Tamil Madhura தமிழ் மதுராவின் சித்ராங்கதா,Tamil Madhura தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 11

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 11

க்ஷ்மியின் முயற்சியால் சரயு சற்று தேறினாள். தாயின் படம், அவரின் பொருட்கள் என சரயுவுக்கு அம்மாவை நினைவுபடுத்தும் பொருட்களை தந்தையின் உதவியோடு கண்ணுக்கு மறைவாக வைத்தாள். சிவகாமியின் சிறிய படம் ஒன்று மட்டும் பூஜை அறையில் வைக்கப்பட்டது. காலையில் எழும் சரயுவுக்கு கடைக்குப் போவது, அக்காள்களுடன் படம் பார்க்க துணைக்கு போவது என வீட்டு வேலைகள் சரியாய் இருந்தன. வேறு சிந்தனைக்கே நேரமில்லை. தாயைப் பற்றிய நினைவுகள் ஆக்ரமிக்காதவாறு பார்த்து பார்த்து கவனித்துக் கொண்டனர் லக்ஷ்மியும் நெல்லையப்பனும். சிவகாமியின் நினைவுகளும், மரணமும் எரிமலைக்குழம்புபோல் சரயுவின் மனதில் பத்திரமாய் சேமிக்கப்பட்டன.

நாட்கள் ரக்கை கட்டிக்கொண்டு பறந்தன. ஒரு வருடம் பார்வையாளராய் இருந்து உன்னிப்பாக கவனித்ததில் கூடைப்பந்து விளையாட்டு கொஞ்சம் கொஞ்சமாய் புரிபட்டது சரயுவுக்கு. மற்றவர்கள் செய்யும் தவறும், அதை இப்படி செய்திருக்கலாமே என்ற யோசனையும் தோன்றியது. மனோரமா அவ்வப்போது அவர் மகன் ஆஸ்திரேலியாவிலிருந்து அனுப்பிய மடிக்கணினியில் சுவாரஸ்யமான கூடைப்பந்து விளையாட்டு வீடியோக்களை காண்பிப்பார். மொழி புரிய சிரமமாயிருந்தாலும் இப்போது அந்த விளையாட்டு நன்றாகப் புரிந்தது அவளுக்கு. பந்து பொறுக்கிப் போடுவதில் ஆரம்பித்த சரயு, செங்கமலத்தைக் கொஞ்சம் கொஞ்சமாய் காக்காய் பிடித்து ஷூட்டிங், பாஸிங் என்று கற்றுத் தேர்ந்தாள். அவளது ஆர்வத்தை கவனியாதது போல் கவனித்தார் மனோரமா. சரயுவும் மனோரமா பார்க்கும்பொழுது பந்தைப் பொறுக்கிப் போடுவது போல போட்டுவிட்டு அமர்ந்து கொள்வாள்.

“சூப்பரா விளையாடுறடி… பேசாம டீச்சர்ட்ட சொல்லி டீம்ல சேர்ந்துக்கோ” உடன் விளையாடும் எட்டாம் வகுப்பு பெண்களிலிருந்து செங்கமலம் வரை அனைவரும் சொல்லிவிட்டனர்.

ஆனால் ஒருமுறை கூட மனோரமாவிடம் டீமில் சேர்த்துக் கொள்ளும்படி கேட்டதில்லை சரயு.

“அவங்க தானே விளையாட்டை கவனிக்க சொன்னாங்க. டீச்சருக்கே என்னை எப்ப சேத்துக்கணும்னு தெரியும்” என சொல்லிவிடுவாள்.

சக டீச்சர் மனோரமாவிடம் ஒருதரம் சொன்னார்.

“அந்தப் பொண்ண டீம்ல போட்டுடலாம் டீச்சர். ஆர்வமா விளையாடுறா”

“அதனாலதான் டீம்ல போடல. சரயு ஏற்கனவே கொஞ்சம் திமிரு பிடிச்சவ இதுல நேரடியா சேர்த்திருந்தா கர்வம் வந்திருக்கும். அதுவே அவளோட ஆர்வத்தை அழிச்சிருக்கும். கஷ்டப்படாம கைல கிடைச்ச பொருளோட அருமை தெரியாமலேயே போயிருக்கும்.

