Tamil Madhura Ongoing Stories கள்வக்காதல் – 3

கள்வக்காதல் – 3

“ஏண்டா தோட்டத்துக்கு போனா சீக்கிரம் வர மாட்டியா? கிணத்த பாத்துவிட்டு அப்படியே கிடந்திருப்பயா?. காதுல தண்ணி போயிருக்கப்போவுது” என்று சரசு சொல்ல,

“அதெல்லாம் ஒன்னும் போகலம்மா. சமைச்சுட்டியா. தண்ணீலயே கெடந்துக்கு பசிக்குது” என்றான் கார்த்திக்.

” போயி உக்காரு. சாப்பாடு எடுத்துட்டு வர்றேன். ஏனுங்க நீங்களும் வந்து உட்காருங்க. பையனுக்கு ரொம்ப பசிக்குதாம்” என்று சொல்லிவிட்டு அடுப்படிக்கு சென்று சமைத்த அனைத்துமே எடுத்து கொண்டு வந்தாள்.

“அம்மா வாசம் தூக்குது.ரொம்ப நாள் ஆச்சுமா உன் கையால சாப்டு” என்று சொல்ல

“அதுக்கு அப்போ அப்போ வீட்டு பக்கம் வரனுமுடா. பொண்டாட்டி முந்தானைய புடுச்சுக்கிட்டே சுத்திட்டு இருக்க கூடாது மாப்ள” என்று சொல்லிக்கொண்டே வீட்டிற்கு உள்ளே வந்தான் விவேக்.

அவனை முறைத்தவாறே கார்த்திக் ‌இருக்க,

“வா மாப்ள. சாப்பிடலாம். சரசு அவனுக்கு ஒரு இலைய போடு” என்றார் பழனி.

“வேணாமுங்க மாமா. இப்ப தான் தோசைய எறிக்கிட்டு வந்தேன். உங்கள பாக்கலாம்னு வந்தேனுங்க. மாப்ள வேற தனியா வந்து இருக்கான் ரொம்ப நாள் கழிச்சு அம்மா கையால சாப்ட” என்று வம்பிழுத்தான்.

“மருமகனே அவனை வம்பிழுக்கரதுல என்னடா சந்தோஷம் இருக்கு அவ்வளவு. மாமன் சொல்றாருல சாப்ட சொல்லி. உக்காரு” என்று சரசு சொன்னாள்.

“உங்க கைபக்குவதை உங்க சீமை புத்திரனே ஒரு கை பாக்கட்டுமுங்க மாமியாரே. மாமா மாடு பாக்க காங்கேயம் போறத சொன்னீங்களே. போகும் போது சொல்லுங்க. நமக்கும்  கிடாரி கன்னு ஒன்னு வேணும். அத சொல்லிட்டு போலாமுனு தானுங்க வந்தேன்” என்றான்.

“மாப்ள நான் வெளியூரில வேலை செய்யறவன். அதுவும் இல்லாம உனக்கு பொண்டாட்டி தொல்லை இல்லை. எனக்கு அப்படி இல்ல. குழந்தையும் இருக்கு” என்று சுருக்கென்று சொன்னான் கார்த்திக்.

“டேய் என்ன பேச்சு பேசுற. வயசுக்கு தகுந்த மாதிரி பேசி பழகு. வாயிருந்தா என்ன வேணுமுனாலும் பேசிடுவியா” என்று சரசு திட்ட,

“அத்த விடுங்க‌.அவன் இல்லாததையா சொல்லிட்டான். ஊருக்குள்ள முக்கால்வாசி பேரு பின்னாடி பேசுறான். மாப்ள முன்னாடி பேசிட்டான். இதுக்கு நான் கோவப்பட மாட்டேனுங்க”

“மாப்ள நீ சொல்றதெல்லாம் சரி தான். ஆனா நான் அப்பா அம்மா பக்கத்துல இருந்து கவனிச்சுக்கறேன்.வருசத்துக்கு ஒருமுறை தனியா வந்து பாத்துட்டு போகல.வயசான காலத்துல பெத்தவங்கள பக்கத்துல இருந்து பாத்துகறவன் தான் மாப்ள ஆம்பள.”

