Tamil Madhura என்னை கொண்டாட பிறந்தவளே,Ongoing Stories,Tamil Madhura என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 31

என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 31

அத்தியாயம் – 31

 

ஸ்ராவணியை படாதபாடு பட்டுக் காப்பாத்தினேன். வனி பொழைச்சுட்டா. இந்தத் தகப்பனோட வேதனை பொறுக்காம கடவுள் அவளுக்கு ஆயுளைக் கொடுத்துட்டார். அப்பறம் குழந்தையைத் தூக்கிட்டு அம்மாவைப் பார்க்கக் கிளம்பினேன். என்னோட நல்ல நேரம் வீட்டுக்குப் போனப்ப அம்மா மட்டும்தான் இருந்தாங்க. சத்யாக்கா வேலைக்குப் போயிருந்தாங்க. சாரிகா காலேஜுக்கும், சாந்தா கோர்ஸ்க்கும் போயிருந்தாங்க. அம்மா கிட்ட எல்லாம் சொன்னேன்.

சாயந்தரம் வீட்டுக்கு வந்த சாரிகா கிட்ட “சாரிகா உன் அண்ணி இந்தப் பாப்பா பிறந்தந்தப்ப  இறந்து போயிட்டாங்க. போய் எல்லாரும் தலை முழுகுங்க” ன்னு அம்மா சொன்னப்ப மறுத்து சொல்ல முடியல.

நடத்தை கெட்டவளோட பொண்ணா ஸ்ராவணி வளருரதை விட அம்மா இல்லாத பொண்ணா வளரட்டும். மத்தவங்க இவளை இளக்காரமா பாக்குறதை விட இரக்கமா பார்க்கட்டும்ன்னு அப்படின்னுறது அம்மாவோட வாதம். எனக்கும் தப்பா தெரியல.

அப்பறம் அம்மா வனியைப் பார்த்து கிட்டாங்க. எனக்கு பணம் சம்பாதிச்சே ஆக வேண்டிய நிலைமை. ஊருக்கு வந்து மூணு மாசம் கூட நிம்மதியை  சாந்தா நீடிக்க விடல…. “

என்று தொடர்ந்த அரவிந்தைத் தொடர விடாமல் தொடர்ந்து இருமல் வந்தது. நீடித்த அந்த இருமலைக் கண்டு திணறிப் போனாள் சித்தாரா. இருமலுடன் வேக வேகமாகப் பழைய பெட்டிகளைக் குடைந்து அந்த மருந்தினை எடுத்தவன் வாயில் வைத்து உறிஞ்சினான் சற்று நேரத்தில் இருமல் மட்டுப்பட்டது.

“அரவிந்த் உனக்கு வீசிங் வருமா?”

“எப்போதும் இல்லை சித்தாரா. டிவொர்ஸ்க்கு அப்பறம் தான் வருது. ரொம்ப மன அழுத்தம்  ஆகும்போது  வரும். நம்ம கல்யாணத்துக்கு அப்பறம் ஒரு தடவை கூட வந்ததில்லை. இன்னைக்கு …..”

“போதும் அரவிந்த் நீ பேசினது. போய் தூங்கு”

நீண்ட நேரம் மௌனம் நிலவியது. இருவரும் உறங்கவில்லை அதை இருவரும் அறிவார்கள். அரவிந்துக்கு அறையில் பயணத்திற்குத் தயாராக இருந்த பெட்டிகளைப் பற்றிக் கேட்க பயம். தனது பயணத்தைப் பற்றி சொல்ல சித்தாராவுக்குத் தயக்கம்.

“சித்தாரா என்னால தூங்க முடியல. நான் உன் மடியில படுத்துக்கவா”

சோபாவில் அமர்ந்து மடியில் படுக்கவைத்துக் கொண்டாள்.

“அரவிந்த்….”

“சொல்லு சித்து”

“நீ சொன்னதை மதிச்சு நான் சைலஜாவைப் பத்தி ஒரு வார்த்தை கூட கேட்கல. இல்லையா?”

“ஆமா சித்து”

“அதே மாதிரி இப்ப நான் செய்யுற விஷயங்களைப் பத்தியும் நீ ஒரு கேள்வியும் கேட்கக் கூடாது”

“சரி”

“இன்னும் சில மணி நேரத்தில் நான் ஊருக்குப் போறேன்”

“……..”

