Tamil Madhura நித்யாவின் யாரோ இவள் நித்யாவின் ‘யாரோ இவள்’ – 3

நித்யாவின் ‘யாரோ இவள்’ – 3

அத்தியாயம் 3

தாம்பரம் ரயில்வே ஸ்டேஷன்…..

வழக்கம் போல மக்கள் வெள்ளம் அலைமோத அதில் நீந்தியபடியே நடை மேம்பாலத்தின் படிகளின் இறங்கினாள் கீதா. அவள் எடுத்து  வைக்கும் ஒவ்வொரு எட்டுக்கும் அவளின் அலையான கேசம் துள்ளி விழ வேகமாக பிளாட்பாரத்தை நோக்கி சென்றாள் அவள்.

ஞாயிற்றுக்கிழமை என்பதால் கூட்டம் கொஞ்சம் அதிகமாக இருக்க ஜன திரளுக்கு நடுவே பாக்கியநாதனை தேடினாள் கீதா. அவரை பிளாட்ஃபார்ம் பெஞ்சில் பார்த்ததும் வேகமாக அவரிடம் சென்றாள்.

” அங்கிள் ட்ரெயின் ஜர்னி எப்படி இருந்துச்சு “

” கீதா! கீதா தானே … அடையாளமே தெரியலைம்மா.. பிரயாணம் ரொம்ப நல்லா இருந்துச்சு.. ஃபர்ஸ்ட் ஏ.சி..நிம்மதியா தூங்குனேன்டா ” என்றார் பாக்கியநாதன்.

“ அப்புறம் எப்பிடி இருக்கிங்க எக்ஸ் மிலிட்டரிமேன்?? அண்ணா இத்தனை தடவை கெஞ்சுசனதுக்கு அப்புறமா தான் உங்களுக்கு சென்னை வர மனசு வந்துச்சு இல்ல” என்று கேட்டவளை சாந்தமான முகத்துடன் பார்த்து புன்னகைத்தார் பாக்கியநாதன்.

“ எனக்கு லெட்சுமி இருந்த இடத்தை விட்டு வர்ரதுக்கு இஷ்டம் இல்லடாம்மா. எதோ உன் அண்ணன் சொன்னான்னு இந்த ஊரை பாக்க வந்திருக்கேன்” என்றார் அவர் களைப்பான குரலில்.

” அஹான்! இவ்ளோ டல்லாவா பேசுறிங்க? இருங்க உங்க பேரன் கிட்ட சொல்லி உங்களை அவன் பின்னாடி ஓட வைக்கிறேன்” என்று கலாய்க்கவும் அவர் சிரித்தார். அவரை வாஞ்சையுடன் பார்த்தவள் “ ஓ.கே அங்கிள்! அண்ணி உங்களுக்காக வெயிட்டிங்…இதோட 10 தடவை கால் பண்ணீட்டாங்க.. நம்ம கிளம்புவோமா” என்று கேட்டுவிட்டு அவர் வைத்திருந்த பேக்கை தூக்கிக் கொண்டாள்.

” ஆட்டோலயாடா???” என்றவரை இடுப்பில் கை வைத்து பொய்யாக முறைத்தவள் ” என்னோட பிங்க்கி உங்களுக்காக வெளியே நிக்குது அங்கிள் …அது மட்டுமில்லாம இங்க நீங்க ஆட்டோலயே எல்லா இடத்துக்கும் டிராவல் பண்ணா திருநெல்வேலில இருக்கற உங்க சொத்து ஒரே மாசத்துல ஷ்வாகா ஆய்டும் ” என்று சொல்லி அவரை வெளியே அழைத்து வந்தாள்.

