Tamil Madhura சிறுகதைகள் சொர்க்கத்துக்கு ஏழு படிகள் : எஸ். கே. ஆச்சார்யா

சொர்க்கத்துக்கு ஏழு படிகள் : எஸ். கே. ஆச்சார்யா

சொர்க்கத்துக்கு ஏழு படிகள் : எஸ். கே. ஆச்சார்யா
(ஒரியாக் கதை)

தமிழில் – வல்லிக்கண்ணன்

 

Image result for space travellers

 

  • ஒரு நாள் நான் செய்திப்பத்திரிகையை புரட்டிய போது, பின்வரும் வார்த்தைகள் என்னை கவர்ந்தன.

 

  • “ஹலோ, இளைஞர்களே! நீங்கள் விண்வெளி வீரர்கள் ஆக ஆசைப்படுகிறீர்களா?”

 

  • நான் உணர்ச்சியோடு துள்ளிக் குதிப்பதற்கு இருந்தேன்; என் கண்கள் அச்சு எழுத்துக்களில் தயங்கின. உண்மையில் அது ஒரு விளம்பரம் தான்!

 

  • நான் தொடர்ந்து படித்தேன்:

 

  • “ஸாமந்தா சந்திரசேகர் விண்வெளி ஆய்வு நிலையம், பம்பாய்-1, விண்வெளி வீரர்களை நாடுகிறது! விண்வெளிப்பயணிகள் ஆக விரும்பும் இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்….

 

  • “ஸாமந்தா சந்திரசேகர்? இந்தியாவின் பெரிய வானசாஸ்திரி! ஒரு மூங்கில் குழாயின் துணையோடு வானமண்டலத்தை ஆராய்ந்து, நவீன விஞ்ஞானி மிகச் சக்தி வாய்ந்த துாரதரிசினி மூலம் காண்பது போல், நட்சத்திரங்கள் பற்றிய அனைத்தையும் சரியாக முன்கூட்டியே சொன்ன விஞ்ஞானி அல்லவா அவர்?”

 

  • நான் பலமாகத் தலையை ஆட்டினேன். பேனாவும் தாளும் தேடினேன்.

 

  • அன்று காலையில், கல்லூரி வளாகத்தில் நின்ற ஒரு பெரிய மாமரத்தில் அறையப்பட்டிருந்த அஞ்சல் பெட்டிக்குள், பம்பாய் விலாச மெழுதிய ஒரு கடிதத்தை நான் போட்டேன்.

 

  • அச்சமயம் நான் ஒரு கல்லூரி மாணவன். அதைவிட முக்கியம், வட்டார பறக்கும் சங்கத்தில் நான் ஒரு உறுப்பினன், சிறு விமானத்தை ஒட்டுவதற்கான லைசென்ஸ் எனக்கு வழங்கப்பட்டிருந்தது. பழக்கமான நீலவானம் இப்போதெல்லாம் என்னை வசீகரிக்கவில்லை. விண் வெளியில் பறக்க நான் ஆசைப்பட்டேன். ஆனால், அந்தோ, விமானம் ஒரு ராக்கெட் இல்லையே. பூமியின் வானமண்டலத்தைக் கடந்து, விண் வெளி என அழைக்கப்படும் இனம்புரியா இருட்டினுள் புகுவதற்கு ஒருவனுக்கு ராக்கெட் தேவை.

 

  • நான் ராக்கெட்டுகள் பற்றிக் கனவு கண்ட சமயத்தில் தான் என் பார்வையில் பத்திரிகை விளம்பரம் பட்டது.

 

  • எனக்கு அழைப்பு வந்ததும் நான் பம்பாய் போனேன்.

 

  • அவ்வேலைக்கு விண்ணப்பித்தவர்கள் வரிசையை கண்டதும் என் உற்சாகம் குன்றியது. நாட்டின் நாலு மூலைகளிலிருந்தும் அவர்கள் வந்திருந்தனர். நான் அவர்களுடன் கைகுலுக்கியபோது என் உள்ளம் படுத்துவிட்டது. அவர்கள் அனைவரும் சரியான ராட்சதர்களாகத் தோன்றினார்கள்-உடலைப் பேணியவர்கள், மல்யுத்த வீரர்கள், பளு தூக்கும் பயில்வான்கள்! ஒப்பு நோக்கினால் நான் சரியான நோஞ்சான்.

