Tamil Madhura தமிழ் மதுராவின் சித்ராங்கதா,Tamil Madhura தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 30

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 30

செல்வத்தின் வீட்டில் பணபுழக்கம் தாராளமாகிவிட்டது. புதிதாய் பெரிய டிவி, பிரிட்ஜ், கட்டில், பீரோ, சோபா எல்லாம் அந்த சின்ன வீட்டில் நெருக்கியடித்துக் கொண்டு நிறைந்திருந்தது. நெல்லையப்பனின் மெக்கானிக் கடை செல்வத்தின் வசமானதிலிருந்துதான் இந்தப் பவிசு. செல்வத்தின் அப்பா இறந்து விட்டதால், பக்கத்து தெருவிலிருக்கும் அம்மா வீட்டுடன் உறவு சில காலமாய் துளிர்த்திருந்தது. கடைப் பணம் வீட்டை ரொப்பியதால் சரஸ்வதியின் வயிறு இன்னமும் வாரிசை சுமக்காமல் இருப்பதை முணுமுணுக்கும் மாமியாரின் வாய் தற்காலிகமாய் மூடியது.

சரசுவும் எல்லா விரதமும் இருந்துத்தான் பாக்குதா, ஆனாலும் பலனில்லை. நேத்து கூட சாத்தான்குளத்துல வெத்தலைல மை தடவி குறி கேட்டுட்டு வந்தா… கல்யாணத்துக்கு முன்னே, செல்வத்தோட ஆசைல தப்பு பண்ணியாச்சு. மூணு தடவ கர்பத்தக் கலைச்சுட்டா… அந்தப் பாவம்தான் சுத்துதுன்னு சொல்லிப்புட்டான் அந்த சோசியக்காரன்… அதுக்குப் பரிகாரமா மூணு அமாவாசைக்கு கோழியறுத்து பூசை போடணுமாம். அதுக்கோசரம் ஆயிர ரூபா துட்டைக் கொடுத்துட்டு வந்தா…

காரைப் பெயர்ந்திருந்த சமையலறை சுவரை கொத்திப் பூச சொல்ல வேண்டும் என்று எண்ணமிட்டபடியே செல்வம் சாப்பிட இறைச்சிக் குழம்பை சுட வைத்துக் கொண்டிருந்தாள் சரஸ்வதி. அவனுக்கு நித்தமும் அசைவம் வேண்டும், குடிக்க பனங்கள் வேண்டும் அத்துடன் கூடலுக்கு சரசுவும் வேண்டும்.

சரசுவின் வீட்டில் மரக்கறி உணவுவகைகள்தான் அதிகம் உண்பது. அதில்தான் எல்லா சத்தும் சேரும் என்று சிவகாமி வலியுறுத்துவார். தினமும் துவரை, பச்சை பயிறு, கானம் துவையல் என்று ஏதாவது ஒரு வகையில் பருப்பிருக்கும். அத்துடன் ஒரு முருங்கை, பொன்னாங்கண்ணி, அகத்தி என்று பச்சையாய் தட்டின் ஓரத்தில் ஒரு கீரை தவறாமல் இடம்பெறும். கோழிகளை வளர்ப்பதால் வேகவைத்த முட்டை ஆளுக்கு ஒன்று உண்ண வேண்டும் என்பது அவள் வீட்டில் எழுதப்படாத சட்டம். முட்டையும், பருப்பும் செரிக்க, நல்லெண்ணையில் ஜீரகம் தூக்கலாய் தாளித்து, நாலைந்து பல் பூண்டுகளை நசுக்கிப் போட்ட ரசம் கொத்தமல்லி வாசத்தைக் காற்றில் பரப்பி வயிற்றைப் பசியால் கிள்ள வைக்கும்.

நெல்லையப்பன், சிவகாமி விஷத்தையே தந்தாலும் அமிர்தமாக எண்ணி உண்ணுவார். அக்காள்கள் பார்வதி, லக்ஷ்மிக்கு அசைவ வாடையே பிடிக்காது.

