்கள் ஜிஷ்ணுவுக்கு ஜமுனாவால் நரக வேதனைதான். டெலிவரி சமயம் ஒவ்வொன்றையும் ஜிஷ்ணுதான் செய்ய வேண்டும் என்று அடம் பிடித்தாள். ‘எனக்கு சாப்பாடு ஊட்டி விடு’, ‘என் டிரெஸ்ஸை எடுத்து வை’, ‘துணியைத் துவைத்து காயப் போடு’ என்று அலும்பு தாங்க முடியவில்லை.

குழந்தை பிறந்த பின்பும் அவனை இம்மி கூட நகர விடவில்லை.

“குழந்தை பெத்துக் குடுத்த என் மேல இப்ப அன்பு, காதல் எல்லாம் வந்திருக்குமே” என்றவளிடம்,

“உன் மேல அன்புக்கு என்ன குறைச்சல் ஜமுனா… நீ என் கசின்… சோ நம்ம ஒரே குடும்பம்ன்னு ஒரு ஒட்டுதல், பாசம் எப்போதுமே என்கிட்டே உண்டு. இப்ப சந்தனா பொறந்ததும் அது அதிகமாயிருக்கு” பதிலளித்தான்.

கவனமாய் காதல் என்ற வார்த்தையை சொல்லாமல் தவிர்த்தான். ஜமுனா இனம் கண்டு கொண்டாள்.

“ஜிஷ்ணு டெலிவரி சமயத்துல முகம் சுளிக்காம அவ்வளவு உதவி செஞ்சியே… காதலில்லாமவா செஞ்ச?”

“ஜமுனா… உயிரை உலகுக்குக் கொண்டுவர்றதுக்கு எவ்வளவு வேதனைன்னு நான் உணர்ந்தேன். உன் மேல ரொம்ப மரியாதை வந்துச்சு…

சொல்லப்போனா நீ இவ்வளவு கஷ்டப்பட்டிருக்கணும்னு தேவையே இல்லை. நான் உன்கிட்ட குழந்தை வேண்டாம்னு கெஞ்சிக் கேட்டதை நீ பொருட்படுத்தல. பிடிவாதமா பெத்துகிட்ட… அதுல எனக்குக் கொஞ்சம் வருத்தம்தான்.

அதை விடு… சந்துவால எனக்கு வாழ்க்கைல ஒரு பிடிப்பு வந்திருக்கு.. தாங்க்ஸ் ஜமுனா… ” என்றான் நெகிழ்வுடன்.

இப்போதே ஜமுனா-ஜிஷ்ணுவின் ஒட்டாத வாழ்க்கை அனைவருக்கும் கேலிப்பொருளாகிவிட்டது. குழந்தை பெற்றால் அனைத்தும் சரியாகிவிடும், இழந்த மதிப்பை மீட்டு விடலாம் என்றெண்ணினால் இவன் வேறு… கடுப்பானாள் ஜமுனா.

“உன்னாலதாண்டா இப்படி வலில படுத்திருக்கேன். உடம்பு வேற குண்டாயிடுச்சு. நான் வேதனைல தவிக்கிறப்ப நீ அந்த அரவ்வாடை நெனச்சு கனவு காணுறியா” என்று கையில் கிடைத்த ஜூஸ் டம்ளரை தூக்கி அவன்மேல் எறிந்தாள்.

ஜிஷ்ணுவின் திருமணத்துக்குக் கூட வர இயலாமல் இரண்டு வருடங்கள் பெண்களின் வீட்டில் மாட்டிக்கொண்ட வரலக்ஷ்மி அன்றுதான் ஜிஷ்ணுவைப் பார்க்கவென்றே அமெரிக்காவுக்கு வந்திருந்தார். அவரை அறையினுள் அழைத்து வந்த ஜமுனாவின் தாயும், ஜிஷ்ணுவின் தாயும் விக்கித்துப் போய் நடந்ததைப் பார்க்க, முகத்தில் வழிந்த ஜூசினை துண்டில் துடைத்தவாறே,

“வா பின்னி எப்படி இருக்க?” என்று அன்புடன் வரலட்சுமியை வரவேற்றான் ஜிஷ்ணு.

