Tamil Madhura நா. பார்த்தசாரதியின் 'துளசி மாடம்' தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 15

தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 15

அத்தியாயம் 15

ஒரு புராதனமான வைதீகக் கலாசாரம் நிறைந்த தென்னிந்திய வீடும் அதன் அசௌகரியங்களும், முரண்டுகளும் மிக்க குடும்பத் தலைவியும் பழைய தழும்பேறிய பழக்க வழக்கங்களும், கமலியைப் போன்ற ஓர் ஐரோப்பியப் பெண்ணுக்குப் பெரிய இடையூறுகளாக இருக்கும் என்று சர்மா எதிர்பார்த்ததற்கு நேர்மாறாக நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கமலி அந்த வீட்டையும், அதன் கலாச்சாரப் பிடிப்புகளையும் காமாட்சியம்மாளின் கட்டுப்பாடுகளையும் நேசித்து மதித்துக் கடைப்பிடிக்கத் தொடங்கினாளே ஒழிய வெறுக்கவில்லை. அந்த வீட்டின் நடைமுறைகளுக்கு ஏற்ப அவள் தன்னை மாற்றிக் கொண்டாளே தவிரத் தன்னுடைய வசதிகளுக்கு ஏற்ப அந்த வீட்டையும் அதன் பழங்காலத்து மனிதர்களையும் நடைமுறைகளையும் ஒரு சிறிதும் மாற்ற முயலவில்லை. கமலியைப் பொறுத்துச் சர்மாவின் மனநிலை நெகிழ்ந்து மெல்ல மெல்ல அவள் மேல் அநுதாபமாக மாறியதற்கு அவளுடைய இந்த நனி நாகரிகப் பண்பே காரணமாயிருந்தது.

ரவியும் கமலியும் பாண்டிச்சேரி, காரைக்கால் பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்துவிட்டு ஊர் திரும்பிய தினத்தன்று இரவு தனியாக ரவியிடம் பேசிக் கொண்டிருந்தபோது, “உங்கள் அம்மா வீணையும் கையுமாக அமர்ந்திருந்த காட்சி சரஸ்வதி தேவியே வாத்தியத்தோடு வந்து உட்கார்ந்து கொண்டிருந்த மாதிரித் தோன்றியது” என்று கமலி கூறினாள்.

‘இப்போதெல்லாம் மிகவும் நவீனமான புதிய டிப்ளமஸி, ஓயாமல் புகழ்ந்தே எதிர்ப்பையும் எதிரியையும் அழிப்பதுதான் கமலி!’ – என்று கேலியாக அதற்கு உடனே பதில் சொல்ல எண்ணிய ரவி அவள் காமாட்சியம்மாளைப் புகழ்ந்த குரலிலிருந்த பக்திபூர்வமான தொனியையும், மனப்பூர்வமான ஆழத்தையும் உணர்ந்து கொண்டு அதை வேடிக்கையாக்கிவிடப் பயந்து தயங்கியவனாகத் தன் எண்ணத்தையும் கேலியையும் தவிர்த்துக் கொண்டு பேசாமலிருந்தான். எண்ணியதை விட்டு விட்டு வேறு விதமாகப் பேசினான்:

“எங்க அம்மா ஒரு புராதனமான தென்னிந்திய வைதீகக் குடும்பத்தின் பூர்ணமான அம்சங்கள் அத்தனையும் சிறிதும் குறைவில்லாமல் உள்ளவள். பூர்ணமான என்றால் ப்ளஸ் பாயிண்ட் மைனஸ் பாயிண்ட் ரெண்டையும் சேர்த்துத்தான் சொல்றேன். ஆனா அம்மாவைப் பொறுத்தவரை எல்லாமே ப்ளஸ் பாயிண்டா மட்டும் தான் உன் கண்ணுக்குப் படறது…”

“ஒரு விஷயத்தின் சாதகப் பாதகத்தைக் கணக்கிடும் போது நமக்கு ஒத்து வராததை எல்லாமே மைனஸ் பாயிண்டாக் கணக்கிடறது அவ்வளவு சரியில்லை.”