 

  • ராட்சதர்கள் என் கையைக் குலுக்கி, என்னை மேலும் கீழும் பார்த்து, கேலியாகச் சிரித்தார்கள். நான் நெட்டையன் இல்லை, எனக்குத் தெரியும். ஆனால் அவர்கள் வெறுப்பு என்னை நெஞ்சு நிமிர வைத்தது.

 

  • எனது தகுதிகளை நான் என் மனசில் கணக்கிட்டேன். நான் நல்ல விளையாட்டு வீரன். ஆண்டு தோறும் கல்லூரியில் நான் பரிசுகள் பெற்றிருந்தேன். ஆனால், அது பொருத்தமில்லாத விஷயமாகலாம். நான் வேறொரு தகுதியும் பெற்றிருந்தேன். பல வருடங்களுக்கு முன் ஒரு ஆசிரியரிடம் நான் பிராணாயாமம் மற்றும் ஆசனங்களில் கடுமையான பயிற்சி பெற்றிருந்தேன். மூச்சுவிடுவதையும் உட்காருவதையும் கட்டுப்படுத்தும் இப்பயிற்சிகள் பண்டைய ரிஷிகளிடமிருந்து வந்தவை. இந்தப் பயிற்சி எனக்கு நம்பிக்கை தந்தது. ராட்சதர்களோ, ராட்சதர்கள் இல்லையோ அவர்களிடையே என்னால் தாக்குப் பிடிக்க முடியும்.

 

  • டாங் எங்கோ மணி அடித்தது. டாக்டர் போல் உடை தரித்த ஒருவர் திடீரென வந்தார். எங்களை சோதனைப் பிராணிகளைப் போல் ஒரு ஆய்வுக் கூடத்தினுள் இட்டுச் சென்றார்.

 

  • கையை நீட்டி, அவர் சொன்னார்: “இந்த பெட்டிகளைப் பாருங்கள்” – சொர்க்கத்துக்கு இட்டுச் செல்லும் ஏழு படிகள். இவற்றில் நீங்கள் ஏறமுடிந்தால், நீங்கள் சொர்க்கத்தின் கதவை, ஏன் அதற்கு அப்பாலும் கூட, தட்ட இயலும். ஆரம்பப்பயிற்சியில் வெற்றி பெறும் நபர் விண்வெளியில் பறப்பதற்குத் தேர்வு செய்யப்படுவார். இப்போ பாருங்கள்.”

 

  • டாக்டரின் செயல் விளக்கத்தைப் பின்பற்றுவதற்கு முன்னரே, நான் இனம்புரியாப் பகுதிக்குள் தள்ளப்பட்டேன்.

 

  • ஒரு கதவு அடைபட்டது. சட்டென்று ஒரு சிவப்பு விளக்கு அணைக்கப்பட்டது. நான் விழுவதை உணர்ந்தேன். ஒரு பூதத்தின் வயிற்றுக்குள் நேராக விழுந்தேன்! எங்கும் கும்மிருட்டு ஆழ்ந்த மெளனம்! என் முதுகந்தண்டில் ஒரு நடுக்கம் கண்டது. பூதத்தின் திடீர்த் தொடுதல் என்னை அச்சுறுத்தியது. நான் கிட்டத்தட்ட மயங்கிவிட்டேன். ஆனால் எனக்கு சிறு பிராயக் கதை ஒன்று நினைவு வந்தது. இருட்டினுள் நோக்கியபடி எனக்கு நானே முணுமுணுத்தேன், “நினைவு கொள்! நீ தான் துருவன், புராதன இந்தியாவின் குழந்தை ரிஷி”.

 

  • இதன் பின் சற்றே தெம்படைந்தவனாய் சுற்றிலும் தடவினேன். ஒரு நாற்காலியை உணர்ந்தேன். அதில் அமர்ந்தேன். என் மூச்சைக் கட்டுப்படுத்தி, தியானம் பண்ணலானேன். என்னை நானே கட்டுப்படுத்திக் கொள்ள முடிந்தது. பெட்டியில் நிறையக் கம்பிகள் தொங்கின. வெளியே நின்று கவனிக்கும் டாக்டருக்கு அவை என் இயக்கங்களைக் காட்டிக் கொடுக்கும் என நான் அறிவேன். உளவு அறியும் எலெக்ட்ரானிக் கம்பிகள், நான் ஒரு கோழை-விண்வெளி என அழைக்கப்படும் மர்ம இருட்பகுதியின் கருமையையும் மெளனத்தையும் கண்டு நான் அஞ்சு கிறேன் என்று புலப்படுத்துவதை நான் விரும்பவில்லை. இல்லை. நீ துருவன் மட்டுமில்லை. விண்வெளியாளன் ஆவதற்கான முதல் சோதனையில் முனைந்துள்ள நவமனிதனும் ஆவாய்!” என்று எனக்குள் மீண்டும் மீண்டும் கூறிக் கொண்டேன்.