“டெலிவரி ஆனதும் ஹார்மோன் லெவல் மாறுதா… அதுதான் இந்த மாதிரி மூட் ஸ்விங்…” எச்சிலை விழுங்கியபடி சமாளித்தார் ஜமுனாவின் தாய். சிறிது நேரம் சந்தனாவைக் கொஞ்சிவிட்டு கண்கள் கலங்க பெறாத மகனிடம் விடை பெற்றுச் சென்றார் வரலக்ஷ்மி.

அத்துடன் ஜமுனா நிறுத்தவில்லை. வீட்டுக்கு வந்ததும்,

“என்ன ஜிஷ்ணு இப்பல்லாம் பெட்ரூம்ல நுழையாம ஹால்லயே படுத்துத் தூங்குற போலிருக்கு. என்கிட்டே அவ்வளவு பயமா… நான் வில்லி இல்லப்பா உன் ஹீரோயின்” என்றாள்.

திடீரென்று ஒருநாள் தளையத் தளைய காஞ்சிப் பட்டுடுத்தி, அட்டிகை காசுமாலை அணிந்து, குங்குமப் பொட்டும் அதன் மேல் தீட்டிய திருநீருமாய் வந்து நின்றாள்.

“ஜிஷ்ணு நான் இப்ப எப்படி இருக்கேன்? அழகா இருக்கேன்ல”

நிமிர்ந்து பார்த்துவிட்டு “ஆமாம்” என்றான்.

“என்னைப் பார்த்தா அரவ்… சாரி, தமிழ் அம்மாயி மாதிரி இல்ல… உனக்குத்தான் பக்கத்து ஸ்டேட் பொண்ணுங்கன்னா ரொம்ப இஷ்டமாச்சே…” குரோதமாய் வார்த்தைகள் வெளிவந்தன.

பதில் சொல்லாமல் மதிய சமையலுக்குக் கறிகாயை நறுக்கிய ஜிஷ்ணுவின் முகத்தைத் திருப்பியவள்,

“இப்ப என்னை அந்தத் தமிழ் அம்மாயின்னு நெனச்சு லவ் பண்ணுவியாம்… அவளைக் கிஸ் பண்ணதை விட அதிக ஆசையோட என்னைக் கிஸ் பண்ணுவியாம்…”

எரிச்சலை மறைத்துக் கொண்டு நகர்ந்தவனின் சட்டையைப் பிடித்து இழுத்தாள். “என்னை அவமானப் படுத்துற ஜிஷ்ணு” என்றவாறு கோவமாய் கத்தியை எடுத்து ஜிஷ்ணுவின் கையைக் கிழித்தாள். ஒரு வினாடி தாமதித்துவிட்டு ரத்தம் வருமிடத்தில் பிளாஸ்டர் போட்டு விட்டு வேலையைத் தொடர்ந்தான்.

தான் நடந்துகொண்ட விதம் தப்பு என்று தெரிய “சாரி” என்று முணுமுணுத்துவிட்டு சென்றாள் ஜமுனா.

அன்பை மட்டுமில்லை கோவத்தைக் கூட உன்னிடம் காட்ட விரும்பவில்லை என்பதைப் போல் இறுகிப் போயிருந்தான் ஜிஷ்ணு.

அடுத்த சோதனையை ஆரம்பித்தாள்.

“ஜிஷ்ணு இன்னைக்கு நைட் ரூம்ல படுத்துக்குவியாம்”

“முடியாது ஜமுனா… சந்தனாவைப் பாத்துக்கணும்.. அவ நைட் ரொம்ப அழறா”

சற்று நேரத்தில் சல்லடையில் செய்ததைப் போன்ற உடையுடன் வந்த ஜமுனா.

