Tamil Madhura தமிழ் மதுராவின் சித்ராங்கதா,Tamil Madhura தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 34

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 34

ரயுவைப் பெண் பார்க்கும் வைபவத்தன்று, செல்வத்தின் குடும்பத்துடன் நடந்த கைகலப்பில் சம்முவத்துக்கு கையில் அரிவாள் வெட்டு பரிசாகக் கிடைத்தது. சம்முவத்தை மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு, லச்சுமி எங்கு சென்றாலும் சரயுவையும் கையோடு அழைத்துச் சென்றாள். சரயுவுக்கு திருமணமானாலும் செல்வம் விட்டு வைப்பானா என்ற கேள்வி புதிதாக சம்முவத்தை அரிக்க ஆரம்பித்திருந்தது. பெண் பித்து பிடிச்சா மட்டும் நாம செய்யுற தப்பு கூட சரியாத் தெரியும். ஆனானப்பட்ட ராவணனே பெண்ணாசையால மண்ணாப் போகலையா? சரயுவெறி பிடிச்ச செல்வத்தை ஏறி மிதிக்கிற மாதிரி ஒருத்தன் வரணும், வருவான் என்று தனக்குள் சொல்லிக் கொண்டான்.

நள்ளிரவைத் தாண்டிய சமயம் மருத்துவமனையில் சம்முவத்தின் வலி கணிசமாய் மறைந்திருக்க, மதியம் தூங்கியதால் விரைவில் உறக்கம் கலைந்து கண்களை லேசாகத் திறந்து பார்த்தான் அறையினை சுற்றிலும் மெதுவாகத் தலையை சுழற்றினான். அனைவரும் நல்ல தூக்கதிலிருந்தனார். ஜன்னலின் வழியே வந்த நிலவொளியில், இடது காலை மடக்கி அணைத்து அதன் மீது முகத்தை வைத்தபடி வெறித்துப் பார்த்த சரயு கண்ணில் பட்டாள்.

அவளது உள்ளங்கையில் ஒரு செயின் சிவப்பு டாலருடன், அவள் சமீப காலமாய் கழற்றாமல் கழுத்தில் அணிந்திருப்பது லக்ஷ்மி ஒரு நாள் கடன் கேட்டதுக்குக் கூடத் தரமாட்டேனென மறுத்துவிட்டாள். அதனைக் கழற்றி உள்ளங்கையில் வைத்துக் கொண்டு இமைக்கவும் மறந்து ஏக்கத்தோடு பார்த்தன அவளது விழிகள்.

என்னை எடுத்து, தன்னைக் கொடுத்து போனவன் போனாண்டி

தன்னைக் கொடுத்து என்னை அடைய கட்டாயம் வருவாண்டி

இந்த வயதுக்கு ஏக்கத்தை வைத்து போனவன் போனாண்டி

ஏக்கத்தைத் தீர்க்க, ஏனென்று கேட்க கட்டாயம் வருவாண்டி

நெஞ்சை எடுத்து நெருப்பினில் வைத்து போனவன் போனாண்டி

நீரை எடுத்து நெருப்பை அணைக்க கட்டாயம் வருவாண்டி

ஆசை மனசுக்கு வாசலை வைத்து போனவன் போனாண்டி

வாசலைத் தேடி, வாழ்த்துக்கள் பாடி கட்டாயம் வருவாண்டி

ஒரு நிமிடம் இல்லை இரு நிமிடம் இல்லை இரவு முழுவதும் அவள் அவ்வாறே சிலையாய் அமர்ந்திருக்க, இதுவரை புள்ளி மானாய்த் துள்ளித் திரிந்த தன் குட்டி மச்சினியின் மனதில் புதைந்திருக்கும் காதலின் ஆழத்தை, அந்த இரவு முழுதும் கண்ட சம்முவம் திகைத்துப் போனான்.