தன் அம்மாவிடம் குறைகளும் முரண்டுகளும் உண்டு என்று தானே சொல்வதைக் கூட அவள் ஒப்புக் கொள்ளாமல் மறுப்பதை அவன் அப்போது கவனித்தான். அம்மா பம்பரமாகச் சமையலறையில் வேலை செய்வது, பூஜை செய்வது, காலையில் நீராடியதும் துளசி வழிபாடு, பசு வழிபாடுகள் செய்வது, பல்லாங்குழியாடுவது, வீணை வாசிப்பது, ஸ்தோத்திரம் ஸ்லோகம் சொல்லுவது, எல்லாமே கமலிக்கு அதிசயமாக இருப்பதை அவன் கண்டான். தான் அளித்திருந்த பயிற்சிகள், பழக்க வழக்கங்கள், முன் தகவல்கள், அவளை ஓரளவு இந்திய வாழ்க்கைக்கு எந்தவிதத் தயக்கமுமின்றிப் பொருந்த வைக்கும் என்று அவன் அறிந்திருந்தாலும் இப்போது இங்கே வந்த பின் தான் எதிர்பார்த்ததை விட அதிகமாகவும் அவள் அதற்குக் கனிந்து பொருந்திப் பக்குவப்பட்டிருப்பது தெரிந்தது அவனுக்கு.

“உங்கள் அம்மா புடவை கட்டிக்கொள்வது போல் நானும் கட்டிக் கொண்டு பார்க்க வேண்டும் போல் எனக்கு ஆசையாயிருக்கிறது. அதைக் கற்றுக் கொடுப்பதற்கு நாளைக்கு வசந்தியை வரச் சொல்லியிருக்கேன்” – என்று தனது ஒரு விருப்பத்தைக் கமலி வெளியிட்ட போது அவனுக்கு வியப்பாகக்கூட இருந்தது. மடிசார் வைத்துப் புடவை கட்டுவது அநாகரிகமாகவும் பத்தாம் பசலித் தனமாகவும் ஆகி அப்படிக் கட்டுவதை வழக்கமாகக் கொண்டவர்களே அதிலிருந்து விடுபட்டுத் தங்களை அந்நியப் படுத்திக் கொண்டு மாறி வரும்போது எங்கோ ஆறாயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்து வந்த ஒரு பிரெஞ்சு யுவதி இப்போது அதற்கு ஆசைப்படுவது மிகவும் விநோதமாயிருந்தது.

*****

மறுநாள் காலையில் இறைமுடிமணி வடக்குத் தெருவில் மடத்து மனையில் தாம் தொடங்கும் புதுப் பலசரக்குக் கடைத் தொடக்க விழாவுக்கு வந்து கூப்பிட்டு விட்டுப் போனார். அவர் வந்த போது சர்மா எங்கோ வெளியே போயிருந்தார். ரவியிடமும் கமலியிடமும் தான் வந்த விவரம் சொல்லி விட்டுப் போயிருந்தார் அவர்.

“தம்பீ! உங்க அப்பாருக்குச் சம்மதம் இல்லாம இருக்கலாம். ஆனா எங்க இயக்க வழக்கப்படி ஐயா படத்தை மாட்டி நல்ல ராகுகாலமாப் பாத்துத்தான் நான் கடை தொறக்கறேன். அது என் கொள்கை சம்பந்தப்பட்ட விசயம். நட்புக்காக அவரை அழைக்கிறேன். முடிஞ்சா ‘இவுங்களையும்’ கூப்பிட்டுக்கிட்டு வாங்க” என்று கமலி பக்கம் சுட்டிக் காட்டி ரவியிடம் சொல்லி விட்டுப் போயிருந்தார் இறைமுடிமணி.

குமார் கல்லூரிக்கும், பார்வதி தனது பள்ளிக்கும் புறப்பட்டுப் போனபின் காலை ஒன்பதரை மணிக்கு மேல் அப்பா வீட்டுக்குத் திரும்பி வந்ததும் ரவி இறைமுடிமணி தேடி வந்து விட்டுப் போனது பற்றி அவரிடம் தெரிவித்தான்.

அவன் தெரிவித்ததற்குச் சாதகமாகவோ, பாதகமாகவோ அப்போது ஒரு பதிலும் சொல்லாமல் கவனிக்காதது போல் இருந்தார் சர்மா. முகக்குறிப்பிலிருந்து அப்போது அவர் மிகவும் கலக்கமாகவும் மனம் குழம்பியும் இருப்பது போல் காணப்பட்டது.

“அவரோட இயக்க வழக்கப்படி ஐயா படம் மாட்டி ராகு காலத்திலே தான் கடை ஆரம்பிக்கிறாராம். அதை நெனச்சுத் தயங்கிப் பேசாமே இருந்துடாமே சிநேகிதத்தை மதிச்சு நீங்க ஒரு நடை வந்துட்டுப் போகணும்னு சொல்லிவிட்டுப் போனார்.