“மாமா நான் வரனுங்க. இதுக்கு மேல நான் பேசினா மாப்ள சாப்படாம போயிடுவான். கறி வேற அவன வா வா ன்னு கூப்டுது. போயிட்டு வரனுங்க மாமியாரே” என்று சொல்லிவிட்டு விவேக் கிளம்பினான்.

“ஏண்டா. உனக்கு ஏதாவது இருக்கா. இப்படி தான் பேசுவியா? இதுதான் நீ வேலை பாக்குற எடத்தில கத்துக்கிட்டதா?” என்று ‌சரசு பொரிந்து தள்ளினாள்.

“சரசு விடு. சாப்பட‌ உக்காந்துட்டு திட்டிட்டே சோறு போடாத. சாப்டடும்” என்றார்

என்ன தான் திட்டு வாங்கினாலும் கறிசோறு சாப்படறதுல கார்த்திக்கை அடிச்சுக்க முடியாது. எதை பற்றியும் கவலைப்படாமல் வெளுத்து வாங்கினான்.

மூவரும் சாப்பிட்டு முடித்துவிட, சரசு சமையலறைக்கு செல்ல, சாப்பிட்டு முடித்த பழனி வெற்றிலை போட்டார்.( அசைவம் சாப்பிட்டால் மட்டும் வெற்றிலை போடும் பழக்கம் கொண்டவர்).

” கார்த்தி என்ன காரணமா ஊருக்கு வந்தப்பா. சாப்பிட்டு முடிச்சாச்சு. இனி அதை பத்தி பேசலாமா” என்றார் பழனி.

இதை சற்றும் எதிர்பாராத கார்த்திக் எப்படி சொல்வது என்று தெரியாமல் முழித்து கொண்டிருந்தான்.

” அதுவந்துங்கப்பா…..” என்று இழுக்க, “ஏனுங்க சாப்டு முடிச்ச உடனே ஆரம்பிச்சுட்டீங்களா?, கொஞ்ச நேரம் கழிச்சு தான் கேட்கறது!” என்றாள்.

“என்னமோ போ. நான் தோட்டம் வரைக்கும் போயிட்டு வந்துடறேன். கார்த்தி எப்பவும் உங்கம்மா கிட்டயே சொல்லிவியே என்கிட்ட சொல்ல சொல்லி. கல்யாணம் ஆகி புள்ளையும் பெத்தாச்சு. இன்னும் பேச மாட்டீங்கற. போயி சொல்லு” என்று சொல்லிவிட்டு கிளம்பினார் பழனி.

“அம்மா. உன்கிட்ட ஒன்னு சொல்லனும்மா” என கார்த்திக் சொல்ல,

“ஏன்டா இப்படி மானத்தை வாங்குற. உங்கப்பா கிட்டயே சொல்ல வேண்டியது தானே. வேத்து ஆளா அவரு” என்றாள்.

“அதெல்லாம் விடு. உனக்கு பேரனை பாக்க ஆசையா இருக்கா இல்லையா?” என்றதும்,

“அவனை பாக்க எவ்வளவு ஆசை தெரியுமா எங்களுக்கு. நீ தான் ஸ்கூல் அது இதுன்னு கூட்டிட்டே வர மாட்டீங்கற” என்றாள்.

அந்த சில நொடிகளில் ஆயிரம் வாட்ஸ் பல்பு வெளிச்சம் உண்டாகி உடனே மறைந்துவிட்டது அவளுக்கு.

“அவன் தான் வரனுமுனு இல்லை. நீங்க வரலாமே” என்று தான் சொன்னான். உடனே சரசு மனதில் அவ்வளவு சந்தோசம். 

“டேய் நெசமா தான் சொல்றியா? உன் வூட்டுகாரிக்கு தான் நாங்க வந்தா புடிக்காதே” என்றாள் சரசு.