“அரவிந்த் உனக்கு இது கஷ்டம்னு தெரியுது. ஆனா நீ இதைத் தாங்கிக்கத்தான் வேணும்”

அவளது மடியில் சாய்ந்திருந்த அவனது கண்களில் இருந்து நீர் வழிந்தோடியது. சித்தாரா மனதை அடக்கிக் கொண்டாள்.

“என்னைக் கோழையாக்காதே. என்னைக் கட்டிப் போடுற சக்தி எங்க பாட்டிக்குப் அப்பறம் உனக்கும் வனிக்கும் மட்டும்தான் இருக்கு. நீ தப்பா எந்த முடிவுக்கும் போக மாட்டேன்னு சத்தியம் பண்ணு”

விரக்தியாக சிரித்தான் “தப்பான முடிவெடுக்குறதா இருந்தா சைலஜா நான் அவளை ஏமாத்திட்டதா பழி போட்டப்பவே போயிருக்கணும். என்னைப் பத்திக் கவலைப்படாதே ஸ்ராவனியைக் காப்பாத்த நான் உயிரோட இருக்குறது அவசியம். கண்டிப்பா உன்னை மறுபடி பாக்குறவரை நடைபிணமாவாவது இருப்பேன்”

அதன் பின் வீட்டில் பலத்த மௌனம் நிலவியது. அவர்களின் சந்தோஷத்துக்காக அவன் இந்த வேதனையைத் தாங்கித்தான் ஆக வேண்டும்.

“நான் உன்னை வருத்தப்பட வைக்கிறதுக்காக போகல அரவிந்த். காலம் முழுவதும் சந்தோஷமாக வைக்கத்தான் பிரியுறேன். இதை நீ சீக்கிரமா புரிஞ்சிப்ப”

“நீ தியாகியா ஆகுற முடிவுல இருந்தா என்னோட முடிவையும் கேட்டுக்கோ. சைலஜா கல்யாணம் பண்ணிக்குறதுக்காக என்னைக் குற்றவாளியாக்கிட்டா…  இதைப் பத்தி அவ கிட்ட கேள்வி கேட்டிருக்க முடியாதா? இல்லை கை கழுவிட்டு போயிருக்க முடியாதா? ஒரு பொண்ணு நாலு பேர் முன்னாடி நம்மளை விரும்புறேன்னு சொல்லுதுன்னு கலங்கி போய்டேன் சித்து.

நல்லவளோ…  கெட்டவளோ… மனைவின்னு வந்தவுடனே அவளைக் கண்கலங்காம பார்த்துக்கணும்னு நெனச்சேன். ஆனால் அவளுக்கோ பணம் தான் பிரதானம். கணவனையும் பிறந்து கொஞ்ச நாள் ஆன பிள்ளையையும் விட்டுட்டு ஒரு  பணக்கார கிழவனுக்கு கீப்பா போற அளவுக்கு பணப் பைத்தியம்.

ஒண்ணை  விட ஒண்ணு  சிறந்ததா உலகத்தில்  இருக்கும்தான். அப்ப அவளுக்கு  பணம் பெருசா இருந்தது. என்னை தூக்கி எறிஞ்சா. இப்ப அவளுக்கு வேணுங்குற  பணம்  சேர்ந்தவுடனே இளமையான புருஷனும் பிள்ளையும் தேவையா இருக்கு.

சைலஜா   இழுத்த இழுப்புக்கெல்லாம் நான் போக முடியாது. எனக்கு நீ தான் மனைவி. அவ எந்த ஜென்மதிலையோ நான் செஞ்ச பாவம்”

உறுதியாய் சொன்ன கணவனை பெருமிதத்தை வெளி காட்டிக் கொள்ளாமல் பார்த்தாள்

“இந்த தைரியத்தையும் உறுதியையும் நீ சைலஜாவைப் பார்க்கும் போதும் காமிக்கணும் அரவிந்த். பிரச்சனையை தள்ளிப் போடாமல் உடனே முடிவெடு. ஏதுவா இருந்தாலும். முக்கியமான விஷயம் ஸ்ராவனியை பத்திரமா பார்த்துக்கோ”

“இனிமே அதுதானே என் வேலை” வேலையை புது வேலைக்கு மாறும் பொருட்டு ராஜினாமா செய்திருந்தான்.