அவரும் பேச்சுத்துணைக்கு ஒரு ஆள் கிடைத்த மகிழ்ச்சியில் பிரயாணத்தில் நடந்த நிகழ்வுகளை சொல்லிக் கொண்டே வர அதை தலையாட்டி கேட்டுக் கொண்டே கீதா ஸ்கூட்டியை ஓட்டினாள். சிறிது நேரத்தில் இருவரும்  கீதாவின் ஸ்கூட்டியில்  வீட்டில் வந்து இறங்கினர்.

பாக்கியநாதன் காம்பவுண்டுக்குள் நுழையவும் அவரின் பேரன் அஸ்வத் வந்து கட்டிக் கொண்டான். அவனை தூக்கியபடியே வீட்டிற்குள் நுழைந்தவரை மருமகள் மீனா வரவேற்றாள்.

” வாங்க மாமா…ட்ரெயின் வசதியா இருந்துச்சா ?? அஸ்வத் தாத்தா இப்போ தானே வந்திருக்காங்க…அவங்கள தொல்லை பண்ணாம அம்மா கிட்ட வா”

” அவன் இருக்கட்டும்மா” என்றார் பாக்கியநாதன்.

” மாமா உங்களுக்கு ஹீட்டர் போட்டருக்கிறேன். குளிச்சிட்டு வாங்க” என்று கீதாவின் புறம் திரும்பி ” நீ இன்னிக்கு எஸ்கேப் ஆக முடியாது . எங்க கூட பிரேக்பாஸ்ட் முடிச்சிட்டு தான் போகணும்” என்று கட்டளையிட கீதாவோ  ” ஐயோ அண்ணி…அங்க யோகா டிபன் எனக்கும் சேத்து ரெடி பண்ணீட்டா…இப்போ வேண்டாம்னு சொன்னா ஐ யாம் காலி ” என்று சொன்னவளை செல்லமாக கோவித்தாள் மீனா.

” இன்னொரு நாள் கண்டிப்பா வந்து நீங்க செய்யுற எல்லா டிஷ்சையும் கதம் பண்ணுறேன் .இப்போ கிளம்புறேன். பை அங்கிள் ….போய்ட்டு வரேன் அண்ணி …லவ் யூ அத்து பை டியர் ” என்று அஸ்வத்தின் கன்னத்தில் முத்தமிட்டவள் வேக வேகமாக ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு கிளம்பினாள்.

அவள் அவசரமாக செல்வதை பார்த்த பாக்கியநாதன் இவளுக்கு என்னாச்சு என்பதை போல் மருமகளை பார்க்க ” கீத்து ப்யூர் வெஜிடேரியன் மாமா…இன்னிக்கு சன் டே… நீங்க வரீங்கனு நான் நான்-வெஜ் சமைச்சிருக்கேன். எங்க இருந்தா சாப்ட சொல்லிடுவோம்னு பயபுள்ள பயந்து ஓடுது!  நீங்க வந்து ரெஸ்ட் எடுங்க மாமா” என்று சொல்லி விட்டு உள்ளே செல்லவும் அஸ்வத்தும் பாக்கியநாதனும் சிரித்துக் கொண்டே மீனாவை தொடர்ந்து உள்ளே சென்றனர்.

மீனாவிடம் பேசிவிட்டு கிளம்பிய கீதா அன்று ஞாயிறு என்பதால் வேறு எந்த வேலையும் இல்லாமல் போக , நேரே ஸ்கூட்டியை வீட்டை நோக்கி விரட்ட ஆரம்பித்தாள். கேட்டை திறந்து  ஸ்கூட்டியை பார்க் செய்து விட்டு உள்ளே நுழைந்த கீதாவின் காதில் ரியா யாருடனோ சண்டை போடும் சத்தம் கேட்டது…

பதற்றத்துடன் உள்ளே சென்றவள் ரியா போனில் பேசிக் கொண்டிருந்ததை பார்த்தவள் அங்கு நின்ற யோகாவிடம் என்னாச்சு என்று கண்ணால் கேட்டதும் அவள் பொறுக்குமாறு சைகை காண்பிக்கவும் கீதாவும் கையைக் கட்டிக் கொண்டு நடப்பதை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்…

” லுக் அவினாஷ்..இனியும் நீ சொல்ற கதைய நம்ப நான் ஒன்னும் இனா வானா இல்ல..ஷட் அப்..இட்ஸ் ஓவர்  ” என்று சொல்லி காலை கட் செய்து விட்டு அவர்கள் இருவரையும் பார்த்தாள்.