“அம்மா அவ பத்து நாள் ட்ரெனிங் போறா பெங்களூருக்கு. அதான் கூப்டறேன்” என்றான். 

அந்த நேரத்தில் தாரணியிடம் இருந்து போன் வந்துவிட சென்று விட்டான்.

பேரனிடம் பேசினாலே அவள் கால்கள் தரையில் இருக்காது. இப்போது பார்க்கவே போகிறோம் என்ற சந்தோசத்தில் வானில் பறப்பது போல இருந்தாள் அந்த பாட்டி.

சிறிது நேரம் அந்த மகிழ்ச்சியில் திளைத்திருந்த சரசு ஏதேதோ மனக்கோட்டை கட்டி இருந்தாள்.

தோட்டத்திற்கு சென்ற பலனையும் திரும்பி வந்தவுடனே “ஏனுங்க நம்ம பையன் எதுக்கு வந்திருக்கான்னு தெரியுமா? நம்மள பேரனைப் பார்க்க கூட்டிக்கிட்டு போறானாம். அதுக்குத்தான் வந்து இருக்கான்” என்று அவள் ஆனந்தத்தில் சொல்ல, 

“என்னடி சொல்ற. உன்ற மவனுக்கு அந்த அளவுக்கு பாசம் வந்திருச்சா? பொண்டாட்டி பேச்சை மீறி இங்கே வரவே மாட்டான். இப்போ அவள கூட்டிட்டு போறேன்னு சொன்னா சந்தேகமா இருக்கே. நான் போன உடனே நான் என்ன சொன்னான். அத முதல்ல சொல்லு” என்றார்.

“உங்களுக்கு எப்பவும் விளையாட்டுதான். நம்ம மருமவ ஏதோ ஊருக்கு போறாலாம். வர பத்து நாள் ஆகுமாம். அதான் பையன் நம்ம பேரன் கூட கொஞ்ச நாள் சந்தோஷமா இருந்துட்டு வர கூப்பிடறான்” என்றதும் அவருக்கு எல்லாமே புரிந்தது.

” உனக்கு பேரன பாக்கணும் போல ஆசையா இருக்கா?” என்றதும்,

“உங்களுக்கு தெரியாதா? எத்தனை நாள் நான் உங்க கிட்டயும் நீங்க  என்கிட்டயும் வேற நான் பாக்கணுமுனு சொல்லி இருக்கோம்ல. இப்ப என்ன புதுசா கேக்குறீங்க” என்று அலுத்துக் கொண்டாள்.

இந்த நேரம் பார்த்து சரியாக கார்த்திக்கும் உள்ளே வர, பழனி அவனைக் கூப்பிட்டு

“ஏம்பா என்ன விஷயமா வந்திருக்க. தயங்காம சொல்லு” என்றதும்,

“இல்லைங்க ப்பா. தாரணி வேலை விஷயமா பத்துநாள் பெங்களூர் போறா. அதுதான் அம்மாவை என் கூட ஒரு பத்து நாள் தங்க வெச்சுக்க கூட்டிட்டு போகலாம்னு வந்தேனுங்க” என்பதை கேட்டதும் சரசுக்கு இடி விழுந்தாற் போல இருந்தது.

“ஏன்டா உனக்கு சோறாக்கி போட தான் என்னை கூட்டிட்டு போறியா? ஏதோ எங்க மேல இருக்கிற பாசத்துலயும், விஷ்ணு ஆசைப்பட்டதால கூப்பிட வந்தயோன்னு நினைச்சேன்” என்று பொங்கினாள் சரசு.

“அம்மா பாசத்தோட தான் வந்து இருக்கேன். நான் ஓட்டலில் சாப்வேன். ஆனா என் பையன் சாப்பிட மாட்டான். அதுவுமில்லாம எனக்கு ஆபீஸ் முடிஞ்சு வர 8 மணியாகும். தாரணி வரும்போது விஷ்ணுவ கூட்டிக்கிட்டு வந்து விடுவா. இப்ப பையன் வந்தான் தனியாதான் இருக்கனும். அதான் நீயும் பேரன பாத்தாப்ல இருக்குமுன்னு தான் கூட்டிட்டு போக வந்தேன்” என்றான் வேகமாக கார்த்திக்.