“…..”

“என்னப்பா? என்னமோ மாதிரி இருக்கேள்?….”

“எல்லாத் தகராறும் இதனாலேதான்! போறாக் குறைக்கு நான் அங்கே வேற போய் நின்னேன்னா அது வெறும் வாயை மெல்லற சீமாவையர் வாய்க்கு அவல் கிடைச்ச மாதிரி ஆயிடும்.”

“எல்லாத் தகராறும்னா என்ன தகராறு அப்பா?”

“தேசிகாமணிக்கு அந்த வடக்குத்தெரு எடம் கிடைக்க விடாமப் பண்ணணும்கிறதுக்காக…. அவனுக்கு நான் வாக்குக் குடுத்து அடவான்ஸ் வாங்கினப்புறம்… சீமாவையர் அஹமத் அலிபாயைக் கூட்டிண்டு வந்து அவனுக்குத் தான் அந்த எடத்தை விட்டாகணும்னு ஒத்தைக்கால்லே நின்னார். நான் ஒத்துக்கல்லே. குடுத்த வாக்குப்படி தேசிகாமணிக்கு விட்டுட்டேன். மடத்திலேயிருந்தும் நான் செய்தது தான் நியாயம்னு லெட்டர் வந்துடுத்து. சீமாவையரிடமும் அதைக் காமிச்சாச்சு. பார்த்துட்டு ஆகாசத்துக்கும் பூமிக்குமாகக் குதிகுதின்னு குதிச்சார். சாமி பூதம் இல்லேங்கிற சு.ம. ஆளுக்கு மடத்து எடம் வாடகைக்குப் போறது பெரிய அக்ரமம்ன்னார். என்னைத் திட்டினார். முந்தாநாள் மடத்து நிலங்களைக் குத்தகைக்கு விட்டபோதும் அவர் சொன்னபடி எதையும் கேட்காம நான் நியாயமானவாளுக்காப் பார்த்து விட்டேன். அதிலே வேறே அவருக்கு என் மேலே மகா கோபம். இதுக்கு முந்தின கூட்டத்திலே அவருக்கு வேண்டிய பினாமி ஆள்களாச் சேர்த்துண்டு வந்து அவாளுக்கே எல்லா நிலத்தையும் குத்தகை முடிச்சிடப் பார்த்தார். நான் விடலே. கூட்டத்தையே அன்னிக்கி ஒத்திப் போட்டுட்டேன்.”

“சரி. இதிலே வருத்தப்படறத்துக்கும் தயங்கறத்துக்கும் என்ன இருக்கு? எது நியாயமோ அதைத்தானே செஞ்சிருக்கேள்?”….

“வருத்தம் ஒண்ணும் படலேடா! அங்கே போறதுக்குத் தான் தயக்கமாயிருக்கு. ராகுகாலம், ஐயா படம்னு நீ வேற என்னென்னமோ சொல்றே. ஒண்ணொண்ணும் சீமாவையருக்கு எனக்கெதிரா ஒரு கலகத்தை மூட்டறதுக்குத் தான் பிரயோஜனப்படும்… கொள்கை எப்படி இருந்தாலும் தேசிகாமணியைப் பொறுத்தவரை யோக்கியன்…”

“நீங்க தயங்கறது ரொம்ப வேடிக்கையாத்தான் இருக்குப்பா! அயோக்கியன் ஒருத்தன் என்ன நினைச்சுப்பானோன்னு பயந்து யோக்கியன் ஒருத்தனை மதிக்கவும் ஆதரிக்கவும் தயங்கி நின்னுடற சுபாவம் நம்ம தேசத்துக்கே ‘ஸ்பெஷாலிட்டி’யாப் போச்சு. மனத்தினால் சமூக விரோதிகளுக்கும் அயோக்கியர்களுக்கும் பயந்து நடுங்கிக் கொண்டே கையால் தெய்வத்தைக் கூப்பித் தொழும் தேசம் இது. நியாய வேட்கையும் அந்தரங்க சுத்தியோடு கூடிய சத்திய தரிசனமும் இல்லாத பக்தி கூடப் பிரயோஜனமில்லாத விஷயம் தான். யாரோ ஒரு கெட்டவன் என்னமோ நினைச்சுக்கப் போறான்கிறதுக்காக நீங்க உங்க பரம சிநேகிதரோட அழைப்பைப் பொருட்படுத்தாம விடறது எனக்குப் பிடிக்கலே. நீங்க வரேளோ, வல்லியோ; என்னையும் கமலியையும் அவர் கூப்பிட்டிருக்கார். நாங்க நிச்சயமாப் போகப் போறோம்.”

