நிலவு 24
மகா பூஜைக்கு முன்னைய நாள் வீட்டில் அனைவரும் கோயிலை நோக்கிச் சென்றனர். அனைவரும் சாமி கும்பிட்டு வெளியேறும் போது சித்தர் அவர்கள் அனைவரையும் அழைத்தார். அதில் ஒவ்வொருவராக சென்று ஆசிர்வாதம் பெறச் சென்றனர்.
அவர் அருகில் சென்ற தாத்தாவிடம், “அன்று கூறியதும் அனைத்தும் உனக்கு ஞாபகம் உள்ளதா?” என்று கூற, அதை நினைத்துப் பார்த்தார்.
அரவிந்நாதன், சாவித்ரி தம்பதியினருக்கு திருமணம் ஆகி பத்து வருடங்களாக குழந்தை இருக்கவில்லை. அவர்கள் செல்லாதக் கோயில் இல்லை. வேண்டாத தெய்வங்களும் இல்லை. அனைத்து டாக்டர்களிடமும் சென்றார்கள். இதே பூஜை நடந்த போது இந்தச் சித்தர் அவர்களிடம் அடுத்த வருட இப்பூஜையின் போது குழந்தையுடன் வருவீர்கள் என்று ஆசிர்வதித்து அனுப்பினார். அதே போல் சாவித்ரி கருதரித்து பத்து மாதங்களில் ஒரு பெண் குழந்தைக்குத் தாய் ஆனார். கிறு பிறந்த உடனே விஜயசோதிலிங்கம் தனது நன்றியைத் தெரிவிக்க இதே கோயிலுக்கு வந்தார்.
அப்போது இச்சித்தர் தாத்தாவிடம் அருகில் வந்து,
“உன் இறுதி வாரிசே முதலில் திருமணம் செய்வாள். அவள் நெற்றியில் திலகம் இடுபவனே அவளவன். அதை யாராலும் மாற்ற இயலாது. இறைவனால் விதிக்கப்பட்டது.
அவளுக்காக இவன் இரவாக மாறி அவளை பௌர்ணமி நிலவாக ஜொலிக்க வைப்பான். அவனுக்காக இவள் இரவாக மாறி அவனை நிலவாக ஜொலிக்க வைப்பாள்” …..
என்றார்.
நடந்த அனைத்தும் கண்முன்னே தோன்றியது.
“நாளை அனைத்திற்கும் தயாராயிரு” என்றார். அடுத்ததாக சாவித்ரி, அரவிந் ஆசிர்வதித்தார். பின் ஒவ்வொருவராகச் சென்று ஆசிர்வாதத்தைப் பெற்றுக் கொண்டனர்.
கிறுவின் முறை வந்ததும், அவள் அருகில் சென்ற போது,
“உன்னவனை நீ கண்டுக் கொள்வாய்” என்றார்.
கிறுவோ “என்ன சொல்றார் இவரு? நமக்கு என்ன?” என்று அங்கிருந்து சென்றாள்.
அங்கே ஆரவ் மாத்திரம் இருக்கவில்லை. அவன் போடோ எடுப்பதற்காகச் சென்று இருந்தான். அனைவரும் கோயிலை விட்டு வெளியேறி, காரினில் ஏறும் போது அந்த இடத்திற்கு ஆரவ் போகும் போது சித்தர் அவனை அழைத்தார்.
அவனிடம்,
“உன்னவள் உன் கையில் கிடப்பாள். நீ இடும் திலகமும், உன் மூச்சும் அவள் உயிர் காக்கும்.”
அவன் அதைக் கேட்டு ஏளனமாக அவரைப் புன்னகைத்து காரில் சென்று ஏறினான்.
சித்தர் அவன் சென்ற பின் புன்னகைத்து,
“உன்னவள் உன்னிடம் வருவாள், உன்னாலே அந்தக் குருவிக் கூடும் கலையப் போகிறது. எல்லாம் இறைவன் செயல்” என்று அங்கிருந்து சென்றார்.
அங்கிருந்து வீடு வந்தவர்கள் சாதரணமாக இருக்க தாத்தா மட்டும் குழப்பத்தில் இருந்தது. அவரது மனம் ஏதோ தவறு நடக்கப்போவதாக கூறிக் கொண்டே இருந்தது. இருந்தாலும் கிறுவின் மணாளனை நாளைக் கண்டு கொள்ளலாம் என்று தன்னை சமாதானப்படுத்திக் கொண்டார். அனைவரும் சாப்பிட்டு விட்டு சோபாவில் அமர்ந்து இருந்தனர்.