விரக்தியாய் சிரித்தான்.

“உன்னைப் பொறுத்தவரை நான் நல்லவன் இல்ல சித்து. உன்னை என்னைக்கு அந்த மாடிப் படில பார்த்தேனோ அன்னைக்கே என் மனசுல புகுந்திட்ட.

கீரைக்காரிக் கிட்டக் கூட அன்பைக் காட்டின உன்னோட குணம் எனக்கு மோசமான எண்ணத்தைத் தந்துடுச்சு. அந்த அன்பு மொத்தமும் எனக்கே சொந்தமாகனும் எனக்கு பேராசை.

நானும் ஸ்ராவனியும் லண்டன்ல இருந்து வந்தப்ப உன்னைக் கல்யாணம் பண்ணிக் கூட்டிட்டு போற எண்ணம் எனக்கு சத்யமா இல்ல. அதுனாலதான் டிக்கெட் கூட புக் பண்ணல.

உன் பேர் கூட எனக்கு சரியாத் தெரியாது. உன்னைப் பார்த்த வினாடி நீ என் வாழ்க்கைல புகுந்திட்ட. கல்யாணத்துக்கு முன்னாடி உன்னைப் பார்க்குறதை உன்கூட பேசுறதை வேணும்னே தன் தவிர்த்தேன்.

நீ என்கிட்ட கேட்ட மாதிரி நீ என்ன ஏழு கடல் ஏழு மலை தாண்டியா இருந்த… நான் நெனச்சிருந்தா உன் கூட பேசி இருக்க முடியாதா… நீ இந்தக் கல்யாணத்தை நிறுத்த சொல்லிட்டா… அதுக்குப் பயந்தே தாலி கட்டுற வரை உன்கூட பேசுறதைத் தள்ளிப் போட்டேன். ஒரு தேவதையை ஏமாத்த நெனச்ச தப்புக்கு இந்த தண்டனை தேவைதான்”

மை கொண்ட கண்களை அழுத்தமாக மூடினாள் சித்தாரா. அரவிந்தின் மனம் அவளுக்கே முழுதும் சொந்தம். யாராலும் அதனை அவளிடம் இருந்து பறிக்க முடியாது.

றுநாள் காலை விமான நிலையத்தில் இருந்து திரும்பி வந்து கொண்டிருந்த சந்திரிகாவின் மேல் மோதியது அந்த உருவம்

“ஓ  சந்திரிகா தானே நீங்க? என்ன ஏர்போர்ட்க்கு? தெரிஞ்சவங்க யாராவது வராங்களா? …..”

சின்ன கிளிப் பிள்ளை போல் மிழற்றிய சைலஜாவைக் கோவத்துடன் பார்த்தாள் சந்திரிகா.

“சித்தாரா ஊருக்குப் போய்ட்டா. இப்ப உனக்கு திருப்தியா? நல்லா இருந்த குடும்பத்துல குழப்பத்தை உண்டு பண்ணி பிரிச்சுட்டியே”

“சித்தாரா ஊருக்குப் போய்ட்டாளா? அவ தோழில நீ, அதுதான் உனக்குக் கோவமா? இங்க பாரு சந்திரிகா, அரவிந்தை கவனிச்சுக்க  மனைவி நான் இருக்குறப்ப சித்தாரா மாதிரி துணைவிக்கு இங்க என்ன வேலை?”

“அந்த மனைவி யாருன்னு தான் எனக்குக் கேள்வி? சித்தாராதான் அரவிந்தோட மனைவி. அவ வர்றதுக்கு முன்னாடி தாயுமானவரா இருந்து பிள்ளையை வளர்த்தார் அரவிந்த். இப்ப வந்து உரிமை கொண்டாடுற நீ இத்தனை நாள் எங்கம்மா போன?”