அவளை ஒரு நிமிடம் பார்த்து விட்டு இருவரும் கிச்சனுக்குள் செல்லவும் ரியாவும் அவர்களை தொடர்ந்தாள்.

” வாட் ஹேப்பன்ட் யோகா??? அவிக்கும் ரியாக்கும் அகெய்ன் என்ன ப்ராப்ளம் ??”

அங்கே வேகமாக வந்த ரியா  “உன்னோட செல்ல ஃப்ரெண்ட் அவிக்கு ஊர் ஃபுல்லா கேர்ள் ஃப்ரெண்ட்ஸ்… அதான் என்னோட ப்ராப்ளம்” என்று சொல்லிவிட்டு மூச்சு வாங்கினாள்.

“என்னடி நடந்துச்சு?? ” என்று யோகா கேட்டுக் கொண்டிருக்கும் போதே கீதாவின் நோட்டிஃபிகேஷன் சவுண்ட் கேக்கவும் நிதானித்த ரியா ” என்ன நோட்டிஃபிகேஷன் அது ??” என்று கேட்கவும் கீதா  ” டேட்டா ஆன் பண்ணதும் மெசெஞ்சர்ல நோட்டிஃபிகேஷன் வருது…வேற எதுவும் இல்ல…” என்று பதிலளித்தாள்.

” மெசெஞ்சர்  அதால தான் என்னோட லைஃப் நாசமா போச்சு..ஃபர்ஸ்ட் அத அன்இன்ஸ்டால் பண்ணு ” என்று ரியா சொல்லிக் கொண்டிருக்கும் போதே அங்கு வந்து விட்டான் அவினாஷ்….

அவினாஷை கண்டதும் ரியா அமைதியாகி விட்டாள்..

” வா அவி… நா உனக்கு காபி போடவா???” என்று அவனை திசை திருப்பும் முயற்சியாக கேட்டாள் யோகா…

அவினாஷ் பதிலளிக்கும் முன் ரியா  “அதுலாம் அவரு ஆல்ரெடி கேர்ள் ஃப்ரெண்ட் கூட காபிஷாப்ல சாப்டிருப்பாரு…யூ டோன்ட் வொர்ரி ” என்று கோபமாக அவளை முறைத்தாள்…

” உனக்கு என் மேல தான கோவம் ??? ஏன் யோகாவ திட்டுற ??” என்ற அவினாஷை கோபமாக முறைத்தாள் ரியா.

பின்னர் முகத்தை சாதாரணமாக்கி கொண்டவள் ” கோவமா??? அதுவும் உன் மேலயா??  யூ நோ வாட்?? என்னோட கோவத்த கூட நான் தேர்ட் பர்ஸன் மேல காட்டுறது இல்ல ” என்றாள் அலட்சியமான பாவனையுடன். அவள் பேசுவதை கேட்ட அவினாஷுக்கு மனதை ரம்பம் கொண்டு அறுப்பது போல வலித்தது.

” நான் உனக்கு தேர்ட் பர்ஸனா??”  என்று அவளை கூரியவிழிக

” ஆமா!! தேர்ட் பர்ஸன் தான்…ஐ ஸெட் எவ்ரி திங் இஸ் ஓவர்..தென் ஒய் டிட் யூ கம் ஹியர்??? “

” எதுவா இருந்தாலும் பொறுமையா பேசிக்கலாம் ..நீ இப்ப நிதானத்துல இல்ல”

” நான் நிதானமா தான் இருக்கேன் டாக்டர் சார் … நான் தெளிவா யோசிச்சு தான் இந்த முடிவுக்கு வந்தேன்… இட்ஸ் ஓவர் “

அவள் கூறியதை கேட்ட அவினாஷ் அங்கு நிற்கும் சக்தியின்றி கிளம்பி விட்டான்.