அந்த நிமிடம் பழனி எதுவும் பேசவில்லை. அவர் மனதில் ஏதேதோ வலிகள் கூடிக்கொண்டே இருந்தது.

“சரிடா நீ எப்படி என்ன வேலைக்காரி மாதிரியே கூட்டிட்டு போ. ஆனா அப்பா விட்டுட்டு எப்படிடா நான் தனியே வருவேன்னு நெனச்ச” என்று பொரிந்து தள்ளினாள் சரசு.

” அம்மா அவர இன்னும் சின்ன குழந்தைனு நினைச்சியா? அதுவுமில்லாம அவர் அங்க வந்துட்டா தோட்டத்தை யாரு பார்க்கிறது மாடுகள யார் பாக்குறது” என்றான்.

“அதெல்லாம் எனக்கு முக்கியம் இல்ல. நான் அவரை பக்கத்தில் இருந்து பார்த்துக்கணும். அதனால நான் அவரை விட்டுட்டு உன்கூட வர முடியாது” என்றதும்,

“சரசு பையன் கூப்படறானுல்ல. போயிட்டு வா” என்றார் பழனி. இதைக் கேட்டதும் சரசூ நெஞ்சில் இடி இடித்தது போல் இருந்தது. அவளுக்கு எதுவும் புரியவில்லை.அந்த நேரத்தில் கார்த்திக் மனதிலும் குழப்பம். 

“என்னங்க சொல்றிங்க” என்று அவள் கூறி முடிக்கும் முன்பு, “கார்த்தி அம்மா கூட வருவா.நீ சொன்ன மாதிரி நானும் அங்கு வந்துட்டா தோட்டத்தையும் மாடுகளையும் பார்த்துக்க யாரும் இல்ல” என்று கூறிவிட்டு கொல்லைப்பக்கம் போனார்.

சரசும் அவர் பின்னே வேகமாகச் சென்று “என்னங்க அவன் ஏதேதோ சொல்லறான். நீங்களும் நானும் சொல்றத சரின்னு சொல்லிவிட்டு என்ன கிளம்ப சொல்றீங்க. உங்களுக்கு ஏதாவது மண்ட கிறுக்கு பிடிச்சுக்கிச்சா?” என கடித்தாள் கோவமாக.

“ஏலே ஒன்னும் தெரியாம பேசிட்டு இருக்கோம். எனக்குத்தான் பேரனைப் பார்க்க முடியாது. உனக்கு என்ன வந்துச்சு. போய் பேரன் கூட பத்து நாள் இருந்துட்டு வரலாம்ல” என்று அவர் கூறும்போது அவர் குரலில் இருந்த வலிகளை உணர முடிந்தது.

” ஏனுங்க நீங்க இல்லாம நாங்க போயி என்ன பண்றது. உங்கள் இங்க தனியா விட்டுட்டு போனா உங்களுக்கு பாக்கறது யாரு? நானெல்லாம் போக மாட்டேன். அவன கிளம்ப சொல்லிட்டு வரேன். இருங்க ” என்று கூறி விட்டு நகர்ந்தவளின் கையை பிடித்து,

“இங்க பாரு சரசு. பேரு பாக்கணுமுனு  உனக்கு ஆசை. எனக்கும் ஆசை இருக்கு. ஆனா இப்ப நீ மட்டும்தான் போறதுக்கு வாய்ப்பு கிடைச்சிருக்கு. போய் பேரன் கூட படுத்தினாலும் சந்தோஷமா இருந்துட்டு வா” என்றதும் அவளின் கண்களில் நீர் வழிந்து கொண்டிருந்தது.