விடிந்தவுடன் சரயு அருகிலில்லை என்று உறுதி படுத்திக் கொண்டு, “ஏய் லச்சுமி இங்க வாடி, உன் தங்கச்சிக்கு வந்துருக்குறது வயசுக் கோளாறில்லடி, நெஞ்சு வெடிக்கிற அளவுக்கு மனசு வேதனை… கடப்பாறையை முழுங்கிட்டு சுக்குக் கசாயம் குடிச்சாப்பில, வெளிய காட்டிக்காம சுத்திகிட்டிருக்கா”

இரவு நடந்ததைச் சொல்லி, மனைவியிடம் கலந்து பேசிவிட்டு சரயுவை அழைத்தவன்,

“அவன் எங்கிருக்கான்?” என்றான்.

எவன் என்று புரியாமல் விழித்தவளிடம்,

“அந்தத் தெலுங்குக்காரன்”

என்னடா இந்த முரட்டுக் கும்பல், விஷ்ணுவோட விலாசத்தை கேக்குறாங்க ஏதாவது ஏற்கனவே செஞ்சுடப் போறாங்களோ விஷ்ணு பொpய கமிட்மெண்ட் இருக்குன்னு சொன்னான். இவங்க வேற அவனுக்கு தொல்லையா…

“எனக்குத் தெரியாது” என்றாள் முறைப்புடன்.

“தெரியாதாமில்ல… ஆனா அவன் தந்த சங்கிலிய மட்டும் ராத்திரி பூரா தூங்காம கொள்ளாம வெறிச்சுட்டுக் கெடப்ப…

கத்திரிக்கா விலாசத்த சொல்லுடி… நான் அவங்க வீட்டுல போயி பேசிப் பாக்குறேன்”

நம்பமுடியாத புன்னகையில் மலர்ந்தது சரயுவின் முகம்.

“அவங்க அம்மாவுக்கு டியூமராம். வைத்தியம் பாக்க அமெரிக்கா போயிருக்காரு. அவரும் அங்கதான் படிச்சாரு மச்சான். கம்ப்யூட்டர் எஞ்சினியர்”

“அடேங்கப்பா… லச்சுமி, உன் தங்கச்சி புளியங்கொம்பா பிடிச்சிருக்காடி அதுதான் நான் பாக்குற மாப்பிள்ளையெல்லாம் உனக்கு கசக்கோ… சரி போன் பேசுறப்ப என்கிட்டே கொடு நான் பேசணும்”

கடுகாய் பொரிந்தாள் சரயு, “போனாமில்ல போனு… எத்தினிதரம் கேட்டேன். வாங்கித் தந்தியளா? உனக்கெதுக்கு போனு நீ யாரு கூட பேசப்போரன்னு சொல்லிப் பத்தி விட்டுடீக… கல்யாணம் ஆன அக்காக்கெல்லாம் மட்டும்தான் போனு எனக்கு வீட்ல கூட போன் இல்ல. அப்பறம் விஷ்ணுவுக்கு எந்த நம்பரக் கொடுக்க?”

“அடியாத்தி லச்சுமி… இவ வார கோவத்துல எழனி சீவுதாப்புல எந்தலைய சீவிடப் போறா… அவ்வா வீட்டுலத்தானிருக்கேன்னு நெனச்சு விட்டுடோம். இதுனால ரெண்டு சீவன் இம்புட்டுக் கஷ்டப்படும்னு தெரியாம போயிருச்சே… சரி நீயாவது பேசி, அவரு ஊருக்கு வாரப்ப நம்ம வீட்டுக்கு வரச்சொல்லு” என்ன வருவாருல்ல…

“நா கூப்பிட்டா கண்டிப்பா வருவாரு மச்சான்” ஆனா…

“ஆனா…”

“அமெரிக்கா போறதுக்கு முன்னாடியே என்னை வந்திரச் சொல்லிக் கூப்பிட்டாரு… அப்பாவுக்கு அப்ப சொகமில்லைன்னு வரமாட்டேன்னு சொல்லிட்டேன். அதுல அவருக்கு ரொம்ப கோவம். இப்ப என்னோட வேலை முடிஞ்சதும் அவரை வான்னு சொல்லுறது என்ன நியாயம். அவரு பாவம் எந்த கஷ்டத்துல இருக்காரோ”

உடம்பு சரியில்லாத அப்பாவப் பாத்துக்க இருந்தாளா? அவனும் அதுக்கு ஒத்துக்கிட்டானா? அப்ப நல்லவனாத்தான் இருக்கணும். மேலும் சில விசாரணைகளை சரயுவிடம் மேற்கொண்டான்.