அத்தோட மத்தவளுங்கல்லாம் கஷ்டப்பட்டு தேர்வாகி வந்தவளுங்க. இவளை நேரடியா டீம்ல போட்டிருந்தா, அவளுங்களுக்கு இவ மேல பொறாமை வந்துரும். அப்பறம் பாஸ்கட்பால்ல டீம் ஸ்ப்ரிட்டே போயிடும். டீம்ல ஒத்துமை இல்லாம இவளுங்க என்ன விளையாடிக் கிழிப்பாளுங்க. இப்ப ஒரு வருஷம் சரயு நல்லா விளையாட்டை கவனிச்சிருக்கா. பத்தாவது படிக்குறப்ப சென்ட்டரா விளையாடுவா. இவள மாவட்ட அளவுல நடக்குற ஜூனியர் விளையாட்டுக்குத் தயார் படுத்தலாம்னு இருக்கேன்”

ணகுடில செங்கல் சூளை வச்சிருக்காம்ல. கொள்ளத் துட்டு. லச்சுமிய கடத்தெருவுல கண்டிருப்பான் போல. பிடிச்சுப் பொண்ணு கேக்குறான். உன் பெரிய மாப்பிள்ளை மாதிரி பேராசைக்காரனில்ல. நக நட்ட பெரிசா எதிர்பார்க்கல. கம்மி பவுனப் போட்டுப் பத்தி விட்டுட்டு சரசுக்கும் கையோட முடிச்சுடு. உனக்கும் பாரம் குறையுமில்ல” வீட்டில் லக்ஷ்மிக்குத் தானாய் கனிந்து வந்த வரனைப் பற்றி சொன்னார் நெல்லையப்பனின் மாமா சிவமயம்.

பத்தி விடும் பேச்சை நெல்லையப்பன் ரசிக்கவில்லை. “லட்சுமி என்ன ஆடா மாடா பத்தி விட? அவளுக்கு பிடிச்சிருந்தாதேன் மேற்கொண்டு பேச்சு” பட்டுக் கத்தரித்தார்.

ஆனால் பெண்பார்க்கும் வைபவத்தின்போது லச்சுமிக்கு ஆறடி உயரத்தில் பனங்கருப்பட்டியால் வார்த்தார் போலிருந்த சம்முவத்தை நிரம்பவே பிடித்து விட்டது. சித்து பெண்ணாய் இருந்த லட்சுமியை மடியிலே இருத்திக் கொண்ட நரசிம்ம மூர்த்தியாய் தெரிந்தான் சம்முவம்.

“பையனுக்கு வயசு கூடுனாப்புல இருக்கே” கவலைப்பட்டார் நெல்லையப்பன்.

ஆனால் கருத்த முகத்தில் தெரிந்த குழந்தைத்தனத்தில் கவரப்பட்டாள் லக்ஷ்மி.

“சம்பாத்யதுக்குத் தக்கனதானே வயசுமிருக்கும். எனக்கு மாப்பிள்ளையைப் பிடிச்சிருக்குப்பா” துடுக்காய் சொன்னாள்.

மாப்பிள்ளையைப் பார்க்கும் ஆவலில் அவர்களுக்கு ஓடிப் போய் முதலில் காப்பி கொடுத்த சரயுவுக்கு அக்கா பதிலில் திருப்தியில்லை.

“போக்கா எனக்குப் பிடிக்கவேயில்ல. அந்தாளு கருகருன்னு அய்யனார் சாமி மாதிரி பயம்மா இருக்கான். நீ ஸ்னேஹா கணக்கா அழகா சிரிக்கிற. பேசாம விஜய் மாதிரி நல்லா டான்ஸ் ஆடுற மாப்பிள்ளையா கட்டிக்கோக்கா” சரயு ரோசனை சொன்னாள்.

“டான்ஸ் ஆடி… விவரங்கெட்டவளே… நாங்க ரெண்டு பேரும் சினிமா படத்துலையா நடிக்கப் போறோம். அவரு விஜய் மாதிரி இல்லைன்னா என்னடி. விஜயகாந்த் மாதிரி இருக்காரு”

“விஜயகாந்தா? கேப்டன்கிட்ட உத வாங்குற அடியாள் மாதிரி இருக்கான். அவனக் கட்டிகிட்ட, சத்தியமா உன் வீட்டுக்கே வரமாட்டேன் சொல்லிபுட்டேன்”

“நீ போடி அங்கிட்டு” தங்கையைப் பத்தி விட்டாள் லச்சுமி.