“கண்டவங்க கேக்குற கேள்விக்கு நான் பதில் சொல்லனும்னு அவசியமில்லை. என்ன தாயுமானவர், அப்படி இப்படின்னு என் விட்டுக்காரர் பத்தி என் கிட்டயே பில்ட் அப் தர?” சற்று நிறுத்தியவள் நக்கலாக

“ஆனாலும்  மனைவி வீட்டுல இல்லாம தனியா இருக்குற ஆண் கிட்ட குழந்தையை சாக்கா வச்சுகிட்டு  போய் போய் பேசுற அளவுக்கு நீ தரம் கெட்டவள் இல்லன்னு நினைக்கிறேன்” தனது கொடிய விஷப் பல்லை சைலஜா எனும் நாகம் காட்டியது. அசந்து போய் நின்று விட்டாள் சந்திரிகா.

சந்தோஷமாக தனது காரில் விசிலடித்தபடி ஏறினாள் சைலஜா. ‘சந்திரிகாகிட்ட பேசினது அவ மனசுல இருக்கும். அரவிந்த் கூட இனிமே  பேச மாட்டா. இப்ப என்கிட்ட பேசின மாதிரி அரவிந்த் கிட்ட பேசி அவனைக் குழப்பிட்டா அவ்வளவுதான்.

அரவிந்த் வேற இந்த சித்தாரா ஊருக்குப் போனதால கொஞ்ச நாள் வருத்தத்தோட இருப்பான். இப்ப வீட்டுக்குப் போனா கோவம் என் மேலத்தான் திரும்பும். இன்னும் சில நாள் கழிச்சுத்தான் அவனைப் போய் பார்க்கணும். அப்ப மட்டும் திட்டமாட்டானா… அதை அப்பப் பார்த்துக்கலாம் ஆம்பளைங்க கோவத்தை அடக்க இந்த சைலஜாவால முடியாதா என்ன?

இந்த சிதாராவை எப்படி பிளான் செஞ்சு ஊருக்கு அனுப்பினாள். அந்தக் கஞ்சாப் பிசுனாரி வேற நிறைய இடத்துக்கு போன் போட்டு அடிமாட்டு விலைக்கு டிக்கெட் கேக்குறா.

ஒரு ட்ராவல்  ஏஜென்ட்டை சரி கட்டி, சித்தாரா தர்ற இருநூத்தி சொச்சப் பணத்தை வாங்கிட்டு டிக்கெட் தா மிச்சப் பணத்தை நான் தரேன்னு சொல்லி, டிக்கெட்டை அவ தலைல கட்டி ஊருக்கு அனுப்பியாச்சு. ஊருக்குப் போறாளான்னு காலைல இருந்து தொடர்ந்து போய் கண்டு பிடிச்சாச்சு. நினைச்சதை சாதிச்சாச்சு. சாதிக்கப் பொறந்தவள் சைலஜா.

இந்த நேரத்தில் சைலஜாவின் குடும்பம் பற்றி சொல்ல வேண்டுமென்றால், ஒரு முறை தனது அம்மாவிடம் கேட்டாள்

“என் அப்பா யாரும்மா? அடிக்கடி கரு கருன்னு ஒரு ஆள் வீட்டுக்கு வருவானே அவனா?” முகம் சுளித்தபடி கேட்டாள்

“தெரியலடி. நீ பொறக்கும் முன்ன ஒரு சேட்டு வீட்டுல வேலை பார்த்தேன். அந்த சேட்டு தான் உன் அப்பாவா இருக்கும்னு நெனைக்கிறேன். அந்த ஆள் ஊட்டு பொண்ணுங்க மாதிரியே உனக்கும் ஜாடை இருக்கு”

“தப்பு பண்ணிட்டேயே… நீ தான் இந்தக் குழந்தைக்கு அப்பான்னு பஞ்சாயத்து கூட்டிருந்தேன்னா இந்நேரம் நம்ம ஒரு லட்சாதிபதியா இருந்திருக்கலாம். நீ ஒரு முட்டாள்மா”

இதுதான் அவள் குடும்பம். வளர வளர  சைலஜாவின் குறுக்குப் புத்தியும் பணத்தாசையும் சேர்ந்தே வளர்ந்ததே தவிர குறையவில்லை.