 

  • முடிவற்ற நீண்ட இரவில் நான் இரண்டு முறை தான் என் ஆசனத்தை விட்டு நகர்ந்தேன். ஒருமுறை நான் பசியை உணர்ந்தபோது பெட்டியில் பார்த்தேன். பா-ல் என்ற சீட்டு ஒட்டிய ஒரு புட்டியை கண்டேன். பிரெய்ல் எழுத்துக்களைப் படிக்கும் ஒரு குருடன் போல, நான் படித்த எழுத்துக்களின் செய்தியைத் தெளிவாக அறிந்தேன். எனக்காக உணவு இருந்தது. நான் பாலைக் குடித்தேன்.

 

  • இரண்டாம் முறை சிறுநீர் கழிக்க எழுந்தேன். அதற்காக இருந்த ஒரு சட்டியைக் கண்டேன்.

 

  • பூதப்பெட்டி எப்போது திறந்தது, டாக்டர் எப்ப வந்தார் என்பது சரியாக எனக்குத் தெரியாது. வெளிப்புற வெளிச்சமும் ஒசைகளும் திடீரென நான் மீண்டும் தரை மீது இருப்பதை உணர்த்தின. நான் ஆனந்தத்தால் கூவினேன். நான் நிச்சயமாக பூமிக்கு அப்பால் ஆயிரம் வருடங்கள் இருந்திருக்கிறேன்!”

 

  • ஆனால் டாக்டர் அழுத்தமாய்ச் சொன்னார்: “நாற்பத்தெட்டு மணி நேரம் தான் இருந்தாலும், நல்ல ஆரம்பம்.”

 

  • மறுமுறை, டாக்டர் என்னை பூதத்திடம் தள்ளியது மட்டுமின்றி என்னோடு சாத்தானையும் சேர்த்தார். 2-ம் நம்பர் பெட்டியில் சாத்தான் நீண்ட கையுடன் இருந்தான். டாக்டர் அதில் என்னைக் கட்டினார். பிசாசின் சக்கரத்தில் படுக்கை போல் அமைந்த சட்டத்தில் நான் [படம்] [படம்] விழுந்தேன். சக்கரம், மூச்சுமுட்டும் வேகத்தில், வட்டமிட்டுச் சுழன்றது. ஒருவனை இடுப்பில் நீண்ட கயிற்றை கட்டி அவன் கெஞ்சி அழுகிற வரை, ஆகாயத்தில் சுழற்றுவது போல் அது இருந்தது!

 

  • எனினும், சாத்தான் அப்படி என்னைச் சுற்றுவதற்கு முன், டாக்டர் எனக்கு ஒரு யுக்தி கூறினார்.

 

  • அவர் சொன்னார்: “பார், இதோ ஒரு ஸ்விச் அதை அமுக்கினால், தானாக விளக்கு அணைந்து மறுபடியும் எரியும். சாத்தான் கையில் பத்திரமாக இருப்பதை நீ உணரும் வரை, சுழற்சியைத் தாங்க முடிந்த வரை, ஸ்விச்சை அமுக்கிக் கொண்டே இரு நீ அதிக வேகத்தை, அதிக வேடிக்கையை விரும்புகிறாய் என்று அது எங்களுக்கு அறிவிக்கும். விளக்கு அணையாவிட்டால் நீ தோற்றுவிட்டாய் என அறிவோம். அவ்வளவுதான்!”

 

  • டாக்டரின் வார்த்தை ஒடுங்கியது. எங்கோ ஒரு மிஷின் இரைந்தது. திடீரென ஏதோ ஒன்று என் இதயம் நோக்கித் தாவுவதை உணர்ந்தேன். அது சாத்தானாகவே தான் இருக்கும் அடுத்து, என் நெஞ்சு இறுக்கப் படுவதை உணர்ந்தேன். ரத்தம் என் தலைக்குப் பாய்ந்தது. ரத்தம் உருகிய ஈயம் போல்-கனமாய், சூடாய்-மாறிவிட்டதாகத் தோன்றியது! பிறகு, நிஜமாகவே ஒரு யானை என் மார்பு மேல் உட்கார்ந்திருப்பதாக எண்ணினேன்.