இருந்தும் மனதின் ஆற்றாமை தாங்காமல் தினத்துக்கும் பத்து முறை அப்பாவிடம் புலம்பித் தள்ளினாள் சரயு. வீட்டில் யாரும் அவள் சொல்வதை மதிக்கவேயில்லை என்பதில் அவளுக்குப் பெரிதும் வருத்தம்.

கல்யாணத்தின் போது மாப்பிள்ளையைத் தூர நின்று முறைத்துக் கொண்டே இருந்தாள். கத்திரிக்காய்க்கு கை கால் முளைத்தது போல் அங்கும் இங்கும் ஓடிய குட்டி மச்சினியை சம்முவமும் கவனித்துக் கொண்டுதான் இருந்தான்.

“ஆமா உந்தங்கச்சி ஏன் என்னை மொறச்சுகிட்டே கெடக்கா” திருமணநாள் இரவன்று தனிமையில் அதிமுக்கியமான அந்தக் கேள்வியை லச்சுமியிடம் கேட்டான்.

“கொடுவா மீச வச்சுக்கிட்டுத் திருட்டுப் பயலாட்டமிருக்கிங்களாம். அதுனால உங்கள விட்டு பத்தடி தள்ளியே நிக்க சொன்னா”

“ஓ… ஹா… ஹா…” அட்டகாசமாய் சிரித்தான்.

“இப்படி பயங்காட்டுறாப்புல அவ முன்னாடி சிரிச்சு வக்காதிங்க. அப்பறம் மச்சான் பேய் சிரிப்பு சிரிக்கிறாரு நீ வீட்டுலையே இருந்துடுன்னு ஒரு ஏழரையைக் கூட்டுவா”

“ஏண்டி நகயெல்லாம் வேண்டாம்னு எத்தன தரம் சொல்லுறது. மோதிரம் போட்டே ஆவேன்னு உங்க வீட்டுல அடம் பிடிச்சிங்களாமே. உங்கப்பனுக்கு ஒருதரம் சொன்னா மண்டைல ஏறாதா?”

“சொன்னிங்க சொரக்காய்க்கு உப்பில்லைன்னு. நீங்க சொல்லிட்டா அப்படியே விட்டுற முடியுமா? மாப்பிள்ளைக்கு ஒரு மோதிரம் போடக் கூட வக்கில்லைன்னு எங்கப்பாவத்தான குத்தம் சொல்லுவாங்க. அதுனால அப்பா வைர மோதிரம் செஞ்சு வச்சிருக்காரு”

“அது வேற இருக்கோ. அப்ப உங்கப்பன பத்து மோதிரமா போடச் சொல்லு”

“ஏற்கனவே சேட்டாட்டம் எல்லா விரலுளையும் மோதிரம் போட்டிருக்கிங்க”

“இருந்தாலும் மாமனார் ஆசையா தாரத வேண்டாம்னு சொல்ல முடியுமா? வாங்கிக் கால்ல போட்டுக்குறேண்டி”

சற்று நேரத்தில் கிறங்கினான்.

“லச்சுமி நிசமாவே என்னைப் பிடிச்சுத்தான் கல்யாணம் பண்ணிட்டியா? நான் சும்மா விளையாட்டுக்குத் தாண்டி இந்தப் பொண்ணப் பிடிச்சிருக்குன்னு உன்னக் கை காட்டுனேன். எங்காத்தா உன்னப் பொண்ணு கேட்டுடுச்சு. பொண்ணு பாக்க வந்தது கூட இம்புட்டு அழகா இருக்கவ பட்டு சீலை கட்டிகிட்டா எப்புடி இருப்பான்னு பாக்குற ஆர்வத்துலதான். கடத்தெருவுல பார்த்தது பத்தாம குடும்பத்தோட சைட் அடிக்க வந்தேன்னு வச்சுக்கோயேன். எப்படியும் நீ வேண்டான்னு சொல்லிடுவ வீட்டுக்குக் கிளம்பலாம்னு நெனச்சுட்டிருந்தேனா… உங்கப்பா உன்னையக் கட்டித் தரேன்னு சொன்னவுடனே எனக்கு மயக்கம் வராத குறை. அப்பறம் ஒரு வழியா கல்யாணம் நடந்தது. தக்காளிப் பழமாட்டமிருந்துட்டு எப்படிடி என்னப் போயி கட்டிகிட்ட? அந்தக் கத்தரிக்கா வருத்தப்பட்டதுல தப்பே இல்ல”

மனைவியைக் கொஞ்சினான்.