ஆனால் இதையெல்லாம் பார்க்கவும் கேட்கவும் கார்த்திக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அவன் அப்பா எழுந்து சென்றதுமே அவனும் வெளியே சென்று விட்டான்.

அழுது கொண்டே , “ஏனுங்க பத்து நாள் உங்களை இங்க விட்டுட்டு அங்க தனியா போய் எப்படி நான் நிம்மதியா இருப்பேன். பேரன் தாத்தா வரலையான்னு கேட்டா நான் என்னத்தைச் சொல்றது. நீங்களும் வாங்க ரெண்டு பேரும் சேர்ந்து போயிட்டு வருவோம். உங்களுக்குத்தான் அவன்மேல கொள்ளபிரியம்” என்றாள்.

“நான் சொல்லிக்கிட்டே இருக்கேன். நீ பித்து பிடித்தவ மாதிரி பேசுற. உன்ன மவன் உன்ன மட்டும் தான் கூட்டிட்டு போக வந்திருக்கான்.

அத முதல்ல புரிஞ்சுக்க. அதனால போய் பத்து நாளைக்கு தேவையான துணி மணியெல்லாம் எடுத்து வை. அவன்கிட்ட வேற எதுவும் பேசாதே. புரிஞ்சதா” என்று கூறிவிட்டு வேகமாக வீட்டிற்குள் சென்றார்.

“அதெல்லாம் முடியாது. எனக்கு போக விருப்பம் இல்லை. இப்ப நீங்க சொன்னா மட்டும் போயிருவனா. நான் கேட்க மாட்டேன். நான் போகல” என்றதும்,

“நானும் சொல்லிக் கொண்டே இருக்கறேன். நீயும் போக மாட்டேன்னு சொல்லிட்டு இருக்குற. ஒழுங்கா இப்போ கிளம்பிய இல்லையா?” என்று சத்தமாக கத்த, அவளுக்கு கண்ணீர் அதிகமாகியது.

இதை பார்த்தவுடன் பழனிக்கும் இதயம் கனத்தது. “ஏய் சரசு. சொல்றதை கேளுடி. பேரன் பாத்துக்க யாரும் இல்லை. நம்ம பையன் எப்படி வேணாலும் சாப்டுக்குவான். விஷ்ணுவே நெனச்சு பாரு. ஒரு பத்து நாள் நீ போய் இருந்துட்டு வா” என்று ஆறுதல் கூற, அந்தக் கிழவியின் கண்களில் இருந்து வருகின்ற நீர் நிற்கவில்லை.

“இப்படி சின்ன புள்ள மாதிரி அழுதுகிட்டு இருந்தா என்ன அர்த்தம். வெளியே போன பையன் வந்துடுவான். போயிட்டு தான் வாயேன். பத்து நாள் தானே. என்னையே பார்த்துக் முடியலனு வருத்தப்படாத. நான் சமைச்சு சாப்டுக்குவேன்” என்று ஆறுதல் கூறினார்.

சிறிது நேரம் அழுது கொண்டிருந்த சரசு, “என்னங்க நீங்களும் வர மாதிரி இருந்தா சந்தோஷமா கிளம்பி இருப்பேன். எனக்கு மனசு இல்லைங்க” என்று மீண்டும் அழ,

“நீ  துணியெல்லாம் எடுத்து வை. நான் போய் பேரனுக்கு ஏதாவது வாங்கிட்டு வரேன்” என்று சொல்லிவிட்டு வெளியே கிளம்பினார் அந்த தாத்தான்.

இரண்டு மணி நேரம் கழித்து வெளியே சென்ற கார்த்திக் உள்ளே வந்தான்.

“ஏன்டா என்னைய மட்டும் கூட்டிட்டு போற. உங்க அப்பாவுக்கும் அவர் பேரன பாக்கணும்னு ஆசை இருக்காதா?” என்றவளிடம்,

“ம்மா. நீ வறியா இல்லையா. அவரெல்லாம் வீடுக்கு கூட்டிட்டு போக முடியாது. அவர் வந்த ஏதாவது சொல்லுவாரு நொய்யு நொய்யுன்னு. நீ வந்தா ஒண்ணா போலாம். இல்லனா விடு நான் இப்பவே கிளம்புறேன்” என்ற மகளின் வார்த்தையை கேட்டு உறைந்து போனாள்.