” அவி நில்லு! போகாதடா” என்று அவனை தொடர்ந்த கீதாவை பார்த்தவன் ” நா அப்றமா உனக்கு கால் பண்றேன் கீத்து ” என்று கூறி பன்னகைத்து விட்டு காரை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.

அவன் செல்வதையே பார்த்து கொண்டிருந்தாள் கீதா. அவினாஷ் அவளின் நண்பன். இருவரும் சந்தித்தது ஒரு சுவாரசியமான சம்பவம். அப்போது கீதா எழுதிய இண்டர்மீடியட் தேர்வு முடிவுகள் வந்த நேரம். அவள் பாஸ் செய்தால் அவளுக்கு ஸ்கூட்டி வாங்கி தருவதாக கண்ணன் வாக்களித்திருந்தார். சொன்னபடி மகள் தேர்வில் பாஸ் ஆனதால் ஸ்கூட்டியை வாங்கி தந்தவர் கவனமாக ஓட்டுமாறு எச்சரிக்கவும் தவறவில்லை.

கீதா முதலில் அந்த எச்சரிக்கையை கண்டுகொள்ளவில்லை. அதன் விளைவு சிறிய குறுக்கு சாலையில் ஸ்கூட்டியோடு விழுந்து கையில் காயத்துடன் மருத்துவமனையில் அமர்ந்திருந்தாள். நர்ஸ் அவளை உள்ளே செல்லுமாறு சொல்லவும் பயத்துடன் சென்று மருத்துவருக்கு எதிர் இருக்கையில் அமர்ந்தாள் அவள்.

அங்கே யாரும் இல்லாததால் மருத்துவர் இன்னும் வரவில்லை போல என்று எண்ணியவள் “ இந்த நர்ஸ் எனக்கு டிரஸ்ஸிங் பண்ணி விட்டா என்ன?? இதுக்கு கூட டாக்டரே வரணுமா?” என்று வாய்விட்டு புலம்பவும் ஸ்கிரீனில் மறைவிலிருந்து வெளியே வந்தான் அவினாஷ். ஆம், அவன் அங்கே தான் மருத்துவராக பணிபுரிந்து வந்தான். அவளின் காயத்தை பரிசோதித்தவன் அதை சுத்தம் செய்து மருந்து வைத்து கட்டு போட்டு விட்டான்.

சிறிது நேரத்துக்கு முன் கேட்ட கீதாவின் புலம்பலை நினைத்து சிரித்தவன் “ காயம் சின்னது தான். நீங்க பயப்பட வேண்டாம்” என்று சொல்லவும் கீதா ஒரு புன்னகையை உதிர்த்தபடி எழுந்தாள்.

அவன் ஆச்சரியமாக “ ஹலோ எங்க கெளம்புறிங்க மேடம்??” என்று கேட்க கீதா சாதாரணமாக “ வீட்டுக்கு தான் டாக்டர். ஏன் கேக்குறிங்க??  நான் தான் உங்க ஃபீசை பே பண்ணிட்டேனே” என்று கூறினாள்.

அவன் “ உங்களுக்கு டிடி இன்ஜெக்சன் போடனும். மறந்துட்டிங்களா??” என்று கேட்க கீதாவுக்கு ஊசியை நினைத்து அந்த ஏ.ஸி குளிரிலும் வியர்த்தது. அந்த பயத்தை விழுங்கியபடி “ ஊசிலாம் எதுக்கு டாக்டர்??  சின்ன காயம் தானே” என்று சமாளிக்கவும் அவன் அதை கண்டு கொள்ளாமல் சிரிஞ்சில் மருத்தை நிரப்பவும் அவளுக்கு நாக்கு மேலன்னத்தில் ஒட்டிக் கொண்டது.