“ஜிஷ்ணு நான் டெலிவரி முடிஞ்சு ரெண்டு மாசத்துல மறுபடியும் பழைய ஷேப்புக்கு வந்துட்டேன்” என்றாள் போதையூட்டும் குரலில். ஐட்டம் டான்சரைப் போல் வந்து நின்றவளை அருவருப்புடன் விலக்கியவன்,

“இதென்ன ஜமுனா இத்தனை சீப்பா. ச்சே… இவ்வளவு கேவலமாவா பிஹேவ் பண்ணுவ? லுக்… நீ நிர்வாணமா வந்து நின்னாக் கூட என்னை அசைக்க முடியாது”

முகம் கருக்க நடந்து சென்றவள் தனது பிரம்மாஸ்திரத்தை எடுத்தாள்.

சந்தனா நீண்ட நேரமாய் பசியால் அழுவதைக் காண சகிக்காமல் சத்தம் போட்டான் ஜிஷ்ணு.

“ஜமுனா, பசில சந்து அழறா பாரு”

சாவகாசமாய் ஜிஷ்ணுவை ஏறிட்டுப் பார்த்தவள், “ஏன்… உன் பொண்ணு அழுதா கஷ்டமா இருக்கோ… அதுதான் நம்ம காண்ட்ராக்ட் முடியப் போகுதே… அப்பறம் என்ன செய்வ? அதையே இப்பவும் செய்” என்றவாறு டீவி பார்ப்பதைத் தொடர்ந்தாள். விக்கித்துப் போய் அவளையே பார்த்தான் ஜிஷ்ணு.

‘இதுக்காகத்தான், இந்த ஒரு காரணத்துக்காகத்தான் என்னையும் குழந்தையையும் இவ்வளவு படுத்துறியா… ச்சீ… என் பொண்ணுக்காக உனக்கு வாழ்க்கையை பிச்சையாய் போடுறேண்டி’

உணர்ச்சியில்லாத குரலில் சொன்னான். “இன்னும் ரெண்டு வாரத்துல நம்ம ஒப்பந்தம் முடியுறது என் நினைவில இருக்கு. இந்த நாளை நான் எவ்வளவு ஆசையோட எதிர்பார்த்தேன்னு உனக்கு நல்லாத்தெரியும். ஆனா இன்னைக்கு ஒரு வாக்கு தரேன். சந்தனாவுக்கு நீ ஒரு நல்ல தாயா இருக்குற வரைக்கும் நானா உன்கிட்ட டைவேர்ஸ் கேக்க மாட்டேன்”. ஜிஷ்ணு சொல்லி முடித்தவுடன் வேகமாய் சந்தனாவிடம் ஓடிய ஜமுனாவை வெறுப்புடன் பார்த்தான்.

அதன் பின் ஜமுனாவுக்கு ஜிஷ்ணு தன்னை விட்டுப் போகமாட்டான் என்ற நம்பிக்கை. அவர்களுக்குள் ஒரு சுமூகமான நிலை கூட வந்தது எனலாம்.

“சாரி ஜிஷ்ணு… உன்னைத் திரும்பத் திரும்பக் காயப்படுத்துறேன்… ஆமா அந்த அரவ்வாடு பேரென்ன?” என்றாள் திடீரென.

“இப்ப நீ சொல்லியே ஆகணும் ஜிஷ்ணு… ஏன் பாப்பா பேரை சந்தனான்னு வச்ச? ஒரு வேளை அது அவளோட பேரோ… அவ பேரா இருந்தா உடனே மாத்தணும்” என்று ஒரு மாதிரி குரலில் சொன்னவளிடம்,

“அம்மா தாயே நீ மறுபடியும் முருங்கை மரம் எறிராதே… சந்தன நிறத்துல இருந்ததால சந்தனான்னு தோணுச்சு…”

“நம்பமாட்டேன்… அவ பேர சொல்லு”

மிகவும் யோசித்தவன் தயங்கியபடியே சொன்னான். “சரயு…”

“பாப்பா சந்தன நிறம்னு சொன்னியே… அப்ப அவ கருப்பா…”

பதில் சொல்லவில்லை ஜிஷ்ணு.