“இந்தக் கடவுளுக்குக் கண்ணே இல்ல. பச்சக்கிளியாட்டமிருக்க பொண்ணுக்கு கொரங்காட்டம் புருசனத் தந்திருக்கான் பாரு”

அவன் ஆற்றாமைப் பட, லக்ஷ்மி சமாதனப்படுத்த இனிமையான தாம்பத்யம் அங்கு அரங்கேறியது.

க்ஷ்மியை மறுவீட்டுக்கு ட்டு ட்டு ட்டு… என புல்லட்டில் அழைத்து வந்தான் சம்முவம். ஊரில் தனக்குப் பெண் தராதவர்கள் வீட்டுத் தெருவுக்கெல்லாம் மனைவியை அமர வைத்து ரவுண்டு போய், அழகு மனைவியைக் காட்டிவிட்டு மாலை நேரத்தில் மாமனார் வீட்டுக்கு வந்து சேர்ந்தான். சரயுவின் காயம்பட்ட மனதை அவனது புல்லட் சற்று ஆற்றியது. இருந்தாலும் மனதினுள் திட்டிக் கொண்டாள். ‘எரும மாட்டு மேல எமதர்மராசா மாதிரி உக்காந்து வாரதப் பாரு’

மாப்பிள்ளை வீட்டார் அனைவருக்கும் பலகாரமும் காப்பித்தண்ணியும் கொடுத்துவருமாறு பக்கத்து வீட்டு அவ்வா ஏவ, வேறு வழியில்லாமல் தாம்பாளத்தில் காப்பி டம்ளர்களை அடுக்கி வைத்தவாறு சென்றாள் சரயு. மாடு கழனித்தண்ணியை உறிஞ்சுவது போல் காப்பித்தண்ணியை உறிஞ்சினான் சம்முவம். பார்த்து முகம் சுழித்தாள் சரயு.

‘எங்கக்கா அழகா சாப்பிடும். இந்தாளுக்குக் காப்பி கூட ஒழுங்கா குடிக்கத்தெரியல. நமக்கெல்லாம் இந்த மாதிரி மாப்பிள்ளை பார்த்தா கல்யாணமே வேண்டாம்னு அப்பாட்ட சொல்லிடணும்பா’ உறுதிமொழி எடுத்துக் கொண்டாள்.

தான் காப்பிக் குடிப்பதை மூக்கை சுருக்கி முறைக்கும் சரயு கத்திரிக்காயை சம்முவமும் பார்த்தான். ‘எலே கத்திரிக்கா உங்கக்காளயா என்னை விட்டுப் பத்தடி தள்ளியே நிக்க சொன்ன. உன்னை கவனிச்சுக்கிடுதேன்’ மனதுள் கருவினான்.

“ஏலே சம்முவம், இவதான பொண்ணு பாக்க வந்தப்ப நமக்குக் காப்பி கொடுத்தது. உன் பொண்டாட்டியை விட இவ நல்லாயிருக்காலே. ஏம்லே இவளக் கட்டல” வங்கெழடு ஒன்று பொழுது போகாமல் கல்யாண வீட்டில் வம்பிழுக்க,

“நல்லா கேட்டிங்க சித்தப்பு. நானும் அதத்தான் சொன்னேன். லச்சுமிய விடக் காப்பி கொண்டு வந்த இந்தப் பொண்ணத்தேன் பிடிச்சிருக்கு, அவளயே கட்டிக்கிடுத்தேன்னுதான் சொன்னேன். அதுக்கு இவங்க அப்பாரு தான் இப்ப லட்சுமியைக் கட்டிக்கோ நாலு வருசம் செண்டு இவளக் கட்டிக்கலாம்னு சமாதானம் சொல்லிபுட்டாரு. இந்தாலே கத்திரிக்கா… ஒழுங்கா கருவாட்டுக் கொழம்பு வைக்கக் கத்துக்கோ… மச்சானுக்கு அதுதான் பிடிக்கும்” அவனும் பதிலுக்கு பகடி பேச கடுப்பாய் சம்முவத்தைப் பார்த்து முறைத்தாள்.