“ சரிங்க சின்ன பாப்பா! சுடிதார் கைய கொஞ்சம் உயர்த்துங்க” என்று சொல்லவும் அவள் வேறு வழியின்றி சுடிதாரின் கைகளை மடித்துவிட்டு புஜத்தை காட்ட அவன் ஊசியை இறக்கினான். ஆனால் கீதாவோ ஊசி போட்டு அவன் சிரிஞ்சை எடுத்து நீண்ட நேரம் ஆகியும் கண்ணை திறக்காமல் இறுக்கமாக மூடிக் கொண்டிருக்க அவன் “ ஹலோ” என்று சொல்லவும் விழித்தாள். பின்னர் “ ஊசி போட்டாச்சா டாக்டர்??” என்று சிறுகுழந்தை போல் கேட்டவளுக்கு மேஜை டிராயரிலிருந்து ஒரு சாக்லேட்டை எடுத்து நீட்டினான் அவன்.

அவள் அதை மறுக்காமல் பெற்று கொண்டு “ தேங்க்யூ டாக்டர் அண்ணா, வலிக்காம ஊசி போட்டதுக்கு” என்று சொல்லிவிட்டு சென்றாள்;

சரியாக ஒரு வாரம் கழித்து அவன் அவளது அலுவலகத்துக்கு வருமானவரி தாக்கல் செய்ய வரவும், ஆடிட்டர் அவளிடம் அவனது விவரங்களை கொடுத்து கீதாவுடன் அனுப்பி வைத்தார்.

அவனிடம் சில விவரங்களை கேட்டு வாங்கியவள் சொன்ன தேதிக்குள் ரிட்டர்னை ஃபைல் செய்து அவனுக்கும் விவரங்களை மெயில் அனுப்பி விட அதற்கு பிறகு இருவரும் நல்ல நண்பர்களாயினர். அவன் மூலமாக அவனுடைய நண்பன் விக்னேஷும் கீதாவுக்கு தோழனாக அவளது நட்புவட்டத்தில் முகப்புத்தகத்தை தாண்டியும் நண்பர்கள் கிடைத்தனர்.

இவ்வாறு இருக்கும் போது தான் ரியாவும் யோகாவும் வேலைக்காக சென்னை வந்தது. இருவரும் கீதாவுடனே தங்கிவிட கீதாவுக்கு அவ்வளவு நாள் அந்த வீட்டில் இருந்த தனிமை தூரச் சென்றதில் அவளும் நிம்மதியானாள்.

ஒரு நாள் ரியாவுக்கு உடல்நலம் இல்லாமல் போக அவினாஷிடமே அழைத்து சென்றனர் கீதாவும் யோகாவும். கீதாவை கண்டதும் புன்னகைத்த அவினாஷ் “ என்ன பேபிம்மா இன்னைக்கு இன்னொரு பேபிம்மாவ கூட்டிட்டு வந்திருக்கு??” என்று சொன்னபடி ரியாவை பரிசோதித்து முடித்தவன் ரியாவிடம் “ நீங்களாச்சும் தைரியமா இன்ஜெக்சன் போட்டுப்பிங்களா இல்ல இந்த கொழந்தை பொண்ணை மாதிரியே அழிச்சாட்டியம் பண்ண போறிங்களா??” என்றான் கிண்டலாக.

ரியா சாதாரணமாகவே சண்டைகோழி. அவன் இவ்வாறு கேலி செய்யவும் சிலிர்த்தவள் “ ஹலோ டாக்டர் சார், நான் ஒன்னும் பயந்தாங்கொள்ளி இல்ல” என்று சொல்லி தலையை சிலுப்பிக் கொண்டாள்.