 

  • மிக வதைக்கிற வேதனையையும் சித்திரவதையையும் நான் தாங்கிக் கொண்டேன். ஆனாலும் என் கையிலிருந்த ஸ்விச்சை அழுத்தியவாறு இருந்தேன். காலம், இடம் பற்றிய பிரக்ஞையே எனக்கு இல்லை.

 

  • முடிவாக, சாத்தானின் சக்கரம் நின்றது. டாக்டர் எட்டிப் பார்த்தார்.

 

  • “ஹலோ, இன்னும் நீ இருக்கிறாயா?” என்று அவர் கேட்டார்.

 

  • “மணிக்கு எழுபதாயிரம் மைல் வேகத்தில் நீ போனாய்…. நேர் கோட்டிலே தான்!” என்றும் சொன்னார்.

 

  • டாக்டர் என்னை அடுத்த கட்டத்துக்கு-மூன்றாவது பெட்டிக்குஇட்டுச் சென்ற போது, நான் எனக்கு பிராணாயாமம் கற்பித்த என் குருவை எண்ணினேன்.

 

  • அந்தப் பெட்டிக்கு அரக்கு வீடு எனப்பெயர். அப்பெயரைக் கேட்டு நான் திடுக்கிட்டேன். அங்கே எனக்கு என்ன நேரும் என நான் அறிவேன். புராணக் கதையில், பஞ்ச பாண்டவர்களை ஒருசமயம் அவர்களின் எதிரிகளான கெளரவர்கள் அறக்கு மாளிகையில் வைத்து, அதைத் தீ யிட்டுக் கொளுத்தினார்கள். என்னை டாக்டர் பெட்டிக்குள் தள்ளி, கதவை அடைத்ததும், எனக்கும் அதேபோன்ற விதி காத்திருப்பதாகக் கருதினேன்.

 

  • என் பயம் சரிதான் எனத் தெரிந்தது. பெட்டி வரவரச் சூடேறியது. ஆனால் நான் அமைதியாக இருக்க வேண்டும்-பரபரப்புக் கூடாது!

 

  • உஷ்ண அலைகள் கடுமையாக என் முகத்தைத் தாக்கின. வேர்வை என் உடலில் பெருக்கெடுத்தது. நான் மழையில் நனைந்தது போலானேன். நான் கூடியவரை அமைதியாக இருந்தேன். நான் ஒரு விண்வெளியாளன்: என் விண்வெளிக்கப்பல் நெடுந்துாரம் பறந்து விட்டுத் திரும்புகிறது என்று கற்பனை செய்தேன். பூமியின் வாயு மண்டலத்தில் அது மிண்டும் பிரவேசிக்கிறது; அதன் முகம் காற்றை இடித்து உரசுகிறது. அந்த உராய் வின் வேகத்தில் அதில் தீப்பிடித்துள்ளது. திடீரென தீ நாக்குகள் என் முகத்தில் படிவதை உணர்ந்தேன்!

 

  • இறுதியாக டாக்டரின் குரல் கேட்டது:

 

  • “108 உஷ்ணம் தான் அதிகம் இல்லை! அடுத்த சோதனைக்குத் தயாராகு!”

 

  • நாத கிரகம்-ஒலி வீடு-என்ற அடுத்த பெட்டிக்குள் அவர் என்னைத் தள்ளினார்.

 

  • அப்படிப்பட்ட வெறித்தன ஒலிகளை-கூச்சல்கள், விம்மல்கள், படார் ஒசைகளை-ஒரே சமயத்தில் அதுவரை நான் கேட்டதேயில்லை ஆயிரம் ரயில் என்ஜின்கள் வேகமாக ஒடுவது போல், அவற்றின் விசில்கள் நீண்டு கத்துவது போல்-ஒசையிட்டன. பிசாசுகளின் சங்கீதம்!