“விளக்குமாத்துக்கு…” என்று ஏதோ சொல்ல வந்தவளை வாய் பொத்தி சமையலறைக்கு இழுத்துப் போனாள் அவ்வா.

கோவத்துடன் லக்ஷ்மியிடம் எகிறினாள் சரயு.

“கருவாட்டுக் கொழம்பு வேணுமாமுல்ல… என்ன நெஞ்சு தைரியமிருந்தா என்னை கத்துக்க சொல்லுவான் உம்புருசன்… இந்தபாரு அந்தாளுட்ட சொல்லிவை நாலு வருசம் செண்டு என்னைக் கல்யாணம் பண்ணிக்கிற நெனப்பெல்லாம் தூக்கிக் கடாசிடணும். இல்ல… மச்சான்னு கூட பாக்கமாட்டேன். கெணத்துல குளிக்கிறப்ப மண்டைல கல்லத் தூக்கிப் போட்டுக் கொன்னுபுடுவேன்”

தனது ஆத்திரத்தைக் கொஞ்சமும் பொருட்படுத்தாமல் சீலையை சரி செய்த அக்காவைப் பழிவாங்க இங்க் பேனாவை எடுத்து பத்து முறை லச்சுமியின் சேலையில் அடித்து மசியைக் காலி செய்தாள்.

கடுப்பாய் முறைத்தாள் லக்ஷ்மி.

“புது சேலையை வீணாக்கிட்டியே… இங்கபாருடி… உன்ன மாதிரி பிடாரிய ஏண்டி என் புருசனுக்குக் கட்டி வைக்கணும். அவரு ஆசைப்பட்டா நல்ல பதவிசான புள்ளையாப் பாத்துக் கட்டி வைப்பேன்”

“நல்ல புருசன்… நல்ல பொண்டாட்டி… உன் குடும்பம் விளங்கிடும்” பளிப்பு காட்டினாள் சரயு.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் ‘உன்னிடம் மயங்குகிறேன் – 15’தமிழ் மதுராவின் ‘உன்னிடம் மயங்குகிறேன் – 15’

அத்தியாயம் – 15 அன்று காலையில் நந்தனா எழும்முன்பே ப்ரித்வி கிளம்பிவிட்டிருந்தான். அவன் அதிகாலை கிளம்ப வேண்டியிருந்தால் அவனே எழுந்து கதவை பூட்டிவிட்டு செல்வான். நந்தனா மெதுவாக எழுந்து கல்லூரிக்குக் கிளம்புவாள். காலை யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்டு எழுந்தாள்.

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 19தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 19

“லேட்டாச்சு… சாப்பாடு தீர்ந்துடும்… சாப்பிட வாங்க…” என்றபடி சரயுவின் கல்லூரி மாணவன் ஒருவன் வந்தான். அவனை எங்கோ பார்த்திருக்கிறோமே என்று யோசித்த ஜிஷ்ணு கஷ்டப்பட்டு யோசித்து, சரயுவின் பிறந்ததினத்தன்று அவளுக்கு சுவாமி படம் கொடுத்தவன் என்று நினைவுக்குக் கொண்டு வந்தான். “பிஸியா

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 52தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 52

சீதாராமக் கல்யாணம் முடிந்தவுடன் அங்கேயே உணவு பரிமாறப்பட்டது. தொழிலாளிகளுடன் தொழிலாளியாய் தரையில் அமர்ந்து உண்டான் ஜிஷ்ணு. சரயுதான் பாவம் திணறி விட்டாள். இனிப்பினை உண்டவளுக்கு பப்பு, புலுசு, புளிஹோரா என்று விதவிதமாய் பரிமாறப்பட்ட உணவின் காரம் தாங்க முடியவில்லை. “சாப்பிடும்மா” என்று