“மனசுல இம்புட்டு ஆசைய வச்சுகிட்டு அப்பறம் எப்படி நான் மாப்பிள்ளையக் கூட்டிட்டு வந்தப்ப முன்னாடி நின்ன?”

“ஆமா நின்னேன். அன்னைக்கு ராத்திரியே ஊர விட்டு ஓடிப் போயிடலாமுன்னுல்ல நெனச்சிருந்தேன்.”

ஐயோ இவ இந்தத் திட்டத்தோடத்தான் சத்தம் காட்டாம நின்னாளா? லச்சுமி பயத்துடன் சம்முவத்தைப் பார்த்தாள்.

“இப்ப கடைசியா என்னதான் சொல்லுத?” சீரியசாய் கேட்டான் சம்முவம்.

“விஷ்ணுவுக்கு நம்ம வீடு, அம்மா அப்பா எல்லாரையும் தெரியும். வேல முடிஞ்சதும் கட்டாயம் என்னத் தேடி வந்துடுவாரு. அதுவரை…”

“அதுவரை…”

“மச்சான் எனக்கு மதுரைல வேல கெடச்சிருக்கு. இன்னைக்கே நான் சத்தம் காட்டாம கிளம்பி போயிடுதேன், பிரச்சன முடியும். நீங்க நா ஓடிப் போயிட்டேன்னு சொல்லிடுங்க. என்னை யாரும் பாக்கக் கூட வர வேண்டாம். விஷ்ணு வார வரைக்கும் வேல பாக்குதேன்.”

இந்த யோசனை எவ்வளவு தூரம் சரி வரும் என்று சம்முவதுக்குத் தெரியவில்லை. ஆனாலும் சரயு மனம் சற்று மாறவாவது சிறிது கால அவகாசம் தேவை என்று சம்முவத்துக்குப் பட்டது. வெளியுலகத்தப் பாத்தா அவளுக்கும் உண்மை தெரியும் என் தம்பதியர் நினைத்தனர்.

“சரி அதுக்குள்ள ஒண்ணு ரெண்டு வருசம் டைம் தாரேன்… அந்தத் தெலுங்குக்காரனக் கட்டிக்கிடணும் இல்ல…”

“இல்லேன்னா வேற வழி… ரெண்டு வருஷம் முடிஞ்ச உடனே கருவாட்டுக் குழம்பு வைக்கக் கத்துக்கிடுதேன். லச்சுமிக்கா… உன் புருசனுக்கு அதுதானே பிடிக்கும் என்று சொல்ல…”

நீண்ட நாள் கழித்து அந்தக் குடும்பத்தில் சிரிப்பு சத்தம்.

துரை, வடக்கில் காசிக்கு இணையாகத் தெற்கில் பழமை வாய்ந்த தூங்கா நகரம். நகரத்தின் ஒரு பகுதியான பழங்காநத்தம், சரித்திரத்தை ஆராய்ந்து பார்த்தால் கோவலனின் தலையைக் கொய்த நத்தம் (சுடுகாடு) இருந்த இடம் இது என்பது தெரியும். கொஞ்சம் தம் கட்டி முயன்றால், அவன் தலையை வெட்டப் பயன்படுத்திய கல்லைக் கூடக் காணலாம். சற்று தள்ளி மன்னர் கல்லூரி அருகே மதுரை எரிவதைக் கண்ணகி நின்று பார்வையிட்டதாய் சொல்லப்படும் சிறு குன்று.