எட்டாவதில் தன்னை மூன்றாவது  முறை பெயில் செய்த வாத்தியார் தன் கையைப் பிடித்து இழுத்ததாக புகார் செய்தாள். உண்மை அறிந்த பள்ளி நிர்வாகம் அவளை டிசீ கொடுத்து வழியனுப்பி வைத்தது.

ஷைலஜாவும் அதற்குப் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. தமிழ், கன்னடம், ஹிந்தி, தெலுகு, ஆங்கிலம் இப்படி பல பாஷை அத்துப்படி. மயக்கும் அழகிருக்கிறது. எப்படியும் ஒரு பணக்காரனின் வீட்டில் ராணியாக வலம் வரலாம் என்ற நம்பிக்கை அவளுக்கிருந்தது.

அதை உறுதி செய்யும் விதமாக அவளை விரும்புகிறேன் என்று சொன்ன மஞ்சுநாத், திருமணத்தை வேறு ஒரு பணக்கார பெண்ணுடன் நிச்சயம் செய்து அவளை சீரும் வேங்கையாக்கினான்.

அழகாக அலங்கரித்துக் கொண்டு மஞ்சுநாத்தின் கல்யாணத்துக்கு சென்றவள் திருமணம் முடிந்தவுடன் உடை மாற்ற சென்ற மணப்பெண்ணின் அறைக்கு அவளுடனே சென்றாள்

“நான் சைலஜா. என்னை உனக்குத் தெரியாது. ஆனா உனக்குத் தாலி  கட்டினவருக்குத் தெரியும். உன் கணவருக்கு என்கிட்ட என்னென்ன பிடிக்கும்னு சொல்லவா?”

சிறிது நேரத்துக்குப் பின் நமுட்டுச் சிரிப்புடன் சென்று விட்டாள். பேயறைந்தார் போல் நின்றுக் கொண்டிருந்தாள் மணப்பெண்.

அதன் பின் ‘செராக்ஸ்’ கடையில் வேலை செய்தவள், அங்கு செராக்ஸ் எடுக்க வந்த சைலஜா என்ற பெண்ணின் சான்றிதழ்களுடன் கம்பி நீட்டினாள்.

அந்த சான்றிதழ்களை வைத்து கால் சென்டர் ஒன்றில் வேலை சேர்ந்தாள். பல தரப்பட்ட ஆண்கள். சொகுசு வாழ்க்கை. இதில் எந்த ஆண்களும் அவளைத் திருமணம் செய்யத் தயாராக இல்லை.

யோசித்த சைலஜாவுக்கு ஒன்று மனதில் பட்டது. நடுத்தரக் குடும்பத்தை சேர்ந்த தமிழ் பசங்க கொஞ்சம் பயந்தவர்களாக இருந்தனர். உண்மையானவர்களாக இருந்தனர். அவளைப் பொறுத்தவரை ஈஸி டார்கெட். வாழ்க்கையில் செட்டில் ஆக இந்த மாதிரி பசங்க தான் லாயிக்கு என்று முடிவு செய்தாள்.

ஆனால் அவர்களுக்கு பிளாஷியாக இருக்கும் பெண்களை அவ்வளவாகப் பிடிப்பதில்லை. குடும்பக் குத்து விளக்காக இருந்தால் திருமணம் செய்துக் கொள்ள தயக்கம் காட்டுவதே இல்லை.

வேலை செய்த இடத்தில் அவளது போலி சான்றிதழ் விவகாரம் தெரிய வர அந்த இடத்தில் இருந்து தப்பித்து ஹோசூரில் ஒரு கடையில் குடும்பக் குத்து விளக்கு வேஷத்தில் வேலைக்கு சேர்ந்தாள். அங்கு அவள் மானுக்கு வலை விரிக்க அதில் தப்பி வந்து சிக்கிய முயல் தான் அரவிந்த்.

அவளை விடவும் வயதில் குறைந்தவன். வீட்டை விட்டு அப்போதுதான் பிரிந்திருப்பவன். அம்மா கைக்குள் வளர்ந்த பிள்ளை. அவனது பயந்த சுபாவத்தைப்  பயன்படுத்தி திருமணத்தை முடித்து லண்டன் வந்தவளுக்கு அவனது குடும்பச் சுமையும், வெளிநாட்டில் வந்தும் சொர்கத்தை அனுபவிக்காமல் கட்டுபெட்டியாய் இருக்கும் அவனது வாழ்வும்  எரிச்சலைத் தந்தது.