ஊர்சுற்றி சரயுவுக்கோ சாப்பாட்டை விட, தோப்பில் அடித்துத் உண்ணும் மாங்காய், தரையில் சிதறிக் கிடக்கும் புளியம்பழம், மரத்தை உலுப்பிப் பொறுக்கிய நவாப்பழம், செடியில் பிடுங்கித் தின்னும் வெள்ளரி இதிலேயே வயிறு ரொம்பி விடும். அம்மாவிடம் கிடைக்கும் அடிக்கு பயந்து கொஞ்சமாய் சாப்பிடுவாள். பாதி நேரம் தூங்கிக் கொண்டேதான் சரயுவின் இரவு சாப்பாடிருக்கும். அது சைவமா அசைவமா என்று பார்க்கக் கூட மாட்டாள். அத்தனைத் தூக்கத்திலும் உப்புமாவைக் கண்டால் மட்டும்,

“யம்மா… இனிமே நீ உப்புமா செஞ்சா வீட்டை விட்டு ஓடிப் போயிடுவேன்… எனக்கு தோசை ஊத்தித்தா… தொட்டுக்க இட்டிலிமொளவாப் பொடி வச்சுக்கிடுதேன்“ என்று அலறுவாள்.

“சிவாமி… சின்னக்குட்டிக்குத்தான் உப்புமா புடிக்காதுன்னு தெரியுமே… ஒரே ஒரு தோசை ஊத்தித்தா… மாவில்லைன்னா சொல்லு நான் அய்யர் கடைல போய் ஊத்தப்பம் வாங்கியாறேன்” என்று நெல்லையப்பன் மனைவியைக் கடிந்து கொள்வார்.

அங்கு நடக்கும் பாசக் காட்சிகளைக் கண்டு சரசுக்கு வெறுப்பாயிருக்கும். ‘இவ பெரிய மகாராணி… தட்டுல போட்டத உண்ண மாட்டாளோ… முதுகுல நாலு மொத்து தந்தா உள்ள தன்னால எறங்கும்’

சரசுக்கு அசைவம் பிடிக்கும். அதனால் நெல்லையப்பன் வெளியூர் போகும்போது, நேரமிருந்தால் சரசுக்கு ஏதாவது வாங்கிவருவார். ஆனால் சரயுவுக்கோ ஏதாவது மிட்டாய், பிஸ்கட் வகைகள் கண்டிப்பாய் இருக்கும்.

“இவளத்தேன் உங்களுக்குப் பிடிக்கும்பா” என்று சரசு சண்டை போடுவாள்.

“என்னம்மா நீ… சின்னக்குட்டி கூடப் போய் போட்டிப் போடுத… பைபாஸ் ரோட்டில லாரி பிரேக்டவுனாயிட்டு… தார் ரோட்டில படுத்து ரிப்பேர் செய்ய வேண்டியதாயிட்டு… அங்கன எங்க உனக்கு வேண்டியது கிடைக்கும்… இவ சாப்பிடுற பல்லி முட்டாயும், ரொட்டியும் பக்கத்துல இருக்குற பெட்டிக் கடைலயே கிடைக்கு. உனக்கு பிரியாணி வாங்கணும்னா நான் டவுனுகுள்ள நல்ல கடையைத் தேடி அலையணும். அதுனாலதாம்மா வாங்கிட்டு வரல”

என்று தந்தை சொல்லும் சமாதான வார்த்தைகளில் அவளுக்கு நம்பிக்கையே இல்லை. இவள் ஒருத்தியின் உணவு ஆசை கூட பிறந்த வீட்டில் நிறைவேறியதில்லை. ஆனால் அவள் கணவன் செல்வம் நிறைவேற்றினான்.

செல்வத்துக்கு சுடச்சுட பொன்னி அரிசி சோற்றைப் பரிமாறி, அதன் மேல் சுண்ட வைத்தக் குழம்பை ஊற்றினாள். தொட்டுக் கொள்ள மீன் வருவலும், முட்டைப் பொறியலும் வைத்தாள். சோத்தைப் பிசைந்து வாயில் வைத்தவன் அதன் ருசியில் மயங்கினான்.