தங்களை அழித்த பெண்ணைப் பகை என்று தூற்றாமல், பத்தினித் தெய்வமாய் போற்றி, கொற்றவனின் தவறான தீர்ப்புக்காக அவளளித்த தண்டனையை சிரம்தாழ்த்தி ஏற்ற மதுரை மாநகரத்து மக்கள் எத்தகைய வரலாற்று சிறப்பு மிக்க இடத்தில் வசிக்கிறோம் என்று நினைத்துப் பெருமிதப்படக் கூட நேரமின்றி வேலைக்கு ஓடிக் கொண்டிருக்கும் உழைப்பாளிகள்.

கப்பலூர் செல்லும் பேருந்தில் கும்பலுடன் நெருக்கியடித்துக் கொண்டு லாவகமாய் ஏறி டிரைவர் இருக்கும் பகுதியருகே நின்று கொண்டாள் சரயு. அங்கு பெரும்பாலும் பெண்கள்தான் நிற்பார்கள். அவ்விடத்தில் சிலுமிஷம் செய்பவர்களிடமிருந்து எளிதில் தப்பித்துக் கொள்ளலாம். ஜனக் கூட்டத்திலிருந்து தப்பிக்கும் பொருட்டுத்தான் ஏழு மணி ஷிப்ட்டைக் கேட்டு வாங்கினாள். ஆனால் மதுரையில் இவளைப் போலவே நிறைய பேர் நினைத்திருப்பார்கள் போலிருக்கிறது. கப்பலூர் இண்டஸ்டிரியல் எஸ்டேட்டில் இறங்கியவள் அங்கிருந்த மினி பஸ்ஸில் ஏறி அவள் வேலை செய்யும் கம்பனியை சென்றடைந்தாள்.

ஊரிலிருந்து மூன்றாம் நபருக்குத் தெரியாது ரத்தினசாமியின் துணையோடு மதுரை வந்தவளை, சிவதாணு பெண்கள் விடுதி ஒன்றில் சேர்த்து விட்டான். சம்முவம் மச்சானின் பணம் அவளுக்கு அழகழகான உடைகளாய் உருமாறியிருந்தது. அவளிருக்கும் இடம் மூன்றாம் பேருக்குக் கூடத் தெரியாமல் ரகசியமாய் வைக்கப்பட்டது. செல்வம் அவளைத் தேடி சம்முவத்தின் சொந்தக்காரர்கள் வீட்டில் ஒரு கண்ணும், சரஸ்வதியின் சொந்தக்காரர்கள் வீட்டில் ஒரு கண்ணும் வைத்திருந்தான்.

மதுரையில் நட்ஸ் அண்ட் போல்ட்ஸ் உற்பத்தி செய்யும் கம்பனி ஒன்றின் டெஸ்டிங் பிரிவில் சரயுவுக்கு வேலை கிடைத்திருந்தது. இரும்புக் கம்பிகளை அடித்து நிமிடத்துக்கு முன்னூறு நட்டுகளையும் போல்ட்டுகளையும் உருவாக்குமிடம். அதில் பல சாம்பிள்களைத் தேர்ந்தெடுத்து தரத்தினை சோதிக்கும் வேலை சரயுவின் குழுவுக்கு.

மைக்ரோமீட்டர், வர்னியர் காலிப்பெர்ஸால் நட்டுகளின் அளவினை பரிட்சித்துப் பார்த்தபின், சுற்றும் திரிகள் பிசிறின்றி இருக்கிறதா என்று ரிங் கேஜால் சோதித்தாள். சலிக்காமல் தனக்கு அளிக்கப்பட்ட செக்குமாட்டு வேலைகளை நாள் முழுவதும் செய்த பின் அலுப்பாக வெளியே வந்தாள்.

“நில்லும்மா சம்பளம் வாங்கிக்கோ” என்றபடி முதல் மாத சம்பளத்தை சரயுவின் கைகளில் தந்தார் கணக்கர்.

கண்கள் விரிய அந்தக் கவரைப் பார்த்தாள் சரயு. ‘ஒரு மாசமாயிருச்சா?’

உடன் வேலை செய்யும் பெண்கள் வார விடுமுறைக்கு ஊருக்குப் போவதைப் பற்றியும், உறவினர்களில் யார் யாருக்கு என்ன வாங்கித் தரவேண்டும் என்பதைப் பற்றியும் பேசியபடியே கிளம்பினர்.