வெளிநாட்டு போக வாழ்வு அவளை சுண்டி இழுத்தது. டிஸ்கோத்தே, கிளப் என்று அவள் பெங்களூரில் பழகிய வாழ்க்கைக்குத் திரும்பினாள். பட்டேலின் நட்பும் அப்படி ஒரு இடத்தில் தான் கிடைத்தது. நாகரீகம் தெரியாத  அரவிந்திடமிருந்து விடுதலை வாங்கிக் கொண்டு படேலிடம் ஒட்டிக்  கொண்டாள்.

அட்டைப் பூச்சியாய் அவருக்கே தெரியாமல் உறுஞ்சி சேர்த்த பணத்தை தேவையான அளவு முதலீடு செய்தாள். சிறிது நாளாக அவளுக்கு பட்டேல் அலுக்க ஆரம்பித்தார். அவரது குடும்பமும் அதற்கு முக்கிய காரணம்.

பட்டேலின் குடும்பத்திற்கு, முக்கியமாக அவரது அம்மாவுக்கு… சைலஜா அவரிடம் இருந்து பணத்தை ஏமாற்றுவது தெரிந்தது. பட்டேலின் பூர்வீக சொத்துக்கள் அவரது அம்மாவின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. அவர் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு சிறு பகுதிதான்  சைலஜா செலவு செய்ய முடியும்.

பட்டேலின் சம்பாத்யத்தைப் பாதுக்காக்க அவரது அம்மா பல இடங்களில் அவளுக்குத் தடை விதித்தார். வீட்டை கவனிக்க சொல்லி கட்டுப்பாடு விதித்தார். கண் போன போக்கிலே போய்க் கொண்டு இருப்பவளை ஒரு இடத்தில் கட்டிப் போடுவது எவ்வளவு கஷ்டம். படேலிடம் இருந்து இனிமேல் எதுவும் பெயராது என்று தெரிந்து  விலக சமயம் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அப்போதுதான் ஒரு நாள் மீண்டும் அரவிந்தை குடும்பத்துடன் பார்த்தாள். அந்த சின்னப் பெண் அவளது பெண் என்று தெரிந்துக் கொண்டாள் “ பொறந்தப்ப ஒரு மாசம் தாங்காதுன்னு நெனச்சேன். பரவல்லையே திம்முன்னு கிழங்காட்டம் நிக்குது. அதுவும் நல்லதுதான் இதுதான் எனக்கு ட்ரம் கார்ட்”.

கவனத்தைத் தம்பதிகளிடம் திருப்பினாள். அரவிந்த் ‘சித்து சித்து’ என்று அந்த சித்தாராவிடம் கொஞ்சியதும், அவளது எச்சில் ஐஸ்கிரீமை வாங்கி அமிர்தமாய்  உண்டதும் சைலஜாவுக்கு இயற்கையாய் இருக்கும் பொறாமையைக் கொழுந்து விட்டு எரியச் செய்தது. தன்னை  விலக்கிவிட்டு போன மஞ்சுநாத் நினைவுக்கு வந்தான்.

‘டேய் அரவிந்த், என்னை கல்யாணம் செஞ்சு கிட்டு ஒரு அடி தள்ளியே நிப்ப. இந்த சித்து என் அழகுக்கு கால் தூசி பெறுவாளா? அவளோட எச்சில் ஐஸ்கிரீமை ரசிச்சு சாப்பிடுற. நான்னா உனக்கு அவ்வளவு இளப்பமா? இதே மாதிரி என்னையும் கொஞ்ச வைக்கல என் பேர் சைலஜா இல்ல”

அந்த காந்தலின் விளைவாகவே ஒரு நாள் தனியாகக் கடையில் மாட்டிக் கொண்ட சித்தாராவின் பர்சையும், போனையும் திருடினாள். பில் கட்டப் போகும் போது பர்ஸ் காணமல் போனதைக் கண்டு கொண்டு, செல்லையும் காணாமல் முகம் வேர்த்துத் தவிக்க திணறிய சித்தாராவை ஆனந்தமாக அரை  மணி நேரம் மறைந்து கண்டு களித்தாள்.