“நான் கடுப்படிக்கக் கேக்கல… நிஜம்மாவேதான் அவளைப் பத்தித் தெரிஞ்சுக்கணும்னு கேக்குறேன். ப்ளீஸ் சொல்லேன்…”

கண்மூடி சரயுவின் முகத்தை மனதில் கொண்டுவந்தான். “சந்தனாவை விட நிறம்” என்று சொல்லிவிட்டு சட்டென அவ்விடத்தை விட்டு அகன்றுவிட்டான்.

ஜமுனா- சந்தனாவின் கையருகே தனது கையை வைத்து தான் அவளைவிட நிறம் அதிகமா கம்மியா என்று மனதுக்குள் பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருந்தாள்.

ருவழியாக ஜமுனாவின் உடல்நிலை சரியானதும் தொழிலை கவனிக்கக் கிளம்பிவிட்டான்.

கிளம்பும்முன், “ஜமுனா நம்ம போட்ட ஒரு வருஷ ஒப்பந்தம் முடிஞ்சுடுச்சு. இந்த ஒரு வருஷமும் உண்மையிலேயே உன் கணவனா மட்டும்தானிருந்திருக்கேன். தமிழ்நாட்டுல என் காலடி கூடப் படல… ஆனால் இனிமே உன் நிபந்தனை என்னைக் கட்டுப்படுத்தாது”

ஜிஷ்ணு சொன்னது காதிலேயே விழாதது போல ஜமுனா பதிலளித்தாள். “சந்து ரெண்டு நாளா சரியா சாப்பிடல”

ஜிஷ்ணு பதறினான். “ஏன் என்னாச்சு?”

“நான் கூடவே இருக்குறப்ப நீ ஏன் கவலைப்படுற ஜிஷ்ணு… வாக்சின் போட்டிருக்கோம்ல. அப்படித்தானிருக்கும்… இப்பவே அவ ஓகேயாயிட்டா… அவ என்ன சொல்லுறா கேளேன்” என்றபடி கூலாக சந்தனா “ஆ… ஊ…” என்று கத்திய மழலை மொழிகளை ஜிஷ்ணுவைக் கேக்க வைத்தாள்.

‘சந்தனாவை வைத்து எப்படி என்னைக் கார்னர் பண்ணுறா…’ வெறுப்புடன் கிளம்பினான்.

குண்டூருக்கு வந்ததும் நலம் விசாரித்தார் ராஜு.

“குட்டிபாப்பா நல்லாயிருக்காங்களா பாபு?”

“நல்லாயிருக்கா”

“ஜமுனாம்மா”

“அவளுக்கென்ன தினமும் என்னை நெருப்புல நிறுத்தி சந்தோஷப்பட்டுட்டு இருக்கா” வெறுப்பில் வார்த்தைகள் வெளிவந்தன ஜிஷ்ணுவுக்கு.

சாதாரணமாக எதுவும் சொல்லிவிட மாட்டான் ஜிஷ்ணு. முதன் முறையாக அவன் வாயிலிருந்து வந்த வேதனை மொழிகளைக் கண்டு ஆறுதல் கூற வழிதெரியாது நின்றார் ராஜு.

“சரியாயிடும் பாபு”

“ஆமாம் சீக்கிரம் நான் செத்துப் போயிடணும்… அப்ப எல்லாம் சரியாகும்”

“அப்படியெல்லாம் சொல்லாதிங்க பாபு”

முகம் விகாசிக்க சொன்னான். “ராஜு… என் ஏஞ்சல் ஒருத்தியிருக்கா… வானவில்லாட்டம் என் வாழ்க்கைல வந்தா… வானவில்தான் சீக்கிரம் மறைஞ்சுடுமே… அது எனக்குத் தெரியல…” குரல் சோகமானது.

 “அவங்க எப்படி இருக்குறாங்க பாபு?”