“அதுக்குச் சொல்லலே… சரி… நானும் வரேண்டா…. சேர்ந்தே போயிட்டு வந்துடலாம்”… என்று ஒரு நிமிடத் தயக்கத்திற்குப் பின் சர்மாவும் வருவதற்கு இசைந்தார். ஆனால் அவர் மனம் இன்னும் நிம்மதியிழந்த நிலையில் தான் இருந்தது என்பதை முகம் காட்டியது. அவர் மனத்துக்குள் இன்னும் தயக்கம் தான் நிலவியது. மகனோடும் அவனோடு வந்திருக்கிற பிரெஞ்சு யுவதியுடனும் சேர்ந்து ஒன்றாகச் சங்கரமங்கலத்தின் வம்புகள் நிறைந்த தெருக்கள் வழியே நடந்து போய்ப் பரம வைதிகனாகிய தான் ராகு காலத்தில் திறந்து வைக்கப்படும் ஒரு கடைத் திறப்பு விழாவுக்கு விஜயம் செய்வது என்பதை நினைத்துப் பார்ப்பதிலேயே அவருக்கு ஆயிரம் தயக்கங்கள் இருந்தன.

தயக்கங்கள் எல்லாம் ஊராரையும் சீமாவையரையும் எதிரிகளையும் நினைத்துத்தான். தனிப்பட்ட முறையில் நினைக்கும்போது எந்தக் குழப்பமும் தயக்கமும் இல்லாமல் தேசிகாமணியின் மருமகனுக்காகத் திறக்கப்படும் பலசரக்குக் கடைத் திறப்பு விழாவுக்குப் போய் விட்டு வரவேண்டும் என்றுதான் தோன்றியது. ‘நல்ல வேளை பார்த்துத் தொடங்குவதும் ராகுகாலத்தில் தொடங்குவதும் அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது. நாம் நிர்ப்பந்தப் படுத்த முடியாது. அதே போல் வாடகைக்குப் பேசி எடுத்துக் கொண்ட ஓர் இடத்தில் வாடகைக்கு இருப்பவருக்கு விருப்பமான எந்தப் படத்தையும் அவர் தாராளமாக மாட்டிக் கொள்ள உரிமை உண்டு. அதில் நாம் தலையிடமுடியாது’ என்றே சரியாக நினைத்து மதிப்பிட்டார் அவர்.

“நீங்களெல்லாம் கையால் நியாயத்தைத் தொழுது கொண்டே மனத்தால் அநியாயத்துக்குப் பயப்படுகிறீர்கள்”… என்று மகன் சொல்லிக் குத்திக் காட்டிய பின்பே உடனடியாக அவனோடு போவதற்குச் சர்மா இசைந்திருந்தார். உடை மாற்றிக் கொண்டு கமலியையும் அழைத்து வர மாடிக்குப் போயிருந்தான் ரவி.

ரவியும், கமலியும் மாடியிலிருந்து கீழே வருவதற்குள் உள்ளே போய் காமாட்சியம்மாளிடம் தாம் வெளியே புறப்படப் போவதாக ஒரு வார்த்தை சொல்லிக் கொண்டு வந்தார் சர்மா.

அவர் முதலில் நினைத்தபடிதான் நடந்தது. சர்மாவும் ரவியும், கமலியும் தெருவில் சேர்ந்து நடந்து போவதை ஒரு விநோதமான புது ஊர்வலத்தைப் பார்ப்பது போலத்தான் பார்த்தார்கள். தெருக்களின் அத்தனை வீடுகளும், ஜன்னல்கள், வாசல்கள், திண்ணைகளைத் திறந்து வைத்துக் கொண்டு அதற்காகவே காத்திருந்த மாதிரி நடந்து கொண்டன.

எதிரே ஊர்ப் புரோகிதர் ஜம்புநாத சாஸ்திரி வந்தார். சர்மாவையும், ரவியையும் விசாரித்தார். கமலியைப் பார்த்துவிட்டுச் சர்மாவிடமே மறுபடியும் “அவா யாரு? புதுசா இருக்கே?” என்று கேட்டார் சாஸ்திரி.

“பிரான்ஸிலேருந்து வந்திருக்கா. நம்ம தேசம், கலாச்சாரம், பழக்க வழக்கம்லாம் பத்திப் படிச்சு எழுதிறதிலே ஆசை” – என்று சர்மாவிடமிருந்து பதில் வந்தது.