பனிமழையில், கடுங்குளிரில் நடுங்க நடுங்க சித்தாரா வீட்டுக்கு  நடக்கத் தொடங்கவும் தான் நிம்மதியாய் காரை எடுத்துக் கொண்டு வீட்டுக்குச் சென்று சேர்ந்தாள்.

இன்று சித்தாராவை நிரந்தரமாய் துரத்தி விட்ட திருப்தியுடன் வீட்டில் வந்து காரை நிறுத்தினாள் சைலஜா.

“வா சோம்பேறி எங்க போய் ஊர் சுத்திட்டு வர்ற? போய் ரிங்குக்கு சாப்பாடு தா. என் பிள்ளை கிட்ட இருந்து சுரண்டுற பணத்துக்கு இந்த வேலையாவது உருப்படியா செய்” ஹிந்தியில் கத்தினாள் கிழவி.

அவள்தான் படேலின் அம்மா. சைலஜாவைக் கண்டாலே அவளுக்குப் பிடிக்காது. வெறுப்போடு சாப்பாட்டை எடுத்துக் கொண்டு ரிங்கு இருக்குமிடம் சென்றாள்.

அவன் படேலின் முதல் தாரத்துப் பையன். ஆள் வளர்ந்தாலும் மூளை வளர்ச்சி இல்லாதவன். சாப்பாட்டை சைலஜாவின் மேல் துப்பினான். பக்கத்தில் யாரும் இல்லை. ஓங்கி அவனது தலையில் கொட்டினாள். கையில் நறுக்கென கிள்ளி விட்டாள்.

“சனியனே நீ எல்லாம் ஏன் இன்னும் உயிரோட இருக்க?” கோபமாய் உருமியவள் “இன்னும் கொஞ்ச நாள் தான் அப்பறம் உன் மூஞ்சில கூட முழிக்க மாட்டேன். உங்க அப்பன் பணம் இருக்கு, காசு இருக்குன்னு சொன்னானே தவிர உன்னை மாதிரி ஒரு தொல்லை ஜெர்மனில எங்க அம்மா வீட்டுல வளருதுன்னு  சொன்னானா?

நீங்க செஞ்சதுக்கு தண்டனையா உன் அப்பன்  பணத்துல இருந்து சில கோடி எனக்கு எடுத்து கிட்டேன். கிளம்புறதுக்கு முன்ன உன்னையும் அந்தக் கிழவியையும் ஒரு வழி பண்ணுறேன்” கருவினாள்.

3 thoughts on “என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 31”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 43தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 43

பூங்காவில் கார்டை போட்டு பணம் செலுத்தி வாடகைக்கு சைக்கிளை எடுத்துக் கொண்டார்கள். போட்டி போட்டுக் கொண்டு இருவரும் வேகமாய் சைக்கிள் ஓட்டி ஒருவரை ஒருவர் முந்தினார்கள். ஓரிடத்தில் ஜெர்மன் கிராமிய நடனம் நடக்க அதை ஆர்வமாய் பார்த்தார்கள். ஒரு பெண்ணிருக்க அவளை

என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 29என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 29

அத்தியாயம் -29   கல்லாய் இறுகிய முகத்துடன் வீட்டிற்கு நடந்து வந்துக் கொண்டிருந்தாள் சித்தாரா. அவளின் நிலை கண்டு சந்திரிகாவின் கண்களில் நீர். “சித்து மனசைத் தளர விடாதே. இந்த சைலஜாவப் பார்த்தாலே எனக்கு நல்ல அபிப்பிராயம் வரல. இவ்வளவு நேரம்

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 45தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 45

கண்கள் கலங்க ஜிஷ்ணு சொன்னதை இதயம் கலங்கக் கேட்டிருந்தாள் சரயு. “விஷ்ணு… குண்டூர்ல என்னைப் பாக்குறப்ப இதெல்லாம் ஏண்டா சொல்லல” “நானே அவ்வளவு நாள் கல்யாணம் ஆனதை உன்கிட்ட மறைச்சு நடிச்சுட்டு இருந்தேன். எப்படி இதை சொல்லுவேன்? ஆனா அப்பல்லாம் என்