‘வள்ளியூர் சரோசாவோட கைபக்குவமே தனிதான்’ என்று எண்ணிக் கொண்டான். சரோசா அவன் வழக்கமாகப் போய் வரும் சிங்காரி. வாடிக்கையாளர்களுக்கு உணவையும் படைத்து, அதன் பின் உண்ணத் தன்னையும் தரும் தயாள மனமுள்ளவள். அங்கு உண்ட ருசியில் மயங்கி, சரோசா சமைத்த உணவைப் பார்சல் வாங்கி வந்து மனைவிக்குத் தரும் ஏத்தம் தொல்லுலகிலேயே செல்வத்துக்கு மட்டுமே உண்டு.

செல்வம் ருசித்து உண்பதைப் பார்த்தவாறே தன்மேல் கணவனுக்கு இருக்கும் அக்கறையை எண்ணி எண்ணி மகிழ்ந்து கொண்டிருந்தாள் சரசு. மதுரைக்குக் கூட்டிச் செல்லும்போது கோனார் கடையில் கறிதோசை, அம்சவல்லி பிரியாணி எல்லாம் வாங்கித் தருவான்.

அப்பா இப்போது படுத்த படுக்கையாக இருப்பதால் வெளியே செல்ல நேரமிருப்பதில்லை. கடை வேலை எல்லாம் செல்வத்தின் தலையில் தான். தூத்துக்குடி, திருநெல்வேலி, அம்பா சமுத்திரம் என்று நாயாட்டம் அலைகிறான். அந்த அலைச்சலிலும் மறக்காமல் சரசுவுக்கு திங்க வாங்கி வருவான். அந்த உணவை விட, தன் நினைவு அவனுக்கு இருக்கிறது என்ற எண்ணமே சரசுக்கு பூரிப்பைத் தந்தது.

தூத்துக்குடியிலிருந்து வரும்போது மீன் புளிகுழம்பு, சாத்தூரிலிருந்து கோழி வறுவல், அம்பை செல்லும்போது கோழிக் கொத்து என்று வகைவகையாக உண்டிகளைப் பழக்கி விட்டிருந்தான். ஒவ்வொன்றும் கடையில் வாங்கியதைப் போல் நெஞ்சு கரிக்காமல், வீட்டில் செஞ்ச கைப்பக்குவத்திலிருக்கும்.

“எப்படிய்யா இது… வீட்டில செஞ்சதாட்டம் ருசியா…” என்று ஆச்சரியப்பட்டிருக்கிறாள்.

“நிதமும் கடைல சாப்புட முடியுமா? உடம்புக்கு ஒத்துகிடாதுல்ல… நாலு எடம் சுத்துறவனுக்கு எது வீட்டு சாப்பாடு மாதிரியிருக்கும்ன்னு தெரியாதா?” என்று சொல்லி மோகனச் சிரிப்பு சிரிப்பான்.

நேற்று கூட வள்ளியுரிலிருந்து இறைச்சிக் குழம்பு வந்திருந்தது. ஒரு மணிக்கு வந்தாலும் அவளை சாப்பிடச் சொல்லி ரசித்துவிட்டுத்தான் விளக்கையும் அவளையும் அணைத்தான். இரவின் நினைப்பில் சரசுக்கு முகம் சிவந்தது.

வெட்கப்படும் சரசுவைப் பார்த்த செல்வத்துக்குக் கடுப்பாய் வந்தது. ‘இவல்லாம் எனக்கு சோடியா… ஆளப் பாரு உடம்புல ஒரு எடம் பாக்கியில்லாம சதை போட்டு, நல்ல எருமை மாடாட்டம் மத மதன்னு… இவளுக்கு சோறு போட்டே இவ அப்பன் சொத்து அழிஞ்சுரும் போலிருக்கு… கல்யாணத்துக்கு முன்ன கலர் கம்மியாயிருந்தாலும் மூக்கும் முழியுமா கொஞ்சம் பாக்குறாப்புல இருந்தா, இப்ப பூசணிக்கா மாதிரி உப்பிப் போன மூஞ்சில மூக்கைத் தேட வேண்டி கெடக்கு…

இதுவே தங்கச்சி சரயுவப் பாரு விளையாடி விளையாடி சிம்ரன் கணக்கா உடம்பு, சிக்குன்னு உடுக்காட்டம் இடுப்பு… எம்புட்டு அழகா இருக்காய்யா… இதுவுந்தேன் இருக்கே… தின்னுட்டு தின்னுட்டு தூங்கிப்புட்டு… வெளில போய் செத்து சுண்ணாம்பாயிட்டு வர ஆம்பளைங்களுக்கு வீட்டுல கண்ணுக்குக் குளுர்ச்சியா ஒரு பொண்டாட்டி இருக்கணும்னு நெனக்கிறது ஒரு குத்தமாய்யா’

நொடியில் முகத்தை மாற்றி ஒரு வினையச் சிரிப்பைக் கொண்டு வந்தவன்,

“என்ன சரசு கனா காங்கியா… அதுல நானிருக்கேனா?”