“சரி அப்புறமா வந்து பார்க்கிறேன்” என்று சாஸ்திரி விடை பெற்றுக் கொண்டு போனார். வடக்குத் தெரு முனையை அடைவதற்கு முன் இப்படியேயும் இதை விடச் சுருக்கமாகவும் இன்னும் இரண்டொரு சந்திப்புக்களுக்கும் விசாரணைகளுக்கும் சர்மாவோ ரவியோ பதில் சொல்ல வேண்டியனவாக நேர்ந்தன.

“அங்கெல்லாம் நம்மோட கூட வர்ற ஒரு பெண்ணையோ ஆணையோ நாமாச் சொல்லி இன்னார்னு அறிமுகப் படுத்தலேன்னா எதிரே சந்திக்கிறவா யார்னே கேட்க மாட்டாப்பா….” ரவி தந்தையிடம் சொன்னான். சர்மா சிரித்தபடி அதற்கு பதில் சொன்னார்.

“மேற்கத்திய தேசங்களைப் பத்தி நீ சொல்றே ரவி! நம்ம தேசத்திலே ஒவ்வொரு சிசுவும் ஒவ்வொரு தொப்புள் கொடியை நீக்கின மறு நிமிஷத்திலேயே மத்தவாளையும் மத்ததுகளையும் பத்தி அறிஞ்சுக்கிற ஆவல்லேதான் உயிர் வாழறதுங்கறதை மறந்துடாதே….”

அவர்கள் போய்ச் சேர்ந்தபோது இறைமுடிமணியின் புதுப் பலசரக்குக் கடையில் கூட்டம் அதிகம் இல்லை. மூன்று பக்கமும் செங்கல் சுவரெழுப்பி மேலே தகரக் கொட்டகையாக அமைத்தும் “சுயமரியாதைப் பல் பண்ட நிலையம்” – என்று புதிதாகப் பளபளத்து மின்னும் போர்டு மாட்டியிருந்தார் இறைமுடிமணி. வாழைமரம் மாவிலைத் தோரணம் கிடையாது. போர்டிலோ கதவுகளிலோ, முகப்பிலோ, எங்கும் குங்குமம், சந்தனப் பொட்டு எதுவும் இல்லை. போர்டிலும், கடைக்குள் பிரதானமாகப் பார்வையில் படும் இடத்திலும் இறைமுடிமணியின் இயக்கத் தலைவராகவும் வழிகாட்டியாகவும் விளங்கிய ஐயா படம் இருந்தது. கல்லாப் பெட்டியில் குருசாமி, அதாவது இறைமுடிமணியின் மருமகன் உட்கார்ந்திருந்தான். முகப்பில் நின்று இறைமுடிமணி வருகிறவர்களை வரவேற்றுக் கொண்டிருந்தார். வருகிறவர்களை உட்கார வைப்பதற்காகப் பக்கத்துக்கு ஒன்று வீதம் கடை முகப்பின் இருபக்கமும் இரண்டு நீளப் பெஞ்சுகள் போடப்பட்டிருந்தன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 6தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 6

அத்தியாயம் 6   யாரும் எதிர்பாராத விதத்தில் கமலி திடீரென்று குனிந்து விசுவேசுவர சர்மாவின் பாதங்களைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக் கொண்டு வணங்கினாள். பக்கத்து திருமண மண்டபத்தில் கெட்டி மேளம் முழங்கிக் கொண்டிருந்த அந்த மங்கலமான வைகறை வேளையில் ஒரு மணமகளை

தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 2தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 2

அத்தியாயம் 2   இரண்டு மூன்று நிமிஷ மௌனத்துக்குப் பின் மறுபடியும் சர்மா வசந்தியைக் கேட்டார்.   “உங்கண்ணா சுரேஷ் பாரிஸிலேயே இருக்கானே; அவனுக்கு உங்கப்பாவை விட்டுத் தகவல் எழுதச் சொன்னா ஏதாவது பிரயோஜனப்படுமோ…?”   “எங்கப்பா எதை எழுதி, அண்ணா

தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 16தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 16

அத்தியாயம் 16 இறைமுடிமணி அவர்களைத் தம்முடைய புதுக் கடைக்கு வரவேற்று உட்கார வைத்துச் சந்தனம் கல்கண்டு கொடுத்தார். சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு அவர்கள் புறப்படுவதற்கு முன், “கொஞ்சம் இப்பிடி வர்றியா விசுவேசுவரன்? உங்ககிட்ட ஒரு நிமிஷம் தனியாப் பேசணும்” –