‘நான் யாருக்கு இந்தப் பணத்தை செலவழிப்பேன் அப்பா இருந்திருந்தார்னா அவர் கைல குடுத்திருப்பேன். அம்மாவுக்கு சேலை வாங்கித் தந்திருப்பேன். அக்கா பசங்களுக்கு டிரஸ் வாங்கலாம்.

விஷ்ணு இருந்திருந்தா இத்துனூண்டு பணத்தை வச்சு விஷ்ணுவுக்கு என்ன வாங்க முடியும்? எதை வாங்கினாலும் அவனுக்கு தகுதியா இருக்காதே… அவன்கிட்ட எல்லாமிருக்கே…’ புரியாமல் விடுதி வரும் வரை யோசித்தாள். பின்னர் மூன்று பஸ் ஸ்டாப் தொலைவே இருக்கும் பெரியார் நிலையத்துக்கு சென்று செந்தில்முருகன் ஜுவல்லரியில் ‘விஷ்ணுவுக்குப் பெருமாள்தானே பிடிக்கும்’ என்று எண்ணியபடி இருக்கும் பணத்துக்கு ஈடாக ஏழுமலையானைப் பதித்த, ஆண்கள் போடும் மோதிரம் ஒன்றை, குத்துமதிப்பான அளவில் வாங்கினாள். அளவு சரியில்லைன்னா எப்பக் கொண்டு வந்தாலும் மாத்திக்கிடணும் என்று நகைக் கடைக்காரரிடம் சொல்லிவிட்டாள்.

விஷ்ணு என்னைத் தேடி ஊருக்குப் போவானோ? கடமையை செஞ்சுட்டுக் கண்டிப்பா பேசிருப்பான். இதுவரை அப்பா இறந்த தகவலை சொல்லாதது அவளுக்கு நினைவுக்கு வந்தது.

‘அவனோட போன் நம்பர்தான் வேலை செய்யலையே சரி முயற்சி செய்து முதல் பார்ப்போம்’ என்று விடுதியின் பக்கத்திலேயே இருந்த எஸ்டிடி பு+த்துக்குள் நுழைந்தாள். எண்ணை முயன்றவள் உபயோகத்தில் இல்லை என்ற அறிவிப்பைக் கேட்டு சோர்ந்தாள். பயத்துடன் அவளது விரல்கள் எட்டாவது படிக்கும் போது அவன் சொன்ன எண்களை அழுத்தியது.”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 5என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 5

மதியம் அனைவரும் உணவு உண்டுக்  கொண்டிருந்தனர். குடும்பத்தினர் திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்கள் அனைவரும் கூடத்தில் இருந்தனர். தலை வாழை இலையில் உணவு பரிமாறி  இருக்க, அரவிந்த், முதல் பெண் சுதாவின் கணவன் நாதன், இரண்டாவது மகள் சங்கீதாவின் கணவன் கதிர், புதிதாக

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 9தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 9

“என்னடா ஜிஷ்ணு… இப்படி வந்து படுத்துகிட்ட” அங்கலாய்த்தபடி வந்தான் வெங்கடேஷ். நெல்லையப்பன் சீவித் தந்திருந்த இளநியை… வாயால் வண்டி ஓட்டியபடி வந்த அணுகுண்டும் சரயுவும் நண்பர்கள் இருவருக்கும் தந்தார்கள். “என்னமோ நான் ஆசைப்பட்டு வந்து ஹாஸ்பிட்டல்ல படுத்துட்ட மாதிரி சொல்லற” இளநியை

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 11தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 11

லக்ஷ்மியின் முயற்சியால் சரயு சற்று தேறினாள். தாயின் படம், அவரின் பொருட்கள் என சரயுவுக்கு அம்மாவை நினைவுபடுத்தும் பொருட்களை தந்தையின் உதவியோடு கண்ணுக்கு மறைவாக வைத்தாள். சிவகாமியின் சிறிய படம் ஒன்று மட்டும் பூஜை அறையில் வைக்கப்பட்டது. காலையில் எழும் சரயுவுக்கு