அந்த நேரம் பார்த்து உள்ளே வந்த பழனி, “என்னப்பா இன்னும் உங்க அம்மா கிளம்பலயா?. சரி நீ போய் தூங்கு. சாயந்திரம் பஸ்சுக்கு கிளம்பிகலாம்” என்றார். கார்த்திக் பேசுவதை அவர் கேட்டிருந்தார்.

“இல்லைங்பா. நான் ராசு சித்தப்பா வீடு வரைக்கும் போயிட்டு வந்திடறேன்” என்று சொல்லிவிட்டு மீண்டும் வெளியே சென்றான்.

” ஏய் பாட்டி கிழவி. இன்னும் துணியெல்லாம் எடுத்து வைக்கலயா?. வா போய் எடுத்து வைக்கலாம்” என இழுத்துக்கொண்டே சென்று விட்டார்.

மறுப்பேதும் பேசாமல் அரை மனதாய் அவள் இருக்க, பேக்கை எடுத்து வைத்து அதனுள் செய்திதாளை உள்ளே வைத்தார்.

“ஏய் சரசு. பையன் தோளுக்கு மேல வளந்துட்டான். அவனுக்கும் பையன் பிறந்து ஆறு வருஷம் ஆச்சு. அதனால அவன் அப்படித்தான் பேசுவான். நமக்கும் வயசு ஆயிடுச்சு இல்ல” என்றதும் அவளின் கண்களில் மீண்டும் பெருக்கெடுத்து ஓடியது.

அவளால் எதுவும் பேசவே முடியவில்லை. என்ன செய்வதென்று புரியவில்லை. ஆனால் பழனியின் பேச்சில் உண்மை உள்ளது என்பதை மட்டும் அறிந்து இருந்தாள்.

********

கதை பற்றிய உங்கள் விமர்சனத்தை yaazhistories@gmail.com என்ற மெயிலுக்கும் அனுப்பலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 17என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 17

அத்தியாயம் – 17 வீட்டினருக்கு ஜவுளிகளை எடுத்த பின்,  பக்கத்தில் இருந்த கடைக்கு அழைத்து சென்று சித்தாராவுக்கு அவள் மறுக்க மறுக்க ஜீன்ஸ் எடுத்துத் தந்தான் அரவிந்த்.  “எனக்கு ஜீன்ஸ் எல்லாம் பழக்கமில்லை அரவிந்த். ப்ளீஸ் வேண்டாம். நான் வேணும்னா சுடிதார்

என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 16என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 16

அத்தியாயம் –16  சித்தாரா ஸ்ராவணியை நன்றாக கவனித்துக் கொள்வது தனக்கு மகிழ்வளிப்பதாக கதிர் சொன்னார். “ஸ்ராவணியை அவள் ஏத்துக்க ஆரம்பிச்சுட்டான்னா உன்னையும் அவளுக்குப் பிடிக்க ஆரம்பிச்சாச்சுன்னு நினைக்கிறேன் அரவிந்த்” “இல்ல மாமா அவசரப் படாதிங்க. சித்தாரா சின்ன வயசில தாயை இழந்தவ.

என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 22என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 22

அத்தியாயம் – 22 ட்ரெயினில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தான் அரவிந்த். மனைவியையும் குழந்தையையும் எப்போதடா பார்ப்போம் என்றிருந்தது அவனுக்கு. அப்பாடா இன்று வெள்ளிக் கிழமை. இன்னும் இரண்டு நாட்கள் ஸ்ராவனியும் சித்தாராவும் அடிக்கும் லூட்டியை ரசித்துக் கொண்டிருக்கலாம். நிமிடமாய் நேரம் பறந்து