அவினாஷ் அவளின் செய்கையில் சிரித்தபடியே ஊசியை அவள் புஜத்தில் இறக்கி எடுத்தான். மருந்துச்சீட்டை எழுதி கொடுத்தவன் ரியாவிடம் “ ஒரு டூ டேய்ஸுக்கு ஹாட் வாட்டர் மட்டும் குடிங்க” என்று சொல்லிவிட்டு சீட்டை கீதாவிடம் நீட்டிவிட்டு புன்னகைத்தான்.

ரியா கீதாவுடன் வெளியே வந்தவள் “இந்த டாக்டருக்கு இவ்ளோ லொல்லு ஆகாதுடி கீத்து!” என்று சொல்லி உதட்டை சுழித்தபடி அவளுடன் சென்றாள். அன்று இரவே அவினாஷிடம் இருந்து முகப்புத்தகத்தில் ஃப்ரெண்ட் ரெக்வெஸ்ட் வரவும் கீதாவிடம் காண்பித்தவள் அவள் அவனுக்கு கேரக்டர் சர்டிபிகேட் கொடுத்த பின் தான் அதை அக்செப்ட் செய்தாள்.

இவ்வாறு நண்பர்களானவர்கள் சிறிது காலத்திலேயே ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டனர். ரியாவின் கோபத்தை ஒன்றும் இல்லாமல் ஆக்கும் தன்மை அவினாஷிடமே உள்ளது என்பதை கீதா விளையாட்டாக ஒரு முறை இருவரிடமும் சொல்ல, அந்த கணம் அவர்களை அறியாமல் காதல் விதை போடப்பட்டது அவர்களின் மனதில்.

இருவரின் காதலும் நாளொரு மேனி பொழுதொரு வண்ணமுமாக வளர இடையிடையே சிறுசிறு சண்டைகளும் செல்ல சமாதானங்களுமாக அவர்களின் காதல் செடி செழித்து வளரத் தொடங்கியது.

அதில் இந்த முறை வந்த சண்டை கொஞ்சம் பெரியது தான் என்பதை கண்கூடாக பார்த்து தெரிந்து கொண்ட கீதா அவினாஷ் செல்வதை வேடிக்கை பார்த்தாள் ஒரு பெருமூச்சுடன்.

அவன் சென்றதும் உள்ளே வந்தவள் ரியாவை என்ன பிரச்சனை என்று கேட்பதற்கு முன் முந்தி கொண்ட ரியா “உங்க ரெண்டு பேருக்கும் நா சொல்ல போறது ஒண்ணே ஒண்ணு தான். இந்த பேஸ்புக் லவ் , லாங்க் டிஸ்டென்ஸ் ரிலேசன்ஷிப் இதுலாம் சுத்த ஹம்பக். நேருல பாக்கறப்போ நல்லா இருக்கும். ஒரு பத்து நாள் நம்மல பாக்கலனா அந்த லவ் அப்பிடியே மறந்துடும். சோ இதுல மாட்டிக்காம கவனமா இருங்கடி” என்று சொல்லிவிட்டு டைனிங் டேபிளில் உடகார்ந்து உப்புமாவை வெட்ட ஆரம்பித்தாள்…

“ இங்க இவ்வளவு அமளி துமளி நடந்துருக்கு …இவ என்னடானா இப்பிடி அசால்ட்டா இருக்கா” என்று  தலையில் அடித்துக் கொண்டனர் யோகாவும் கீதாவும்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

நித்யாவின் ‘யாரோ இவள்’ – 1நித்யாவின் ‘யாரோ இவள்’ – 1

அத்தியாயம் 1 ” பூ பூக்கும் ஓசை அதை கேட்க தான் ஆசை! புல்வெளியின் ஓசை அதை கேட்க தான் ஆசை!” காலையிலேயே அலறிக் கொண்டிருந்தது அந்த மொபைல். அதற்கு சொந்தக்காரியோ வெளிர் பச்சை நிற லாங்க் சுடிதாரில் ரெடி ஆகிக்