 

  • அன்பான டாக்டர் என்னை உள்ளே விடும் முன் என் காதுகளில் அடைப்புகள் செருகினார். ஆனாலும் கூட, ஒசைகள் இரக்கமின்றி என்னைத் தாக்கின. நான் நடுங்கினேன். என் தலைமயிர், எலெக்ட்ரிக் ஹீட்டரின் கம்பிகள் போல், மிகச் சூடேறுவதை உணர்ந்தேன். ஒசையின் அளவு அதிகரித்தவாறு இருந்தது. உந்து களத்திலிருந்து மேலே அனுப் பப்பட்ட ஒரு ராக்கெட்டில் நான் இருப்பதாக நினைத்தேன்.

 

  • டாக்டர் என் பெட்டியில் புகுந்ததை நான் பார்க்கவில்லை. “அடுத்த கட்டத்துக்கு நீ தயாரா?” என்று அவர் கேட்டார்.

 

  • நான் மெதுவாய் எழுந்தேன் தீநடுவே தியானம் பண்ணும் ஒரு ரிஷி மாதிரி நான் என் இருக்கையில் அமர்ந்திருந்தேன்.

 

  • எனது அடுத்த இரு சோதனைகள், மேலும் விசித்திரமான இரண்டு பெட்டிகளில் நிகழ்ந்தன. ஐந்தாவது பெட்டியை நடனப் பெட்டி என டாக்டர் கூறினார். அதனுள் நுழைந்ததுமே, நான் கீழே தள்ளுண்டேன். நான் சரியாக எழுந்து நிற்பதற்கு முன் மறுபடியும் தள்ளப்பட்டேன். பிறகு பெட்டி சுற்றிச் சுழலத் தொடங்கியது; அவ்வப்போது கரணம் அடித்தது! பெட்டி நடனமிடுகையில், என் உடலும் அதனோடு நாட்டியம் ஆடியது. இறுதியில், அது நின்றது. இருப்பினும், நான் என் கால்களைப் பலமாக ஊன்றி நின்றேன். என் தலை சுற்றவில்லை. நான் தெளிந்த மதியுடனேயே இருந்தேன். எப்பவும் ஒரு விண்வெளியாளன் போல் நான் தலை நிமிர்த்தே இருக்கவேண்டும் இல்லையெனில், நான் ஒரு விண்வெளிக் கப்பலை ஒட்டிச் செல்கையில், திசைத்தடுமாற்றம் ஏற்பட்டால், அந்தக் கப்பலை நான் தவறான பாதையில் திருப்பி விடக்கூடும்.

 

  • அடுத்த பெட்டி இன்னும் விசித்திரமானது. அதில் நுழைந்ததும், அது என் உடல் கனம் முழுவதையும் உறிஞ்சிவிட்டது. அதனால் தான் அதை கனமின்மைப் பெட்டி என டாக்டர் குறிப்பிட்டார்!

 

  • அது மிக விந்தையான அனுபவம். ஒரு கணம் சென்றதும், எனக்கு சீக்கு ஏற்படும் உணர்வு. எனினும், விண்வெளிக்கப்பலில் இருந்ததாக நான் கற்பனை செய்தேன். விண்வெளியில், மனிதன் எடையில்லா ஒரு உலகில் வாழ வேண்டும். அங்கே, அவன் உடல் கனம் இல்லாது இருக்கும்!

 

  • பெட்டி திறந்தது. நான் பிராணாயாம நிலையில் இருந்ததை டாக்டர் கண்டார்.

 

  • கடைசிப் பெட்டி, சொர்க்கத்துக்கு ஏழாவது படி, மட்டுமே எஞ்சி யிருந்தது. மிகக் கடினமானது. ஆனால், உண்மையிலேயே விண் வெளியில் இருப்பது போன்றது.

 

  • டாக்டர் என்னை விண்வெளி உடையும் முகமூடியும் அணியச் செய்தார். நான் விசித்திரமாக, விண்வெளியாளர் படங்களில் காட்சி அளிப்பது போல், தோன்றியிருக்க வேண்டும்.

 

  • டாக்டர் என்னை பிராணவாயுக் கூடாரத்தில் இட்டு, “ஆழ்ந்து சுவாசி. உனக்கு பிராணவாயு நிறைய தேவைப்படும்!” என்றார்.

 

  • பிறகு, ஒரு பையை என் முதுகின் மேல் போட்டார். சில குழாய் களையும் திருகாணிகளையும் நோண்டினார். இப்ப உள்ளே போ. காற்றில்லா விண்வெளியில் நீ எவ்வளவு உயரம் போகமுடியும் என்று பார்ப்போம்!” என்றார்.