“க்கும்… என் கனாவுல நீயும் உன் கனாவுல நானும் தானிருப்போம். இதை ஒரு கேள்வின்னு கேட்டுகிட்டு… பேசாம சாப்பிடுய்யா…” என்றவாறு கையை ஊன்றிக் கஷ்டப்பட்டு எழுந்துச் சென்றாள்.

“முப்பது வயசு கூட ஆகல… அதுக்குள்ளே இத்தா பெருசாயிட்டேன். எல்லாம் உன்னாலதான்யா… சாப்பாடு கொடுத்தே என் நாக்கை வளத்து வச்சுட்ட…” செல்லமாய் திட்டிக் கொண்டே எழுந்தாள்.

‘என் கனாவுல நீ இல்லடி… ராஜகுமாரி மாதிரி உன் தங்கச்சி தானிருக்கா… திமிரா என்னை முறைச்சுப் பாக்கா… அவ திமிரை ஒரு நாள் அடக்கி என் கால்ல விழ வைக்கிறேன் பாரு’ என்று எண்ணியவனின் மனதில் சரயுவின் தோற்றம் தீயை மூட்டியது.

‘பேசாம இவளைத் தீத்துக் கட்டிட்டு சரயுவைக் கட்டிக்கலாமா? அவளா கட்டிக்குவா… முன்னெல்லாம் சின்னக்குட்டின்னு கொஞ்சற மாதிரி அவ கன்னத்தைக் கிள்ளுவேன், முடியப் பிடிச்சு இழுப்பேன். ஒண்ணும் சொல்ல மாட்டா, இப்ப வெவரம் தெரிய ஆரம்பிச்சுட்டு போலிருக்கு… அன்னைக்கு ஒரு நா ஆசையா கிள்ளிட்டேன்யா அதுக்கு மூஞ்சிய உர்ருன்னு வச்சுட்டு,

“மச்சான் இப்படியெல்லாம் கன்னத்தைக் கிள்ளாதிக எனக்குப் புடிக்கலன்னு” மூஞ்சில அடிச்ச மாதிரி சொல்லிபுட்டா.

நானும் விடலையே, “அப்படித்தாண்டி கிள்ளுவேன்”ன்னு மறுபடியும் கன்னத்துல தடம் விழுறாப்புல அழுத்திக் கிள்ள, பாதகத்தி என்னைத் தள்ளி விட்டுட்டு சரசுகிட்ட,

“அக்கா மச்சான கன்னத்தைக் கிள்ள வேணாம்னு சொல்லு, எனக்குப் புடிக்கலன்னு சொல்லிட்டேன். அப்பறம் எனக்குக் கோவம் வந்தது ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆகிப்புடும்”ன்னு படக்குன்னு சொல்லிபுட்டா.

சரசு வேற, “ஏன்யா அவள இன்னமும் சின்ன புள்ளயாட்டம் நெனச்சுக் கொஞ்சிட்டு இருக்க”ன்னு ஏச,

“அவ வளந்துட்டான்னு நம்பவே முடியலடி. இன்னமும் அவ எனக்கு செல்லம்தான்”ன்னு சொல்லித் தப்பிக்க வேண்டியதாப் போயிடுச்சு.