“கண்டிப்பா என்னை நெனச்சுட்டுத்தானிருப்பா… ரெண்டு மாசமா அவளுக்கு என்னமோ பிரச்சனைன்னு என் மனசுக்குத் தோணிட்டே இருக்கு ராஜு. இருப்பே கொள்ளல…

விசாரிக்கலாம்னா அவ வீட்டுல போனில்ல… செல்போனெல்லாம் அங்க இன்னமும் சகஜமாகல. அவளோட காலேஜ் நம்பரக் கண்டுபிடிச்சு, போன் பண்ணி, அவ குரலைக் கேக்க முயற்சி பண்ணுறேன். ஆனா எல்லா முறையும் தோல்விதான். இந்த ஒரு வருஷமும் ஜமுனாவுக்குக் கொடுத்த வாக்குக்குக் கட்டுப்பட்டு அவளைப் பாக்கப் போகல… ஆனா இனிமே என்னை எந்த சக்தியும் தடுக்க முடியாது…”

“பாபுக்கு அந்தம்மாயி மேல நிறைய அன்பு போலிருக்கு…”

“அன்பு, ஆசை எல்லாம் இருக்கு. வெளிய கொட்ட முடியாம எனக்குள்ளே தூங்கிட்டு இருக்கு”

ராஜுவிடம் உரையாடிக் கொண்டிருந்தவனின் மேல் பனிமழை பொழிந்ததைப் போல அந்த மொபைல் ஒலி கேட்டது. இந்த எண் ஒரே ஒரு ஆளுக்கு மட்டுமே தெரியும்… இந்த அழைப்பு… வேகமாய் அவனிடமிருந்த அந்த தனிப்பட்ட தொலைபேசியை மின்னல் வேகத்தில் ஆன் செய்தவன் “சரயு” என்றான்.

“விஷ்ணு…” சரியான எண் தானோ என்ற தயக்கத்தில் மெதுவாய் ஒலித்தது சரயுவின் குரல்.

“பங்காரம்…” வார்த்தைக்கு வலிக்குமா என்றெண்ணி மெள்ளமாய் முணுமுணுத்தான் ஜிஷ்ணு.

இரு முனையிலும் அமைதி. கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்குப் பின் கேட்ட காதலின் குரலால் ஆலங்கட்டி மழை தலையில் பொழிந்ததைப் போலத் திக்கு முக்காடி வார்த்தை வராமல் திண்டாடினர்.

தனிமையிலே வெறுமையிலே

எத்தனை நாளடி இளமையிலே

எத்தனை இரவுகள் சுட்டன கனவுகள்

இமைகளும் சுமையடி இளமையிலே

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 5தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 5

  வெங்கடேஷிடம் சரயுவின் வீரதீர பிரதாபங்களைக்கேட்டுக் கேட்டு ரசித்தான் ஜிஷ்ணு. அதுவரை பெண்களை பணவெறி பிடித்தவர்களாகவும், பொழுது போக்காகவும் பார்த்த ஜிஷ்ணுவின் எண்ணத்தை முதல் முறையாக அந்த சிறுமலர் வேரோடு அசைத்திருந்தது. “சொடக்கு போடுற நேரத்துல உன் பெயரையே விஷ்ணுன்னு மாத்திட்டா

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 28தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 28

  குண்டூர், கிருஷ்ணா டெல்டாவிலிருக்கும் வளம் கொழிக்கும் பகுதி. உலகத்தரம் வாய்ந்த மெக்சிகன் மிளகாய்களுக்கு சவால் விடும் தரத்தில் மிளகாய்களை விளைவித்து இந்திய மண்ணுக்குப் பெருமை சேர்க்கும் நகரம். ஆசியாவின் மிகப் பெரிய மிளகாய் சந்தையைக் கொண்டது. மிளகாயை மட்டுமே நம்பியிராமல்

தமிழ் மதுராவின் ‘உன்னிடம் மயங்குகிறேன் – 10’தமிழ் மதுராவின் ‘உன்னிடம் மயங்குகிறேன் – 10’

அத்தியாயம் – 10 “அம்மா நீங்க செஞ்சது நல்லாயிருக்கா? நந்தனாவைக் கல்யாணத்துக்குப் பேசிட்டு வாங்கன்னு சொன்னா அவ அக்காவைப் பேசிட்டு வந்து நிக்கிறிங்க” “நான் சொலுறதைக் கேளு. அந்த நந்தனா நமக்கு சரிவரமாட்டா. அவ அழகுதான் ஒத்துக்கிறேன். ஆனா அழகு, மனைவிக்கு