 

  • அந்தப் பயங்கரப் பெட்டியுள் நான் போனேன். அங்கே நான் சுவாசிக்க துளிப் பிராணவாயுகூடக் கிடையாது என நான் அறிவேன்.

 

  • மறுகணம், இரைச்சல் கேட்டது. ஒரு குழாய் என் பெட்டியிலிருந்த காற்றை மெதுமெதுவாய் உறிஞ்சி எடுத்தது. என் விண்வெளி உடை உப்பத் தொடங்கியது. எனக்கு மூச்சு முட்டியது. உண்மையில், உப்பிய விண்வெளி உடை என் உடம்பைப் பாதுகாத்தது!

 

  • இந்நேரத்தில், நான் என் முகமூடி வழியே இரண்டு விஷயங்களைக் கவனித்தேன். கடியாரம் போன்ற ஒரு தகடை நான் பார்த்தேன். அதில் ஒரு முள் சில எண்களைச் சுட்டியது. நான் கவனிக்கையில் அந்த முள் நகர்ந்தது-ஏதோ பத்தாயிரத்திலிருந்து இருபது ஆயிரத்துக்கு திடீரென்று அது முப்பதுக்குத் தாவியது, மேலும் உயர்ந்தது.

 

  • அந்த முள் மணி காட்டவில்லை; உயரத்தைக் காட்டியது.

 

  • பிறகு என் கண்கள், முகமூடிக்குப் பின்னிருந்து, என் இருக்கையின் அருகே இருந்த ஒரு விந்தைப் பொருளைக் கண்டன. அது நீர் நிறைந்த ஒரு தம்ளர் போல் அபாயம் இல்லாது தோன்றியது. கடியாரமுள் வட்டத்தில் மெதுவாக மேலே நகர்ந்து கொண்டிருந்தது. திடீரென்று, எனக்கு வியப்பு எழ, தம்ளரிலிருந்த தண்ணிர் கொதிக்கத் தொடங்கியது. பின் அது ஆவியாக மாறி, நீராவிப் படலமாகியது.

 

  • நான் கடியாரத்தைக் கவனித்தேன். முள் அறுபது ஆயிரத்தைக் கடந்து செல்ல இருந்தது.

 

  • நான் நிஜமாக கடல் மட்டத்துக்கு மேல் அறுபது ஆயிரம் அடி உயரத்தில் இருந்தேனா?

 

  • ஆனால் என் பெட்டி தரைக்கு மேலே ஒரு அடி உயரத்தில் கூட இல்லை. அது காற்றை உறிஞ்சிய குழாயின் வேலை தான். இத்தனை நேரமும் அது என் காதுக்குள் இரைந்து கொண்டேயிருந்தது. என்னைச் சுற்றியிருந்த சூன்யத்தின் அளவை எனது விண்வெளி உடை காட்டியது. அவ் வெறுமை நிலையில் நீர் ஆவியாக மாறியதில் வியப்பில்லை. வாயு அரிதாகிவிட்ட அச்சூழ்நிலையில் நீர் தனது திரவத்தன்மையைக் கொண்டிருக்க இயலாது தான்.

 

  • முள் எழுபத்தைந்துக்கு நகர்ந்தது. அதாவது நான் கடல்மட்டத்துக்கு மேலே எழுபத்தையாயிரம் அடி உயரத்தில் இருந்ததாக அர்த்தம் அந்த நினைப்பே என் தலையைச் சுழலவைத்தது.

 

  • திடீரென எனக்கு ஒரு குறும்பான எண்ணம் எழுந்தது. கொஞ்சம் வேடிக்கை பண்ண நினைத்தேன். என் வலது கையின் உறையை கழற்றினேன். ஆனால் நடந்ததைக் கண்டு நான் நடுங்கிப் போனேன்.

 

  • என் கை ஒரு பூசனிக்காய் பருமன் வீங்கிவிட்டது தம்ளரில் இருந்த தண்ணிர் போல், எனது ரத்தம் சருமத்தை வெடித்துக் கொண்டு வெளிப் பட்டு ஆவியாக மாற முயன்றதாகத் தோன்றியது!

 

  • நடந்ததை டாக்டர் பார்த்திருக்க வேண்டும். ஒரு இரைச்சலோடு காற்று என் பெட்டிக்குள் புகுந்தது. காற்றை உறிஞ்சும் குழாய் மெளனமாயிற்று. என் விண்வெளி உடை தளர்ந்தது. எனது கை தன் இயல்புக்கு மாறியது. அது காப்பாற்றப்பட்டது. என் உயிரும் காப்பாற்றப்பட்டது.

