இதயம் தழுவும் உறவே – 06
வரவேற்பறைக்கு திரும்பி வந்த வித்யாவின் முகம் இறுக்கமாக இருந்தது. மனோகரன் யோசனையோடு அவளை பார்த்திருக்க, பின்னாடியே யசோதா வந்தாள். எதையோ சாதித்த திருப்தியோடும், பூரிப்புமான முக பாவத்தோடும்.
யசோதா கோவில் செல்வதற்காக பிரத்யேகமாக அலங்கரித்து தயாராகி வந்திருக்க, நேத்து விழிகளாலே பின்தொடர்ந்தவன் இன்று வேண்டுமென்றே கைப்பேசியில் மூழ்கி இருந்தான். மெல்லிய வருத்தமும், செல்ல கோபமும் கிளர்ந்ததை தனக்குள்ளேயே கட்டுப்படுத்திக் கொண்டாள்.
ஏன் கோபம் எழ வேண்டும்? தன்னை தவிர்க்கிறான் என்று தெரியாதவளா? இல்லை அந்த ஒதுக்கம் தான் தனக்கு தேவை என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டிருக்கிறாளே அதில் உண்மை எதுவும் இல்லையா?
உண்மையில் அவள் மனதை அவளே இன்னும் தெளிவுற அறியவில்லை. கவியரசனை அவளுக்கு எப்பொழுதோ பிடிக்கத் தொடங்கி விட்டது. தன் குடும்பத்தின் சூழல் அறிந்து திருமண செலவை அதிகம் இழுக்காததோடு, பெரும்பாலான வேலைகளை அவனே பார்த்துக் கொண்டதாகட்டும், அகிலாவிடமும், அசோக்கிடமும் நல்ல தோழமையை பாராட்டுவதாகட்டும், அவளுக்காக ஒவ்வொரு விஷயத்திலும் பிரத்யேக அக்கறை எடுத்துக் கொள்வதாகட்டும்… ஒவ்வொரு செய்கையிலும் அவள் மனதில் தனிமுத்திரை பதித்திருந்தான். இப்படி கொஞ்சம் கொஞ்சமாக அவளுடைய மனதை அவளுக்கே தெரியாமல் எப்பொழுதோ ஆக்கிரமித்து விட்டிருந்தான்.
ஆனால், அவளுக்கு இருந்த ஒரே வருத்தம் தனது குடும்பத்தின் கஷ்டத்தில் தோள் கொடுக்க முடியவில்லை என்பது மட்டுமே! அதற்கு மூல காரணமானவன் மீது கிளர்ந்த கோபம் அவளது நேசத்தை உணரவிடவில்லை.
வரவேற்பறையில் சகோதர்கள் இருவரின் முன்பாகவே, “அக்கா அத்தை எப்படி இருக்காங்கன்னு சொல்லாமயே வந்துட்டீங்க” என வித்யாவிடம் யசோதா கேட்க, மற்றவர்கள் இருவரும் விசித்திரமாகவும், சற்று ஆர்வமாகவும் பார்த்தார்கள்.
‘எப்படி உன்னை கவனிக்க வெச்சேன் பாத்தியா?’ கணவனது பார்வை தன்னை ரசனையாக ஒரு நிமிடம் வருடியதில் மனதிற்குள் குதூகலித்தவள், எதையோ சாதித்தது போல தனக்குள் அகமகிழ்ந்தாள். அவனது பார்வை ரகசியமாய் அவளுக்குள் தித்தித்தது.
கூடவே, “அத்தை வாங்க உங்களை பார்க்க என் வீட்டுக்காரர் ரொம்ப ஆர்வமா இருக்காரு. கூடவே, பெரியத்தானும்” என யசோதா சப்தமிட,
வெகுநாட்கள் கழித்து தனது தோற்றத்தில் அக்கறை எடுத்துக் கொண்டதால் சற்றே சங்கோஜமாகவே மீனாட்சி வெளியே வந்தார். மகன்கள் இருவரும் தாயின் தோற்றத்தில் மகிழ்ந்து போயினர்.
“அம்மா, ரொம்ப நல்லா இருக்கு” என மனோகர் தாயை நெருங்க, “ஆமாம் மா. இனிமே எப்பவும் இப்படியே இருங்க” என கவியரசனும் ஆசையாய் தாயிடம் சென்று கூறினான். இவ்வளவு நேரமும் மனைவியை தவிர்த்தவன், இப்பொழுது ஆசையாய் தன் பார்வையால் வருடினான். அவன் பார்வையை உணர்ந்தவள், அவன்புறம் திரும்பவே இல்லை.
“தேங்க்ஸ் யசோ” என மனோகரன் மனதார கூற, “அத்தான் இன்னும் ஏதோ குறையலை…?” என யசோதா இழுத்தாள். என்ன என்பதாய் அனைவரின் பார்வையும் இருக்க, “கொஞ்சம் நகைங்க போட்டா, இன்னும் நல்லா இருக்கும் தானே அத்தான்” என ராகம் படித்தாள் சின்னவள்.