ஜீவி “ஆன்டி நாளைக்கு பரிவட்டம் கட்டுகிறது மட்டும் இல்லாமல், உங்க பரம்பரை பூஜை இருக்கு இல்லையா? அந்த பூஜைய பற்றி சொல்ல முடியுமா?” என்று சாவியிடம் கேட்க, அவரும் அதைப் பற்றி கூறத் தொடங்கினார்.
“நாங்க ரகு வம்சத்தை சேர்ந்தவங்க, அந்த வம்சத்துல இருகிற பெண்களுக்கு, ஆண்களுக்கு பரிவட்டம் கட்டுகிற அதே நாளில் பவள மலையில் இருக்கிற, சிவனோட பாதத்தடியில் இருக்கிற குங்குமத்தை எடுத்துட்டு சித்தர் வருவாரு. அந்த குங்குமத்தை சுமங்கலி பெண்களோட நெற்றி வகுட்டில் தன்னோட கணவன் வச்சி விடுவாரு. அந்த குங்குமம் ரொம்ப புனிதமானது. அது ரகு வம்சத்தவங்களுக்கு மட்டும் தான் கொடுக்கப்படும். இது பரம்பரை பரம்பரையா நடக்குறது. ஊர்ல இருக்கிற சுமங்கலி பெண்களுக்கு வேறு குங்குமம் கொடுக்கப்படும். அந்த நாளில் குங்குமத்துக் சிறப்பு அதிகம்.
திருமணம் ஆக போறவங்க தன்னோட வருங்கால கணவர் கையால நெற்றியில் குங்குமத்தை வச்சிப்பாங்க. அதோட அர்த்தம் என்னன்னா, இந்த பொண்ணுக்கு இவரு தான் கணவன் ஆக போறாரு, அதில் எந்த மாற்றமும் இல்லை. அதாவது அது கிட்டத்தட்ட ஒரு சத்தியம் மாதிரி தான்” என்று விளக்கினார்.
இவை அனைத்தையும் கிறுவும், மீராவும் உன்னிப்பாக கவனிக்க, ஆரவ் அஸ்வினும் மற்றவர் அறியா வண்ணம் கவனமாக கேட்டுக் கொண்டு இருந்தனர். இதற்கிடையில் மாதேஷ், கவின் தம் துணைகளை மற்றவர் அறியா வண்ணம் பார்த்தனர்.
இவ்வாறு அன்றைய நாள் முடிந்து, பல்வேறு திருப்பங்களை வழங்குவதற்காக அடுத்த நாளும் அழகாக விடிந்தது. காலையில் பெண்கள் பரபரப்பாக அனைத்து வேலைகளையும் செய்தனர். இளங் குமரிகளில் கிறுவைத் தவிற மற்ற மூவரும் தாவணி அணிந்து, அதற்கேற்ப சில நகைகளை அணிந்து தேவதையாக வந்து நின்றனர்.
சாவி, “கிறு எங்கே?” என்று கேட்க,
“அவ தாவணி கட்டிக்க முடியாமல் தடுமாறிட்டு இருக்கா உங்களை ரூமிற்கு வர சொன்னா அத்தை” என்றாள் மீரா.
அவரும் கிறுவிற்கு உதவி செய்வதற்காக மாடியில் அவள் அறைக்குச் சென்றார்.
கீழே தயாராகி வந்த இளங் காளைகள் தத்தமது துணையின் அழகில் மயங்கி நின்றனர். அவர்களும் இவர்களுக்கு சலைத்தவர்கள் அல்ல என்பது போல் அவர்களை இரசித்துக் கொண்டு இருந்தனர். ஆரவ் இவர்கள் அனைவரின் நிலையைக் கண்டு சிரித்துக் கொண்டு இருந்தான். சிறிது நேரத்தில் சாவியும் கீழே வருகை தர ஆரவ் தொண்டையை செருமுவதன் மூலம் அனைவரையும் தன்னிலை அடையச் செய்தான். அனைவரும் ஒரு சேர அசடு வழிந்தனர். அதைப் பார்த்த ஆரவிற்கு எங்கே சென்று முட்டிக் கொள்ளலாம் என்று தோன்றியது.
ஜீவி “எங்கே ஆன்டி கிறு?” என்று வினவ,
“அவ நகை போடுறா மா, இன்னும் கொஞ்ச நேரத்துல வந்திருவாமா” என்று தன் வேலையைப் பார்க்க சென்றார்.
மீரா “இவ இன்னும் என்ன பன்றா?” என்று அலுத்துக் கொள்ள,
தர்ஷூ “அங்க பாருங்கடி” என்றாள்.