 

  • நான் இறுதியாக விடுதலை பெற்றதும் டாக்டர் எனக்கு சரியான டோஸ் கொடுத்தார். அவரது திட்டுதலை நான் சந்தோஷமாக ஏற்றேன் பிறகு கேட்டேன்: “விண்வெளி உடை இல்லாமலே விண்ணகம் சென்ற ஒரு இந்தியனை உங்களுக்குத் தெரியுமா?”

 

  • டாக்டர் என்னைப் பார்த்து விழித்தார். “யுதிஷ்டிரன்! பாண்டவரில் மூத்தவர்!” என்று கூறி நான் பெருமையோடு என் நெஞ்சை நிமிர்த்தினேன். இதைக் கேட்டதும் டாக்டரின் கண்கள் ஒளிபெற்றன. என்னை நோக்கி அன்பாகக் கண்சிமிட்டி அவர் சொன்னார்: “நல்லது ரொம்ப நல்லது, பையா! நீ தேர்வு செய்யப்பட்டிருக்கிறாய்-யுதிஷ்டிரன் போல் நீயும் சோதனைகளில் வெற்றி கண்டாய்”.

 

  • நூறு விண்ண்ப்பதார்களில் மூன்று பேர் மட்டுமே தேர்வு செய்யப் பட்டனர். அவர்களில் ராட்சதர் எவரும் இலர்.

 

  • “ராட்சதர்களுக்கு என்ன ஆயிற்று?” என்று கேட்டேன்.

 

  • “எங்களுக்கு ராட்சதர்கள் தேவையில்லை!” என்று வெடித்தார் டாக்டர். “உன்னைப் போன்ற சாதாரண இளைஞர்களையே நாங்கள் தேடுகிறோம்.”

 

  ஆம், நான் ஒரு சாதாரண மனிதன், மிகச் சாமான்யன், ஆனால், நான் திரும்பி, அனைத்தையும் என் குருவிடம் கூறிய போது, அவர் புன்னகைத்தார். சொன்னார். இது ஒன்றும் புதிதல்ல, என் சிறுவனே! உன் உடலை, உள்ளத்தை, ஆத்மாவை நன்றாக அறிந்துகொள். உலகம் சாமான்யர்களிடம் அலுப்புக் கொண்டிருக்கிறது. மேலும் மேலும் அதிமனிதர்கள் தாம் அதற்குத் தேவை.”

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

பேய் வீடுபேய் வீடு

பேய் வீடு   நான் தான் ‘வசந்த இல்லம்’. நான் நல்லவன். ரொம்ப ரொம்ப நல்லவன். ஆனா எனக்கு இன்னொரு பட்டம் இருக்கு. அந்தப் பேரை துடைச்சு எரியுறதா தீர்மானம் பண்ணிருக்கேன். வெயிட், என்னை சுத்திப் பார்த்து வாடகைக்கு வர ஒருத்தனை

கொஞ்சம் இஷ்டம் கொஞ்சம் கஷ்டம்கொஞ்சம் இஷ்டம் கொஞ்சம் கஷ்டம்

ஹாய் பிரெண்ட்ஸ், இன்றைக்கு தனது அழகான காதல் கதையின் மூலம் நம்மை மீண்டும் சந்திக்க வந்திருக்கிறார்கள் எழுத்தாளர் உதயசகி அவர்கள். பிரிக்க முடியாதது என்னவோ… காதலும் ஊடலும். பார்த்திபன் விதுஷாவின் காதல் ஆரம்பித்தவிதத்தையும் பின்னர் ஊடல் ஏற்பட்டதையும்  அழகாக இந்த சிறுகதையில்

மைக்ரோ ஹாரர் கதைகள் – 1மைக்ரோ ஹாரர் கதைகள் – 1

கதை – 1  அதிகாலை யாரோ ஜன்னல் கண்ணாடியைத் தட்டும் சத்தம் கேட்டுக் கண்விழித்தேன். விழித்ததும்தான் தெரிந்தது அது டிரெஸ்ஸிங் டேபிள் கண்ணாடியிலிருந்து வந்த சத்தம் என்று. கதை 2 படுக்கை அறையின் அலமாரியிலிருந்து வெளியே வந்த அந்த உருவம் தனது