‘அப்பனுக்குக் கை கால் விழுந்து வீட்டுல இருக்கான். அப்ப கூட ஒத்தாசைக்குக் கூப்பிடல. அல்லிராணி மாதிரி தானே வீட்டப் பாத்துக்குறா. மதுர அரசாணி மாதிரி தானே ஆசுபத்தரிக்கு அப்பனக் கூட்டிட்டுப் போறதென்ன, மருந்து மாத்தர வாங்கிட்டு வாரதென்ன… இதுல காலேசுல வேறப் போய் படிச்சுட்டு வேற வாராய்யா… பரிச்சைல தொண்ணூறு மார்க்கு வாங்கிருக்காளாம்… நல்லா படிக்கட்டும்… நானும் படிக்கல… எழவு தமிழ் கூட சரியா படிக்க வரமாடேங்கு… வீட்டுல இருக்குதே, ஆக்கங்கெட்டது அதுவும் எட்டு கோட்டடிச்சுப் படிச்சது… இவளாச்சும் படிக்கட்டும்… நாளைக்கு எனக்கும் அவளுக்கும் பொறக்கப் போற புள்ளங்களுக்கு படிப்பு சொல்லிக் கொடுக்க வசதியாயிருக்கும்…’

செல்வத்தின் கண்கள் சுகமாய் செருகின. ‘ஜல்லிக்கட்டு காளை மாதிரி முறைப்பா நிக்குற அவளை மூக்கணாங்கயிறு போடுறமாதிரி கழுத்துல தாலி கட்டி இழுத்துட்டு வரணும்… ராஜா கணக்கா நான், பக்கத்துல அழகா சரயு… அதென்னவோ தெரியல மத்தப் பொண்ணுங்களப் பாத்தா ஆசை வரும்… கல்லை விட்டெறிஞ்சு பாக்கலாம் படிஞ்சா சரின்னு தோணும்… ஆனா இவளைப் பாக்கும்போது எப்பாடு பட்டாவது அடைஞ்சே ஆகணும்னு ஒரு வெறிதான் வருது.

என்ன ஒரு வைராக்கியம், தைரியம்… இவள மாதிரி ஒருத்தி கூட இருந்தா உலகத்தையே ஜெயிக்கலாம். போக வர பாக்கறப்ப தாழம்பூ வாசத்துக்கு மயங்குற பாம்பப் போல மயங்கி போகுது மனசு. வர வர சரயுவைப் பாக்காம இருப்பு கொள்ளல… அவளப் பாக்கக் கடப் பணத்தை தர மாதிரி வீட்டுக்குப் போகலாம்னா சம்முகம் பய பணத்தை இனிமே பேங்க்குல போட்டுடுன்னு சொல்லிட்டான். நான் என் மாமனார் வீட்டுக்குப் போகக் கூடாதுன்னு சொல்லுறதுக்கு அவன் யாருன்னு கேக்கேன்…’ எண்ணமிட்டபடியே சரயுவின் வீட்டுக்கு வண்டியை விட்டான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 52தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 52

சீதாராமக் கல்யாணம் முடிந்தவுடன் அங்கேயே உணவு பரிமாறப்பட்டது. தொழிலாளிகளுடன் தொழிலாளியாய் தரையில் அமர்ந்து உண்டான் ஜிஷ்ணு. சரயுதான் பாவம் திணறி விட்டாள். இனிப்பினை உண்டவளுக்கு பப்பு, புலுசு, புளிஹோரா என்று விதவிதமாய் பரிமாறப்பட்ட உணவின் காரம் தாங்க முடியவில்லை. “சாப்பிடும்மா” என்று

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 39தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 39

காலையில், தீயாய் எரிந்த கன்னங்களைத் தடவியபடி கண்ணாடி முன் நின்றான் ஜிஷ்ணு. “சரவெடி… அடின்னா அடி பலே அடிடி. இந்த மாதிரி ஒரு அறையை நான் யார்கிட்டயும் வாங்கினதே இல்ல. உனக்கு என் மேல வெறுப்பு வரணும்னுதான் அந்த கிஸ்ஸை தந்தேன்.

என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 36 (நிறைவுப் பகுதி)என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 36 (நிறைவுப் பகுதி)

அத்தியாயம் –  36   சித்தாரா குழுவினர் வண்டியை நிறுத்தி வழியில் ஏறிக்கொண்ட நபரைப் பற்றி சித்தாரா ஊகித்தது சரிதானா என்று விவேகானந்தரைக் கேட்டுக் கொண்டாள். அவளுக்கு ஒரே வியப்பு. நடக்கப்போவது நல்லபடியாக முடிய வேண்டுமே என்று கவலை.   அதே