அங்கே, ஆரஞ்சு நிற தாவணி அணிந்து, தங்கத்தில் ஆரம் அணிந்து, அதனுடைய ஜிமிக்கி தோடு அணிந்து, கண்களுக்கு மையிட்டு, மெல்லிய நிற உதட்டுச்சாயம், வட்ட சிகப்புப் பொட்டு, ஆடையின் நிறத்திற்கேற்ப கண்டிவளையள்கள், காலில் கொலுசு, தனது கூந்தலை ஒற்றைக் கிளிப்பில் அடக்கி, மல்லிகைப் பூ வைத்து தேவைதை என கீழே வந்தாள் கிறுஸ்திகா.
அனைவருமே அவளைப் பார்த்து ஸ்தம்பித்து நின்றனர். ஆரவினால் அவளை விட்டு கண்களை எடுக்க முடியவில்லை. வெளியே சென்று இருந்த வீட்டின் பெரியவர்கள் முதல் வீட்டில் வேலை செய்பவர்கள் அனைவரும் அவளைப் பார்த்து விட்டு நின்ற இடத்திலேயே நின்று இருந்தனர்.
அவர்களைப் பார்த்த கிறு, ‘இவங்க எல்லோருக்கும் என்ன ஆச்சு? என்னையே குறுகுறுன்னு பாக்குறாங்க, நான் என்ன அவளோ கேவலமாவா இருக்கேன், இல்லையே கண்ணாடி பார்கும் போது கூட நல்லா தானே இருந்தேன். ஒரு வேளை திடீர்னு முகம் எல்லாம் வேற மாதிரி மாறிரிச்சோ’ என்று பயந்து முகம் பார்க்கும் தளவாடியைத் தேடினாள்.
‘ஐயோ முதலில் அப்பா கிட்ட சொல்லி ஹாலில் கண்ணாடி வாங்கி வைக்கனும்’ என்று தன்னுள் பேசியே கீழிறங்க, அனைவரின் பார்வையும் தன்னைத் தொடர்வதை பார்த்தாள்.
‘இது என்னடா கிறுவுக்கு வந்த சோதனை?’ என்று நினைத்து மீண்டும் கீழிறங்க அப்போதும் அதே போல் நடக்க,
“அம்மா” என்று கத்தினாள். அதிலேயே அனைவரும் நிகழ்காலத்திற்கு வந்தனர்.
இந்து அவள் அருகில் வந்து, “இவளோ நாளா இந்த அழகை எங்கடி மறைச்சு வச்ச? தேவதையை விட அழகா இருக்க” என்று நெற்றி முறித்தார்.
“ஓஓ இதுக்கு தான் எல்லோரும் என்னை அப்படி பார்த்திங்களா?” என்று கேட்டாள்.
வேலைக்காரர்களின் கூற்றின் படி நான்கு தேவதைகளுக்கும் சாவி சுற்றிப் போட்டார். மற்றவர்களும் அவளைப் புகழ
‘இது என்ன புதுசா இருக்கே, நான் தாவணி கட்டி கொஞ்சமா மேகப் போட்டு இருக்கேன் அவளோ தானே’ என்று நினைக்க,
“கிறு அவளோ அழகா இருக்கடி” என்று மற்ற மூவரும் அணைத்தனர்.
அஸ்வின், “நெஜமாவே நீ இளவரசி தான் டி “என்று நெற்றியில் முத்தமிட்டான்.
“அவளோ நல்லாவா இருக்கேன்” என்று சந்தேகமாய் கேட்டவளிடம்,
“சின்ன பொண்ணுன்னு உன்னை நினைச்சுட்டு இருந்தேன், நீ தேவதையா இருக்கிற பெரிய பொண்ணு என்று காட்டி விட்டாய்” என்று கூறி, நெற்றியில் முத்தமிட்டு அவளை அணைத்துக் கொண்டார் அரவிந்நாதன்.
மாதேஷ், கவின், வினோ “மற்றவர்கள் சொல்கிற அளவுக்கு நீ இல்லை டி” என்று கூற,
“அது உங்களுக்கு புரியிது அவங்களுக்கு புரிய மாட்டேன்குதே” என்று கூறினாள் கிறு.
தாத்தாவோ அவளை புகழ்ந்து விட்டு சித்தர் கூறியதைப் பற்றி சிந்தித்தார். ஆரவின் கண்கள் அவளை விட்டு மீளமாட்டேன் என்று அடம்பிடிக்க கடினப்பட்டு தனது பார்வையை வேறு புறம் திரும்பிக் கொண்டான். ஆனால் ஒரு வார்த்தையேனும் அவன் பேசவில்லை. இவ்வாறே நால்வரின் ஆழகைப் பற்றி புகழ்ந்து வீட்டில் இருந்து கோயிலை நோக்கிப் புறப்பட்டனர் அனைவரும்.