இது வித்யா துளியும் எதிர்பார்க்காத விஷயம். ‘கொஞ்சம் கொஞ்சமாக கறந்ததை ஒரேயடியாக அபகரிக்கப் பார்க்கிறாளே!’ என்றெண்ணி குமைந்தவள், “கோவிலுக்கு நேரம் ஆயிடுச்சு யசோ. இன்னொரு நாள் பார்த்துக்கலாம்” என தேவையான பொருட்களை சரி பார்த்தபடியே கூறினாள்.
ஆனால் கவியரசனோ அண்ணியின் சொற்களை கருத்தில் கொள்ளாது, “ஆமாம் மா, உங்க நகைங்க எல்லாம் எங்க? இப்படி எப்பவும் வெறுமனே இருக்கீங்க. கொஞ்சம் போட்டுக்கங்க மா” என கூற,
‘ஆமா, கல்யாணத்துலயே சாதாரணமா தான் இருந்தாங்க. அப்ப எல்லாம் கண்ணு தெரியாது. இப்ப தான் கண்ணு தெரியுதாக்கும்’ என யசோ முணுமுணுக்க, அவளுக்கு1 வெகு அருகில் நின்றிருந்த கவியரசனின் செவிகளில் அது தெளிவாகவே விழுந்தது. காதில் விழ வேண்டும் என்பதற்காகத் தானே அந்த பட்டாசு வெடித்ததே!
‘இத்தனை நாளா நம்ம இதெல்லாம் கவனிக்காம என்ன செஞ்சோம்?’ என தன்னையே கடிந்து கொண்டவன்,
மனைவியின் புறம் திரும்பி அவளுக்கு மட்டும் கேட்குமாறு, ‘கல்யாணத்துல பொண்டாட்டியை தான் பார்க்க முடியும்’ என சீண்டும்படி கூற… அவன் குரலின் மாற்றத்தில் பதறியவள், ‘ஸ்ஸ்ஸ்…’ என்றாள் சுற்றிலும் ஆராய்ந்தபடியே! நல்லவேளை யாரும் இவர்களை கவனிக்கவில்லை. கோபத்தையும் மறந்து அவளது பதற்றத்தை ரசித்தான் கணவன்.
“என்னம்மா தம்பியும் யசோவும் சொல்லறாங்கள்ல… போங்க போட்டுட்டு வாங்க. அஞ்சு நிமிஷத்துல அப்படி ஒன்னும் தாமதம் ஆகிடாது” என மனோகரனும் தன் பங்கிற்கு அன்னையிடம் கூறினான்.
உடனே யசோதா, “வித்திக்கா, உங்ககிட்ட தானே நகைங்க இருக்கு எடுத்துட்டு வாங்க” என கூற, ‘என்னை வந்ததுமே மாட்டி விடறாளே! இம்சை’ என மனதோடு வசைபாடிய படியே, கணவனின் துளைக்கும் பார்வையை கண்டுகொள்ளாதவாறு நகைகளை எடுக்க தங்கள் அறைக்கு சென்றாள் வித்யா.
அவளோடே பின்னோடு சென்ற மனோகரன், என்ன, ஏதுவென்று விசாரித்து, காலையிலேயே அவளுக்கு அர்ச்சனை செய்து அம்மாவின் மொத்த நகைகளையும் கையோடு எடுத்து வரவைத்தான். மனதோடு முணுமுணுக்க மட்டுமே முடிந்தது வித்யாவால். கூடவே இதற்கு காரணமானவள் மீது வஞ்சமும் வளர்ந்தது.
“அம்மா இதெல்லாம் இனி உங்ககிட்டயே இருக்கட்டும்” என மனோகரன் கூறி கொடுக்க, “என்கிட்ட கொடுங்க அத்தான், அத்தை அப்படியே வெச்சுப்பாங்க. நான் இப்பவே போட வெச்சுடறேன்” என நகைகளை வாங்கிய யசோதா ஆசையாய் வளையல்களையும், செயின்களையும் அத்தைக்கு அணிவித்தாள்.
மீதியை அவரிடமே தந்தவள், “இதை உள்ள வெச்சுடுங்க அத்தை” என கூற, பெரியவளும் உள்ளே வைத்துவிட்டு வந்தாள். தாயின் தற்போதைய தோற்றம் மகன்களுக்கு அத்தனை நிறைவாய் இருந்தது. தாயை எதிலிருந்தோ மீட்டெடுத்ததைப் போன்ற நிறைவு.
அதன்பிறகு ஆலயம் செல்வது, வழிபடுவது, பொங்கல் வைப்பது என நேரம் பறந்தாலும்… கிடைத்த இடைவெளியில், “உன்கிட்ட இருக்க நகை போதலைன்னு… அத்தையோடது தேடுனியோ? பாத்து மா… எல்லாத்தையும் காணததை கண்ட மாதிரி எடுத்து மாட்டிக்காத” என வித்யா யசோவிடம் கூற, எதுவுமே கூறாமல் புன்னகையோடு கடந்து விட்டாள் சின்னவள். உதாசீனங்களை உதறி தள்ளும் திறமை எல்லாம் அவளிடம் கொட்டி கிடந்தது. அதோடு இந்த பழத்தின் சுவையை தான் அவள் முன்பே அறிந்ததாயிற்றே!
அடுத்த இரு தினங்களில், மறுவீடு சென்றனர். மாமியார் வீட்டில் கவியரசன் ஏற்கனவே யசோதாவின் கல்வியை தொடர வைப்பது பற்றி பேசியிருந்தான். மீண்டும் ஒருமுறை அவர்களிடம் கூறி, அவர்கள் முன்னிலையிலேயே மனைவிக்கு இன்ப அதிர்ச்சி போல தெரிவித்து, அதை அவள் மறுக்க முடியாத வண்ணம் செய்து விட்டான்.
பிறந்த வீட்டினர் முன்பு கணவனிடம் சண்டை போட்டால், அவன் செய்வதை மறுத்து பேசினால், அவளது குட்டு வெளிப்பட்டு விடுமே! தேள் கொட்டிய திருடன் நிலையில் தற்காலிக அமைதி காத்தாள் யசோதா.
ஆனால், அங்கிருந்து திரும்பும்போது, “உங்களுக்கு எதுக்கு வீண் பாரம்ம்ம்ம்?” என நக்கலாக கேட்க, சட்டென்று வண்டியை நிறுத்தினான் கவியரசன். அவளை திரும்பிப்பார்த்து முறைத்தபடி, “திமிரா?” என்றான் கோபக்குரலில்.
யசோதாவோ, ‘ஆம் திமிர்தான்’ என்று அலட்சியம் போல் அமர்ந்திருக்க, “முதல்ல என்ன சொல்ல வராங்கன்னு கேட்டு பழகு. அதுக்கு அப்பறம் இந்த நக்கல், நையாண்டி எல்லாம் செய்யலாம்” என்று அழுத்தம் திருத்தமாக கூறினான். முதல் முறையாக அவளிடம் பேச சென்ற அன்று, எதையோ சொல்லி முடிக்கும் முன்பு, அரைகுறையாக கேட்டுவிட்டு சண்டையிட்டதை கோடிட்டு காட்டி அவளை சாடியிருந்தான்.
அதில் சீண்டப்பெற்றவளோ, “நானாவது பேசப்பேச தான் பாதியில நிறுத்தி சண்டை போடறேன். நீங்க என்னை பேச விடறீங்களா?” என்றாள் அவன் விட்ட கோபத்தை இவள் கையிலெடுத்து.
“ஏன்? உன் பேச்சுக்கு என்ன குறை? உன் வாயை தையல் போட்டு தெச்சு வெச்சுட்டேனா?” என படு நக்கலாக கவியரசன் கேட்க,
எப்படி சொல்வாள் அவள்? அவள் பேசாமல் முடங்கி விட்ட தருணங்களை… பேச விடாமல் செய்தது அவனா? அல்லது பேச்சற்று மோனத்தில் ஆழ்ந்தது அவளா? அவளுக்குள்ளேயே அடிக்கடி வைக்கப்படும் பட்டிமன்றம் தானே, இன்னமும் பதில் கிடைக்காத நிலையில் இப்பொழுது என்ன சொல்லி அவன் வாயை அடைக்க முடியும்?
அவளுடைய திடீர் மௌனமும், எதையோ தீவிரமாக யோசிக்கும் பாவமும் அவனுக்கு எதையோ நினைவில் கொண்டுவர, “உண்மையிலேயே உன்னை பேச விடலையா?” என்றான் ஆழ்ந்த குரலில்.
அந்த குரலில் சட்டென்று நிமிர்ந்து அவன் முகம் பார்க்க, ‘பேச நேரம் கிடைச்சிருந்தா என்ன சொல்லியிருப்ப?’ என்னும் கேள்வியை விழி வழியே அவளிடம் கேட்டான்.
அந்த பார்வையின் வீரியம் தாங்க முடியாமல் முகத்தை வேறுபுறம் திரும்பியவள், “இருட்டறதுக்குள்ள அத்தை வீட்டுக்கு வர சொன்னாங்க” என்றாள் முணுமுணுப்பாய்.
“இருட்டுக்கு வீட்டுக்கு போயிட்டா மட்டும்…” என அவளை விட முணுமுணுப்பாய் கூறியவன், கழுத்தை நேராக்கி வண்டியை செலுத்தினான். அவனது சொற்கள் அவளுடைய செவிகளிலும் நிறைத்திருக்க, மெல்லிய புன்னகை தான் வந்தது. அவன் கண்களுக்கு புலப்படும் முன்பு கட்டுப்படுத்திக் கொண்டாள்.